
15 வருஷங்கள் கழிந்த நிலையில், கடந்த வாரம் திடீரென்று அலுவலக வேலை காரணமாக Hong Kong பயணிக்க வேண்டியிருந்தது. ஒரு வாரப் பயணம் என்றாலும் அலுவலக நேரம் தவிர்ந்த நேரத்தில் Hong Kong உலாத்தலைக் கவனிக்கலாம் என்று நினைத்தபோது நண்பர் மாயவரத்தான் இந்தியக் கடைகள் இருக்கும் இடம் பற்றிய விபரத்தைக் கொடுத்தார். ஈழத்துப் பதிவர் நண்பர் Hong Kong அருண் இற்கும் ஒரு மின்னஞ்சல் இட்டேன். கண்டிப்பாகச் சந்திப்போம் என்று தன் தொடர்பிலக்கத்தையும் தந்தார் அவர். Hong Kong காலநிலை குளிரை அரவணைக்கும் என்று வேலைத்தலத்தில் பயமுறுத்தினார்கள். எனவே அடுக்கிய உடுப்புக்களோடு குளிரைத் தாங்கும் உடையைம் இணைந்து கொண்டது.
அலுவலகத்தின் சார்பில் Hong Kong East என்ற ஐந்து நட்சத்திர விடுதி ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றது. இந்த ஹோட்டல் வர்த்த நிறுவனங்களுக்குத் தொழில் ரீதியான பயணத்தை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே ஏதுவாக இருக்கின்றது. Hong Kong தீவில் எனது அலுவலகம் இருந்ததால் ஐந்து நிமிட நடை தூரத்தில் இருக்கின்றது.
முதல்நாள் வேலை முடிந்து மாலை வேளை ஊரைச் சுற்றிப்பார்க்கலாம் என்று நினைத்தபோது எமது சிங்கப்பூர் அலுவலகத்தில் இருந்து வந்த தான்யா இணைந்து கொண்டாள். அவள் அடிக்கடி Hong Kong வந்து போனவள். வியட்னாமில் பிறந்தாலும் சீன மொழியைச் சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டு விட்டாள். Hong Kong இல் எனக்குக் கிடைத்த முதல் அனுபவம் அவ்வூர் ரயில் பயணம் தான். எமது ஹோட்டலுக்கு அருகில் Tai Koo என்ற ரயில் நிலையம் இருந்தது. சிங்கப்பூரில் இருக்கும் MRT என்ற ரயில்சேவைக்கும் Hong Kong இன் MTR என்ற ரயில் சேவைக்கும் இடையில் ஆறு வித்தியாசங்கள் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிங்கப்பூர் போன்றே நவீனமயப்படுத்தப்பட்ட ஒரு ரயில் சேவை இது. தான்யா என்னை அந்த ரயில் நிலையத்தின் டிக்கற் விற்பனை முகவரிடம் அழைத்துப் போகின்றாள். சீன மொழியில் "இவருக்கு ஒரு Octopus Card கொடுங்கள் என்கிறாள்" ஐம்பது Hong Kong டொலர் வைப்புப் பணமாகக் கொடுக்க வேண்டும், மேலதிகமாக 100, 200, 500 என்று விரும்பும் அளவுக்கு ரீசார்ஜ் அளவை இந்தக் கார்டில் ஏற்றிக் கொள்ளலாம் என்கிறார் டிக்கற் கொடுப்பவர். என்னடா இது இவள் என்னை ஆக்டோபஸ் காட்டக் கொண்டு போகிறாளோ என்று அப்பாவித்தனமாக மனசு யோசிக்க, தான்யா தொடர்ந்தாள்.

ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற எச்சங்களில் ஒன்றாக Hong Kong இன் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இரண்டு அடுக்கிலான ட்ராம் வண்டிகள் இன்னும் தம் ஓட்டத்தைத் தொடர்கின்றன. அவுஸ்திரேலியாவில் சிட்னியின் மைய நகர்ப்பகுதியில் மட்டும், மற்றும் மெல்பனின் எல்லா இடங்களிலும் இந்த ட்ராம் வண்டிகள் இன்னும் ஓடுவது குறிப்பிடத்தக்கது. Hong Kong இல் பஸ் போக்குவரத்தில் குட்டி மினி பஸ்களின் சேவையையும் காணக்கூடியதாக இருந்தது.
Hong Kong இல் இறங்கினாலே ஏதோ ஒரு பெரும் கடை வளாகத்தில் இறக்கி விட்ட பிரமை தான். எங்கு திரும்பினாலும் பிரமாண்டமான அடுக்குகளில் கடைத் தொகுதிகள். உலகின் முன்னணி நிறுவனங்களில் இருந்து சீனாவில் இருந்து உற்பத்தியாகும் மலிவான சரக்குகள் வரை எல்லாமே கிட்டுகின்றது. மொத்தத்தில் இந்த Hong Kong ஐ shopping paradise அதாவது நுகர்வோரின் சொர்க்கம் என்றால் அது மிகையில்லை.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் இற்கு இரண்டு முறை பயணப்படவேண்டி இருந்தது. சீனா என்றால் ஏதோ குடிசை வீடுகள் நிறந்த தேசம் என்ற என் நினைப்பில் மண் அள்ளிப்போட்ட பயணங்கள் அவை. அங்கும் வானுயர்ந்த கட்டிடங்கள், தரமான போக்குவரத்து சேவைகள் என்றிருந்தாலும் அங்கே ஒரு பெரும் தலையிடியாக இருந்தது மொழிப்பிரச்சனை. ஒரு முறை பெரும் கடைத்தொகுதிக்குள் சுற்றிக் கொண்டிருந்த நான் நம்பர் 1 போகவேண்டும் என்று எதிர்ப்பட்டவர்களை எல்லாம் பாத்ரூம் எங்கே டாய்லெட் எங்கே என்று கேட்டுக் களைத்து ஐந்து விரல்களை ஒவ்வொன்றாக மடக்கிக் காட்டியும் யாரும் புரிந்து கொள்ளாத அவஸ்தை இருந்தது. ஆனால் Hong Kong அந்தப் பிரச்சனை இல்லை. ஆங்கிலத்தை கடைக்கோடி மனிதனும் சரளமாகப் பேசுகின்றார், புரிந்து கொள்கின்றார்.
Hong Kong, 1 ஜீலை வரை ஆங்கிலேயர் ஆளுகைக்குக் கீழ் இருந்து பின்னர் சீனாவின் நிர்வாக அலகுகளில் ஒன்றாகத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டிருந்தது. சீனாவின் கைக்கு இந்த நாடு போகும் போது Hong Kong மக்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியதை இப்போதும் என் மனத்தின் டிவி திரை நினைவுக்குக் கொண்டு வருகின்றது. எங்கே சீனாவின் கம்யூனிச வைரஸ் நம்மைத் தாக்கிவிடுமோ என்று அப்போது Hong Kong மக்கள் பயத்தின் எல்லையில் இருந்ததும் நியாயமான ஒன்று. சிங்கப்பூரில் மலேசியர்கள் என்றால் ஒரு எள்ளல் பார்வை இருக்கும் அதே தோரணை சீனாவில் இருந்து வருபவர்களை நோக்கி Hong Kong காரரிடம் இருக்கும். Hong Kong இன் முக்கிய பேச்சு மொழியாக சீன மொழியின் கூறு Cantonese இருக்கின்றது.
Hong Kong பாராளுமன்றக் கட்டடம்
"Hong Kong சீனாவிடம் போனதால் என்ன நன்மை கிட்டியிருக்கு" என்று தான்யாவிடம் கேட்டேன்.
"நிறைய விடுமுறைகள் கிட்டியிருக்கு, அவ்வளவு தான்" என்றாள் அவள்.
அடுத்த நாள் வலைப்பதிவூடாகக் கிட்டிய நம் தாயக உறவு அருண் ஐ சந்திக்கும் ஆவலோடு காத்திருந்தேன்.
11 comments:
ஹாங்காங் மற்றும் சிங்கைக்கு நடுவே எப்போதும் ஒரு நிழல் யுத்தம் நடந்துகொண்டே இருக்கும், அதுவும் ஆரோக்கியமாக.
ரயில் கட்டமைப்பு ஒரு உதாரணம்.
டெல்லி போய் பாருங்கள் 99% சிங்கை சாயல் தெரியும்.பிளாஸ்டிக் பட்டன் டிக்கெட்டில் தான் டெல்லியின் வித்தியாசம் தெரியும்.
கலக்குறிங்க தல...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;))
வணக்கம்
வழமைப்போலவே உங்கள் “உலாத்தல்” அனுபவங்களுடன் வாசகர்களையும் அழைத்து சென்று விடுகிறீர்கள். அடுத்தப் பதிவை எதிர்ப்பார்க்க வைத்துவிட்டீர்கள்.
நன்றி!
அன்புடன்
அருண் HK Arun
இந்தோனசியா சிங்கப்பூர் - மறுபடியும் சிங்கப்பூர் - ஹாங்கங்ன்னு - சுத்திக்கிட்டிருக்கீங்க தல :)))))
போன வேலை பத்தியும் சொல்லுங்க ஏன்ன்னா சுத்தறதுக்குத்தான் கம்பெனி அனுப்பியிருக்குன்னு என்னிய மாதிரி ஆளுங்க நம்பி உங்க கம்பெனிக்கு படையெடுக்கப்போறாங்க :)))
வாங்க வடுவூர் குமார்
ஹாங்காங் - சிங்கை போட்டியை ஆரோக்கியமான வளர்ச்சியாகப் பார்க்கக் கூடியதாக இருக்கு. டெல்லி போனதில்லை அடுத்த ஆண்டு போய்ப்ப் பார்த்து விடுவோம்
தல கோபி
வருகைக்கு நன்றி ;)
வணக்கம் அருண்
உங்களைச் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம், மிக்க நன்றி
கலக்கலா இருக்கு பிரபா.
நான் நாடு விட்டதும் போய் இறங்கிய முதல் வெளிநாடு ஹாங்காங்தான். மொழி தெரியாத நிலையில் கண்ஜாடை கைஜாடைன்னு அபிநயம் பிடிச்சு ஷாப்பிங் செஞ்சதும் ஊர் சுற்றுனதும் ஆஹா....
அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.
நானே ஹாங்காங்கில் உலா போனது போல் இருந்தது! அருமையான பதிவு.
ஆயில்
இந்தோனேசியா எங்கே போனேன்?
துளசிம்மா
வருகைக்கு நன்றி ;)
மாரிமுத்து
மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு
ஹாங்காங் பத்தி நெறய சொல்லுலுங்க தல. இப்போ சாங்காய்க்கோ, பீஜிங்குக்கோ போய்ப் பாருங்க, எல்லா எடத்திலும் ஆங்கிலம் இருக்கு... ஆனா 90% சீன மக்கள் இன்னும் மான்டரினில் தான் கதைக்கிறாங்க...
மாயவரத்தான் ஹாங்காங் ஓடிவிட்டாரா?
Post a Comment