Social Icons

Pages

Thursday, December 06, 2012

குருவாயூரப்பன் கோயில் தரிசனம்


குருவாயூரைப்பற்றி என்போன்றோருக்குத் தெரியவைத்த பெருமை கவிஞர் வாலிக்குச் சேரும். "குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி" பாட்டு மூலமே குருவாயூரானை அறிந்து கொண்டேன்.  கேரளத்தைப் பற்றி அறிந்து கொண்ட ஈழத்தவருக்கு சபரிமலை ஐயப்பன் அளவுக்கு குருவாயூர் பரிச்சயமில்லை. ஆனால் என் சித்தப்பா கடும் கிருஷ்ண பக்தர், குருவாயூருக்கு நான் போய்த் திரும்பிய செய்தியைச் சொன்னபோது அவர் முகத்தில் இருந்த பெருமிதச் சிரிப்பு அந்தக் கோயிலின் மீது அவர் கொண்ட நேசத்தைக் காட்டியது.

நந்தனம் என்ற மலையாளப்படத்தைச் சில ஆண்டுகள் முன்னர் பார்த்த பின்னர் இப்படிப் பகிர்ந்து கொண்டேன் http://www.madathuvaasal.com/2008/01/blog-post.html
"இறுதியில் தன் திருமணம் முடித்த களிப்பை ஜானகியும் சொல்ல வரும் போது ஜானகி அப்போது தான் தன் மகன் உன்னி வந்ததாக அறிமுகப்படுத்துகின்றார். அங்கு உன்னியின் வடிவத்தில் வேறு யாரோ? அப்படியென்றால் இதுவரை நாளும் பாலாமணிக்கு ஆறுதல் கொடுத்த அந்த உன்னி யார்?
உடனேயே தன் கணவனை இழுத்துக் கொண்டு குருவாயூரப்பன் சந்நிதிக்கு ஓடும் பாலாமணி குருவாயூர் கோயில் மூலஸ்தானம் அருகே ஒருவனைக் காண்கின்றாள். அது அவளுக்கே தெரிகின்ற, இதுவரை நாளும் உன்னியின் உருவத்தில் வந்த அந்த உருவம்...

" ஞான் கண்டு, ஞானே கண்டுள்ளு, மாத்ரம் கண்டிடுள்ளு, அது உன்னியட்டா வேஷத்தில் வந்தது"
கணவன் மார்பில் புதைந்து கொண்டு அழ ஆரம்பிக்கின்றாள் பாலாமணி. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் எமது கண்கள் தானாகவே பனிக்கின்றன.
உடனேயே தன் கணவனை இழுத்துக் கொண்டு குருவாயூரப்பன் சந்நிதிக்கு ஓடும் பாலாமணி குருவாயூர் கோயில் மூலஸ்தானம் அருகே ஒருவனைக் காண்கின்றாள். அது அவளுக்கே தெரிகின்ற, இதுவரை நாளும் உன்னியின் உருவத்தில் வந்த அந்த உருவம்...

வெறும் சினிமா என்று ஒதுக்க முடியாது இன்றும் அந்தக் காட்சியை நினைக்கும்போது மெய்சிலிர்க்கும் எனக்கு. குருவாயூருக்கு ஒரு நாள் போகவேண்டும் அவன் சந்நிதியில் காலாற நடக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.


ஏற்கனவே கேரளாவுக்கு வந்தபோது திருவனந்தபுரம் ஸ்ரீ பத்ம நாப‌ சுவாமி கோயிலில் வேஷ்டி கட்டினால் தான் ஆலயத்துக்குள் பிரவேசிக்க முடியும் என்று சொன்னதால் ஆலயம் நிர்வகிக்கும் கரும பீடத்தில் ஒரு வேட்டியை வாங்கி உடுத்திக் கொண்டு போயிருந்தேன். இம்முறை முன்னேற்பாடாக என் பயணப்பொதியில் காவி நிறத்தில் ஒரு வேட்டி, சால்வையை எடுத்து வைத்துக் கொண்டேன். கொச்சினில் நண்பர் சைஜுவைக் கண்டபோது இதைச் சொன்னேன். "காவி வேஷ்டியை அனுமதிக்கிறார்களா தெரியவில்லை" என்று அவர் சந்தேகக் குரல் எழுப்பவே, குருவாயூர் கோயிலின் கரும பீடத்தில் வாடகைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்று தீர்மானித்து அன்று மாலைப் பூசைக்காகக் கோயிலுக்கு ஆட்டோ பிடித்தேன்.

ஆலயத்தை அடைந்து அங்குள்ளவர்களிடம் கரும பீடம் எங்கே இருக்கு என்று கேட்டறிந்து அங்கே போய்க் கேட்டால் வாடகைக்கெல்லாம் வேஷ்டி கொடுப்பதில்லை என்றார்கள். கோயிலின் சுற்றுப்புறங்களில் இருந்த கடைகளை நோட்டம் விட்டேன். ஒரு துணிக்கடை இருந்தது. அங்கு போய் ஒரு நாலு முழ வேட்டியை 130 ரூ கொடுத்து ஓரமாக மறைவிடம் தேடி இடுப்பில் செருகிக் கொண்டேன். என் இடுப்பில் வேட்டி நிற்பதென்பது சிலுக்கு சுமிதாவுக்கு சேலை கட்டிப் பார்ப்பது போல சவாலான விடயம். பின்னர் தான் தெரிந்து கொண்டேன் எந்த நிற வேஷ்டியென்றாலும் உள்ளே போகலாம் என்று (சைஜூ நின்னை ஞான் கொல்லும்) ஒருமாதிரியாக உடம்பில் சுற்றியாச்சு அடுத்ததென்ன கோயிலுக்குள் நுழைவோம் என்று போனால், கையில் காமரா, செல்போன். இதையெல்லாம் கொண்டு உள்ளே அனுமதிக்கமுடியாது என்று காவலர் கறாராக இருந்தார். ஆலயத்தின் வெளிக் கரும பீடத்தில் இவற்றைப் பாதுகாப்பாக‌ வைத்துவிட்டு ரசீதை வாங்கிக் கொண்டேன்.

இங்கே ஒரு குறிப்பு, நீங்கள் குருவாயூர்க் கோயிலுக்குப் போவதாக இருந்தால் முன்னேற்பாடாக காமரா, மற்றும் செல்போனைப் பாதுகாப்பாக வைத்து விட்டுச் செல்லுங்கள். இரண்டு, மூன்று மணி நேரம் வரிசையில் கால்கடுக்க நின்று பின்னர் கோயிலுக்கு முன்னுள்ள சோதனை நிலையத்தில் இவை காண்பிக்கப்பட்டால் (மறைத்து வைத்திருந்தாலும் கண்டுபிடிக்கக் கருவி உண்டு) வீண் நேர விரயம் உங்களுக்குத் தான்.

 குருவாயூரப்பன் கோயிலில் தினமும் காலை 3 - 3.30 வரை நிர்மல்யம் என்ற காலைப் பூஜையும், காலை 11.30 - நண்பகல் 12 உச்சிக்காலப் பூஜையும், மாலை 4.30 - 5 மணிக்கு சீவளி என்ற சாயரட்சைப் பூஜையும் இரவு 7.45 - 8.15 மணிக்கு இரவுப்பூஜையும் வெகு விசேஷமானவை. உண்மையில் முழு நாளும் தங்கியிருந்து இவை ஒவ்வொன்றையும் பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இரவு 9.15 மணிக்கு கிருஷ்ணாட்டம் என்ற கேரளப் பாரம்பரிய நடனத்தையும் ஆலயத்தில் நிதமும் வழங்கிச் சிறப்பிப்பர். இவற்றுக்கெல்லாம் நான் முந்திய பதிவில் சொன்னது போல, கோயிலுக்கு அருகாமையிலுள்ள தங்குமிடமே பேருதவியாக இருக்கும்.


புதுமையின் சுவடுகளைக் குறைத்துப் பழம்பெருமை மிக்க கூரைவேலைப்பாட்டுடன் குருவாயூர் கோயில். ஆலயத்தைச் சூழவும் கடைகள். ஒருபக்கம் கலா மண்டபம் அமைத்து,  நான் சென்ற சமயம் செம்பை வைத்ய நாத பாகவதர் நினைவாக அதிகாலை ஐந்து மணியிலிருந்து தொடர் கர்னாடக இசைக்கச்சேரிகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
அடியவர்கள் குளித்து நீராடப் பெரும் தீர்த்தக் கேணியும், உடை மாற்றிக் கொள்ள கட்டிடம் ஒன்றும் இருக்கிறது.
குருவாயூர் கோயிலில் சிறப்பு தரிசனம் என்ற பேச்சுக்கே இடமில்லை, எல்லோருமே சமம், எல்லோருக்குமே ஒரே அணுகுமுறை தான். யாருக்காகவும் கோயிலின் ஆசார, ஒழுக்கவியல் நடைமுறையை மாற்ற மாட்டார்கள். இது பெரும்பாலான கேரளத்துக் கோயில்களுக்கே உரிய தனிச்சிறப்பு. கோயிலின் இணைய முகவரி http://www.guruvayurdevaswom.org/dpooja.html

மாலை நான்கு மணிக்கெல்லாம் ஆலயத்தில் இருந்தேன். என்னடா கூட்டம் அள்ளும் என்றார்களே பெருசா யாரையும் காணோம் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு வெற்றுடலோடு வேஷ்டியும் தரித்துக் கோயிலுக்குள் நுழைந்தேன். கோயிலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் வர ஆரம்பித்தது, ஒரு வரிசையில் நின்றார்கள் மூலஸ்தானத்தில் இருக்கும் மூர்த்தியைக் காண. நானும் அதில் ஒருவராக நின்றேன், ஆனால் பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் மட்டுமே இந்த வாசல் வழியாக வரலாம் என்று என்னையும் கூட நின்ற சில இளையோரையும் தடுத்துவிட்டார்கள். ஆகா இப்போ என்ன செய்யலாம் சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்கமாட்டாரோ என நினைத்து என்னோடு நின்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நோட்டம் விட்டேன். அவர்கள் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

நேரம் போய்க்கொண்டிருக்கிறதே எப்படி குருவாயூரப்பனைக் காணலாம் என்று மனம் பதபதைக்க, அந்த வேளை செண்டை மேளம், குழல் முழங்கத் தொடங்கியது. சுவாமியின் உட்பிரகாரப் பவனி ஆரம்பித்ததை அது கட்டியம் கூறியது. சத்தம் கேட்ட திசை கேட்டுப் பார்த்தேன். அழகுபடுத்தப்பட்ட யானைகள் தம் மேல் சுவாமியின் விக்கிரகத்தைச் சுமந்து கொண்டு கம்பீரமாக நடை போட்டுக் கொண்டு வந்தன. நின்ற இடத்திலிருந்தே கை கூப்பினேன், வாய் "பச்சை மால் மலை போல் மேனி"யை முணு முணுக்கத் தொடங்கியது.

மெல்ல மெல்ல யானை நடையோடு சுவாமியின் உட்பிரகாரப்பவனி நடக்க, முன்னே செண்டை வாத்தியக்காரர்கள் முறுவலித்துக் கொண்டே வாசிக்கச் சூழவும் பக்தர்கள் பக்திப் பரவசத்தோடு ஆண்டவனை நோக்கிக் கைகூப்பிய நிலையில். அந்தச் சூழ் நிலையில் உலகியலை மறந்து எல்லாம் துறந்து வேறெந்தச் சிற்றின்பங்களையும் உள்ளிளுக்க ஒப்பாமல் ஆண்டவனை மட்டுமே சரணாகதி அடைந்த நிலையில் மனம் இருந்தது.

சுவாமி வலம் கிழக்குப் பிரகாரத்தை நோக்கி வந்து அங்கேயே தாமதித்தது. மூலவரை நோக்கியவாறு பாராயணம் நடந்து கொண்டிருக்க, அடியவர் கூட்டம் அங்கேயே ஸ்தம்பித்தது. அப்போது தான் பார்த்தேன் இன்னொரு வழியால் கூட்டமொன்று மூலஸ்தானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை. எப்படி வருகிறார்கள் என்று நோட்டம் விட்டால் அவர்கள் East Nada என்ற கிழக்கு வீதியால் வருவது தெரிந்தது. அங்கிருந்து நகர்ந்து கோயிலின் முகப்புக்கு வந்தேன். அப்போது தான் ஒரு உண்மை புரிந்தது. மூலவரைத் தரிசிக்க வேண்டும் என்றால் கோயிலின் கிழக்குப் பக்கமாக உள்ள முகப்பு வாசல் வழியாகத் தான் எல்லோருக்குமென வழியேற்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கே இரும்புச் சட்டத்துக்குள்ளே அடங்கி, கூட்டம் கூட்டமாக வரிசையில் பக்தர்கள் கோயிலுக்குள்ளே சென்று கொண்டிருந்தார்கள். நானும் அந்தக் கூட்டத்துள் ஐக்கியமானேன். ஒரு மணி நேரம் கடந்த நிலையில் மெல்ல உள்ளே சென்று மூலஸ்தானத்தில் வீற்றிருந்த குருவாயூரப்பனைச் சேவித்தேன். ஒரு நிமிடத்துக்கும் குறைவான நெருக்கமான சந்திப்பு அது. ஆனால் அதற்குள் அவருக்குச் சொல்லவேண்டியதைச் சொல்லிய திருப்தி. கூட்டம் நெட்டித் தள்ளியது. உட்பிரகார விக்கிரகங்களை வழிபட்டுவிட்டு "இது போதும் எனக்கு" என்ற பூரண திருப்தியோடு குருவாயூரப்பன் ஆலயத்தில் இருந்து வெளியேறினேன்.

ஹோட்டலுக்கு வந்தபோது மதியம் சாப்பிட்ட இரண்டு துண்டு சப்பாத்தி ஜீரணித்து பசி வயிற்றைக் கிள்ளிக் கிள்ளிக் கொண்டிருந்தது. மீண்டும் ஹோட்டலுக்குள்ளேயே இருந்த உணவகத்தின் கதவைத் தட்டினால் அதே சப்பாத்தி தான் சைவச்சாப்பாடாகக் கிடைக்குமாம். இந்த இருட்டில் தெரியாத தேசத்தில் எங்கே உணவகத்தைத் தேடுவேன் என்று நினைத்து அதையே வாங்கி வயிற்றில் தள்ளினேன்.

சரி, குருவாயூருக்கு வந்து தரிசனமும் கண்டாயிற்று, திட்டமிட்டபடி இனி அடுத்த பயணம் கோழிக்கோடு நோக்கி என்று நினைத்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தேன். செல்போன் தட்டி எழுப்பியது. மறுமுனையில் முன்னர் எங்கள் கம்பெனியின் சென்னை அலுவலகத்தில் பணிபுரிந்த நண்பர் நாராயணன் அழைப்பில். குருவாயூர் தரிசனம் எல்லாம் கண்டாயிற்று இனிக் கோழிக்கோடு பயணப்படப்போகிறேன் என்று நான் சொல்ல "இல்லை பிரபா இவ்வளவு தூரம் வந்துட்டீங்க, கண்டிப்பா அதிகாலை மூணு மணிக்கு நடக்கிற நிர்மல்யத்தில் கலந்துக்குங்க" என்று அன்புக் கட்டளை போட்டார். எல்லாம் தெய்வ கிருபையோ என்று நினைத்துக் கொண்டு, ஹோட்டல் ரிஷப்சனில் இருந்தவரிடம் அதிகாலை இரண்டு மணி வாக்கில் ஒரு ஆட்டோ ஒழுங்கு செய்யமுடியுமா என்று கேட்க அவரும் உடனேயே ஆட்டோக்காரரை அழைத்துச் சொல்லிவிட்டிருந்தார்.

அடுத்த நாள் அதிகாலை ஒன்றரை மணிக்கெல்லாம் எழுந்து குளித்து முடித்துவிட்டு ஆட்டோக்காருக்காகக் காத்திருந்தேன். அவரும் சரியான நேரத்தில் வந்து, கோயிலில் இரண்டரை மணிக்கெல்லாம் இறக்கிவிட்டார். குருவாயூரப்பன் கோயில் பிரகாரம் அந்த இருள் சூழ்ந்த அதிகாலையிலும் கட்டுக்கடங்காத கூட்டத்தோடு நிரம்பியிருந்தது. கிழக்கு வீதியால் கோயிலுக்கு நுழைய கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நீளம் கடந்த கூட்டம்.

 
 அதிகாலையில் குளிப்பாட்டப்படும் கோயில் யானை

 நான் சென்ற அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை, வெளியூர் மக்கள் மட்டுமன்றி உள்ளூர்வாசிகளும் பெருந்திரளாகக் கலந்து சிறப்பிப்பர் என்று அறிந்து கொண்டேன். அன்று சுபமுகூர்த்தம் வேறு. ஆலயத்தின்  முகப்பிலேயே நேரெதிராக ஒரு பரண் அமைத்து மூலவரை நோக்கிவாறு மணமுடிக்கவிருக்கும் ஜோடியை இருத்தி, தீட்சதர் மணச்சடங்கு நடத்திவைப்பார். அந்த அதிகாலை நேரத்திலேயே ஒரு கல்யாணச் சடங்கு நடந்து கொண்டிருந்தது.காலை ஆறரை மணிக்கெல்லாம் கோழிக்கோடு கிளம்பவேண்டும், இந்த கூட்டத்தைத் தாண்டி உள்ளே போவேனோ என்று மனம் கிலேசித்தது. ஆனாலும் முடிந்தவரை இந்த வரிசையில் நின்று பார்ப்போம் என்று மனத்தை ஒருமுகப்படுத்தினேன். நம்மவருக்கே உரிய தனிப்பண்புடன் இடையில் சிலர் நுழைந்தது வேறு அந்த வரிசையைத் தாமதப்படுத்தியது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கால் கடுக்க நின்று ஒருவாறு அந்தச் சனக்கும்பலில் ஒருவராக ஆலயத்துக்குள் போயாச்சு. மீண்டும் குருவாயூரப்பனை நேருக்கு நேர் தரிசனம், உட்பிரகாரப்பவனி முடித்து ஆறுதலாக உள்ளே சுற்றி வந்து வேடிக்கை வந்தேன்.  ஒரு எளிமையான பழைமை பேணும் இந்த ஆலயத்தில், எத்தனை ஆயிரம் பக்தர்களை நிதமும் உள்வாங்கி அருள்பாலிக்கிறான் எங்கள் குருவாயூரப்பன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அனுமார் சிலை மேல் பொதிந்திருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டேன்.

குருவாயூர் வரவேண்டும் எம்பெருமான் முகம் காணவேண்டும் என்ற நினைப்பைச் செயற்படுத்தியாயிற்று. இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து நினைத்ததற்கும் மேலாக குருவாயூரப்பனின் நிறைவான தரிசனம் கிட்டிய பரிபூரண திருப்தியில் பிரிந்தேன் அங்கிருந்துமுகப்புப்படம் 1   நன்றி http://seasonsun-tharans.blogspot.com

முகப்புப்படம் 2   நன்றி http://www.hindudevotionalblog.com


16 comments:

K.Arivukkarasu said...

6 1/2 மாதங்களுக்குப் பின் மறுபடியும் உங்களுடன் குருவாயூர் சென்று வந்த திருப்தி ! குருவாயூர் இரு பதிவுகளிலும் படங்கள் அருமை !!

Nemakal Sanjheevi said...

குருவாயூருக்கு செல்ல வேண்டும் என்ற உந்துதல் படித்தவுடன்,மிக அருமை

Anonymous said...

கண்ணனைக் கண்டு களிப்புற்றமை அழகு. கையைப் பிடிச்சு குருவாயூர் கூட்டிட்டுப் போயிட்டிங்க. குருவாயூர்ல சைவச்சாப்பாடு கிடைக்கலைங்குறது வியப்புதான். கேரள மீல்ஸ் கூடவா கிடைக்கவில்லை?

கானா பிரபா said...

அறிவுக்கரசு சார்

வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள் ;)

கானா பிரபா said...

Nemakal Sanjheevi said...

குருவாயூருக்கு செல்ல வேண்டும் என்ற உந்துதல் படித்தவுடன்,மிக அருமை //

ஆகா, கண்டிப்பாக நீங்கள் தரிசிக்கவேண்டிய இடமாச்சே

கானா பிரபா said...

gragavanblog said...

கண்ணனைக் கண்டு களிப்புற்றமை அழகு. கையைப் பிடிச்சு குருவாயூர் கூட்டிட்டுப் போயிட்டிங்க. குருவாயூர்ல சைவச்சாப்பாடு கிடைக்கலைங்குறது வியப்புதான். //

வாங்க ராகவன்

நான் இருந்த ஓட்டல் நிலவரம் அப்படி, கேரள மீல்ஸ் கேட்டால் அசைவம் கொண்டு வரவா என்று கேட்டார்கள் :)

வெங்கட் நாகராஜ் said...

சில வருடங்களுக்கு முன் நண்பரின் திருமனத்திற்கு சென்றது. அடுத்து எப்போதோ?

கோபிநாத் said...

அருமையான பயணம் தல ;))

மாதேவி said...

உங்கள் தல யாத்திரை பயணத்தில் குருவாயூரப்பனை தர்சித்து மனநிறைவு பெற்றோம்.

கோயில் வெளி வளாகம் கடைத்தெருக்கள், வீதிகள் என கண்டு களித்தோம். நன்றி.

Unknown said...

குருவாயூர் சென்று வந்த திருப்தி

Anonymous said...

இன்று தான் இந்த பதிவு படிக்க முடிந்தது சார். ஒரு திருமணத்திற்க்காக நான் ஒரு முறை சென்றது. நான் சென்ற போது திருமணம் செய்ய நூற்று கணக்கான ஜோடிகள் காத்திருப்பதை பார்பதே கொள்ளை அழகு. கோயிலின் அழகை என் கண் முண்ணே கொண்டு வந்துவிட்டீர்கள். நன்றி சார்.

R Venkatachalam said...

நானும் கோவைக்காரன்தான்.பாரதியார் பல்கலைக்கழகத்தில் உளவியல்பேராசியராக வேலைபார்த்து(?) ஓய்வு பெற்றவன்.தற்போது பெங்களூரில் மகளுடன் அவளுடைய குழந்தைகளை வளர்த்துக்கொண்டு நானும் என்னுடைய மனைவியும் வாசம் செய்கிறோம். சென்ற வருடம் திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் - ஓர் உளவியல் பார்வை என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டேன். கேட்பாரில்லை. அடுத்து தற்போது வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழி பாடு என்ற நூலை எழுதிக்கொண்டு உள்ளேன். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக ஓலைத்துறையும் கோவை கௌமார மடமும்சேர்ந்து நடத்தும் திருக்குறள் பதிப்பின் 200 வது ஆண்டு விழாவின் போது அதை வெளியிடவேண்டும் என அவசர அவசரமாக எழுதிக்கொண்டு உள்ளேன். விழா ஏப்ரல் மாதம் 27,28, 29 தேதிகளில் நடக்கிறது.

Anonymous said...

dear sir
how to join in your blog so i would like to get each of your postings via mail

kumar

கானா பிரபா said...

வணக்கம் kumar

முகப்புப் பக்கத்தில் இருக்கும் followers என்பதில் இணைந்து கொண்டால் புதிய பதிவுகள் குறித்து அறிவீர்கள்.

அன்புடன்
கானா பிரபா

Kamala said...

பலமுறை குருவாயூர் சென்றிருந்தாலும் உங்கள் பதிவு ஓர் மலரும் நினைவுகளாயிற்று. அருமையான புகைப்படங்கள்..!

துளசி கோபால் said...

எனக்கு இன்றையப் பொழுது விடிந்தது குருவாயூரில்! இங்கே உங்க பதிவில்தான்! ஓம் நமோ நாராயணா !