Social Icons

Pages

Sunday, February 24, 2008

Dr K.J.ஜேசுதாஸின் சாஸ்திரிய இசையருவியில் கலந்தேன்..!

என்னுடைய இத்தனையாண்டு வாழ்வில் சாஸ்திரிய சங்கீதக் கச்சேரிகளுக்கு இதுவரை மினக்கெட்டுப் போன அனுபவமே கிடையாது. வானொலியில் நிகழ்ச்சி செய்யும் போது சில தகவல் துணுக்குகளின் உதவியோடு ஒரே ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப்பாடல்களையும் திரையிசையில் வந்த பாடல்களையும் இணைத்து நிகழ்ச்சி படைத்த அனுபவம் மட்டுமே உண்டு. டாக்டர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் சிட்னிக்கு வருகின்றார் என்ற விளம்பரங்கள் வந்ததும் இம்முறையாவது ஒரு நேரடி நிகழ்ச்சியைக் காண வேண்டும் என்ற ஆவலில் நேற்று சிட்னி Hills Centre, Castle Hill இல் நடந்த சாஸ்திரிய இசை நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.

வழமையாக இப்படியான இசை நிகழ்ச்சிகளைத் திறம்பட ஒருங்கிணைத்துத் தரும் Sydney Symphony entertainers மற்றும் Pyramid Spice centre ஸ்தாபனத்தாரோடு இணைந்து கொடுத்திருந்தார்கள். மாலை ஆறு மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சியின் ஆரம்பப் பகுதியில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த கலைஞர்கள் குறித்த அறிமுகமும் இடம்பெற்றது. கடம் -ராதா கிருஷ்ணன், வயலின் - மகாதேவ சர்மா, மிருதங்கம் - திருவாரூர் பக்தவத்சலம், தம்புரா - பாபு அனில் குமார் என்று அவர்களின் இசைப்பின்னணி குறித்த தகவல்கள் அப்போது தரப்பட்டது. இந்த அறிமுகப் பகுதியில் பக்கவாத்தியக் கலைஞர்கள் மேடைக்கு வராமல் இடம்பெற்றதை தவிர்த்து, ஒவ்வொருவர் மேடையில் அமரும் போது கொடுத்திருக்கலாம்.

தொடர்ந்து கலைஞர்கள் சகிதம் ஜேசுதாஸ் அவர்கள் வந்து அமர்ந்து கொண்டார். முதல் வரிசையில் இருந்த எனக்கு நேர்முன்னே ஜேசுதாஸ் அவர்களைக் கண்டதும் மெய்சிலிர்த்தது. 68 வயது நிரம்பிய சங்கீதப் பாரம்பரியம் ஒன்று கண்முன்னே சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்தது.

இப்படியான நிகழ்ச்சிகளை வெளிநாடுகளில் வைப்பதில் உள்ள சவால் என்னவென்றால் பல்வேறு மொழிபேசும் இந்தியர்கள் வந்து கலந்திருப்பார்கள். அவர்கள் எல்லோரையுமே திருப்திப்படுத்தக் கூடியவாறு அந்தந்த மொழியின் பாரம்பரியமான பாடல்களைக் கொடுக்க வேண்டும். இதையே தன்னுடைய அறிமுக உரையில் ஜேசுதாஸ் குறிப்பிட்டு என்னால் முடிந்த அளவிற்கு நான் என் பங்கைச் செய்கின்றேன் என்றார். கூடவே மொழிவாரியான பகுப்பை இந்த இசையில் புகுத்தாமல், ஒருவர் ஹிந்துஸ்தானி படித்தாலோ அல்லது கர்னாடக இசை படித்தாலோ அந்தத் துறையில் தம் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுத் தனது சாஸ்திரிய சங்கீத மடையைத் திறந்தார். கர்னாடக இசையினைத் தெளிவுறக் கற்றதால் தான் எனக்கு ஹிந்திப்பாடல்களை அந்த மொழி ரசிகர்களைக் கவரும் விதத்தில் பாட முடிந்தது. காரணம் கர்னாடக சங்கீதம் என்றாலும் சரி, ஹிந்துஸ்தானி என்றாலும் சரி அடிப்படையில் இருக்கும் இசை இலக்கணம் பொருந்தி வரக்கூடியது என்றும் கூறினார்.

எனக்கு சாஸ்திரிய சங்கீதம் குறித்த பரிச்சயம் இல்லையென்றாலும், ஜேசுதாஸின் கணீரென்ற குரலைக் கண்மூடிக் கேட்பதே சுகமாகப் பட்டது."வாதாபி கணபதிம்" கீர்த்தனையை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டு, "அழுதோம் அணைக்கும் அன்னை" என்ற பாடலையும், "என்ன புண்ணியம் செய்தனை சற்குரு நாதா" பாடலைக் குருவுக்கும் அர்ப்பணித்தார்.

எமது இசைவளர்த்த முன்னோர்கள் ராகம், தானம், பல்லவி இவற்றுக்கெல்லாம் தனித்தனி நாள் கொடுத்து, ராகத்துக்கு ஒரு நாள், தாளத்துக்கு இன்னொரு நாள் என்று இடைவிடாது தொடர்ந்து தமது சங்கீதத்தை, தம்மை மறந்து இசைத்த காலம் எல்லாம் வரலாற்றில் இருந்தது என்றார். தொடர்ந்து ஹிந்துஸ்தானியில் அமைந்த "நிர்தோனம்" என்ற பாடலை கர்நாடகப் பாணியில் பாடுகின்றேன் என்ற அறிமுகக் குறிப்புடன் தொடர்ந்தார். "மா பவானி துர்கா" பாடலும் பரவசப்படுத்தியது. ஓவ்வொரு பாடலைப் பாடும் போதும் ஒரு பக்கம் அமர்ந்த வயலின் வித்துவானையும், மறுப்பக்கம் அமர்ந்திருந்த மிருதங்க வித்துவானையும் பார்த்து ஜேசுதாஸின் கண்கள் அடிக்கடி முறுவலித்துக் கொண்டிருந்தன. நாங்களும் கூடவே வருகின்றோம் என்று அவர்களும் தம் வாத்திய வல்லமையால் நிரூபித்துக் கொண்டிருந்தார்கள்.

பாடல்களுக்கு இடையில் ஒரு முறை ஏதோ காரணமாக எழுந்த தம்புரா வாசித்த இளைஞர் வேட்டி தடக்கி விழுந்து விட்டார். கொஞ்சம் பதறி விட்டு " நாமளும் சின்ன வயசில் நிறைய சந்தர்ப்பங்களில் இடங்களில் தடக்கி விழுந்து எழுந்தவங்க தான், இப்படி தடக்கி விழுந்து தான் ஒரு உயந்த நிலையை அடைய முடியும் " என்று சடுதியாகச் சொல்லி அரங்கத்தைக் கொல்லிட வைத்தார் ஜேசுதாஸ்.

வயலின்காரரைப் பார்த்து உங்களுக்குப் பிடிச்ச ராகம் எது என்று ஜேசுதாஸ் கேட்க அவரும் "சங்கராபரணம்" என்று சொல்லி வைக்க, தொடர்ந்தது சங்கராபரணம் குறித்த ஜேசுதாசின் சிலாகிப்பு தகுந்த விளக்கங்களோடு தாவியது. இப்படிப் பல இடங்களில் வெறுமனே இசை நிகழ்ச்சியாக இல்லாது கொண்டு போனது புதிதாக இசை கற்பவர்களுக்கும், வெறும் கேள்வி ஞானம் இருப்பவர்களுக்கும் நிச்சயம் உபயோகமாக இருந்திருக்கும்.

"எந்தரோ மஹானு பாவலு" என்று திடுதிப்பென்று எந்த அறிமுகமும் கொடுக்காது இவர் தாவியபோது அரங்கம் கரகோசத்தால் நிறைத்தது. அந்த இடத்திலேயே சற்றே நிறுத்தி விட்டு மிருதங்கக்காரரைப் பார்த்து "பார்த்தீங்களா! எந்தரோ மஹானு பாட்டுக்கு சிட்னியில் கூட மகத்துவம் கிடைக்குது இல்லையா" என்று ஜேசுதாஸ் கேட்கவும், அவரும் கண்கள் குவியச் சிரித்தவாறே ஆமோதித்துத் தலையாட்டினார்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பே ஜேசுதாஸ் அவர்கள் முழுமையான சுதந்திரத்துடன், பாடியும் பேசியும் கொடுக்க முடிந்தது முதற்காரணமாக அமைந்தது. ஆரம்பத்தில் மொழி தெரியாத பாடல்களுக்கெல்லாம் இரண்டு வரி பாடி பின் தமிழிலோ ஆங்கிலத்திலோ அவற்றுக்கு அர்த்தம் கொடுத்து மீளவும் விட்ட இடத்தில் பாடியது வெகு சிறப்பு.

"முன்பெல்லாம் ஒவ்வொரு ஸ்வரங்களின் ஒலிக்குறிப்புக்கள் கொடுத்து எப்படியெல்லாம் இந்த கர்னாடக இசையை பின்னாளில் வரும் தலைமுறைக்கெல்லாம் இலகுவாகப் புரியும் படி கொடுக்கவேண்டும் என்பதில் எவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றார்கள் நம்முன்னோர்கள்" என்று விட்டு உதாரணங்களோடு ஒரு குறும் சங்கீத விரிவுரையைக் கொடுத்து "இப்பல்லாம் பாஸ்ட் பூட் கேட்டு வர்ரவங்க தான் ஜாஸ்தி, வேகவேகமா சங்கீதத்தைக் கத்துக்கணும், வேக வேகமா பணம், புகழ் சம்பாதிச்சு செட்டிலாகணும்கிறது தான் இப்ப இருக்கும் யங்கர் ஜெனரேஷனின் மனோபாவம்" என்று தன் ஆதங்கத்தைக் கொடுத்தார்.

"கெளசல்ய குமாரனை தினமும் துதிப்பாய் மனமே" பல்லவியை எடுத்துக் கொண்டு, ஒரு பூ மெட்டை எடுத்து மெது மெதுவாக அதன் இதழ்களைப் பிரித்து விரித்து வைப்பதுபோல நிறையச் சங்கதி கொடுத்து நீண்டதொரு பாயாசப் பந்தியைக் கொடுத்தார். தொடர்ந்து பக்க வாத்தியமாக இருந்த வயலின், மிருதங்கம், கடத்தின் அமர்க்களமான ஆலாபனை களைகட்டி இடைவேளைக்குக் கொண்டு போய் நிறுத்தியது.

இடைவேளையில் எதிர்பாராத அனுபவமாக கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கின்றது. அவரைக் கண்டதும் பேச வாயில் இருந்த வார்த்தைகள் அழிந்து விட்டன. கிடைத்த இருபது நிமிட இடைவேளையில் தன்னை ஆசுவாசப்படுத்த இருந்தவர் சிரித்த முகத்துடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கவும் வருகின்றார். புகைப்படம் எடுத்து விட்டு அவரின் கையை இறுகப் பற்றி விட்டுப் பிரிகின்றேன்.

இந்தக் கச்சேரி இடைவிடாது தொடர்ந்து நிறைவெய்தும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் தொடர்ந்த இடைவேளைக்குப் பின் தனிப்பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைந்த நிகழ்வாக "திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே" யோடு தொடங்கியது. "ஜெப தீப் ஜலே" ஹிந்துஸ்தானிப் பாடலைத் தொடர்ந்து வந்தது "சந்தனம் ஜவ்வாதும் சேர்ந்து மணங்கமிழ".

"சந்தனமும் ஜவ்வாதும்" பாடலுக்கு இசையமைத்தவர் ஜெய விஜயா என்ற இந்து, இந்தப் பாடலை பக்தி மணம் கமிழ எழுதியவர் சிங்கப்பூர் வாழ் ஒரு முஸ்லீம் நண்பர், நான் பிறப்பில் எந்த மதம் என்று உங்களுக்கே தெரியும். ஆனால் மதங்களைக் கடந்து என்னைப் போல எத்தனையோ பில்லியன் மானுடர்கள் வந்து போனாலும் நிலைத்திருக்கும் இறைவன் ஒருவனே, என்னுடைய குரு தட்சணாமூர்த்தி ஸ்வாமிகளை நான் இறைவனாகவே போற்றி வணக்குகின்றேன்" என்று இந்தப் பாடலைத் தொடர்ந்து தகவலோடு கூடிய நல்ல கருத்தை விதைத்துச் சென்றார் ஜேசுதாஸ்.

"என்னைத் தன் வீட்டிலேயே தங்க இடம் கொடுத்து ஆளாக்கி விட்டவர் குருநாதர் செம்பை வைத்யநாத பாகவதர். அவர் இறந்த பின் என்னுடைய கச்சேரிகளுக்கெல்லாம் வரும் போது முன் வரிசையில் இருந்து அந்தம்மா (செம்பை வைத்யநாதர் புத்திரி) தவறாமல் கேட்கும் பாட்டு இது" என்று "தேனினினுமையிலும் ஏசுவின் நாமம் திவ்யமதுரமே" என்ற சுத்தபத்தமான தமிழ்ப்பாட்டைப் பாடிக்கொண்டிருக்கும் போது நாம் எங்கோ அகண்ட வெளிப்பரப்பில் மாசுபடாத சூழ்நிலையில் சுதந்திரப்பறவையாய் பறப்பது போல மனம் இலேசாகியது. "எந்தே கண்ணனு கறுப்பு நிறம்" என்ற மலையாளப்பாடலைப் பாட ஆரம்பித்த போது மூலைகளில் இருந்து எழும்பிய கரவொலிகளைக் கேட்டு ஜேசுதாஸ் முறுவலித்துக் கொண்டு மிருதங்கக்காரரையும், வயலின் காரரையும் கண்களால் வெட்டி விட்டுத் தொடர்ந்தார். இந்தப் பாடல் "போட்டோகிராபர்" என்ற மலையாளப் படத்திலும் வந்திருக்கின்றது. அதைக் காண:


"அன்னபூர்ணி விசாலாட்சி" பாடலைப் பாடும் முன் இந்தப் பாடலை நிறையப்பேர் பாடும் போது "வீசாலாட்சி" என்று நீட்டி முழக்கி அதன் அர்த்தத்தைச் சிதைப்பதாகக் குற்றம் சாட்டி விட்டுப் பாடினார்.

"பம்பை மன்னவன் துணையோடு
செம்பை நாதனின் நினைவோடு
பந்த பாசம் இணையோடு
உலகம் எனக்கொரு தாய் வீடு"

என்ற தமிழிசைப்பாடலும் அர்த்தம் புரியவைக்கும் வரிகளோடு கலந்து சிறப்பித்தது.
"கிருஷ்ணா நீ பேகனே" பாடலை ஓவ்வொரு வித்வான்களும் தமக்கேயுரிய பாணியில் கொடுப்பார்கள். அதையே ஜேசுதாஸும் செய்தார். ஐயப்பனுக்கான ஒரு தோத்திரத்தை எந்த விதமான ஆலாபனையும் இல்லாமல் கொடுத்து விட்டு திடுதிப்பென்று "ஹரிவராசனம் விஸ்வ மோகனம்" என்ற நதியில் கலந்த போது ஏற்கனவே அறிந்த அந்தப் பாட்டு இன்னும் உச்சபட்ச ரசிப்பையும், இறையுணர்வையும் கொடுத்தது.

நிகழ்ச்சி முடியப் போகின்றது என்பதைப் பக்கவாத்தியக் கலைஞர்களுக்கு ஜாடையில் சொல்லிவிட்டு அதே ஜாடையை சபைக்கும் காட்டிவிட்டு முறுவலிக்கின்றார் ஜேசுதாஸ். தொடர்ந்து மங்களமும் பாடியாயிற்று. அரங்கம் அசைவற்று இன்னும் யாசிக்கின்றது அவரிடம். ஆனால் மிகுந்த தன்னடக்கத்தோடு "என்னால் முடிஞ்ச அளவுக்கு உங்களைத் திருப்திப் படுத்தியிருக்கேன்" என்று ஜேசுதாஸ் சொன்னதும், அரங்கத்தை நிறைக்கும் கரகோஷமே அவருக்குக் காற்று வழி கைகுலுக்குகின்றது. இது தான் அந்தக் கலைஞனுக்குத் தொடர்ந்தும் கிடைக்கும் உயரிய விருதும் வெற்றியும்.


விழாப்படங்கள் அனைத்தும் என் ஒளிப்படக்கருவியால் சுட்டவை.