Social Icons

Pages

Sunday, November 30, 2008

Kbai Spean ஆயிரம் லிங்கங்கள் கொண்டதோர் மலை

Pre Rup ஆலயத்தைத் தரிசித்து விட்டு எம் பயணம் அடுத்து Phnom Kulen என்ற இடத்தில் உள்ள Kbeai Spean ஐ பார்க்கக் கிளம்புகின்றது. கி.பி 11 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் எழுப்பப்பட்ட ஆன்மீக ஸ்தலமே இதுவாகும். இந்தப் பகுதிக்கு வருவோர் அதிகாலையிலேயே கிளம்பி வருவது நல்லது. காரணம் இந்தப் பகுதியின் போக்குவரத்து மதியம் மூன்று மணியுடன் மூடப்பட்டு விடும். எனவே நாமும் ஏற்கனவே திட்டமிட்டவாறு எம் பயணம் அமைந்ததால் காலையிலேயே வந்து விட்டோம். இந்தப் பகுதிக்கு வருவோர் அடுத்த பதிவில் நான் தரப்போகும் Banteay Srey என்ற இடத்தையும் சேர்த்து அரை நாள் சுற்றுலாவாக அமைத்துக் கொள்ளலாம்.

சியாம் ரீப் நகர்ப்பகுதியில் இருந்து வெளியேயான நீண்டதொரு பயணத்தின் பின் தான் இந்த இடத்துக்கு வந்து சேர்கின்றோம். 48 கி.மீ பயணம் அது. இந்த இடத்துக்கு வந்தது காரை விட்டு வெளியே வந்ததுமே விதவிதமான சால்வைகளை வாங்குமாறு நச்சரிக்கும் சிறுவர் கூட்டம் வந்து மொய்க்கின்றது. கூடவே தண்ணீர் போத்தல்களையும், குவித்து வைத்த பனம் நுங்குகளையும் வைத்துக் கொண்டு கூவி அழைக்கின்றார்கள். அவர்களையும் கடந்து வாகனச் சாரதியை நிறுத்தி விட்டு நானும், வழிகாட்டியுமாக மலையில் ஏறத் தொடங்குகின்றோம். மிகவும் சிக்கலான நடை அது. எந்தவிதமான நவீன வசதிகளும் இல்லாது ஆங்காங்கே அண்மையில் தான் அமைக்கப்பட்ட மரச்சட்டங்களைப் பிடித்துக் கொண்டு ஏற வேண்டும். சில இடங்களில் அதுவும் இல்லை.
மிகவும் செங்குத்தாகப் பயணிக்கும் அந்தப் பயணம் அடர்ந்த காட்டின் நடுவே அமைகின்றது. எப்போது, யார் வருவார்கள் என்று எனக்குள் மெல்லமாக ஒரு பயமும் இருந்தது. ஆனால் எனது வழிகாட்டியோ சிரித்துக் கொண்டே பேச்சுக் கொடுத்தவாறு முன்னே பாய்ந்து பாய்ந்து நடக்கின்றார். நானோ கீழே விழுந்தும் எழும்பியும், ஆங்காங்கே ஆபத்பாந்தவராக இருந்த தொங்கிய விழுதுகளைப் பிடித்தவாறே போய்க் கொண்டிருக்கின்றேன். ஒரு சில இடங்களில் அந்தப் பாதை வழியே கொட்டிக் கிடக்கும் இலைச் சருகுகளை அள்ளிப் போட்டுத் துப்பரவு செய்யும் பணியாளர்கள் இருக்கின்றார்கள். ஒரு கட்டத்தில் அவர்களும் இல்லாத கொடும் அமைதியான பயணத்தில் நானும், வழிகாட்டியும் மட்டுமே இருப்பது போல இருக்கின்றது.


காட்டுப் பகுதியின் ஒரு தோற்றம்

"இந்தக் காடு முன்னர் பொல்பொட்டின் தீவிரவாதப் படைகள் ஒளிந்திருந்த பிரதேசங்களில் ஒன்று, நீண்ட யுத்தத்தின் பின்னர் பொல் பொட்டின் படைகள் சரணாகதி அடைந்த போது தான் இந்தப் பிரதேசத்தின் பெருமை பலருக்கும் தெரிய வந்தது, எனவே இந்தப் பண்டைய ஸ்தலத்தினைக் காட்டிக் கொடுத்த புண்ணியம் அவர்களுக்கும் உண்டு" என்றார் வழிகாட்டி. நான் அவ்வப்போது அவரிடம் பொல் பொட்டின் ஆட்சிக்காலத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு. அது போல் அப்போதும் ஒரு கேள்வியைக் கேட்டேன். "பொல் பொட்டின் அந்தக் கொடுங்கோல் ஆட்சிக்கு இன்றும் ஆதரவு தெரிவிப்போர் உண்டா? என்று கேட்டேன். "ஏன் இல்லை என்னோடு இருக்கும் சுற்றுலா வழிகாட்டிகளில் பலர் முன்னர் பொல்பொட்டின் அமைப்பில் இருந்தவர்கள், அவர்கள் இன்னும் அவனின் ஆட்சியை ஆதரித்துத் தான் பேசுவார்கள். பொல்பொட்டினால் தான் கம்போடியாவின் தனித்துவம் பேணப்பட்டது என்ற ரீதியில் அவர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்றார்.

குகைகளில் ஒன்று

குகை ஒன்றை வழிபாட்டு நிலையம் ஆக்கி விட்டார்கள்.

கையோடு கொண்டு போன தண்ணீர்ப்போத்தல்கள் இரண்டையும் மிகவும் பத்திரப்படுத்திப் பருகிவாறே போய்க்கொண்டிருக்கின்றோம். வழியெங்கும் குகைகள் தென்படுகின்றன. அவற்றில் பல முன்னர் பொல்பொட்டின் படைகளின் வாசஸ்தலமாக இருந்திருக்கின்றனவாம்.


கிட்டத்தட்ட 45 நிமிட மலை ஏற்றத்தின் பின்னர் மலை முகட்டில் வந்து சேர்கின்றோம். மெல்ல நடந்து பாறை இடுக்குகளை விலத்தி விட்டுப் பார்த்தால் " ஆகா ! என்ன அதிசயம், மலையில் மேற்பரப்பெங்கும் திட்டுத் திட்டாக சிவலிங்க விக்கிரகங்கள் இருக்கின்றன. அவற்றை அப்பால் ஓடும் நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் நீரோடை தொடர்ந்து கழுவித் துடைத்துக் கொண்டே அபிஷேகம் பண்ணுகின்றது. இங்கே உற்பத்தியாகும் சியாம் ரீப் நதிதான் பெருந்தொலைவில் இருக்கும் நகர்ப்புறத்துக்கு வந்து சேர்கின்றது.

மிகவும் ஆச்சரியமான கணங்களில் ஒன்று அது. ஆங்காங்கே சின்ன சின்னதாய் இருக்கும் சிவலிங்க உருவங்கள் மட்டுமன்றி விஷ்ணுவும், அவர் காலைப் பிடித்துக் கொண்டிருக்கும் மகாலஷ்மியும் பொருந்திய உருவமும் இருக்கின்றது. நான்கு தலைகள் கொண்ட பிரம்மா உருவம் மலையின் மேற்பரப்பில் கிடையாக

திட்டுத் திட்டாய் சிவலிங்கங்கள்
சிவலிங்கத்தின் லிங்க பாகம் மட்டும் கிடையாக


இவையெல்லாம் கடந்து போனால் நீண்டதொரு லிங்க உருவம் முழு அளவினதாக இருக்கின்றது. 45 நிமிடப் பயணம் உண்மையில் பயன் உள்ளது தான் என்று அப்போது நினைத்துக் கொண்டேன். ஆங்காங்கே தற்காலிகத் தூளிகள் அமைத்து தூங்கிக் கொண்டிருக்கும் வெள்ளையர்கள். எல்லாவற்றையும் பார்த்த பரம திருப்தியோடு மீண்டும் கீழ் இறங்கி வருகின்றோம்.



மலையடிவாரத்திலே நவீன வசதி செய்யப்பட்ட கழிப்பிடமும், குளியலறையும் இருக்கின்றது. அருகே நீண்டதொரு கொட்டகை அமைத்து சாப்பாட்டுக் கடையும் இருக்கின்றது. என்னோடு வந்த வழிகாட்டி சாப்பாட்டை ஓடர் செய்கிறார். உடனே சால்வை வியாபாரம் செய்யும் சிறுவர்கள் வந்து மொய்க்கின்றார்கள். நன்றாக ஆங்கிலம் பேசவும் செய்கின்றார்கள். "நீங்கள் பள்ளிக்கு எல்லாம் செல்வதில்லையா?" என்று கேட்கின்றேன். "நாங்கள்ளாம் மாலைப் பள்ளிக்குத் தான் போவோம்" என்கிறது ஒரு சிறுமி. இன்னொரு சிறுமி மிகவும் துறுதுறுப்பானவள். "நீங்கள் இந்த சால்வைகளை வாங்குகிறீர்களா, ஒரு டாலர் தான், மிகவும் மலிவு, தரமும் சிறப்பு" என்று தன் தொழிலை ஆரம்பிக்கின்றாள். நானோ "எனக்கு இவை உபயோகப்படாதே" என்று சொல்லவும் விடாக்கண்டனாக அவள் ஒற்றைக் காலில் நின்று அடம்பிடிக்கின்றாள். "சரி,அப்படியென்றால் ஒன்று செய்வோம், எனக்கு இந்த சால்வைகள் வேண்டாம், ஆளுக்கு ஒரு டாலர் தருகின்றேன், உங்களைப் போட்டோ எடுக்கட்டுமா" என்று சொல்லவும், அவளும் மகிழ்ச்சியாகத் தலையாட்டி விட்டு போஸ் கொடுக்கத் தயாராக நிற்கிறாள் (படத்தில் இடமிருந்து மூன்றாவது ஆள் தான் அந்தக் குறும்புச் சிறுமி). படம் எடுத்தாயிற்று, காசைக் கொடுக்கின்றேன். "எங்களுக்கு இன்னொரும் ஒரு டாலர் வீதம் கொடுத்து விட்டு, இன்னொரு முறை படம் எடுக்கலாமே" என்று அவள் மீண்டும் ஆரம்பிக்கிறாள். "அதற்கு நானோ, அடுத்த முறை வரும்போது பார்க்கலாம்" என்கிறேன். அவளோ கம்போடிய மொழியில் ஏதோ முணுமுணுக்க, நான் வழிகாட்டியைக் கேட்கின்றேன் என்ன சொல்கிறாள் இவள் என்று. அதற்கு அவர் "நீங்கள் மீண்டும் வருவீர்கள் என்று எனக்கெப்படித் தெரியும்" என்கிறாள். கோக் பானத்தின் நுரை வெளித்தள்ளச் சிரிக்கின்றேன்.