எந்தவொரு ஆட்சி, அதிகார முறைமையும் துரோகத்தனத்தால் கட்டியெழுப்பப்பட்டது. அது தன்னை நிலை நிறுத்த எந்தவொரு விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கும். பதவி வெறிக்கு முன் பந்த பாசம் கூட நிலைத்திருக்காது.
ஆனால் இப்படியானதொரு கட்டமைப்பு என்பது நிலைத்திருக்காது, அடிமைத் தளையிலிருந்து தன் சமூகத்தைக் காப்பாற்றிக் கொள்ள, சமூக விடுதலை நோக்கிய, தன்னலம் பாராத போராளிகள் தோற்றம் பெறுவர்.
மன்னராட்சிக் காலத்திலிருந்து, ஐரோப்பியர் காலம், அதற்குப் பின்னான குடியாட்சி அரசமைப்பு வரை இது முடிவில்லாத சக்கரச் சுழற்சி. இதைத்தான் "இயோபின்ட புஸ்தகம்" திரைப்படமும் பதிவாக்குகிறது.
இந்திரா காந்தி அரசால் இந்தியாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட காலப்பகுதி, 1977 ஆம் ஆண்டு தான் எந்த நேரமும் கைதாகலாம் என்ற சூழலில் கம்யூனிஸ்ட் தலைவர், தன் கழிந்த நினைவுகளை, வரலாற்றின் பழைய பக்கங்களை எழுத ஆரம்பிக்கிறார். அதுதான் "இயோபின்ட புஸ்தகம்" (The Book of Job).
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற்குப் பாய்கிறது கதை. ஹாரிசன் என்னும் வெள்ளைக்காரர் கேரளாவின் மூணாறு பகுதியிலே தேயிலைத் தோட்டங்களை நிறுவித் தன் வர்த்தகப் பரப்பை ஆரம்பிக்கிறார். அந்தத் தோட்டங்களில் வேலை செய்ய வாழ்க்கைப்பட்டவர்களை அடிமைகளாக வழி நடத்தும் வகையில் விசுவாசமிக்க ஒருவனைக் காண்கிறார். அவனைக் கிறீஸ்தவனாக்கி இயோப் (Job) என்று பெயரும் சூட்டப்படுகிறது.
முரட்டுத்தனமும், மிருக குணமும் கொண்ட இயோப் இப்போது ஹாரிசனின் முற்று முழுதாக நம்பிக்கைக்குரிய விசுவாசி. ஏற்கனவே திருமணமான உள்ளூர்ப் பெண் கசாளி மேல் ஹாரிசனின் பார்வைபடுகிறது. கசாளியின் கணவனைக் கொன்று அவளை ஹாரிசனின் ஆசை மனைவி ஆக்குகிறான் இயோப்.
இயோப் இற்கு ட்மித்ரி, இவான், அலோசி என்று மூன்று பையன்கள்.
இந்த நிலையில் முதலாம் உலக யுத்தம் ஆரம்பிக்கிறது. ஹாரிசனின் தேயிலை வர்த்தகம் படுத்துவிட அவர் இங்கிலாந்து செல்ல முனைகிறார். ஆனால் கொச்சினில் வைத்து அவருக்கு நோய் முற்றி இறக்கிறார்.
இயோப் தன் கையில் அதிகாரத்தை எடுக்கிறான். மூணாறின் தேயிலை வயல்கள், ஹாரிசனின் பங்களா உள்ளிட்ட சொத்துகளைக் கையப்படுத்தி விடுகிறான். கர்ப்பவதியான ஹாரிசனின் ஆசை மனைவி கசாளியை வீட்டை விட்டு அடித்துத் துரத்துகிறான்.
இயோபின் மூத்த மகன் ட்மித்ரியும் இரண்டாமவன் இவானும் தன் தந்தை போன்ற முரட்டுச் சுபாவம் மிக்க வஞ்சகர்களாக வளர்கிறார்கள். ஆனால் கடைசிப் பையன் அலோசியோ இளமையிலேயே இறந்து போன அவனின் தாயைப் போல இரக்க சுபாவம் கொண்டு வளர்கிறான். அவனின் நட்பு வட்டம் காசாளியின் மகள், மலைக் கிராமத்துப் பையன் செம்பன் என்று சிறியது.
ஆனால் சிறுவன் அலோசி, தம் அண்ணன் இருவரும் வேலைக்காரியைப் பாலியல் வன் கொடுமை செய்து கொன்று தூக்கியதைக் கண்டு வெறுத்துப் போய் தன் வீட்டை விட்டே ஓடுகிறான்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயங்கிக் கொண்டிருந்த Royal Navy இல் கடற்படை வீரனாகச் சேர்ந்த அலோசி 1946 ஆம் ஆண்டில் மீண்டும் தம் சொந்த பூமிக்கு வருகிறான்.
இயோப் மற்றும் அவனது மகன்களது கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மூணாறு வாழ் அப்பாவிக் குடிகள் எப்படிக் காப்பாற்றப்படுகிறார்கள், ஆங்கிலேயர் ஆட்சியின் நிர்வாகத்தில் இருந்த இந்தியக் கடற்படையில் இருந்த அலோசியின் மறுபக்கம் என்ன, இந்த மூணாறுப் பகுதியின் வளத்தைச் சுரண்ட வரும் மதுரை அங்கூர் ராவுத்தரின் சதி வலையில் சிக்கும்இயோபின் ராஜ்ஜியத்தின் நிலை என்ன இதைத்தான் தொடர்ந்து பேசுகிறது இயோபின்ட புஸ்தகம்.
ஒரு வரலாற்றுப் பகைப்புலத்தோடு எடுக்கப்பட்ட இந்திய சினிமா இலக்கியத்தை இந்தப் படமளவுக்கு நேர்த்தியாக, என்னுடைய அனுபவத்தில் கண்டதில்லை. அதற்குக் காரணமே பிரமாண்டம் என்ற பெயரில் சாரமிழந்து போன காட்சியமைப்பு, எடுத்துக் கொண்ட சிக்கலான கதையமைப்பை எந்த வித வர்த்தக மாமூல் விஷயங்களுக்கும் ஆட்படாது நிறுவுதல், வெறும் பிரமாண்டத்தை மட்டும் காட்டிக் கதையில் கோட்டை விடுதல் என்ற நிலை இல்லாதிருத்தல் என்ற வகையிலேயே இதுவொரு கச்சிதமானதொரு படைப்பு.
இயக்குநர் அமல் நீராட் உடன் இணை தயாரிப்பாளர் இந்தப் படத்தின் நாயகன் பகத் பாஸில். இந்தப் படத்தின் கதையை ஒரு சொட்டுக் கூடச் சிதற விடாது காட்சியமைப்பில் பெரும் நியாயத்தைக் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளரும் இயக்குநர் அமல் நீராட் தான். ஒளிப்பதிவுக்கும், காட்சிக் களன்களுக்கும் நூறு புள்ளியை இறைக்கலாம்.
நல்ல இயக்குநர் மட்டுமல்ல மலையாள சினிமாவின். இன்றைய நம்பிக்கைக்குரிய குணச்சித்திர ஆளுமை லால் தான் கொடுங்கோலனான இயோப் ஆக வருகிறார். தமிழ்ப்படங்களில் சாதா வில்லனாக்கிப் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கும் நாம் லால் இம்மாதிரியான அமானுஷ்ய நடிப்பைக் கொடுத்த படங்களைத் தேடியெடுத்துப் பார்க்கும் போது அவரின் உண்மையான பரிமாணம் விளங்கும்.
நான் நினைத்தே பார்க்கவில்லை, ஒடிசலான தற்காலத்துத் தலைமுறை நடிகன் ஜெயசூர்யா அங்கூர் ராவுத்தர் என்னும் மதுரைக்கார வணிகராக நெஞ்சில் வஞ்சமும், முகத்தில் கள்ளமும் பொதிந்திருக்கும் வெளிப்பாட்டை அநாயசமாகக் காட்டியது. இந்தப் படத்தில் லால் இற்கு அடுத்து நடிப்பென்ற வகையில் இவருக்குத் தான் கனமான வேலை கிட்டியிருக்கிறது.
இயோபின் கடைசி மகன், அலோசி என்ற முற்போக்குச் சிந்தனை கொண்ட வாலிபனாக பகல் பாஸில், நாயகன் என்பதற்காகத் தன்னை மீறிய நாயகத் தனத்தைத் தன் படங்களில் காட்டாதவர் இந்தப் படத்திலும் அடக்கமாகத் தன் எல்லையில் நின்று சாதிக்கிறார். இன்னும் அந்த செம்பன் என்ற மலைவாசி இளைஞனாக விநாயகன் இன்று கேரளாவைத் தாண்டி கவனிக்கப்படும் நடன், தன் கணவன் இவானின் (இயோபின் இரண்டாவது மகன்) துன்புறுத்தலுக்கு அடங்கிப் போனாலும் தன் கனவுலத்தில் வாழ்ந்து கொண்டே வஞ்சம் தீர்க்கக் காத்திருக்கும் ரஹேல் என்ற பாத்திரத்தில் வரும் பத்மப்ரியா, ஹாரிசனின் மகளாக ஏழ்மையும், மர்மமும் முகத்தில் புதைத்து வைத்திருக்கும் மார்த்தா என்ற இஷா சர்வாணி என்று சொல்லிக் கொண்டே போகலாம் ஒவ்வொரு பாத்திரங்களும் கச்சிதமாகப் பொருந்திப் போன நடிகர்களின் பங்களிப்பு.
படத்துக்கு அளவாகத் தூவப்பட்ட இசைக் கலவையை நேஹா நாயரும் யக்ஸன் கேரி பெரேராவும் சிறப்பான பங்களிப்பு. ரஹேலின் கனவுலகத்தில் பின்னணியில் ஒலிக்கும் "மெளனமே இதென்ன சொல்கிறாய்" https://youtu.be/q5V3iMGCRA் உஷா உதூப் பாடும் அந்தத் தமிழ்ப்பாட்டு அப்படியே காட்சியமைப்போடு படத்தை உலகத் தரத்தில் அமர்த்துகிறது.
அலோசி & மார்த்தா காதல் பாடலைத் தவிர்த்திருக்கலாம்.
இந்தப் படம் கேரளாவில் வசூல் ரீதியாகவும், விருதுகளாலும் பெருமை சேர்த்திருக்கிறது. இருப்பினும் இந்தியத் தேசிய விருதுகளிலும், சர்வதேசப் பட விழாக்களிலும் அதிகம் கவனிக்கப்பட வேண்டியது.
எங்கோ பிறந்து, எங்கோ வளர்பவன் தனக்கு செளகரியமான வாழ்விடங்களைத் தேடிப் போகின்றான். வரலாற்றின் எல்லாக் காலகட்டத்திலும் அதர்ம நெறிகளோடு வாழத் தலைப்பட்டவர்களின் முடிவுரையை அலோசி போன்ற போராளிகளால் எழுத வேண்டியிருக்கிறது. சுதந்தரத்துக்குப் பின்னான மக்களாட்சியில் அலோசி போல் ஒருவன் வருகைக்காகக் காத்திருக்கிறது "இயோபின்ட புஸ்தகம்".