இந்த நான்காம் ஜெயவர்மன் கி.பி 941 ஆம் ஆண்டில் இறக்கும் வரை 20 ஆண்டுகள் Koh Ker ஐத் தலைநகராகக் கொண்ட ஆட்சியை நடாத்தியிருக்கின்றான். அவனைத் தொடர்ந்து வந்த அவன் மகன் இரண்டாம் ஹாஷாவர்மன் தொடர்ந்து இதே நகரினை மூன்றாண்டுகள் தலைநகராக வைத்து ஆட்சி நடாத்தி விட்டுப் பின்னர் அங்கோர் நகரத்துக்கு தனது தலைநகரை மாற்றிக் கொண்டான். Koh Ker இன் ஞாபகச் சின்னங்களாக விளங்கும் முக்கிய ஆலயங்கள் நீர்தேக்கத்தை அண்டிய பாதை வழியே தொடர்ந்து அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது Prasad Thom எனப்படும் ஆலயம் 7 அடுக்குகள் கொண்ட பிரமிட் வடிவினதான ஆலயமே இந்த Prasad Thom ஆகும்.
Prasad Thom
முதலில் நாங்கள் சென்றது Prasad Thom இற்குத் தான். முப்பது மீட்டர் நீளமான நீண்ட பெரிய ஏழு அடுக்குகளோடு பிரமிட் வடிவினதாக இருந்தது இவ்வாலயம். மேலே பார்த்தால் கழுத்தைச் சுழுக்கி விடும் போல இருந்தது. நாங்கள் போன கெட்ட நேரம் இந்த ஆலயத்தின் திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் மேல் உச்சிக்குப் போக முடியவில்லை.
ஆவென்று இந்தக் கோயிலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு பிக்குவும், அவரைச் சூழச் சிலருமாக ஏதோ பேசிக் கொண்டே கடந்தார்கள். சுற்றுலா வழிகாட்டி என்னைச் சுரண்டிச் சொன்னார், அந்தப் பிக்குவோடு போகின்றவர்களில் ஒருவர் முன்னர் பொல் பொட்டின் படையில் இருந்தவராம்,வியட்னாமுக்கும் பொல் பொட்டின் படைகளுக்கும் சண்டை நடந்த போது இந்தக் கோயிலின் மேல் உச்சியில் தாங்கள் மறைந்திருந்ததாக அவர் பிக்குவுக்குச் சொல்கிறார் என்று சொல்லிச் சிரித்தார். முன்னர் நாங்கள் போன Beng Melea போன்ற ஆலயங்களின் பிரமாண்டமும், உறுதியான கட்டிட வேலைப்பாடுகளும், மக்களால் பல ஆண்டுகளாகக் கைவிடப்பட்ட நிலையில் புதிர் மண்டிப் போய் பொல் பொட்டின் படைகளின் மறைவிடமாகப் பயன்பட்டிருக்கின்றன. பின்னர் யுத்தம் ஓய்ந்து பொல் பொட்டின் ஆட்சி களையெடுக்கப்பட்டதும் அவனோடு பணியாற்றிய படையணிகள் இயல்பு வாழ்க்கைக்கு மாறி விட்டனர். 2002 ஆம் ஆண்டு வரை சன நடமாட்டமோ, புழக்கமோ இல்லாந்த இப்பிரதேசம் அவர்களால் தான் இந்த ஆலயங்கள் பலவும் உலகுக்குக் கண்டு பிடிக்கப்பட்டு சொல்லப்பட்டன. இன்று சுற்றுலா வருவாயை இந்த ஆலயங்கள் அள்ளிக் கொடுக்க இந்த பொல் பொட்டின் ஆட்கள் ஒருவகையில் காரணமாகி விட்டார்கள்.
Prasad Thom கோயிலின் பின்புறத்துக்கு அழைத்துச் சென்றார் வழிகாட்டி அங்கே ஒரு மலை போன்ற திட்டியும், உச்சியில் ஏதோ சிறு பீடமும் தெரிந்தது. அரசனின் பிரியத்துக்குரிய வெள்ளை யானை ஒன்று இறந்த கவலையில் அந்த யானையை இவ்விடத்தில் சமாதியாக்கி விட்டு நினைவிடமாக ஆக்கிவிட்டான். எதுவிதமான வழித்தடங்களும் இல்லாமல் அகப்படும் சிறு சிறு செடிகளைப் பற்றியவாறே இந்தச் சமாதியின் மேல் உச்சியை அடைவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. ஆனாலும் தன் யானை மேற் கொண்ட பிரியத்தின் வெளிப்பாடாக அமைந்த இந்த இந்தச் செயலை நினைத்து வியந்தேன் அப்போது.
அங்கிருந்து நானும் வழிகாட்டியும் அகன்று எமது வாகனச் சாரதியைத் தேடினோம். எங்கே போனார் இவர் என்று தேடினால் அங்கே கோயில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பெண்களிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தார் இவர். கம்போடியாவின் எல்லாக் கோயில்களுக்குமே சீருடை தரித்த காவலாளிகள் ஆணோ பெண்ணோ இருக்கின்றார்கள். நமது சாரதி பெண் காவலர்களை விடமாட்டார் போல என்று என்று கிண்டலடித்தார் வழிகாட்டி. சாரதி கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டார்.
நாம் இருந்த அந்தப் பிரதேசம் கம்போடியாவுக்கும் தாய்லாந்து நாட்டுக்கும் இடையேயான எல்லைக் கிராமம். இங்கிருந்து வெறும் 70 கிலோ மீட்டரில் தாய்லாந்தை அடைந்து விடலாம். தாய்லாந்து போவது சிரமமான காரியமா என்று கேட்டேன் நம்மவரிடம். தாய்லாந்து எல்லைக் காவலர்களுக்குச் சம்திங் வெட்டினால் எல்லாம் சுலபம் என்று சொல்லிச் சிரித்தார் வழிகாட்டி.
நாம் வந்திருந்த இந்தப் பிரதேசம் எங்கும் க்டந்த வியட்னாமிய படையெடுப்பின் போது விதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப்படாத பல காணிகள் இருக்கின்றன. அதை உறுதி செய்யுமாற் போல கண்ணிவெடிகள கவனம் என்ற எச்சரிக்கைப் பலகைகள் முளைத்திருக்கின்றன.
Koh Ker ஆலயங்கள் விஷ்ணுவுக்கும் சிவனுக்குமாக அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வூர் மக்கள் சித்திரையில் வரும் தமது புதுவருஷக் கொண்டாட்டங்களை கொண்டாடுவதற்கு ஏற்பாக அவர்களுக்கு அண்மித்த பகுதியிலேயே இவ்வாலயங்களை நான்காம் ஜெயவர்மன் அமைத்துப் புண்ணியம் தேடிக் கொண்டான் என்று சொல்லப்படுகின்றது.
Prasat Balang மற்றும் Prasat Thneng ஆகிய சிறு சிறு ஆலயங்களில் இன்னமும் பிரமாண்டமான சிவலிங்க விக்கிரகங்கள் இருக்கின்றன. இவ்வகையான பன்னிரண்டு ஆலயங்கள் இந்தப் பகுதியில் மட்டுமே எழுப்பப்பட்டிருப்பது ஆச்சரியத்தை உண்டு பண்ணுகின்றது. Prasat Balang இருக்கும் சிவலிங்க விக்கிரகத்தைப் பார்த்தவாறே உறைந்து நின்ற என்னைத் தட்டி கையில் இருந்த உடைக்காத தண்ணீர்ப் போத்தலைக் கொடுத்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யுமாறு சொன்னர் என் வழிகாட்டி. நானும் ஆவல் மேலிட தண்ணீர்ப் போத்தலை வாங்கி அந்த லிங்கத்தின் உச்சியில் எல்லாப் பக்கமும் நீரைச் சிதற விட்டேன். உள்ளத்தில் ஆண்டவனை ஒருகணம் நினைத்துப் பிரார்த்தித்தேன். தூரத்தில் நின்ற வழிகாட்டி கைகள் இரண்டையும் கூப்பியவாறே கண்களை மூடிப் பிரார்த்தித்துக் கொண்டார்.
இந்த நாள் பயணத்தோடு என்னோடு இதுவரை நாள் பயணித்த சுற்றுலா வழிகாட்டி Sib Chong விடைபெறும் நேரம் வந்தது. எனது கம்போடியப் பயணத்தில் நான் திட்டமிட்டதற்கு மேலாக பலவகையிலும் வழிகாட்டி என்ற வரையறைகளைக் கடந்து கிளிப்பிள்ளை போல எனக்கு வரலாற்றுப் பாடம் சொல்லித்தந்த அவரைப் புகழ்ந்து நன்றி சொல்லி அவரின் மின்னஞ்சலையும் பெற்று வழியனுப்பி வைத்தேன். அடுத்த நாள் நானும் கார்ச்சாரதியுமாக மட்டுமே உலாத்தலைத் தொடரவேண்டும்.
சுற்றுலா வழிகாட்டி
கம்போடிய சுற்றுலாக் கையேடு
14 comments:
படங்களும் பதிவும் சூப்பர் கானாஸ்!
உடை தரித்த கோயில் காவலர்கள், அவர்களில் ஹேமக் நல்ல ஐடியா...:-)
யானைக்கு சமாதி!! ..ம்ம்..மன்னன் கொண்ட பாசம்!! அதையும் விடாமல் நீங்க போய் பார்த்ததூங்க காம்போடியப் பாசம்!!
பல கோவில்களின் நிலை பரிதாபமாக இருக்கு!!
படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
வழக்கம் போல அனைத்து படங்களும் கலக்கல் தல ;))
\\Prasat Balang இருக்கும் சிவலிங்க விக்கிரகத்தைப் பார்த்தவாறே உறைந்து நின்ற என்னைத் தட்டி கையில் இருந்த உடைக்காத தண்ணீர்ப் போத்தலைக் கொடுத்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யுமாறு சொன்னர் என் வழிகாட்டி. நானும் ஆவல் மேலிட தண்ணீர்ப் போத்தலை வாங்கி அந்த லிங்கத்தின் உச்சியில் எல்லாப் பக்கமும் நீரைச் சிதற விட்டேன். உள்ளத்தில் ஆண்டவனை ஒருகணம் நினைத்துப் பிரார்த்தித்தேன். தூரத்தில் நின்ற வழிகாட்டி கைகள் இரண்டையும் கூப்பியவாறே கண்களை மூடிப் பிரார்த்தித்துக் கொண்டார்.
\\
என்ன சொல்ல மறக்க முடியாத தருணங்களில் இதுவும் ஒன்று ;)
அப்போ உங்களை அந்த வழிகாட்டி தான் படம் பிடித்திருப்பாரு போல...மிக சரியாக படம் பிடித்திருக்கிறார் ;)
:)
வித்யாசமான ஏரியா...
விதவிதமான தகவல்கள் கலக்குறீங்க போங்க!
இதில் ஒரு பெரிய் ஷாக் எனக்கு என்னன்னா....
இதுவரை போயிராத, புகைப்படத்தில்கூட பார்த்திராத இந்தக்கோவிலை
(அதுவும் அந்த 4ம் 5ம் படங்களில் உள்ள கோவிலை)
என் கனவில் அச்சு அசலாகக் கண்டிருக்கிறேன். அதன் பின் சுற்றுச்சுவரில் இருக்கும் ஒரு மேடு வழியாக உள்ளே குதித்திருக்கிறேன்.
பிரமிப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
இதை வேற ஆராயணும்போல இருக்கே!
நிலையின்மை என்ற தத்துவம் தான் நினைவுக்கு வருகிறது.. ஒரு காலத்தில் அந்த கோயில் எப்படி இருந்திருக்கும் ..இப்ப இப்படி ஒரு பாழடைந்த நிலை :(
@ சுரேகா என்ன நெஞ்சம் மறப்பதில்லை மாதிரி கதையா ? :)
அருமையான பதிவும், படங்களும். சென்றதற்கான பலனை அடைந்த்திருப்பீர் :)
//சந்தனமுல்லை said...
படங்களும் பதிவும் சூப்பர் கானாஸ்!
உடை தரித்த கோயில் காவலர்கள், அவர்களில் ஹேமக் நல்ல ஐடியா...:-)//
தொடர்ந்து வாசித்துக் கருத்துத் தருவதற்கு நன்றி சிஸ் ;)
//வடுவூர் குமார் said...
பல கோவில்களின் நிலை பரிதாபமாக இருக்கு!!
படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.//
வாங்க குமார்
எல்லா ஆலயங்களும் இந்த சோகக்கதை தான் சொல்லும்.
//கோபிநாத் said...
வழக்கம் போல அனைத்து படங்களும் கலக்கல் தல ;))//
மிக்க நன்றி தல
கவின்
என்ன சிரிப்பு ;)
//சுரேகா.. said...
வித்யாசமான ஏரியா...
விதவிதமான தகவல்கள் கலக்குறீங்க போங்க!
இதில் ஒரு பெரிய் ஷாக் எனக்கு என்னன்னா..//
தல
நீங்க இயக்குற படத்தின் ஷூட்டிங்கை இங்கே வச்சீங்கன்னா நெஞ்சம் மறப்பதில்லை நினைவுகளை மீட்கலாம் ;)
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
நிலையின்மை என்ற தத்துவம் தான் நினைவுக்கு வருகிறது..//
உண்மைதான் முத்துலெட்சுமி, இங்கேயுள்ள பல இடங்களைப் பார்க்கும் போது இந்த நினைப்பு வராமல் இல்லை
//Logan said...
அருமையான பதிவும், படங்களும். சென்றதற்கான பலனை அடைந்த்திருப்பீர் :)//
மிக்க நன்றி நண்பரே, பூரண திருப்தி, ஆனாலும் இன்னொரு தடவை நான் சொல்ல வேண்டும் என்ற ஆசையும் உண்டு.
நீங்க ஒரு குழந்தை போல் எக்கி எக்கி அபிடேகம், திருமுழுக்காட்டும் காட்சி, சூப்பரா இருக்கு அண்ணாச்சி!
குள்ளமா இருந்தா எப்படி லிங்கம் எட்டும்? காம்ப்ளான் குடிச்சி, காம்ப்ளான் பாய் போல் ஒசரமா இருந்தீங்கன்னா சுளுவா இருக்கும்-ல? :)
நீராட்டும் போது பாடும் பாடல்!
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்!
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்!
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்!
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்!
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்!
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்!
போற்றியாம் உய்ய ஆட் கொண்டருளும் பொன்மலர்கள்!
போற்றியாம் மார்கழி "நீர் ஆடேலோர்" எம்பாவாய்!!!
இந்திய கலாச்சாரச்சுவடுகளை நாம் தெரிந்து கொள்ளும் விதமாக உள்ளது..
தேவா
கே.ஆர்.எஸ் சாமி
இதை விட நான் உயரமாக இருக்க முடியாது, ஆனா அந்தப் பாரிய லிங்கத்தின் அளவே அளப்பரியது. நீராட்டத்தந்த பாடல் இனித்தது.
வணக்கம் தேவா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.
Post a Comment