Social Icons

Pages

Tuesday, January 23, 2018

மதுரை நகர உலாத்தல் 🙏🌴 அழகா கள்ளழகாபழமுதிர்ச்சோலையைக் கடந்து மலையேற வேண்டி அழைத்தார் பிரபாகரன். அழகர் கோயில் அங்கே இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டே செங்குத்தான அந்தப் பாதையில் கூட ஏறினேன். அந்த ஏற்றம் சற்றுக் கடினமாகப்பட்டது. ஆனால் சுற்று முற்றும் பக்தர்கள் விறு விறுவென்று நடந்து போவதைப் பார்க்க நமக்கும் வேகம் கூடியது. மார்கழி மாதத்தின் இளங்குளிரோ அல்லது மலையுச்சி நோக்கிய பயணமோ சில்லென்ற காற்று உடம்பைத் தடவி வழித்து விட்டுப் போகுது.

குரங்குகள் எல்லாத் திசைகளிலும் பாய்ந்தோடிக் மொண்டிருக்கின்றன. பாதையின் மறு கரையில் கற்களை அடுக்கடுக்காக ஒன்றன் மேல் ஒன்றாக வைத்திருப்பதைக் காட்டி
“வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் தாங்கள் வீடு கட்டும் போது இம்மாதிரியான நேர்த்தியைச் செய்து விட்டுப் போவார்கள்” என்றார் பிரபாகரன்.
மலையுச்சிக்கு மேலே போனதும் தான் தெரிந்தது நாங்கள் வந்திருப்பது ராக்காயி அம்மன் கோயிலுக்கு என்று. பிரபாகரன் அழைத்துச் செல்லும் திசையிலேயே போவோம் ஏன் எதுக்கு எங்கே என்ற கேள்வி இல்லாமல் என்று நானும் அதுவரை பேசாமல் இருந்து விட்டேன்.
உண்மையில் மணிவாசகம் இயக்கிய ராக்காயி கோயில் படத்தைத் தவிர இப்படியொரு கோயில் இருபதே எனக்கு அன்று வரை தெரிந்திருக்கவில்லை. ஆலயத்துக்குள் நுழைந்ததும் 
“குளிக்கலாமா சார்?” 
“இங்கேயா?”
“ஆமா சார் இது நூபுர கங்கைங்கிற புனித நீர் இங்கு வர்ரவங்க அதுல குளிச்சிட்டுப் போவாங்க”
“இல்லை வேணாங்க நீங்க குளியுங்க நான் வேடிக்கை பார்க்கிறேன்” என்று விட்டு அந்தச் சின்னக் கோயிலை நோட்டமிட்டேன். அந்தக் கோயிலின் நடு நாயகமாக படிக்கட்டுக்கள் போடப்பட்டு ஒரு தீர்த்தம். ஆண் பெண் பாகுபாடின்றி அந்தத் தீர்த்தப் பக்கம் போனால் ஆலயத்தின் தொண்டர் ஒருவர் வாளியால் நீரை இறைக்கிறார். ஒரு சில நிமிடக் குளியல் போட்டு விட்டுத் திரும்புகிறார்கள். பிரபாகரன் அங்கிருந்து திரும்பி வரும் போது அவரின் வேட்டி, சட்டை தொப்பலாக நனைந்திருந்தது. சட்டையைக் கழற்றிப் பிழிந்து விட்டு மீண்டும் போட்டுக் கொண்டார்.
நூபுர கங்கை அல்லது சிலம்பாறு இன்னும் வற்றாத சுனையாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆலயத்தின் மேல் தளத்தில் சுவாமி சந்நிதானத்துக்கு முன்னால் இருந்த நிலப்பகுதியில் இருக்கும் சதுரத் தளத்தை அகற்றி விட்டு அந்த நீரோட்டத்தை எங்களுக்குக் காட்டினார் பூசகர்.
ராக்காயி அம்மன் கோயில் தரிசனம் முடிந்து கீழிறங்கி வரும் போது ஒரு தாய்க் குரங்கு தன் குட்டியை அணைத்துக் கொண்டு கட்டியிருக்கப் பக்கத்தில் தகப்பன் குரங்கு. அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வீட்டு ஞாபகம் வந்து விட்டது.

“அழகர் கோயிலுக்கு நடந்தே போயிடலாமா சார்” என்று பிரபாகரன் கேட்க, மலையடிவாரத்துக்குப் போகும் பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்தி நடந்து போனால் தான் என்ன என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் அது மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்து கொண்டேன். 

அது ஒரு காட்டுப் பாதை. சீராகத் திருத்தியமைக்கப்படாத, கால் தடம் பதிந்த வழித்தடத்திலேயே பயணிக்க வேண்டும். திடீர் திடீரென்று குரங்குகள் பாய்ந்து வருகின்றன. 
“சார் கேமரா பத்திரம் அந்த பேக் ஐப் பார்த்து ஏதாச்சும் சாப்பாடுன்னு நெனச்சு குரங்குங்க பறிக்க வரும்” என்று பிரபாகரன் வேறு பயம் காட்டினார். அவர் சொல்லி முடிப்பதற்குள் குரங்கொன்று தன் முன் வரிசைப் பற்களைக் காட்டிக் கொண்டு என்னை நோக்கிப் பாய்ந்தது.
“ஏய் ஓடு ஓடு” என்று பயந்து கொண்டே கமராப் பையைச் சுழற்றினேன். அதுவோ என் பையைப் பறிக்காமல் போக மாட்டேன் என்று கங்கணம் கட்டியது போலச் சீறிக் கொண்டே போரிடத் தயாரானது.
அப்போது பிரபாகரன் ஒரு குச்சியை எடுத்து நிலத்தில் படாரென்று அடிக்கவும், குரங்கு பின் வாங்கி ஓடியது.
“நமக்குப் பயம் இருக்கறா மாதிரிக் காட்டிக்கிட்டோம்னா குரங்குக்குத் துணிச்சல் வந்துடும் சார், உங்களுக்குப் பயமா இருந்தா கொஞ்சம் வெயிட் பண்ணுவோம் வேற யாரும் கும்பலா வரும் போது அவங்க கூட சேர்ந்துப்போம்” என்று பிரபாகரன் சொல்ல, நடுக்காட்டுக்குள் தனியே நிற்பதை விட நடப்பதே மேல் என்று “இல்லைப் பரவாயில்லைங்ஜ போகலாம்” என்று விட்டு வழியில் நீர் வற்றி எலும்பும் தோலுமாக இருக்கும் பாறைத் திட்டுகளில் எல்லாம் வழுக்கி வழுக்கி ஏறி நடந்தேன்.
“இதோ அந்தப் பக்கம்லாம் ஆளுங்களைக் கொலைப் பண்ணிப் பிணத்தைத் தூக்கி வீசிட்டுப் போயிருக்காங்க”
“இதோ இந்தப் பக்கம் சின்னச் சின்னச் கோயில்கள் இருக்கு பாருங்க அங்கெல்லாம் நாம வந்து தீர்த்தத்தில் குளிப்போம்”
“அந்தப் பக்கப் புதர்ல பாம்புகள் நிறைய இருக்கு” 
என்று ஒவ்வொரு திசையாகக் காட்டிக் கொண்டே அவர் முன்னே நடக்கும் போது இலேசாக அடி வயிறு கலங்கத் தான் செய்தது. 
“போகாத இடந்தனியே போக வேண்டாம்” என்ற நீதியையும்  அந்த நேரம் பார்த்துப் போதித்தது மனசு.
ஆனால் அந்த நேரத்தில் இருந்த பயத்தை விட அதை நினைத்தால் இன்னும் பயம் வரும் இல்லையா அது போலவொரு மன நிலை. ஆனால் அந்த நேரத்தில் சில மணி நேரத்துக்கு முன்பாகவே அறிமுகமான பிரபாகரன் மேல் வைத்த நம்பிக்கை மட்டுமே அந்தப் பயத்தைக் களைந்தது.

“நாங்க இந்த மலை பூராவும் நடந்தே ஒவ்வொரு திக்குக்கும் போவோம்” என்றார். ஒருவாறு அந்தப் புதர்களைக் கடந்து ஒரு வெளியான பிரதேசம் அங்கே ஒரு கேணி. ஒரு பையனும் கிழவரும். இன்னொரு பக்கம்  காட்டு மரத்தை முறித்துக் கொண்டு ஒருவர்.
கேணிப்பக்கம் கொஞ்ச நேரம் நிதானித்து விட்டுக் கடந்தோம். 
“அதோ அந்தா சுவர் தெரியுதுல்ல அங்க தான் கள்ளழகர் படத்துல விஜய்காந்த் தொழுகை நடத்துற சீன் எடுத்தாங்க” பிரபாகரன் காட்டிய அந்தச் சுவர்ப் பக்கமும் புதர் மண்டிக் கிடக்குது.
கொஞ்சம் தள்ளி இளைஞன் ஒருவன் உணவுப் பண்டங்களைக் கடை பரப்பி வைத்திருக்கிறான்.

கிட்டத்தட்ட அரை மணி நேர நடையில் கள்ளழகர் கோயிலுக்கு வந்து விட்டோம். மலையடிவாரத்தின் நீண்ட பரப்பளவை உள்ளடக்கியிருக்குறது. கோயிலின் முகப்பில் ஒரு கலையரங்கம். அங்கு இன்னமும் தொடர்கிறதாம் பரத நடன நிகழ்வுகள். 

அழகர் கோயிலில் செய்யப்படும் சம்பா தோசை பிரசாதம் வெகு பிரபலம். நூபுர கங்கையில் இருந்து எடுக்கும் தண்ணீர் கொண்டு இதைச் சமைப்பதாக விக்கி சொல்கிறது.  கோயிலுக்குள் நுழைந்து தரிசித்தோம். என் வாழ்க்கையில் விரல் விட்டு எண்ணக் கூடிய வைணவக் கோயில்களுக்குத் தான் போயிருக்கிறேன். ஆழ்வார்களால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலத்தைக் கண்ட நிறைவு மனதில் இப்போது.

வெளியில் வந்து முன்னே நிற்கும் கோபுரம் ஒன்றைக் காட்டி “இது கருப்ப்பண்ணசாமி சந்நிதி முன்னாடில்லாம் இந்தக் கோபுர வாசல் மூடப்பட்டிருக்கும். இப்ப சின்னதா ஒரு வாயில் வச்சுட்டாங்க பாருங்க” என்று அவர் காட்டிய திசை சென்று வாயிலில் நின்று வழிபட்டோம். பிரார்த்தனை நிறைவேற்றக் கசையடி கொடுக்கும் பகுதி பக்கமாக இருந்தது.

கருப்பண்ண சாமி வரலாறு அறிய 
http://m.dinamalar.com/temple_detail.php?id=18627

மதுரையில் இருந்து 25 கிலோ மீட்டர் ஆட்டோவில் பயணித்து மலையேறி இறங்கி இதோ இப்போது கள்ளழகரையும் கண்டாச்சு. வழக்கமாக இந்த மாதிரித் தல யாத்திரையில் அழகர் கோயில் பயணத்துக்கு மட்டும் ஒரு நாள் ஒதுக்குவாராம் பிரபாகரன் ஆனால் என்னுடைய ஓட்டத்துக்கு ஈடு கொடுத்து மதியத்துக்குள் முடித்து விட்டார்.
அழகர் கோயில் பார்க்க வந்து இவ்வளவையெல்லாம் சுற்றிக் காட்டிய களைப்பு துளி கூட இல்லாமல் அடுத்த உலாத்தலுக்கு வேகம் கூட்டினார் தன் ஆட்டோவில்.

ராக்காயி கோயிலில் அருச்சனையில் கிட்டிய பெரிய மாலையை பிரபாகரன் ஆட்டோவை அழகுபடுத்தியது.
மீண்டும் மதுரை நகரை நோக்கி விர்ர்ர்ர்ர்

3 comments:

தனிமரம் said...

அழகர்மலையில் குரங்குகளின் சேட்டை திடீர் திடீர் என்று பயம் வரும்)))

தனிமரம் said...

நிறைய கற்றாழை அழகாய் காட்சி தரும் மலையடியில்.

தனிமரம் said...

எங்க தேச பொன்னச்சிப்பூக்கள் இங்கே இன்னும் அழகு கூட்டும் பாஸ்!