Social Icons

Pages

Wednesday, July 19, 2006

கேரளாவின் கடற்கழிச்சுற்றுலா

மே 28, காலை 8.00 மணி (இந்திய நேரம்) ஆலப்புழாவிற்கு வந்த காரணம் நிறைவேறும் நாள் இன்று என்பதால் முந்தய நாட் தூக்கம் சற்றுக் குறைச்சலாகவும், மனசுக்குள் சுற்றுலா ஆர்வம் அதிகப்படியாகவும் ஏறி உட்கார்ந்துகொண்டது. இப்படியான இரண்டும் கெட்டான் நிலையில் தூக்கம் என்ன தூக்கம் என்று நினைத்துக்கொண்டே வாரிச்சுருட்டி எழுந்துகொண்டேன். ஜன்னலால் எட்டிப்பார்த்த போது வருணபகவான் தொடர்ந்தும் ஓவர் டைமில் தூறிக்கொண்டே இருந்தார். கதகதப்பான அந்த சூழ்நிலை யாழ்ப்பாண மார்கழிக் குளிரை நினைவுபடுத்தியது. இருந்தும், சோம்பலை மூட்டை கட்டி வைத்துவிட்டுக் காலைக் கடன்களை முடித்து நன்றாகக் குளியல் ஒன்று எடுத்தேன்.

முதல் நாள் இரவு கெளரி ரெசிடென்ஸ் இளைஞர்களின் கைவண்ணத்தில் உருவான பொரிச்ச இறாலும், வட இந்திய ரொட்டித்துண்டங்களும் வெகு சீக்கிரமாகவே ஜீரணமாகிவிட்டதால் , காலை சீக்கிரமாகவே பசியெடுத்தது. புது உடை பூண்டு, மழைத்தூறலை மதியாமல் கொஞ்சம் நடை, கொஞ்சம் ஓட்டமுமாக ஆலப்புழா நகரை நோக்கி வேகமெடுத்தன என் கால்கள். கெளரி ரெசிடென்ஸ்ஸிலிருந்து ஒரு 10 நிமிட தூரத்துக்கும் குறைவாகவே ஆலப்புழா நகர் இருந்தது. என் கால்கள் ஈரமண் வீதியில் பதிக்க, கண்களோ வீதியோரக்கடைகளை நோட்டம் விட்டவாறே உணவகத்தைத் தேடின.

என்ற புத்தம் புதிய Flash Restaurant என்ற உணவகம் கண்களில் மாட்டியது. விறு விறுவென உள்ளே போனேன். இருக்கையில் அமர்ந்த போது உணவக முதலாளியும், பணியாளும் சிரித்து வரவேற்று, இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இந்த உணவகம் திறந்ததாகவும், இன்னும் உணவுப் பட்டியல் அச்சில் அடிக்கவில்லை என்றும் சொல்லித் தலையைச் சொறிந்தார்கள்.காலை உணவாக இடியப்பமும், அப்பமும் கிடைக்கும் என்றார்கள். கேரளப் புட்டை ஒருகை பார்க்கலாம் என்றால் எனக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

கேரளப் புட்டு , கேரள உணவகங்களில் கிடைப்பது அரிது என்று நினைக்கிறேன். ஏனெனில் கேரளாவில் மற்றைய உணவகங்களிலும் எனக்கு இதே ஏமாற்றம் தான். மலையாளிகள் தம் வீட்டில் தான் இதை ஆக்குவார்கள் போலும். முட்டை அப்பம் சாப்பிடலாம் என்று நினைத்து ( அப்பத்துக்குள் முட்டை போட்டிருக்கும்) முட்டை அப்பத்துக்கு ஓடர் செய்தேன். கிடைத்தது தனியாக வெறும் அப்பமும், வெங்காயச் சட்னிக்குள் புதைந்த அவிச்ச முட்டையும் தான். முட்டை அப்பம் கேட்ட எனக்கு உள்ளுரச் சிரிப்பு வந்தாலும், அட இது கூட நல்லாயிருக்கே என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டு சாப்பாட்டை ஒரு கை பார்த்தேன். பக்கத்து இருக்கைகளில் இருந்தோரில் பலர் இடியப்பம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

காலைச் சாப்பாடு முடிந்து மீண்டும் கெளரி ரெசிடென்ஸ் போகிறேன்.மதியம் 12 மணிக்குத் தான் என் படகுச் சுற்றுலா என்பதால் கிடைத்த நேரத்தில் அங்குள்ள கணினியில் இணையத்தளங்களை மேய்கின்றேன். கேரளாவில் இருந்து வரும் ஆங்கிலப் பத்திரிகையில் முதல் நாள் மறைந்த ஒடுவில் உன்னிகிருஷ்ணன் பற்றிய சிறப்புச் செய்திகளும், அவர் பற்றி சக கலைஞர்களின் அனுதாப நினைவுகளும் வந்திருக்கின்றன.

சரி, இனி என் ஆலப்புழா கடற்கழிப் (Backwater) பயணத்தை ஆரம்பிக்க முன்னர், கேரளாவின் இந்தக் கடற்கழிப் பிரதேசங்கள் பற்றிய குறிப்பைக் கேரளச் சுற்றுலாத் தளங்களின் உதவியுடன் தருகின்றேன். அனைத்துப் புகைப்படங்களும் என் கமராவில் சுட்டவை.

கேரளா மாநிலம் 900 கீ மீ பரப்பளவிற்கு மேல் நீர்வழித் தடங்கள், ஆற்றுப்படுக்கைகள், பரவைக்கடல் ஆகியவற்றால் சூழவும், மத்தியிலும் கொண்ட ஒரு பிரதேசம். இப்படியான புவியியல் அமைப்பின் ஆற்று வழித்தடங்கள் எங்கணும், வரலாற்றுச் சிறப்புமிக்க, பழமை பேணும் கிராம அமைப்பும்,கண்கவரும் நீர்வழி நெடும்பயணங்களும், நாகரீகச் சாயம் பூசிக்கொண்டு வரும் கிராமங்களுமான கலவையாக அமைந்து காணப்படுகின்றது. இந்தப் படகு வீட்டின் முக்கியமான பயண இலக்குகள், உங்களுக்கு இந்தப் பயணத்தை ஒழுங்கு செய்து தரும் படகு வீட்டு உரிமையாளர்களாலோ அன்றிப் பயணிகளாலோ தீர்மானிக்கப்படுகின்றது. இந்தப் பயணத்தில் தொடும் பயண இலக்குகளில் குறிப்பிடத்தக்க இடங்களாவன:
( இவை அனைத்துமே உங்கள் ஒரு நாட் பயணத்தில் பார்க்கமுடியாது, மாற்று ஒழுங்குகள் செய்யவேண்டும்).
கொச்சின் (இப்போது கொச்சி என்ற பெயர்) (Cochin) - அரபிக்கடலின் மகாராணி என்று அழைக்கப்படும் கொச்சி மிகப்பிரபலமான பயணப்படுக்கைகளில் ஒன்று.
காரணம், வரலாற்று ரீதியான அம்சங்களையும், சீன வலை எனப்படும் மீன்பிடித் தொழிலைப் பார்க்கும் வாய்ப்புமாகும். கொச்சின் பற்றி நிறையப் பேச இருக்கிறது, பின்னர் கவனித்துக்கொள்கிறேன்.

ஆலப்புழா (Alappuzha ) - என்னுடைய பிரயாணம் ஆலப்புழாவில் மையம் கொண்டிருந்த காரணத்தால், இந்தப் பயணம் பற்றிய வரலாற்று மற்றும் காட்சிக் குறிப்புக்கள் அடுத்த பதிவுகளில் வரும்.
கசர்கொட் (Kasargod) - வட கேரளாவில் அமைந்துள்ள இப்பிரதேசம், வல்லியப்பரம்பா என்று ஆற்றுப் படுக்கை தாங்கியது. பச்சைப் பசேலென்ற இந்தப் பிரதேசம் கேரளத்தின் பசுமைப் புரட்சியைக் காண விரும்புபவர்களுக்கு ஓர் நல்விருந்து.

கொல்லம் (Kollam) - கேரளத்தலைநகர் திருவனந்தபுடத்திலிருந்து 70 கீ.மீ தொலைவில் உள்ள இப்பிரதேசம், அஸ்தமுடி என்ற ஏரி தழுவி அமைந்துள்ள மிகப்பழைமையான துறைமுகமாகும். கோட்டயம் (Kottayam) - கடற்பயணம் செய்பவர்களுக்கு இயற்கை வனப்புள்ள மலைப் பிரதேசங்களைக் காணவேண்டுமென்றால் தவறாது போகவேண்டிய இடம். இங்கு விளையும் ரப்பர் பயிர் உற்பத்தியையும் கண்டு களிக்கலாம்.

கோழிக்கோடு (Kozhikode) - வட கேரளாவில் உள்ளது. பல தெரிவுகளில் கோடு போட்ட பருத்தி ஆடைகளுக்கு மவுசு கிடைத்த ஊர், அதனாலேயே கோழிக்கோடு என்ற பெயரும் வந்ததாகச் சொல்லப்படுகின்றது. நாடுகாண் பயணி வஸ்கொடகாமா 1498 இல் வந்திறங்கிய இடம். 16 கீ.மீ தொலைவில் கப்பட் என்ற கடற்கரையும் உண்டு.

குமரகம் (Kumarakom) - பூலோக சொர்க்கம் என்றழைக்கப்படும் இவ்வூர் வேம்பநாடு வாவியை ஒட்டி அமைந்துள்ளது. பறவைகள் சரணாலயமும் தன்னகத்தே கொண்டிருக்கின்றது.

குத்தநாடு (Kuttanad) - கேரளாவின் அரிசிக்கோப்பை (Ricebowl of Kerala) என்று செல்லமாக அழைக்கப்படும் இவ்வூர், நெற்கதிர்ப் பாசனத்துக்குப் புகழ் பெற்றது. கடல்மட்டத்துக்குக் கீழேயே நெற்கதிர்கள் தலைவிரித்து ஆடுகின்றன. இம்மாதிரியான பாசனச் செய்கையில் கடலுக்குக் குறுக்கே அணை போடப்பட்டுப் நெற்செய்கை விளைவிக்கப்படுகின்றது. இந்த ஒப்பீடுகைக்குக் கடல்மட்டத்துக்குக் கீழே உள்ள நாடான நெதர்லாந்து நாட்டுப் புவியியல் அமைப்பும் பொருந்தப்படுகின்றது.

திருவல்லம் (Thiruvallam) - திருவனந்தபுரத்தில் இருந்து 6 கீ.மீ தொலைவில் இருக்கும் இவ்விடம் கிள்ளி மற்றும் காரமன்னா ஆகிய இரண்டு ஆறுகளின் இணைப்பில் அமைந்து காணப்படுகின்றது. நான் முன்னர் சொன்ன வேலி என்ற சுற்றுலாத்தலத்திற்கு அண்மையிலும் திருவல்லம் இருக்கின்றது.

திருவனந்தபுரம் (Thiruvananthapuram) - கேரளக் கடற்கழிச் சுற்றுலாப் பயணங்களின் ஆரம்பத்தொடுகையாக இப்பிரதேசம் விளங்குகின்றது. இந்த இடத்தைப் பற்றித் தானே நிறையச் சொல்லிவிட்டேனே? :-)

கெளரி ரெசிடென்ஸ்காரரே என் படகு வீட்டுப் பயணத்தை ஒழுங்கு செய்திருக்கிறார்கள். ஒரு அறையுடன் கூடிய அந்தப் படகு வீடு என் 22 மணி நேரப் பயணத்துக்காக ரூ 3500 மட்டுமே செலவாகியது. இந்தச் செலவில் படகு வாடகை, மதிய உணவு, மாலைச் சிற்றுண்டி, இரவு உணவு, அடுத்த நாட் காலை உணவு ஆகியவை அடக்கம். இந்த ஒரு அறையுடன் கூடிய படகு வீடு நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கும் மிகவும் பொருத்தமானது. மேலதிக கட்டணம் எதுவுமில்லை. இந்தப் படகு வீட்டிற்குள்ளேயே மேற்கத்தேயத் தரத்தில் கழிப்பறையும் உண்டு. இந்தப் படகுவீடுகளை அரை நாள் வாடகை அல்லது ஒரு நாள் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம். நான் போன படகு வீட்டைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. அதுவரை,

ஷமிக்கோ... (Excuse me)

Tuesday, July 04, 2006

ரச தந்திரம் - ஆலப்புழாவில் பார்த்த சினிமா

மே 27, மாலை 6.10 (இந்திய நேரம்)
ஆலபுழாவிற்கு மாலை 5 மணிக்கே வந்ததால் இரவு தழுவும் நேரம் வரை கடைத் தெருக்களை வலம் வரலாம் என்று நினைத்துச் சுற்றினேன், மிகச் சிறிய நகர் என்பதால் அதிக நேரம் உலாவத் தேவை இருக்கவில்லை. திடீரென்று ஒரு யோசனை வந்தது. ஆலப்புழாவில் ஒரு சினிமாவில் நல்ல மலையாளப்படம் பார்க்கலாமே என்ற முடிவு தான் அது. ஒரு ஆட்டோக்காரரை வழி மறித்து நல்ல படம் ஓடும் தியேட்டருக்குக் கொண்டுபோகும்படி கூறினேன். அந்தப்பக்கம் அடல்ஸ் ஒன்லி படங்கள் தான் ஓடும் (தயாரிப்பாளர்கள் கவனிக்க), நல்ல தியேட்டர் கொண்டு போகிறேன் என்றவாறே சாந்தி தியேட்டர் என்ற வளாகத்துக்கு அழைத்துச் சென்றார். நல்ல புத்தம் புதுத் தியேட்டராக அது இருந்தது. நான் தியேட்டரை அடைந்தபோது மாலை 6.10, படமோ 6.20 இற்கே ஆரம்பமாகிவிட்டிருந்தது. இருக்கைகள், இதுவரை நான் போன தமிழ் சினிமாத் தியேட்டர்களின் இருக்கைகளை விட நல்ல தரத்தில் இருந்தன. நான் பார்த்த படம், பார்க்கவேண்டும் என்று பிரியப்பட்ட "ரச தந்திரம்".

ரச தந்திரம் என்றால் இரசாயனம் (வேதியியல்) என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திரைப்படத்திற்கு மலையாளத் திரையுலகில் நல்லதொரு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் மோகன்லால், மீரா ஜாஸ்மின் இணைமும் முதல் படம், மலையாளத்திரையுலகின் நல்லதொரு இயக்குனர் சத்தியன் அந்திக்காடு மற்றும் மோகன்லால் 12 வருடத்திற்குப் பின் இணையும் படம் என்ற எதிர்பார்ப்புக்களே அவை. கூடவே இசைஞானி இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் வேறு. படமும் அந்த எதிர்பார்ப்புக்களை ஏமாற்றாமல் 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது.

படத்தின் கதைக் கரு இதுதான். தச்சுச் தொழிலாளியாக வேலை பார்ப்பவன் பிறேமச்சந்திரன் (மோகன்லால்) , கூடவே தன் தந்தையை மட்டுமே குடும்ப உறுப்பினராகக் கொண்டிருக்கிறான். ஒரு சமயம் இவன் தன் தச்சுத் தொழிலாள நண்பர்களுடன் ஒருவீட்டின் திருத்தவேலைகள் செய்யும் போது அவ்வீட்டுக்காரர்களால் கொடுமைப்படுத்தப் படும் கண்மணி (மீரா ஜாஸ்மின்) என்ற வேலைக்காரி மீது அனுதாபப்படுகின்றான். கண்மணி சேலத்தைச் சேர்ந்த தமிழ்பெண் என்றும், அநாதையாகிப் போன அவள் தன் வயிற்றுப்பிழைப்புக்காகவே இப்படிக் கஷ்டப்படுகின்றாள் என்பதையும் தெரிந்துகொண்ட பிறேமச்சந்திரன் அவளை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றி இன்னோர் இடத்தில் வேலைக்கமர்த்த முயற்சி செய்கின்றான். இதற்கிடையில் அந்தக் குடும்பத்தாரின் தொடர் துன்புறுத்தல்களைத் தாங்கமுடியாமல் தற்கொலை செய்யமுயற்சி செய்கிறாள் கண்மணி. இதைக் கண்ட பிறேமச்சந்திரன் அவளைக் காப்பாற்றி தற்காலிகமாக ஒரு இடத்தில் மறைத்து வைக்கின்றான். அவளும் விடலைப் பையன் போல மாறுவேடம் பூண்டு நடிக்கிறாள். இதற்குள் கண்மணியைக் காணவில்லை என்று வீட்டார் கொடுக்கும் புகார் , தொடர்ந்த குழப்பங்களால் கண்மணி, தான் பிறேமச்சந்திரன் மேல் கொண்ட காதலால் தான் ஓடி வந்ததாகக் கூறுகிறாள். பின்னர் அவன் மேல் உண்மையான அபிமானமும் அவளுக்கு ஏற்படுகின்றது. ஆனால் கண்மணியின் காதலை ஏற்கமறுத்து விலகி விலகிப் போகும் பிறேமச்சந்திரன் ஒரு கட்டத்தில் தான் ஒரு ஜெயில் தண்டனைக் கைதி என்ற உண்மையைச் சொல்லும் போது படம் இன்னொரு திசையில் பயணப்படுகின்றது.முழுக்கதையையும் சொன்னால் VCD இல் கூட நீங்கள் பார்க்கமாட்டீர்கள்.

படத்தின் முதற்பாதியில் மீரா ஜாஸ்மின் அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் , மறுபாதி மோகன்லால் அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் காட்டியிருப்பது இந்தப் படத்தின் திரைக்கதையின் சிறப்பு. போரடிக்காமல் நல்ல ஆரோக்கியமான பொழுதுபோக்குப் படமாக சத்தியன் அந்திக்காடு தந்திருப்பது அவரின் இயக்குனர் முத்திரையில் இன்னொரு முத்து.

மலையாளப்படங்களில் கவனிக்கக் கூடிய இன்னொரு அம்சம் , ஒரே நடிகர் குழுவே பெரும்பாலான படங்களில் நடிப்பது. ஆனால் அவர்கள் ஒவ்வொரு படத்திலும் தம் வித்தியாசமான பாத்திரத்தேர்வைச் செய்வது.

மோகன்லாலின் தச்சுத் தொழில்கூட முதலாளியாக வந்து ஆபாசம்/அடி உதையற்ற நல்லதொரு நகைச்சுவை நடிப்பை வழங்கியிருக்கிறர் இன்னசென்ட் , (இவர் சந்திரமுகி மூலப் பதிப்பான மணிச்சித்திர தாழு படத்தில் வடிவேலு பாத்திரத்தில் வந்தவர்) . இவர் ஒரு காட்சியில் சும்மா வந்து போனாலே தியேட்டர் கதிரைகள் சிரிப்பால் குலுங்குகின்றன.

அதே போல் இன்னொரு நகைச்சுவை நடிகர் ஜெகதி சிறீக்குமார் , மீரா ஜாஸ்மினின் தாய்மாமனாக வந்து தமிழ் பேசிக் கலக்கல் நடிப்பை வழங்கும் போது எம். ஆர்.ராதாவை நினைவுபடுத்துகின்றார்.

படம் முழுக்கவே தனியான நகைச்சுவைக் காட்சி இல்லாது பெரும்பாலான நடிகர்களே கதையோட்டத்தோடு நகைச்சுவை நடிப்பையும் வழங்கியிருக்கிறார்கள்.

கவியூர் பொன்னம்மாவிற்கு வழக்கமாக தமிழ் சினிமாவில் மனோரமா அதிகம் செய்யும் செண்டிமெண்ட் பாத்திரம்.
அநாதை வேலைக்காரியாக அல்லற்படுவதாகட்டும் , டீன் ஏஜ் பையனாக படத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பதாகட்டும், மீரா ஜாஸ்மின் பின்னியெடுக்கிறார். குறிப்பாக இவரின் ஆண் வேடம் எவ்வளவு இயல்பானது என்று தெரிந்து கொள்ள, மோகன் லால் கடைக்கு அனுப்பி சாமான் வாங்கிவரச் சொல்லிவிட்டு மாடியின் சாளரம் வழியே அவர் பார்க்கும் போது , இளம் பையன் போல நடை நடந்து கடையில் இருந்து தொங்கும் வாழைக்குலையில், ஒரு பழத்தை எடுத்து இலாவகமாக உரித்து மோகன்லாலைப் பார்த்தவாறே மிடுக்காகச் சாப்பிடும் போது , ஆஹா என்னவொரு இயல்பான நடிப்பு.

ம் தமிழ்சினிமா நாயகர்கள் 60 வயதிலும் உம்மா உம்மம்மா பாடிக்கொண்டும், வீர அரசியல் பேசிக்கொண்டும் இருக்கையில் மோகன்லால் போன்ற மலையாளத்து நாயகர்கள் வியப்பளிக்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இப்படமும் ஓர் சான்று. குறிப்பாக ஒரு காட்சியில் தன் நெருக்கடியான சூழ்நிலையிலும் அசட்டுச் சிரிப்பை வரவளைத்து நடிக்கும் காட்சியே நல்ல உதாரணம்.இவர், பாரதியின் " நிமிர்ந்த நன்னடையும்" என்ற கவிதையை மலையாளத்தமிழில் பேசும் போது நெருடலாக இருந்தாலும், மலையாளக் கதாபாத்திரமே அவ்வாறு பேசுவது போலக் காண்பிப்பதால் மன்னித்துவிடலாம்.

80 களில் தமிழ் சினிமா உலகில் இசைச்சக்கரவர்த்தியாக இருந்த இளையராஜா இப்போது கேரளாவின் சக்கரவர்த்தியாகி விட்டார் போலும். மனுஷர் பின்னணி இசையிலும் சரி பாடல்களிலும் சரி பின்னியெடுத்துவிட்டார். இந்தப்படத்துக்கு இளையராஜாவின் இசை இல்லை என்றால் என்ற கற்பனை வந்து பயம்கொள்ள வைக்குமளவிற்கு அவரின் ஈடுபாடு தெரிகிறது. பொன்னாவணிப் பாடம், பூ குங்குமப் பூ, ஆத்தங்கரையோரம், என்று எதையும் ஒதுக்கிவிட முடியாத அருமையான பாடல்கள். இன்னும் மலையாளப் பாடல் தேர்வில் முதல் 10 பாடல்களில் முதலாவாதாகவே பொன்னாவணிப் பாடம் பாடல் இருக்கிறது.

Bangalore Landmark இல் இசைத்தட்டை வாங்கி என் காரில் ஒலிக்கவிட்டிருக்கிறேன். இன்னும் எடுக்கவே மனசு வரவில்லை.
இப்படப்பாடல்களை இணையத்தில் கேட்க
http://www.raaga.com/channels/malayalam/movie/M0000961.html

தந்தை மகன் பாசக்காட்சிகளும் தொடரும் பாடலும் மட்டும் இப்படத்திற்கு ஒரு திருஷ்டிகழிப்பு.

மீரா ஜாஸ்மின் வேலை பார்க்கும் வீட்டின் அரை லூசு மூதாட்டியின் குறும்புகள், இதுவரை நான் எந்தப்படங்களிலும் காணாத பாத்திரம்.

இப்படத்தில் குறிப்பிடவேண்டிய இன்னொரு பாத்திரம் , பண்ணையாராக வந்த ஒடுவில் உன்னிகிருஷ்ணன் பாத்திரம். பல படங்களில் இவரின் குணச்சித்திர நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். இப்படத்தில் வழக்கத்துக்கு மாறாக இவர் முக வீங்கியிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. அடுத்த நாள் ஆலப்புழாவில் வைத்து பத்திரிகை பார்த்தபோது தான் தெரிந்துகொண்டேன். நான் இப்படம் பார்த்த இதே நாள் (27/05/06) ஒடுவில் உன்னிகிருஷ்ணனும் இறந்துவிட்டாராம். அடூரின் தேசிய விருது பெற்ற "நிழல் கூத்து" திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகராக நடித்தமைக்கு விருதும் வாங்கியவர். ரச தந்திரம் நடிக்கும் போதே டயாலிஸிஸ் நோய் கண்டு சிரமப்பட்டே நடித்ததாக இயக்குனர் தன் அஞ்சலியில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தில் இவர் நாதஸ்வரத்தை பொழுது போக்காக வாசிக்கும் காட்சியிலேயே இந்த அற்புதக் கலைஞனின் சிறப்பு விளங்கும். இக்கட்டுரை மூலம் அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

இப்படம் முழுமையான ஒரு மசாலாப் படமாக இருந்தாலும் நுட்பமான மனித உணர்வுகளை அது காட்டத்தவறவில்லை. தொடர்ந்து ஹொலிவூட் படங்களைப் பார்த்துப் பிரதிபண்ணும் தமிழ் சினிமா இயக்குனர் பலர் , கேரளாப் பக்கமும் தம் பார்வையைத் திருப்பினால் நல்ல பல திரைக்கதைகளைத் தமிழ் ரசிகனும் பார்க்கும் வாய்ப்பு அதிகப்படும். அதை விடுத்து படம் வெற்றி பெற வேறொரு தந்திரமும் அவர்கள் செய்யத் தேவையில்லை.

படம் முடிந்து சாந்தி தியேட்டரை விட்டு வெளியேறுகின்றேன். நேரம் இரவு 9.15, ஆலப்புழாக் கடைத்தெருக்கள் இரவின் போர்வையில் தூங்கிக்கிடக்கின்றன.

திருச்சு வரும்.....