Social Icons

Pages

Monday, December 27, 2010

Hong Kong இல் ஒரு குட்டி இந்தியா

"நம்ம தமிழங்கள இப்பிடிக் கஷ்டப்படுத்துறவங்க நல்லாவே இருக்கமாட்டாங்க, பாருங்க" இப்படிச் சொன்னவர் Chungking Mansions பகுதியில் இருக்கும் ஹோட்டல் சரவணாவில் உணவு பரிமாறும் அந்த தஞ்சாவூர்க்கார முதியவர். Hong Kong இற்குப் பயணப்படும் போது அங்குள்ள இந்தியர்களது வாழ்வியலின் ஒரு பரிமாணமாக, அவர்களது வியாபார ஸ்தலங்களைச் சென்று பார்வையிட வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு உதவியாக இருந்தவர் நண்பர் மாயவரத்தான். Chungking Mansions பகுதிக்குச் செல்லுங்கள் அந்த இடத்தில் நிறைய உணவுக் கூடங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனையாகும் கடைகளை இந்தியர்களே நடத்துகின்றார்கள் என்று என் பயணத்துக்கு முன்னதாகவே சொல்லி வைத்திருந்தார்.
Tsim Sha Tsui என்ற ரயில் நிலையத்தில் இறங்கி Nathan Road என்ற வழிப் பக்கமாக நடந்தால் சில நொடிகளில் எதிர்ப்படுகின்றது Chungking Mansions.


அந்தக் கட்டிடத் தொகுதி 17 அடுக்குகளைக் கொண்டது. அந்தக் கட்டிடத்தில் சீன, இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குடியிருப்புக்கள் மேலே இருக்க, கீழே இருக்கும் இரண்டு அடுக்குகளை நிறைக்கின்றன இந்திய உணவங்கள், மற்றும் தொழில் நுட்ப, இலத்திரனியல் உபகரணங்கள் விற்கும் கடைகள். சீனர்களது வியாபார ஸ்தலங்கள் இருந்தாலும் அங்கே பெரும்பான்மையாக நிறைந்திருப்பது இந்தியர்களது கடைகளே.
வட இந்திய உணவகங்களோடு ஒன்றிரண்டு தென்னிந்திய உணவகங்கள் இருந்தாலும், "ஹோட்டல் சரவணா" என்ற தமிழ்ப்பெயரைத் தாங்கிய ஹோட்டல் தென்படவே. அந்த உணவகம் நோக்கிச் சென்றேன். ஒரு முதியவர் வாங்க தம்பி என்று சொல்லியவாறே இருக்கையைக் காட்டுகிறார். உணவுப்பட்டியலில் இருந்து "வெஜிடேரியன் தாலி மீல் வாங்கிக்குங்க, நல்ல சப்பாத்தி சுட்டுக் கொடுப்பாங்க" என்று அவரே பரிந்துரைக்க நானும் அதையே சொல்லி விட்டு அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.


"நான் தஞ்சாவூர்க்காரன் தம்பி, நீங்க எந்தப்பக்கம்?" என்று அவர் கேட்க
"நான் சிலோன் ஐயா"
"ஓ சரி சரி, ராஜபக்க்ஷ ஏதாச்சும் பண்றானா"
"இன்னும் ஒண்ணும் பண்ணல ஐயா" இப்படி நான் சொல்லவும் அதற்கு அந்த முதியவர் சொன்ன பதிலைத் தான் முதல் பந்தியில் சொல்லியிருக்கிறேன். அவர் அப்படிச் சொன்னதும் உண்மையில் நெகிழ்ந்து போனேன். எங்கோ இரண்டு மூலைகளில் இருந்து வந்து இன்னொரு அந்நிய தேசத்தில் இரண்டு தமிழர்களாக நாம் இருவரும் நம் மனப்பாங்கை அந்த நிமிடங்கள் பகிர்ந்த கணங்கள் மறக்கமுடியாதவை.

ஹோட்டல் சரவணாவில் சாப்பிட்டுவிட்டுக் கடைகளைச் சுற்றிப் பார்க்கின்றேன்.

ஒரு தமிழரின் நாணய மாற்று நிறுவனம், கண்ணாடிக்குப் பின்னால் " தமிழ் வாழ்க" ;-)

இந்திய மளிகைச் சாமான்கள் விற்கும் கடை, இந்தியத் திரைப்படங்களின் டிவிடிக்கள், இசைத்தட்டுக்கள் விற்கும் கடைகள், சந்தைக்குப் புதிதாக வந்திருக்கும் மொபைல் போன்களில் இருந்து ஐபாட் வரை நிறைந்திருக்கும் கடைகள் எல்லாப் பக்கங்களிலும் இருக்கின்றன.



000000000000000000000000000000000000000000000000000000000
ஹொங்கொங்கில் சுற்றுலா செல்பவர்கள் கண்டிப்பாகச் செல்லவேண்டிய இன்னொரு இடம் The Peak என்ற இடம். இந்த நாட்டின் உயர்ந்த இடமிது. Hong Kong Central ரயில்வே நிலையத்தில் இருந்து ஒரு பத்து நிமிஷ நடையில் இந்த உச்சிக்குச் செல்லும் ட்ராம் வண்டிச் சேவையைப் பிடிக்கலாம். இரவு 12 மணி வரை தொடர்ந்து இந்த ட்ராம் வண்டிகள் கீழிருந்து மேலும், மேலிருந்து கீழுமாக ஓடித் திரிகின்றன. ஒரு நாள் மாலை ஏழுமணி வாக்கில் நானும் இந்தப் புதிய அனுபவத்தைப் பெற அங்கு சென்று ட்ராம் டிக்கட்டையும் வாங்கிக் கொண்டு பயணிக்கின்றேன்.



செங்குத்தான பாதையில் பல்லிபோல உரசிக்கொண்டே பயணிக்கும் இந்த ட்ராம் வண்டிகள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து விடாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்தக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய வண்டிகளையும் காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள். அந்தப் பயணத்தின் போது ஹொங்கொங்கின் அழகை ஒவ்வொரு பாகமாகப் பிரித்துக் காட்டிக்கொண்டே பயணிக்கிறது வண்டி. மெல்ல மெல்ல இருள் கவிய, அந்தக் கறுப்பு நிலப்படுக்கை எங்கும் ஒளிரும் வைரங்களை வைத்து இழைத்து போலத் தெரிகின்றது.

உச்சிக்குச் சென்றால் உணவகங்களுடன், இந்த நாட்டுக் கலைச் செல்வங்கள் ஓவியங்களாகவும் கைவினைப்பொருட்களாகவும் விற்பனையாகின்றன. இப்படியான இடங்களில் வழக்கத்தை விடப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். ஆனால் இங்கே நியாயமான விலையில் கிட்டுகின்றன.

இந்த இடத்துக்குப் பயணித்து உச்சியில் நின்று கீழே இருக்கும் நிலப்பகுதியைக் கண்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாதைகளில் நின்று இந்த நாட்டின் முழு அழகையும் ஒரே பார்வையில் பார்க்கக் கூடியாக இருக்கின்றது. ட்ராம் வண்டிப்பயணத்தின் டிக்கட்டோடு The Sky Terrace இற்குச் செல்லும் டிக்கட்டையும் வாங்கி வைத்தால் அங்கிருந்து இன்னும் ஒரு அழகான தரிசனத்தைக் காணலாம்.

Madame Tussauds Hong Kong இங்கே அமைந்திருப்பது இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம். மெழுகு சிலைகளில் உயிர்பெற்றிருக்கும் ப்ரூஸ்லீயும், ஜாக்கி சானும் முகப்பில் நிற்கின்றார்கள்.

ஒவ்வொரு பகுதியாக நின்று நிதானித்துச் சுற்றிப்பார்த்து முடிக்க 11 மணியை அண்மிக்கிறது. ஹோட்டல் திரும்பலாம் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு ட்ராமைப் பிடிக்கின்றேன்.
Hong Kong உலாத்தலில் விடுபட்ட இடங்களை இன்னொரு பயணத்தில் கவனித்துக் கொள்ளலாம் என்று மனதைத் தேற்றியவாறு உலாத்தலை நிறைவு செய்கின்றேன்.

Tuesday, December 14, 2010

Hong Kong இல் நிகழ்ந்த வலைப்பதிவர் சந்திப்பு

இன்றைய வலையுலகச் சூழல் பல கோப்பெருஞ்சோழர்களையும், பிசிராந்தையார்களையும் உருவாக்கியிருக்கின்றது. அப்படி ஒரு முகமறியா நட்புத் தான் இதுநாள் வரை எனக்கும் Hong Kong அருண் இற்கும் வாய்த்திருந்தது. ஈழத்து உறவு என்ற வகையில் பல சந்தர்ப்பங்களில் எனது குணாதிசியத்தோடு பொருத்திப் பார்க்கும் நண்பர்களில் இவரும் ஒருவர். Hong Kong செல்வதற்கு முதல்நாள் தான் இவருக்கு ஒரு மின்னஞ்சல் இட்டிருந்தேன். உடனேயே தொடர்பிலக்கத்தோடு பதில் வந்திருந்தது. அங்கு சென்ற மூன்றாம் நாள் அருண் ஐச் சந்திக்கும் சந்தப்பத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.

நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் இருந்த Toast Box என்ற தேனீர்ச்சாலையில் தான் சந்திக்க ஏற்பாடானது. அருண் உடன் அவருடைய நண்பர், மட்டக்களப்பைச் சேர்ந்த குமாரும் இணைந்து கொண்டார். வலையுலக நட்பு வாயிலாக ஏற்கனவே ஒருவருக்கொருவர் நன்கு பரிச்சயமானதால் அருணைச் சந்திக்கும் போது முன்னர் சந்தித்துப் பிரிந்த நண்பரை நெடு நாளுக்குப் பின் சந்தித்த உணர்வே ஏற்பட்டது.

தான் சந்திக்கும் முதல் வலைப்பதிவர் சந்திப்பு இதுதான் என்றார் அருண். எனக்கோ Hong Kong இல் முதல் உலாத்தலிலேயே ஒரு வலைப்பதிவர் சந்திப்பும் இணைந்த திருப்தி. நான் நினைக்கிறேன் Hong Kong இல் நடந்த முதல் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு இதுவாகத் தான் இருக்கும்.

கொழும்பில் இந்த ஆண்டில் சந்தித்த தாயக நண்பர்களுடான வலைப்பதிவர் சந்திப்புக்கு அடுத்து Hong Kong அருணை அதே உணர்வோட்டத்தோடு சந்திக்க முடிந்தது. வலையுலகத்தைக் கடந்து நமது தாயகம் என்று சுழன்று பாரத்தை ஏற்றி வைத்த பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டோம். அருணோடு வந்த குமாரும் சகஜமாக Hong Kong இல் நம்மவர் வாழ்வைப் பற்றிச் சொல்லி வைத்தார்.

படத்தில் இடமிருந்து வலம்: குமார், அருண், நான்

பிரித்தானியர் ஆளுகையில் இந்தியர்கள் பலர் Hong Kong இற்கு வந்து குடியேறியிருக்கின்றார்கள். அவர்களின் தலைமுறைகள் இப்போது ஒரு பக்கம். அதைத் தவிர தொழில் நிமித்தமாக வந்து சேர்ந்த இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் என்று ஒரு பக்கம். இவர்களைத் தவிர உலகெங்கும் சிதறுண்டு வாழ்வைத் தேடி வாழ்வைத் தொலைத்த ஈழத்தமிழர்கள் என்று இன்னொரு பக்கமாக இருக்கின்றார்கள். மேற்கத்தேய நாடுகள் பலவற்றில் நிரந்தர வதிவுடமை பெற்று ஓரளவு நிலையான எதிர்காலம் பெற்றவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்க, கீழைத்தேய நாடுகளில் இருக்கும் இறுக்கமான குடிவரவு நடைமுறைகளால் எதிர்காலம் தேடி நிதமும் காத்திருக்கும் அகதிகளில் இவர்களும் சேர்த்தி. ஒன்றல்ல இரண்டல்ல பத்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கின்றார்கள், எப்போதாவது ஒரு நம்பிக்கை விடிவெள்ளி வருமென்று. பின்னொரு நாளில் எமது தாயக உறவுகள் சிலரைச் சந்தித்தேன், ஓவ்வொருவருக்குப் பின்னாலும் விதவிதமாய் அறுநூறு பக்க நாவல் அளவுக்கு எழுதக்கூடிய கதைகள் இருக்கும்.

நண்பர் அருண், குமார் ஆகியோரோடு மாலை ஏழரை மணி வாக்கில் அமைந்த சந்திப்பு பத்து மணியைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. இன்னொரு தினம் சந்திக்க வேண்டும் என்று பிரிந்து கொண்டோம் அப்போது.


Hong Kong இல் தங்கியிருந்த ஐந்தாம் நாள் மாலை மீண்டும் அருணைச் சந்திக்க ஆவல் கொண்டு அழைத்தேன். அதே உற்சாகமான குரலில் கண்டிப்பாக வருகின்றேன் என்றார். வேலை முடிந்து ஹோட்டலுக்கு திரும்பும் போது வரவேற்புப் பகுதியில் காத்திருந்தார்.

Hong Kong Central புகையிரத நிலையம் வரை ரயிலில் பயணித்து அங்கிருந்து Star Ferry மோட்டார் படகு மூலம் Kowloon பகுதியை வந்தடைந்தோம். அந்த இடத்தில் காலாற நடக்கும் போது எதிர்ப்பட்டது Harbour City. கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்காக இப்போதே களை கட்டத் தொடங்கியிருந்தது அந்தப் பகுதி. எங்கும் வண்ண விளக்குகள்,வித விதமான அலங்காரங்களாக ஏதோ புராண திரைப்பட செட் மாதிரி இருந்தது அந்தப் பகுதி. திருவிழாக் கூட்டமாய் எங்கும் நீக்கமற நிறைந்து கிடக்கிறார்கள் அவ்வூர் மக்களும் வெளிநாட்டு யாத்திரீகர்களும்.



"இந்த இடத்துக்கு முன்னால் வந்திருக்கிறேன், அதோ தெரிகிறதே மரம், அது மட்டும் இருந்த பகுதி இப்போது அந்த மரத்தை வெட்டாமல் அதைச் சுற்றியே அழகான கட்டிடத்தை எழுப்பியிருக்கிறார்கள் பாருங்கள்" என்று இந்த நாட்டினரின் இயற்கைச் செல்வம் குறித்த கவனத்தைச் சிலாகிக்கையில் எனக்கோ எம் தாயகத்தில் சொந்தத் தகப்பனை உயிரோடு சுவரில் மெழுகி மூடிய பரம்பரையின் கதை ஞாபகத்துக்கு வந்தது.

அந்தப் பகுதியின் துறைமுகப்பகுதியை ஒட்டி கூட்டம் கூடத்தொடங்கியது. "இந்த இடத்தில் ஒவ்வொரு நாளும் இரவு 8.10 மணிக்கு லேசர் விளக்குகளின் ஜால விளையாட்டு இடம்பெறும்" என்று அருண் சொல்லி சிறிது நேரத்தில் மெல்ல ஒளிக்கற்றையை கடலின் மறு அந்தத்தில் இருந்த பெருங்கட்டடத்தின் வாயில் இருந்து செலுத்தியது. மெல்ல மெல்ல கலர் ஜிகினாத் துணிகளைச் சுழற்றி ஆட்டுமாற்போலக் கடலின் நடுவிலே லேசர் ஒளி ஆட்டம் நடந்து பார்வையாளர்களைக் கவர்ந்தது.







லேசர் ஆட்டம் முடிந்ததும், அங்கிருந்து மெல்ல நகர்ந்தால் சில அடி தூரத்தில் சினிமா உலகின் நினைவுச் செதுக்குகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. Hong Kong இன் பிரபலமான திரை நட்சத்திரங்களின் கை அடையாளத்தை அவர்களைக் கொண்டே பதிப்பித்து நடைபாதையில் பொருத்தியிருக்கின்றார்கள். Hong Kong இற்கு வெளியே ஹாலிவூட் வரை தடம்பதித்த ஜாக்கிசானின் உடைகளை விற்கும் கடை, ப்ரூஸ்லீயின் நினைவுச் சிலை என்று தொடர்கின்றது. அந்த இடமே ஒரு குட்டி சினிமா நகரில் நுழைந்த பிரமையை ஏற்படுத்த இவையெல்லாவற்றையும் ரசித்தவாறே நடக்கின்றோம். குளிர்காற்று துன்புறுத்தாமல் இதமாக வீசுகின்றது அந்த இரவில்.









Hong Kong இன் உயர்ந்த கட்டிடம் இது