
ஓ.சி.டி (Obsessive compulsive personality disorder) என்ற விநோதமான மன உணர்வுக்கு ஆட்பட்டவர் மிகுந்த சுத்தபத்தமாகவும், எச்சரிக்கை உணர்வோடு இருப்பார் என்பதை அனுபவத்தில் கண்ட உண்மை. இதைப்பற்றி என் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த அனுபவம் ஒன்றையும் சமயம் வாய்க்கும் போது சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் ஹரிகிருஷ்ணன் என்ற நாயகன் பாத்திரத்தை ஏற்றிருக்கும் ஃபாகத் ஃபாசிலுக்கும் இதே பாங்கான மனவுணர்வோடு, இயல்பு வாழ்க்கையில் இருந்து தன்னை விலக்கி வாழ நடக்க முற்படுபவர். காலையில் எழுந்து தன் காலைக் கடனைக் கழிப்பதில் இருந்து அலுவலகப் பணி தாண்டிப் பொது இடங்களில் கூடத் தன்னுடைய இந்த விநோதமான சுபாவத்தில் இருந்து சமரசம் செய்து கொள்ளாத தொழில் நுட்பவியலாளன் இந்த ஹரிகிருஷ்ணன். எவரும் தன்னோடு வீண் அரட்டைக் கச்சேரி வைப்பதைத் தவிர்ப்பவர். தன்னைச் சுற்றி மட்டுமல்ல தன்னுடைய தொழிலிலும் இதே ரீதியான பூரணத்துவத்தோடு நடப்பதால் இவரின் சக பணியாளர்கள் வெறுப்போடு இவர் மீது கூறும் புகார்களையெல்லாம் தாண்டி, இவரின் மேலதிகாரிகளின் நேசத்தைப் பெற்றிருப்பவர்.
ஹரிகிருஷ்ணனுக்கு முக்கியமான ஒரு அலுவலகப் பணிக்காகத் திருவனந்தபுரத்துக்கு ரயில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. கூடப்பயணிக்கும் பயணிகோபாலன் (நெடுமுடி வேணு) என்ற முதியவர் தன்னுடைய மனைவி திடீர் நோய் வாய்ப்பட்டிருக்கிறார் என்ற தொலைபேசி அழைப்பால் தன் பயணத்தை இடை நிறுத்தித் கோழிக்கோடுவில் இருக்கும் தன் வீட்டுக்கு ரயில் எடுக்க வேண்டிய அவசரத் தேவை ஏற்படும் வேளையில் அதே ரயிலில் பயணிக்கும் இன்னொரு பயணி நாராயணி (ஸ்வாதி) கோபாலனை அவர் வீட்டில் சேர்ப்பிக்க முடிவெடுக்கிறாள். இந்தச் சிக்கலில் எதிர்பாராத விதமாக அகப்படுகிறார் ஹரிகிருஷ்ணன் (ஃபாகத் பாசில்). கேரளமே முழு நாள் ஹர்த்தாலை அனுஷ்டிக்க, இந்த மூவரும் கோழிக்கோடு எப்படிப் போய்ச் சேர்ந்தார்கள், ஹரிகிருஷ்ணனுக்கு இந்தப் பயணம் எந்த விதமான மன மாற்றத்தைக் கொண்டு வருகின்றது என்ற சாராம்சத்தில் வெகு இயல்பாகப் போரடிக்காமல் நகர்த்திச் செல்கின்றது இந்தப் படம்.
சுப்ரமணியபுரம் ஸ்வாதிக்கு கேரளம் கொடுத்திருக்கும் இன்னொரு சிறப்பான படம் இது. இந்த நாயகி பாத்திரம் தமிழிலோ தெலுங்கிலோ படைக்கப்பட்டிருந்தால் அரை லூசாகவோ, நாயகனை ஏதாவது பண்ணி வளைக்க முற்படும் காமுகியாகவோ மாற்றிவிடுவார்கள். ஆனால் ஆர்ப்பாட்டமில்லாத அந்த நாராயணியாக ஸ்வாதியின் நடிப்பு வெகு திறம். அதிலும் குறிப்பாக, கோபாலன் மாஸ்டர் வீட்டிலுருந்து விடை பெற்ற பின்னர் ஹரிகிருஷ்ணனும், நாராயணியும் தனியே தத்தமது வீடுகளுக்குப் போகும் பயணத்தில் கிட்டும் உணவு போசனத்தில், நாரயணி ஹரிகிருஷ்ணனோடு பேச்சுக் கொடுக்கும் போது வழக்கம் போல அவன் சிடுசிடுப்பதும், பின்னர் அவனின் விநோத சுபாவத்தை விஷமத்தனமாக எள்ளல் செய்து அவனைச் சிரிக்க வைக்கும் கட்டத்தில் ஆகா அந்தக் "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்".

பிரேம்ஜி அமரனும் நடித்திருக்கிறார், ஒரு சின்ன வேடத்தில் ஆனால் என் பார்வையில் இவருக்குக் கிடைத்த உருப்படியான அலட்டல் இல்லாத வேடம் இது, "எவ்வளவோ பண்ணிட்டோம்" என்ற வழக்கமான பஞ்ச் ஐ இந்தப் படத்தில் சொல்லும் போது கூட. தலைவாசல் விஜய் மலையாளக் கரையோரம் கரை ஒதுங்கிவிட்டார். கீதாவும் உண்டு.
படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் இருந்தும் சமீபகாலமாக மலையாள தேசத்தை ஆக்கிரமித்திருக்கும் மேற்கத்தேய வாத்திய மோகத்தால் இசைக்கருவிகளை உருட்டி விளையாடுகின்றார்கள். கிடைத்த வாய்ப்பில் நல்ல மெலடிப் பாடல்களைச் சேர்த்திருந்தால் இன்னும் நிறைவாக இருந்திருக்கும்.

பயணம் என்பது எத்தனையோ புது மனிதர்களையும், இடங்களையும் சந்திப்பதன்று, பயணியை புத்துருவாக்க அது உறுதுணையாகின்றது மனிதர்களையும் அவர் தம் வாழ்வியலையும் படிக்க முடிகின்றது, நாயகன் ஹரிகிருஷ்ணனுக்கு மட்டுமல்ல, இம்மாதிரி அரிய படைப்பைப் பார்க்கும் ரசிகனுக்கும் கூட.