Social Icons

Pages

Monday, June 21, 2010

தாய்லாந்தில் பிரம்மனுக்கோர் ஆலயம் Erawan Shrine

தாய்லாந்து உலாத்தல் பதிவு ஆரம்பித்த வேளை சரியில்லைப் போல இருக்கிறது, மீண்டும் 3 மாத இடைவெளி விழுந்து விட்டது. இனிமேலும் இடைவெளி விடாமல் தொடரவேண்டும் என்று எல்லாம் வல்ல பாங்கொக் பிள்ளையாரை வேண்டி இந்தப் பதிவை ஆரம்பிக்கின்றேன்.

தாய்லாந்து நாட்டுக்கு நான் சென்ற நோக்கமே தேடித் தேடி இந்து ஆலயங்களைத் தரிசிப்பது, அவற்றை இயன்றவரை ஆவணப்படுத்துவது என்பதே. அந்த வகையில் எனது சுற்றுலாக் கையேட்டில் குறிக்கப்பட்டிருந்த ஒரு ஆலயம் Erawan Shrine. இந்த ஆலயத்தைப் பற்றி நான் தங்கியிருந்த ஹோட்டல் முகாமையாளரிடம் கேட்டேன். "அந்த ஆலயம் செல்ல ஒரு நாள் பிடிக்கும், எதற்கு இந்த நீண்ட பயணம்" என்றார். இன்னொரு நாள் இன்னொரு இடத்துக்கு உலாத்தும் போது ஓட்டோக்காரரிடம் பேச்சுக் கொடுத்தால் அவர் சொல்கிறார் "அது மிகவும் அருகில் இருக்கும் இடமாயிற்றே" என்று. என்னடா கொடுமை இரண்டு பேர் இரண்டு விதமாகச் சொல்கிறார்களே என்று மனதுக்குள் நினைத்து விட்டு ஒரு நாட்காலை ஓட்டோ ஒன்றை மறிக்கிறேன்.

"Erawan Shrine போக வேண்டும், வருவாயா?" (உள்ளுர இவன் பல மைல் தொலைவு என்று சொல்லப் போகிறானோ" என நினைத்தவாறே)
"தாராளமாக" என்று விட்டு சீட்டைக் காட்டுகிறான். ஓட்டோ அந்த நெரிசலான பாங்கொக் நகரத்துக் காலை வீதியில் சுழன்று சுழன்று போகிறது. ஒரு அரை மணி நேரம் கடந்த நிலையில்
"அதோ தெரிகிறதே ஹோட்டல் அதுக்குப் பக்கத்தில் தான் நீங்கள் கேட்ட Erawan Shrine இருக்கிறது" என்று விட்டு ஓட்டோவின் மூச்சைத் தற்காலிகமாக நிறுத்துகிறார் சாரதி.
இவன் என்னடா காசைப் புடுங்கிக் கொண்டு நடு ரோட்டில் விடப்போகிறானோ" என நினைத்துக் கொண்டு தாய் பாட் நோட்டுக்களைத் திணித்து விட்டு ஹோட்டல் பக்கமாக நகர்கிறேன்.

Grand Hyatt Erawan Hotel என்ற நட்சத்திர விடுதிப்பக்கமாக நெருங்கினால் படைத்தல் கடவுளாகிய பிரம்மா நான்கு முகங்களுடன் தங்கத் தரிசனம் கொள்ளும் ஒரு சிறு ஆலயம் இருக்கிறது. அதுதான் Erawan Shrine. நான் ஏதோ பெரும் காணி ஒன்றில் தனியே ஒரு ஆலயம் இருக்கும் என்று கற்பனை பண்ணிக் கொண்டே வந்திருந்தேன். இந்த ஆலயம் 1955 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாம். இந்த ஆலயம் எழுப்பப்பட்டதற்கான காரணமாகச் சொல்லப்படுவது என்ன வெனில், தாய்லாந்து நாட்டின் ஹோட்டல் மற்றும் சுற்றுலா நிறுவனம் 1943 ஆம் ஆண்டில் Erawan Hotel என்ற அரசாங்க ஹோட்டலை நிர்மாணிக்கும் பணி ஆரம்பித்த போது பலவிதமான துர் அனுபவங்களைச் சந்திக்க வேண்டி இருந்ததாம். குறிப்பாக கட்டிட நிர்மாணத்தில் சீர்கேடுகள்,கட்டிடத் தொழிலாளர்களுக்குப் பல விதங்களிலும் ஏற்பட்ட எதிர்பாராத விபத்துக்கள் என்று. அவ்வகையில் இந்த ஹோட்டல் 1955 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட போது Rear Admiral Luang Suwicharnpat என்ற சிறந்த வானசாஸ்திர நிபுணரின் அறிவுரைப்படி இந்துக்கள் வழிபடும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற முப்பெரும் கடவுட் கோட்பாட்டின் படி, படைத்தற்கடவுளாகிய பிரம்மாவின் கருணை வேண்டி Erawan Shrine என்ற இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. இந்தப் படைப்புச் சக்தியாக நான்கு முகங்களும், எட்டுக் கைகளும் ஒவ்வொரு கையிலும் ஒவ்வோர் கலங்களும்ஆக விளங்கும் பிரம்ம வழிபாட்டிற்கு ஆதாரமாக Than Tao Mahaprom என்ற நூலைக் காட்டுகின்றார்கள் தாய்லாந்து நாட்டவர். இந்த வழிபாடு பற்றி மேலும் அறிய

Chit Phimkowit என்ற தாய்லாந்து நாட்டின் கவின்கலைகள் அமைச்சகத்தின் சிற்பியால் இந்த பிரம்மக் கடவுளின் உருவம் செதுக்கப்பட்டு ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. நவம்பர் 9, 1956 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த ஆலயத்தின் வருடாந்தச் சிறப்பு வழிபாடு ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 9 ஆம் திகதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.




THAO MAHA BRAHMA என்று சிறப்பிக்கப்படும் இந்த பிரம்மக் கடவுளைக் காண உள்ளூர் தாய்லாந்து நாட்டவர்களோடு, வெளிநாட்டவர்களுமாகக் கூடப்படுகின்றது. செவ்வந்திப் பூக்கள் நிறைய, ஊதுபத்தி கமிழ தகதகவென்ற தங்கத் திருமேனியோடு அருள்பாலிக்கின்றார் நான்முகப் பிரம்மக் கடவுள். நான் சென்ற நேரம் ஆலயத்தின் காலைப்பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருபக்கம் வாத்தியக்காரர் மிருதங்கம் மற்றும் தாய்லாந்தின் சுதேச நரம்புக்கருவியை மீட்ட, தாய்லாந்து மகளிர் பாடிக்கொண்டே பாரம்பரிய நடனம் ஆடி ஆண்டவனைப் பூஜிக்கிறார்கள். அந்த பக்தி வெள்ளத்தில் நானும் ஒரு சில நிமிடங்கள் கலந்து ஆண்டவன் தாள் பணிந்து விலகுகிறேன்.






முதற்படம் நன்றி: Sacred Destinations
உசாத்துணைத் தகவற்குறிப்புக்கள்: Erawan Shrine ஆலய முகப்புக் குறிப்புக்கள் மற்றும் பல்வேறு தாய்லாந்து தகவற் தளங்கள்