Social Icons

Pages

Monday, December 15, 2008

Banteay Srei என்னுமோர் அழகிய சிவனாலயம்

கம்போடியா உலாத்தல்களில் எண்ணற்ற அதியசங்களை கண்டு கொண்டே போவது உள்ளுக்குள் உவகையையும் பிரமிப்பையும் உண்டு பண்ணிக் கொண்டே இருந்தது. புத்தகங்களில் வரும் செய்திகளையும் ஒரு சில படங்களையுமே கண்டு வந்த எனக்கு அந்தப் பிரமாண்டங்களைக் கண்ணெதிரே காணும் போது நான் எங்கே கனவுலகிலா நிற்கின்றேன் என்று என்னையே அடிக்கடி உள்ளுரக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்படியானதோர் அதிசயம் தான் Banteay Srei என்ற சிவனாலயத்தைக் கண்டபோதும் வந்தது.
முன்னர் நான் கம்போடிய வரலாற்றுப் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ராஜேந்திரவர்மன் என்ற மன்னனால் எழுப்பப்பட்ட சிவாலயமே Banteay Srei ஆகும். யசோதபுர/அங்கோர் (Yashodapura/Angkor) என்ற இடத்தை இந்த மன்னன் தன் ஆட்சியில் தலைநகராக அமைத்து கி.பி 944 - 968 ஆண்டு வரை தன் ஆட்சியை நடாத்தியவன். இந்த ராஜேந்திரவர்மன் என்ற மன்னன் மகேந்திரவர்மன், மகேந்திர தேவியின் மகனாகக் கொள்ளப்படுகின்றான். ராஜேந்திர வர்மனின் தளபதியாக இருந்த கவிந்திரவிமதன (Kavindravimathana) பெளத்த அமைச்சராகவும் கொள்ளப்பட்டிருக்கின்றான். இந்த ராஜேந்திரவர்மன் இறந்தபின் சிவலோகா(Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

Banteay Srei என்றால் "Citadel of Women" என்று அர்த்தப்படும் இந்த ஆலயம் கி.பி பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. கைமர் பேரரசு எழுச்சியோடும் செழிப்போடும் இருந்த காலப்பகுதியில் எழுப்பப்பட்ட இந்த ஆலயத் திருப்பணி இராஜேந்திரவர்மனின் பிரதம ஆலோசகராக இருந்த வேதியரால் முன்னெடுக்கப்பட்டுப் பின்னர் ஐந்தாம் ஜெயவர்மன் காலத்தில் நிறைவுற்றதாகச் சொல்லப்படுகின்றது. கட்டிட அமைப்பைப் பொறுத்தவரை இந்த ஆலயத்தின் பெயரான Banteay Srei என்ற பெயர் கொண்டே கட்டியவியல் நிபுணர்களால் வகைப்படுத்தப்பட்டிருகின்றது. இந்தக் கோயிலின் ஒவ்வொரு சிற்பவடிவமும், கட்டிட அமைப்பும் முழுமையானதொரு சிவாலயம் இது என்ற தீர்க்கமான முடிவை எடுக்க வழிகோலுகின்றன.

Banteay Srei ஆலயத்தின் சுவர் செதுக்கு வேலைப்பாடுகள் கைமர் பேரரசின் முதல் தர சித்திர வேலைப்பாடுகளைக் காட்டி நிற்கின்றன. நுட்பமான சுவர் செதுக்கு வேலைப்பாடுகள் ஒருபுறம் இருக்க, கட்டிட உபயோகத்துக்கான கற்கள் கூட மற்றைய ஆலயங்களில் இருந்து வேறுபட்டு pink sandstone எனுமோர் வகையான சலவைக்கற்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆலயத்தின் கட்டிட உபயோகத்துக்குப் பயன்பட்ட சலவைக்கல் கொடுக்கும் சிறப்பைக் காண காலை 10.30 மணிக்கு முன்னரோ அல்லது மதியம் 2 மணிக்குப் பின்னரோ செல்வதோ உகந்தது என வழிகாட்டப்படுகின்றன.


வரலாற்றில் தொன்மை மிகு ஆலயமான Banteay Srei எவ்வளவு தான் கலையழகோடும், நேர்த்தியான சிற்பவேலைப்பாடுகளோடும் இருந்தாலும் வரலாற்றின் துயர் தோய்ந்த பக்கங்களில் உருக்குலைந்து, உருத்தெரியாமல் மறைந்திருந்து, இந்த நாட்டினைத் தமது காலணித்துவ நாடாக வைத்திருந்த பிரான்ஸ் நாட்டு தொல்பொருள் வல்லுனர்களால் 1914 ஆம் ஆண்டே கண்டு பிடிக்கப்பட்டு உலகுக்கு மீண்டும் தரிசனம் கொடுத்தது. இந்தவேளை இன்னொன்றையும் சொல்லி வைக்க வேண்டும். இங்கே நான் பிரான்ஸ் நாட்டு தொல்பொருள் வல்லுனர்கள் தான் இந்த ஆலயத்தைக் கண்டு பிடித்து அளித்த பிதாமகர்கள் என்று ஏகத்துக்கும் புகழ முடியாது. அவர்கள் சும்மா ஒன்றும் செய்துவிடவில்லை. இவ்வாறான பல ஆலயங்களைத் தம் ஆட்சியாளர்களின் கட்டளைப் பிரகாரம் தேடிப்பிடித்து அந்தந்த ஆலயங்களில் இருந்த செல்வங்களையும், தெய்வத் திருவுருவச் சிலைகளையும் களவாடி பிரான்ஸுக்கு கொண்டு போகவே இந்தக் காரியங்களைச் செய்தார்கள். இது போன்ற எத்தனையோ ஆலயங்களில் சிலைகளின் தலை முதலான அங்கங்கள் கொய்யப்பட்டுக் காணாமற் போனதன் சூத்திரதாரிகள் இந்த பிரென்சுக்காரர்கள் தான். இந்து முறைப்படி ஆலயக்கருவறையில் தங்கம் முதலான செல்வங்களைப் புதைத்து அதன் மேல் தெய்வ விக்கிரகங்களை வைத்ததை அறிந்து அவற்றிலும் கன்னம் வைத்து வெறும் குழியாக மட்டும் விட்டுச் சென்றிருக்கின்றார்கள் இந்த மேற்குலகத்தார்.

நரசிம்ம அவதாரம் இரண்யகசிபுவை சங்காரம் செய்யும் காட்சி, அர்ஜினனுக்கும் சிவனுக்குமான போர், சிங்கத்தில் ஏறி நிற்கும் துர்க்கை அம்மனின் எழில் வடிவம், கைலாசமலையை பெயர்த்தெடுக்க முயலும் இராவணன், மன்மதன் சிவன் மேல் ஏவும் காமக் கணைக் காட்சி, தேவதையின் உருவச் சிலை, வாலிக்கும் சுக்ரீவனுக்குமான சண்டை, நாகா இனத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து பின்னர் அர்ஜினனும், வாசுதேவ கிருஷ்ணனும் தீவைக்கும் காந்தார வனம், கம்சனைக் கொல்லும் கிருஷ்ணன், குருசீட மரபைக் காட்டும் முனிவர்களின் கூட்டு என்று இந்த ஆலயத்தின் ஓவ்வொரு சுவர் இடுக்குகளைக் கூட விட்டு வைக்காமல் சிற்பச் செதுக்குவேலைகளில் இதிகாச புராணக் கதைகள் பேசப்படுகின்றன.

சியாம் ரீப் நகரத்தில் இருந்து Banteay Srei 38 கி.மி தொலைவில் இருக்கின்றது. வழமையான சுற்றுலாப் பிராந்தியத்தில் இருந்து சற்றே தள்ளியிருக்கும் இவ்வாலயத்துக்கான போக்குவரத்துக்கும் செலவு மேலதிகமாக இருந்தாலும் எமது இந்து மதத்திற்கு அதுவும் குறிப்பாக சைவசமயத்துக்கு அன்றைய காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட மதிப்பும் மரியாதையும் எவ்வளவுக்கெவ்வளவு உயர்ந்து அது காலத்தைக் கடந்தும் எஞ்சியிருக்கின்றது என்பதைக் கண்ணாரக் கண்டு வர ஓர் அரிய வாய்ப்பாக இருக்கின்றது.

உசாவ உதவியது: கம்போடிய சுற்றுலா வழிகாட்டிக் கையேடு

28 comments:

சந்தனமுல்லை said...

படங்கள் சூப்பர்! மீதியை அப்புறம் படிக்கறேன்!

ஆயில்யன் said...

எண்ணற்ற அதியசங்களை கண்டு கொண்டே போவது உள்ளுக்குள் உவகையையும் பிரமிப்பையும் உண்டு பண்ணிக் கொண்டே இருக்கிறது எமக்கு!

இன்னும் படங்களிலேயே லயித்திருக்கிறேன்!

நன்றி தல!

Anonymous said...

இவ்விடங்களேல்லாம் அந்தக்காலத்தில்
எப்படி இருந்திருக்கும்.
சொர்க்கம் தான்.:)

கோபிநாத் said...

வழக்கம் போல படங்கள் அனைத்தும் அழகு...

படிக்க படிக்க மிக பிரம்பிப்பாக உள்ளது...படங்களை பார்க்கும் போது அவர்களின் அர்வமும் உழைப்பும் தெரிகிறது

தல முடிந்தால் படங்களுக்கு கீழா அந்த படங்கள் சம்பந்தமாக எழுதுங்க அது மிகவும் எளிதாக இருக்கும் ;)

தமிழன்-கறுப்பி... said...

குடுத்து வச்ச ஆள் அண்ணன் நீங்கள்..:)

படமெல்லாம் அந்தமாதிரி இருக்கு உலகத்தை சுத்தி பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் போகவேணும் கம்போடியாவுக்கு...

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி அண்ணன்..!

சதுக்க பூதம் said...

Nice post with good photos.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி சந்தனமுல்லை, சாவகாசமா படிங்க‌

ஆயில்யன்

இதை நேரில் பார்த்த பிரமிப்பு இன்னும் என்னை விட்டு அகலவில்லை.

Anonymous said...

கோபி சொன்ன மாதிரி அந்தந்த போட்டோவுக்கு கீழ அதோட கமெண்ட் குடுத்தா இன்னும் நல்லா இருக்குமே

கானா பிரபா said...

//Anonymous said...
இவ்விடங்களேல்லாம் அந்தக்காலத்தில்
எப்படி இருந்திருக்கும்.
சொர்க்கம் தான்.:)//


உண்மைதான் நண்பரே ஆனால் இந்த அழிவின் காரணியாக எங்கும் நிலவும் போர் என்ற அரக்கனே காரணம்.

//கோபிநாத் said...


தல முடிந்தால் படங்களுக்கு கீழா அந்த படங்கள் சம்பந்தமாக எழுதுங்க அது மிகவும் எளிதாக இருக்கும் ;)//


நன்றி தல, நிச்சயம் போடுறேன்

கானா பிரபா said...

//தமிழன்-கறுப்பி... said...
குடுத்து வச்ச ஆள் அண்ணன் நீங்கள்..:)

படமெல்லாம் அந்தமாதிரி இருக்கு உலகத்தை சுத்தி பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் போகவேணும் கம்போடியாவுக்கு...//

வாங்கோ தமிழன்

கம்போடியா போறது என்ன பெரிய வேலையோ ;) போகேக்கை பக்கத்தில இருக்கும் சிட்னிக்கும் வாருங்கோ

//சதுக்க பூதம் said...
Nice post with good photos.//

மிக்க நன்றி நண்பரே

//சின்ன அம்மிணி said...
கோபி சொன்ன மாதிரி அந்தந்த போட்டோவுக்கு கீழ அதோட கமெண்ட் குடுத்தா இன்னும் நல்லா இருக்குமே//

நிச்சயம் கொடுக்கிறேன் சின்ன அம்மணி

Anonymous said...

வாவ் என்று தான் சொல்ல தோன்றுகின்றது...

சதங்கா (Sathanga) said...

//இன்னும் படங்களிலேயே லயித்திருக்கிறேன்!//

இதே மனநிலை தான் எனக்கும்.

அந்த காலத்திற்கு கூட்டிச் சென்றுவிட்டீர்கள் நம்மையும். பிரமிப்பில் இருந்து மீளாமல் ......

சந்தனமுல்லை said...

ம்ம்..படிச்சுட்டேன்...சுவாரசியம்..
//சலவைக்கல் கொடுக்கும் சிறப்பைக் காண//

கண்டீர்களா? என்ன சிறப்பு??

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தூயா மற்றும் சதங்கா

சந்தனமுல்லை

அந்த சலவைக்கல் குறிப்பிட்ட அந்த நேரத்தில் பார்ப்பதற்குக் கொள்ளை அழகு. அதைத் தான் குறிப்பிட்டேன்.

வடுவூர் குமார் said...

வாலி வதம் - சிலைகள் அருமை (கால் சரியாக வரவில்லை)

நரசிம்மம் கூட அழகாக வந்துள்ளது.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இக்கோவில் தொடர்பிலேயே கம்போடிய தாய்லாந்து அரசுகள் அடித்துக் கொண்டன.

பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் இந்த இடமும் ஆலயமும் இருக்கின்றன.

படங்கள் அருமை!நன்றி.

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வடுவூர் குமார் மற்றும் அறிவன்

வாசுகி said...

படங்கள் super அண்ணா.

கம்போடிய கோயில் பற்றி அறிந்திருக்கிறேன். இவ்வளவு
சிற்ப வேலைப்பாடுகள் உள்ள கோயிலா? பிரமிப்பாக தான் இருக்கு.

படங்கள் தெளிவாக இருக்கு.
தகவல்கள் ஊடாக எம்மையும் கம்போடியா அழைத்து சென்றுவிட்டீர்கள்.

நன்றி

கானா பிரபா said...

வணக்கம் வாசுகி

இது போன்ற எண்ணற்ற கோயில்கள் விதவிதமாக அங்கே இருக்கின்றன, இன்னும் அவை பற்றிச் சொல்வேன், உண்மையில் இவை பிரமிப்பான விடயங்கள் தான். மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.

குமரன் (Kumaran) said...

அருமையான படங்கள் பிரபா. பார்த்து இரசித்தேன். மிக்க நன்றி.

கானா பிரபா said...

வாங்க குமரன்

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

geevanathy said...

///அதியசங்களை கண்டு கொண்டே போவது உள்ளுக்குள் உவகையையும் பிரமிப்பையும் உண்டு பண்ணிக் கொண்டே இருந்தது.//

படங்களைப்பார்க்கும் போதே புரிகிறது...

நன்றி பிரபா

கோவி.கண்ணன் said...

ஒரு காளைமாடு அதன் மீது ஆண் பெண் உருவம், இதைத் தவிர இதை சிவன் கோவில் என்று சொல்ல எந்த அடையாளமும் இல்லை. முழுக்க முழுக்க புத்த சமயத்தின் தாக்கம் தான் சிற்பங்களில் தெரிகிறது.

கானா பிரபா said...

வணக்கம் ஜீவகுமார்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வணக்கம் கோவி கண்ணன்

சிலைகள் எல்லாமே வைஷணவ மதத்தாக்கத்தில் அமைந்தவை, அத்தோடு நீங்கள் சொல்வது போல பெளத்த மத தாக்கம் இருக்கின்றது காரணம் இந்தக் கோயிலை ஆரம்பத்தில் எழுப்பியவன் சிவபக்தனான இராஜேந்திர வர்மன், அதனால் தான் படத்தில் காட்டியது போல் சிவலிங்க உருவங்கள் இருக்கின்றன, ஆனால் அவனுக்கு பின்னால் வந்த பெளத்த மதத்தை நேசித்த ஐந்தாம் ஜெயவர்மனாலேயே இவ்வாலயக் கட்டிடப்பணி நிறைவுற்றதால் அவன் தன் மதத்தின் செல்வாக்கை இங்கே காட்டியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

G.Ragavan said...

அழகு... அபாரம்... அற்புதம்...

விடையேறும் பெம்மானைச் சிற்பத்தில் களிக்கும் வேளையில் அன்னையில் சிரம் கொய்தான் திகைக்க வைக்கிறானே. அவனை வேரோடு பகைக்க வைக்கிறானே!

கலையைக் கலையாகக் கருதாது கலைக்கும் பேர்களைக் குலைக்கும் வகையோடு சேர்ப்பதே சரி.

பிரபா, வரலாறு ஒரு புதிர். அது தொடத் தொட அழியும் பனிப்படலம் போல் உள்ளே நிறைய மறைத்து வைத்துள்ளது. இது போன்ற பயண அனுபவங்கள் நிறைய கற்றுக் கொடுக்கின்றன. நன்றி.

கானா பிரபா said...

மிக்க நன்றி ராகவன்

நீங்கள் சொல்லுமாற்போல வரலாறு புரியாத புதிர் நிறைய உண்மைகளையும் ஆதாரங்களையும் தன்னுள்ளே புதைத்திருக்கின்றது.

J S Gnanasekar said...

பான்டேய் ஸ் ரீயில் நான் எடுத்த புகைப்படங்கள் இதோ:

https://goo.gl/photos/CWUCiLJ3tP75xr1H7

- ஞானசேகர்