
நம்ம கண்ணபிரான் ரவிசங்கர் (KRS) தன் மாதவிப் பந்தலில் பகிரங்கக் கேள்விக் கணைகளை என் மீது பாய்ச்சிருந்தார். எனவே கம்போடிய உலாத்தலுக்கு ஒரு சின்ன இடைவெளி விட்டு, இந்தப் பதிவு அவருக்கான என் பதிலும் இன்னொரு நண்பருக்கான என் கேள்வியுமாக இருக்கின்றது.
சரி முதலில் கே ஆர் எஸ் கேட்ட கேள்விகளுக்கு என் பதில்களைச் சொல்கிறேன்.
கேள்வியின் நாயகனே! என் கேள்விக்கு பதில் ஏதைய்யா?
1. உங்கள் FM றேடியோ நிகழ்ச்சி அனுபவங்களில், நீங்கள் எதிர்கொண்ட இனிமையான, மெல்லிய, ரொமான்டிக்கான கட்டம் எது?
இந்த ஆண்டோடு என் வானொலி வாழ்க்கை பத்தாண்டுகளைத் தொடுகிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு கேள்வியை முதன் முதலில் சந்திக்கிறேன்.
முதலில் எப்படி வானொலி உலகுக்கு வந்தேன் என்பதைச் சுருக்கமாகச் சொல்லி விட்டு பதிலுக்கு வருகின்றேன். அப்போது மெல்பன் (அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரம்)1998 வாக்கில் நான் பல்கலைக் கழகத்தின் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது தான் அங்குள்ள ஒரு மணி நேர 3ZZZ தமிழோசை வானொலியில் அறிவிப்பாளராக இணைத்துக் கொண்டேன். பின்னர் 2000 ஆண்டிலிருந்து ஒரு வானொலி நிலையத்திலும், கடந்த 2007 யூன் 1 ஆம் நாளில் இருந்து அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் சேவை அடிப்படையில் பணி புரிகின்றேன். அதாவது என் முழு நேரத்தொழில் ஒரு நிறுவனத்தின் திட்ட முகாமைத்துவமும், நிதிப் பிரிவும் ஆகும்.
வானொலிப் பணி என்பது வாரத்தில் இரு நாட்களின் மாலை நேரத்தில் 5 மணி நேரம் ஊதியம் பெறாத சேவையாகக் கொடுப்பது. ஆத்ம திருப்தி மட்டுமே இங்கே கிடைக்கும்.
சரி உங்க கேள்விக்கு என் பதிலைப் பார்போம். புலம்பெயர்ந்த சூழலில் ஆஹா எப் எம் ரேஞ்சுக்கு வானொலியில் கலகலக்க முடியாது. நம் தாயகத்துச் சூழ்நிலையைப் பொறுத்தே வானொலிப் படைப்பும் அமையும். நிறையத் தயார்படுத்தலோடு போனால் திடுதிப்பென்று அந்த நிகழ்ச்சியே செய்யமுடியாது வேறு நிகழ்ச்சி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
சந்தோஷமான தருணங்களுக்குச் சரிசமமாக எதிர்ப்புக்களும், வேதனைகளும் கூடக் கிடைத்திருக்கின்றது. சுனாமி நடந்த நாள் இரவும், தொடர்ந்த நாட்களும் அழுதுகொண்டே தம் உறவினர்களைத் தேடி வானொலியில் அழைத்த நேயர்களையும் மறக்கமுடியாது.
மலரக்கா போன்ற மறக்கமுடியாத நேயர்கள் இன்னும் என்னோடு கூடவே வருகின்றார்கள்.
ஒரு சம்பவம் சொல்கிறேன். ஒருமுறை ம.தி.மு.க தலைவர் வை.கோவை நேரடியாக வானொலியில் பேட்டி கண்டபோது ஒரு ஈழத்தமிழ் அறிவிப்பாளரிடமிருந்து சாமரம் வீசும் கேள்விகளை எதிர்பார்த்தார் போலும். என் கேள்விகளில் அவர் அந்த நேரத்தில் எடுத்த தி.மு.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க தாவிய நிலைப்பாடுகளை வைத்துக் கேள்வி ஒன்று கேட்டேன். இன்னும் சில கேள்விகளை அவர் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் தி.மு.க ஏஜெண்டாக இருந்து கொண்டு கேள்வி கேட்கிறீர்கள் என்று உச்சஸ்தாயியில் போட்டாரே ஒரு போடு. அந்தச் சம்பவம் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னும் விரிவாகச் சொல்கிறேன்.
சந்தோஷமான கணங்கள் என்று கேட்டால்
தொலைபேசியில் அழைத்த அதே நாளில் எந்தவித பிகு, பந்தா இல்லாமல் வானொலிப் பேட்டி தந்த எழுத்தாளர் சுஜாதாவுடன் பேசிய அந்த நிமிடங்கள் (அவரை பேட்டியெடுக்கும் போது அடிக்கடி இது நிஜமா என்று என்னையே மனதுக்குள் கேட்டுக் கொண்டிருந்தேன்)
இயக்குனர் பாரதிராஜாவுடன் கொஞ்சம் இன்னும் ஆழமாகக் கேள்வி கேட்டு அவரது பழைய நினைவுகளை மீட்க வைத்தது (வேதம் புதிதில் நிழல்கள் ரவியுடன் சண்டை போட்டு பின்னர் பாரதிராஜாவே டப்பிங் பேசியதை எல்லாம் சொல்லியிருந்தார்) இப்படி நிறைய, நிறைய, நிறையவே சொல்லலாம்.
ஓ நீங்க ரொமாண்டிக் கணங்களையா கேட்டீங்க ;-)
2001 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து வருஷமாக ஒரு மணி நேரப் படைப்பாக "காதலர் கீதங்கள்" என்ற நிகழ்ச்சியைக் கொடுத்திருந்தேன். வெறும் பாடல்களை மட்டுமே போடாமல் புதுசு புதுசா ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கொடுத்துக் கொண்டிருந்தேன். பாடல் தெரிவிலும் ஒரு குறிப்பிட்ட காலத்துப் பாடல்கள், அல்லது இசையமைப்பாளரைத் தேர்வு செய்து கொடுத்ததால் நிகழ்ச்சியில் வரும் பாடல்கள் சீராக இருக்கக் கூடியதாக இருந்தது. அவ்வப்போது குறித்த சில கவிஞர்களின் கவிதைத் தொகுதிகளில் இருந்து இரண்டு அடியைக் கொடுத்து அதற்கேற்ற பாடல் என்றெல்லாம் உருகி உருகிக் கொடுத்தேன். அப்போது தான் நீங்க கேட்ட மெல்லிய, ரொமாண்டிக் கட்டமொன்றை எதிர்கொண்டேன். ஆனால் பாதுகாப்பாக விலகிக் கொண்டேன். ஆனால் இந்தக் காதலர் கீதங்கள் தொகுப்பு இன்னொரு இடத்தில் மெல்ல ஒரு விதையை விதைத்.... மெல்ல இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன் ;-)

2. இறைவன் உங்கள் முன் தோன்றி, உங்களை, இலங்கை அரசுக்கு சர்வ சக்தி படைத்த "ஒரு நாள் அதிபர்" ஆக்குகிறார் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
உங்கள் முதல் ஆக்ஷன் (செயல்பாடு) என்னவாக இருக்கும்? (இனிய கற்பனை)
நான் ஒரு நாள் அதிபரானால் முதல்வன் அர்ஜீன் பாணியில் ஏகத்துக்கும் அதிகாரம் பண்ணமாட்டேன். அப்புறம் பாராளுமன்றம் எதுக்கு இருக்கு? எந்தப் பெரிய தீர்மானம் ஆனாலும் பெரும்பான்மை வாக்கு பாராளுமன்றத்தில் கிடைச்சாகணுமே?
எனவே முதன் முதலில் நான் செய்ய விரும்புவது இலங்கை அரசினால் சந்தேகம் என்ற ஒரே பார்வையில் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டு வருஷக்கணக்கில் (சிலர் பத்து வருஷங்களுக்கும் மேல்) இருக்கும் அப்பாவித் தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அனைவரையும் உடனே விடுதலையாக்கி அவர்களைப் பாதுகாப்பாக அவர்களின் குடும்பத்தோடு சேர்க்குமாறு கட்டளை போடுவேன். இதுதான் என்னால் முதலில் செய்யக்கூடியது.
3. பதிவுலகில் சர்ச்சையில் சிக்கிக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும்? சிக்காமல் இருக்க என்னெல்லாம் செய்ய வேண்டும்?
(அப்பாடா, சிக்காத நீங்க, இப்போ சிக்கிட்டீங்க :-)
இந்தக் கேள்வி, வேலு நாயக்கரைப் பார்த்து நீங்க நல்லவரா? கெட்டவரா? என்று கேட்பது போலிருக்கு. நானும் சர்ச்சையில் அகப்பட்டிருக்கிறேன், சர்ச்சைகளில் இருந்தும் ஒதுங்கியும் இருக்கிறேன்.
எந்தெந்தச் சர்ச்சைகளில் அகப்பட்டுக் கொண்டேன் என்பதை உதாரணத்துக்கு ஒரு சில என் பதிவுகள் மூலமே காட்டுகிறேன், நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
சிதம்பரம் கோயிலைப் பார்க்க வேண்டும் என்ற தீரா ஆசையில் 2006 ஆம் ஆண்டு முதன் முதலாக சிதம்பரம் கோயில் பார்க்கப் போன கதை சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு அஞ்சலியாக நான் அவரோடு கண்ட ஒலிப்பேட்டி
கொஞ்சம் இருங்க, எங்கே அந்தப் பதிவுகளில் சர்ச்சைக்குரிய பின்னூட்டங்களைக் காணலியே என்று கேட்கிறீர்களா? அவற்றையெல்லாம் போடாமலேயே கடாசி விட்டேன். என்னைப் பொறுத்தவரை நான் சொல்ல வந்த கருத்தைப் புரியாமலோ,பதிவை வாசிக்காமலோ, அல்லது பதிவின் நோக்கத்தைத் தெரியாமலோ வந்து சகதி இறைப்பவர்களை அனுமதிக்க மாட்டேன், அது என் நேரத்தையும் வீணடிக்கும். சுஜாதாவின் அந்தப் பதிவைக் கொடுத்ததற்காக இன்னும் கூட ஸ்பாம் மெயில்கள், வைரஸ் லிங்க் பொருத்திய பின்னூட்டங்களை வெகுமதிகளாகப் பெற்றுக் குப்பைத் தொட்டியில் போட்டு வருகின்றேன்.
என் சோகம் என்னோடு தான் என்று தான் பாடவேணும் போலிருக்கு ;-)
இவை தவிர பதிவராக இருக்கும் வகையில் நான் எதிர்கொள்ளும் இன்னொரு சர்ச்சை. எதிலும் பிழை கண்டு பிடிக்கும் ஒரு கூட்டம். எத்தனை முறை நான் பதிவு எழுதுகிறேன், எத்தனை முறை பின்னூட்டம் போடுகிறேன் என்பதைக் கண்காணிக்க ஒரு கூட்டம் இருக்கு. ஊரில் பிரச்சனை நடக்கும் போது ஏன் ஒரே பாட்டு மட்டும் போடுறார், என்று பேசும் ஒரு கூட்டமும் இருக்கு.இதற்கு சயந்தன் பாணியில் என் பதில், பாட்டுக் கேட்பதால் தாயக உணர்வு அற்றுவிடும் என்றால் அது இருந்தென்ன இல்லாது விட்டால் என்ன?
( நான் பாட்டு மட்டுமா போட்டுக் கொண்டிருக்கிறேன்?)
எனவே சர்ச்சைகளில் சிக்க மேலே உள்ள உதாரணங்களைப் பயன்படுத்தலாம்.
விழாமல் இருப்பதற்கு ஒரே வழி =>
பதிவுலகை விட்டு விலக வேண்டியது தான் ;-)
4. இசையில் நீங்கள் அனைத்து வகை இசையும் விரும்பிக் கேட்பீர்கள்!-அறிவேன்!
தமிழகத்தில் தமிழிசை இயக்கம் சிறிது காலமாகத் தான் நன்கு மணம் வீசி வருகிறது! ஆனால் அதே சமயத்தில் பிறமொழி இசை ஒவ்வாமையும் நம்மிடையே சிறிது இருக்கத் தான் செய்கிறது!
கர்நாடக இசை என்றால் சில குறிப்பிட்ட வகுப்பினர், மற்ற இசை என்றால் சில குறிப்பிட்ட வகுப்பினர் என்று ரசிகர் வட்டம் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்டு விடுகிறது!
விபுலானந்த அடிகளைக் கொடுத்த ஈழத்திலும், இதே நிலை தானா?
அப்போது எப்படி? இப்போது எப்படி?
ஈழத்து இசை ரசிகர்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆரம்ப வகுப்பு முதலே பண்ணிசை, மற்றும் கர்நாடக இசை வகுப்புக்கள், நடனம் ஆகியவை பள்ளிகளில் ஒரு பாடமாக இருக்கின்றது. குரல் வளமோ நாட்டமோ இல்லாதவர்களுக்குத் தான் சித்திரம் பழகுதல் வகுப்பாம் ;-) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மணி ஐயர் போன்ற ஜாம்பவான்கள் தமிழகத்தில் இருந்து வந்து பல ஆண்டு காலம் வானொலி வழி கர்நாடக இசையைக் கொடுத்து வந்திருக்கிறார்கள். அதே போல் யாழ்ப்பாணத்தில் "இராமநாதன் நுண்கலைப் பீடம்" என்ற ஒரு பல்கலைக்கழகப் பிரிவுக்கு முன்பெல்லாம் மகாராஜபுரம் சந்தானம், லஷ்மி நாராயணா (எல்.வைத்யநாதனின் தந்தை) போன்ற இசைவல்லுனர்கள் வந்து பல வருடங்கள் அங்கேயே தங்கி ஈழத்தின் இசை மரபு தழைத்தோங்க உதவியிருக்கிறார்கள்.
நான் தாயகத்தில் இருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் இசைநிகழ்ச்சிக்கான அரங்கைத் தான் கொண்டு நடாத்திய இளங்கலைஞர் மன்றத்தில் அமைத்து துணை புரிந்தார் சங்கீத மேதை திரு பொன் சுந்தரலிங்கம் அவர்கள். திரு. திலக நாயகம்போல் போன்ற சங்கீதமேதைகள் மதம் பேதம் கடந்தும் கர்நாடக இசை, தமிழிசை அங்கிருப்பதைக் காட்டுகின்றது. தென் தமிழீழத்திலும் விபுலாலந்தா இசை நடனக் கல்லூரி அங்குள்ள மக்களுக்கு இதே பாங்கில் இந்த இசைமரபு பல மட்டத்து மக்களுக்கும் போய்ச் சேர உதவுகின்றது. புலம்பெயர் சூழலிலும் நம்மவரின் குடும்பங்களில் சராசரியாக எல்லாப் பெற்றோருமே தம் பிள்ளை நடனத்திலோ அல்லது இசையிலோ சிறப்பாக வளர வேண்டும் என்ற முனைப்பைக் காட்டுகின்றார்கள்.
இவ்வளவு முன்னுரையும் கொடுத்து விட்டேன். ஆனால் என் பார்வையில் உங்கள் கேள்விக்கான பதில் என்னவென்றால், நம்மவரிடையே இப்படியான வகுப்பு ரீதியான பாகுபாடு இசைக்கோ அல்லது ரசிகர் வட்டத்துக்கோ நான் அறிந்தவரை, என் அனுபவத்தில் அவ்வளவாகக் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் அனேக இசைக்கச்சேரிகள் தமிழிசை இல்லாது நிறைவுறுவதேயில்லை. ஈழத்தில் உள்ள கர்நாடக இசை வித்துவான்களும் தம் எல்லைகளை விசாலமாக்கி குறிப்பிட்ட ஒரு வகுப்புக்கே தம் இசை போய்ச் சேரவேண்டும் என்ற நினைப்பில்லாமல் செயற்படுவதையும் சொல்லி வைக்க வேண்டும். எனவே அங்குள்ள வித்துவான்களின் செயற்பாடுகள் தான் இப்படியான பாகுபாட்டைப் பெருமளவு களைகின்றது.
இன்றைய புலம்பெயர் சூழலில் பாடகி நித்யசிறீக்கு பெரும் அபிமானம் ஏற்படக் காரணமே அவர் இங்கு கொடுக்கும் இசை நிகழ்ச்சிகளில் தமிழிசை அதாவது பாரதி, பாரதிதாசன் பாடல்களைப் பாடுவதே காரணம்.
இதே நேரம் புலம்பெயர் சூழலில் நிலவும் இன்னொரு வேதனையான விஷயத்தையும் இங்கே சொல்லி வைக்கின்றேன், தம் பிள்ளை நடனம் கற்ற பின்னர் (சில இடங்களில் அரைகுறை ஞானம்) நிறையச் செலவழித்து ஒரு பெரும் கல்யாண வீடு போல் நடன அரங்கேற்றம் காட்டினால் போதும் என்ற மனோநிலையில் தான் 90 இற்கும் அதிகமான வீதமான பெற்றோர் இருக்கின்றார்கள். நடனத்தோடு ஓப்பிடும் போது சங்கீதம் கற்கும் எண்ணிக்கை அருகி வருகின்றது.
இவை தான் கே.ஆர்.எஸ் இற்கு என் பதில்கள் ;-) கொடுத்ததை வச்சுத் திருப்தி அடையுங்கப்பா.
சரி இனி நான் கேள்வி கேட்கத் தேர்ந்தெடுத்திருக்கும் பதிவர், உடன்பிறவாச் சகோதரன் ஆயில்யன்.
கேள்வி 1. பதிவுலகிற்கு வருவதற்கு முன்னர், வந்த பின்னர் உங்களின் இணையச் சூழல்/வாழ்க்கை எப்படியிருக்கின்றது?
கேள்வி 2. தமிழகத்துப் பிரதேச நடையில் வரும் பதிவுகள் மிகக் குறைவு என்று நான் கணிக்கின்றேன், இந்த நிலையில் ஈழத்து மொழி வழக்கில் வரும் பதிவுகளை நீங்கள் வாசித்துப் புரியக்கூடியதாக இருக்கின்றதா அல்லது தாவு தீருகின்றதா?
கேள்வி 3. நீங்கள் மிகுந்த கடவுள் பக்தி உள்ளவர், பதிவுகளிலும் கட்டுக்கோப்பான சிந்தனைகளை அவ்வப்போது பதிவுகளாகக் கொடுப்பவர், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முற்போக்காக எதையாவது செய்ய் வேண்டும் என்றால் எதைச் செய்வீர்கள்?
கேள்வி 4. உங்க சொந்த ஊரில் பஞ்சாயத்து தலைவர், அல்லது ஐ.நா சபைச் செயலாளர் இதில் ஏதாவது ஒரு பதவியை எடுக்கலாம் என்றால் எதை எடுப்பீர்கள்? அந்தப் பதவியை வச்சு என்ன செய்வீர்கள்?
கே.ஆர்.எஸ் வேண்டுகோளுக்கிணங்க ஒரு போனஸ் ஆப்பு வைக்கிறேன்
நடிகை ஸ்ரேயாவுடன் நாயகனாக நடிக்க ஒரு வாய்ப்பு அல்லது பாடகி ஸ்ரேயாவுடன் டூயட் பாட ஒரு வாய்ப்பு வந்தால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள் (இரண்டில் ஒன்றைத் தான் செய்ய முடியும்னு கட்டளை வேற ;-))