Social Icons

Pages

Friday, December 26, 2014

"முன்னறிவிப்பு" (மலையாளம்) திரை அனுபவம்

செத்த பல்லியொன்றைக் கூட்டாக இழுத்துப் போக யத்தனிக்கும் எறும்புக் கூட்டத்தின் காட்சிப்படுத்தலோடு ஆரம்பிக்கிறது முன்னறவிப்பு மலையாளத் திரைப்படம்.

ஒரு மணி நேரம் 54 நிமிடங்கள் பயணிக்கும் இந்தப் படத்தின் ஓட்டமும் மெதுவான எறும்பு நடை தான். ஆனால் படம் பார்த்து முடித்ததும் சுருக்கென்று எறும்பொன்று கடித்த உணர்வு தான் சற்று முன்னர் இந்தப் படத்தைப் பார்த்து முடித்ததும்.

தன்னுடைய மனைவியையும், குஜராத்திப் பெண் பூஜாவையும் ஆக இரட்டைக் கொலை செய்த குற்றத்துக்காகத் தண்டனை அனுபவித்து, 20 வருடங்கள் கடந்தும் ஜெயில் வாழ்க்கையை விட்டு வெளியுலகம் தேடிப் போக விரும்பாத சி.கே.ராகவன் (மம்முட்டி). 
ஜெயில் சூப்பரிண்டெண்ட் (நெடுமுடிவேணு) வாழ்க்கையை எழுத வரும் பத்திரிகையாளர் அஞ்சலி (அபர்ணா கோபி நாத். 
தான் அந்தக் கொலைகளைச் செய்யவில்லை என்று சாதிக்கும் கைதி சி.கே.ராகவனைக் கண்டு அந்த சுவாரஸ்யமான மனிதனின் வாழ்க்கையில் இருக்கும் மர்மத்தைப் புத்தக வடிவில் கொண்டு வர விரும்பிய பத்திரிகையாளர் அஞ்சலி சந்திக்கும் அனுபவங்களோடு முடிவில் சற்றும் எதிர்பாராத ஒரு புள்ளியில் வந்து நிற்கின்றது இந்தப் படம்.
இங்கே சொன்ன கதை முடிச்சை வைத்து ஒரு சராசரி மசாலாப் படமாக நீங்கள் கற்பனை பண்ணி "மனிதனின் மறுபக்கம்" அளவுக்குப் போனால் உங்கள் நினைப்பில் மண் தான்.

பாடல்கள் கிடையாது. மலையாள மர்மப் படங்களுக்கே உரித்தான மாமூல் இசையோட்டம் மட்டுமே. 
மலையாளத்தின் பிரபல இயக்கு நர் ரஞ்சித் தயாரித்து, கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேணு.

இந்த 2014 ஆண்டு வெளிவந்து நடிகர் மம்முட்டிக்கு பரவலான பாராட்டைக் கொடுத்த படம். கிட்டத்தட்ட மோகன்லாலுக்கு ஒரு "த்ரிஷ்யம்" போல மம்முட்டிக்கு "முன்னறிவிப்பு" என்று சொல்லுமளவுக்கு இவரின் வயதுக்கும், முதிர்ச்சிக்கும் ஏற்ற பாத்திரம் இது.
மம்முட்டியின் நடிப்பைப் பற்றிப் புதிதாக என்ன சொல்ல வேண்டியிருக்கிறது?
படம் முழுக்க எந்த வித நாயக அந்தஸ்தும், இலட்சணமும் இன்றிக் கொடுத்த பாத்திரமாகவே இயங்கியிருக்கிறார்.

படத்தின் நாயகியாக பத்திரிகை நிருபர் அஞ்சலி (அபர்ணா கோபி நாத்) மிகக் கச்சிதமான தேர்வு. இவர் தான் படத்தின் ஆரம்பம் முதல் காட்சிக்குக் காட்சி திரைக்கதையைச் சுமக்க வேண்டிய பொறுப்பை மிகவும் சிறப்பாக ஏற்று வழங்கியிருக்கிறார்.

இந்தப் படத்தைப் பார்க்கும் எண்ணம் இருந்தால், மலையாளம் தெரியாதவர்கள் ஆங்கிய உப குறிப்புகளோடு பார்க்க வேண்டியது கட்டாயம். தவிர்க்க முடியாத வசனப் பகுதிகளை உள்வாங்க அது உதவும். குறிப்பாக கைதி சி.கே.ராகவனின் தர்க்க ரீதியான கருத்துகள்.
படத்தின் முடிவை எங்கும் படிக்காமல் நீங்களாகவே அனுபவிக்க வேண்டுகிறேன்.

மெதுவாக நகரும் பட ஓட்டத்தைப் பொறுமையாக விரும்பிப் பார்க்கும் ரசிகருக்கு ஏற்றது இந்த "முன்னறிவிப்பு".
எனக்கு ஒரு நிறைவான கலைப்படைப்பைக் கண்ட திருப்தி ஒட்டியிருக்கிறது.

Saturday, October 04, 2014

இலக்கியா அப்பா ஆகிய நான்

இன்றிலிருந்து சரியாக முப்பத்தோரு தினங்கள் முன்பதாக, செப்டெம்பர் 3 ஆம் திகதி காலை எனது வழமையான நாளாக அமையவில்லை. அதீத போராட்டத்தின் பின்னர் ஒரு உன்னதத்தைக் கொடுத்த நாளாக அமைந்திருந்தது.

நிறை மாதக் கர்ப்பிணியான என் மனைவிக்கு செப்டெம்பர் 3 க்கு முந்திய நாட்களில் இலேசாக வலி எடுத்திருந்தது. பக்கத்தில் இருந்த தனியார் மருத்துவமனையில் ஏற்கனவே மகப்பேற்றுக்காகப் பதிவு செய்து வைத்திருந்ததால் எமது மகப்பேற்று வைத்தியரின் ஆலோசனைப்படி மனைவியை அங்கே அழைத்துச் சென்றேன். மனைவியைப் பரிசோதித்து விட்டு இது வெறும் பிரவசகால வலி என்றும் நிறைய ஓய்வெடுக்கச் சொல்லியும் ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தார்கள். ஆனால் என் மனைவிக்கோ உள்ளூரப் பயம் கவ்வியிருந்ததை என்னால் உணர முடிந்தது.  எனக்கும் அதே நிலைதான் ஆனால் நான் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவரைச் சமாதானப்படுத்தியும், தொலைக்காட்சியில் குழந்தைகள் பாடுவதையும் போட்டுப் பராக்குக் காட்டினேன். எங்கள் பயத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. 2012 ஆம் ஆண்டில் நாம் சந்தித்த அந்த மோசமான ஆகஸ்ட் 14 ஆம் நாள் அடிக்கடி வந்து நினைப்பூட்டியது. அந்த நாளை நினைக்கும் போதெல்லாம் தற்கொலைப் பாறையின் விளிம்பில் நிற்குமாற் போல இருக்கும். அந்த நாளுக்குப் பின்னர் ஒரு வைத்தியர் எங்கள் முகத்தில் அடித்தால் இனிமேல் குழந்தைப் பாக்கியமே இல்லை என்று சொல்லிவிட்டார்.

அதன் பின்னர் ஒரு திடீரென்று முடிவெடுத்து நவம்பர் 2012 இந்தியாவுக்குச் சென்று குருவாயூரப்பனையும், கதிர்க்காமக் கந்தனையும் வேண்டி முறையிட்டேன். அந்த விஜயத்தின் போது எழுத்தாளர் பாரா சார் ஐ அப்போது சந்தித்தபோது, "கானா எதுக்கும் கவலைப்படாதே உனக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், எங்களுக்கு அருள் கொடுத்த திருக்கருக்காவூர் அம்மன் கோயில் இருக்கு நான் உனக்காக வேண்டுதல் வைக்கிறேன் நீ அப்புறமா வந்து வேண்டுதலை நிறைவேற்று" என்றார்.
சந்தோஷமான இந்த நாளில் பழைய நினைவுகளை மீண்டும் நினைப்பூட்டாமல் கடக்கிறேன்.

இம்முறை என் மனைவி கருவுற்ற நாள் முதல் ஒவ்வொரு வாரமும் எங்களுக்கு நெருப்பாற்றைக் கடப்பது போல இருக்கும்.இந்த ஆண்டு தை பிறந்ததும் சிட்னி முருகனிடமும், மல்கோவா மரியன்னையுடமும் என் வேண்டுதலை முறையிட்டேன்.

செப்டெம்பர் 3 ஆம் திகதி காலை, வேலைக்குக் கிளம்ப என்னைத் தயார்படுத்தும் போது, கடுமையான இடுப்பு வலி ஏற்படுகின்றது என் மனைவிக்கு. பிரசவ காலத்தில் இடுப்பு வலி என்பது மோசமான பின் விளைவுக்கு அறிகுறி என்ற மருத்துவரின் எச்சரிக்கை நினைவுக்கு வந்து, உடனேயே மருத்துவமனைக்குப் பயணிக்கிறோம். மனைவியை அங்கிருக்கும் மகப்பேற்றுப் பகுதியில் கையளித்துவிட்டுக் காத்திருப்போம் என்று நினைத்த போது " நீங்கள் வேலைக்குச் செல்லுங்கள் அவசரம் என்றால் செல்போனில் அழைக்கிறேன்" என்றார் மனைவி. மருத்துவமனை நிர்வாகம் மிகவும் பொறுப்போடு கண்காணிக்கும் என்ற நிம்மதியில் நானும் வேலைக்குக் கிளம்பினேன். அன்று முக்கியமான ஒரு அலுவலகச் சந்திப்பு இருந்ததும் ஒரு காரணம். வேலைக்குச் செல்லும் போதே மனைவியின் ஊரைச் சேர்ந்த அக்கா ஒருவரின் அழைப்பு எனக்கு வருகிறது.
"நான் போய்ப் பார்க்கிறேன் அவரை" என்று அந்த அக்கா சொன்னது எனக்கு சிட்னி முருகனே ஆள் அனுப்பி உதவியது போலிருந்தது.

வேலைக்குப் போய் அரை மணி நேரத்தில் மனைவியின் உறவுக்கார அக்காவிடமிருந்து அழைப்பு, "உடனேயே அவருக்கு ஒப்பிரேஷன் செய்யவேணுமாம்" என்று அவர் சொன்னபோது என் தலையில் ஒரு இடி இறங்கியது. அலுவலகத்தில் இருந்து ரயிலில் பயணித்துப் போனால் ஒரு மணி நேரமெடுக்கும். டாக்ஸி பிடித்தால் குறைந்தது 40 நிமிடம் எடுக்கும் தொலைவில் மருத்துவமனை. எனக்கு அந்த நேரம் எதுவும் ஓடாமல் ரயில் நிலையத்தை நோக்கி ஓடுகிறேன். எதையும் தீர்க்கமாக முடிவெடுக்கக் கூடத் திராணியற்ற நிலை அது. பிறகு அந்தத் திசையில் இருந்து டாக்ஸி நிறுத்துமிடத்துக்கு ஓடுகிறேன். எதிர்ப்பட்ட டாக்ஸிக்காரரிடம் மருத்துவமனை பெயரைச் சொல்லி அங்கே போகச் சொல்கிறேன். ஆனால் அவருக்கு என் அவசரத்தைக் காண்பிக்கவில்லை, இவர் வேகமாக ஓடி வழியில் ஏதும் அசம்பாவிதம் வந்துவிடும் என்ற பயமே காரணம்.
ஆனால் பின் இருக்கையில் அமர்ந்திருந்த எனக்கு இருப்புக் கொள்ளாது கால்கள் உதைத்துத் தள்ளுகின்றன. எப்படியாவது மனைவிக்கு நடக்க இருக்கும் சத்திர சிகிச்சைக்குக் குறித்த நேரத்துக்குப் போய்விட வேண்டுமே ஆண்டவா.
அந்த டாக்ஸிக்காரர் இண்டு இடுக்கு சந்து பொந்தெல்லாம் தன் டாக்ஸியை விட்டு 20 நிமிடத்துக்குள் மருத்துவமனை வளாகத்தில் என்னை இறக்குகிறார்.

அங்கிருந்து மேல் மாடி காண ஓடி மகப்பேற்றுப் பிரிவுக்குள் நுழைந்தேன். எதிர்ப்பட்ட சீன இனத்துத் தாதிக்கு என்னை நன்றாகத் தெரியும். முந்திய அனர்த்தத்தின் போதும் அவர்தான் என் மனைவியைப் பராமரித்தார். இன்னும் இரு நிமிடம் தான் இருக்கு சத்திர சிகிச்சை நடக்கப்போகிறது உடனேயே மருத்துவமனை உடையை மாற்றச் சொல்லி அனுப்புகிறார். கால் ஒரு பக்கம் கை ஒரு பக்கம் என்று இழுபட்டு அவசரத்தில் குழம்பி ஒருவாறாக என் உடையை அவசரமாக மாற்றினேன். மூச்சிரைத்து நெஞ்சில் இலேசாக முட்டியது. சத்திர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியே வந்த இன்னொரு ஆண் தாதி என் முதுகைத் தடவி ஆசுவாசப்படுத்தச் சொல்கிறார். சத்திர சிகிச்சைப் பிரிவுக்குள் போகிறேன். என் மனைவிக்கு நோவு ஏற்படாத ஊசி போட்டு அரை மயக்கத்தில் இருக்கிறார்.

என் மனைவியின் இடுப்பு வரை திரை மறைத்து மறு கரையில் இருந்த வைத்தியர் குழாமும் தாதிமாரும் வேகவேகமாக இயங்கியவாறு தம் பணியில் முனைப்பாக இருக்கிறார்கள். ஏதோ எனக்காகக் காத்திருந்தது போல, நான் அங்கு நுழைந்திருந்த சில நொடிக்கெல்லாம் அறுவை சிகிச்சை நடந்து தூக்கிப் பிடிக்கிறார்கள் அசைந்தாடும் உயிருள்ள ஒரு தங்கப் பேழையை. வெளியே வந்த வாக்கிலேயே வீறிட்டு அழுகிறது அது.

எங்களூர் கந்தசுவாமியார் தீர்த்தத் திருவிழாவில் தாமரைக் குளத்தில் இருந்து முக்கி எழும் போது வெண்பூச்சும் சிவப்புப் பூக்களும் ஒட்டிய உடலோடு இருக்குமாற் போல அந்தக் காட்சி.

அந்தக் குழந்தையை அப்படியே தூக்கி ஒரு மேசையில் கிடத்தினார்கள்.
எனக்கு அந்த நேரம் எதுவுமே பேசமுடியாதவாறு வாய் இறுக்கியது.  கைகளைக் கூப்பி அந்த ஆண் தாதியைப் பார்த்தவாறே அழுகிறேன்.
"நன்றாக அழுங்கள் இந்த இனிமையான நேரத்தில் உணர்ச்சியை வெளிக்காட்ட இதுவே நல்லது"
என்றவாறே அந்த ஆண் தாதி என் குழந்தையின் தொப்புளோடு நீண்டிருந்த தாமரைக் கொடி போன்ற அந்தக் கொடியை வெட்டச் சொன்னார். வேண்டாம் என்று சொல்லியவாறே அழுதுகொண்டே இருந்தேன்.
குழந்தையை ஏந்திப் பிடித்துப் படுத்திருந்த என் மனைவி அருகில் வந்து காட்டி "இது உங்கள் குழந்தை" என்ற போது பாதி மயக்கத்திலும் விசும்பினார்.
அங்கிருந்து கடந்து என் மனைவியின் உறவுக்கார அக்காவைக் கண்டபோதும் மீண்டும் அதே நிலையில் கைகூப்பித் தொழுதே .

குழந்தை பிறக்க வேண்டிய தினத்தில் இருந்து முன்கூட்டியே பிறந்த காரணத்தால் விசேட கண்காணிப்புப் பிரிவில் இருக்கவேண்டும் ஆனால் பயப்பட ஏதுமில்லை என்றார்கள். சரவணப் பொய்கையில் உதித்த முருகனைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தது போல இருந்தது அந்த மூன்று வாரங்களும் தாதியர் பராமரிப்பில் இருந்த என் குழந்தையைப் பார்க்கும் போது.  அந்த அனுபவங்களைக் கோர்த்து ஒரு தொடர் எழுத இருக்கிறேன். என்னைப் போலவே இம்மாதிரியான சவாலைச் சந்திக்கும் பெற்றோருக்கு அது உதவும் என்ற நோக்கில். பின்னர் தான் அறிந்து கொண்டேன் நான் சந்தித்த அந்தச் சீனத்தாதியே வற்புறுத்தி சத்திர சிகிச்சை செய்யுமாறு எங்கள் மகப்பேற்று வைத்தியரைத் தூண்டியதாகவும் அதன் பின்னரேயே எங்கள் குழந்தை காப்பாற்றப்பட்டது என்றும் அறிந்து கொண்டேன். ஆண்டவன் எல்லா ரூபத்திலும் வருவான்.

தந்தையர் தினத்துக்கு முந்திய நாள் வரை நாட்கணக்கில் எம் குழந்தைக்கு முருகனோடு சம்பந்தப்பட்ட பெயர் வைக்க வேண்டும் என்று மூளையைக் கசக்கிக் கொண்டிருந்த போது சடுதியாக வந்துதித்தது,
"இலக்கியா"
என்ற பெயர். முருகன் தமிழ்க்கடவுள், இந்தப் பெயரும் தமிழோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற பெரும் திருப்தியோடுன் இருந்த எனக்கு, இந்தப் பெயர்  குறித்த மேலதிக விளக்கங்களை இணையத்தில் தேடிய போது "இலக்கியா" என்ற பெயர் கார்த்திகை நட்சத்திரம் சார்ந்தது என்று  தெரிந்த போது இன்ப அதிர்ச்சி.

இலக்கியாவை வெள்ளைக்காரன் எப்படிக் கூப்பிடுவான் என்று நம்மவர் சிலர் கேட்டபோது, ரஷ்யாக்காரனை எப்படிக் கூப்பிடுவானோ அதை விட இலகுவாக என்றேன் நான். என் குழந்தைக்குத் தமிழ்ப் பெயர் வைக்கவேண்டும் என்ற உறுதியில் இருந்து நான் விலகவில்லை.  நான் மதிக்கும் தமிழ்ப்புலவர் ஒருவர் "இலக்கியா" என்று என் பிள்ளைக்குப் பெயர் வைத்ததைக் கேட்டுத் தானாகவே என்னை அழைத்து "அதானே பார்த்தேன் தமிழ்ப்பெயர் வைக்காவிட்டால் உம்மை நான் உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பேன்" என்று செல்லமாகக் கடிந்து கொண்டார்.
தந்தையர் தினத்தில் மல்கோவா மரியன்னையிடம் சென்று பிரார்த்தித்து விட்டு, துண்டுச்சீட்டில் "இலக்கியா" என்ற பெயரை உத்தியோகபூர்வமாக எழுதி அறிவிக்கிறேன் மாதாவிடம்.

என்னுடைய விரத நாட்களில் நான் பிறந்ததில் இருந்து இன்று வரை தொடர்ந்து அனுஷ்டிப்பது நவராத்திரி விரதமாகும். நவராத்திரி காலத்தில் சரஸ்வதி பூஜை நாளில் எங்கள் பிள்ளையை வீட்டுக்குப் போக அனுமதித்தார்கள். அன்று தான் "கை வீணையை ஏந்தும் கலைவாணியே" பாடலைப் பகிர்ந்து கொண்டேன் இணையத்தில்.

தாயிடம் பால் குடித்து விட்டு என் கை மாறும் குழந்தையை மடியில் வைத்து "பாட்டி வடை கதை" யில் இருந்து ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வருகிறேன். உன்னிப்பாகக் கேட்பது போல முகத்தை வைத்துக் கொள்வாள்.
"அரிதாரத்தைப் பூசிக் கொள்ள ஆசை என் பொன்னம்மா பொன்னம்மா" என்று நான் இளையராஜா குரலெடுத்துப் பாடவும் விநோதமாக என்னைப் பார்த்துத் சிரிப்பாள். "இளையராஜா தாத்தா பாடின பாட்டம்மா" என்று சொல்வேன் சிரிப்போடு. இதெல்லாம் ஒரு மாதக் குழந்தைக்கு ரொம்பவே அதிகம் என்றாலும் இதெல்லாம் இத்தனை ஆண்டுகாலம் என் மனக்கேணியில்த தங்கியிருந்த ஆசையால் விளைவது.

இன்று விஜயதசமி நாளில், எங்கள் இலக்கியாக்குட்டி பிறந்து ஒரு மாதம் நிறைந்த நாள் சடங்கும் வந்தது எதிர்பாராத இன்னொரு இன்ப அதிர்ச்சி. இன்று காலை சிட்னியில் இருக்கும் எங்களூர் ஐயர் வந்து முறையான சடங்குகளைச் செய்துவிட்டுப் போயிருக்கிறார்.  ஒவ்வொரு வாரமும் சிட்னி முருகன் கோயிலின் வெளி வீதியில்  படியேறாமல் நின்று பூஜையை மனக்கண்ணால் கண்டு தரிசிப்பேன். நான்கு வாரங்களின் பின் தீட்டுக் கழித்து இன்று தான் சிட்னி முருகன் கோயிலுக்குள் சென்று "இலக்கியா"வுக்கு அர்ச்சனை செய்தேன். அர்ச்சனை முடிந்து  "இலக்கியா" என்று குரலெழுப்பி என் அர்ச்சனைத் தட்டை அர்ச்சகர்  தந்தபோது ஏற்பட்ட ஆனந்தம் சொல்லிலடங்காது. சிட்னி முருகன் சிரித்துக் கொண்டிருப்பது போல என் மனசு பேசிக்கொண்டது.

என் குழந்தை எப்படியெல்லாம் வளர வேண்டும் என்று எனக்கு எந்தவொரு உயர்ந்த இலட்சியமும் இல்லை.
"பெரியாட்களிடம் மரியாதையோட பழக வேணும், மற்றவர் மனங்கோணாமல் இருக்க வேணும்"
என்ற எதிர்பார்ப்புடனேயே இலக்கியாவை வளர்க்கப் போகிறேன். அதுதான் என் தந்தை எனக்கு உபதேசித்த மந்திரமும் கூட.

Sunday, August 24, 2014

சிட்னியில் நிகழவிருக்கும் சைவநெறி மாநாடு 2014 - சிறப்பு முன்னோட்டம்

சிட்னி முருகன் சைவநெறி மாநாடு 2014 என்னும் பெரும் எடுப்பிலான நிகழ்வை சிட்னி முருகன் ஆலயமும் உலக சைவப்பேரவை ஆஸ்திரேலியாவும் இணைந்து முன்னெடுத்திருக்கிறார்கள்.

சைவ நெறி தழைத்தோங்கும் தாய்த் தமிழகத்தில் இருந்தும், ஈழத்தமிழகத்தில் இருந்தும், மலேசிய மண்ணில் இருந்தும் சைவநெறிக்காகத் தம்மை அர்ப்பணித்துச் சிவ சிந்தையோடு நாளும், பொழுதும் இயங்கி வருகின்ற ஆன்மிக வழிகாட்டிகள், ஓதுவார் மூர்த்திகள், கல்விமான்கள் என்று பெரும் புலமையாளர்களை ஒன்று திரட்டி நிகழ்த்தப்படும் ஒரு பெரிய முன்னெடுப்பாக இந்த மாநாடு திகழவிருக்கின்றது,
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற முதுமொழிக்கமைய இந்துக்கள் தாம் செல்லும் இடங்கள் தோறும் ஆலயங்கள் அமைத்துப் பணி செய்து வருகின்றார்கள். இன்று புலம்பெயர்ந்து பல்வேறு தேசங்களிலும் வாழும் நமது மக்கள் முன்னெடுத்து வரும் இந்த ஆன்மிகப் பணியில் சிட்னியில் வைகாசிக் குன்றில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் சிட்னி முருகன் ஆலயத்தின் பணி வெறும் சமயப் பணியோடு நின்றுவிடாது, சமூகப்பணியிலும் தன்னை முன்னெடுத்து வருகின்றது. சைவப்பாடசாலை மற்றும் பண்ணிசை வகுப்புகளின் வாயிலாகவும், இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து சிட்னி மண்ணுக்கு வரும் ஆன்றோர் பெருமக்கள் பெரும்பாலும் சிட்னி முருகன் ஆலயத்தின் பின் வளவில் இருக்கும் கலாசார மண்டபத்தில் தம் சைவப் பிரசங்கங்களை நிகழ்த்திச் செல்வதும் வழமையான பணியாக அமைகின்ற சூழலில், இந்த சைவ நெறி மாநாடு என்பது இவற்றுக்கெல்லாம்  தலையாயதான ஒரு பெரும் பணியாக அமைந்து நிற்கின்றது.

ஒரு காலத்திலே சைவ நெறியோடு ஆட்சி செய்த மன்னர்களால் ஆலயங்கள் வெறும் ஆன்மிக நிலையங்களாக மட்டுமே இயங்கக் கூடாது, மக்களுக்கு சைவ நெறியைப் போதிக்கும் கல்விச்சாலைகளாகவும் இயங்க வேண்டும் என்ற முனைப்போடு செயற்பட்டதை நாம் வரலாற்று ஆதாரங்களின் வாயிலாகவும், இன்றும் தொன்மை பேசி விளங்கி நிற்கும் ஆலயங்களின் அமைப்பு முறைகளாலும் கண்டிருக்கின்றோம். சோழ மன்னர்களின் பொற்கால ஆட்சி இதற்கொரு வரலாற்றுச் சாட்சி.

சைவ நெறி மாநாடு என்பது ஏன் முக்கியம் என்பதை நம் வீட்டில் இருந்தே ஆரம்பிக்கலாம். இன்று புலம்பெயர்ந்த சூழலில் வாழும் அடுத்த தலைமுறையினர் சைவ சமயம் தொடர்பாக நம்மிடம் கேட்கும் கேள்விகளுக்குத் தகுந்த பதில் கொடுக்க நாம் பல சமயம் திணறுவோம். சில வேளை நம் சமயம் மீதான அவ நம்பிக்கையாகவும் கூட அது மாறக்கூடிய பேரபாயம் இருக்கும். இந்தச் சூழலில் இப்படியான மாநாட்டுக் கருத்தரங்கங்கள் தான் இளைய சமுதாயத்தையும், ஏன் மூத்த தலைமுறையையும் கூட ஐயம் திரிபுற சைவ சமய உட்கருத்துக்களை அறிந்து, சந்தேகங்களைப் போக்கி நமது மதத்தை முன்னெடுத்துச் செல்லப் பேருதவியாக அமைகின்றன.

இந்த சைவ நெறி மாநாட்டு நிகழ்வுகள் இரண்டு பகுதிகளாக அமைகின்றன. மாநாட்டின் கருப்பொருளான
"சைவ ஆகமங்கள், திருமுறைகள், மற்றும் சித்தாந்த நூல்கள் காட்டும் மனித நேயம்"
போன்ற அம்சங்களோடு முக்கிய கருத்தரங்க நிகழ்வுகள் சிட்னி முருகன் சைவ நெறி மாநாட்டின் முக்கிய கருத்தரங்க நிகழ்வுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

சைவ நெறி மாநாட்டு நிகழ்வுகளின் இன்னொரு பரிமாணமாக பயிலரங்கங்கள் என்ற பிரிவில் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு,
"சைவ மதத்தை நன்கு தெரிந்து கொள்ளும் வழி"
என்ற தொனிப்பொருளில் மாநாட்டு நிகழ்வுகளுக்குமுந்திய வாரத்தில் ஆகஸ்ட் 23, 24 ஆகிய நாட்களில் நடந்தேறின. இதன் தொடர்ச்சியாக மா நாட்டு நிகழ்வு நிறைவுற்ற பின்னர் செப்டெம்பர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளிலும் நடைபெற உள்ளன.

வரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி சைவநெறி  மாநாட்டின் துவக்க நாளில், மாலை 3.45 மணிக்கு பிள்ளையார் பூசையினைத் தொடர்ந்து அமையவிருக்கும் நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் சிறிலசிறி சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், தருமபுர ஆதீன மூத்த தம்பிரான் முனைவர் குமாரசாமித்தம்பிரான் சுவாமிகள், முனைவர் சபாரத்தினம் சிவாச்சார், கலாநிதி சுரேஷ் கோவிந்த், முனைவர் பேராசிரியர் மா.வேதநாதன், முனைவர் பேராசிரியர் கோ.ப. நல்லசிவம்,  சைவப்புலவர் செ. நவநீத குமார் ஆகியோரின் சிறப்புரைகளோடும், ஓதுவார் மூர்த்தி அரிகர தேசிகர் அவர்களின் திருமுறைப் பண்ணிசை மற்றும் அன்றைய நாள் நிகழ்வின் முத்தாய்ப்பாக சங்கீத கலாநிதி பேராசிரியர் மு. நவரட்ணம் அவர்களின் திருப்புகழிசையோடு மாநாடு அமைய இருக்கின்றது.

வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் காலை 8 மணிக்கு நாதசுர இசையுடன் ஆரம்பமாகி,  மாநாட்டு மலர் வெளியீடு,  அறிஞர் பெருமக்களின் சிறப்புரைகளோடும் விளங்கவிருக்கின்றது.
ஆகஸ்ட் மாதம் 30 மற்றும்  31 ஆம் திகதிகள்  முழு நாள் நிகழ்வுகளாக அமையவிருப்பதால், பொது அரங்கம் என்ற பிரிவில் காலை 10.40 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரையான நிகழ்வுகளும், மதியம் 1.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை இளைஞர் அரங்கம், மற்றும் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்து நிகழ்த்தப்பட இருக்கின்ற ஆராய்ச்சி அரங்கங்கள் (ஆராய்ச்சி அரங்கங்கள் பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சம காலத்தில் நிகழ்த்தப்பட இருக்கின்றன).
இந்த நிகழ்வுகளில் தமிழக, இலங்கை மற்றும் மலேசிய மண்ணில் இருந்து வருகை தந்திருக்கும் ஆன்றோர் பெருமக்கள் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து சிறப்பிக்கின்றார்கள்.

ஆக்ஸ்ட் 31 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) மாநாட்டின் நிறைவு விழா நிகழ்வுகள் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 9.30 மணி வரை இடம்பெற இருக்கின்றன.

சைவ நெறி மாநாட்டின் பிந்திய பயிலரங்கங்களில்,செப்டெம்பர் 6 ஆம் திகதி, சனிக்கிழமை, "திருமுறைப் பண்ணிசை பயில்வோம்" என்ற நிகழ்வு தமிழ் தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் ஓதுவார் மூர்த்தி மா.அரிதரன் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்திருக்கும் பேராசிரியர் கலாநிதி நவரட்ணம் ஆகியோராலும் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

செப்டெம்பர் 6 ஆம் திகதி சனிக்கிழமை, "சைவசித்தாந்தம் ஓர் எளிய அறிமுகம்" என்ற நிகழ்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசியார் மா.வேத நாதன் அவர்களால் வழங்கப்பட இருக்கின்றது.

செப்டெம்பர் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, "Saiva Tradition 101" என்ற நிகழ்வு ஆங்கிலத்தில் நிகழ்த்தப்படவுள்ளது. இதனை டாக்டர் எஸ்.பி.சபாரத்தினம், திரு அலன் குரோக்கர், திரு ராஜா விக்னரசா, திரு நந்திவர்மன் மற்றும் திரு ஜி.செல்லப்பா ஆகியோர் நெறிப்படுத்தி வழங்க இருக்கிறார்கள்

செப்டெம்பர் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, "ஈழத்துக் கந்தபுராணக் கலாசாரம் தந்த புராணப் படிப்புக் கலை" என்ற நிகழ்வு தமிழிலே, சைவப்புலவர் செ.நவநீதகுமார், திரு கனகசபாபதி (யாழ்ப்பாணம்), டாக்டர் எஸ்.கணபதிப்பிள்ளை ஆகியோராலும் சிறப்பாகப் பகிரப்படவுள்ளது.

செப்டெம்பர் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, "இனிய வாழ்வுபெற வழிகாட்டும் திருமுறைகள்" என்ற நிகழ்வு தமிழிலே, முனைவர் கோ.ப.நல்லசிவம் (தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்) அவர்களாலும் நெறிப்படுத்தப்பட்டு வழங்கப்பட இருக்கின்றன.


இந்த மாநாடு குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள 
 சைவ நெறி மாநாட்டின் கருத்தரங்கங்கள் மற்றும், பயிலரங்கங்கள் குறித்த முழு விபரங்களும் சிட்னி முருகன் ஆலயத்தின் இணையத்தளத்தில் கிடைக்கின்றன.

இந்த மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்கச் செலுத்த வேண்டிய கட்டண விபரங்கள் குறித்து
 http://www.sydneymurugan.org.au/murugan2/media/com_acymailing/upload/programhighligtsv1_02r4.pdf

மாநாட்டு நிகழ்வுகளின் முழு விபரக் கோவை

http://www.sydneymurugan.org.au/murugan2/index.php/component/acymailing/archive/view/listid-1-mailing-list/mailid-114-saivaneri-maanaadu-2014?Itemid=106

Facebook வாயிலாக

https://www.facebook.com/pages/Sydney-Murugan-Saivaneri-Maanadu/785245398154236


Coordinator: Mr. M. Arjunamani;    0414 537 970   
Secretary: Mr. V. Elalingam 0424698145,
President, Saiva Manram: Mr. S. Thavapalachandran, 0419 432 903

புலம்பெயர் மண்ணிலே நமக்குக் கிட்டிய பெரு வரப்பிரசாதமாக இந்த மாநாட்டு நிகழ்வுகளை நாம் எல்லோரும் வயது வேறுபாடின்றிக் கலந்து சிறப்பிக்க வேண்டும். நிகழ்வுகளின் வழியாக ஆன்றோர் பெருமக்கள் வழங்கும் அறிவார்ந்த கருத்துக்களால் "தெள்ளத் தெளிந்த நிலை" நமக்குக் கிட்ட இந்த நிகழ்வுகள் பெருந்துணை நிற்கும் என்பதில் ஐயமே இல்லை.




Sunday, March 02, 2014

பாலேரி மாணிக்கம் "ஒரு பாதிராக் கொலபாதகத்திண்டே கதா"

"ஜீவிதம் மரணத்தின் முடிவில் தீரும்போள் அது அடுத்த நிமிஷம் தொட்டு கதையாம், கழிந்த காலத்திண்ட மற்றொரு பெயரானு கதா"

பாலேரி மாணிக்கம் படம் வந்து 5 வருஷங்கள் கழிந்து விட்டது. ஒரிஜினல் டிவிடியைக் கூட எப்பவோ வாங்கி வைத்தாலும் ஏனோ இது நாள் வரை நான் பார்க்கவில்லை. இதை மட்டுமல்ல இன்னும் சில படங்களை நான் பார்க்காமல் வைத்திருப்பதற்குக் காரணம், இப்படியான படங்களைப் பார்ப்பதற்கேற்ற மனச்சூழலை என்னுள் ஏற்படுத்த வேண்டும் என்பதே. சும்மா கடமைக்காக இப்படியான படங்களைப் பார்த்துக் கழிக்கக் கூடாது. அந்த வகையில் நேற்றுத்தான் "பாலேரி மாணிக்கம் ஒரு பாதிராக்கொல பாதகத்திண்டே கதா" படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. ஒரு படத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒருவாரம் நீட்டித்துப் பார்க்கும் எனக்கு, படத்தின் எழுத்தோட்டமே அப்படியே நிலைகொள்ள வைத்து விட்டது, முழுமூச்சாய் முடிவுப் புள்ளி வரை இந்தப் படத்தோடு ஒன்றிப்போனேன்.

சில மாதங்களுக்கு முன்னர் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட, சொக்கலிங்கம் என்ற வழக்கறிஞர் எழுதிய "புகழ்பெற்ற வழக்குகள்" என்ற நூலை வாசிக்கும் போது ஒரு புலனாய்வு அதிகாரியாக மனம் கூடு விட்டுக் கூடு பாய்ந்த உணர்வு ஏற்பட்டது அதே உணர்வு தான் இந்தப் படம் தந்த அனுபவமும். படத்தின் ஆரம்ப எழுத்தோட்டத்தில் வரும் பாடலே பாலேரி என்ற ஊரில் உள்ள மாணிக்கம் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண் ஐம்பதுகளின் இறுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதைப் பற்றிப் பாடலோடு சோக ராகம் பாடுகிறது.

ஹரிதாஸ் (மம்முட்டி) என்ற புலனாய்வாளன் தன்னுடைய உதவியாளர் பெண்ணுடன் டெல்லியில் இருந்து ஐம்பது வருடங்கள் கழித்து இந்தக் கொலையின் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்காகப் பாலேரி செல்கிறார். பாலேரி என்ற அந்தக் கிராமத்தின் பழைய சுவடுகள் மறைந்து நாகரிகத்தின் உச்சங்கள் விளைந்திருக்கும் பூமியில் மாணிக்கம் என்ற அந்தப் பெண்ணின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் எல்லோருமே இறந்த சூழலில், வெறும் செவி வழிக்கதைகள் வாயிலாக உண்மையைத் தேடும் சவால் அவனுக்கு. ஒவ்வொரு செவி வழிக்கதையிலும் பொய்யும் உண்மையும் சரி சமமாகக் கலந்திருக்கிறது. அதிலிருந்து ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து ஈற்றில் அவன் முடிவைக் காணும் போது மிகப் பெரிய திருப்பத்திற்குக் கொண்டு போய் நிறுத்தி அவனை வழியனுப்பி வைக்கிறது அந்த பாலேரி கிராமம்.

T. P.ராஜீவன் என்ற எழுத்தாளரின் நாவலை அடியொற்றி மலையாளத்தின் பிரபல இயக்குநர் ரஞ்சித் எடுத்த படம் இது. இயக்குநர் ரஞ்சித் இயக்கிய நந்தனம், Pranchiyettan and The Saint,Indian Rupee போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். இவரின் ஒரு சில பேட்டிகளைப் படித்த போது மலையாள சினிமா உலகத்தை விட்டுக்குடுக்காத அந்த ஓர்மம் எனக்குப் மிகவும் பிடித்திருந்தது. சரக்கு இருப்பவன் தானே கோபப்படுவான்?

மம்முட்டியைப் பொறுத்தவரை அவரின் சினிமா வாழ்வில் மறக்க முடியாத ஒரு படமாக இது இருக்கும். அடக்கமாக வந்து ஒவ்வொரு விஷயத்தையும் நிதானமாகக் கையாளும் அந்தப் புலனாய்வு அதிகாரி, பாலேரிக் கிராமத்தின் பெருந்தனக்காரர் அஹமத் ஹாஜி என்ற மகா கொடூரர் என்ற இன்னொரு மம்முட்டி, இவர்களைக் கடந்து மூன்றாவதாக வரும் இன்னொரு ஆச்சரியம் என்று ஒரே படத்தில் ஒரே நடிகன் பல்வேறு பாத்திரங்களைக் கையாளும் போது ஒவ்வொரு பாத்திரப் படைப்பிலும் எவ்வளவு தூரம் வித்தியாசப்படுத்தி நடிக்க முடியும் என்பதை அழுத்தமாகப் பதிய வைக்கிறார். அதிலும் அந்தப் பணக்காரர் அஹமத் ஹாஜி (மம்முட்டி) துப்பலைக் கூட அலட்சியமாகத் தெறிக்கும் போது நடிப்பின் நுணுக்கம் புரிபடுகின்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக கேரளத்தின் சிறந்த நடிகராக மாநில விருது உட்பட இன்னும் பல விருதுகளைச் சேர்த்தாலும் தேசிய விருது கொடுக்கவில்லையே என்ற இயக்குநர் ரஞ்சித் இன் கோபத்தைப் படம் பார்த்தபின் எம்மிலும் சுமக்க முடிகின்றது.

கம்யூனிஸ சிந்தனைகளோடு ஐம்பதுகளில் வளர்ந்த அந்த இளைஞன் பின்னாளில் மனம் வெறுத்து ஒதுங்கிப் போகும் முதியவராக சீனிவாசன், சித்திக் என்ற குணச்சித்திரம் பாலன் நாயராகவும், கவர்ச்சிக்கு மட்டுமே தீனியாகப் பார்க்கப்படும் ஸ்வேதா மேனன் பயத்தை உள்ளே புதைத்து வைத்துக் கொண்டு நடிக்கும் அந்தக் கிழவியாகவும் என்று ஒவ்வொரு பாத்திரத் தேர்வும் கச்சிதமாக அமைந்திருக்கின்றது.

மலையாள சினிமாவைப் பொறுத்தவரை மர்மக் கதைகளைக் கையாள்வதில் இந்திய சினிமாவிலேயே முதல் இடத்தில் வைக்கப்படவேண்டிய கதை சொல்லிகள். ஐம்பதுகளின் இறுதியிலே நடந்ததாகவும், கேரளத்தின் முதல் கொடூரக் கொலையாகவும் பதிவாகியிருக்கும் இந்த உண்மைச் சம்பவத்தைப் படமாக எடுக்கும் போது அந்தக் கதை மாந்தருக்குள்ளேயே மம்முட்டியை உள்ளே விட்டுக் கதை சொல்ல வைத்த உத்தி அருமையானது.

இசையமைப்பாளர் சரத், பிஜ்பால் ஆகியோர் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல், படத்தின் முகப்புப் பாடல் மட்டும் தான் அதற்குப் பின்னால் வரும் கதையோட்டம் வெறும் மெலிதான பின்னணி இசையோடு நகர்கின்றது.

"எத்தனை வருஷங்கள் ஆனாலும் குற்றம் செய்தவன் தண்டிக்கப்படுவான் இது எப்படி நிகழும் என்று எனக்குத் தெரியாத இயற்கையின் நியதி" என்று ஹரிதாஸ் (மம்முட்டி) என்ற அந்தப் புலனாய்வாளர் சொல்லி முடிக்கிறான் "பலேரி மாணிக்கம் ஒரு பாதிராக்கொல பாதகத்திண்டே கதா"யை.

"ஜீவிதம் மரணத்தின் முடிவில் தீரும்போள் அது அடுத்த நிமிஷம் தொட்டு கதையாம், கழிந்த காலத்திண்ட மற்றொரு பெயரானு கதா" என்று ஹரிதாஸ் சொல்வது போலத்தான் வாழ்வியலும், அது கழிந்த நிமிஷத்தை முற்றுப்புள்ளியாக நிறுத்தும் போது கதையாக முடிக்கின்றது, நாமும் எத்தனை கதைகளைச் சுமந்து கொண்டு போகின்றோம், சில கதைகளின் உண்மைகள் தெரிந்தும் பல கதைகளின் உண்மைகள் தெரியாமலும்.

 

Friday, February 14, 2014

"பாலித்தீவில் இந்தியத் தொன்மங்களைத் தேடி"

இலங்கையிலிருந்து வெளியாகும் "சுடர் ஒளி" பத்திரிகையில் என் முதல் பயணத்தொடராக "பாலித்தீவில் இந்தியத் தொன்மங்களைத் தேடி" வரும் ஞாயிறு பெப்ரவரி 16 ஆம் திகதி முதல் வெளிவருகின்றது. பத்தாண்டுகளுக்கும் மேலான என்னுடைய எழுத்துப் பகிர்வு இன்று தாயகத்தில் இயங்கும் ஒரு பத்திரிகை வழியாக என் பெற்றோரின் கையை எட்டப் போகின்றது என்றால் இதை விட என் எழுத்துக்கு வேறென்ன அங்கீகாரம் வேண்டும்?

அடிக்கடி " நீங்கள் எழுதிறதை எனக்கும் அனுப்பி வையுங்கோ பிரபு" என்று கேட்கும் என் அப்பாவுக்கும் பதில் சொல்ல இந்தப் பயணத்தொடர் உதவப்போகிறது. 

பாலித்தீவில் கண்டதும் கேட்டதுமாக இல்லாமல் வரலாற்றுப் புத்தகங்களின் ஆதாரபூர்வமான தகவல்களோடு பாலித்தீவை எழுத்து வழியாக இரண்டாம் முறையாக உலாத்தப் போகிறேன். இதற்காக நூலகங்களில் இருந்தும், பாலித்தீவு பேசும் வரலாற்று மூலாதாரம் தாங்கிய புத்தகக் கொள்வனவு மூலமும் என் தேடலை ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு அத்தியாயமும் மூன்று மணி நேரத்துக்கும் மேலான உழைப்பைப் பங்கு போடுவதால் நிதானமாக கடந்த ஐந்து வாரங்களாக ஏழு அத்தியாயங்களைச் செதுக்கியிருக்கிறேன். 

நான் பாலித்தீவில் இருக்கும் போதே சுடர் ஒளி பத்திரிகையில் இருந்து நண்பர் வர்மா இந்தத் தொடரை எழுதுமாறு கேட்டுக் கொண்டார். மனம் சோர்ந்து போகும் போதெல்லாம் அவரை நினைத்துக் கொண்டுதான் அடுத்த அத்தியாயத்தைக் கிளப்புவேன். அந்த வகையில் இந்தத் தொடரை ஈழத்து வாசகர் கையில் எடுத்துச் செல்ல வழி வகுத்த வர்மா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

"பாலித்தீவில் இந்தியத் தொன்மங்களைத் தேடி"உங்களுக்கும் எனக்கும் இது நாள் வரை பாலித்தீவில் புதைந்திருக்கும் இந்துப் பண்பாட்டு விழுமியங்களை எழுத்தின் வழியே உலாத்தலாகத் தரிசிக்கப் போகின்றது. 

Saturday, January 18, 2014

North 24 Kaatham (மலையாளம்) - வழித்துணை

இப்பொழுதெல்லாம் மனதுக்கு நிறைவு தரக்கூடிய நல்ல சினிமாவைப் பார்க்க வேண்டும், குறிப்பாக மலையாள சினிமா என்ற எண்ணம் வரும் போதெல்லால் ஃபாகத் ஃபாசில் இன் படங்களைத் தான் முதலில் தேட ஆரம்பிக்கிறேன். படத்துக்குப் படம் இந்த மனிதர் என்னமாய் ஒவ்வொரு படத்தோடும் ஒட்டிக் கொண்டு பயணிக்கிறார் என்பதை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறது North 24 Kaatham

ஓ.சி.டி (Obsessive compulsive personality disorder) என்ற விநோதமான மன உணர்வுக்கு ஆட்பட்டவர் மிகுந்த சுத்தபத்தமாகவும், எச்சரிக்கை உணர்வோடு இருப்பார் என்பதை அனுபவத்தில் கண்ட உண்மை. இதைப்பற்றி என் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த அனுபவம் ஒன்றையும் சமயம் வாய்க்கும் போது சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் ஹரிகிருஷ்ணன் என்ற நாயகன் பாத்திரத்தை ஏற்றிருக்கும் ஃபாகத் ஃபாசிலுக்கும் இதே பாங்கான மனவுணர்வோடு, இயல்பு வாழ்க்கையில் இருந்து தன்னை விலக்கி வாழ நடக்க முற்படுபவர். காலையில் எழுந்து தன் காலைக் கடனைக் கழிப்பதில் இருந்து அலுவலகப் பணி தாண்டிப் பொது இடங்களில் கூடத் தன்னுடைய இந்த விநோதமான சுபாவத்தில் இருந்து சமரசம் செய்து கொள்ளாத தொழில் நுட்பவியலாளன் இந்த ஹரிகிருஷ்ணன். எவரும் தன்னோடு வீண் அரட்டைக் கச்சேரி வைப்பதைத் தவிர்ப்பவர். தன்னைச் சுற்றி மட்டுமல்ல தன்னுடைய தொழிலிலும் இதே ரீதியான பூரணத்துவத்தோடு நடப்பதால் இவரின் சக பணியாளர்கள் வெறுப்போடு இவர் மீது கூறும் புகார்களையெல்லாம் தாண்டி, இவரின் மேலதிகாரிகளின் நேசத்தைப் பெற்றிருப்பவர்.

ஹரிகிருஷ்ணனுக்கு முக்கியமான ஒரு அலுவலகப் பணிக்காகத் திருவனந்தபுரத்துக்கு ரயில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. கூடப்பயணிக்கும் பயணிகோபாலன் (நெடுமுடி வேணு) என்ற முதியவர் தன்னுடைய மனைவி திடீர் நோய் வாய்ப்பட்டிருக்கிறார் என்ற தொலைபேசி அழைப்பால் தன் பயணத்தை இடை நிறுத்தித் கோழிக்கோடுவில் இருக்கும் தன் வீட்டுக்கு ரயில் எடுக்க வேண்டிய அவசரத் தேவை ஏற்படும் வேளையில் அதே ரயிலில் பயணிக்கும் இன்னொரு பயணி நாராயணி (ஸ்வாதி) கோபாலனை அவர் வீட்டில் சேர்ப்பிக்க முடிவெடுக்கிறாள். இந்தச் சிக்கலில் எதிர்பாராத விதமாக அகப்படுகிறார் ஹரிகிருஷ்ணன் (ஃபாகத் பாசில்). கேரளமே முழு நாள் ஹர்த்தாலை அனுஷ்டிக்க, இந்த மூவரும் கோழிக்கோடு எப்படிப் போய்ச் சேர்ந்தார்கள், ஹரிகிருஷ்ணனுக்கு இந்தப் பயணம் எந்த விதமான மன மாற்றத்தைக் கொண்டு வருகின்றது என்ற சாராம்சத்தில் வெகு இயல்பாகப் போரடிக்காமல் நகர்த்திச் செல்கின்றது இந்தப் படம்.

முதற்பந்தியில் சொன்னது போல ஃபாகத் ஃபாசிலுக்கு இது பொற்காலம். கிடைக்கும் படங்களெல்லாம் முத்து முத்தாக இவருக்கு அமைகின்றன. ஒவ்வொரு படத்திலும் எழுத்தோட்டத்துக்குப் பின்னர் ஃபாகத் ஃபாசில் என்ற நடிகனைக் காணமுடியவில்லை. அந்தந்தப் பாத்திரமாகவே மாறிவிடுகின்றார். இந்தப் படத்திலும் அதே அலைவரிசை தான். படத்தின் முதற்காட்சிகளில் ஹரிகிருஷ்ணன் என்ற அந்த விநோத சுபாவம் கொண்ட இளைஞனாகத் தன்னை மாற்றுவது அவ்வளவு சுலபமானதல்ல. அந்தச் சவாலை இவர் எளிதாகக் கடக்கிறார். இதுவரை எந்த ஹீரோயிச நிழலும் இவர் மேல் படாததால் இப்படியான பாத்திரங்களுக்கான திறமையான மூலப்பொருளாக அமைகின்றது இவரின் நடிப்பு.
சுப்ரமணியபுரம் ஸ்வாதிக்கு கேரளம் கொடுத்திருக்கும் இன்னொரு சிறப்பான படம் இது. இந்த நாயகி பாத்திரம் தமிழிலோ தெலுங்கிலோ படைக்கப்பட்டிருந்தால் அரை லூசாகவோ, நாயகனை ஏதாவது பண்ணி வளைக்க முற்படும் காமுகியாகவோ மாற்றிவிடுவார்கள். ஆனால் ஆர்ப்பாட்டமில்லாத அந்த நாராயணியாக ஸ்வாதியின் நடிப்பு வெகு திறம். அதிலும் குறிப்பாக, கோபாலன் மாஸ்டர் வீட்டிலுருந்து விடை பெற்ற பின்னர் ஹரிகிருஷ்ணனும், நாராயணியும் தனியே தத்தமது வீடுகளுக்குப் போகும் பயணத்தில் கிட்டும் உணவு போசனத்தில், நாரயணி ஹரிகிருஷ்ணனோடு பேச்சுக் கொடுக்கும் போது வழக்கம் போல அவன் சிடுசிடுப்பதும், பின்னர் அவனின் விநோத சுபாவத்தை விஷமத்தனமாக எள்ளல் செய்து அவனைச் சிரிக்க வைக்கும் கட்டத்தில் ஆகா அந்தக் "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்".

நெடுமுடி வேணு பற்றி என்ன சொல்ல, சினிமாவில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தவர்கள் படிப்படியாகக் குணச்சித்திர பாத்திரமேற்று நடிக்க முனையும் போது அதிலும் வித்தியாசத்தைக் காண்பித்து நிலைத்திருப்போரும் உண்டு. நெடுமுடி வேணு அந்த ரகம். வயதான அந்தக் குண்டுக் கிழவராக இந்த இரண்டு இளசுகளும் இழுத்துப் போகும் வழியெங்கணும் தானும் தம் கட்டிப் பயணிப்பதாகட்டும், தன் ஊரை அண்மித்ததும் ஒவ்வொரு இடமாகக் காண்பித்துப் பெருமை பேசுவதாகட்டும், இவரின் வீட்டில் நடந்த துன்பியல் நிகழ்வை அறியாது தன் வீட்டை நோக்கி நடை போடும் போது எதிர்ப்படும் மனிதர்களைக் கண்டு குசலம் விசாரிப்பதாகட்டும், வீடு வந்தததும் அந்த அதிர்ச்சியை நிதானமாகத் தாங்கிக் கொண்டு தன் மனைவி கொண்ட கொள்கைக்கு இணங்க இறுதி மரியாதை செய்வதாகட்டும் எல்லாமே இவரின் தேவையை இந்தப் படத்தில் உணர்த்தி நிற்கின்றன.

பிரேம்ஜி அமரனும் நடித்திருக்கிறார், ஒரு சின்ன வேடத்தில் ஆனால் என் பார்வையில் இவருக்குக் கிடைத்த உருப்படியான அலட்டல் இல்லாத வேடம் இது, "எவ்வளவோ பண்ணிட்டோம்" என்ற வழக்கமான பஞ்ச் ஐ இந்தப் படத்தில் சொல்லும் போது கூட. தலைவாசல் விஜய் மலையாளக் கரையோரம் கரை ஒதுங்கிவிட்டார். கீதாவும் உண்டு.

படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் இருந்தும் சமீபகாலமாக மலையாள தேசத்தை ஆக்கிரமித்திருக்கும் மேற்கத்தேய வாத்திய மோகத்தால் இசைக்கருவிகளை உருட்டி விளையாடுகின்றார்கள். கிடைத்த வாய்ப்பில் நல்ல மெலடிப் பாடல்களைச் சேர்த்திருந்தால் இன்னும் நிறைவாக இருந்திருக்கும்.

கோழிக்கோடு நோக்கிய இந்த மூவரின் பயணத்தில் ரயில், பஸ், ஜீப், ஆம்புலன்ஸ், மோட்டார் சைக்கிள், மீன் படகு எல்லாத்திலும் ஏறி, கேரளத்தின் திக்குத் தெரியாத திசைகளிலும் பயணிக்கும் கதைக்கு ஒளிப்பதிவு பலம் சேர்க்கின்றது. கதை, இயக்கத்தைக் கவனித்த இயக்குனர் அனில் ராதா கிருஷ்ண மேனனுக்குத் தான் மேற் சொன்ன அத்தனை பலத்திலும் பாதி போய்ச் சேரவேண்டும். அவ்வளவு நேர்த்தியாக நெறியாண்டிருக்கிறார்.

பயணம் என்பது எத்தனையோ புது மனிதர்களையும், இடங்களையும் சந்திப்பதன்று, பயணியை புத்துருவாக்க அது உறுதுணையாகின்றது மனிதர்களையும் அவர் தம் வாழ்வியலையும் படிக்க முடிகின்றது, நாயகன் ஹரிகிருஷ்ணனுக்கு மட்டுமல்ல, இம்மாதிரி அரிய படைப்பைப் பார்க்கும் ரசிகனுக்கும் கூட.