மலேசியப் பயணம் பற்றிச் சொல்ல வந்து சிங்கப்பூர் புராணம் பேசிக் கொண்டிருக்கிறாரே என்று நீங்கள் சலிக்காமல் இருக்க இந்தப் பதிவோடு ஒரு முற்றுப் புள்ளி வைக்க இருக்கின்றேன்.
ஒவ்வொரு முறை சிங்கப்பூர் பயணம் சென்றாலும் ஈழநாதனை மட்டும் சந்தித்து விட்டு வரும் வழக்கம் இருந்தது. காரணம் முன்னேயெல்லாம் சிங்கைப் பதிவர்கள் குறித்த அறிமுகமும் கிடையாது அதே போல கோவி கண்ணன் போன்ற ஒரு சிலரைத் தவிர பரவலாக அங்கே பதிவர்கள் தோன்றாமல் இருந்தது இன்னொரு காரணம். ஆனால் இப்போது பார்க்கும் போது சிங்கப்பூர் பதிவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் இருந்து பதிவோரை முந்திச் சென்று விடும் போல இருக்கின்றது. அதை ஓரளவு உறுதிப்படுத்துமாற் போல அமைந்தது எனது சிங்கை வலைப்பதிவர் சந்திப்பு.
போகும் இடத்தில் அங்கிருப்போருக்கு எதற்குச் சிரமம் என்று இப்படியான வலைப்பதிவர் சந்திப்பை தவிர்ப்போம் என்று எண்ணினாலும், முகம் காணாமல் வலை மூலம் நேசத்தை ஏற்படுத்திய உறவுகளைச் சந்திக்க வேண்டும் என்ற அற்ப ஆசை மட்டும் மனதின் சின்ன மூலையில் ஒட்டிக்கொண்டிருந்தது. சிங்கை வந்து இரண்டாம் நாள் நம்ம நிஜமா நல்லவரை தொடர்பு கொண்டு பேசினேன். அவரோ சத்தமில்லாமல் ஜோதிபாரதி, கோவி கண்ணன் போன்றோருக்கு சொல்லவும் அவர்கள் சக வலைப்பதிவர்களை மே 14 ஆம் திகதி ஒன்று கூட்டி நான் தங்கியிருந்த லிட்டில் இந்தியா பகுதியில் இருக்கும் காளி அம்மன் கோயிலடிக்கு அழைத்து வந்தார்கள்.
மே 14 ஆம் திகதி வியாழன் மாலை ஏழு மணி வாக்கில் காளி அம்மன் கோயிலடிக்குப் போகின்றேன். அன்று என் பிறந்த நாள் வேறு. அங்கே வழி மேல் விழி வைத்தவாறு நிஜமா நல்லவன், டொன் லீ, மற்றும் சின்னப்பாண்டி ஆயில்யன் சார்பில் அவரின் நண்பர்களுமாக காத்திருந்தார்கள். மெல்ல மெல்ல பதிவர்கள் வருகை ஆரம்பித்தது. கிஷோர், ஜோதிபாரதி, வடுவூர் குமார், கிரி, சிங்கை நாதன், அதிரை ஜமால், இராம் என்று நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள், கோவி கண்ணனை தவிர. கோவியார் வரும் வரை இளநீர் பருகுவோம் என்று கூட்டம் இளநீர் கடையை முற்றுகையிட்டது. இளநீர்க்காரருக்கு நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும் இப்படியொரு கூட்டத்தின் திடீர் வருகையை எண்ணி.









சகோதரன் "டொன்" லீ இந்தச் சந்திப்பைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கின்றார் இங்கே.
தாயகத்தில் இருந்து என்னோடு வலைப்பதிவினூடக அறிமுகமாகி பின்னர் தற்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் சகோதரன் விசாகனின் சந்திப்பும், அவர் பழகிய விதமும் நாம் இருவரும் ஒரே அலைவரிசையில், ஒத்த ரசனையில் இயங்குவதை மேலும் உறுதிப்படுத்தியது.
தங்கச்சி துர்காவை அவரின் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் உணவகத்தில் சந்தித்தேன்.
என்னதான் கூகுள் சாட்டில் ஆளாளுக்கு காலை வாரினாலும் நேரில் அண்ணனுக்கு மரியாதையான தங்கச்சியாக இருந்தார் :)
0000000000000000000000000000000000000000000000000000
சிங்கை லிட்டில் இந்தியாவில் மூலைக்கு மூலை இருக்கும் சிறு பெட்டிக்கடைகளில் தீராநதி, புதிய பார்வையில் இருந்து விகடன் குமுதம் சமாச்சாரங்கள் கிடைக்கின்றன. ஒரு கடையில் கிழக்குப் பதிப்பகத்தின் படைப்புக்களும் தென்பட்டது அவர்களின் வியாபாரப் பரம்பலின் வெற்றியைக் காட்டி நின்றது. சிங்கையில் இருந்த காலம் வரை தமிழ் முரசு பத்திரிகையை தினமும் வாங்கினேன். அப்போது அகோரமாக நடைபெற்று வந்த வன்னி முற்றுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து சுடச் சுட செய்திகளை வெளியிட்டதோடு இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளையும் சிறப்பு மாலைப்பதிப்பில் இடம்பெற வைத்தது சிங்கை தமிழ் முரசு பத்திரிகை. அளவான பக்கங்கள் என்றாலும் கச்சிதமாக செய்திகளை நிறையவே கொடுத்து வருகின்றது தமிழ் முரசு.
000000000000000000000000000000000000000000000000000000000000
சிங்கப்பூர் வந்து விட்டு முஸ்தபா சென்டர் போகாவிட்டால் கொலைக்குற்றம் போல :0 அங்கும் ஒரு எட்டு நடந்தேன். முஸ்தபாவின் எல்லா தளங்களையும் வலம் வந்தேன். மதிய நேர சாப்பாட்டுக் களைப்பில் துணிக்குவியலுக்கு மத்தியில் ஊழியர்கள் சிலர் கன்னத்தில் கைவைத்து சுகமான கனவுலகத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். சில பகுதிகளில் இருப்போர் வாங்கினால் வாங்கு இல்லாட்டி நகரு என்று பொறுப்புணர்ச்சியோடு தமது வாடிக்கையாளர் சேவையை ஏனோ தானோவென்று நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். புத்தகப் பகுதிகளில் தன்னம்பிக்கை தரும் நூல்கள் தான் இறைந்து கிடந்தன. சிங்கப்பூரர்களுக்கு தன்னம்பிகைக்கு மாத்திரை கூட செய்து விற்பார்கள் போல. சீடிப்பக்கம் தாவி சத்யன் அந்திக்காடு இளையராஜா கூட்டணியில் வந்த "விநோத யாத்ரா" டிவிடியையும் தென்கச்சி சுவாமி நாதனின் "இன்று ஒரு தகவல்" டிவிடியையும் வாங்கினேன். ஆயிரம் தான் இருந்தாலும் ஒரே கூரையின் கீழ் விதவிதமான தெரிவுகளில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் முஸ்தபாவை விட்டால் கதி ஏது?
000000000000000000000000000000000000000000



00000000000000000000000000000000000000000000000




தங்குமிடம் திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக இம்முறை வாய்த்த சீனத்து டாக்சிக்காரர் நிறையவே பேசிக்கொண்டு வந்தார். அடிப்படை மருத்துவ உதவிகளுக்குக் கூட பெருமளவில் அரசினை எதிர்பார்க்க முடியாது சாகும் வரை வேலை செய்தே வாழ்க்கை நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலையைப் பற்றியும், அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதன் வருவாய் மூலம் பிற்காலத்தில் தம் வாழ்நாளின் இறுதிக்காலத்தைக் கழிக்கலாமே என்ற நினைப்பில் முதலீடு செய்து சமீபத்திய அமெரிக்க பொருளாதாரச் சரிவில் தனது முதலீட்டில் 60000 டொலர் இழப்பையும் பற்றி சொல்லி நொந்து கொண்டார் அந்த முதிய டாக்சிக்காரர். இப்படியான வாழ்க்கை முறை வாய்த்ததால் தான் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வோர் தொகை வருஷா வருஷம் அதிகரிப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. ஆக மொத்தத்தில் வாழ்வின் கடைசிப்புள்ளி வரை ஓடிக்கொண்டே இருப்பவருக்கே லாயக்கான திரிசங்கு சொர்க்கமாக சிங்கப்பூர் இருப்பதை உணர்ந்து கொண்டேன்.
மலேசியா நோக்கிய பயணம் அடுத்த சில தினங்களுக்குப் பின்னர் ஆரம்பித்தது.