கோயம்புத்தூருக்குப் போகிறேன் என்று ட்விட்டர் வழியாகச் சொன்னதும், என் நேசத்துக்குரிய ராஜநாயஹம் சார் "பிரபா, கோவையிலிருந்து திருப்பூர் பக்கம் தான், கண்டிப்பா நீங்க எங்க வீட்டுக்கு வரணும்" என்று அன்புக்கட்டளையிட்டார். எனக்கோ திருப்பூர் என்றார் டிவியில் பார்த்த பனியன், ஜட்டியைத் தவிர வேறொன்றும் தெரியாத நிலையில் மீண்டும் நண்பர் சதீஷிடம் அடைக்கலம் புகுந்தேன். அவரும் "மிஞ்சி மிஞ்சிப்போனா ஒண்ணரை மணி நேரம் தான் ஆகும், காலேல சீக்கிரமா போயிட்டு வந்துடலாம், நானே என் காரை எடுத்து வர்ரேன்" என்றார். இதற்குள் சென்னிமலை சி.பி.செந்தில்குமார், "இவ்வளவு தூரம் ஈரோடு வராவிட்டால் ஆட்டோ அனுப்புவோம்" என்று மிரட்டியிருந்தார். கோவையில் தங்கியிருந்த அந்த தீபாவளி தினத்துக்கு முதல் நாள் காலை யாரையும் சந்திக்கமுடியாத சூழல் வேறு. எனவே நண்பர் சதீஷை காலை ஏழரை மணிக்கெல்லாம் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வரச்சொல்லியிருந்தேன். அவரும் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தார்.
சதீஷின் காரில் இளையராஜா ஒலிக்க, ரசித்துக் கொண்டே மீண்டும் பேச்சுக்கச்சேரியோடு பயணித்தோம் திருப்பூர் நோக்கி. திருப்பூரில் சந்திக்கவிருக்கும் நண்பர்களுக்கு ஏதாவது வாங்கிக்கொண்டு போவோமே என்ற நினைப்பில் வழியில் இருந்த ஆனந்த பவனில் இனிப்புப் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு மீண்டும் ஆரம்பித்தது பயணம். அவிநாசி ரோட்டிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் பாய்ந்தது கார். வழியெங்கிணும் இரு மருங்கிலும் தமிழ்ப்பெயர் தங்கிய கடைகளைக் காணும் போது முந்திய தினம் இரவு கோயம்புத்தூருக்குள் நுழைந்த அதே பரவசம் உள்ளூர இருந்தது. நாங்கள் சென்ற அந்த அகலப் பெருந்தட வீதியின் சீரமைப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தன.
வீதியை நோட்டம் விட்டுக் கொண்டே செல்போனில் ட்விட்டரின் டைம்லைனைத் தட்டிப்பார்த்துக் கொண்டேன். நண்பர் பரிசல்காரன் திருப்பூர் பதிவர் சந்திப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாதே எறு ஆதங்கப்பட்ட ட்விட் ஒன்று கண்ணில் சிக்கியது. அவருக்கு நான் முந்திய தினம் திருப்பூர் சந்திப்பைப் பொதுவாக டைம்லைனில் இட்டதைச் சொல்லி விட்டு மீண்டும் நோட்டம்.
அவிநாசியைத் தொடும் போது நண்பர் ராஜன் லீக்ஸ் நினைவுக்கு வந்தார். அப்படி ஒரு ஊர் இருப்பதே அவர் மூலம் தான் அறிந்து கொண்டதன் விளைவு அது. நாங்கள் சாவகாசமாகப் பயணித்து மணி பத்தை எட்டும் போது திருப்பூருக்குள் நுழைந்துவிட்டோம்.
திருப்பூர் புகையிரத நிலையத்தில் இருந்து நண்பர் ஆகாய மனிதனின் அழைப்பு, தானும் சென்னிமலை சி.பி.செந்தில் குமாரும் அங்கிருப்பதாக. "இதோ திருப்பூர் வந்தாச்சு அங்கேயே வருகிறோம்" என்று சொல்லிவிட்டு ரயில் நிலையம் நோக்கிப் போனோம். எங்கே போகலாம் என்று அங்கேயே வைத்துத் திட்டம் தீட்டினோம். திருப்பூர்க்கார் ஆகாய மனிதனே தீர்மானித்து அங்குள்ள திருப்பூர் மாநகராட்சி வெள்ளிவிழா நினைவுப்பூங்காவுக்குப் போகலாம் என்று முடிவு கட்டியாச்சு. நம் சந்திப்புக்கு வருவதாக இருக்கும் ராஜநாயஹம் சாருக்கும் அழைத்துச் சொல்லிவிட்டு, ட்விட்டரிலும் இந்தச் செய்தியைப் பகிர்ந்தோம்.
நண்பர் ஆகாய மனிதன் (யுவராஜ்) @onely1 பெயரைப் பார்த்தால் ஏதோ ஐம்பதைத் தாண்டிய மனுஷர் என்று நினைத்தால் பெயருக்கும் அவருடைய சிந்தனைகளுக்கும் சம்பந்தமில்லாத ஒரு இளையவர். ஈழத்தமிழ் மக்கள் மீதும், உரிமை மீதும் அவருக்கு இருக்கின்ற தீவிர அக்கறையை திருப்பூர் சந்திப்பில் வைத்துத் தெரிந்து கொண்டேன்.
உண்மையில் நண்பர் சி.பி.செந்தில்குமாரை நேரே சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் இந்தப் பயணத்தில் அது நிறைவேறாது போய்விடுமே என்று நினைத்த எனக்கு அவர் ஈரோட்டிலிருந்து ரயிலில் இந்தச் சந்திப்புக்காகக் காலையிலேயே வந்தது நெகிழ வைத்தது. அதை அவருக்கும் சொல்லி என் நன்றியறிதலை வெளிப்படுத்தினேன். மனம் சோர்வாகிப்போன நாட்களில் எல்லாம் திரும்பவும் ஒரு முறை சி.பி.செந்தில்குமாரின் ட்விட்டுக்களையும், அவரின் பாணியில் கொடுக்கும் கலகல சினிமா விமர்சனங்களையும் படித்து வருபவன் நான். என் தலைமுடியை "திருவிளையாடல் படத்தில் வரும் முத்துராமன், தேவிகாவின் தலையை நோண்டுமாற்போல" நோண்டி என் கூந்தல் இயற்கையிலேயே கருப்பா? என்று ஆராய்ச்சியும் அங்கு நிகழ்த்தினார் சென்னிமலையார்.
சி.பி. செந்தில்குமாரின் தந்தையார் வைத்திருந்த ஐம்பது வருஷங்களுக்கு முந்திய திரைப்படப்பாடல்களைக் கொண்ட பாட்டுப் புத்தகங்களை எனக்குத் தந்து "இவை சிட்னியிலாவது பத்திரமாக இருக்கட்டும்" என்று கொடுத்த அந்தப் பொக்கிஷம் இப்போது பத்திரமாக என் வீட்டு நூலக அறையில் பாதுகாப்பாக இருக்கின்றது.
ராஜநாயஹம் சாரின் எழுத்துக்களின் தீவிர அடிமை நான், நீண்ட அனுபவங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் அந்தப் பெரிய மனிதரின் கடைக்கண் பார்வை நம்மீதும் இருக்கின்றது என்ற பெருமை இன்றளவும் எனக்குண்டு. பார்க்கிற்குத் தன் டூவீலரில் வந்து சேர்ந்தார் அவர். எனக்கென அவரின் நண்பர் சாரு நிவேதிதாவின் சிறுகதைத் தொகுதியைக் கொடுத்தார். தன் வீட்டிலேயே சந்திப்பை நடத்தியிருக்கலாம், மதிய உணவும் எடுத்திருக்கலாம் என்ற ஆதங்கத்தை சந்திப்பின் இறுதி வரை சொல்லி ஆதங்கப்பட்டார். அடுத்த தடவை அவர் வீட்டில் தான் நம் சந்திப்பு. இயக்குனர் கே.பாக்யாராஜோடு பணிபுரிந்த காலங்கள், சொல்லப்படாத சேதிகள் எல்லாம் அவரிடமிருந்து கொட்டின. ரசித்துக் கேட்டோம்.
இந்தச் சந்திப்புக் குறித்து ட்விட்டர் மூலம் அறிந்து திருப்பூர்வாசி சத்திய மூர்த்தி அவர்களும் வந்து சேர்ந்தார். வந்ததன் பின்னர் அவரும் ஆகாய மனிதனின் அப்பாவும் நண்பர்கள் என்ற உண்மையும் அவர்கள் இருவருக்கும் தெரிந்தது. சமூக வலைத்தளங்களால் இந்த இளைய சமுதாயம் தம் நேரத்தைக் கட்டுப்பாடின்றி வீணடிக்கிறதே என்ற ஆதங்கம் தொனிக்க சத்தியமூர்த்தி அவர்களின் பேச்சு இருந்தது.
இடமிருந்து வலம்: ஆகாய மனிதன், நான், சதீஷ், சி.பி.செந்தில்குமார், ராஜநாயஹம் சார், பரிசல்காரன்
பரிசல்காரன் (கிருஷ்ணகுமார்) தன்னுடைய மகள்களுடன் தீபாவளிக்கான கொள்வனவுக்குப் போகும் வழியில் நம்மையும் சந்திக்க வேண்டி வந்திருந்தார். அவரின் எழுத்தில் இருக்கும் அதே நிதானம் நேரில் சந்திக்கும் போதும். ஒடிசாவில் தன் மடிக்கணினியைத் தொலைத்த வரலாற்றிலிருந்து திருப்பூர் வாழ்வியலில் கார்மெண்ட் இண்டெஸ்ட்ரி குறித்து அவர் பகிர்ந்து கொண்ட பல விடயங்கள் சுவாரஸ்யமாக இருந்தன. அதுவரை குழப்பமாக இருந்த சர்ச்சைக்குரிய ட்விட்டர் குழப்பங்களுக்கு விடையும் கிடைத்தது. நான் சந்திக்கவிருந்த நண்பர் பட்டியலில் இருந்த பரிசல்காரனும் தன்னுடைய குடும்பப் பொறுப்போடு பொறுப்பாக இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டது மட்டற்ற மகிழ்ச்சி.
ராஜநாயஹம் சார், பரிசல்காரனின் மகள்களை அழைத்துக் கொண்டு போய் கூல் ட்ரிங்ஸ் வாங்கிக் கொடுத்து விட்டு நம் சந்திப்புக்குமென நீராகாரம் வாங்கி வந்தார். சமீபகால மின்தடை, சாயத்தொழிற்சாலைக் கழிவுகளை ஆற்றில் கலப்பதற்கு எதிரான நடவடிக்கைகளால் திருப்பூரின் முதுகெலும்பான ஆடை உற்பத்தி, சாயம் தீட்டும் தொழில் போன்றவை பாதிக்கப்படும் இன்றைய சூழலும் குறித்த கலந்துரையாடலில் முக்கியமாகப் பேசப்பட்டவை.
மூன்று மணி நேரம் நிகழ்ந்த அந்தச் சந்திப்பை, பார்க்குக்கு வந்தவர்களே ஏதோ அரசியல் கூட்டம் என்று நினைக்குமளவுக்கு ஆக்கிவிட்டு, ஏதாவது ஆங்கே வயிற்றுக்கும் ஈயப்படும் என்று பக்கத்து ஓட்டலுக்குப் போகலாம் என்று முடிவானது. ராஜநாயஹம் சாரும், பரிசல்காரன் மகள்களுடனும் அங்கேயே விடை கொடுத்தனர்.
படத்தின் இடது மூலையில் சத்தியமூர்த்தி அவர்கள்.
சத்தியமூர்த்தி அவர்களோடு, ஆகாய மனிதன், சி.பி.செந்தில்குமார், சதீஷ் ஆகியோரோடு திருப்பூர் சரவணபவன் ஹோட்டலுக்குப் போனோம். சோறு, கறி சாப்பாடு கிடையாது என்று கைவிரிக்க, சென்னிமலை முகம் சுருங்க டிபனோடு அரங்கேறியது சாப்பாட்டுக் கச்சேரி. அப்போது அவிநாசியில் இருந்து இட்ஸ்பிரசாந்த் என்ற பிரசாந்தும் வந்து சேர்ந்தார். சாப்பாட்டில் இல்லாத காரம் அவரின் பேச்சில், கிட்டத்தட்ட தெலுங்கு ஹீரோ ரேஞ்சில். அங்கிருந்தோர் எல்லோருக்கும் இளையவராக அவர். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் நிகழ்ந்த திருப்பூர் சந்திப்பு சரவணபவனில் நிறைவுக்கு வந்தது.
கோயம்புத்தூர் நோக்கி நண்பர் சதீஷுடன் பயணிக்கும் போது நண்பர் @6SayS இன் அழைப்பு. தான் அவிநாசியில் தான் கடை வைத்திருப்பதாகவும் போகும் வழியில் சந்திக்குமாறும் வேண்டினார்.
அவிநாசியில் மின் உபகரணங்களை விற்கும் கடையைச் சொந்தமாக நடத்திவரும் இளைஞர் அவர். உருவத்துக்கும் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லாமல் அவர் தன்னுடைய தொழில் குறித்துப் பேசும் போது எனக்கும் சேர்த்து நண்பர் சதீஷ் வியந்தார். தமிழகம் எதிர்நோக்கும் மின் தடைக்கு மாற்றீடாக சூரிய ஒளி மின் பிறப்பாக்கிகளை தானே எடுத்துச் சென்று வீடுகளுக்குப் பொருத்தும் அனுபவங்களையும், வாடிக்கையாளர் சேவை எவ்வளவு தூரம் ஒரு வியாபாரத்தில் முக்கியமானது என்றும் அவர் பேசப் பேச, இந்தப் பிள்ளை பிழைக்கும் என்று மனதில் எண்ணிக்கொண்டேன். அவர் பொழுதுபோக்கிற்காகப் புகைப்படங்களை எடுத்து வருகிறார் என்பதை வைத்திருந்த உயர்ரக காமெரா பறை சாற்றியது. அந்தத் தீபாவளிக்கு முந்திய நாளிலும் கடையில் தனியாளாக இயங்கிக் கொண்டிருந்த அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டோம்.
உண்மையில் எனது இந்த ஆண்டுப் பயணத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த சந்திப்புக்களில் மிக நீண்டதொரு நிறைவான சந்திப்பாக திருப்பூர் சந்திப்பு அமைந்து விட்டது.