Social Icons

Pages

Thursday, January 22, 2009

கம்போடியக் கலாச்சாரக் கிராமம் கண்டேன்

அந்த நாள் காலையில் ஆரம்பித்து தொடர்ச்சியாக ஆலயங்களைக் கண்ணாரக் கண்டு மாலை சிவப்புக் கொடி காட்டியும் எனக்கோ களைப்பு மட்டும் வரவில்லை. வழிகாட்டியும், கார்க்காரரும் என்னை தங்குமிடத்தில் விட்டு விட்டு அவரவர் வழியில் போனார்கள். ஓட்டல் வரவேற்பாளினி பற்பசை விளம்பரம் போல அகல விரித்த பாற்பல் சிரிப்புடன் கைக்கூப்பினாள். கையில் இருந்த கமராவை அவளுக்கு முன்னால் வைத்து விட்டு சிரித்தேன். இன்றைய பயணம் எப்படியிருந்தது என்றாள். நானும் துண்டுச் சீட்டில் குறித்து வைத்த இடங்களை சின்னப்பிள்ளை போல ஒப்புவித்தேன். "அட! நானே பார்க்காத இடமெல்லாம் போயிருக்கிறீர்களே" என்று சொல்லிச் சிரித்தவாறே என் கமராவின் பொதியை அகற்றி சேமித்த படங்கள் ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து இலயித்தாள்.
"சரி! இன்று மாலை என்ன செய்வதாய் உத்தேசம்?" என்று அவள் கேட்கவும்
" எங்கே போகலாம்" என்று மீண்டும் ஆர்வக் கோளாறாய் நான் கேட்டேன்.
"இங்கே வருபவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம் கம்போடிய கலாச்சாரக் கிராமம் (Cambodian Cultural Village), நான் ருக் ருக்கிற்கு ஒழுங்கு செய்கிறேன், நீங்கள் ஷவர் எடுத்து விட்டு வாருங்கள்" என்றாள்.
2 வருஷம் முன் சித்திரை வெயிலில் மவுண்ட் ரோட்டில் அலைந்த களைப்பு மீண்டும் வந்து எட்டிப்பார்த்தது. ஆனால் சில்லென்ற தண்ணீர் மழையில் குளித்து உடம்பிற்கு சுதி ஏற்றிக் கொண்டு மீண்டும் வரவேற்பறை வந்தேன்.
"உங்களுக்காக ருக் ருக் காத்திருக்கிறது, இரண்டு அமெரிக்க டொலர் மட்டும் கொடுத்தால் போதும்" என்றாள் வரவேற்பாளினி.

வெளியே வந்து பார்த்தேன். "ஹலோ சேர்" என்று சலாம் போட்டான், சுமார் பதினாறு வயது மதிக்கத்தக்க ஒரு பிஞ்சு பையன். அவன் தான் இந்த ருக் ருக் வண்டியை வலிப்பதற்காகக் காத்திருப்பவன். வண்டியின் பின்புறத்தில் நான் ஏறி அமரவும், ருக் ருக் வண்டி, ஓரம்போ ஒரம்போ ருக்குமணி வண்டி வருது என்று பாடாத குறையாக சியாம் ரீப் நகரப் பக்கமாக ஓரமாக நகர்ந்தது. ஒரு இருபது நிமிடத்துக்கும் குறைவான தூரத்தில் கம்போடிய கலாச்சாரக் கிராமத்துக்கு வந்து சேர்ந்தோம். முன்னரேயே பேரம் பேசிய காசை வாங்கிவிட்டுப் போகத் தயாராக இருந்த அவனிடம் இன்னொரு பேரம் பேசினேன். 'நான் பத்து டொலர் தருகின்றேன். நான் வரும் வரை இருப்பாயா? என்றேன். காரணமில்லாமல் இல்லை. இது புதிய இடம் மாலை நேரமும் ஆகிவிட்டது. இந்த வேளை இந்தப் பையன் ஏனோ ஒரு உபகாரி போல இருப்பான் என்று என் மனம் சொல்லியது. என் பேரத்துக்கு அவன் மறுபேச்சில்லாமல் உடன்பட்டு தன் ருக் ருக்கை ஓரம் கட்டினான்.

Phirum Ngoy என்ற கம்போடிய பாரம்பரிய இசைக்கலைஞர், வாழ்ந்த காலம் 1865 to 1936

கம்போடிய கலாச்சாரக் கிராமம் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு சிறிய அறிமுகம். நான் பயணித்த சீனா, இந்தியா உட்பட பெரும்பாலான கீழைத்தேய நாடுகளில் இருக்கும் ஒரு சிறப்பான கூறே இந்த கலாச்சாரக் கிராமம் ஆகும். ஒரு நாட்டில் வாழும் பூர்வ குடிகள், வந்தேறு குடிகள் போன்றேரின் கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை போன்றவற்றை ஆதி தொட்டு இன்று வரை காட்சிப்படுத்தும் ஒரு செயற்கையான கிராமமே இந்த கலாச்சாரக் கிராமமாகும். முன்பு சீனா சென்றிருந்தபோது அதுவரை ஒரேயொரு கலாச்சாரக் கூறே சீனாவில் இருக்கின்றது என்ற என் நினைப்பை மாற்றியது அங்கிருந்த கலாச்சாரக் கிராமம். சீனாவில் எத்தனை விதமான உட்பிரிவுகள் இருக்கின்றன என்பதைப் புட்டுப் புட்டு வைத்திருந்தது அது. அதே போல தமிழகத்திற்கு வந்தபோது தக்க்ஷண் சித்ராவும் ஓரளவுக்கு இந்தக் கலாச்சாரக் கிராமத்துக்கு நல்லுதாரணத்தைக் காட்டியது. அதே போலத் தான் நான் கம்போடியாவில் நான் கண்ட கலாச்சாரக் கிராமமும். எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாட்டுச் சுற்றுலாத்துறை பகிரங்கப்படுத்தும் பிரபல்யமான இடங்களோடு, தவறாமல் அந்தந்த நாட்டின் அருங்காட்சியகம், மற்றும் இப்படியான கலாச்சாரக் கிராமம் போன்றவற்றைத் தவற விடாதீர்கள்.
கம்போடியா தன் யுத்த வடுக்களுக்கு மருந்திட்டு ஓரளவு தேறிய போது துளிர்த்த விஷயங்களில் ஒன்று தான் இந்தக் கலாச்சாரக் கிராமமும். 2001 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர் 2003 இல் முழு நிறைவு பெற்றது இது. 11 மாதிரிக் கிராமங்கள், 19 கம்போடிய இனப்பிரிவுகள் குறித்த வாழ்வியல், பண்பாட்டு அம்சங்கள் என்பவற்றை ஒருங்கே கொண்டிருக்கின்றது என்பதை வைத்தே இந்த இடத்தின் முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும்.

வெளிநாட்டவர் என்றால் ஒன்பது அமெரிக்க வெள்ளிகள் கட்டணமாக அறவிடுகின்றார்கள். நுளைவுச் சீட்டை வாங்கிக் கொண்டே போகிறேன். என்னைத் தவிர எங்கெங்கு காணினும் கம்போடியர்களடா என்று கத்தத் தோன்றியது. ஓட்டல் வரவேற்பாளினி சொன்னது ஞாபகம் வந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் தொடர்ந்த ஆறு நாட்கள் வேலை செய்து, ஓய்வையும், களிப்பையும் நாடும் கம்போடியர்கள் தேர்ந்தெடுப்ப்பது இந்த இடத்தைத் தானாம்.
தனியே நான் மட்டும் வேற்று நாட்டவனா என்று நினைக்கையில் உள்ளுரப் பயம் வந்தது. கமராவை யாராவது பிடுங்கிக் கொண்டு ஓடுவானா? காற்சட்டையில் இருக்கு மணிபர்சை யாராவது பதம் பார்ப்பானா? என்று மனச்சாட்சி ஆயிரம் கேள்விகளைக் கேட்டது. ஆனாலும் மனச்சாட்சிக் கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்காமல், என் போக்கை காணும் காட்சிகளில் ஓட விட்டேன். காணும் இடமெங்கும் கம்போடிய வாழ்வியலைக் காட்டும் சிற்பங்கள், கடவுளரின் உருவச் சிலைகள் என்று வியாபித்திருந்தன.
உள்ளே ஒரு கட்டிடம் அமைத்து கம்போடியாவின் வரலாற்றினை ஆதி தொட்டுக் கால வரிசைப்படி மெழுகு பொம்மைகளாகத் தத்ரூபமாக வடிவமைத்திருக்கின்றார்கள். அவற்றை ஒன்று விடாமல் கமராவில் சேமித்துக் கொண்டேன்.
Lieou ye என்று அழைக்கப்பட்ட கம்போடியாவினை ஆண்ட முதல் பெண் மகாராணி, இவரது காலம் கி.பி முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதி
கம்போடிய வரலாற்றினைச் செதுக்கிக் காட்டிய மொழுகுச் சிலைகளும், சுவர் ஓவியங்களும்.

மிதக்கும் கிராமத்தில் இருந்த படகுகள்
பழைய காலத்து கைவண்டி
கைமர் இன மக்களின் கிராமத்தின் நுளைவாயில்
இவரைத் தெரியும் தானே, இவர் மெழுகு சிலை இல்லை, உண்மையான மாடு
Kroeung Village என்ற தென் கிழக்கு கம்போடிய கிராமத்தின் மாதிரி
கம்போடியாவின் உருவச் சிலைகளின் தலைகளை களவாடிய மேற்கு நாட்டவருக்கு பழிக்குப் பழி போல சூப்பர் மேனின் தலை இல்லாத சிற்பம்


மேய்ச்சல் முடிந்து வீடு திரும்பும் நிஜமான மாடுகள், இதுவும் உள்ளேயே

முப்பது மீட்டர் நீளமான் புத்தர் சிலை, இது சியாம் ரீப்பிற்கு அருகில் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட சிலையை ஞாபகப்படுத்துகின்றது.

Wat Preah Keo Morokat எனப்படும் வெள்ளியிலானா பெளத்த மதத்தவருக்கான பகோடா எனும் வழிபாட்டிடம்Royal Palace எனப்படும் மன்னரின் வாசஸ்தலம், இன்றும் கம்போடிய மன்னரின் இருப்பிடமாக சியாம் ரீப்பில் இருக்கின்றது. அதை இந்த மாதிரி கட்டிடம் ஞாபகப்படுத்துகின்றது


Millionaire House எனப்படும் பழைய பெரும் செல்வந்தர்கள் இருந்த வீடுகளின் மாதிரி வடிவம்
ஆயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட காலத்தில் கம்போடியாவில் வந்து குடியேறிய சீன மக்களின் வீடுகளின் முன் மாதிரி.
கலாச்சாரக் கிராமத்துக்குள்ளே நடக்கும் கம்போடிய பாரம்பரிய நடனங்கள், பெருந்திரளானோர் கூடி நிற்க இவை நடப்பது வழக்கம்.
Kroeung Village என்ற தென் கிழக்கு கம்போடிய கிராமத்தின் மாதிரி
Tonle Sap Lake எனப்படும் நீர்ப்படுக்கையில் இருக்கும் மிதக்கும் கிராமத்தின் (Floating and Fishing Village) முன்மாதிரி


அருங்காட்சியகம் ஒன்று
எல்லாம் சுற்றிப் பார்த்து இரண்டு மணி நேர அலைச்சலுக்குப் பின் வெளியே வருகின்றேன். தடல்புடலான ஒரு கல்யாண விருந்து அந்த மாலை நேரத்தில் நடக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு ஓரமாக இருந்து விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்த ருக் ருக் பையனை அழைத்து வண்டியில் அமர்ந்தவாறே, அன்று பார்த்த காட்சிகளை அசை போட்டுக் கொண்டே வண்டியின் மெதுவான ஓட்டத்தோடு மனதை அலைபாய விடுகின்றேன்.

கம்போடிய கலாச்சாரக் கிராமம் குறித்து மேலதிக விபரங்கள் அறிய http://www.cambodianculturalvillage.com/