Social Icons

Pages

Friday, August 12, 2016

ஜேக்கப்பின்ட ஸ்வர்க்க ராஜ்ஜியம் - மகன் தந்தைகாற்றும் உதவி

இந்த வார இறுதியில் நான் இரண்டு படங்களைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. இது வழமைக்கு மாறான செயல். ஒரு படத்தையே பொறுதியாகக் பார்க்கும் வல்லமை வீட்டில் இருக்கும் போது வாய்க்காது எனக்கு. 


இரண்டு படமுமே திருக்குறளை முன்னுதாரணமாகக் காட்டக்கூடியவை. "தந்தை மகற்காற்றும் உதவி" என்ற திருக்குறளை முதலில் பார்த்த "அப்பா" படத்துக்கும், "மகன் தந்தைக்காற்றும் உதவி" என்ற குறளை "ஜோசபின்ட ஸ்வர்க்க ராஜ்ஜியம்" (மலையாளம்) பொருத்தக்கூடியது.

 "அப்பா" சமுத்திரக்கனி இயக்கி நடித்த படம். ஆம்பள ஜோதிகா (அல்லது இரண்டு ஜோதிகா நடிப்பு) என்று சொல்லக்கூடிய நடிகர் தம்பி ராமைய்யா, கையாலாகாத் தனத்தோடு தொலைக்காட்சியைப் பார்த்துக் கெஞ்சிக் கேட்குமளவுக்கு லோடு லோடாக இறைப்பவர் என்று பார்த்தால் இந்தப் படத்தில் அவரின் தொற்று சமுத்திரக்கனி முதற்கொண்டு காய்ச்சி எடுத்து விட்டது.
உயரப் பறக்க நினைக்கும் நம்மவர் தம் பிள்ளைகளைப் பகடைக்காயாக்கிக் காய்ச்சும் அருமையான கதைக் கருவை வைத்துக் கொண்டு அடித்து ஆடவேண்டாமா? ஆங்காங்கே முத்திரை பதிக்கும் சின்னச் சின்ன யதார்த்தபூர்வமான காட்சிகளில் மட்டுமே உழைப்புத் தெரிகிறது. இந்தப் படக் கதைக்கரு புலம்பெயர் சூழலில் இருக்கும் நம்மவருக்கும் ஏகமாகப் பொருந்தக் கூடியது என்ற திருப்தி மட்டுமே மிஞ்சியது. முக்கால்வாசிப் படத்தோடு நிறுத்திக் கொண்டேன். ஆனால் இலக்கியா அம்மா அதிசயத்திலும் அதிசயமாக இரண்டாவது தடவை போட்டுப் பார்த்தார்.

"ஜோசப்பின்ட ஸ்வர்க்க ராஜ்ஜியம்" இயக்குநர் வினீத்  ஶ்ரீனிவாசன் இன்னொரு வெற்றிக் கோப்பையைக் கொடுத்த படம். தன்னுடைய ஆஸ்தான நாயகன் நிவின் பாலியை வைத்துக் கொண்டு இன்னொரு காதல் ரசம், கூழ் காய்ச்சாமல் புதியதொரு கதைக்களத்தில் எடுத்திருக்கிறார்.
துபாயில் பெரும் வணிகராக இருக்கும் ஜேக்கப் ஒரு கட்டத்தில் தன் வியாபாரப் பங்காளியால் ஏமாற்றப்பட்டுப் பாரிய கடனைச் சந்திக்க, தந்தை ஜேக்கப் இல்லாத சூழலில் இவரின் மூத்த மகன் ஜெர்ரி எவ்வாறு இந்தப் பாரிய நெருக்கடிகளைக் கடந்து தன் தந்தையின் ராஜ்ஜியத்தை மீளக் கட்டியெழுப்பினான் என்பதே கதைக்கரு.

மலையாள சினிமாவின் குணச்சித்திர ஆளுமை ரெஞ்சி பணிக்கர் தான் ஜேக்கப் என்ற மிடுக்கான பெரும் வர்த்தகப் புள்ளி. ஜேக்கப்பிற்கு அவரின் மனைவி மற்றும் மூன்று மகன்களும் ஒரே மகளுமாக அமைந்த குடும்பம், அது வேறு உலகம் அங்கே அவர் விரும்புவது நெறிமுறையான வாழ்வோடமைந்த கொண்டாட்டம் மட்டுமே கொள்கை. ஜேக்கப்பின் மனைவியாக லஷ்மி ராமகிருஷ்ணனுக்கும் வாழ்நாளில் சொல்லக் கூடிய பாத்திரமாக இப்படம் கிட்டியிருக்கிறது.
நிவின் பாலி இன்றைக்கு மலையாள சினிமாவின் பெறுமதி மிக்க நடிகர். ஆனால் தன் வணிக வெற்றிப் படங்களின் சூக்குமங்களைச் சாராது இந்த மாதிரி ஒரு கதைப் படத்தில் நடித்ததே அவர் மீதான மதிப்பை அதிகரிக்கிறது.

ரஞ்சி பணிக்கரின் அந்தப் பணக்கார மிடுக்குத் தனமும், சம அளவில் தன் குடும்பத்தினரோடு காட்டும் கனிவுமாக முதல் பாதியை ஆக்கிரமிக்கும் எடுத்துக்காட்டான அப்பா அவர். இதில் போலி முகத்தையோ, நாடகத் தோற்றப்பாட்டையோ காணமுடியவில்லை. அதுவும் கடைசிக் காட்சியில் எல்லாப் பொலிவும் இழந்த அந்த முகத்தில் தான் எத்தனை நுணுக்கமான உணர்வின் தேக்கம்.
இடைவேளை வரைக்கும் தந்தைக்கு அடங்கிய மகனாக விளங்கும் நிவின் பாலி இடைவேளைக்குப் பின் தன் தாயுடன் சேர்ந்து எதிர்ப்படும் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வேடம். ஆனால் நிவின் பாலி எடுக்கும் சில முயற்சிகள் சினிமாத்தனமாக இருந்தாலும் "திடீர்ப் பணக்காரனா வர அண்ணாமலை" படமா என்று ஒரு கட்டத்தில் கிண்டலடித்தும் கொள்கிறார்.

சினிமாவுக்குண்டான காதல் காட்சி, ஆட்டமொன்றும் இல்லாது முக்கிய கதையின் பாதையில் பயணப்படுகிறது படம்.

ஶ்ரீனிவாசன் என்ற அற்புதமான கதை சொல்லி சக குணசித்திர நடிகர் மகன் வினீத் ஶ்ரீனிவாசன் மேல் எனக்கு எப்போதும் ஒரு தனி மதிப்பு உண்டு. பாடகராக, நடிகராக இயங்கிப் பின்னர் மலையாள சினிமாவின் கவனிக்கத்தகு இயக்குநராக மாறிய பின்னரும் மிகவும் பொறுப்பாக இயங்குபவர். படத்துக்குப் படம் வித்தியாசமான கதைச் சூழலில் நவீனத்துவம் பொருந்திய தன் படைப்பைப் பார்வையாளனுக்கு உறுத்தாமலும் கொடுப்பதில் சமர்த்தர் இவர்.
கிரகரி ஜேக்கப் என்ற துபாய் வாழ் கேரள இந்தியரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தான் இந்தப் படம் பேசுகிறது.
கிரகரி ஜேக்கப்  வாழ்வில் நிகழ்ந்த துரோகத்தனத்தை, அவர் குடும்பம் மீண்டு வந்த கதையைக் கேட்டாலே சாதாரணமாகக் கடந்து விடக் கூடிய அபாயமுண்டு. இங்கே தான் வினீத் இன் திறமையான திரைக்கதை, இயக்கம் வெகு சிறப்பாக அதைத் தூக்கி நிறுத்துகிறது.
ஒரு குடும்பத் தலைவன், மனைவி, ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளை என்று ஒவ்வொருவரின் குணாதிசியங்களையும் வெகு இயல்பாகக் காட்டியிருக்கிறார். உதாரணத்துக்குத் தங்கள் குடும்பச் சண்டை கடைசிப் பையன் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்று அந்தத் தாய் பதறும் காட்சியின் நுணுக்கமே போதும். 
ஜேக்கப் துபாய் வந்த போது வாங்கியதாகச் சொல்லப்படும் புகைப்படக் கருவியை வைத்து  உணர்வு பூர்வமாகப் படத்தின் இறுதிக் காட்சியோடு பொருத்தியிருப்பது.

குடும்ப உறவில் நிலவும் ஆன்ம பந்தத்தை வெகு அழகாகச் சித்தரித்து நம் மனதிலும் அப்படியொரு வாழ்க்கையை எதிர்பார்க்கத் தூண்டுமேயானால் அதில் "ஜேக்கபின்ட ஸ்வர்க்க ராஜ்ஜியம்" வெற்றி பெறும் படைப்பாக இருக்கும்.