கடந்த பதிவர் சந்திப்பில் நாம் சந்திக்க முடியவில்லையே என்று சகோதரன் ஜோசப் பால்ராஜ் குற்றம் "சாட்டி"யதால் இம்முறை அவரையாவது சந்திப்போம், இன்னொரு பதிவர் சந்திப்புக்கு கூப்பாடு போட்டு சிங்கை நண்பர்களின் விசனத்துக்கு ஆளாகக் கூடாது என்று பார்த்தால், பயபுள்ள ஊரையே கூட்டி விட்டார். முஸ்தபாவுக்கு எதிரில் உள்ள அஞ்சப்பருக்கு முன்னே வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு காத்திருங்கள், வருகிறோம் என்று பால்ராஜ் சொல்லியிருந்தார். அன்றைய சிங்கை தமிழ் முரசு பத்திரிகையை வாசித்துக் கொண்டே அடிக்கடி வீதியை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று எதிர்ப்பட்டார் நண்பர் பாஸ்கரன். அவரோடு அறிமுகம் பாராட்டி விட்டு பேசிக்கொண்டிருக்கும் போது பால்ராஜும் மோட்டார் சைக்கிளில் வந்தார். எல்லாரும் "குடைக்கடைக்கு" போயிட்டாங்க வாங்கன்னு அவர் அழைக்க பொடி நடை போட்டோம் நானும் பாஸ்கரனும்.
குடைக்கடைக்கு வந்தோம். அட பக்கத்தில் Hotel 81 (அவ்வ்வ்வ்). ஏற்கனவே பதிவர் குழு வந்து சேர்ந்திருந்தது. கடந்த முறை இடம்பெற்ற பதிவர் சந்திப்பை விட நீண்ட நேரம் சம்பாஷிக்கக் கூடிய விதத்தில் அமைந்ததோடு புதிதாக இது நாள் வரை சந்திக்காத உறவுகளையும் கண்டது பெருமகிழ்ச்சியாக இருந்தது. உலக அரசியலில் இருந்து இலக்கியம், சினிமா, வலையுலகம் வரை கலவையாகப் பேசிக் கொண்டிருந்தோம்.
உடல் நலம் குன்றி அன்றைய சந்திப்புக்கு வரமுடியாது உள்ளது என்று மெயிலிட்ட சகோதரர் கோவி.கண்ணன் மக்களைக் காணவேண்டும் என்ற ஆசையில் காய்ச்சலை காற்றில் எறிந்து விட்டு வந்தது நெகிழ வைத்தது.
தம்பி டொன் லீ, சகோதரன் ஜோதிபாரதி, பங்காளி நிஜம்ஸ் ஆயில்ஸ் வழி நட்பான சந்துரு, சுரேஷ் போன்ற ஏற்கனவே சந்தித்தவர்களோடு ஜெகதீசன், முகவை ராம், ஞானப்பித்தன் விஜய், விஜய் ஆனந்த், பித்தன் சுதாகர் என்று புதிய நண்பர்களையும் கண்டு பேசக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி மனதுக்கு நிறைவான மாலைப் பொழுதாக இருந்தது. தோசை, இட்லி படையலோடு இரவு உணவு களை கட்டி நிறைவேறியது பதிவர் சந்திப்பு.
அடுத்தது என்ன, "ஈரம்" போலாம் (படம் பேரப்பா) என்றார் ஒருவர், பால்ராஜ் "நினைத்தாலே இனிக்கும்" போகலாம் (நாமளும் யுத்து தான் ;-) என்றார். இறுதியில் வென்றது "உன்னைப் போல் ஒருவன்". பீச் ரோட் வரை நானும் முகவை ராமும் நடை ராஜாவில் பயணித்து கோல்டன் சினிமாவுக்கு போகவும், அங்கே எமக்காக முன் கூட்டியே சென்று டிக்கெட் எடுத்துக் காத்திருக்கிறார்கள் பால்ராஜும், ஞானப்பித்தன் விஜய்யும்.
படம் முடிந்து மற்றைய நண்பர்கள் விடை பெற டாக்சியில் வழித்துணையாக முகவை ராமும் வர வந்து சேர்ந்தேன் ஹோட்டலுக்கு. இரவு 12 மணியைத் தொட்டது. வெளியே இருக்கும் இணையச் சேவை நிலையத்தில் வலை அளந்து முடிக்க அதிகாலை 2.30 ஐ தொட்டது. முஸ்தபா பக்கம் இருக்கும் ஒரு தேனீர் கடையில் ஒரு சாயா குடித்து விட்டு அந்தத் தெம்போடு கட்டிலில் சாய்ந்தேன்.
00000000000000000000000000000000000000
இருக்கும் அந்த ஒரு நாள் இராத்திரி லிட்டில் இந்தியாவை ஒரு ரவுண்ட் அடித்தேன். வரப்போகும் தீபாவளிக்கு கட்டியம் கூற வண்ண விளக்குகள் அலங்காரம் அந்த ஊரையே கலர்புல்லாக்கியது. கூடவே தீபாவளிச் சந்தையும். கொஞ்சமாவது ஊர் நினைப்பைக் கொண்டு வரும் இந்தச் சிங்காரச் சிங்கையை விட்டுப் போகிறோமே என்ற கவலையோடு ஹோட்டலுக்கு மீண்டேன்.