Social Icons

Pages

Sunday, August 12, 2007

கர்நாடகா உலாத்தல் ஆரம்பம்இந்தியப் பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் தேடி வாசித்து இந்தியா குறித்த வரலாற்று, அரசியல், சமூக விடயங்களை அறிந்த எனக்குப் பாரத தேசத்தை நேரில் காணும் வாய்ப்பு 2001 ஆம் ஆண்டில் தான் முதலில் வாய்த்தது. இவ்வளவு நாளும் கற்பனைக்கு மட்டுமே எட்டியிருந்த இந்தக் கனவு தேசம் எப்படியிருக்கும் என்பதைக் கண்ணால் கண்டு எனது வாசிப்பனுபவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு அப்போது ஓரளவு கிடைத்தது.

நான் வேலை செய்த Oracle நிறுவனத்தின் திட்ட அமுலாக்கல் பிரிவின் (Project implementation) சார்பிலேயே எனது இந்த இந்தியப் பயணம் அமைந்தது.2001 ஆம் ஆண்டில் ஏதோ ஒரு கட்டிடடங்களில் பங்கு போட்டுக்கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக Indian Development Centre (IDC Oracle)மற்றும் Oracle Consulting ஆகிய பிரிவுகள் சில நூறு பணியாளர்களுடன் மட்டுமே அப்போது இயங்கிக் கொண்டிருந்தது.

மீண்டும் கடந்த 2006 ஆம் ஆண்டு வாய்த்த பெங்களூர்ப் பயணம் கூட மீண்டும் அலுவலக நிமித்தமே அமைந்திருந்தது.பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் வாசலில் அமெரிக்காவிலிருந்தோ அவுஸ்திரேலியாவிலிருந்தோ வரப்போகும் யாரோ ஒரு வெள்ளைத்தோல் மென்பொருள்காரனை வரவேற்க ஐந்து நட்சத்திர ஹோட்டல்காரர்களின் பெயர்ப் பதாதைகள் வரிசைகட்டி நிற்கின்றன.

Oracle India கடந்த ஆறு ஆண்டுகளில் அசுரத்தனமான வேகத்தோடு முன்னேறியிருந்தது என்பதற்கு இந்த நிறுவனம் தொழில் கொள்ளவைத்திருக்கும் பல்லாயிரம் பணியாளர் என்ணிக்கையே உதாரணம் கற்பித்தது. Garden City என்று செல்லமாக அழைக்கப்படும் பெங்களூரு Concrete City ஆக மாறிப்போயிருக்கின்றது. ஒரு சின்ன சந்து கிடைத்தால் போதும் ஒரு சாப்ட்வேர் நிறுவனம் சந்தில் சிந்து பாடிக் கட்டிடம் எழுப்பிவிடும் அளவிற்கு இந்த நகரம் முன்னேறிக்கொண்டிருக்கின்றது. அயலக மாநிலங்களிலிருந்து இளைஞர்களும், இளைஞிகளும் தாம் கற்ற 65 ஆவது கலையான மென்பொருள் அறிவோடு முற்றுகை நடாத்திக் குடியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.ராஜ்குமாரின் படங்களையே போட்டுப் போட்டு அலுத்த திரையரங்குகள் திரையைக் கிழித்து ரியல் எஸ்டேட் பதாதைகளுடன் புதியதொரு மென்பொருள் நிறுவனத்தைக் கம்பளம் போட்டு வரவேற்கின்றன. காங்கிரஸ் - ஜனதள் கூட்டணியில் ஆட்சியோட்டிக் கொண்டிருந்த தரம்சிங்கின் ஆட்சியைக் கவிழ்த்து அரியாசனம் ஏறிய குமாரசாமிக் கவுடாவின் பதாதைகள் புதிதாக முளைத்திருக்கின்றன.

வீதியெங்கும் வாரியிறைக்கப்பட்ட டாக்ஸிகளும், கொம்பனி கார்களும், ஆண்டாண்டு காலமும் வாழ்ந்து கொண்டிருக்கும் மத்தியதர பெங்களூர்க்காரனின் வாகனத்தை முந்திக் கொண்டு பாய்கின்றன. புதிய புதிய மேம்பாலங்கள் பனர்கட்டா ரோட்டை மேவிப் பாய்கின்றன. சில வழித்தடங்கள் மூடப்பட்டு வேற்றுப்பாதையால் நாளாந்தப் பயணங்கள் மாற்றி விடப்படுகின்றன. புழுதி விலக்கத் தம் முகத்தைக் கைத்துணியால் மறைத்த இளைஞர் பட்டாளமொன்றின் டூவீலர் அணிவகுப்பு ஏதோவொரு மென்பொருள் நிறுவனம் நோக்கிப் போகின்றது. புழுதி அப்பிய கண்களோடு விடிகாலைச் சூரியக் கதிர்கள் வியாபிக்கின்றன. பெங்களூரின் சாபக் கேடாக இருக்கும் கெட்டுப் போன வீதிகளோடு சண்டை போட்டுக் கொண்டு கார்ச்சக்கரங்கள் நகர்கின்றன.


என் கம்பனியால் ஒழுங்கு செய்யப்பட்ட ஹோட்டலின் டாக்ஸி Leela Palace உள் நுளைகின்றது. லீலா பாலஸ் பெங்களூரின் விமான நிலையத்திற்கு ஒப்பீட்டளவில் மற்றைய தங்குமிடங்களை விட குறுகிய தூரத்தில் இருக்கின்றது. அரச பிரதிநிகள், உயர்மட்டத் தலைவர்கள் அதிகம் வந்து போகும் பெரிய ஹோட்டல்களில் ஒன்று. தன் பெயருக்கு ஏற்ற விதத்தில் பெரியதொரு அரண்மனையாக எழுந்து நிற்கின்றது இது. மும்பை, பெங்களூர், கோவா, மற்றும் கோவளம் ஆகிய இடங்களிலே இந்த ஹோட்டலின் அமைவிடங்கள் உள்ளன.
பூங்கா நகரமான பெங்களூர் காங்கிறீற் நகரமாக மாறிக் கொண்டிருக்கையில், லீலா பாலஸ் ஹோட்டலின் உள்ளேன் ஒரு மினி அந்தப்புரமே இருந்தது. நீர்ச்சுனைகளும், செயற்கையாக அமைத்த இயற்கை மலர்ச்சோலைகளுமாக உள்ளே ஒரு ரம்யமான சூழ்நிலை விளங்கியது. நான் தங்கியிருந்த காலத்தில் சீக்கிரமே காலையில் எழுந்து நடை போட இந்தச் சூழ்நிலை ஒரு இதமான வாய்ப்பையளித்தது.

எம் நிறுவனப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய நல்ல தரமான தங்குமிடங்களில் இருக்கவேண்டும் என்ற நோக்கில், இப்படியான ஹோட்டல்களோடு முற்கூட்டிய ஒப்பந்த அடிப்படையிலும் தங்கல் பதிவுகளைப் பேணிவருகின்றது. பெரும்பாலும் பெரிய கம்பனிகள் இப்படியான திட்டத்தையே பின்பற்றுகின்றன.


இந்த லீலா பாலஸ் ஹோட்டல் ஒன்பது ஏக்கர் பரப்பளவில் இருக்கின்றது. காரை விட்டு ஹோட்டல் உள்ளே நுளைகின்றேன். சிறு கூட்டம் ஒன்று லீலாவில் ஏற்கனவே நடந்து முடிந்த ஏதோவொரு சந்திப்பு நிகழ்வினை முடித்துக் கொண்டு வெளியேறுகின்றது. அதில் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டே நகரும் கறுப்பு உருவம் ஈர்க்கின்றது. "அட! முன்னாள் கிறிக்கெற் வீரர் கபில்தேவ் போகின்றாரே " என்று ஒரு கணம் நின்று அவரைப் பார்த்துவிட்டு ஹோட்டலின் உள்ளே நுளைகின்றேன். இனியதொரு வயலின் இசையை வாத்தியக்காரர்கள் வரவேற்பறையில் தவழவிடக் காதில் தேனாகப் பாய்கின்றது இந்த இசை வரவேற்பு.தொடரும் ......!