கம்போடியாவில் எவ்வகையானதொரு மத வழிபாடு பின்பற்றப்பட்டது என்பதற்குச் சாட்சியமாக நிலைத்திருக்கின்றது அங்கோர் வாட் கோயில். இரண்டாம் சூரியவர்மன் கம்போடியாவின் மிகமுக்கியமானதொரு அரசனாகக் கொள்ளப்படுகின்றான். காரணம் அவன் ஆட்சியில் மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon)/பர்மா (Burma) தெற்கு மலாய் தீபகற்பம் (Malay Peninsula) ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான். இவற்றைப் பற்றி முன்னரும் கம்போடிய மன்னர்கள் பற்றிய அறிமுகத்தில் கொடுத்திருந்தேன்.
இரண்டாம் சூர்யவர்மன் ஓர் விஷ்ணு பக்தனாக இருந்திருக்கின்றான். எனவே இந்த அங்கோர் என்ற மாபெரும் ஆலயமும் ஒரு விஷ்ணு கோயிலாகவே அவனால் அமைக்கப்பட்டிருக்கின்றது. கூடவே மகாபாரதப் போர், இராமாயண யுத்தம் போன்ற இதிகாசபுராணக் கதைகளையும், தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த வரலாற்றையும் ஆலயத்தின் மிக நீண்ட சுற்றுமதில்கள் தோறும் அமைத்து முழுமையானதொரு விஷ்ணு வழிபாட்டின் கூறாகவே இவ்வாலயம் திகழ்ந்திருக்கின்றது. இவனது இந்தப் பெரும் திருப்பணி காரணமாகவே இவன் இறந்த பின் பரமவிஷ்ணுலோக (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான். எனவே கி.பி 1113 - 1150 ஆண்டு வரை ஆட்சியாளனாகத் திகந்த சூர்யவர்மன் தீவிரமிக்க விஷ்ணு பக்தனாகத் திகழ்ந்தான் என்பது ஐயமுறத் தெரிகின்றது.
மேலே இருக்கும் படம் அங்கோர் வாட் ஆலயத்தின் உட்புறம் இருக்கும் தீர்த்தமாகும். அதை எனது சுற்றுலா வழிகாட்டி இந்தியாவில் இருக்கும் "கெஞ்சி" தீர்த்தத்துக்கு நிகரானது என்றார். எனக்குப் புரியவில்லை. மீண்டும் மீண்டும் கெஞ்சி, கெஞ்சி என்று அவர் சொன்னபோது அது காசி புனித தீர்த்தமாக இருக்கலாம் என்று நான் முடிவு செய்து கொண்டேன். அதற்குக் காரணமும் இருக்கின்றது. திறந்த, கூரையற்ற இந்தத் தீர்த்தம் மழை நீரைத்தேக்கி வைத்திருக்கவல்லது. அவ்வாறு தேங்கும் இந்த நீர் புனித நீராகக் கருதப்பட்டு, இறந்தோருக்கான பிதிர்க்கடனைச் செலுத்தும் தீர்த்தமாடமாகவும் கொள்ளப்பட்டிருக்கின்றது எனது சுற்றுலா வழிகாட்டி சொன்ன மேலதிக செய்தியே காரணமாகும்.
மேலே இருக்கும் படத்தில் உடைந்த சிலைகளின் சிதைவுகளைக் கற்குவியல் விக்கிரகங்களாக அமைத்து வைத்த கைங்கர்யத்தைச் செய்தவர்கள் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் என் வழிகாட்டி. அங்கோர் வாட் ஆலயத்துக்கு வரும் இந்த ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்த்த நேரம் போக, மீதமுள்ள நேரத்தில் இப்படி வேடிக்கையாகச் செய்த வேலையே அது.
மேலே இருக்கும் படம் அங்கோர் வாட் ஆலயத்துக்கு அருகில் இருக்கும், தற்போது வழிபாட்டில் உள்ள புத்த ஆலயமும், பர்ணசாலையும் ஆகும். அழிவில் அகப்பட்டிருக்கும் அங்கோர் வாட் ஆலயத்தின் உள்ளும் இந்த நாட்டு மக்கள் மற்றும் வருகை தரும் தாய்லாந்து நாட்டவர் உள்ளே உள்ள புத்த விக்கிரகங்களுக்குத் தம் வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றார்கள்.
அங்கோர் (Angkor) என்பதற்கு நகரம் என்றும் வாட் (Wat) என்பதற்கு ஆலயம் என்றும் சொல்லப்படுகின்றது. என்னுடன் வந்திருந்த சுற்றுலா வழிகாட்டியின் கருத்துப்படி வாட் (Wat)என்பது பிற்காலத்தில் இந்த ஆலயம் ஒரு பெளத்த ஆலயமாக மாற்றிய பின்னர் ஒட்டிக் கொண்ட சொல் என்றும் சொல்கின்றார்கள்.

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும் போது ஆட்சியாளர்கள் தம்மை வழி நடத்திய மதக்குருமாரின் வழிகாட்டலிலும், பல்வேறு விதமான அனுபவங்கள் மூலமும் மதமாற்றத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதை நாம் காணலாம். அது தான் கம்போடியாவிலும் நடந்திருக்கின்றது. பிற்காலத்தில் பெரும் புகழோடு இருந்த ஏழாம் ஜெயவர்மன் ஒருமுறை சியாம் நோக்கிய படையெடுப்பில் காணாமல் போகின்றான். அவனது மனைவி ஜெயதேவியின் சகோதரி இந்திரதேவி பெளத்தமதத்தைப் பின்பற்றியதோடு, பிரச்சாரகியாகவும் திகழ்ந்தவள். மன்னன் ஜெயவர்மனை நீண்ட நாட் காணாத துயரில் இருந்த இந்திரதேவியை பெளத்த மதத்துக்கு மாறும் படியும், அதன் மூலம் தொலைந்த மன்னனையும், அமைதியையும் மீளப் பெறலாம் என்றும் இந்திரதேவி தன் சகோதரியும் மகாராணியுமான ஜெயதேவிக்குச் சொல்லவும் அவள் பெளத்த மதத்திற்கு மாறுகின்றாள். ஆனால் மீண்டும் ஜெயவர்மன் நாடு திரும்புவதற்கிடையில் மகாராணி ஜெயதேவி இறக்கின்றாள். அவளின் சகோதரி இந்திரதேவியை இரண்டாம் தாரமாக மணமுடித்த ஜெயவர்மனும் பெளத்தமதத்தைத் தழுவுகின்றான். ஏழாம் ஜெயவர்மன் காலத்தில் 121 தங்குமிடங்கள் (Rest houses)102 வைத்தியசாலைகள் ஆகியவையும் கட்டப்பட்டனவாம். இவன் காலத்தில் மகாஜன பெளத்தம் என்ற பிரிவே பின்பற்றப்பட்டது. இவன் இறந்த பின் மஹாபரம செளகத (Mahaparama saugata) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டான்.
விஷ்ணு ஆலயமாக இருந்த இந்த அங்கோர் வாட் இப்போது இந்து மத விக்கிரகங்கள் ஓரம் கட்டப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டு, புதிதாக முளைத்த புத்தர் சிலைகளோடு இருக்கின்றது,
இந்த ஊர் மக்களின் மன(மத)மாற்றம் போலவே.....
17 comments:
படங்களில் லயித்திருக்கிறேன்!
அப்படியே தென் தமிழகத்து கோவில்களுக்கு சென்ற பாதிப்போடு....!
படத்தோடு கட்டுரையையும் பாருங்க ஆயில்ஸ்
கெஞ்சி காசி.. :))
நீண்ட கட்டுரை.. நிறைய விசயங்கள் ஆச்சரியம்.. இன்னும் வயிற்றுவலிக்கு சிவனே கதி போன்றவை.. :)
வாங்க முத்துலெட்சுமி
பெரிய கட்டுரை இல்ல, பெரிய எழுத்துருக்கள் ;)
அப்படியில்ல மூன்று வாரங்களுக்கு மேல் போடாமல் வச்சிருந்த இருப்பு இது. இன்னும் நான் கண்ட ஆச்சரிய்ங்களைச் சொல்வேன்.
அருமையான படைப்பு பிரபா.
ஆர்வத்தோடு படித்தேன்.புதிதாய் ஒரு விசயம் அறிந்துகொண்ட சந்தோஷம்.
மனித மனங்களும் அவர்களை ஆட்டிப்படைக்கும் மதங்களும்தான் எரிச்சலாயிருக்கிறது.கடவுள் என்கிற நம்பிக்கையைக் கூட கசக்க வைக்கிறது.வேண்டாம்...விடுங்கள்.
வணக்கம் ஹேமா,
வாசித்துத் தங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. மத வெறி பிடித்த மதயானை தானே பெரும்பாலான அமைதியின்மைக்குக் காரணம்.
விபரமாகத்தந்திருக்கிறீர்கள். நன்றி.
இறுதிப்படத்தில் ஆஞ்சநேயரை ஏன் வெளியில் கொண்டுவந்து படிக்கட்டில் உட்கார வைத்திருக்கிறார்கள்..?!!
வாங்கோ கோகுலன்,
ஒரு மாதிரி கஷ்டப்பட்டு பின்னூட்டம் போட்டுட்டீங்கள் ;-)
அது துவாரபாலகர்.
// விஷ்ணு ஆலயமாக இருந்த இந்த அங்கோர் வாட் இப்போது இந்து மத விக்கிரகங்கள் ஓரம் கட்டப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டு, புதிதாக முளைத்த புத்தர் சிலைகளோடு இருக்கின்றது,
இந்த ஊர் மக்களின் மன(மத)மாற்றம் போலவே..... //
புத்தர் சிலைகளால் கன இடத்தில பிரச்சினைபோல கிடக்கு . . .
(நான் இலங்கை திரிகோணமலை விடையத்தைச்சொன்னேன்)
பயணம் சூப்பராக இருக்கு தல ;)
கடைசியில எங்க தல சிலை மாதிரி ரொம்ப அழகாக உட்கார்ந்து இருக்கும் படம்....சூப்பரு ;))
நல்ல கட்டுரை.. "கெஞ்சி"... காஞ்சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் காஞ்சிபுரத்தை குறிப்பதாகக் கூட இருக்கலாம்... காஞ்சி மாநகர் பண்டைய பல்லவப் பேரரசின் தலைநகர்.. இம்மன்னர்களும் "வர்மன்" என்னும் அடைமொழியோடே அழைக்கப்படுவார்கள்...!
வாங்கோ மாயா
புத்தர் என்ற மகானின் மகிமையைக் கெடுக்கிறார்கள் அவர்கள்,
தல கோபி
ரொம்ப நன்றி ;-)
வணக்கம் சிங்கையன்
கெஞ்சி- காஞ்சி, மற்றும் நீங்கள் கொடுத்த விளக்கம் சிற்ப்பாக ஒத்துப் போகின்றது. அத்தோடு தென்னிந்திய ஆதிக்கம் இந்த நாட்டில் இருந்ததால் காசியை விடக் காஞ்சியே பொருத்தம்.
வழக்கம்போல், அருமையான தகவல்கள், படங்கள். இந்த மாதிரி, நம்மை மதிக்கும் நாடுகளுடன் நல்லுறவு கொள்வதை விட்டுவிட்டு, மிதிக்கும் நாடுகளுக்குத்தான் ஓடுகிறோம் நாம் :(
ஏற்கனவே, வியட்னாம், கம்போடியா நாடுகள் என் பட்டியலில் இருக்கு. உங்கள் கட்டுரைகள் மூலம் பட்டியல் உறுதிப் படுத்தப் படுகிறது :)
வாங்க தஞ்சாவூரான்
கம்போடியாவில் சுற்றுலாவை மையப்படுத்திய வாழ்வியில் இருப்பதால் இங்கு உபசாரம் மிகப் பிரமாதம். சுற்றுலாவுக்கு உகந்த அருமையான இடம், செலவும் ஒப்பீட்டளவில் அதிகம் இல்லை.
எனவே பட்டியலைப் பலமா வச்சுக்கலாம் நீங்க ;)
பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன்..நன்றிகள் கானாஸ் :)
வாங்க தூயா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment