


அங்கோர் வாட் ஆலயம் சென்று மதிய உணவின் பின் சென்ற ஆலயங்கள் குறித்து தொடர்ந்து தராமல் அன்று மாலை நான் கண்டுகளித்த கம்போடிய கலாச்சார நடனங்கள் குறித்த பதிவாகத் தருகின்றேன். காரணம் இந்த நாட்டில் கோயில்கள் தவிர இவ்வாறான கலாச்சார அம்சங்களைப் பார்க்கும் வாய்ப்பும் அதிகம் உண்டு என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டிய கடமையில் இருக்கின்றேன்.
மார்ச் 15, 2008 அன்று மாலை ஐந்தைத் தொடவும், பெரும்பாலான கோயில்களைப் பார்த்த களைப்பும், கடும் வெயில் கொடுத்த அயர்ச்சியும் ஒரு சேர, ஹோட்டலுக்கு போனதும் குளித்து விட்டு கட்டிலில் சாயவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் ஏற்கனவே அன்று காலையில் நட்புப் பாராட்டிய ஹோட்டல் வரவேற்பாளினி ஆர்வமாக
"நீங்கள் இன்றிரவு கம்போடிய கலாச்சார நடனம் பார்க்கப் போகிறீர்களா?"
என்று கேட்கவும், களைப்பெல்லாம் கலைந்து போய் ஆமாம் போட்டேன்.
"சரி, ஆறு மணிக்கு ருக் ருக்குக்கு (tuk-tuk) (மனித ரிக்க்ஷா) ஏற்பாடு செய்கிறேன், குளித்து விட்டுத் தயாராக இருங்கள் என்றாள்.
நானும் மீண்டும் குளித்து முடித்து, ஒப்பனை செய்து வரவேற்பறைக்கு வரவும், ருக் ருக் தயாராக இருந்தது. "ஒரு அமெரிக்க டொலர் கொடுங்கள் போதும்" என்று சொல்லி வரவேற்பாளினி ருக் ருக்கை (tuk-tuk) கைகாட்டவும், வாகனத்தில் அமர்ந்தேன். கம்போடியாவின் நாணய அலகு படு பாதாளத்தில் போவதால் எல்லாமே அமெரிக்க டொலர் ஆக்கிவிட்டார்கள். ஒரு நியாயக் கணக்குப் படி பத்து, பதினைந்து நிமிட எல்லைக்குள் ஒரு டொலரால் சவாரி செய்யலாம்.


Koulen 11 Restaurant என்னும் பெரியதொரு உணவுச்சாலைக்கு வந்து நின்றது ருக் ருக். உள்ளே போகிறேன். ஏற்கனவே எனது ஹோட்டல் வரவேற்பாளினி எனக்கான ரிக்கட்டை Buffet உணவுடன் 12 அமெரிக்க டொலரில் பதிவு பண்ணி எனக்குக் கொடுத்திருந்தாள். மென்பானமோ, கடும் பானமோ எடுத்தால் அவற்றுக்குத் தனிக்கட்டணம். இவ்வாறான உணவுச்சாலைகளில் முன் கூட்டியே எமது இருக்கையைப் பதிவு பண்ணியிருக்க வேண்டும். இந்த உணவகம் மட்டுமன்றி கம்போடியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய உணவகங்களும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் வாரத்தின் சில நாட்கள் இரவு Buffet உணவு வகையறாக்கள் நிரப்பி இப்படியான கம்போடியக் கலாச்சார நடனக் காட்சிகளை ஒழுங்கு செய்திருக்கிறார்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அதே நடனக் காட்சி நுழைவுச் சீட்டு முன்னூறு டொலர் வரை போகும்.

இரவு உணவுகள் பரப்பி வைக்கப்பட்ட பகுதியில் எனக்கான உணவை எடுத்துக் கொண்டு என் இருக்கையில் அமர்கின்றேன். நிண்ட நெடிய பரப்புக்கு இப்படி மேசை, கதிரைகள் போட்டு முன்னே பெரும் அரங்கத்தில் கம்போடிய நடனக் காட்சி அரங்கேற இருக்கின்றது. கிட்டத்தட்ட ஐநூறு பேர் சமகாலத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு இந்த உணவகத்தில் இருக்கின்றது.
எனக்கு ஒரு ஓரப்பக்க ஆசனம் கிடைத்தது. மிகவும் முன்னே கிடைத்தால் புகைப்படம் எடுக்கவும் சிறப்பாக இருக்குமே என்று நான் முணுமுணுத்துக் கொள்ளவும்,
"மன்னிக்கவும், உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் நானும் கணவரும் முதல் இருக்கையில் பதிவு வைத்திருக்கிறோம், அதில் நீங்கள் போய் உட்கார்ந்தால், நானும் கணவரும் இங்கே இருக்கலாம்" என் மெளன முணுமுணுப்பைக் கலைத்தவாறு ஒரு நடுத்தர வயது வட இந்திய மங்கை. ( நான் முணுமுணுத்தது எப்படிக் கேட்டது இவருக்கு ;-)
"பிரச்சனையில்லை நீ இங்கே வா" அவளின் கணவன் முன் ஆசனத்தில் இருந்தவாறே தொலைவில் என்னோடு பேசிய மங்கையை அழைத்தான்.
கூட்டம் மெதுமெதுவாகச் சேர்ந்து கோயம்பேடு ஆக இரைச்சல் வரவும், அதைக் கலைக்க மைக்கில் இருந்து "இதோ நீங்கள் கண்டு களிக்கவிருக்கும் கலாச்சார நடனம் ஆரம்பமாகிறது" என்று ஆங்கிலத்தில் அறிவிப்பு வந்தது, அப்போது நேரம் இரவு 7.30.


திரைச் சீலை விலக, கம்போடிய இளம் கன்னி அப்சராவாக மேடையிலே தோன்றி வெள்ளை மலர் தூவி வரவேற்பு நடனம் கொடுக்கின்றாள். மெல்ல மெல்ல ஒவ்வொரு கன்னிகையரும் மலர்க் குவளைகளோடு மேடையில் தோன்றி அந்த நடனத்ததோடு இணைகின்றார்கள். தாய்லாந்தும், இந்தியாவும் சேர்ந்து செய்த கலவையாக அந்த அழகுப் பதுமைகள் இருக்கின்றார்கள்.


அடுத்து உழவுப் பாட்டு, கம்போடியா ஓர் விவசாய நாடாக இருக்கும் காரணத்தால் அங்கே தமிழகத்தில் இருக்கும் நாற்று நடவுப் பாடலில் இருந்து, அரிவி வெட்டும் பாடல்கள் வரை உண்டு என்பதற்குச் சான்றாக அந்த முழு உழவுப்பாடலும், நடனமும் கம்போடியக் கன்னியரும் காளையரும் சேர்ந்து கலக்க ஆடப்படுகின்றது. திரைச்சீலை மறைப்பில் இருந்து கொண்டே கம்போடிய பாரம்பரிய வாத்தியங்களைச் சிலர் வாசிக்கப் அந்த நடனங்களுக்கான பிற்பாட்டுப் பாடும் கூட்டமும் மேடையில் இருக்கின்றது. கம்போடிய மொழிப்பாடலும் இசையும் தான் இதை வேறுபடுத்துகின்றதே ஒழிய, அந்த நாட்டியம் அசல் இந்தியக் கிராமிய நடனத்தை ஒத்திருந்தது.

அந்த நடனத்தில் உழவன் ஒருவனுக்கும் உழத்தி ஒருத்திக்கும் வரும் காதலும் அமைகின்றது. வெட்கம், நாணம், குறும்பு, சீண்டல்,ஊடல், கூடல் எல்லாமே அந்த நடனக்காட்சியில் தீனி போடப்படுகின்றது.மிகவும் நளினமாக, எந்தவித செயற்கையும் விழுந்துவிடாது அந்தக் காட்சியை அமைத்திருந்தது சிறப்பாக இருந்தது.

அடுத்து வருகின்றது மீனுக்கும் அனுமானுக்கும் வரும் போட்டி நடனம். இது கம்போடியர்கள் பின்பற்றும் இராமாயணக் கதையாக அமைந்திருக்கின்றது. அதாவது இராமரின் பாலத்துக்கு வானரங்கள் உதவுகின்றன அல்லவா. அப்போது அதைத் தடுத்துப் பாலத்தை அடிக்கடி உடைக்க வருகின்றது ஒரு பெண் மீனினம். உடனே அந்த மீனின் மனதை மாற்ற அனுமார் முயல்கின்றார். எல்லா வழியும் செய்து பார்த்தும் எல்லாமே பயனற்றுப் போகவும், இறுதியாக அந்த மீனையே தன் காதல் வலையில் வீழ்த்தி அனுமார் மணம் முடித்து, இராமர் பாலம் கட்டும் திட்டத்தை நிறைவேற்றுக்கின்றார். அதையே பாடலும், காட்சியுமாக அழகாகக் காட்டுகிறார்கள், மீன் வடிவம் கொண்ட ஜோடனையில் பெண்ணும், அனுமார் முகவுருவில் வரும் ஆணும். ஆரம்பத்தில் அணையைத் தடுக்கும் மீனின் சேஷ்டைகளையும், பின்னர் அனுமான் வந்து மீனை மயக்குவதையும் அழகாக ஆடிக்காட்டினார்கள். பின்னணியில் இருப்போர் கம்போடிய மொழியில் விளக்கப்பாடலை இசையுடன் பாடினார்கள்.
பின்னர் என் சுற்றுலா வழிகாட்டியிடம் இதைப் பற்றி விபரம் கேட்டபோது, அந்த மீன் இராவணனின் மகள் என்றும், இராவணனுக்கு எதிராகப் போரிடப்போகின்ற இவர்களின் பாலத்தைத் தகர்க்கவேண்டும் என்ற முனைப்போடு அது செயற்பட்டதாகவும், பின்னர் அனுமானின் காதலில் விழுந்து அம்மீன் இந்த முயற்சியில் இருந்து விலகுவதாகவும் ஒரு விந்தையான கதை கம்போடிய வழக்கில் இருப்பதாகவும் சொன்னார்.

அடுத்து வருகின்றது இன்னொரு பாரம்பரிய நடனம். தேங்காய்ச் சிரட்டைகளை (கொட்டாங்குச்சி) ஆளுக்கு இரண்டாக வைத்துக் கொண்டு ஒலி எழுப்பிவாறே பாடி ஆடும் நடனம் அது.

நிறைவாக அப்சரா நடனம் நடக்கின்றது. தோழியர்கள் புடைசூழ அப்சரா வருகின்றாள். தோழியர்கள் எல்லோருமே அழகுப் பதுமைகளாக, அப்சராக்களாகத் தான் இருக்கின்றார்கள்.

இப்படியான கலாச்சார நடனம் ஆடுவது எல்லோராலும் சாத்தியமில்லையாம். இதற்கான அரச அமைப்பு ஒன்று இருக்கின்றதாம். அங்கே பதிவு பண்ணி முறையான பயிற்சியை அங்கேயே பெற்றுக் கொள்ள வேண்டும். அப்சரா என்னும் தேவதைப் பெண்ணுக்கு உருவ அமைப்பிலும், நடன இலாவகத்திலும் உரிய லட்சணங்கள் இருந்தால் தான் அந்த உயர் பெண்ணாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்களாம்.

இந்த நடனங்களை ஆர்வத்தோடு பார்த்தவாறே, விழுந்தடித்துப் படம் பிடிக்கும் கூத்தை எனக்கு அருகாமையில் இருந்த ஒரு வயதான அமெரிக்கத் தம்பதி வேடிகையோடும், நட்போடும் பார்த்து, என்னை அன்பாக விசாரித்தார்கள். தாங்கள் அமெரிககவின் கொலராடோ பகுதியில் இருந்து வந்திருப்பதாகவும், தங்களின் இனிய பயண அனுபவங்களையும் சொல்லி மகிழ்ந்தார்கள் Barry & Caroline தம்பதியினர். "உன்னைச் சந்தித்தது மிகப் பெரிய சந்தோசம், மிகவும் பணிவான பையனாக இருக்கிறாயே" என்று என் கையை இறுகப் பிடித்துச் சொல்லி விட்டு " உன் எதிர்காலம் நன்றாக அமையட்டும், தொடரும் பயணம் சுகமாக இருக்கட்டும்" என்று வாழ்த்தித் தன் கணவரோடு விடைபெற்றார் கரோலின். எனக்கு என் அம்மம்மாவின் ஞாபகம் வந்து கண்கள் பனித்தது.
இரவு ஒன்பது மணிவாக்கில் அந்தக் கலாச்சார நடன விருது கலைந்தது. நடனமாதுக்களோடு சேர்ந்து புகைப்படம் எடுக்க வெள்ளையர் கூட்டம் மேடையை நோக்கி விரைகின்றது. நமது நாட்டின் பாரம்பரிய நடனங்களையும் இவ்வாறானதொரு வகையில் வெளிநாட்டவருக்கும், நம் அடுத்த சந்ததிக்குக்கும் காட்டினால் நம் நாட்டுப்புறக்கலைகள் அழியாமல் தொடருமே என்ற ஆதங்கத்தோடு என் தங்குமிடம் நோக்கி இன்னொரு ருக் ருக்கில் பயணித்தேன்.