Social Icons

Pages

Thursday, December 28, 2006

சிட்னி வலைப்பதிவர் சந்திப்புக்கள்

ஜூன் 17, சனிக்கிழமை இரவு 10.00 மணி

இரு தினங்களுக்கு முன் கனக சிறீ அண்ணா என் ஜீ மெயிலுக்கு மடல் ஒன்று தட்டி விட்டார். இப்படி

கானா பிரபா,

எமது சக வலைப்பதிவாளர் நா. கண்ணன் (கொரியா) தற்போது அவுஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். இவ்வார இறுதியில் சிட்னிக்கு வருகிறார்.

சனியன்று இரவு கருத்துக்களத்தில் ஒரு பேட்டி எடுத்தால் எப்படி?

கரும்பு தின்னக் கூலியா? மடல் பார்த்த மறு கணமே, "தாராளமாகச் செய்யலாம், கூட்டிவாருங்கள் வானொலி நிலையத்துக்கு, என்றேன் நான்.
படம் இடமிருந்து வலம் : திருநந்தகுமார், நா.கண்ணன் மற்றும் கானா

சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் நா.கண்ணன், திரு.நந்தகுமார் (உயர் கல்வி மாணவர்களுக்கான கல்வி ஒருங்கமைப்பாளர், ஆசிரியர்) கூடவே சிறீ அண்ணா ஆகியோர் வந்தார்கள்.

"இவர் தான் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" பதிவு எழுதியவர் என்று சிறீ அண்ணா, நா.கண்ணனுக்கு என்னை அறிமுகப்படுத்தினார். (ஆஹா, நல்ல அறிமுகம்:-))

எனக்கும் கண்ணனை அறிவது அன்றுதான் முதல் முறை, அவருக்கும் அப்படியே. ஆனால் கூடவந்தவர்களுக்கோ அவரோடு நீண்ட காலம் மடல் மூலமாகவும், இணையத்தில் தமிழ்ச் செயற்பாடுகள் மூலமாகவும் பார்க்காமலே நல்ல அறிமுகம் இருந்தது (கோப்பெருந்தேவன் பிசிராந்தையார் நட்போ).

சம்பிரதாயமான உரையாடல்களைத் தொடர்ந்து கண்ணனுடனான நேர்காணல் ஆரம்பமாயிற்று. பேசவந்தவருக்கு ஒரு தூண்டில் போட்டு அவரை நிறையப் பேசவைக்கும் சுதந்திரம் கொடுப்பது என் நேர்காணல் பாணி. அதுவே கண்ணனுக்கும் நடந்தது.
படம்: நா.கண்ணன் மற்றும் கானா

மதுரையில் தான் மாணவராக இருந்த காலத்தில் எழுந்த ஈழத்தமிழர் ஆதரவு முன்னொடுப்புக்கள், தன் எழுத்து அனுபவம், மதுரைத் திட்டம், புளக்கர் பயன்பாடு பற்றி நிறையவே சுவையாகப் பேசினார் அவர். முழுமையான பேட்டியைக் கேட்க
கங்காரு நாட்டில் கண்ணனின் குரல்

ஆகஸ்ட் 18, 2006, வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணி
இவர் தான் நெல்லைக்கிறுக்கன்

சிங்கார சிட்னி என்று இப்படி ஒரு தலைப்பில் தன் பதிவாக இட்டார் நெல்லைக்கிறுக்கன். யாரப்பா இந்த ஆளு, நம்மூர் வந்து சிட்னி முருகனைச் சந்திச்சவரை நாமும் சந்திக்கவேணும் என்று நினைத்து அவருக்கு மடல் போட்டேன். வெள்ளைக்கிழமை சிட்னியில் சந்திப்பதாக முடிவாயிற்று. நம்மூரில் காதலர்கள் தான் கோயிலுக்கு வந்து சந்திப்பார்கள், நம்ம கொடுப்பினை, சிட்னியில் நடந்த ஒவ்வொரு வலைப்பதிவர் சந்திப்புமே இதுவரை சிட்னி முருகன் ஆலயத்தில் தான் நடந்திருக்கின்றன.

அந்த வகையில் வெள்ளி மாலை ஏழு மணிக்கு ஆலயம் போய் முதலில் பிரகார தரிசனம் முடித்து விட்டு ஆலயத்தின் வெளியே வந்து நெல்லைக்கிறுக்கனை செல்போனில் அழைக்கிறேன். இருவருமே முன் பின் பார்த்திராதவர்கள் என்பதால் அடையாளம் கிடையாது. காதில் செல்பேனை ஒத்தியபடி வெளியே வந்தவரை கை நீட்டி வரவேற்க அவரும் பளிச்சென்று சிரிப்போடு கை குலுக்க அவர் தான் நெல்லைக் கிறுக்கன்.என் கணிப்பில் அவரின் புனைப்பெயரை வைத்து ஆள் ஒரு நாற்பது வயசுக்காரர் என்று நினைத்த வேளை பச்சப் புள்ளைக்கு மீசை வச்ச மாதிரி அவர் இருந்தார். பேச்சை விட அதிகம் புன்சிரிப்பு தான் அவரிடமிருந்து வெளிப்பட்டது. "திருநெல்வேலி சிங்கம்லே நீரு, பேசும்லே" என்று கேட்டுத் தான் பேசவைக்க முடிந்தது.

நானும் அவரும் சிட்னி முருகன் ஆலயக்குருக்கள் ரவி ஐயருடன் தமிழக நிலவரங்களை ஊர்வாரியாக மேய்ந்தோம். முழுமையாகப் படிக்க, நெல்லைக்கிறுக்கனின் சிட்னியில் பண்பாளர்களைச் சந்தித்தேன்

அப்போது கஸ்தூரிப் பெண்ணும், மழை ஷ்ரேயாவும் , கார்திக் வேலுவும் கூட வருவதாகச் சொன்னார் நெல்லையார். கஸ்தூரிப் பெண், கார்திக் வந்தாயிற்று, சிவாஜி சூட்டிம் முடித்து தாமதமாக ஷ்ரேயா வந்தார். இவர்கள் எல்லோரையும் அன்று தான் நான் சந்திக்கக் கூடியதாக இருந்தது, நெல்லையார் புன்ணியத்தில்.கஸ்தூரிப் பெண்ணின் நாகப்பட்டினம், கோவை, ரெக்ஸ்டைல் துறை, டெல்லி, சிட்னி வாழ் குழந்தைகளின் தமிழ்ப் படிப்பு என்று பேச்சுத் தாவலிடையே கார்திக்வேலுவும் சேர்ந்து அணி செய்தார். நானும் நெல்லைக்கிறுக்கரும் நல்ல மலையாளப்படங்களையும், கேரளாப் பயணத்தையும் பேசித்தீர்த்தோம். ஷ்ரேயா அதிகம் பேசவில்லை. கோயிலின் சாப்பாட்டுக்கடையில் வாங்கிய தோசை, இட்லி வடை, (போண்டா கிடையாது) அன்றைய நம் இரவு விருந்தாக இருந்தது. ஆளுக்கொரு பக்கம் கலைந்து போனோம்.

படம்: சிட்னி ஹெலன்ஸ்பேர்க் சிவா விஷ்ணு ஆலயம்

சிட்னி ஹெலன்ஸ்பேர்க் சிவா விஷ்ணு ஆலயத்துக்கு நெல்லைக்கிறுக்கரை நம் நண்பர் படை புடை சூழ கணேஷ விசர்ஜனுக்கு அழைத்துப் போனேன். தன் விடியோ கமராவால் ஆசை தீரப்ப் படமெடுத்தார் அவர். பெரும் திரளான கூட்டத்தில் திக்குமுக்காடி மதியச் சாப்பாட்டை வாங்கி கால்வயிறு நிரப்பினோம். வரும் வழியில் 80 களில் வெளிவந்த இசைத்தட்டுக்கள் என் காரில் ஒலிக்க , இளையராஜாவின் இசை ராஜாங்கத்தை சிலாகித்து மகிழ்ந்தோம். குறிப்பாக அக்னி நட்சத்திரம், வருஷம் 16, பன்னீர்ப்புஷ்பங்கள்.

தன் பாட்டனார் கொழும்பில் பலகாலம் இருந்ததாகப் பேச்சின் நடுவே சொன்னார். பேசிக்கொண்டே மெய்மறந்து போய் வழி மாறி 2 மணிநேரச் சுற்றில் ஆறு, மலை, காடு தாண்டி வழியில் கோர்ன் ஐஸ்கிரீமும் வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்து வீடு திரும்ப இரவு 7 மணி ஆயிற்று.எதிர்பாராமல் வந்த சந்திப்பு நெல்லைக் கிறுக்கருடன் இன்னும் தொடர்கின்றது.

ஒக்டோபர் 14, 2006, சனிக்கிழமை காலை 11.20 மணி


சிட்னி வலைப்பதிவர்கள் சந்திப்பில் வந்தவர்கள் தம் புகைப்படத்தை வெளியிடவேண்டாமென்ற கோரிக்கைக்கு மதிப்பளித்து மூத்த வலைப்பதிவர் Spider-man இன் படம் இடம் பெறுகின்றது.


"துளசி கோபால் அம்மையார் வரும் 14 ஆம் திகதி சிட்னிக்கு வருகிறார், நம் வலைப்பதிவர் சந்திப்பு ஒன்று கூடுவோமா" என்ற மின் மடல், தென் துருவ வலைப்பதிவர் சங்கத்து கொ.ப,செ மழை ஷ்ரேயாவிடமிருந்து வந்தது. அநானிகள் தவிர்த்த அனைத்து சிட்னி வலையர்களின் சம்மத மடல் இந்தச் சந்திப்பை உறுதி செய்தது. சிட்னி சிங்கார வேலர் சந்நிதியில் காலை 11.20 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடு. அப்படியே நானும் காலையில் என் தேரைக் கிளப்பிக்கொண்டு போய்ச் சந்நிதியை அடைந்தேன்.

முதலில் இனங்கண்டது பொட் டீ கடையாரை. முன் பின் இதுவரை சந்திக்காவிட்டாலும் ஏதோவொரு அலைவரிசை (மொபைல் போனாக இருக்குமோ) நம் இருவரின் சந்திப்பை தானாக ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் கனக்ஸ் என்ற சிறீ அண்ணாவும் வந்து இணந்து கொண்டார். பின்னர் மழை ஷ்ரேயா, கஸ்தூரிப் பெண், துளசிம்மா அவர் கணவர் சகிதம் வந்தார்கள். சம்பிரதாயபூர்வமான அறிமுகப்படுத்தல்கள், போட்டோ செஷன் போன்றவை முடிந்து சனீஸ்வரனுக்கு காக்காய் பிடிக்க பெண்மணிகள் கிளம்பிச் சென்றனர்.

சில மணித்துளிகள் பொட் டீ கடையாரும் , சிறீ அண்ணரும் , நானும் ஈழப் பிரச்சனையில் இருந்து வலைப் பிரச்சனை வரை ஒரு சுற்று வரவும், பெண்மணிகள் மீண்டு(ம்) வந்து இணைந்து கொண்டனர். ஏதாவது ஒரு உணவகம் செல்வோமென்றால் சுவாமியின் பிரசாதமே மதிய உணவு ஆகட்டும் (சாமிக்குத்தம் ஆகிரும்ல) என்று மழை அடம்பிடித்தார். ஒரு உணவு பரிமாறும் கியூவின் பின்னால் துளசிம்மா போய் நிற்கவும் கோயிற் தொண்டர் ஒருவர் வந்து " அம்மா , இங்க வயசானவங்க மட்டும் தான் நிற்கலாம்", உங்க கியூ அப்பால் இருக்கு என்று ஒரு திசையைக் காட்டினார்", துளசிம்மாவுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. (இருக்காதா பின்ன)

அடுத்த கியூ சென்று நாம் நிற்க பெண்மணிகள் பின்னால் அணிவகுத்தார்கள். ஆனால் அவர்கள் மெய்மறந்து அரட்டைக் கச்சேரியில் வரிசையை மறந்து நிற்க இடையில் பல புத்திசாலிகள் வரிசை கட்டி நின்றார்கள். தாமதமாகத் தம் நிலை உணர்ந்த அம்மணிகள் முகத்தில் புரட்டாசி சனி எள்ளும் கொள்ளும் வெடித்தது. ஒருவாறு முட்டி மோதி மதிய உணவை எடுத்து கோயிற் பின்புறமுள்ள கலாச்சார மண்டபத்துள் நுளைந்து கதிரை மேசை தேடி அனைவரும் ஒருகே ஆகாரம் கழித்தோம்.சாப்பாட்டின் நடுவே வலைப்பதிவுகள் பற்றிய அலசல்.

கோயிலிலிருந்து மீண்டு கஸ்தூரிப்பெண் வீட்டில் அனைவரும் அடைக்கலமானோம். சூடான வடை பரிமாறலுடன் மீண்டும் வலையுலக அலசல். குறிப்பாக மா.சிவகுமாரின் பொருளாதாரக் கட்டுரைகள் பற்றி துளசிம்மா விதந்து பாராட்டினார். இன்னும் சில நல்ல வலைப்பதிவர்கள் பற்றிய பதிவுகள் பற்றிச் சிலாகித்தோம்.

தன் வலைப் பதிவுகளில் சூடாகப் பரிமாறும் பொட் டீ கடை, நிஜத்தில் அளந்து அளந்து தான் தன் வார்த்தைகளை விட்டார். துளசிம்மா தன் எழுத்தைப் போலவே கல கல, இவரின் முதற் சந்திப்பிலேயே பல வருஷ நட்பு என்ற தோரணையில் பழகினார். கஸ்தூரிப் பெண் விருந்தோம்பலின் சிறப்பை தன் வீட்டில் காட்டினார், இவர் வீட்டில் திரும்பிய பக்கமெல்லாம் பிள்ளையார் சிலை, (தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைவினை விற்பனை நிலையம் வந்த மாதிரி ;-)))
சிறீ அண்ணரும் அளவெடுத்துத் தான் ஏற்கனவே மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போலப் பேசினார் :-)
மழை ஷ்ரேயாவுக்கு சிட்னி புன்னகை அரசி பட்டம் கொடுக்கலாமா என்று சொல்லுமளவுக்கு வாயைத் திறந்தால் சிரிப்பைத் தவிர வார்த்தைகள் அவ்வளவு இல்லை. இவ்வளவு தான் நன் சந்தித்த வலைப்பதிவர் பற்றிய என் மதிப்பீடு. மிச்சத்தை வந்து கலந்து கொண்டவர்களும் சொல்லலாம்.

வலைப்பதிவுகளை எப்படித் தேர்ந்தெடுத்து வாசிக்கின்றோம் என்பதற்கு வந்த கருத்துக்களில் சில அவற்றின் விடயதானத்தைக் கொண்டு என்றும், கவர்ச்சிகரமாக தலைப்பு மற்றும் தமிழ் மணத்தில் காட்டப்படும் சுருக்கமான வலைப்பதின் முதற் பந்தியை வைத்து என்றும், அதிக பின்னூட்டலை வைத்து என்றும், குறிப்பிட்ட சில வலைப்பதிவர்களின் பதிவை (பின்னூட்டம் உட்பட) மட்டுமே படிப்பேன் என்றும் கருத்துக்கள் வந்தன.

வலைப் பதிவில் படம் போடுவதில் சிக்கல் என்ற உரிமைப் பிரச்சனை கிளப்பப்பட்ட போது பனங்காட்டு நரியைப் (Fire fox) பயன்படுத்தினால் சுலபமாக வலையேற்றலாம் என்ற என் யோசனை ஏற்கப்பட்டு பின் சந்திப்புக்கு வந்த சில வலையர்களால் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டது. பனங்காட்டு நரியில் (Fire fox) சில பதிவுகளின் எழுத்துருக்கள் தெரிவதில்லை என்ற கேள்விக்கு, Formatting ஐ எடுத்துவிட்டு மீள் பதியுங்கள் சரியாகிவிடும் என்ற யோசனை ஏற்கப்பட்டது. ஒருவாறு மாலை ஐந்து மணிக்குச் சபை கலைய ஆரம்பித்தது. வலைப்பதிவுகள் பற்றிப் பேசப்பட்ட முதற் சிட்னி சந்திப்பு என்ற திருப்தியோடு நகர்ந்தோம்.


பிறக்கப் போகும் 2007 ஆம் ஆண்டு நம் எல்லோருக்கும் சுபீட்சமான ஆண்டாக மலர (ஹிம்...ஒவ்வொருவருஷமும் முடியேக்கை இதைத்தானே சொல்லுறம், என்னத்தக் கண்டனாங்கள்) வலைப்பதிவு
ஐயாமார், தாய்மார்கள், அண்ணைமார், அக்காமார், தம்பி, தங்கையருக்கு என் வாழ்த்துக்கள்.