Social Icons

Pages

Friday, December 18, 2009

யானைச் சவாரியும் யானைகளின் சாகசமும்

அந்த ஒரு நாள் சுற்றுலாவுக்காகப் பதிந்த சுற்றுலாப்பயணிகளிடம் "யாரெல்லாம் யானைச் சவாரி செய்ய ஆசைப்படுகின்றீர்கள்? கையைத் தூக்குங்களேன்" என்றார் பஸ்ஸுக்குள் இருந்த எங்களைப் பார்த்து, சுற்றுலா முகவர். ஆனையாரின் முதுகில் சவாரி செய்வது என் வாழ் நாள் இலட்சியம், அது இவ்வளவு சீக்கிரம் ஈடேறுகிறதே என்ற மகிழ்ச்சியில் ஆசையோடு கையைத் தூக்கிக் கொண்டே பஸ்ஸில் சுற்றும் பார்க்கிறேன்.கூடவந்தவனெல்லாம் கப்சிப் என்று ஏவிஎம் சரவணன் மாதிரி கையைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். "சரி! உங்களை மட்டும் Elephant village இல் விட்டு விட்டு அரை மணி நேரத்தில் வந்து கூட்டிக் கொண்டு போகின்றோம்" என்று என்னிடம் சொல்லி விட்டு சொன்ன படியே என்னை Elephant village என்ற இடத்தில் இறக்கினார்கள்.

யானைச் சவாரி செய்ய அதிகமில்லை ஜென்டில்மன் வெறும் 500 தாய்லாந்து பாட் தான். கிட்டத்தட்ட 12 டொலர்கள். காசைக் கட்டி விட்டு நின்ற என்னை மரச்சட்டங்கள் பதித்த மாடி ஒன்றுக்கு ஏறுமாறு பணித்தார்கள். அங்கே நின்று தான் யானையாரின் முதுகில் உட்கார வேண்டும். அந்த மரச்சட்ட மாடியின் மேல் பிள்ளையார் சிலையும் உண்டியலும் இருந்தது. ஒரு ரவுண்ட் அடித்து விட்டு யானையார் நான் நின்ற மாடிக்கு வருகிறார். என்னை அவரின் மேல் இருக்குமாறு கையைக் காட்டுகிறார்கள். மெல்ல மெல்ல நிதானமாக காலைச் சவட்டி யானையாரின் முதுகின் மேல் இருந்த பெட்டியில் இருக்கிறேன். அதில் சீற்றும் , பெல்டும் இருந்தது. பெல்டைப் போடுகிறேன். முன்னே பாகன் வழிகாட்ட யானையார் மெதுவாக நடக்கிறார். அடர்ந்த புதர்ப்பத்தைகளின் நடுவே இருக்கும் குறுகலான பாதையால் மெல்ல நடக்கிறோம். யானையாரின் முதுகு வெயிலுக்கு வெடித்த தார் ரோட் மாதிரி இருக்கு. லேசான லத்தி வாடையும் நாசியைத் துளைக்கிறது. கொஞ்சம் பயம், நிறைய சந்தோஷமாக யானைச் சவாரி மெல்ல நடை பழகுகிறது.

மவனே! என் முதுகில் ஏறிச் சவாரி செய்கிறாயா? உன்னை அப்படியே.... என்ற கணக்காய் பாதையை விட்டு விலகி புதர்ப்பக்கமாகத் திரும்புகிறார் யானையார். தாய்லாந்து மொழியில் அவரைத் திட்டியவாறே கையை பாதைப்பக்கமாகக் காட்டுகிறான் பாகன். கூடவே என் கமராவை வாங்கிப் படம் எடுப்பதற்கும் தயாராகிறான். ஆனால் யானையார் செம கடுப்பில் இருக்கிறார் போல, பாகன் படம் எடுப்பதுக்கு யானையாரை நிற்குமாறு பணித்தாலும் அவர் கேட்ட பாடில்லை, முன்னே முன்னே நகர்ந்து வருகிறார். கையில் இருந்த முசத்தால் கண்ணுக்குள் குத்தி விடுவது போல பாகன் பாவனை காட்ட பயத்தோடு நிற்கிறார்.அந்த சமயம் பார்த்து பாகன் பின்னால் போய் கமராவை சரிபார்க்க ஆரம்பிக்க, யானையார் மீண்டும் நகர்கிறார். மீண்டும் பாகன் முசத்தால் வெருட்டுகிறான். யானையார் தாமதிக்கிறார். இப்படி இவர்கள் இரண்டு பேரின் கண்ணாமுச்சியில் நான் அகப்பட்டு நிற்கிறேன். பின்னர் பாகனும் என்னோடு யானைச் சவாரியில் பங்கு போட யானையார் முதுகில் ஏறி சதுப்பு நீரோடைப்பக்கம் யானையாரைத் திசை திருப்புகின்றான். அறுந்து போவான் சேத்துக்குள்ளாலை எல்லாம் நடக்க விடுகிறான் என்று யானையார் நொந்திருப்பார். ஒருவாறு அரைமணி நேர யானைச் சவாரி முடிந்து இருப்பிடம் வருகிறோம். களைப்பைப் போக தண்ணீர் தரப்படுகிறது. எனக்காகக் காத்திருக்கிறார் சுற்றுலா வழிகாட்டியும், கூடவந்த பஸ்ஸும். அடுத்து நாங்கள் சென்றது தான் முந்திய உலாத்தல் பதிவில் பார்த்த தாய்லாந்தின் மிதக்கும் சந்தை (Damnoen Saduak).

மிதக்கும் சந்தைச் சுற்றுலா முடிந்து அடுத்த உலாத்தலுக்கு முன்னர் இரண்டு பகுதிகளாகச் சுற்றுலாப் பயணிகள் பிரிக்கப்பட்டு இரு வேறு உலாத்தல்களுக்காகத் திசை திருப்பபடுகின்றனர். என்னுடன் கூட வந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே என் பஸ்ஸில் இருக்க புதிதாக சில தலைகள் வந்து சேர்கின்றன. அதில் ஒருத்தி தான் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த ஒரு இந்தியப் பெண்ணும், அவள் நண்பியான பிரென்சுக்காரியும் , இன்னும் இரண்டு ஜப்பானியப் பெண்களும். நாங்கள் முதலில் சென்றது வயிற்றுக்கு வஞ்சனை செய்யக்கூடாது என்ற நோக்கில் ஒரு மதிய உணவகத்துக்கு. அதை ஒழுங்கு செய்து பணம் கட்டியதும் சுற்றுலா முகவர் தான். அந்த ஒரு நாள் சுற்றுலாக் கட்டணத்தில் மதிய உணவும் அடக்கம். நல்ல மீன் கறியும், தாய்லாந்து கோழி மிளகாயில் சங்கமாய்க் கிடந்த கறியுடன் சோறும் வருகிறது. அந்தப் பிரெஞ்சுப் பெண்களும், ஜப்பானிய பெண்களும் என் மேசையில் தான் வந்து இருக்கிறார்கள். அவர்களாக ஒவ்வொருவரை அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த இந்தியப் பெண், தன் தாய் தந்தையின் சொந்த ஊர் பொச்சிரி, பொச்சிர் என்றாள். என்னடா இது இப்படி ஒரு ஊரா என்று மூளைக்கு வேலை கொடுத்துக் கண்டு பிடித்தேன். அட! பாண்டிச்சேரி ;)

அந்தப் பாண்டிச்சேரிக் குமரிக்கு வயசு 22, தன் கல்யாணத்துக்காக உடுப்பெடுக்க வந்திருக்கிறாளாம். பாரதிராஜா படங்களில் வருமே வெள்ளுடைத் தேவதை அந்த உடுப்புத்தானாம். என்னடா கொடுமை பிரான்சிலிருந்து இவ்வளவு மைல் கடந்து தாய்லாந்து வந்து சுற்றிப் பார்ப்பதென்றால் நியாயம், அதை விட்டு விட்டு உடுப்பெடுக்க ஏன் வந்திருக்கிறாள் என்று மனதுக்குள் குமைந்த என் நினைப்பை அடுத்த சில நாட்களில் மாற்றியது நானும் அந்த விஷயத்தில் கண்ட உண்மையை. அதைப் பிறகு சொல்கிறேன். சாப்பிட்டு விட்டு அந்த ப்ரென்சுக்காரியும் இந்திய யுவதியும் லாவகமாக சிகரட்டைப் பற்றுகிறார்கள். புகை வளைவில் கலாச்சாரம் வளையல்களாகப் போகிறது.

அடுத்து நாங்கள் உலாத்தப் போனது யானைகளின் சாகசம் காண. யானைகளின் சகாசக் காட்சி நிலையம் செல்கிறோம். உள் நுளைந்தால் எடுத்த எடுப்பிலேயே தேவர் பிலிம்ஸ் புலி ஒன்று உயிரோடு, அதற்குப் பக்கத்தில் நின்று படம் கூட எடுக்கலாமாம். வேண்டாமய்யா இந்த விளையாட்டு என்று நகர்கிறேன் அந்த இடத்தை விட்டு.

யானைச் சாகசம் நடக்கும் திடலுக்குள் போய் உட்கார்கிறோம். முதலில் கண்கட்டு வித்தை நடக்கிறது. பெட்டிக்குள் போனவள் பின் கதவால் திரும்புகிறாள், தொப்பிக்குள் போன முயல் பறவையாக வருகிறது. இதெல்லாம் ஓய்ந்த பின்னர் யானைகள் மெல்ல மெல்ல அணிவகுத்து வருகின்றன. ஒவ்வொரு யானையும் வந்து வேடிக்கை காட்டி விளையாடுகின்றன. பார்க்கும் போது சுதந்திர தின அணிவகுப்புப் போல இருக்கிறது.


அடுத்து தாய்லாந்து நாட்டின் போரியல் வரலாற்றில் யானைப் படையின் பங்களிப்பினை ஒருவர் ஒலிபெருக்கியில் சொல்லச் சொல்ல காட்சிகள் கண்முன்னே நடக்கின்றன.கோட்டைக் கொத்தளங்களைப் தீப்பந்தங்களை எறிந்து தீமுட்டுகிறார்கள். பெரும் போர் நிகழ்கின்றது. இரண்டு நாட்டு யானைப் படைகளும் வாட் போர் புரிகிறார்கள். வென்றவன் கட்சி யானைகளில் இருந்து வீரர்களை மண்ணில் முத்தமிட வைக்கின்றான்.

அடுத்ததாக யானைகளின் உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி. அந்தப் போட்டிக்காக அடுத்த கட்ட யானைகள் தம்மோடு ஒவ்வொரு நாட்டுப் பெயர்பொறித்த விரிப்புக்களோடு வருகின்றன. ஒவ்வொரு அணிக்கும் நடக்கிறது கால்பந்து மோதல். யானைகள் லாவகமாக கோல் போட்டு விளையாடுகின்றன. இறுதி வெற்றி உருகுவே யானைக்காம் ;)

எல்லாம் முடிந்து அடுத்த பக்கத்தில் முதலைகளின் சாகசமும் காண்பிக்கப்படுகிறது. சிறுவன் ஒருவன் முதலையின் வாய்க்குள் தலையைக் கவிழ்ப்பதுமாக நடக்கிறது விளையாட்டு. அடுத்த உலாத்தலுக்கு நேரமானதால் நகர்கின்றோம் அந்த இடத்தை விட்டு.