Social Icons

Pages

Wednesday, March 17, 2010

சிங்கையில் இருந்து சூடா ஒரு உப்புமா பார்சல்

14 March 2010
ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் காலடி வைத்த நேரம் சரியில்லை போல, அன்று தொடங்கிய ஓட்டம் இன்னும் நிற்கவில்லை

தம்பி டொன்லீ ஹோட்டலுக்கு வந்து அழைத்துக் கொண்டு செந்தோசா தீவுக்குக் கொண்டு போனார்.

செந்தோசாவில் கோவி கண்ணன், குருஜி ஜெகதீசன், பித்தன் ராம், ஸ்வாமி ஓம்கார், ஆ.ஞானசேகரன் ஆகியோர் சுற்றி கொண்டிருந்தார்கள்.

கடற்கரை ஓரமாக ஒதுங்கி.... அட நில்லுங்கப்பா, ஒரு மினி பதிவர் சந்திப்பை நடத்தினோம்.
பேசப்பட்ட தலைப்புக்கள்: கேபிள் சங்கரின் புதுப்படம், சினேகா, கையைப்பிடி காலைப்பிடி ரஞ்சிதா, சமாதி நித்தியானந்தா (எங்கை போனாலும் வந்துடுறார்பா), வலையுலகம், டி.ஆர்.பி, தமிழ்மணப்புறக்கணிப்பும் மீள் வருகையும், விண்ணைத் தாண்டி வருவாயா, சோளம், சிப்ஸ், கோக், தண்ணீர் போத்தல், மாமா கேபிள் இதெல்லாம் பேசினோம்

எல்லோருமாக கடற்கரை மணலில் உட்கார்ந்து மினி சந்திப்பை முடித்து, லேசர் ஷோ பார்க்கப் போனோம். லேசர் ஷோ அட்டகாசமாக‌ இருக்கிறது.

பித்தன் ராமுடன் நல்லுணர்வு உடன்படிக்கை, பின்னே கேபிள்

குடைக்கடை சென்றோம், குழலி, முகவை ராம், ஜோசப் பால்ராஜ் இன்ன பிற சீனியர்களுடன் விட்ட இடத்தில் இருந்து சந்திப்பு உரையாடல்கள்
குடைக்கடையில் இட்லி, சாம்பார், கொத்துப் பரோட்டா மிச்சம் XXXXXXXXXXXXசொல்ல முடியாது தணிக்கை ;‍)

இடமிருந்து வலம்: டொன் லீ,ஜெகதீசன், கோவி அண்ணன், நான், கேபிள் சங்கர், பித்தன் ராம், ஓம்கார் சுவாமிகள்

15 March 2010

படுக்கைக்குப் போன நேரம் 12.30 விழித்த நேரம் அதிகாலை 4, சிங்கை நேரத்தில் தூங்கி அவுசி நேரத்தில் விழிப்பு :(

சிங்கைக்குப் பல தடவை வந்தாலும் ஒரு அலுவலகத்தில் உட்கார்ந்து வேலைபார்ப்பது இதுதான் முதல் தடவை. வேடிக்கை பார்க்க வந்த இடத்தில் சின்னப்பிள்ளையை இப்படியா பயமுறுத்துறது. லிப்ட் இயங்கும் நேரம் எல்லாம் பொறித்திருக்கிறார்கள் #புதுமை

வேலை முடிந்து 8.30 வாக்கில் முஸ்தபா கடைவீதிப்பக்கம் நடை, பாக்யதேவதா, ஈ பட்டணத்தில் பூதம், Happy Days, டிவிடிக்கள் வாங்கினேன். அலுவலகத்தில் இருந்த மலையாளப்பெண்ணிடம் இதைப் பற்றிப் பீற்றினால் "நாங்கல்லாம் டிவிடி வாங்கிப் பார்க்கமாட்டோம்ல" என்று ஒரு குண்டு போட்டாள்.

Banana Leaf கடையில் மீன் பிரியாணியாம், புதுசா இருக்கே என்று ஓடர் கொடுத்து வாயில் வைத்தால் உப்புமில்லை மண்ணுமில்லை, #உப்பில்லா பண்டம்

விண்ணைத் தாண்டி வருவாயா இன்னும் சிங்கை தியேட்டர்களில், என்னை மாதிரி யுத்துகள் நிறைய இங்கை இருக்கினம் போல‌

ஹோட்டலுக்கு வந்து நெட் பாவிப்போம் என்று கேட்டால் மணிக்கு 40 டொலராம், போடாங்


அட சண்டை இல்லைப்பா, நம்புங்கப்பா

16 Mar 2010

முதல் நாள் பாடமாக்கிச் சொன்ன அலுவலக முகவரி அடுத்த நாள் தானாகவே வந்து விழுந்தது. டாக்சிக்காரனிடம் "டெக்னோ பார்க் சாய் சீ ரோட்" என்றேன். #7.45 AM

கோமள விலாசில் சூடா ஒரு கப் தேனீரும், வடையும். எப்படா சாப்பிட்டு முடிப்பான் என்று காத்திருந்த‌ எடுபிடி சீனன் வந்து தட்டைத் தூக்கிக் கொண்டு பறக்கிறான்.

டொன் லீ இன் சொல் வழி கேளாமல் காந்தி உணவகம் சென்று மட்டனையும் ஈரலையும் பதம் பார்ப்போம் என்றால் ஒரு கவளம் வைத்தாலே குமட்டியது #பழுதானது.

இரவு 9 மணிக்கு மேல் டாக்சி பிடிப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. காலை 7 மணி தொடங்கி இப்ப வரைக்கும் வேலை செய்றோம்லா வெரி டயர்ட்லா என்றான் டாக்சிக்காரன் #10.15 PM

வசந்தம் டிவியில் " நிஜங்கள்" என்ற அருமையான தொலைக்காட்சி நாடகம் போகிறது. இரண்டு நாட்கள் தூக்கம் வராமல் தவித்த எனக்கு இந்த நாடகம் சுகமான ஒரு தூக்கத்தை வருவித்ததற்கு நன்றி.

பி.கு: சின்னப்பாண்டியின் தீராத ஆசை ஒன்று நிறைவேறாமல் போனது. அது, நிஜமா நல்லவன் ஐபோனுடன் இருக்கும் போஸ் ஐ படம் எடுத்து அனுப்பச் சொன்னார். நிஜம்ஸ் பதிவர் சந்திப்புக்களை வெளி நடப்புச் செய்ததால் அது நிறைவேறாமல் போனது.

"டொன் லீ! இப்படி ஆளாளுக்கு த்ரிஷாவை ஜொள்ளு விடுறாங்களே என்ன பண்ணலாம்"


படங்கள் நன்றி: நண்பர் ஆ.ஞானசேகரன்

Monday, March 08, 2010

அயோத்தியாவில் கண்ட Wat Phu Khao Thong

இந்த தொடர் எந்த முகூர்த்தத்தில் ஆரம்பித்தேனோ தெரியவில்லை. அடிக்கடி தொடரைத் தொடரத் தாமதப்பட்டுக் கொண்டே வருகின்றது. இனியாவது இடைவெளி கொடுக்காமல் தொடர எண்ணியிருக்கிறேன். முந்திய பதிவுகளில் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் பகுதியில் அமைந்த சில சுற்றுலாத்தலங்களைப் பகிர்ந்து கொண்டேன். விடுபட்டவை இன்னும் இருக்கின்றன. ஆனால் அடுத்து பாங்கொக் நகரில் இருந்து விலகி, அயோத்யா என்ற பிராந்தியத்தில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் சிலவற்றைப் பகிரவிருக்கின்றேன்.

தாய்லாந்து நாட்டுக்குச் சுற்றுலா வந்தவர்கள் அயோத்தியாபுரி என்ற பிராந்தியத்துக்கு வராமல் விட்டால் முழுமை பெறாது என்பது வெள்ளிடைமலை. அயோத்தியா என்ற பிராந்தியம் தொன்மை மிகு தாய்லாந்து இராச்சியமாக விளங்கி வந்ததோடு, செழுமையான வரலாற்றுப் பின்னணியும் கொண்டிருக்கின்றது. கி.பி 1351 ஆம் ஆண்டிலிருந்து 1767 ஆண்டுவரையான காலப்பகுதியில் தாய்லாந்து தேசத்தின் தலைப்பட்டினமாக இந்தப் பிரதேசம் இருந்திருக்கின்றது. முதலாம் Ramathibodi இன் ஆட்சியில் ஆரம்பித்து ஐந்தாம் Boromaracha வின் காலப்பகுதி வரை இப்பிரதேசம் இராசதானியாக நிலவி வந்திருக்கின்றது. இந்த அயோத்தியா என்ற தலைப்பட்டினத்தின் எவ்வளவு தூரம் நிலையானதொரு செழுமை மிகு ஆட்சி இருந்திருக்கின்றது என்பதற்குத் தொடர்ந்து வரும் பதிவுகளில் நான் தரப்போகும் வரலாற்று விழுமியங்களே சான்று பகிர இருக்கின்றன. அந்த வகையில் இந்தப் பதிவினூடா நான் தரப்போவது Wat Phu Khao Thong என்ற ஆலயம் குறித்து.

அயோத்தியா நகருக்கான ஒரு முழு நாட் சுற்றுலாவுக்காக தனியார் சுற்றுலா முகவர் நிலையத்தில் ஏற்கனவே பதிந்து வைத்திருந்தேன். அவர்களின் ஏற்பாட்டில் குறித்த நாளன்று என் தங்குமிடம் வந்து வாகனம் என்னைக் கவர்ந்து அயோத்தியா நோக்கிப் படையெடுத்தது. கூடவே மற்றைய விடுதிகளில் தங்கியோரும் உள்ளடங்கலாக. அயோத்தியாவிற்கு வந்ததும் தன் பணியைச் செய்தோம் என்று வாகனச் சாரதியும், கூட வந்த உதவியாளரும் ஒதுங்கிக் கொள்ள, அந்த நகரில் சுற்றுலா வழிகாட்டியாக இருக்கும் ஒரு முதியவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இனித் தொடர்ந்து வரும் அயோத்தியா நகரச் சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் சென்று அவை பற்றிய வரலாற்றுப் பின்னணியைத் தருவதாக அவர் கூறிக் கொண்டார்.

தாய்லாந்தில் இருக்கும் புத்த ஆலயங்கள் பொதுவில் கம்போடிய , பர்மிய, சிறீலங்கா நாடுகளின் பாதிப்பில் அமைந்த விதமாக பேதம் காட்டக் கூடிய கட்டிட அமைப்பில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் தொடர்ந்து Wat Phu Khao Thong பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

Wat Phu Khao Thong, இந்த ஆலயம் அயோத்தியாவின் மிக முக்கியமானதொரு ஆலயமாகக் கருதப்படுகின்றது. வரலாற்றுக் குறிப்புக்களின் படி இந்த ஆலயம் Ramesuan (முதலாம் Ramathibodi) இனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. தாய்லாந்து நாட்டின் இராசதானியாக விளங்கிய அயோத்தியா நகரினை பர்மிய அரசன் Bhueng Noreng 1569 ஆம் ஆண்டில் கைப்பற்றுகின்றான். இந்த வெற்றியின் முகமாக பெளத்த பகோடா ஒன்றினை ஆலயச்சூழலில் நிறுவினான். 80 மீட்டர் (260 அடி) உயரமான Chedi Wat Phu Khao Thong, அல்லது Golden Mount என்று இன்றும் அழைக்கப்படுகின்ற இந்த தூபி அயோத்தியா நகரின் மிக உயரமான பகோடாக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

"அரைமணி நேரத்தில் மீண்டும் எமது இடத்துக்குத் திரும்பிவிடுங்கள், இப்போது நீங்கள் கலைந்து செல்லலாம்" என்று வழிகாட்டிக் கிழவர் சொன்னதுதான் தாமதம் ஆளாளுக்குத் திக்குத் திக்காகச் செல்கின்றோம்.
ஆலயச் சூழலில் இறந்தவர்களுக்கான சமாதிகள் சிலவும் தென்படுகின்றன. ஆங்காங்கே இடிபாடான சிறிதும் பெரிதுமான பகோடாக்கள், சிரிக்கும் புத்தர் என்று நிறைந்திருக்கின்றன.
இன்றும் தொடர்ந்து பராமரிப்போடு வழிபாட்டிடமாகக் கொள்ளப்படுவதோடு விதவிதமான புத்தர் சிலைகளோடு பிள்ளையார் சிலைகளும் தென்படுகின்றன.
கோயிலுக்குள் குடைந்தவாரே குகை போன்ற அமைப்பில் ஒரு சிறு துவாரம் வழி நடந்தால் அங்கும் இறைவனின் பிரகாரம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
































பகோடாவின் உச்சியில் ஏறிக் களைத்து மீண்டும் ஆரம்ப இடத்துக்கு வந்தால் என்னோடு இணைந்து படம் எடுக்க முடியுமா என்று கூட வந்த கூட்டத்தில் இருந்த ஜப்பானிய யுவதி கேட்டாள். சுற்றுலா பார்க்க வந்த இடத்தில் என்னையும் ஏதோ வினோத ஜந்துவாக நினைத்தள் போலும் என்று மனதுக்குள் நினைத்தவாறே, ஒகே என்று சிரிப்போடு போஸ் கொடுத்தேன். சூரியன் எரிச்சலோடு சுட்டெரிக்க அடுத்த இடம் போவதற்கு வாகனத்தில் ஏறினோம்.

தகவல் குறிப்புக்கள் உதவி:
சுற்றுலா வழிகாட்டி
தாய்லாந்து வரலாற்றுத் தளங்கள்