Social Icons

Pages

Thursday, October 31, 2013

சென்னையில் என் தலைத் தீபாவளி

தலைப்பைப் பார்த்து ஓடிவந்தால் கம்பேனி பொறுப்பல்ல :-) ஆனால் இந்தத் தலைப்புக்கும் காரணமிருக்கு. ஈழத்தைப் பொறுத்தவரை தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்புக்கு நிகராக தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. ஒரு புதுச்சட்டை எடுத்தோமா, கோயிலுக்குப் போனோமா, போய் வந்து பங்கு பிரித்த ஆட்டிறச்சியைச் சமைத்துச் சாப்பிட்டோமா என்ற அளவில் தீபாவளி நிறைந்துவிடும். பட்டாசு வெடிகளும் கிடையாது. கூடப் படித்த வட இந்திய நண்பன் வேறு, நாங்க தீபாவளி கொண்டாடுவது உங்க மன்னன் இராவணனை அழித்ததால் தானே என்று சொல்லிக் கடுப்பேத்தி வைத்திருந்தான் பல்கலைக்கழக காலத்தில்.
 
ஆனால் இந்தியாவில் முதன்மையாகக் கொண்டாடும் பண்டிகையே தீபாவளி எனும் போது, அதைப் பார்க்க ஆசை இருக்காதா என்ன? அந்த ஆசையை கடந்த வருடத் தீபாவளியில் நிறைவேற்றும் வாய்ப்புக் கிட்டியது.
தீபாவளி தினத்திலேயே  காலை வேளை கோயம்புத்தூரிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் சென்னைக்கு வருவதாக ஏற்பாடு.  காலையில் நண்பர் தெனாலி தொலைபேசியில் அழைத்து, என்னைச் சந்திக்கமுடியாமல் போனதுக்காக வருந்தினார். அவரைப்போலவே நிறைய நண்பர்கள் சொந்த ஊருக்குப் போனதால் தொலைபேசி வழியாக அவர்களின் குரலை மட்டும் கேட்கமுடிந்தது. கிட்டத்தட்ட 20 பேர் வரை நான் தமிழகத்தில் தங்கியிருந்த மூன்று நாட்களும் அழைத்துப் பேசினார்கள். கோவை விமான நிலையத்தில் பணிபுரியும் பெண்கள் பட்டுச் சேலை மினுமினுக்க, ஆண்கள் சர்வாணி சகிதம் மிளிர, அந்த இடமே பண்டிகைக் கொண்டாட்டம் நிகழும் அரங்கம் போலப்பட்டது.
கோவையில் தங்கியிருந்தாலும் நகரத்தையும் மக்களின் வாழ்வியலையும் பார்க்கமுடியவில்லை ஆனால் கோவை, திருப்பூர் நண்பர்கள் தலா ஐந்து மணி நேரம் தீபாவளிப் பரபரப்பிலும் சந்தித்தது பெருமகிழ்ச்சி உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்வேன்.
கோவை விமான நிலையத்தில் அந்த விடிகாலைப் பொழுதில் ராம்ராஜ் காட்டன் மற்றும் பனியன் கடையைத் தவிர வேறெந்தக் கடையும் திறக்கவில்லை.தீபாவளி தினம் விமானம் ஒழுங்காக குறித்த நேரத்துக்கு வந்து சேரவேண்டும் என்று மனதுக்குள் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கொண்டிருந்தேன்.  எல்லாம் டெக்கான் ஹெரல்ட் விமானம் கற்றுக்கொடுத்த பாடம் தான். 2004 வாக்கில் நான் கொச்சின் இருந்து மதியம் பெங்களூர் வருவதற்காக பதிவு செய்திருந்த டெக்கன் ஹெரல்ட் என்னை விமான நிலைத்திலேயே கிடத்தி வைத்து நடுச்சாமம் தான் கரை சேர்த்தது. தீபாவளி நாளில் இப்பிடி ஒரு அனுபவம் கிடைக்கக்கூடாது என்று எண்ணின்னேன்.
குறித்த நேரத்தில் ஸ்பைஸ் ஜெட்டும் என்னை சென்னையில் இறக்கியது. வணக்கம் வாழவைக்கும் சென்னை இழுக்குதென்னை உனக்கு ஈடு இல்லையே என்று மனதுக்குள் பாடிக்கொண்டேன். சென்னையைக் கண்டால் எனக்கு ஏகப்பட்ட புழுகம் என்பதை மேலும் அறிய இதையும் படிக்கலாம் (பகுதி விளம்பரம்)  சென்னை என்னை வா வா என்றது! http://www.madathuvaasal.com/2012/08/blog-post.html
 
ஏற்கனவே ஒழுங்கு செய்த வாடகைக்கார் சாரதியும் வந்துவிட்டார்.
 
அவர் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க பழுத்த பழம் நெற்றியில் திருநீற்றுப் பட்டை, முப்பது வருடங்களுக்கு மேலாக  வாடகைக்கார் ஓட்டுகிறாராம். சென்னையின் பாரிய வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. "என்னது ரோடில் ஆளுங்களையே காணோம்" என்ற என் குரலுக்கு, "தம்பி நீங்க தீபாவளி சமயத்துல வந்ததால தப்பிச்சீங்க, இல்லைன்னா நத்தை மாதிரித்தான் போயிருப்போம், முன்னல்லாம் இப்பிடி இல்லை தம்பி இப்ப பசங்களே டூவீலர்னு இருந்த காலம் போய் காரெல்லாம் வாங்கிடுறானுக, ரோட்ல கால் வைக்க முடியாது" என்று  அவர் சொல்லி முடிப்பதற்குள்,  "இங்க பாருங்க சார் பஸ்ஸை நிறுத்திட்டு முன்னாடி சரவெடி கொழுத்துறான் அறிவுக்கொழுந்து"  வால் பையன்கள் சிலர் ஓடி வந்து பட்டாசுக்கட்டைவீதியில் வைத்துக் கொழுத்திவிட்டு ஓடியதை வெறுப்போடு காட்டினார் எனக்கு உள்ளூரச் சிரிப்பு, நானும் அந்தக் காலத்தில் இப்பிடித்தானே ;-)

தி. நகரில் நான் தங்குவதற்கு ஏற்பாடு செய்த ஹோட்டலில் இறக்கிவிட்டு விடைபெற்றார் அந்தப் பெரியவர். 

சென்னை வரப்போகிறேன் என்றதும் கட்டாயம் சந்திக்கவேண்டும் என்று அன்புக்கட்டளையிட்டவர் சகோதரர் சஞ்சீவி @nemkals அவர்கள். ட்விட்டர் வழியாகத்தான் நட்பு, ட்விட்டரில் நான் இருவரும் பேசிக்கொண்டது குறைவு என்றாலும் நேரில் கண்டபோது அந்த உணர்வு சிறிதும் இருக்கவில்லை. தீபாவளியன்று காலை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போகவேண்டும் என்று நான் கேட்டபோது அவர் காருடனேயே வந்துவிட்டார். 
 கோயிலுக்குப் போகுமுன் கபாலீஸ்வரர் கோயிலில் இன்று காலை 10.30 மணிக்கு மினிமினி சந்திப்பு ஆர்வமுள்ள நண்பர்கள், தனிக்காட்டுராஜாக்கள் இணைந்துகொள்ளலாம், இப்படி ஒரு ட்விட் போட்டேன்.

இருவருமாகக் கோயிலுக்குள் பிரகார வலம் வந்தோம். கபாலீஸ்வரரை நான் சந்திப்பது இரண்டாவது தடவை. கடந்த தடவை இடம் வலம் தெரியாமல், தமிழக சுற்றுலா வாரியத்திலேயே என்னை ஒப்படைத்திருந்தேன். சுற்றுலா வழிகாட்டி என்னையும் கூட வந்தவர்களையும் ஒரு சம்பிரதாயத்துக்காக கோயிலைக் காட்டிவிட்டு மெரீனா பீச்சுக்கு இட்டாந்துவிட்டார் :-) இம்முறை சஞ்சீவ் நிதானமாக கோயிலின் உட்பிரகாரங்களைக் காட்டிக் கொண்டே வந்ததால் ஒரு குழந்தை போலப் புதுமையாகக் கவனித்துக் கொண்டே வந்தேன். சென்னையில் இருக்கும் இரண்டு நாட்களில் என்னைச் சந்திக்கவேண்டும் என்று பிரியப்பட்ட நண்பர்களின் அழைப்பு வேறு வந்து கொண்டிருந்தது. 

நண்பர் ரவி @ravi_2kpp அழைத்தபோது கபாலீஸ்வரர் கோயிலில் நாங்கள் மையம் கொண்டிருப்பதாகச் சொல்ல, இதோ வருகிறேன் என்று  தன்னுடைய  நண்பருடன் வந்துவிட்டார். ரவியின் நண்பர் ஒரு இசைக்கலைஞர், ஆஸ்திரேலியாவுக்கும் வந்திருக்கிறாராம். அடுத்த தடவை சிட்னிக்கு வரும் போது சொல்லுங்க வானொலியில் ஒரு பேட்டி எடுத்திடுவோம் என்றேன் நான். நாங்கள் கபாலீஸ்வரர் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் இருந்து பேசிக்கொண்டிருக்கும் போது என் செல்போனுக்கு ஒரு அழைப்பு. என் இலக்கத்தை பகிரங்கமாக இட்டதால் யார் அழைக்கிறார்கள் என்று நானே கேட்கவேண்டி இருந்தது. தன்னுடைய பெயர் ராஜேஷ் என்றும், மைலாப்பூரில் இருப்பதாகவும் நானும் இந்த ட்வீட் அப் இல் கலந்து கொள்ளலாமா என்றார். என்ன கேள்வி ஐயா உடனே வாருங்கள் என்றேன். அடுத்த நிமிடமே எமக்கு முன்னால் பட்டாசாக வந்திருந்தார் ராஜேஷ் @mylairajesh  , ஆமாம் அவர் ஆரம்பகாலத்தில் ட்விட்டரில் பட்டாசு என்றே ஹேண்டில் வைத்திருந்தவர். "ஆகா ஒரு பட்டாசே தீபாவளி தினத்தில் நம்மைத் தேடி வந்திருக்கிறதே" என்று கடித்தேன், சிரித்தார். எல்லாருமாக எங்காவது காலை உணவு சாப்பிடலாமா என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு கடையாகத் தட்டிப் பார்த்தோம். தீபாவளிக்கு சாத்து நடை சாத்து என்றிருந்தன.
மைலாப்பூர் வசந்தபவன் மட்டும் இனிதே வரவேற்றது.  இதற்குள் நண்பர் ராஜேஷ் எங்கோ ஒரு புத்தகக் கடை சென்று விவேகானந்தர், சுவாமி இராமகிருஷ்ணர் அருள்மொழிகள் அடங்கிய கனத்த புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து கையில் திணித்தார். வசந்த பவனில் ஆளாளுக்கு நெய், ரவா தோசை, தேநீராகாரத்துடன் மினி சந்திப்பை முடித்து விட்டு சகோதரர் சஞ்சீவிடம் நான் தங்கியிருக்கும் ஹோட்டலில் விட்டுவிடுகிறீர்களா என்று கேட்டால் "அதெல்லாம் முடியாது நம்ம வீட்டுக்கு வந்து மதிய உணவு எடுத்துவிட்டுத்தான் போகலாம்" என்று விடாப்பிடியாக நின்றார். கோவையில் அவர் படித்த காலத்தில் ஈழத்து நண்பர்களும் அவரின் நண்பர்களாக இருந்ததை நினைவு படுத்தி மகிழ்ந்தார் சஞ்சீவ்.
சஞ்சீவின் வீட்டில் அவரின் அப்பா முதற்கொண்டு, அம்மா, மனைவி, சகோதரர் ஈறாக எல்லோருக்கும் என்னை அறிமுகப்படுத்தி, அவர்களின் குடும்ப விருந்தில் என்னையும் கலந்து சிறப்பிக்க வைத்தனர். அமைதியான, பண்பான ஒரு உறவை எனக்கு இணையம் கைகாட்டி விட்டிருக்கிறதே என காரில் திரும்பும் போது நினைத்து நினைத்து நெகிழ்ந்தேன்.

 நண்பர் ஜி.ராவுக்கு அழைத்தேன்.  
"அமாஸ் அம்மா, சேகர் சார் வீட்டுக்குப் போகலாமா ஜி.ரா?"
"அவங்க படத்துக்குப் போறதா பேசிக்கிட்டாங்க, இருங்க பிரபா அவங்க வீட்டுக்கு அழைச்சுட்டு திரும்ப அழைக்கிறேன்"
"சாயந்தரம் தான் வருவாங்களாம் பிரபா"
கொஞ்சம் இளைப்பாறி விட்டுக் காத்திருந்தேன். ஜி.ரா தன் காரில் வந்தார். ஶ்ரீராம ராஜ்யம் இசைத்தட்டு உள்ளிட்ட அன்புப்பரிசைக் கை மாற்றினார்.  ஜி.ரா என்ற கோ.ராகவன் என் வலைப்பதிவின் ஆதாம் காலத்து நண்பர் என்பதால் அந்நியம் இல்லாமல் நிறையப் பேசிக்கொண்டு வந்தோம்.
அமாஸ் அம்மாவும், சேகர் சாரும் @amas32 @n_shekar வீட்டுக்கு வரவும் நாமும் போய்ச் சேரச் சரியாக இருந்தது.
 

சேகர் சார் - அமாஸ் அம்மா தம்பதிக்குத் திருஷ்டி சுத்திப் போடணும். இந்த சமூக ஊடகத்தில் இருக்கும் நட்பு வட்டங்களை இவர்கள் இருவரும் நேசிக்கும் பாங்கே தனி. இவ்வளவுக்கும் நாமெல்லோரும் முன்பின் பார்த்தே அறியாதவர்கள். சென்னை வந்தால் நம்ம வீட்டுக்கு வராமல் போகமுடியாது என்ற அவர்களின் அந்த வேண்டுகோளை நான் நிறைவேற்றினேன் என்பதை விட, என்னையும் ஜி.ராவையும் மீண்டும் சந்தித்துப் பேச வாய்ப்புக் கிட்டிய மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தெரிந்தது. மாலைச் சிற்றுண்டியும் சுடச் சுடக் கிட்டியது.  அமாஸ் அம்மாவின் அப்பா குறித்த ஆங்கில நூலையும் ஒரு திருவுருவப் படத்தையும் அன்புப் பரிசாகக் கொடுத்தார்கள். அந்த அழகான வீட்டின் வரவேற்பறையே தோட்டாதரணியின் கைவண்ணம் போல இருந்தது.
இவர்களது மனம் போல என்றைக்கும் நிறைவான வாழ்க்கை கிட்டவேண்டும் என்று பின்னர் கதிர்காமக் கந்தனைச் சந்தித்தபோது முருகனிடம் தனிப்பட்ட வேண்டுகோளை வைத்தேன்.

அமாஸ் அம்மா வீட்டில் இருந்து கிளம்பும் போது நண்பர் ராஜேஷ் பத்மன்  தொலைபேசினார். எங்காவது ஒரு காபி டே இல் சந்திப்போமா என்று ஜி.ராவே அந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தினார். குறுகிய நேரத்தில் காபி அருந்தியபடியே நிறையப்பேசினோம். விடைபெறும் நேரம் எனக்கு ஒரு மிரட்டலான தொலைபேசி அழைப்பொன்று, நான் யாருங்க நீங்க என்று கொஞ்சம் ஆட்டுக்குட்டியாக மாற, "கானா பயந்துட்டீங்களா நான் தான் இலவசக் கொத்தனார், யு.எஸ் லேர்ந்து அழைக்கிறேன், எப்படி சென்னை பயணமெல்லாம் இருக்கு" என்று சிரித்துக் கொண்டே குசலம் விசாரித்தார். ஆகா அண்ணன் ட்விட்டர் டி.பியில் தான் டெரர் போஸ் கொடுக்கும் கானா உலகநாதன் ஆனால் நேரில் பேசும் போது உள்ளத்தில் நல்ல உள்ளமாக இருக்கிறாரே என நெகிழ்ந்தேன். உண்மையில் அவர் அப்போது அழைத்த போது எனக்குக் கிட்டிய சந்தோஷத்துக்கு எல்லையில்லை.

சிட்னியிலிருந்து தீபாவளிக்காகப் புறப்பட்டசென்னை நண்பர் சுரேஷ், திருவல்லிக்கேணி வாங்க பிரபா நிறைய பட்டாசு வெடி போடுவோம் என்று முன் கூட்டியே சொல்லியிருந்தார். ஆனால் நான் எல்லா சந்திப்புக்களையும் முடிக்கவே மணி ஏழு கடந்ததிருந்தது. சுரேஷுக்கு அழைத்தால், அடடா அருமையான வாண வேடிக்கையை மிஸ் பண்ணிட்டீங்களே என்றார். உண்மைதான், சென்னையில் பூவே பூச்சூடவா படத்தில் நதியா கோஷ்டி பாடுமாற்போல "பட்டாசு சுத்தி சுத்திப் போடட்டுமா" அல்லது புதுக்கவிதை ரஜினி போல "வா வா வசந்தமே" பாட்டில் வரும் தெருவெங்கும் ஒளிவிழாவை காணக் கிட்டவில்லை. இப்போதெல்லாம் முன்ன மாதிரி சென்னையில் தீபாவளி களை கட்டுவதில்லை என்று நண்பர் சொன்னார்.

தீபாவளி என்றால் தமிழகம் கொண்டாடும் இன்னொரு விஷயம் புதுப்பட ரிலீஸ். சரி அதுக்காவது யோகமுண்டா என்று முடிவெடுத்து  தனியே தன்னந்தனியே தி நகரில் உலாவுகிறேன். சத்யம் தியேட்டர் போலாமா என்று ஒரு திட்டம்.

"ஆட்டோக்காரரே சத்யம் தேட்டர் போவணும்"
" ஒன் ஃபிப்டி சார்"
" சரீங்க"

இந்த நேரம் சத்யம் தியேட்டரில் படம் இருக்குமா? கடைசியா தகரக்கொட்டில் சத்யமில் சார்லி சாப்ளின் படம் பார்த்தது. இப்போது அந்தத் தகரக்கொட்டகையே இல்லாத மாட மாளிகை போல சத்தியமாக இருந்தது.

 
விஜய் மக்கள் இயக்க்க்க்க்க்க்கம்ம்ம்ம்

கூட்டத்தைப் பிரித்து டிக்கெட் கவுண்டரை எட்டிப் பார்த்தேன்.
"சார்ர்ர் நைட் ஷோ ஃபுல்லு சார்"
 "சரீங்க :("

ஒரு விஐபியை சீட்டில் அமரவைக்கும் பாக்கியத்தை சத்யம் இழந்துவிட்டது
 அந்த நேரம் ட்விட்டரைப் பார்த்தேன், யாரோ ஒரு புண்ணியவான் எக்ஸ்ப்ரஸ் அவெனியூ போங்க அங்கே மல்டிப்ளெக்ஸ் இருக்கு என்றார்.

ஆட்டோக்காரரே எக்ஸ்ப்ரஸ் அவெனியூ வருமா? 
வராதுங்க
எப்பிடிப் போறதாம்? 
லெப்டு அப்புறம் லெப்டுல கட்டு

நடு நிசியில் தனியே ராயப்பேட்டையில் ராஜ நடை போட்டேன்.

ஒரு யோசனை தட்டி இன்னொரு முருங்கை மரம் நோக்கிப் போய்க்கிட்டிருக்கேன் #தேவி தியேட்டர்
தக்காளி, சாந்தித் தியேட்டரில் அம்மாவின் கைப்பேசியாவது பார்த்துடணும்யா என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்
ம்கும் தேவி தியேட்டர் உள்ளயே போகமுடியாது இந்த லட்சணத்தில் டிக்கட் கிடைக்கும்கிற? என்ற அளவில் கும்பமேளாவாக இருந்தது.

பீட்சா டிக்கட் இருக்காம் ஆனா நமக்கு பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக் ஆச்சே #பயம் அது வேற டிப்பார்ட்மெண்ட்
இது இப்பிடியிருக்க, எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி சாந்தி தியேட்டர் நன்றாகத் தூங்குகிறது

ஏதோ ஒரு நப்பாசையில் மீண்டும் தேவி பரடைஸ் நோக்கி நடை, ஒருவாறு சந்நிதியை  அடைந்து விட்டேன், அதாங்க தியேட்டர் வாசல்.
துப்பாக்கி வச்சிருக்குறவங்க எல்லாம் உள்ள வந்துடுங்க மத்தவங்க வெளில போயிடுங்க #யோவ் சரியா பேசுய்யா தூக்கி உள்ள போட்றுவானுக, துப்பாக்கி டிக்கெட் என்று சொல்றதுக்குப் பேச்ச பாரு பேச்ச என்று உள்ளுர முணுமுணுத்துக் கொண்டே

தி நகர் ஹோட்டல் -> சத்யம்-> ராயப்பேட்டை -> தேவி பாரடைஸ் -> சாந்தி -> தேவி பாரடைஸ் (இன்னொரு வாட்டி செக்கிங்) -> தி நகர் ஹோட்டல்  என்று மீண்டும் அதே இடத்துக்கு வந்தபோது நள்ளிரவுக்கு ஒரு சில நிமிடங்கள் பாக்கி.

பசி வயிற்றைக் கிள்ளியது, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பக்கமெல்லாம் சேலைக்கடைகளின் நிழல்கள் தான், ஒன்றிரண்டு சாப்பாட்டுக்கடைகளையும் கழுவித் துடைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பெட்டிக்கடைக்குப் போய் சோடா ஒன்று வாங்கி வயிற்றை நிரப்பிவிட்டுப் படுக்கையில் சாய்ந்தேன். சென்னையில் நான் தேடி வந்த தீபாவளியில் பட்டாசு வாண வேடிக்கையும், புதுப்படமும் இல்லாவிட்டாலும் இணையம் மூலம் சம்பாதித்த நல்ல உள்ளங்களை முதன்முதலாகச் சந்தித்து இந்த நாளைக் கொண்டாட வழி விட்ட ஆண்டவனுக்கு நன்றி.

அடுத்த நாள் எதிர்பாராத ஒரு அனுபவம் வாய்த்தது.


Tuesday, October 08, 2013

பாரா சார் - இசை போல வாழ்வு

சின்ன வயசிலிருந்தே வேர்க்கடலைப் பேப்பர் சரையில் இருக்கும் எழுத்துக்களையும் தேடிப்படிக்கும் சுபாவம் எனக்கு. அதனாலோ என்னவோ எழுத்தாளர்கள் என்றால் தனி மரியாதை என்பதை விட, இந்த ஆக்க இலக்கியக்காரர்களை நேரில் நடமாடும் பிரம்மாக்களாவும் மனதில் போற்றிக் கொள்வேன். ஈழத்தில் இருந்த காலத்தில் அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். முதன் முதலில் "காட்டில் ஒரு வாரம்" என்ற அநு.வை.நாகராஜனின் நூல் வெளியீட்டு விழாவுக்குப் போகிறேன், அந்த நூல் ஒரு சிறுவர் இலக்கியம் என்பதால் அந்த எழுத்தாளர் தன் கையெழுத்துப் பிரதியையே எனக்குக் கொடுத்து வாசிக்க வைத்து அணிந்துரை எழுத வைத்தது தனிக்கதை. புத்தக வெளியீட்டு விழாவில் கண்ணில்பட்டவர்களெல்லாம் சொக்கன், வரதர் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன் என்று இன்னும் பல ஈழத்தின் மிகப்பெரும் எழுத்துலக ஆளுமைகள். ஒரு உச்ச சினிமா நட்சத்திரத்தை திரையில் பார்த்துப் பழகிப்போன கடைக்கோடி ரசிகன் நேரில் காணும் போது உண்டான தவப்பலன் போல எனக்கு அது. பின்னாளில் நிறைய எழுத்தாளர்களை நேரிலும், வானொலிப்பேட்டிகளிலுமூடாகத் தரிசித்து விட்டாலும் அந்தச் சிறுவயது பிரமிப்பு கொடுத்த சுகம் இன்னும் அகலவில்லை. 

எப்போதோ எங்கோ ஒரு திசையில் இருந்து எழுதி வைத்தாலும் அந்த எழுத்தாளனின் படைப்பை வாசிக்கும் நேரத்தில் இருந்து தன் எழுத்துகளினூடே வாசகனுடன் அவன் பேசத்தொடங்குகிறான். பிடித்த எழுத்தாளர், பிடிக்காத எழுத்தாளர் என்று வாசகன் இனம் பிரிப்பதும் கூட இங்கே தான் ஆரம்பிக்கிறது. சில எழுத்துகளைப் படிக்கும் போது அட இதை நாமும் கூட நினைத்திருக்கிறோமே என்று கூட எண்ணுவதுண்டு. வாழ்வின் சில தீர்வுகளை ஏதோ ஒரு படைப்பின் வழியாகப் பெற்றுக்கொள்கின்றான் வாசகன். அங்கே தான் எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான ஆத்ம பந்தம் இன்னும் வலுப்பெறுகிறது.

பாரா சார் என்று அன்போடு நாம் அழைக்கும் எழுத்தாளர் பா.ராகவன் அவர்களை சமூக வலைத்தளங்களினூடாகத் தான் அறிமுகம். எப்போது, எப்படி அறிமுகமானார் என்று பலரை நினைப்பதுண்டு. ஆனால் அவர்கள் மீதான நேசம் குறைவதில்லை. உண்மையைச் சொல்லப் போனால் பாரா சாரின் புத்தகங்களை விட தன்னுடைய தளத்தின் வழியாகப் பகிரும் பத்தி எழுத்துகளையே அதிகம் தொடர்ந்து வாசித்து வருபவன். அந்த எழுத்துகளே அவரின் தொடர்ந்து பற்றுக என்று மனம் சொல்ல வைத்தவை. பாரா சார் மீதான மதிப்பு இன்னும் அதிகப்பட இன்னொரு அதி முக்கிய காரணம் ஒன்றுள்ளது, அதுவே என்னை இவ்வாறெல்லாம் எழுதத்தூண்டியது என்றும் சொல்லலாம்.

பொதுவாகவே பிரபலங்கள் தம்மைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாத ஒரு நெருப்பு வளையத்தை வைத்திருப்பார்கள். அந்த வளையத்தைத் தாண்டி வர வாசகனையோ, ரசிகனையோ அனுமதிக்க மாட்டார்கள். அதிலும் இன்று சமூக வலைத்தளங்களில் பெருகிவரும் ஏகலைவ எழுத்தாளர்களைக் கண்டால் சிலருக்கு நாசி கடிக்கும். இந்தச் சூழலில் தான் பாரா சாரின் தனித்துவம் வெளிப்படுகிறது. ஒரு எழுத்தைப் படித்தால் அது யார் எழுதியது என்ற ரிஷி மூலம் பார்க்காமல் தனக்குப் பிடித்திருந்தால் நாலு பேருக்குப் பகிர்வார், அதே சமயம் எழுத்துப் பிழை, கருத்துப் பிழை இருந்தால் வலிக்காமல் குட்டுவார். இதையும் தாண்டி, எந்த வித சமரசங்களும் இல்லாமல் நட்போடு பழகுவதில் அவருக்கு நிகர் அவரே. 

கடந்த நவம்பர் மாதம் நான் இந்தியாவுக்குப் பயணப்படுவதாக அறிந்ததுமே "என்னைய்யா இங்க வந்துட்டு என்னைப் பார்க்காமப் போனா தொலைச்சுப்புடுவேன்" என்று அன்புக் கட்டளை பாரா சாரிடமிருந்து. ராப்பகலா எழுத்துப் பணிக்குள்ளும் நம்மை எல்லாம் சந்திக்க நேரம் ஒதுக்குகிறாரே என்ற இன்ப அதிர்ச்சியோடு, சென்னையில் இருந்த அந்த இரண்டு நாட்களில் ஒரு நாள் காலைப்பொழுதில் வட பழனி முருகனைச் சேவித்து விட்டு பாரா சாருக்கு அழைப்பிடுகிறேன். "இதோ இப்பவே வர்ரேன்" என்றவாறு வட பழனியிலுள்ள சரவணபவனில் சந்திப்பதாகக் கூறிவிட்டு விரைகிறார். காலைச் சாப்பாட்டை வாங்கிப் பரிமாறியவாறே தங்கு தடங்கலின்றிப் பேசுகிறோம். சரவணபவனில் சந்திப்பு முடிந்ததும் வேறு சில நண்பர்களைச் சந்திப்போம் என்று நினைத்தால், "இவ்வளவு தூரம் வந்திருக்கே, நம்ம வீட்டுக்கு வராமப் போகக்கூடாது" என் பதில் வார்த்தைக்குப் காத்திராமல் முன்னே பறக்கிறார். எனக்கோ அவரின் பொன்னான நேரத்தைத் திருடுகிறோமே என்ற குற்ற உணர்வு. பாரா சார் வீட்டிலும் அன்பான உபசரிப்பு தந்தையின் குணத்தில் வீட்டுக்கு வந்த விருந்தாளியையும் முகம்கொடுத்துக் கனிவாகப் பேசும் மகள் வேறு. எங்கள் பேச்சுக்கச்சேரி மூன்று மணி நேரங்கள் கடந்த பின்னரும் நான் மொள்ள பிரியாவிடை கொடுத்தாலும் "கானா கானா என்ன ஆளுய்யா நாள் முழுக்க நம்ம வீட்ல இருந்துட்டுப் போறது தானே" எனச் செல்லமாகக் கடிந்தார். சிரித்துக்கொண்டே விடைபெற்றேன்.

ஒருமுறை இகாரஸ் பிரகாஷ், புத்தக வடிவமைப்பில் பாரா சார் கொண்டிருக்கும் சிரத்தை குறித்த ஒரு அனுபவப் பகிர்வைக் கொடுத்திருந்தார். லே அவுட் சமாச்சாரத்தில் சமரசம் கொள்ளாது விடாது வாங்கிக் கொள்ளும் அந்தச் சம்பவக்குறிப்பு இப்போதும் ஏதாவது ஒரு Project செய்யும் போது என் மூளைக்குள் ஓடும் அளவு அது பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. 

பாரா சார் நல்லதொரு இசை ரசிகர் என்பதைப் பல தருணங்களில் கண்டுணர்ந்தாகிவிட்டது. இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் அவருக்கு விலை உயர்ந்த பரிசு என்று ஏதும் உண்டெனில் அது இந்தப் பாட்டாகத் தான் இருக்கும். 
இசையில் தொடங்குதம்மா 

http://youtu.be/ox0gJGCasZc