பத்து வருஷங்களுக்கு முன் தொழில் நிமித்தம் சீனாவுக்குப் போனபோது ஒரு மாலைப்பொழுதில், சக வேலையாட்களோடு சென்ற நிகழ்வு சீனர்களின் கலை, பண்பாட்டு அம்சங்களைத் தழுவி அமைக்கப்பட்ட நடனங்களைத் தாங்கியிருந்தது. அந்த இரண்டு மணி நேர நிகழ்வில் சீனர்கள் தங்களின் வரலாற்றை, வாழ்வியலை தம் பாரம்பரிய இசைக்கருவிகளின் துணையோடு நடனங்களாகக் கொடுத்த போது சொக்கிப் போனேன் நான். அதற்குப் பின்னான தாய்லாந்து, மலேசிய, கம்போடியப் பயணங்களில் தவறாது அந்த நாட்டின் கலாச்சார நடன நிகழ்வுகளைக் காண வேண்டும் என்ற முனைப்பை அமுல்ப்படுத்திக் கொண்டேன். அவற்றைப் பார்த்ததோடு அந்த நடனங்களின் பரிமாணங்களைப் பற்றியும் முன்னர் எழுதியிருக்கின்றேன். நான் சென்று வந்த ஆசிய நாடுகளிலே தத்தமது நாடுகளில் நிரந்தரமாக ஒரு கலாச்சார அமைப்பை நிறுவி நாள் தோறும் இரண்டு காட்சிகளாகத் தம் கலாச்சார நடனங்களை நிதமும் கொடுத்து வருகின்றார்கள். இதன் மூலம் அந்த நாடுகளுக்குச் சுற்றுலான் நோக்கில் சென்று வரும் பயணிகளுக்குக் குறித்த நாடுகளின் பண்பாட்டு விழுமியத்தையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அரச சார்பான அமைப்புக்கள் மட்டுமன்றி, கம்போடியா போன்ற நாடுகளிலே தனியாரும் இந்த முயற்சியில் இறங்கியிருக்கின்றார்கள். அதாவது பெரும் உணவகங்களில் நீண்ட கொட்டில்கள் அமைக்கப்பட்டு முன்னே பாரிய மேடை அமைக்கப்பட்டு அங்கே நடன நிகழ்வு நடந்து கொண்டிருக்க, அந்த நாட்டு இரவு உணவை ரசித்தவாறே பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்.
இந்த நிலையில் சிட்னியில் சீன நடன அமைப்பு ஒன்று பெரும் எடுப்பிலான நிகழ்வை நடத்தப் போகின்றது என்றபோது கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்த எண்ணினேன். Shen Yun என்ற நடன நிகழ்வு சிட்னியில் Capital Theatre இல் ஏப்ரல் 27 ஆம் திகதி முதல் மே 6 ஆம் திகதி வரை தினமும் இரண்டு காட்சிகளாக அமைக்கப்பட்டிருந்தது. மே 5 ஆம் திகதிக்கு நுளைவுச் சீட்டை வாங்கி வைத்துக் கொண்டேன். ஒரு மணி நேரம் முன்னதாகவே நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் போய்க் காத்திருக்கிறேன். சாரை சாரையாக மக்கள் வருகின்றார்கள், சிட்னியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த அரங்கத்துப் படையெடுத்தோரில் பெரும்பாலானோர் முதிய பிராயத்தில் இருக்கும் வெள்ளையர்கள், கால்வாசி சீனர்கள். மதியம் இரண்டுமணிக்குச் சொல்லிவைத்தாற் போல ஆரம்பித்தது நிகழ்வு, இடையில் இருபது நிமிட இடைவேளை (இருபது நிமிடம் என்றால் இருபது நிமிடம் தான்) நான்கு முப்பது மணி வரை அரங்கத்தில் இருந்தோரை இருக்கைகளில் கட்டிப்போட்டது இந்த நிகழ்வு.
Shen Yun என்றால் தெய்வத்தன்மை பொருந்திய அழகியலை நடனத்தின் மூலம் வெளிப்படுத்துதல் என்று பொருள்படும். 5000 ஆண்டுகள் பழமை பொருந்திய சீனர்களின் கலாச்சாரத்தை சீனக்கம்யூனிசம் தின்று விழுங்கிய நிலையில் இவற்றை மீள நிறுவ நடனங்களின் மூலம் வெளிப்படுத்திப் புத்துயிர் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டு இந்த Shen Yun Performing Arts என்ற அமைப்பு தென் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த சீனர்களால் அமைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த அமைப்பு வருடம் தோறும் நிகழ்த்தும் நடனங்கள் தனித்துவமானவை என்றாலும் அவற்றின் அடி நாதமாக விளங்குவது, தாம் கட்டிக்காத்துப் போற்றி வாழ்ந்த தமது தொன்மைத்தைத் கிளறும் முயற்சியே. இந்த அமைப்பில் 200 பேர்வரை தேர்ந்தெடுத்த கலைஞர்கள் இருக்கின்றார்கள். சீனாவில் இந்த நிகழ்வு தடைசெய்யப்பட்ட நிலையில் இதுவரை 130 நகரங்களில் அரங்கேறிய நிகழ்வு தொடர்ந்தும் பயணிக்கின்றது. எடுத்துக் கொண்ட கொள்கையும், அதைச் சிறப்பாக நடத்தவேண்டும் என்ற கருத்தொருமித்த கூட்டும் இருந்தால் இப்படியான உயரிய இலக்கை அடையலாம் என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்தப் புலம்பெயர் சீனர்களின் Shen Yun.
திறமானதொரு படைப்பை எடுத்துக் கொள்வது மட்டுமன்றித் தகுந்த அரங்கமும் கிடைத்தால் பாதி வெற்றி. அதை சிட்னியின் Capital Theatre உறுதி செய்தது. அரங்கத்தின் உள்ளமைப்பே ஏதோவொரு அரண்மனையில் நிலாவொளியில் அமர்ந்து மேலே நட்சத்திரக் கூட்டங்கள் கண்காணிக்கச் சுற்றிவரக் கொத்தளங்களில் சிற்பச் செதுக்குகளுமாக அமைய இருக்கும் அந்தச் சூழ்நிலையே இப்படியான படைப்பை மனம் ஒன்றித்து ரசிக்க வைக்கின்றது. சொன்ன நேரத்துக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கின்றது. வெள்ளையர் ஒருவர் ஆங்கிலத்திலும், சீனப்பெண்மணி சீனத்திலுமாக நச்சென்ற வர்ணனைகளை வழங்கி வழிவிட ஒவ்வொரு நிகழ்வும் அரங்கேறுகின்றன. அரங்கத்துக்கும் மேடைக்கும் இடையில் உள்ளே மறைப்பான அடித்தளம் அந்தத் தளத்திலே முப்பதுக்கும் மேற்பட்ட வாத்தியக் கலைஞர்கள் நேரடியாக இசை வழங்க, மேடைக்குப் பின் புறம் பெருந்திரை அங்கே அரங்கத்திற்கு எடுத்து வரமுடியாத அம்சங்கள் நகரும் காட்சிகளாக,அந்தக் காட்சிகள் அப்படியே மெல்ல மெல்ல மேடையிலே உள்வாங்கப்பட்டு காட்சியில் தோன்றிய மாந்தர்கள் மேடையிலே கலை படைக்கின்றார்கள். ஒவ்வொரு நடனமும் 5000 ஆண்டு பழமை வாய்ந்த சீனக் கலாச்சாரத்தின் கூறுகளை இனங்காட்டுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் முப்பதுக்கும் மேற்பட்ட சீன இளையோரும், யுவதிகளும் எல்லோருமே ஒரே அச்சில் வார்க்கப்பட்டது மாதிரி அளவிலும் உருவ அமைப்பிலும். ஒரு கணினி இயந்திரத்தின் மூலம் உருவாக்கப்பட்ட எந்திர மனிதர்கள் சொன்ன கட்டளைக் கேற்ப ஒரே நேரத்தில் அபிநயிக்கும் அனுபவம் அங்கே.
Falun Gong என்ற தனிமனித மேம்பாட்டு நெறி 1992 ஆம் ஆண்டில் Li Hongzhi என்ற போதகரால் ஏற்படுத்தப்பட்டது. தனி மனித ஒழுக்கங்களும், நெறிமுறைகளுமே உலகில் குற்றச் செயல்களைத் தடுக்க வல்லன என்ற நோக்கில் பல்வேறு நெறிமுறை சார்ந்த ஒழுக்க நடைமுறைகளோடு அமைக்கப்பட்ட இதன் செயல்வடிவம் சீன அரசுக்குக் கண்குத்திப் பாம்பாகத் தோன்றவே 1999 இல் தடை செய்து விட்டது. இன்று Li Hongzhi அமெரிக்காவில் வாழ்கின்றார். அவரின் போதனைகளைப் பின்பற்றுவோர் உலகில் தத்தம் நாடுகளில் அமைப்புக்களை நிறுவி ஒரே குடையின் கீழ் பணியாற்றுகின்றனர். சீனா மட்டும் விதிவிலக்கு, அங்கு இந்த Falun Gong நெறி சட்டவிரோதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு இதைப் பின்பற்றுவோர் கடூழியச் சிறை மற்றும், தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
ஒவ்வொரு நடனமும் சீன தேசத்தின் பாரம்பரியம், வரலாறு பேசும் கதைகளாக, காட்சிகளாக விரிகின்றன. முன்னே நேரடியாக வாத்திய விருந்து முழங்க விதவிதமான நிற ஆடை அலங்காரங்களோடு தோன்றி ஆடும் நடன மாந்தர் எல்லோருடைய அசைவுகளிலும் நேர்த்தி, இந்த நேர்த்திக்கு அடிப்படை சுயகட்டுப்பாட்டோடு சொல்ல வந்த விடயத்தைக் கொடுக்கும் அந்தப் பாங்கு. நடனத்தில் வெளிப்படும் அனாயாசமான வித்தைகள் இந்த நடனக்காரர்கள் கழைக்கூத்தாடிகளாவும் தம்மைக் காட்டுகின்றனர். அவர்களின் உடல்வலிகள் தெரியாது சிரித்துப் பகிரும் நாட்டியத்தில் தாம் படைப்பில் கொண்டுள்ள காதலின் மேன்மை வெளிப்படுகின்றது. நடனங்கள் ஓய்வெடுக்க இடையில் பியானோ வாத்தியம் பின்னிசைக்க தேர்ந்த சீனப்பாடகர் ஒருவர் பாடுகின்றார். பின்னே ஒளித்திரையில் பாடலின் அர்த்தம் வெளிப்படுகின்றது.
நமக்கான அடையாளத்தைப் புதிதாகத் தேடவேண்டியதில்லை. இருந்ததை மீளவும் புத்துயிர் கொடுத்து இனங்காட்டவேண்டியதே நம் பணி இது ஒவ்வொரு சமுதாயத்துக்கும் பொருந்தும். இந்த நோக்கைக் கச்சிதமாகப் பின்பற்றியே Falun Gong நெறியைப் பின்பற்றுவோர் இத்தகு கலாச்சார நிகழ்வுகள் மூலம் தம் அடையாளத்தைக் காட்டுகின்றார். திறமையும் அதைக்கொடுக்கும் ஆற்றலும் எல்லோருக்கும் உண்டு ஆனால் அதைக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையும் இன்ன பிற சாக்குகளும் அவற்றைக் கொண்டு வராமல் அமுக்கிவிடும். அதைக் கடந்து கொடுக்கும் படைப்பை மொழி, நாடு கடந்து எல்லோருமே ஏற்றுக் கொள்வர் என்ற வெற்றித் தத்துவத்தை இவர்கள் நிரூபித்திருக்கின்றார்கள்.
சமரசம் கடந்து கொடுக்கும் படைப்பு காலத்தை வென்று நிற்கும். Shen Yun அடுத்த முறை உங்கள் ஊரில் வந்தால் தவறவிடாதீர்கள், வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய கலைப்படைப்பு இது.
0000000000000000000000000000000000000000000000000000000
கஹானி என்ற ஹிந்திப்படத்தின் போஸ்டரைப் பார்த்ததோடு சரி, இதுவும் பத்தோடு பதினொறாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் படம் வெளிவந்து ஒரு சில நாட்களுக்குள் பாரபட்சமில்லாமல் இந்தப் படம் குறித்த நேர்மையான விமர்சனங்கள் வந்த போது சிட்னியை விட்டே கஹானி போய்விட்டது. சரி ஆங்கில சப் டைட்டிலோடு வரும் தரமான பிரதிக்காகக் காத்திருப்போம் என்று நினைத்தபோது கடந்த வாரம் கிட்டிய கஹானி தான் இரண்டாவது காட்சி.
ஒருமுறை நடிகர் மம்முட்டி விழா மேடை ஒன்றில் "ஹிந்திப்படங்கள் மட்டும் தான் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவை அல்ல, வேற்று மொழிகளும் சினிமா படைக்கின்றன அவற்றையும் உலகம் கண்டுகொள்ளவேண்டும்" என்ற ரீதியிலான ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அவரின் ஆதங்கம் நியாயமானது என்றாலும் இப்போதுள்ள இந்திய சினிமாவின் போக்கைப் பார்த்தால் மற்றைய மொழிகள் எவ்வளவு தூரம் தனித்துவமாகத் தம் படைப்புக்களை இனங்காட்டுகின்றன என்பது முன்னே நிற்கும் கேள்விக்குறி. தமிழ்சினிமா இன்றைக்கு எதிர்கால முதல்வர்களைப் படைக்கும் பஞ்ச் ஹீரோக்கள் படையோடு முன்னிற்க, தொண்ணூறுகளின் முற்பகுதி வரை செழுமையான, யதார்த்தபூர்வமான கதைக்களங்களைக் கொண்டு திரைக்கதை படைத்த மலையாள சினிமாவின் முகமும் இப்போது கோரத்தாண்டவம். மம்முட்டி, மோகன்லால் மட்டுமன்றி புதிதாக வந்திருக்கும் நண்டு, சிண்டுக்களும் இளைய தளபதிகளாக வரவே முனைப்புக் கொண்டிருக்கின்றனர். ஆங்காங்கே வரும் ஒரு சில படங்கள் திருஷ்டி கழிப்புக்கள். இந்த நிலையில் ஹிந்தி சினிமா உலகம் என்னதான் மசாலா படங்களை அள்ளி எறிந்தாலும், அவற்றுக்கு நிகராகப் புதிய புதிய கதைக்களங்களோடும் கருவோடும் வருகின்ற படங்கள் மசாலா சினிமாக்களையே ஓரங்கட்டி மக்கள் மத்தியில் எடுபடுகின்றன. ஹிந்தி சினிமாவுக்குக் கிட்டியுள்ள மிகப்பெரிய உலக சந்தை என்பது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பது ஒருபக்கம், இன்னொரு பக்கம் இப்படியான புதிய உத்திகளோடு வருகின்ற படைப்புக்களுக்கு மக்கள் கொடுக்கும் அதீத ஆதரவு என்பது இன்னும் இன்னும் படைப்பாளியை நம்பிக்கை கொள்ள வைக்கின்ற இன்னொரு காரணம்.
"எனது கணவரைக் காணவில்லை, கண்டு பிடித்துக் கொடுக்கவும்" நிறைமாதக் கர்ப்பிணியாக கொல்கத்தா விமான நிலையத்தில் இறங்கும் வித்யா பாக்க்ஷி (வித்யா பாலன்) என்ற இளம் பெண் நேரே பொலிஸ் நிலையம் சென்று கொடுக்கும் புகாரோடு ஆரம்பிக்கிறது படம். அந்நிய நிலம், புதிய மனிதர்கள், தன்னைச் சுற்றிப் பின் தொடரும் அபாய முடிச்சு, இவற்றோடு தனி ஆளாக லண்டனில் இருந்து வந்த வித்யா பாக்க்ஷி என்ற இந்த இளம் பெண் மர்ம முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்க்க அவிழ்க்க அவை இன்னொரு திசை நோக்கிப் பயணித்து ஈற்றில், இதுவாக இருக்குமோ என்று ஒரு முடிவை எடுத்து நிற்கும் பார்வையாளரின் முடிவைப் பூச்சியமாக்கி இன்னொரு திசையில் இறக்குகிறது கஹானி என்ற இந்தப் படம். வித்யா பாக்க்ஷி சந்திக்கும் மனிதர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று முடிவு வரை அனுமானிக்க முடியாத அளவுக்குக் கண்கட்டு வித்தை நடத்தியிருக்கிறது இப்படம்.
தமிழில் மர்மப்படங்கள் பல வந்திருக்கின்றன. அதே கண்கள் படத்தை அந்தக் காலத்தில் ரூபவாஹினி அருமை பெருமையாகப் போட்டபோது படம் கொடுத்த மர்மத்தில் பக்கத்து வீட்டு மாமி இரவில் நடமாடவே பயந்து தன்னை ஊரடங்குச் சட்டத்தில் அமுல்படுத்திக் கொண்டவர். இன்னும் பல படங்கள் மேஜர் சுந்தர்ராஜன் வகையறா போன்ற வில்லங்கமான வில்லன்களை இருட்டறைக்குள் வைத்து மர்மம் என்று சொல்லி வந்தவை. ஆனால் ஒரு மர்மப் படம் என்றால் என்ன என்பதை மிகவும் நேர்த்தியான வகையில் புதிய உத்திகளோடு பாடம் எடுக்கின்றது இந்த கஹானி.
ஆண்டவன் உலகில் சில விஷயங்களைப் படைக்கும் போது அவை இயற்கைக்கு எதிராக மாறும்போது மீண்டும் அவன் தன் சக்தியை அனுப்பி தீயவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்படுகின்றது" இதுதான் கதையின் அடிநாதம். கொல்கத்தா என்ற கதைக்களனைத் தேர்ந்தெடுத்துப் படத்தை இயக்கியதற்குப் பின்னால் உள்ள நேர்த்தியான காரணத்தில் ஒன்று கொல்கத்தா சார்ந்த மேற்கு வங்கம் மாகாளியைக் குலதெய்வமாகப் போற்றித் துதிக்கும் சமூகத்தைக் கொண்டது. இந்தப் படத்தின் காட்சிகள் மெல்ல மெல்ல தேர்ந்தெடுத்த கதைக்களனை நியாயம் செய்வதாக அமைவது ஒரு தேர்ந்தெடுத்த இயக்குனரின் வெற்றியின் அணிகலன்களில் ஒன்று. இந்தப் படத்தை இயக்கியதோடு கதையின் உருவாக்கத்திலும், தயாரிப்பிலும் துணை நின்றவர் Sujoy Ghosh என்ற இயக்குனர்.
இப்படியான மர்ம முடிச்சுக்களோடு நகரும் கதையில் பார்வையாளனைச் சமரசம் செய்வதற்குப் பல வழிகளைத் தேடுவார்கள், அவ்வ்வ் வகையறா நகைச்சுவைகளும், நாலு பாட்டு அதில் ஒன்று சோகம், இன்னொறு டிஸ்கோ என்று கலந்து கட்டி ஈற்றில் படத்தை ஒரு வழி பண்ணி விடுவார்கள். ஆனால் இந்தவிதமான எந்தவொரு சமரசங்களையும் இயக்குனர் ஏற்படுத்தவில்லை. விஷால் சேகர் இரட்டையர்களின் பின்னணி இசை மட்டுமே படத்துக்குப் பயன்பட்டிருக்கிறது. தேவையான நேரத்தில் வாத்தியங்களுக்கு ஓய்வு கொடுத்து இருப்பது கூட ஒரு நல்ல இசையின் அடையாளம். 128 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு இந்திய சினிமாவில் மாமூலான எந்தவொரு விஷயத்தையும் உள் நுளைக்காமல் படம் பண்ண முடியும் என்ற உண்மையையும் காட்டி நிற்கின்றது இப்படம்.
ஒருமுறை எழுத்தாளர் சுஜாதா கூறியிருந்தார், ஒரு நல்ல சினிமாவின் முக்கிய பாத்திரங்கள் படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே ஏதோவொரு வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் அவற்றை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும் என்று. இந்தப் படத்திலும் அந்த உத்தி கையாளப்பட்டிருக்கின்றது. படத்தின் ஆரம்பக் காட்சிகளில் வந்து போகும் பாத்திரங்கள் அவை பார்வையாளனுக்கு எந்தவொரு சலனத்தையும் ஏற்படுத்தாது பின்னர் மர்மம் விலகும் போது முக்கியமானவர்களாக காட்டப்பட்டிருக்கும் புத்திசாலித்தனம் வெளிப்படுகின்றது. கொல்கத்தா நகரத்தின் மாந்தர்கள், வாழும் சூழ்நிலை எல்லாமே அப்படியே அள்ளி எடுக்கப்பட்டிருக்கின்றன மிகையில்லாமல்.
எட்டுக் கோடியில் எடுக்கப்பட்ட படம் இன்று 104 கோடியை வசூலித்ததாகச் சொல்லப்படுகின்றது. இப்படியான படங்களுக்கு திரை ரசிகர்கள் கொடுக்கும் பெரும் விருதாக இதை எடுத்துக் கொள்ள வேண்டியது தான். எந்த விதமான செயற்கைச் சாயமும் இன்றித் தான் சொல்ல வந்த கருத்தைத் திருத்தமாகச் சொல்லி முடிக்கிறது கஹானி. கஹானி என்றால் கதை என்று அர்த்தம் ஆமாம், ரசிகர்களுக்குக் கதைவிடாது சொல்லும் கதை சொல்லிகள் என்றும் தோற்பதில்லை.