Social Icons

Pages

Tuesday, August 25, 2009

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - ஓர் பின்பாட்டு

நமது தாயகத்திலே வலைப்பதிவர் சந்திப்பு வரப்போகிறது என்று நண்பன் வந்தி சொன்னபோது எவ்வளவு சந்தோஷப்பட்டேன் கூடவே பொறாமையும் கலந்து. தாயகத்தை விட்டு விலகி 14 ஆண்டுகளைக் கழித்தும் இன்றும் ஏதாவது படிவத்தில் Nationality என்ற பகுதிக்கு வரும்போது Australian என்பதை தயங்கித் தயங்கி வாயில் எச்சிலை மிண்டியபடி எழுதும் பண்பு மாறவில்லை. நாடு நல்ல சுகம் கண்ட பிறகு அங்கே வாழ்ந்து மடிய வேண்டும் என்பதும் என் பேராசைகளில் ஒன்று. இதைப் பதிவுக்கான வார்த்தை ஜாலமாக எல்லாம் எழுதவில்லை.

நான்கு ஆண்டுகளைத் தொடும் என் வலைப்பதிவு அனுபவத்தில், தாயகத்தில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக, இன்னும் சொல்லப்போனால் ஓராண்டாகத் தான் நம் உறவுகள் நிறையப்பேர் எழுத வந்திருக்கின்றார்கள். வலைப்பதிவு அனுபவத்தினூடே ஒரு புதியதொரு நட்பு வட்டத்தினைப் பெற்ற எனக்கு தாயத்தில் இருந்து வரும் உறவுகள் மீது இன்னும் ஒரு படி மேலான பரிவும் ஏற்படுகின்றது. என் போன்ற புலம்பெயர்ந்தவர்களின் எண்ணவோட்டங்களை அப்படியே பிரதிபலிப்பது போல இருக்கும் அவர்களின் நனைவிடைதோய்தல் போன்ற பதிவுகள். வந்தியத்தேவன் பதிவராக வரும் முன்பே, என்னுடைய "என் இனிய மாம்பழமே" பதிவினை வாசித்து விட்டு அதில் நான் கறுத்தக் கொழும்பான் வகை மாம்பழத்தைப் பற்றிச் சொன்னபோது அந்தப் பழத்தினைப் புகைப்படம் எடுத்து என் பதிவுக்காக அனுப்பியது தான் எனக்கும் என் தாயகத்து வலைப்பதிவர்களுக்கும் இடையிலான நேசத்தின் ஆரம்பம் என்பேன். எனக்கு மட்டும் தாயகம் போகும் சுதந்திரம் வாய்த்தால் ஒரு நாள் அவகாசத்திலேயே இந்த வலைப்பதிவர் சந்திப்புக்கும் போய் வந்திருப்பேன்.

வலைப்பதிவர் சந்திப்புக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே வந்தியத்தேவனுடைய பதிவு மூலமாக விடுத்த அழைப்புப் பதிவுக்கு அநானியாக யூ எஸ் இலிருந்து ஒருவர் (ஐ.பியும் சேமிக்கப்பட்டிருக்கிறது) கிண்டலாக "புலியை பாத்து பூனை சூடு போட்டுகொண்டதை போல நடத்துகிறீர்கள். மாபெரும் தோல்வியடைய வாழ்த்துக்கள்" என்று கேவலமாகப் பின்னூட்டியிருந்தாராம். வந்தியிடம் சொன்னேன் தயவு செய்து அதை வெளியிடவேண்டாம் என்று. அந்தப் பின்னூட்டத்தைப் படிக்கும் தாயக் வலைப்பதிவர்கள் இதனால் மனம் நொந்து அல்லது ஏன் வம்பு என்று ஒதுங்கக் கூடும் என்றேன். இப்படியெல்லாம் தான் அவர்கள் இந்தப் பதிவர் சந்திப்பை நடத்துவதற்கு முன் சில சங்கடங்களையும் எதிர் நோக்க வேண்டியிருந்தது என்பதற்கு இது ஒரு சாம்பிள்.

வலைப்பதிவர் சந்திப்புக்கு முதல் நாள் வந்தி மூலமாக இணைய வழி நேரடி ஒளிபரப்புக்கான இணைப்புக் கிடைத்தது. சிட்னி நேரம் மதியம் 12 மணிக்கே அந்த இணைப்பை போட்டு விட்டு ஏறக்குறைய மறந்தே விட்டிருந்தேன். மற்றைய அறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்த எனக்கு திடீரென்று ஆட்கள் பலர் பேசுவதுபோலக் கேட்டது. பக்கத்து வீட்டுக்காரன் டிவியை சத்தமாக வைத்துப் பார்க்கிறானோ என்று சினந்து கொண்டே எழும்பிய போது தான் ஞாபகத்துக்கு வந்தது, அடடா பதிவர் சந்திப்பின் ஒலி அல்லவா அது என்று.
கணினியின் முன் உட்கார்ந்தேன்.

வலைப்பதிவர்கள் ஒவ்வொருவராகத் தம்மை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஆரம்பித்தது. வெற்று போட்டோவில் பார்த்த ஆட்களின் கற்பனை உருவ அமைப்பு கண்ணுக்கு முன்னே கணினித் திரையில் தெரியத் தெரிய உள்ளுரச் சந்தோஷம் தொற்றிக் கொண்டது. ஆனால் அது நீடிக்குமுன்னே ஒரு கவலைக்குரிய நிகழ்வு வந்து கஷ்டப்படுத்தியது. வீடியோ ஒளிபரப்போடு இணைந்த அரட்டைப் பெட்டியில் பத்தோடு பதினொன்றாக நின்ற என்னைப் போல இன்னொருவர் "இந்தியன்" என்ற ஒருவர் வந்து "துரோகி பிரபாகரன் ஒழிந்தான்" "வன்னியில் ஹிட்லரின் ஆட்சி ஓய்ந்தது" என்ற ரீதியில் தொடர்ந்து அந்த அரட்டைப் பெட்டியை படு கேவலமான வார்த்தைப் பிரயோகங்களினூடாகப் புண்படுத்த ஆரம்பித்தார். சிறீலங்கா ராணுவத்தளத்தில் இருந்து புலிகளைக் கொச்சையாக எழுதும் பாணியில் அது தொடர்ந்தது.

கனடாவில் இருந்து அந்த அதிகாலை வேளை இந்த இணைய ஒளிபரப்பைப் பார்க்க வந்த சினேகிதி என்னைப் போலவே ஆவலோடு இந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டே அரட்டைப் பெட்டியில் மேலதிக தகவல்களை புதிதாக வருபவர்களுக்கும் கொடுத்துக் கொண்டே மறுமுனையில் பதிவர் சந்திப்பில் இருந்த கெளபாய் மது, பகீ போன்றோரிடம் அங்கே நடக்கும் விடயங்களைக் கேட்டுக் கொண்டே இருந்த அவரிடமும் அந்த "இந்தியன்" என்பவர் விட்டு வைக்கவில்லை. எச்சில் கோப்பை எல்லாம் கழுவி தொழிலை முடிச்சாச்சா (அதுதான் இலங்கையைச் சேர்ந்தவர்களின் தொழிலாம்), என்னுடைய எச்சில் பாத்திரத்தையும் கழுவித் தரமுடியுமா" என்று சீண்டினார். மறுமுனையில் ஜீ சாட்டில் இருந்து கொண்டு சினேகிதியிடம் "தங்கச்சி! தயவு செய்து அந்த ஆளுக்கு ஒரு பதிலும் போட வேண்டாம், அவரின் தொல்லை அதிகமாகும்" என்று நான் சொல்லி வைத்தேன். அந்த "இந்தியன்" அடுத்ததாக வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்கள் மீது நாரசமான கொமெண்டை அடிக்க ஆரம்பித்தார். அப்போது தான் எதிர்பாராத இன்னொரு விஷயமும் நடந்தது. இந்த "இந்தியன்" என்பவரோடு கூட்டுச் சேர்ந்து கொண்டே படு கேவலமான அரட்டையை ஆரம்பித்தார் இன்னொருவர். அவர் யாரென்று தேடிப்பார்த்தால் அவர் ஒரு இலங்கையில் இருந்து எழுதும் பதிவர் (அவர் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை) என்ற கவலையான பதிலை அவர் வலைப்பதிவு முகவரி சொல்லி வைத்தது.

"தயவு செய்து உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், இப்படி ஆபாசமாகப் பேசுவதை நிறுத்துங்கள்" என்றேன் இருவருக்கும். "இது எங்கள் கருத்துச் சுதந்திரம்" என்றார் ஒருவர். "அப்படியென்றால் உங்கள் அக்கா,தங்கச்சியைப் பற்றி மற்றவன் பேசினாலும் விடுவீர்களா" என்று நான் கேட்டேன். இந்த அரட்டையில் தாயகத்தில் நடக்கும் வலைப்பதிவு நிகழ்வில் லயிக்க முடியாத ஒரு கட்டமும் வந்தது. அப்போது என் துணைக்கு வந்தார்கள் அதுவரை இணைப்பில் இருந்த டோண்டு ராகவனும், மாயவரத்தானும். அவர்கள் இருவரும் இந்த "இந்தியன்" என்ற நபரை இந்த நாரசமான அரட்டையை விடும்படி கேட்க, அவரோ "டோண்டு பக்தன்", "சோ.ராமசாமி பக்தன்" என்று டோண்டு மீது தன் சேஷ்டையை ஆரம்பித்தார். கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கு மேல் இந்த தொல்லை நீடித்தது. மெல்ல மெல்ல பத்து இருபதாக அரட்டைப் பெட்டிக்குள் ஆட்கள் நுழைந்தார்கள். சுவிஸ் போன்ற ஐரோப்பா போன்ற நாடுகளில் அப்போது காலை வேளை ஆகி விட்டிருந்ததால் அங்கிருந்து நிறையப் பேர் வந்தார்கள் போல. அந்தக் கணத்தில் இருந்தூ "இந்தியன்" என்பவர் அதற்குப் பின் தன் ஆட்டத்தை விட்டு மாயமானார்.

சிங்கையில் இருந்து ஜோதிபாரதி போன்றவர்களும், இந்தியாவில் இருந்து டோண்டு ராகவன், சகோதரி முத்துலெட்சுமி, தமிழ் நெஞ்சம் தாய்லாந்திலிருந்து மாயவரத்தான், கனடாவில் இருந்து சினேகிதி, கீத் போறவர்களும், சுவிஸ் நாட்டில் இருந்து சயந்தன், சாத்திரி போன்றவர்களும் அவுஸ்திரேலியாவில் இருந்து நான், வசந்தன் போன்றவர்களும் இந்த நேரடி ஒளிபரப்பில் இணைந்தவர்களில் சிலர். அரட்டை அறையிலும் லோஷனைக் காட்டுங்கள் என்று தேடித்திரிந்தார்கள் ;)

தொடர்ந்து வலைப்பதிவர் சந்திப்பின் ஒளியோட்டத்தில் முழுமையாக ஈடுபட முடிந்தது. வலைப்பதிவர் சந்திப்பு பற்றி ஏற்கனவே சக உறவுகள் பலர் தங்கள் விரிவான பதிவுகள் மூலம் கொடுத்திருந்தார்கள். ஒரு பார்வையாளனாக இருந்து எனக்குப் பட்ட விஷயங்களைச் சொல்கின்றேன்.

இணைய வழி நேரடி ஒளிபரப்பு என்னும் இந்த விஷயத்தை எந்த விதமான தொழில்நுட்பச் சிக்கலும் இன்றி, ஒரு சில நிமிட ஒலித்தெளிவின்மை தவிர சாதித்துக் காட்டிவிட்டார்கள் சகோதரங்கள்.

சத்தியமாக அந்த பத்து வயசு சின்னப்பையனைப் பார்த்து யாரோ ஒரு பெண் பதிவரின் சகோதரன், இந்தப் பெண்ணின் பாதுகாப்புக்காக வந்திருக்கிறார் என்று நினைத்தேன். என் நினைப்பு அவ்வாறு இருந்ததில் தவறில்லை ஏனென்றால் எங்கள் சமூக அமைப்பு அப்படி ;)
பிறகு தான் தெரிந்தது அவரும் ஒரு பதிவர் என்று.

ஆரம்பத்திலேயே அறிமுகங்களைக் கொடுத்து விட்டதால் பின்னர் தனியாகப் பேசும் போது ஒரு சிலரை இனங்காண முடியவில்லை. "ஆர் இப்ப கதைக்கிறது" என்று அரட்டை அரங்கத்தில் இருந்த ஆட்கள் கேட்கக் கேட்க சலிக்காமல் அலுக்காமல் அங்கிருந்து பகீ அரட்டைப் பெட்டியில் போட்டுக் கொண்டிருந்தார். ஒரே ஆளை 10 பேர் விசாரித்தாலும் கூட தனித்தனியாக ;-)

யாழ் என்ற பெயரைக் கேட்டாலே தேள் கொட்டியவன் போல சிலர் நடக்கும் பாங்கை கண்டு பலமுறை எரிச்சல் பட்டிருக்கிறேன். யாழ் தேவி என்பது யாரோ ஒருவர் ஆரம்பித்து வைத்த திரட்டி. யாழ் தேவி என்பது ஒரு இனத்தின் வாழ்வாதாரங்களோடு கூடவே வந்த ஒரு குறியீட்டுப் பொருள் மட்டுமே. அந்தத் திரட்டிச் சொந்தக்காரர் "யாழ்தேவி" என்று வைத்தது போல "உத்தரதேவி" என்று இன்னொருவர் ஆரம்பித்து விட்டுப் போகட்டுமே. ஒரு ஆரோக்கியமான முதலாவது சந்திப்பிலேயே இந்த யாழ்தேவி விடயத்தை ஆளாளுக்கு போஸ்ட்மாட்டம் பண்ணிய கொடுமையை உண்மையில் என்னால் சகிக்க முடியவில்லை. யாழ்ப்பாணத்தான் ரயில் , மட்டக்களப்பான் கிணறு என்று அடிபட்டுச் சாகும் கூத்து அடுத்த நூற்றாண்டிலும் ஓயாது போல. ஒன்று மட்டும் தெரிந்தது, இலவச ஆலோசனை செய்வதற்கு 24 மணி நேரமும் ஒலிவாங்கியைப் பிடிக்க நம்மவர்கள் தயார்.

ஈழத்தமிழப் பதிவர்கள் தம் பதிவுகளில எழுதும் தமிழகப் பேச்சு வழக்கு பற்றியும் பேச்சு வந்தது. தக்கன வாழும் தகாதன அழியும். இது பதிவுகளுக்கும் பதிவர்களுக்கும் கூடப்பொருந்தும். எல்லாப் பதிவர்களும் ஜெயகாந்தன் மாதிரியோ, எஸ்.பொன்னுத்துரை மாதிரியோ எழுத்தாளனாக பிறப்பதில்லை. வலைப்பதிவு என்பதே ஒருவன் தன்னுடைய மன ஓட்டங்களைப் பதியும் ஒரு இணையவழி ஊடகமே. யாரோ ஒரு ஆங்கிலேயன் கண்டுபிடித்த விஷயங்களுக்கெல்லாம் வரைவிலக்கணம் போட்டு இதுதான் எழுது, இப்பிடித்தான் எழுது என்ற இணையச் சட்டாம்பி வேலைகள் தொடரும் இந்த வேளை என்பங்குக்கும் சொல்லி வைக்கிறேன் இதை. யார் எதை எழுத வேண்டும் என்பதை எழுதுபவனும், எதை யார் படிக்க வேண்டும் என்ற பூரண சுதந்திரம் படிக்கும் வாசகனுக்கும் இருக்கு. சதா சர்வகாலமும் யாரைப் பிடிச்சுத் தின்னலாம் என்று எல்லாப் பதிவுகளையும் மோந்து பார்த்து தேடித்தேடி இவர் என்ன எழுதுகிறார் என்று தேடித்திரிந்து கிண்டல் அடித்துப் பொழுது போக்குவதல்ல நல்ல வாசகனுக்குரிய/வழிகாட்டிக்குரிய அடையாளம். நான் ஈழத்தமிழ் சொற்களை வைத்து முழுமையாக எழுதிய பதிவுகளிலும், ஈழத்தமிழ் படைப்பாளிகள் போன்றோர் குறித்து எழுதிய பதிவுகளும் இப்படி "ஆலோசனை சொல்லும்" எத்தனை பேர் வந்து எட்டிப் பார்த்திருக்கிறார்கள் என்று போய்ப் பாருங்கள். நடிகமணி வைரமுத்து குறித்த பதிவுக்கு வந்து கருத்து சொன்னவர்கள் இரண்டெ இரண்டு பேர்.அதற்காக நான் கூட்டம் சேர்ப்பதற்காக பதிவு என்று சொல்ல வரவில்லை. இலவச ஆலோசனை செய்பவர்கள் எத்தனை பேர் அப்படியான செயற்பாடுகளை ஊக்குவிக்கிறார்கள் என்று சொல்ல வந்தேன். முப்பது பேர் வந்து பின்னூட்டம் போடுவதால் மூவாயிரம் டொலரா கிடைக்கப் போகுது? ஆலோசனைகள் தேவையானவை அவை முறையாக வருமிடத்து.

விடுபட்ட ஒன்ரையும் இப்போது சேர்க்கிறேன். வலைப்பதிவு ஆக்கங்களை எழுதியவர் சம்மதமின்றி வெளியிடும் பத்திரிகைகள் "நன்றி ‍ இணையம் " என்று போடுவது கொலைக் கொடுமை. இப்படியான நாகரீகத் திருட்டை வலைப்பதிவர் சந்திப்பில் மு.மயூரன் பேசியபோது உண்மையில் வீட்டில் இருந்து கைதட்டினேன் ;‍)இனியாவது இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

இறுதியாக தமிழ் தட்டச்சும் முறை. "நீங்கள் எந்த கீ போர்ட் பாவிக்கிறீங்கள்" என்று கேட்டார் ஒருவர் என்னிடம். நான் அன்றிலிருந்து இன்று வரை Logitech தான் என்றேன் அவரிடம். பிறகு கேட்டார் "தமிழ் எழுதுவதற்கு எதப்பா", "நான் அன்றிலிருந்து இன்று வரை ஈழம் யூனிகோட் தட்டச்சு தான்" என்றேன். என்னைப் பொறுத்தவரை தமிழ் எழுத்து வந்தால் போதும், நாளைக்கு அதுவே தமிழ் பேச்சைக் கண்டுணர்ந்து திரையில் அடிக்கும் முறையாக (voice recognition software) வந்தால் என்ன எது தட்டச்சுபவனுக்கு இலகுவான முறையோ அதுவே போதம். இந்தக் கீபோர்ட் முறையால் தமிழ் அடிச்சால் தான் தமிழ் நீடு நிலைத்து, ரோபோ காதலிக்கும் காலத்திலும் வாழும் என்று சொன்னால் நான் அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பேன், அது என் அறியாமை என்றே வைத்துக் கொள்ளுங்களேன். அப்படியே இருந்துட்டு போறன்.

நிறைவாக, இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு, ஆரம்பமே அமர்க்களம். இன்னும் பல சந்திப்புக்கள் நடக்க வேண்டும். நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக, நீங்கள் இருக்கிறீர்கள் எங்களுக்காக.

வலைப்பதிவர் சந்திப்பு படங்கள் நன்றி : வந்தியத்தேவன், நிமல்