Social Icons

Pages

Wednesday, September 17, 2008

Angkor Thom கண்டேன்...!

Royal Palace அரண்மனை வளாகங்களை எல்லாம் கடந்து கொஞ்சத்தூரம் நடந்து போகின்றோம். மாபெரும் தலைகளைச் செதுக்கிப் பொருத்திய தலைகளைக் கொண்ட ஒரு பெரும் கட்டிட வளாகம் தென்படுகின்றது. அந்தத் தொகுதி தான் Angkor Thom என்ற பகுதியாகும். குறுகியகாலப் பயணத்தில் கம்போடியாவுக்கு வருபவர்கள் Angkor Vat இற்கு அடுத்து பார்க்கவேண்டிய, தவிர்க்க முடியாத இடம் இந்த Angkor Thom ஆகும்.

இந்த Angkor Thom பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஏழாம் ஜெயவர்மனின் தலைப்பட்டினமாக இருந்துள்ளது. 9 கிலோ மீட்டர் சுற்றளவில் இப்பகுதி அமைந்திருக்கின்றது. Angkor Thom பகுதியின் மத்தியில் Bayon ஆலயமும் வடக்கே Victory Square எனப்படும் பகுதியும் இருக்கின்றது. இந்த நகரம் பதினேழாம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆலயத்தின் உள் தோற்றம்

இந்தப் Angkor Thom பகுதிக்குள்ளே அமைந்திருக்கும் ஆலயமே Bayon என்ற ஆலயமாகும்.ஒரு பெளத்தமத ஆலயமாக விளங்கும் Bayon பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுப்பப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இவ்வாலயத்தின் கட்டிட அமைப்பும் Bayon என்றே தொல்லியல் வல்லுனர்களால் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது. கம்போடிய Khmer வடிவ சித்திரக் கட்டிட வேலைப்பாடுகளின் உச்சபச்ச அழகுணர்ச்சியை இவ்வாலயம் காட்டி நின்ற்கின்றது.
37 கோபுரங்களில் நான்முக வடிவங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஏழாம் ஜெயவர்மனின் தந்தை லோகேஸ்வரா, மஹாஜன பெளத்தத்தின் வழிகாட்டி போதிசத்துவர், அல்லது புத்தர் மற்றும் ஏழாம் ஜெயவர்மனின் கலப்பு உருவங்களாக இம்முகங்கள் இருக்கலாமென்ற மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஏழாம் ஜெயவர்மனின் ஆட்சிப் பீடத்தின் மிகமுக்கியமான ஆலயமாக இது திகழ்வதால் அவன் மிகுந்த சிரத்தையோடு இதை எழுப்பியிருக்கின்றான் என்பது கட்டிட அமைப்பில் இருந்து புலனாகின்றது.

இந்த Bayon ஆலயத்தின் வெளிப்புற மதில்கள் சூழ மேற்புறத்தில் பெரும் முகவடிவங்கள் தாங்கிய உருவங்கள் அமைத்திருப்பது இவ்வாலயத்துக்கே இருக்கும் சிறப்பு. தெற்குப்பகுதியிலே Khmer என்ற கம்போடியர்களுக்கும் சியாம் என்ற தாய்லாந்தியர்களுக்கும் நிகழ்ந்த கடற்சண்டை ஒன்றை நினைவுபடுத்தும் காட்சி வேலைப்பாடுகள் பொறிக்கப்படிருக்கின்றன. இது கி.பி 1117 இல் சியாம் மன்னர்களின் படையெட்டுப்பை நினைவுபடுத்துகின்றதா அல்லது அதன் பின்னர் Khmer என்ற கம்போடிய மன்னர்களின் வெற்றியை நினைவுபடுத்துகின்றதா என்பதிலும் தெளிவு இல்லை.

மேலே: அப்சரா தேவதைகளின் ஆட்டம்
இன்னும் பல நடைமுறை வாழ்வை வெளிப்படுத்தும் சித்திரச் செதுக்கு வேலைப்பாடுகள் அமைந்திருக்கின்றன. உதாரணமாக வியாபாரம் நடைபெறும் சந்தைப்பகுதி, கோழிச்சண்டை, சதுரங்க விளையாட்டுப் போட்டி, பிள்ளை பிறக்கும் காட்சி என்று பலவற்றினை சித்திரவேலைப்பாடுகளாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றனர். கூடவே இன்னும் சில மதிற்புறங்கள் முழுமையாக முடிக்கப்படாது இருப்பது ஏழாம் ஜெயவர்மனின் இறப்பைத் தொடர்ந்து இப்பணி முழுமை பெறாததைக் காட்டி நிற்கின்றது. இன்னும் சில உட்புறப்பகுதிகள் பின்னாளில் வந்த இந்து அரசன் எட்டாம் ஜெயவர்மனால் முழுமைப்படுத்தப்பட்டிருக்கின்றது.


கோயிலினுள்ளே உள்ள புடைப்புச் சிற்பங்கள், முதற் படத்தில் இருப்பது யாழி
ஆலயத்தின் உட்புறம் அரச உடையுடுத்திய கம்போடியர்கள், அவர்களோடு நின்று படம் எடுப்பதற்கு ஒரு டொலர் வீதம் சம்பாதிக்கின்றார்கள்


இந்த Bayonஆலயம் காடு சூழ அமைந்த பிரதேசத்தில் இருப்பதால் எப்போதும் இருள் சூழ்ந்த பிரமையை உண்டு பண்ணுகின்றது. காலவோட்டத்தில் சிதைந்து போன கட்டிடப்பகுதிகளில் இன்னும் சில திருத்த வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

Angkot Thom பார்த்து முடிக்கவும் இருள் மெல்லக் கவ்வும் நேரம் வருகின்றது. ருக் ருக் வண்டில் அமர்ந்து நானும், சுற்றுலா வழிகாட்டியும் மீண்டும் எமது இருப்பிடம் நோக்கித் திரும்புகின்றோம். வரும் வழியில் அங்கோர் வாட் ஐக் கடக்கின்றது எமது வண்டி. அப்போது சாயங்காலச் சூரியன் முகம் கவிழும் போது அங்கோர் வாட் இன் அழகை ரசிப்பதற்க்கா ஒரு சுற்றுலாக் கூட்டம் அங்கோர் வாட்டினை நோக்கிப் படையெடுக்கின்றனர். பொதுவாகவே அதிகாலைச் சூரியோதத்தின் போதும், மாலை சூரியன் பொழுது சாயும் போதும் அங்கோர் வாட் இன் அழகுணர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதற்காக இப்படியான வருகை இருக்கும். ருக் ருக்கை ஒரமாக நிறுத்தி விட்டு நாமும் கொஞ்ச நேரம் அங்கோர் வாட்டின் முன்னேயுள்ள வாவியோரம் நின்று அதன் அழகை மீண்டும் பார்க்கின்றோம். வெட்கத்திரையால் மறைப்பது போல சூரியன் மெல்ல நகர்ந்து இரவுப் போர்வையைப் போர்த்துகின்றான்.

பதிவின் உசாத்துணை:
* கம்போடிய சுற்றுலாக் கையேடு
* Ancient Angkor By Michael Freeman & Claude Jacques

Sunday, September 07, 2008

Preah Palilay, Phimeanakas மற்றும் The Royal Palace

Ta Keo என்ற சிவனாலயத்தைத் தரிசித்து விட்டு நாம் அடுத்துச் சென்ற இடம் பல வரலாற்று நினைவிடங்களை ஒரே இடத்தில் கொண்டிருந்த தொகுதி. அந்தத் தொகுதியைக் காணப் போகும் போது பெரும் எடுப்பிலான வாயிற்புறத்தை எல்லையாகக் கொண்ட பகுதியைக் கடந்தே செல்லமுடிகின்றது. பல ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்து பொட்டுத் திடலாக இருந்த அந்த இடத்தில் ஆங்காங்கே பனைமரங்கள் அங்கொங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்க உடைந்து போன கோயில்கள், அரண்மனை, சிதைந்து போன விளையாட்டுத் திடல் என்று இருக்கின்றது அந்தப் பிரதேசம்.

Preah Palilay


Preah Palilay என்ற கோயிலுக்குள் முதலில் போகின்றேன். இது 13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியோ அல்லது அதற்குப் பிற்பட்ட காலப்பகுதியிலோ அமைக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புக்கள் சொல்கின்றன. பெளத்தமதத்துக்கான ஆலயம் இதுவாகும். இந்த ஆலயத்தின் அமைப்பு முறை Post Bayon என்ற வகைக்குள் அடக்கப்படுகின்றது. சலவைக்கல் கொண்டு அமைக்கப்பட்ட இவ்வாலயக் கோபுரம் ஒரு நெட்டையான மரம் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது எப்போது எழுப்பப்பட்டது என்பதற்கு வரலாற்றாசிரியர்களிடம் ஓர் முரண்பாடு உண்டு. இது கி.பி 12 ஆம் நூற்றாண்டுக் கடைசி அல்லது கி.பி 13 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் அமைக்கப்பட்டதாக ஒருசாரார் சொல்லும் வேளை தேரவாத பெளத்தத்தின் அமைப்பாக இவ்வாலயம் திகழ்வதால் கி.பி 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியோ அல்லது கி.பி 14 ஆம் நூற்றாண்டுப் பகுதியாகவோ இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.
Phimeanakas


Phimeanakas என்ற ஆலயம் "சொர்க்கத்தின் இடம்" என்று கொள்ளப்பட்டு கி.பி 10 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் கி.பி 11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கும் இடைப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இதுவோர் இது ஆலயமாகும். முன்னர் நாம் பார்த்த Ta Keo என்ற சிவனாலயத்தை அமைத்த ஐந்தாம் ஜெயவர்மனே இந்த ஆலயத்தை அமைத்ததாகச் சொல்லப்படுகின்றது. கட்டிட அமைப்பைப் பொறுத்தவரை Kleang என்ற வகைக்குள் இதனை வரலாற்று ஆசிரியர்கள் வகைப்படுத்துகின்றார்கள். சலவைக்கல்லினால் அமைந்த பிரமிட் வடிவத் தோற்றத்தில், மூன்று அடுக்குகள் அமைந்தும் அதன் மேல் கோபுரம் தாங்கிய கட்டிடக் கலை அமைப்பைக் கொண்டிருக்கின்றது இவ்வாலயம்.

பழைய செவி வழிக்கதைகளின் படி ஒவ்வொரு நாள் இரவும் மன்னன் தங்கத்தில் அமைந்த மேற்கூரையில் ஏறி நின்று பார்க்கும் போது இந்த நாட்டின் தெய்வமான ஒன்பது தலை தாங்கிய நாக வடிவம் பெண் போன்ற தோற்றத்தில் தெரியும் என்றும் அது வராதவிடத்து இந்த மன்னனுக்கும், நாட்டுக்கும் கேடு விளையும் என்றும் சொல்லப்பட்டது. இப்படியான முதல் சுற்றில் மகாராணியைக் கூட அழைத்துச் செல்லாது இரண்டாவது சுற்றின் போதே மகாராணியை தன்னோடு கோபுரத்தின் மேலேற அனுமதித்ததாகவும் ஒரு விந்தையான கதை சொல்லப்படுவதுண்டு.


அதிக சிற்பவேலைப்பாடுகளைக் கொண்டிராத அமைப்பில் இருந்தாலும், அருகே இருக்கும் Angkor Thom இனை ரசிக்க ஏற்றதான உயரத்தில் இருப்பது இதன் சிறப்பு. Royal Palace என்னும் அரண்மனைக்குட்பட்ட பகுதியில் இவ்வாலயம் இருப்பது, மன்னர் குடும்பத்திற்கான பிரத்தியோகமான கோயில் என்பதைக் காட்டி நிற்கின்றது. இவ்வாலயத்தை எழுப்பியவன் ராஜேந்திரவர்மன் (கி.பி 941 - கி.பி 968) என்றும், மீளப் புனருத்தானம் செய்தவன் இரண்டாம் சூர்யவர்மன் (கி.பி 1113 - கி.பி 1150)என்றும் சொல்லப்படுகின்றது.Terrace of the Elephants

யானைகளின் வடிவங்களைச் சிற்பவேலைப்பாடாகக் கொண்ட மதில் எழுப்பய பெரும் உப்பாரிகை ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இது இரண்டரை அடி மீட்டர் உயரமும், 300 மீட்டர் நீளமும் கொண்டு அமைந்திருக்கின்றது. இந்த உப்பாரிகையை அமைத்த நோக்கம் இதன் அமைவிடத்தைப் பார்த்தே ஊகிக்கமுடிகின்றது. அதாவது இந்தத் தளத்துக்கு முன்புறமாக பெரும் சதுக்கம் ஒன்று இருக்கின்றது. இந்த தளத்தின் மேற்பகுதி உப்பாரிகையில் இருந்தவாறே அரச குடும்பத்தவர்கள், களியாட்டங்களையும், வீரதீர விளையாட்டுக்களையும் பார்த்து ரசிப்பதற்கான அமைப்பாகவே இது எழுப்பப்பட்டிருக்கின்றது. ஏழாம் ஜெயவர்மனால் நிர்மாணிக்கப்பட்ட இந்த அமைவிடம் போரில் வெற்றி பெற்றுத் திரும்பிய வீரர்களை மன்னர் சந்திப்பதற்கான நிலையமாகவும் கொள்ளப்பட்டிருக்கின்றதாம். மேலே அரண்மனை வளாகத்தில் இருக்கும் நீர்த்தடாகம்எட்டாம் ஜெயவர்மனால் அமைக்கப்பட்ட நீர்த்தடாகத்தின் கரையோரம் அமைக்கப்பட்ட சிற்பவேலைப்பாடுகள்
அரண்மனை வளாகத்தைச் சூழவுள்ள பரிவார மூர்த்திகளின் ஆலயங்கள்

ஒட்டுமொத்தமான இந்த பிரதேசத்தைப் பார்க்கும் போது ஒரு பெரும் அரண்மனை வளாகத்தினைக் கொண்டு, கூடவே மன்னர் குடும்பத்தின் வழிபாட்டிடம், போர் வீரர்களைச் சந்திக்கும், களியாட்டங்கள் வீர தீர விளையாட்டுக்களைக் கண்டு கழிக்கும் நிலையம், வாவி என்று முழுமையான அரச வாசஸ்தலத்தை இப்பிரதேசம் கொண்டு, இப்பிரதேசத்தைச் சூழ பரிவார மூர்த்திகளாக சின்னச் சின்ன ஆலயங்களையும் அமைத்துக் கொண்ட பெரும் நிர்வாக அலகைக் காட்டி நிற்கின்றது.

பதிவின் உசாத்துணை:
* கம்போடிய சுற்றுலாக் கையேடு
* விக்கிபீடியா
* Ancient Angkor By Michael Freeman & Claude Jacques
* CambodianOnline.net

Tuesday, September 02, 2008

ஐந்தாம் ஜெயவர்மன் எழுப்பிய சிவனாலயம் Ta Keo

கடந்த பதிவுகளில் பெளத்த ஆலயங்களின் தரிசனங்கள் கிட்டிய உங்களுக்கு இந்த முறை நான் தருவது ஒரு இந்து ஆலய உலாத்தல். ஏழாம் ஜெயவர்மனின் Ta Prohm ஆலயத்தினைச் சுற்றிப் பார்த்து விட்டு அடுத்து நானும் சுற்றுலா வழிகாட்டி டேவிட்டுமாக, எங்களோடு வந்த ருக் ருக் காரரோடு Ta Keo என்ற ஆலயம் நோக்கி எம் உலாத்தலை ஆரம்பித்தோம்.

Ta Keo என்னும் ஆலயம் கி.பி 10ம் ஆம் நூற்றாண்டின் இறுதிக்கும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் எழுந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள். இந்த ஆலயத்தை எழுப்பியவன் ஐந்தாம் ஜெயவர்மன். இது ஒரு முழுமையான சிவனாலயமாகவே அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆலயத்தின் கட்ட்ட அமைப்பை Khleang என்ற வகைக்குள் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்துகின்றார்கள். ஐந்தாம் ஜெயவர்மன் இந்த கம்போடிய அரசினை ஆட்சி செய்த காலப்பகுதி கி.பி 968 ஆம் ஆண்டிலிருந்து கி.பி 1001 ஆம் ஆண்டென்று சொல்லப்படுகின்றது. கம்போடியாவின் ஆரம்ப கால வரலாற்றில் இந்து மன்னர்களின் ஆதிக்கமும் சைவ சமயத்தில் எழுச்சியும் இருந்ததை இந்த ஐந்தாம் ஜெயவர்மன் போன்ற ஆரம்ப காலத்து மன்னர்கள் எழுப்பிய பிரமாண்டமான ஆலயங்கள் கண் முன் சாட்சியங்களாக இருந்தாலும், ஐந்தாம் ஜெயவர்மன் உட்பட்ட ஆரம்பகாலத்து இந்து இராச்சியம் குறித்த விரிவான வரலாற்றுப் பதிவுகள் இந்த நாட்டில் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. நான் சென்ற அங்கோர் வாட் நூலகத்திலும் இதே நிலைதான். எஞ்சியிருக்கும் சிவாலயங்களும், சிவ சின்னங்களுமே தற்போதைய ஆய்வாளர்களுக்கு உய்த்தறிந்து ஆய்வைத் தொடர உதவியாக இருக்கின்றன. இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் இருக்கும் நம் வரலாற்றாசிரியர்களாவது இப்பணியைத் தொடர்ந்து கம்போடியாவில் நிலவிய இந்து மதப் பாரம்பரியம் குறித்த முழுமையான ஆய்வைத் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தரவேண்டும்.

கோயில் வாசலில் இளநீர் வாங்கும் என் வழிகாட்டி டேவிட்

Ta Keo என்ற ஆலயமும் பெரும்பாலும் சிவனாலயங்கள் கொடுக்கும் பிரமாண்டத்தையே பிரதிபலிக்கின்றது. ஒரு பெரும் சிற்ப வேலைப்பாடு கொண்ட மலை போன்ற அமைப்பில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருப்பது மேரு மலையில் உறையும் இறைவனைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றது. இந்த ஆலயம் "the mountain with golden peaks" என்றே அந்தக் காலகட்டத்தில் புகழப்பட்டதாம். கட்டிட அமைப்பைப் பொறுத்தவரை முழுமையான சலவைக் கல்லினாலேயே எழுப்பபட்டிருக்கின்றது. ஒவ்வொரு சலவைக் கல் பொருத்துக்களும் பென்னாம் பெரியவை. இவற்றை எப்படித் தூர இடங்களில் இருந்து கொண்டு வந்து ஆலயமாகப் பொருத்தினார்களோ என்று வியப்பை எழுப்பி விடையைத் தேட வைக்கின்றது.

ஐந்தாம் ஜெயவர்மன் தன் தந்தை 2 ஆம் ராஜேந்திர வர்மனைத் தோற்கடித்து ஆட்சிப் பீடம் ஏறிய போது அவன் தலைநகரின் அணி கலனாக எழுப்பப்பட்ட இவ்வாலயத்தில் ஐந்து பெரும் கோபுரங்கள் அணி செய்கின்றன, இவை மேரு மலையைப் பிரதிபலிக்கும் பாணியிலேயே அமைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். வாசலில் சைவக்கோயிலுக்கே தனித்துவமான நந்தியின் பீடம் இருக்கின்றது.


ஆலயத்தின் உள்ளேயும் சிவாகமப் பிரகாரம் உள்ள கட்டிட அமைப்போடு விளங்குகின்றது. ஒரு பெரும் கோயிலுக்குள் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற அவா மேலிட, அந்த மலைக்கோயிலின் மேல் ஏறி பவனி வருவது உடற்சலிப்பை ஏற்படுத்தினாலும், மனத்தைச் சலிக்க வைக்கவில்லை. நீண்ட படிகளைக் கொண்ட வாயில் இருந்தாலும் அவரை செங்குத்தாகச் செல்லும் பாணியில் இருப்பதால், அவற்றில் ஏறி மேலே உச்சியை அடையவே, உள்ளே இருக்கும் குடல் வாய் வழியே வருவது போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றது.


இந்த ஆலயத்திருப்பணி ஐந்தாம் ஜெயவர்மனால் ஆரம்பிக்கப்பட்டாலும் இதன் பிரமாண்டம் ஆலயக் கட்டுமானத்தின் கால அளவை அதிகப்படுத்தியது. எனவே ஐந்தாம் ஜெயவர்மன், ஜெயவீரவர்மன், முதலாம் சூரியவர்மன் ஆகிய மூன்று அரசர்களின் காலத்தில் தான் முழுமையான ஆலயக் கட்டுமானம் நிறைவை எய்த முடிந்தது. முதலில் ஐந்தாம் ஜெயவர்மன் இந்த ஆலயத்தை எழுப்பும் போது அவனது தலைநகரத்துக்கு வெளியே இருந்த முன்னைய அரசர்களின் ஆலயங்களின் அமைப்பையே முன் மாதிரியாக எடுத்துக் கொண்டானாம். Ta Keo ஆலயத்தின் கட்டிடப்பணி முழுமையாக நிறைவினை எய்தினாலும் இப்பிரமாண்டமான ஆலய அமைப்பின் சிற்பச் செதுக்கு வேலைப்பாடுகள் இடைநடுவிலேயே நின்று விட்டன என்பது பெருங்குறை.

முன்னே வந்த இந்து ஆலயத்தினுள் பின்னே வந்த பெளத்த மதம் மறைக்க..

உண்மையில் வரலாற்றின் ஆரம்பப் பக்கங்களில் இந்துக் கோயில்களைத் தேடி நாடுவோருக்கு Ta Keo என்ற இந்தச் சிவனாலயம் விலக்க முடியாத ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாகும். நமது சைவ ஆலயத்தைப் பார்த்த பெருந்திருப்தியில் அவ்விடத்தில் இருந்து மனசு விலகாமல் விலகினேன், இன்னொரு பிரமாண்டம் பொருந்திய வரலாற்றின் எச்சத்தினை பார்க்க..........


பதிவின் உசாத்துணை:
* கம்போடிய சுற்றுலாக் கையேடு
* வழிகாட்டி டேவிட்
* Ancient Angkor By Michael Freeman & Claude Jacques