
மற்றய ஆலயங்களைப் போலல்லாது வாகனங்களைப் பெருந்தெரு முகப்பில் நிறுத்தி விட்டு ஒரு புதர் வழியே அமைக்கப்பட்டிருக்கும் பாதை வழியே கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். தூரத்தே சோலைகள் இருபுறஞ் சூழ நடு நாயகமாக Ta Prohm ஆலயம் காட்சி தருகின்றது. கம்போடிய நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக கைவிடப்பட்டு,மரஞ் செடி கொடிகளால் சூழப்பட்ட சூன்யப் பிரதேசமாகிவிட்ட ஆலயம் இப்போது ஒரு பகுதி மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்காக திருத்தம் செய்யப்பட்டு காட்சி தருகின்றது.
இந்த ஆலயத்தில் தான் Angelina Jolie நடித்த Tomb Raider படம் எடுக்கப்பட்டது. கம்போடியாவில் நான் சந்தித்துப் பேசிய நாலுபேரில் மூவர் என்ற கணக்கில் ஹாலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி புராணம் பாடுகின்றார்கள். Tomb Raider படம் நடிக்க வந்து இந்த நாட்டின் மேல் பாசம் கொண்டு ஏஞ்சலினா பல மனித நேயப் பணிகளை மேற்கொண்டிருக்கின்றார். கம்போடிய அரசர் Norodom Sihamoni ஆகஸ்ட் 12, 2005 இவருக்கு கம்போடிய நாட்டு நிரந்த குடியுரிமை (citizenship) உரிமை வழங்கிக் கெளரவித்திருகின்றார் (ஆதாரம்: விக்கிபீடியா). ஏஞ்சலினா ஜோலி கம்போடியாவின் கெளரவப் பிரஜை கூடவாம். இந்த நாட்டின் Rath Vibol என்ற பிள்ளை ஒன்றை இவர் தத்தெடுத்தும் வளர்க்கின்றார் என்று வாயெல்லாம் பூரிப்பாகச் சொல்கின்றர்கள் கம்போடியர்கள்.
பாதம் மட்டும் எஞ்சிய புத்தர்
உட்பக்கச் சுவர்களிலே காணும் அப்ஸரா தேவதைகளில் சிற்பங்கள்
பாரிய ஆலயத்தின் உட்பக்கச் சுவர்கள் விழுந்து விடாமல் பாரமெடுக்கும் வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், பலகைகள் பொருத்திய வழித்தடங்களையே பின்பற்றி நடக்க வேண்டும். சீரற்ற பாதையிலும், அழிபாடான கட்டிடத்தொகுதிகளிலும் குனிந்தும், நிமிர்ந்தும், வளைந்தும், நெளிந்தும் போவதே ஒரு சவாலான விடயம்.
உடல் சோர்ந்தாலும் இந்த வழித்தடங்கள் தோறும் வியாபித்திருக்கும் கட்டிட சிற்ப வேலைப்பாடுகளைக் காண்பதற்கு எத்துணை கஷ்டங்களையும் மனம் தாங்கும் வலுவோடு காலம் என்னும் அரக்கன் வெட்டித் தள்ளிய கற்தூண்களில் பாய்ந்து ஏறி, பார்த்து ரசித்துப் புகைப்படமாக்கிக் கொள்ளும் ஆவல் அடங்காது.
அங்கோர் வாட்டினை பார்க்கவென வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த ஆலயத்தையும் தவற விடமாட்டார்கள் என்பதால் முந்திய கோயிலை விட இங்கே கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கின்றது. மதிய நேரம் உண்ட களைப்பில், முகத்தில் துண்டைப் போட்டுவிட்டு தூணொன்றில் சரிந்து படுக்கும் பயணிகளும் ஆங்காங்கே தென்படுகின்றார்கள்.
Ta Prohm ஆலயம் ஆரம்பத்தில் பெளத்த துறவிகளுக்கான மடாலயமாக அமைக்கப்பட்டாலும், இதன் செல்வாக்கு அதிகரித்து, பின்னர் இந்த ஆலய ஆளுகையின் கீழ் 3000 கிராமங்களும் (ஆமாம் மூவாயிரமே தான்), ஆயிரக்கணக்கான தொண்டர்களும், தங்க நகை விற்பனை நிலையங்களுமாக தன் நிர்வாகத்தை அகலவிரித்தது.
ஆலயத்தைத் தரிசித்து விட்டு இன்னொரு பாதையால் வெளியேறி வரும் போது வெளிப்புறத்தே ஓரமாய் இருந்து கம்போடிய நாட்டு இசைக் கருவிகளை மீட்டியவாறே அந்த நாட்டுப் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கின்றது ஒரு குழு. நெருங்கிப் போய்ப் பார்த்தால் மனம் கனக்கின்றது. அவர்கள் கொடுங்கோலன் பொல் பொட் கம்போடியாவில் ஆண்ட காலத்தின் போது வியட்னாமிற்கு எதிரான யுத்தத்தில் புதைக்கப்பட்ட மிதிவெடிகளில் (Land mines) சிக்கித் தம் கண்களை, கால்களை, மற்றைய அவயவங்களை இழந்தோர் உருவாக்கிய Landmine Victim Community என்ற அமைப்பில் இவர்கள் இணைந்து இப்படி இசைத்தும் பாடியும் தம் எஞ்சிய வாழ்வைக் கொண்டுபோகப் போகின்றார்கள். சுகதேகியாகப் பிறந்தும், கொடியதோர் போர் என்ற அரக்கனின் கரங்களில் சிக்கித் தம் வாழ்வைத் தொலைத்தவர்களைக் கண்டதும் மனதில் பாரம் தொற்றிக் கொண்டது. கண்கள் கலங்க அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.