Social Icons

Pages

Tuesday, January 09, 2018

மதுரை நகர உலாத்தல் 🙏🌴 பழமுதிர்ச்சோலை எனக்காகத் தான்
மதுரை நகர உலாத்தல் 🙏🌴
பழமுதிர்ச்சோலை எனக்காகத் தான்
“உங்க பேர் என்னங்க” - நான்
“பிரபாகரன் சார், உங்க பேரு?” - ஆட்டோக்காரர்
“பிரபா..” என்று நான் சொல்லி முடிப்பதற்குள் “அட நம்ம தலைவர் பேரு” என்று சொல்லிச் சிரித்தார் பிரபாகரன் என்ற அந்த ஆட்டோக்காரர். அவரோடு தான் மதுரை மாநகரின் அன்றைய பொழுது உலாத்தலைக் கழித்தேன்.
வேட்டி கட்டிய தமிழனாக அன்றைய நாள் முழுக்க மதுரையைச் சுற்றியது புதுவித அனுபவம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காலை இரண்டு மணி நேரம் உறைந்து விட்டு மீண்டும் தங்குமிடத்துக்கு வந்தேன். முந்திய தினம் தங்குமிட நடத்துநரிடம் பேசி வைத்தது போல மதுரையின் முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க வாடகைக் காரை ஒழுங்கு செய்திருப்பார் என்ற நம்பிக்கையுடன் அவரிடம் போனால் தங்களின் வழமையான கார்ச் சாரதி வேறு ஒரு வேலையாகப் போய் விட்டார் வேணும் என்றால் வேறு காரை ஏற்பாடு செய்து தரட்டுமா என்று கேட்டார். எனக்கு அப்போது பொறி தட்டியது, வாடகைக் காரை விட ஆட்டோவிலேயே ஊர் சுற்றினால் என்ன என்று. இம்மாதிரிப் புது ஊர்களுக்குப் பயணப்படும் போது ஆட்டோக்காரர்கள் பலர் விரல். நுனியில் அந்த ஊர் வரலாறு, பண்பாடு, வாழ்க்கை முறை எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கும் பாங்கை அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன். அதனால் மதுரை உலாத்தலுக்கு ஆட்டோக்காரைத் தேர்ந்தெடுத்தது தவறில்லை என்று நிரூபித்தது அன்றைய முழு நாள் பயணமும். தங்குமிடக்காரர் ஒழுங்கு செய்த ஆட்டோ முன் வந்து நின்றது. காலைச் சாப்பாட்டைச் சாப்பிட நேரம் வாய்க்கவில்லை. அன்றைய நாள் திருத்தல உலா என்பதால் மாமிசத்துக்கும் தடா.
ஆட்டோக்காரர் பிரபாகரன் தங்குமிடம் முன் வந்து ஆட்டோவை நிறுத்த அதில் தொற்றிக் கொண்டேன்.
பிரபாகரன் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய தோற்றமே பய பக்தியோடு இருக்க, வாயைத் திறந்தால் மதுரையின் பெருமையும், வரலாறும், தற்கால நடப்பும் வைகையாகக் கொட்டுகிறது. சரியான ஆளைத் தான் தேர்வு செய்திருக்கிறேன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். இன்ன தேதியில் இவரை நான் சந்திக்கப் போகிறேன் அவர் வழியாக மதுரையை உலாத்தப் போகிறேன் என்பதெல்லாம் ஏற்கனவே எழுதி வைத்தது தானே அதுவே இப்பொழுது நடக்கிறது.
“எங்கெங்கெல்லாம் போகணும் சார்”
“மதுரையின் முக்கியமான கோயில்கள் குறிப்பா அழகர் கோயில் அப்புறமா நாயக்கர் மகால் கண்டிப்பாப் பார்க்கணும்” - நான்
“முதல்ல அழகர் கோயில் போவோம் ஏன்னா பதினொன்றரைக்கு நடை சாத்திடுவாங்க வர்ர வழியில காந்தி மியூசியம், நாயக்கர் மகால் எல்லாம்
பார்த்துடுவோம். மதியத்துக்கு மேல திருப்பரங்குன்றம் போவோம்’
நான் கோடு போட்டால் பிரபாகரன் ரோடு போட்டார்.
ஆட்டோவில் அழகர் மலை வரை போறதெல்லாம் தில்லான காரியம் என்று உணர்ந்து கொண்டேன். ஆனால் சாலையின் வளைவு நெளிவுகள் ஏற்ற இறக்கங்கள் எதுவும் என் உடம்பில் ஏறாது பதமாக வண்டியை ஓடியவாறே கதை கதையாகச் சொன்னார்.
இங்கே தான் சார் வைகை ஆறு ஓடுது என்று அவர் பாலத்தின் எதிரே காட்டிய போது அதெல்லாம் வற்றிய வயிறு ஒடுங்கிய பிச்சைக்காரன் போல இருந்தது.
“பாயாசம் எங்கேடா” என்று சிங்கம்புலி கேட்டது போல மனசு கேட்டது. ஏனெனில் மதுரைக்கு வருவதற்கு முன் நவம்பரில் பெய்த மழையில் பெருக்கெடுக்கும் வைகை ஆறு காணொளியை சமூக வலைத்தளங்களில் போட்டதைப் பார்த்து அதையும் காண வேண்டும் என்ற நப்பாசையில் வந்த எனக்கு அது ஏமாற்றம்.
“மடையைத் தெறந்துட்டாங்க சார் அதான் தண்ணி இல்லை” - பிரபாகரன்
அழகர் மலைக்குப் போகும் வழியில் ஆங்காங்கே தென்பட்ட மடங்களைக் காட்டி “அழகர் பவனி வரும் போது அந்தந்த வகுப்பினருக்கான இந்த மடங்களை எல்லாம் பயன்படுத்துவாங்க” என்றார்.
அழகர் மலையடிவாரத்தில் ஆட்டோ தரித்தது.
“இதுக்கு மேல போக முடியாதுங்க அழகர் மலைக்குஒ போகும் பஸ்ல தான் ஏறணும்”
அரை மணி நேரம் காத்திருந்து வரிசை கட்டி ஏறினோம்.
ஒளவைப் பாட்டிக்கு “சுட்ட பழம் வேணுமா சுடாத பழம் வேணுமா” என்று முருகன் சிறுவன் வடிவில் காட்சி தந்த தலத்தைக் கண்டோம்.
பஸ் மெதுவாகப் போய் பழமுதிர்ச் சோலையின் முன்றலில் தரித்து நின்றது. இங்கும் ஐயப்பன் பக்தர்கள்
கூட்டமாக வந்து செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
பூமாலைக்கடை, தேநீர்ச் சாலை உள்ளிட்ட சிறு கடைகளே இருந்தன.
அழகர் மலை உச்சியில் பழமுதிர்ச்சோலை வெகு அமைதியான சூழலில் இருந்தது. குன்றத்துக் குமரன் தனக்கேற்ற இடத்தில் தான் தன் நிறைவான வீடாகக் குடி கொண்டிருக்கிறான்.
வழக்கமாக கட்டண வழிபாடு, பொது வழிபாடு என்று மற்றைய தமிழக ஆலயங்களில் இருப்பது போலல்லாது
நாங்கள் சென்ற நேரம் எல்லோருக்கும் தலைக்குப் பத்து ரூபா தரிசனக் கட்டணமாக அறவிட்டது கண்டு பிரபாகரனுக்குக் கடுப்பாகி விட்டது. “ஏழை ஜனங்க எல்லாம் எப்பிடி வர்ரதாம்” என்று முணுமுணுத்தார். எனக்கும் புரியவில்லை ஒரு வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயத்தில் அதுவும் கூட்டமும் அதிகமில்லாத சூழலில் வழிபாட்டுக்கு ஏன் கட்டணம் என்று மனதில் எழுந்தது கேள்வி.
இந்தச் சோலை மலை முருகன் கோயில் அளவில் அதிகம் பெரிதில்லாது ஈழத்துக் கோயில்கள் போன்ற அமைப்பிலேயே உள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலைக்கு நான் வருவதாகப் பயணத்திட்டத்தில் இருக்கவில்லை. ஆனால் முருகன் அழைத்து வந்து விட்டான் என்று மனதுக்குள் ஒரு நிறைவு.
பழமுதிரச்சோலையைக் கடந்து ராக்காயி கோயில் நோக்கி மலையுச்சி வரை நடக்கத் தொடங்கினோம் இருவரும்.
(தொடரும்)

2 comments:

Yarlpavanan said...

அருமையான தொகுப்பு
தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

தனிமரம் said...

மதுரை அழகர் தருசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அழகர் இடத்தில் நம் மூதாதையர்களின் சேட்டை அதிகம்)))