Social Icons

Pages

Wednesday, February 18, 2009

நிறைவான கம்போடிய உலாத்தல்

மார்ச் 19, 2008 மாலை 3 மணி

நான் தங்கியிருந்த அறையில் திசைக்கொன்றாய் கிடந்த பொருட்களை அடுக்கிப் பயணப்பொதியின் வாயில் திணித்து விட்டு, மீண்டும் அந்த அறையை ஒரு முறை சுற்றும் பார்க்கின்றேன். ஹோட்டல் அங்கோரியானாவில் இருந்த வரவேற்பாளர்களிடம் விடை பெறும் போது "இனி எப்போது வருவீர்கள்?" என்று கேட்கிறாள் வரவேற்பாளினி.

"நிச்சயம் மீண்டும் வருவேன்" என்றவாறே "இது நாள் வரை எனக்குப் பலவகையிலும் சுற்றுலாத் தகவல்களையும் தந்ததோடு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றிகள்" என்று விடைபெறுகின்றேன்.

என் கம்போடியப் பயணத்தில் முதல் நாள் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்ததில் இருந்து தொடர்ந்த உலாத்தலில் என்னோடு பயணித்த வாகனச் சாரதி/உரிமையாளர் Keo Yan எனக்காகக் காத்து நிற்கின்றார். காரில் பயண மூட்டையை ஏற்றி விட்டு முன் இருக்கையில் அமர்கின்றேன். விமான நிலையம் போகும் பாதை ஏனைய நாடுகளின் விமான நிலையப் போக்குவரத்துப் பாதை போல அவ்வளவு நெரிசல் இல்லை. சீக்கிரமாகவே விமான நிலையத்தை வந்தடைகின்றோம். என்னை வழியனுப்பத் தயாராக இருந்த சாரதி Keo Yan என் இருகைகளையும் இறுகப் பற்றிக் கொள்கின்றார். "உங்களைப் போன்ற நண்பரை நான் சந்தித்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சி" என்று நெகிழ்கின்றார் அவர். "உங்களை நான் என்றும் மறவேன், மீண்டும் வருவேன், தொலைபேசியிலும் பேசுகின்றேன், உங்களுடைய எல்லா உதவிக்கும் நன்றி" என்று அவரின் கைகளை இறுகப் பற்றியவாறே சொல்லிப் பிரியாமல் பிரிந்தேன். இந்த இடத்தில் நான் ஒன்று சொல்ல வேண்டும்.என்னுடைய இந்தக் கம்போடியப் பயணத்தில் இவ்வளவு உரிமையோடு நிறைய உதவிகளையும் கொடுத்து, எதிர்பார்த்ததற்கும் மேலாகச் சிறப்பான சுற்றுலாவாக அமைய‌ வைத்தவர்கள் என் ஹோட்டல்காரர்களும், சுற்றுலா வழிகாட்டியும், இந்தக் சாரதியும். மீண்டும் அவர்களை நோக்கி இன்னொரு முறை மனதார நன்றி சொல்லிக் கொள்கின்றேன். உண்மையிலேயே எதிர்பாராதவிதமாக அமைந்த இந்தக் கம்போடியப் பயணத்தில் ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்புகளின் தொடர்ச்சியாக அமைந்த நிகழ்வுகள் போல இந்த உலாத்தல் அமைந்து விட்டது.

சியாம் ரீப் விமான நிலையத்தில் இருக்கும் புத்தகக் கடைக்குள் நுளைந்து கம்போடியாவின் இருண்ட காலத்து நூல்களை மேய்ந்தேன். மண்டை ஓட்டுக் குவியலும், சித்திரவதை முகாம்களின் கொடூரப் புகைப்படங்களும் மனதை ஏதோ செய்தன.

சிங்கப்பூர் செல்லத் தயாராக வந்து நிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இல் ஏறி உட்கார்ந்து கொள்கிறேன். சிங்கப்பூரில் இருந்து மலாக்கா செல்லும் என் அடுத்த உலாத்தலுக்கான தயார்படுத்தலாக மலாக்கா பயண வழிகாட்டியை எடுத்து பிரிக்கின்றேன். கம்போடியாவிற்குப் பிரியாவிடை கொடுத்து விட்டுப் பறக்கிறது மனம்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
கடந்த கம்போடிய உலாத்தல்கள் வெறுமனே பயண அனுபவங்களைக் கடந்து தென்னாசியாவில் நிலைபெற்று விளங்கிய இந்தியத் தொன்மங்களைத் தேடிய வரலாற்று பகிர்வாகவும் அமைய வேண்டும் என்று நான் நினைத்ததால் உங்களில் சிலருக்கு அது திகட்டியிருக்கலாம். கம்போடியாவில் இந்திய வரலாற்றுச் சுவடுகளைப் படங்களோடும், செய்திகளோடு முழுமையான ஆவணப்படுத்தலாகத் திரட்ட வேண்டும் என்ற எண்ணமே என்னுடைய இந்த முயற்சிக்குக் காரணம். உண்மையைச் சொலப் போனால் என் கம்போடியப் பயணத்தின் நோக்கமும் அதுதான். இங்கே நான் சொல்லிய ஆலயங்களைத் தவிரவும் விடுபட்டவை ஏராளம். அவை பற்றி இன்னொரு சமயம் கம்போடியப் பயணம் வாய்க்கும் போது தொடரலாம் என்று நினைக்கின்றேன்.எனது கம்போடிய உலாத்தல் வெகு விரைவில் "வடலி" வெளியீடாகப் பயண நூலாகத் தவழ இருக்கின்றது. அச்சில் நூலாக வரும் என் முதல் படைப்பும் இதுவே. இந்தத் தொடரில் பின்னூட்டம் வாயிலாகத் தமது கருத்தை அளித்தோரின் தேர்ந்தெடுத்த பின்னூட்டங்களும் அச்சில் வர இருக்கும் கம்போடிய பயண நூலில் வர இருக்கின்றது.

இது நாள் வரை என் உலாத்தலில் கூடவே பயணித்து அவ்வப்போது கருத்திட்டவர்களுக்கும், கருத்திடாவிட்டாலும் வாசித்துக் கொண்டே இருந்தவர்களுக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்.

மீண்டும் சந்திப்போம்
நேசம் கலந்த நட்புடன்
கானா பிரபா

கம்போடிய உலாத்தலில் வழித்துணையாய் வந்தவர்களில் சிலர்
இடமிருந்து வலம் வாகனச் சாரதி Keo Yan மற்றும் சுற்றுலா வழிகாட்டி Sib Chnong

அங்கோரியானா ஹோட்டல் வரவேற்பாளியும், வரவேற்பாளனும்

ருக் ருக் வண்டிக்காரர்

கம்போடிய உலாத்தலில் உசாத்துணையாய் இருந்தவை

1."தென் இந்திய வரலாறு", டாக்டர் கே.கே.பிள்ளை (ஆறாம் பதிப்பு 1994, முதற்பதிப்பு 1958)
2. "தென்னாடு", கா.அப்பாத்துரை, எம்.ஏ,எல்.டி (முதற்பதிப்பு செப் 1954, மூன்றாம் பதிப்பு 1957)
3. "தமிழக வரலாறும் பண்பாடும்", வே.தி.செல்லம் (முதற்பதிப்பு 14, ஏப்ரல், 1995, நான்காம் பதிப்பு ஜூலை 2003)
4. கம்போடிய சுற்றுலா வழிகாட்டிக் குறிப்புகள்
5. Ancient Angkor by Michael Freeman & Claude Jacques
5. விக்கிபீடியா
6. Asianinfo.org

Tuesday, February 17, 2009

கம்போடியாவில் பார்க்கவேண்டிய இன்னுஞ் சில


இந்த இடத்துக்குப் போகும் போது நீங்கள் தனியாகப் போகக் கூடாது என்று என்னை எச்சரித்து, வாகனச் சாரதியை நோக்கி இவரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தாள் நான் தங்கியிருந்த ஹோட்டலின் வரவேற்பாளினி. நாங்கள் சென்ற இடம் West Baray என்ற சமுத்திரத்தின் நடுவே இருக்கும் சிறு தீவான West Mebon.
இது கி.பி 11 ஆம் நூற்றாண்டில் பிரபலம் பெற்று விளங்கிய தீவாகும். ஒரு குறுகிய படகுப் பயணத்துடன் West Mebon தீவை அடைகின்றோம். மிகவும் பின் தங்கிய வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் வாழும் பிரதேசம் என்பதை அங்கே இருக்கும் மக்களின் தோற்றத்தை வைத்தே எடை போட முடிகினறது. அத்தோடு ஈக்களின் பரவல் அந்தப் பிரதேசத்தை விட்டு எப்படா நகர்வோம் என்று படுத்தியது.

Baray என்பதற்கு நீர்த்தேக்கம் என்று அர்த்தம் கொள்ளப்பட்டும், கம்போடியாவில் நான்கு பெரிய நீர்த்தேக்கத் திட்டங்கள் இவ்வாறு உள்ளன.

இந்தத் தீவில் முற்றாக அழிந்து கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஆலயங்களின் எச்சங்களைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளைக் கூட விரல் விட்டு எண்ணி விடலாம். சூர்ய வர்மன் மற்றும் இரண்டாம் உதயாதித்த வர்மன் காலத்தில் இந்தப் பிரதேசத்தில் ஆலயங்கள் எழுப்பப்பட்டதை வரலாறு சொல்கின்றது.மேலே படத்தில் தூரத்தே தெரியும் தீவு

மேலே படத்தில் தீவில் குடியிருப்போர்


மேலே படங்களில் எஞ்சியிருக்கும் ஆலயத்தின் தோற்றம்
தீவில் இருக்கும் பெளத்த ஆலயம்
Angkor National Museum


நான் கம்போடியப் உலாத்தல் பதிவுகளில் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று எந்த நாட்டுக்குச் சென்றாலும் தவறாது செல்லவேண்டிவை அருங்காட்சியகங்கள். அந்தவகையில் அங்கோர் தேசிய அருங்காட்சியகமும் கட்டாயம் பார்க்க வேண்டிய சிறப்புக் கொண்டது. வெறுமனே கம்போடிய நாட்டின் அரும்பொருட்கள் மட்டுமன்றி, பல்லூடக வசதியோடு இந்தக் காட்சியகம் இருப்பது வெகு சிறப்பு. கம்போடியா செல்லத் திட்டமிடுவோர் முதலில் இந்த நூலகத்தில் இருந்தே தமது பயணத்தை ஆரம்பித்தால் தொடர்ந்து செல்ல இருக்கும் இடங்கள் குறித்த முழுமையான பார்வை கிடைக்கும். இந்த அருங்காட்சியகத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் சியாம் ரீப்பில் இருக்கும் ஆலயங்களில் இருந்து எடுத்துப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் தெய்வங்கள் இன்ன பிற உருவச் சிலைகள் காணக் கிடைக்கின்றன. நுழைவுக் கட்டணமாக 12 அமெரிக்க டொலர் அறவிடப்படுகின்றது. காலை 9 மணியில் இருந்து இரவு 8 மணி வரை திறந்திருக்கும் இவ் அருங்காட்சியகம் தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற http://www.angkornationalmuseum.com/

Royal Palace
மேலே படத்தில் அரண்மனை (Royal Palace)

கம்போடிய தற்போதைய மன்னரின் வாசஸ்தலம் சியாம் ரீப் நகரின் மையத்தில் இருக்கின்றது. சுழவும் ஐந்து நட்சத்திர விடுதிகளும், பூங்காவும் என்று இருக்கும் இந்தப் பகுதிக்கும் சாவகாசமாக வந்து போகலாம்.
மேலே உள்ள படங்கள் நான் தங்கியிருந்த ஹோட்டலில் காணப்பட்ட கம்போடிய பாரம்பரிய வாத்தியங்கள்

மேலே படங்கள் கம்போடியாவில் விளையும் பழவகைகள் வீதியோரக் கடையில்

Angkor Night Market

கம்போடியாவிற்குச் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் ஊருக்குப் போகக்கூடாது, அத்தோடு கம்போடியாவில் தயாராகும் கைவினைப் பொருட்களையும் வாங்க வேண்டும் என்றால் மிகச் சிறந்த தேர்வு இந்த இரவுச் சந்தை. மிகவும் மலிவாக அதேநேரம் தரமுயர்ந்த கண்கவர் கைவினைப் பொருட்கள் கைப்பைகள், டிவிடிகள், நகைகள், புத்தகங்கள், சின்னதாகச் செய்த தெய்வ உருவச் சிலைகள், உடுபுடைவைகள், சால்வைகள், ஓவியங்கள், துணிவேலைப்பாடுகள், உணவுச் சாலைகள் என்று நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் இங்கே இருக்கின்றன. மாலை நேரத்தில் இருந்து நள்ளிரவு வரை திறந்திருக்கும் இந்தக் கடைகளோடு, விதவிதமான களியாட்ட நிகழ்வுகளும் சந்தையின் உள்ளே நடக்கின்றது.
மாலை நேரத்தில் வந்து பொருட்களை ஆறுதலாகத் தேர்ந்தெடுத்து பேரம் பேசி வாங்கி விட முடிகின்றது இங்கே.
மேலே படத்தில் சியாம் ரீப் நகரின் ஒரு மாலைப் பொழுது

Monday, February 16, 2009

கடலின் நடுவே மிதக்கும் கிராமம் (Floating Village)


கம்போடியாவிற்குச் சென்றால் வெறுமனே ஆலயங்களின் தரிசனம் மட்டுமன்றி கீழைத்தேய நாடு ஒன்றின் வாழ்வியல் அமைப்பையும் கண்டு வரலாம். எனக்குக் கிடைத்த கொஞ்ச நாட்களில் கோயில்கள் பலவற்றைப் பார்த்து முடித்ததால் எஞ்சிய இரண்டு நாட்களில் பார்க்கக் கிடைத்தவற்றைப் பார்த்துவிடலாம் என்று முடிவு கட்டினேன். அந்த வகையில் என் பயண நாட்களில் கூடவே வந்த வாகனச் சாரதி பரிந்துரைத்த இடம் தான் மிதக்கும் கிராமம் (Floating Village).

சியாம் ரீப் நகரினை அண்மித்ததாக இருக்கும் இந்த மிதக்கும் கிராமத்தைப் பார்த்து விடுவோம் என்று ஒரு நாள் மதியவேளை கிளம்பினோம். பெருந்தெருவைக் கடந்து, அப்பால் போனால் ஒழுங்கற்ற தார் போடாத கற்களை மட்டுமே நிரவிய சாலை அது. கொடும் வெயிலும் சுட்டெரித்தது.
இந்த மிதக்கும் கிராமத்துக்கான ஒரே வழிச்சாலை அது என்பதால் வாகனங்கள் வரிசை வீதியை நிறைத்திருந்தது. அதுவும் மாலை வேளையில் இந்தப் பகுதிக்கு வருவதற்கே பல சுற்றுலாப் பயணிகள் விரும்புவார்கள் என்பதால் கூட்டத்துக்குக் குறைவில்லை. வழியின் இருமருங்கும் பொத்தல் சட்டைகள் போல உடைந்த மரத்துண்டுகளோடு குடிசைகள் இருமருங்கும். ஒழுங்கற்ற பாதையில் ஆங்காங்கே மறித்து, முன்னே வரும் வாகனங்களுக்கும் வழி விட்டு படகுத்துறையைச் சென்றடைவதற்குள் ஒரு மணி நேரத்துக்கு மேல் கடந்து விட்டது. காரை ஓரமாக நிறுத்தி விட்டு படகு ஒன்றைப் பிடிப்பதற்காகச் சென்றோம் நானும் சாரதியும்.

Chong Khneas என்ற பகுதியிலேயே இந்த மிதக்கும் கிராமம் இருக்கின்றது. படகொன்றில் பயணிப்பதற்கான கூலியைக் கொடுத்து விட்டு அதில் ஏறி உட்கார்ந்தால் இந்த மிதக்கும் கிராமத்தின் எழிலையும், அந்தப் பகுதி மக்களின் வாழ்வியலையும் பார்த்து வரலாம். சராசரியாக 15 பயணிகளை ஏற்றிக் கொள்ளும் ஒரு படகு கட்டணமாக பத்து அமெரிக்க வெள்ளிகளைக் கொடுக்க வேண்டும். இரண்டு மணிப் பிரயாணம் அது.

மிதக்கும் கிராமத்தின் பள்ளிக்கூடம்


மிதக்கும் கிராமத்தில் உள்ள கடையொன்று

மேலே படங்களில் மிதக்கும் கிராமத்தில் வாழ்க்கை நடத்தும் மனிதர்கள்

இந்த மிதக்கும் கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்கட் பிரிவினர் இருக்கின்றார்கள். அவரவர் தராதரத்திற்கேற்ப வசதியான வீடுகளையும் இந்த வாவியின் நடுவே அமைத்து வாழ்ந்து வருகின்றார்கள். பெரும்பாலும் சீனர்கள் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்தவர்களாக இருப்பதைக் காட்டி நிற்கின்றன அவர்தம் வீடுகள். தனியே குடியிருப்புக்கள் மட்டுமன்றி, பாடசாலை, தேவாலயம், கடைகள் என்று எல்லாமே இந்தக் கடலில் எழுப்பப்பட்டிருக்கின்றன. இந்த இடங்களுக்குப் போவதற்கு ஒவ்வொருவர் வீட்டிலும் அவரவர்க்கெனத் தனியான படகுகளும் உண்டு. அவை இந்த வீடுகளின் முன் புறத்தே கட்டப்பட்டிருக்கும். கம்போடியர்கள், வியட்னாமியர்கள், சீனர்கள் ஆகிய மக்கட் பிரிவினர் இங்கே தலைமுறைகளாக வாழ்ந்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

தற்காலிக ஓய்விடம்

எமது இரண்டு மணி நேரப் பயணத்தில் இடையில் தரிப்பிடமாக ஒரு நிலையம் முன்னே வந்து நிற்கின்றது. மற்றைய படகுகளில் வந்தோரும் ஒருங்கே இளைப்பாறிப் போகும் இடமாக இது விளங்குகின்றது. சாப்பாடு, கழிப்பறை வசதி, புத்தகசாலை என்பனவற்றோடு குறித்த சில கடல் வாழ் உயிரினங்களை காட்சிப்படுத்தும் அமைவிடமாகவும் இது திகழ்கின்றது. அரைமணி நேர ஓய்வின் பின்னர் மீண்டும் நகர்கின்றது படகு.

உயர்ரக ஜப்பானிய உணவகம்

மாலை நேரத்தில் வந்து உணவருந்திச் செல்ல உயர் ரக நட்சத்திர உணவகமும் இங்கே முளைத்திருக்கின்றது.

உயிருள்ள மலைப்பாம்பைக் கழுத்தில் போட்டவாறே யாசிக்கும் சிறுவன் படகில் வந்து வாழைப்பழ விற்பனை

வேறு படகுகளில் வந்து அதில் வாழைப்பழத்தைப் பரப்பி விட்டு விற்பனை செய்வோர், சின்னஞ்சிறு குழந்தையின் கழுத்தில் உயிருள்ள மலைப்பாம்பை மாட்டிப் பிச்சை எடுப்போர் என கடல் நடுவே வாழ்வாதாரத்தினைத் தேடி வரும் கம்போடியர்களையும் பார்க்கலாம். ஒரு காலத்தில் மாட மாளிகைகளையும், பெரும் எடுப்பிலான கோயில்களையும் கட்டி வாழ்ந்த சமூகத்தின் இன்றைய நிலையை இந்தக் கடலின் நடுவே காணும் இந்த ஏழ்மை வருத்தத்தை மனதில் விதைக்கின்றது.


ஏழையின் வீடு ஒன்று

இது கொஞ்சம் பணக்கார வீடுவாழைப்பழ வரிசைகளோடு விற்பனை

கை நீட்டி யாசிக்கும் குழந்தை