Social Icons

Pages

Thursday, January 03, 2008

ஒபரா ஹவுஸில் பாடிய நிலா பாலு

உலாத்தல் பதிவுகளில் எனது பெங்களூர் பயணத்தை ஆரம்பித்து விட்டு மற்றைய வலைப்பக்கங்களில் இரு மாதமாகச் செலவிட்டு விட்டேன். எனவே இனியும் நீண்ட இடைவெளி இருக்கலக் கூடாது என்பதற்காக நான் கண்டு ரசித்த இசை நிகழ்ச்சி குறித்த என் பார்வையை இங்கே இடுகின்றேன்.

கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி Sydney Symphony entertainers ஒருங்கிணைப்பில் Pyramid Video & Spice அனுசரணையுடன் சிட்னி ஒபரா ஹவுஸில் ஒரு இசை நிகழ்ச்சி இடம்பெற்றிருந்தது. இவர்கள் கடந்த 2006 இல் கே.ஜே.ஜேசுதாஸின் இசை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த அந்த நிகழ்வையும் முன்னர் பதிவாக இட்டிருந்தேன். இந்த ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம், சாதனா சர்க்கம், வசுந்தரா தாஸ்,ராஜ் டிவி ராஜகீதம் புகழ் சுஜித்ரா மற்றும் மலையாளப் பாடகர் நிஷாத் ஆகியோர் ஷியாமின் இசைக்குழுவோடு வந்து சிறப்பித்திருந்தார்கள்.


அவுஸ்திரேலியாவின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் ஒபரா ஹவுஸில் ஜேசுதாஸின் இசை நிகழ்ச்சிக்குப் பின் நடைபெறும் இரண்டாவது தமிழ் நிகழ்ச்சி என்பதால் முன்னர் இந்த அரங்கத்தைப் பார்க்காதவர்களும், முன்னர் ஜேசுதாசின் இசை நிகழ்ச்சியினை நன்கு ரசித்தவர்களுமாக அரங்கத்தை நோக்கிப் படையெடுத்தார்கள். நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பே அத்தனை இருக்கைகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.


சரி, இனி இந்த இசை நிகழ்ச்சிக்குச் செல்வோம். வழக்கமாக ஒரு கடவுள் வாழ்த்துடன் ஆரம்பிக்கும் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு விலக்காக மெளன ராகம் திரையில் இருந்து "மன்றம் வந்த தென்றலுக்கு" என்ற பாடலோடு மேடையில் காட்சி தந்தார் பாலு அவர்கள். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களைக் காண வேண்டும் என்று வந்த இசை ரசிகர்களுக்கு இன்னுமொரு இன்ப அதிர்ச்சியாக பி.ஹெச்.அப்துல் ஹமீத் மேடையில் தோன்றினார். அதுவரை எந்த விளம்பரங்களிலுமே ஹமீத் வருவதாக அறிவிப்பும் வராததால் இந்தத் திடீர் அறிவிப்பு விருந்தாளியைக் கண்டதும் முறுவலித்துக் கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். வழக்கமாக இசை நிகழ்ச்சிகளில் பாடுபவர் ஒரு மணி நேரம் என்றால் அறுவைப்பாளர் இரு மணி நேரம் எடுத்துத் தன் சாகித்யங்களை எல்லாம் காட்டி எம்மை இருக்கையில் வைத்தே கொலை செய்து விடுவார். ஆனால் ஹமீத் போன்ற மேடை நாகரீகம் தெரிந்தவர் இந்த இசைப்படையலுக்கு வந்தால் சொல்லவும் வேண்டுமா? அதை மெய்ப்பிப்பது போல் நிகழ்ச்சியின் இறுதி வரை அப்துல் ஹமீத் பாலு கூட்டணி அசைக்கமுடியாத கூட்டணியாகப் பயணித்தது. எடுத்த எடுப்பிலேயே "நிலவும் உருண்டை, பாலுவும் உருண்டை" என்றுபாலுவுக்கும் நிலவுக்கும் ஒரு புதிய ஒற்றுமையைக் காட்டிக் கலகலக்க வைத்தார் ஹமீத். தொடர்ந்து மூச்சு வாங்கிப் பாடிய "மண்ணில் இந்தக் காதல் இன்றி" பாடல் வந்தது.

தனது அன்னை Neelatai Ghanekar இடம் ஆரம்பத்தில் இசை பயின்று, இளையராஜா இசையில் "அழகி" திரைக்காக "பாட்டுச் சொல்லி" பாடலைப் பாடிய சாதனா சர்க்கம் "கொஞ்சும் மைனாக்களே" என்று கூவிக் கொண்டு வந்தார். ஸ்வரலயா ஜேசுதாஸ் விருது, உட்பட ஏ.ஆர்.ரகுமானின் பாராட்டு மழை வரை சாதனா சர்க்கத்திற்குக் கிடைத்த பெருமைகளைச் சொல்லி வைத்தார் அப்துல் ஹமீத்.

இனியதொரு ஹோரஸ் கலக்க, நியூ திரையில் இருந்து " காலையில் தினமும் கண் விழித்தாலே" பாடலை மலையாளப் பாடகர் நிஷாத் கலக்கினார்.

தொடர்ந்து பின்னணியிலும் முன்னணியிலுமாக பரத்வாஜ், ஏ.ஆர்.ரகுமான் போன்றோர் இசையில் பாடிய ராஜ் டீவி புகழ் சுஜித்ராவும் எஸ்.பி.பியுடன் ஜோடி போட்டு எஸ்.ஜானகி இல்லாத குறையை நிரப்பிக் கொண்டிருந்தார்.
"ஆறு முறை தேசிய விருது கண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், இவற்றில் சங்கராபரணம் விருது கிடைத்ததால் விருதுக்குப் பெருமை" என்று ஹமீத் அறிவிக்க தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் சங்கராபரணத்தில் தான் பாடிய அந்தப் பசுமை நினைவை அசைபோட்டார். கூடவே அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனின் உதவியாளராக இருந்த திரு புகழேந்தி அவர்கள் தனக்குக் கொடுத்த கடுமையான பயிற்சி தான் தேசிய விருதாக அங்கீகாரம் பெற்றது என்று புகழ்ந்து, பார்வையாளர்கள் மத்தியில் இருந்த சிட்னியில் வாழ்ந்து வரும் புகழேந்தியின் மகனின் 25 வது திருமண நாள் இன்று என்றவாறே அவர்களை எழுந்திருக்கச் செய்து கெளரவப்படுத்தினார். புகழேந்தியின் மகன், மற்றும் புகழேந்தியின் தாய் இருவரையும் நான் ஒரு வானொலிப் பேட்டி செய்திருக்கின்றேன். புகழேந்தியின் இசை அனுபவங்களை அதில் இருவரும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். நேரம் வாய்க்கும் போது அப்பேட்டியை ஒலியில் பின்னர் தருகின்றேன்.

ஒவ்வொரு பாட்டுக்கும் விதவிதமான ஒளியலங்காரத்தைப் பாய்ச்சியது ஒபரா ஹவுஸ் அரங்கம்.

சிப்பி இருக்குது பாடலைப் பாடும் போது "மயக்கம் தந்தது யார் தமிழோ, கண்ணதாசனோ" என்று இலாகவமாக மாற்றிச் சிறப்பித்தார் பாலு. கூடவே பாடிய சுஜித்ராவும் குறை வைக்கவில்லை. கடந்த யூன் 14, தனது 61வது பிறந்த நாளை எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொண்டாடியபோது கிடைத்த பிறந்த நாள் பரிசுப் பொருட்கள் அனைத்தையுமே மயிலாப்பூரில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு அளித்தார் என்று அப்துல் ஹமீத் அவர்கள் பாடல் இடைவேளையில் சொல்லவும் பாலுவின் மீதான மரியாதை ஒருபடி ஏறியது. தொடர்ந்து காதல் ஓவியம் திரையில் இருந்து "சங்கீத ஜாதி முல்லை" பாடலைப் பாடியபோது அவரின் ராஜாங்கத்தில் மெய்சிலிர்த்தது.

அக்கம் பக்கம் யாருமில்லா (கிரீடம்), மற்றும் சுவாசமே (தெனாலி), வெண்ணிலவே வெண்ணிலவே (மின்சாரக் கனவு) என்று சாதனா சர்க்கம் தொடர்ந்தார். இளங்கோவின் வரிகளில் "மஞ்சக்காட்டு மைனா" பாட்டை சாதனாவும் நிஷாத்தும் அச்சொட்டாகப் பாடிச் சிறப்பித்தனர்.


பாடகர் நிஷாத் புதிய தலைமுறைக்கேற்ற பாடல்களைப் பாடியதோடு கடலினக்கரை போனோரே பாடலையும் பாடி வந்திருந்த சேட்டன்களைக் குளிர்வித்தார். ஆனால் சில தமிழ்ப்பாடல் வரிகளை இவர் சுயிங்கம் மென்றுகொண்டு பாடுவது போல வாயில் வைத்துக் குழைந்தது கண்டு கொண்ட ஒரு குறை.

திடீரென்று நுழைந்த நவநாகரீகமான வசுந்தரா தாஸ் மேடையில் பாடிய அனைத்துப் பாடல்களையுமே புத்தகம் பார்த்துப் படிக்காமல் மனப்பாடத்தோடு மிக இயல்பாகப் பாடினார். -நிகழ்ச்சிக்கு வந்த இளசுகளுக்கு ஏற்ற ஆட்டம் பாட்டமும் வசுந்தரா குத்தகைக்கு எடுத்தது போல் கலக்கினார். தான் பின்னணி பாடியதோடு வசீகரா பாடலையும் சேர்த்துக் கொண்டார்.ஆனால் இவர் இறுதியாகப் பாடிய குரு படப்பாடல் ஒரு கரும்புள்ளி. பாட்டும் சரி, பின்னணியில் ஏற்கனவே ஒலிப்பதிவு செய்து வழங்கிய இசையும் சரி (இந்தப் பாட்டுக்கு மட்டும்) மகா இரைச்சல்.

"பம்பாயில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து இசையமைத்த படம் தளபதி. அதில் வரும் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" பாடலுக்கு 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டன. அதே இசை இங்கே இருக்கக்கூடிய வாத்தியங்களோடு ஷியாம் இசைக்குழு தரப்போகின்றார்கள்" என்ற அறிமுகத்தோடு வந்த அந்தப் பாடலைக் கேட்கும் போது இசையும், குரலும் எம்மை ஒபராவின் மேற்கூரைக்கு மிதக்க வைத்தது. என் கைத்தொலைபேசியில் சிறைவைத்த அந்தக் காட்சியின் ஒரு பகுதி இதோ.


அது போல் அஞ்சலி அஞ்சலி பாடலில் வரும் சாக்ஸபோன் வாத்திய இசையை நடராஜ் வாசித்தபோது பாலுவே நெகிழ்ந்தார். நடராஜ், மெல்லிசை மன்னரின் பாராட்டையும் பெற்றிருக்கின்றாராம். மெளனமான நேரம், போன்ற வழக்கமாக மேடையில் பாடும் பாடல்களைப் பாடும் பாலு, வழக்கமாக அதிகம் மேடையில் பாடாத "ஆயிரம் நிலவே வா" பாடல், மற்றும் நிறைவாக எனக்குள் ஒருவன் திரையில் இருந்து "மேகம் கொட்டட்டும்" என்ற பாடலையும் நிறைவு செய்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும் இசை ரசிகர்களிடமிருந்து பலவிதமான விமர்சனங்கள். முதல் தடவை ஒபரா ஹவுசுக்கு வந்து ரசித்தவர்களைப் பெருமளவு திருப்திப்படுத்திய இந்த இசை நிகழ்ச்சி, முன்னர் கே.ஜே.ஜேசுதாஸ் பரிவாரங்களோடு வந்து கொடுத்த ஓணம் படையல் போன்று இல்லை ; எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு இன்னொரு அவர் காலகட்டத்துப் பாடகி வந்திருக்கலாம்; பாலுவே அதிகம் தனியாவர்த்தனம் வைத்திருக்கலாம் போன்ற விமர்சனங்களையும் கொடுத்திருந்தது. இன்னொரு உறுத்தல் கடைசிப் பாடலைப் பாட முன்னரும், பாடிய பின்னரும் ரசிகர்களுக்குத் தகுந்த பிரியாவிடை கொடுக்காமல் நாலு வரி கூடப் பேசாமலே எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் போனது இன்று வரை இசை ரசிகர்களுக்கு உறுத்தலாகவே இருக்கின்றது.

தமது பிரத்தியோகப் படங்களைத் தந்துதவிய Sydney Symphony entertainers இற்கு என் நன்றிகள்.