

விடிகாலை வந்ததை உணர்த்துமாற் போலப் படகுவீட்டின் படுக்கையில் கண்ணயர்ந்த என்னை அந்த இருப்பின் சன்னல் சீலையை ஊடறுத்து வந்த சூரியவெளிச்சம் சுள்ளென்று சுட்டு எழுப்பியது. எழுந்து என்னைத் தயார்படுத்தி வெளியே வந்து பார்க்கின்றேன். சிஜீயும் நண்பர்களும் முன்னதாகவே எழும்பி ஆளுக்கொருவராகத் தம் கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பெண்கள் தாமாகவே துடுப்பெடுத்து வலித்துப் போகின்றார்கள். இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பெரும்பாலும் தமக்கெனத் தனியான ஓடம் வைத்துத் தம் அலுவல்களைக் கவனிக்கின்றார்களாம்.


இந்தப் கடற்கழிப் பயணம் போகத் தீர்மானிப்பவர்களுக்கு ஒரு உப குறிப்பு.
பயணம் போகும் போது மறக்காது ஒரு கொழுவர்த்திச் சுருள், தீப்பெட்டி, போதுமான தண்ணீர்ப்போத்தல்கள், போன்றவற்றையும் மறக்காது எடுத்துச் செல்லுங்கள். மதுபானப் பிரியர்கள் என்றார் பியர் சப்ளை உண்டு, தனியாகக் கட்டணம் கொடுக்கவேண்டுமாம்.(இதைப் பற்றி அனுபவ பூர்வமாக ஒன்றும் என்னால் சொல்லமுடியாது.)


தூரத்தில் ஒற்றைப்படகில் வந்த இருவரில் ஒருவர் தன் கையில் இருந்த வலையொன்றைத் துளாவி வீசினார். பின்னர் படகை அப்படியே விட்டுவிட்டு இருவரும் ஏரிக்குள் பொத்தென்று குதித்தார்கள். அவர்களின் கழுத்தைத் தொட்டது அந்த நீர்மட்டம். நீரில் முக்கி எழுந்த அவர்களின் கைகளில் வலையோடு தென்பட்டன துடித்துக்கொண்டிருக்கும் பெரிய மீன்கள். வலையைப் படகில் வீசி அடித்துவிட்டு காக்காய்க் குளியலோடு மீண்டும் வந்தவழியே பயணப்பட்டார்கள் அவர்கள்.
சிஜியின் நளபாகத்தில் முட்டைப்பொரியல் அணிவகுக்க பாண், ஜாம், அன்னாசி நறுக்கல்களோடு கிடைத்தது. உடன் வழக்கம் போல் மசாலா ரீ ஒன்று.
மலையாள இளம் நடிகர் குஞ்சக்கோபோபன் ( காதலுக்கு மரியாதை மலையாளப்பதிப்பில் நடித்தவர்) ஆலப்புழாவில் சொந்தமாக உதயம் ஸ்ரூடியோ வைத்திருக்கிறாராம், தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களின் படப்பிடிப்பு எப்போதும் நடக்குமாம்.
ஒருவர் காலை இறக்கிய தென்னங் கள் முட்டியுடன் படகில் பயணப்படுகின்றார்.
ஊதுபத்தி கொழுத்திப் பக்திபூர்வமாக மீண்டும் படகுச்சேவை ஆரம்பமாகத் தொடங்கியபோது, வானம் சடுதியாகக் தன் மழைக்கர்ப்பத்தைப் பிரசவித்தது.
கரையோர வீடுகளின் முற்றத்தில் நின்ற ஆண்களும் பெண்களும் விறு விறுவென்று தம் வீடுகளுக்குள் ஓடி ஒளிந்துகொண்டார்கள். தொடர்ந்த அடைமழையால் காலை 8.30 இற்குப் பயணப்படவேண்டிய படகு தாமதித்து 10 மணியளவில் தான் தூறல் மழையோடு தன் பயணத்தை ஆரம்பித்தது.
முந்தய தினம் எங்களோடு பயணப்பட்ட மற்றும் சில படகு வீடுகள் இரவுப் பொழுதில் வேறு இடத்தில் தரித்திருந்தாலும் காலைப் பயணத்தில் ஒன்றாகக் கூடவே சங்கமித்தன.
கரையோரமாய் சருவச்சட்டியால் தலையை மறைத்த பெண்ணும், குடைக்குள் இருவராக நடைபோடும் ஆண்களும் தென்படுகின்றார்கள். வாழைத்தோப்பையும், இலக்கம் பொறிக்கப்பட்ட கமுகு மரங்களையும் கடந்து படகு பயணப்படுகின்றது.


யூன் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை இருக்கும் மொன்சூன் பருவகாலத்தில் வரக்கூடிய அதீத மழையால் சிலவேளை படகுப்பயணங்களும் ரத்துச் செய்யப்பட்டுவிடுமாம்.
துவாயால் தன்னை மறைத்த குழந்தையொன்று நடுமுற்றத்தில் நின்று கடலைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கின்றது. சிறு பையன் ஒருவன் மூதாட்டி ஒருவர் படகில் இருக்க துடுப்பு வலித்துக்கொண்டு போகின்றான்.படகு வீட்டிலிருந்து எட்டிப் பார்த்த என்னைக் கண்டதும் கொஞ்சம் வெட்கத்தோடு தலைசாய்த்துத் தன் பணியை அவன் தொடர்ந்தான்.


காலை 10.20 இற்கு கரையைத் தொடுகின்றது நம் படகுவீடு. ஈரமான படகின் மரப்படிகளில் கவனமாகத் தாவி வெளியே வந்து, பழையபடி சந்துக்குள்ளால் நடைபோட்டுப் பிரதான வீதியை வந்தடைந்து பின் வாடகைக்கார் மூலம் கெளரி ரெசிடென்ஸ் வந்தடைகின்றேன்.
பயணம் எப்படியிருந்து என்று அன்பாக விசாரிக்கின்றார் கெளரி ரெசிடென்ஸ் முகாமையாளரான அந்த இளைஞன். பெரும் திருப்தியைத் தந்த அந்தப் பயணம் பற்றி வாயாரப் புகழ்ந்து ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.ஆலப்புழாப் படகுப் பயணத்துக்காக அன்றைய காலையில் கூடி நிற்கின்றார்கள் புதிய யாத்ரீகர்கள்.
கெளரி ரெசிடென்ஸ் இலிருந்து அவர்கள் ஒழுங்கு செய்த வாடகைக் கார் மூலம் கொச்சின் நோக்கிப் பயணப்பட ஏற்கனவே தீர்மானித்திருந்தேன். ஆலப்புழாவிலிருந்து கொச்சினுக்கு வாடகைக்கார் ரூ 900 வரை முடிகிறது, ஏனெனில் திரும்பிவரும்போது வண்டி வெறுமையாக வரவேண்டியதால் தான் இந்த இரட்டைக்கட்டணம். நான் மேலதிகமாக 5 மணி நேரம் கொச்சினைச் சுற்றிப்பார்க்கவும் இதே காரைப் பாவிக்கலாமேயென்று மொத்தமாக 1500 ரூபா செலவில் கார் ஒழுங்கு செய்யப்பட்டது.
காரில் அமர்கின்றேன். கொச்சின் ஹனீபாவைத்தவிர (பாசப்பறவைகள் இயக்குனர், நடிகர்) வேறொன்றுமே கொச்சின் பற்றி அறியாத எனக்கு, அந்தப் புது உலகம் தேடி என் மனம் ஆலாய்ப் பறக்கப் பயணப்படுகிறது கார் கொச்சின் நோக்கி.
வீண்டும் காணாம்.....