Social Icons

Pages

Monday, December 15, 2008

Banteay Srei என்னுமோர் அழகிய சிவனாலயம்

கம்போடியா உலாத்தல்களில் எண்ணற்ற அதியசங்களை கண்டு கொண்டே போவது உள்ளுக்குள் உவகையையும் பிரமிப்பையும் உண்டு பண்ணிக் கொண்டே இருந்தது. புத்தகங்களில் வரும் செய்திகளையும் ஒரு சில படங்களையுமே கண்டு வந்த எனக்கு அந்தப் பிரமாண்டங்களைக் கண்ணெதிரே காணும் போது நான் எங்கே கனவுலகிலா நிற்கின்றேன் என்று என்னையே அடிக்கடி உள்ளுரக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்படியானதோர் அதிசயம் தான் Banteay Srei என்ற சிவனாலயத்தைக் கண்டபோதும் வந்தது.
முன்னர் நான் கம்போடிய வரலாற்றுப் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ராஜேந்திரவர்மன் என்ற மன்னனால் எழுப்பப்பட்ட சிவாலயமே Banteay Srei ஆகும். யசோதபுர/அங்கோர் (Yashodapura/Angkor) என்ற இடத்தை இந்த மன்னன் தன் ஆட்சியில் தலைநகராக அமைத்து கி.பி 944 - 968 ஆண்டு வரை தன் ஆட்சியை நடாத்தியவன். இந்த ராஜேந்திரவர்மன் என்ற மன்னன் மகேந்திரவர்மன், மகேந்திர தேவியின் மகனாகக் கொள்ளப்படுகின்றான். ராஜேந்திர வர்மனின் தளபதியாக இருந்த கவிந்திரவிமதன (Kavindravimathana) பெளத்த அமைச்சராகவும் கொள்ளப்பட்டிருக்கின்றான். இந்த ராஜேந்திரவர்மன் இறந்தபின் சிவலோகா(Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

Banteay Srei என்றால் "Citadel of Women" என்று அர்த்தப்படும் இந்த ஆலயம் கி.பி பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. கைமர் பேரரசு எழுச்சியோடும் செழிப்போடும் இருந்த காலப்பகுதியில் எழுப்பப்பட்ட இந்த ஆலயத் திருப்பணி இராஜேந்திரவர்மனின் பிரதம ஆலோசகராக இருந்த வேதியரால் முன்னெடுக்கப்பட்டுப் பின்னர் ஐந்தாம் ஜெயவர்மன் காலத்தில் நிறைவுற்றதாகச் சொல்லப்படுகின்றது. கட்டிட அமைப்பைப் பொறுத்தவரை இந்த ஆலயத்தின் பெயரான Banteay Srei என்ற பெயர் கொண்டே கட்டியவியல் நிபுணர்களால் வகைப்படுத்தப்பட்டிருகின்றது. இந்தக் கோயிலின் ஒவ்வொரு சிற்பவடிவமும், கட்டிட அமைப்பும் முழுமையானதொரு சிவாலயம் இது என்ற தீர்க்கமான முடிவை எடுக்க வழிகோலுகின்றன.

Banteay Srei ஆலயத்தின் சுவர் செதுக்கு வேலைப்பாடுகள் கைமர் பேரரசின் முதல் தர சித்திர வேலைப்பாடுகளைக் காட்டி நிற்கின்றன. நுட்பமான சுவர் செதுக்கு வேலைப்பாடுகள் ஒருபுறம் இருக்க, கட்டிட உபயோகத்துக்கான கற்கள் கூட மற்றைய ஆலயங்களில் இருந்து வேறுபட்டு pink sandstone எனுமோர் வகையான சலவைக்கற்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆலயத்தின் கட்டிட உபயோகத்துக்குப் பயன்பட்ட சலவைக்கல் கொடுக்கும் சிறப்பைக் காண காலை 10.30 மணிக்கு முன்னரோ அல்லது மதியம் 2 மணிக்குப் பின்னரோ செல்வதோ உகந்தது என வழிகாட்டப்படுகின்றன.


வரலாற்றில் தொன்மை மிகு ஆலயமான Banteay Srei எவ்வளவு தான் கலையழகோடும், நேர்த்தியான சிற்பவேலைப்பாடுகளோடும் இருந்தாலும் வரலாற்றின் துயர் தோய்ந்த பக்கங்களில் உருக்குலைந்து, உருத்தெரியாமல் மறைந்திருந்து, இந்த நாட்டினைத் தமது காலணித்துவ நாடாக வைத்திருந்த பிரான்ஸ் நாட்டு தொல்பொருள் வல்லுனர்களால் 1914 ஆம் ஆண்டே கண்டு பிடிக்கப்பட்டு உலகுக்கு மீண்டும் தரிசனம் கொடுத்தது. இந்தவேளை இன்னொன்றையும் சொல்லி வைக்க வேண்டும். இங்கே நான் பிரான்ஸ் நாட்டு தொல்பொருள் வல்லுனர்கள் தான் இந்த ஆலயத்தைக் கண்டு பிடித்து அளித்த பிதாமகர்கள் என்று ஏகத்துக்கும் புகழ முடியாது. அவர்கள் சும்மா ஒன்றும் செய்துவிடவில்லை. இவ்வாறான பல ஆலயங்களைத் தம் ஆட்சியாளர்களின் கட்டளைப் பிரகாரம் தேடிப்பிடித்து அந்தந்த ஆலயங்களில் இருந்த செல்வங்களையும், தெய்வத் திருவுருவச் சிலைகளையும் களவாடி பிரான்ஸுக்கு கொண்டு போகவே இந்தக் காரியங்களைச் செய்தார்கள். இது போன்ற எத்தனையோ ஆலயங்களில் சிலைகளின் தலை முதலான அங்கங்கள் கொய்யப்பட்டுக் காணாமற் போனதன் சூத்திரதாரிகள் இந்த பிரென்சுக்காரர்கள் தான். இந்து முறைப்படி ஆலயக்கருவறையில் தங்கம் முதலான செல்வங்களைப் புதைத்து அதன் மேல் தெய்வ விக்கிரகங்களை வைத்ததை அறிந்து அவற்றிலும் கன்னம் வைத்து வெறும் குழியாக மட்டும் விட்டுச் சென்றிருக்கின்றார்கள் இந்த மேற்குலகத்தார்.

நரசிம்ம அவதாரம் இரண்யகசிபுவை சங்காரம் செய்யும் காட்சி, அர்ஜினனுக்கும் சிவனுக்குமான போர், சிங்கத்தில் ஏறி நிற்கும் துர்க்கை அம்மனின் எழில் வடிவம், கைலாசமலையை பெயர்த்தெடுக்க முயலும் இராவணன், மன்மதன் சிவன் மேல் ஏவும் காமக் கணைக் காட்சி, தேவதையின் உருவச் சிலை, வாலிக்கும் சுக்ரீவனுக்குமான சண்டை, நாகா இனத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து பின்னர் அர்ஜினனும், வாசுதேவ கிருஷ்ணனும் தீவைக்கும் காந்தார வனம், கம்சனைக் கொல்லும் கிருஷ்ணன், குருசீட மரபைக் காட்டும் முனிவர்களின் கூட்டு என்று இந்த ஆலயத்தின் ஓவ்வொரு சுவர் இடுக்குகளைக் கூட விட்டு வைக்காமல் சிற்பச் செதுக்குவேலைகளில் இதிகாச புராணக் கதைகள் பேசப்படுகின்றன.





சியாம் ரீப் நகரத்தில் இருந்து Banteay Srei 38 கி.மி தொலைவில் இருக்கின்றது. வழமையான சுற்றுலாப் பிராந்தியத்தில் இருந்து சற்றே தள்ளியிருக்கும் இவ்வாலயத்துக்கான போக்குவரத்துக்கும் செலவு மேலதிகமாக இருந்தாலும் எமது இந்து மதத்திற்கு அதுவும் குறிப்பாக சைவசமயத்துக்கு அன்றைய காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட மதிப்பும் மரியாதையும் எவ்வளவுக்கெவ்வளவு உயர்ந்து அது காலத்தைக் கடந்தும் எஞ்சியிருக்கின்றது என்பதைக் கண்ணாரக் கண்டு வர ஓர் அரிய வாய்ப்பாக இருக்கின்றது.

உசாவ உதவியது: கம்போடிய சுற்றுலா வழிகாட்டிக் கையேடு

Sunday, November 30, 2008

Kbai Spean ஆயிரம் லிங்கங்கள் கொண்டதோர் மலை

Pre Rup ஆலயத்தைத் தரிசித்து விட்டு எம் பயணம் அடுத்து Phnom Kulen என்ற இடத்தில் உள்ள Kbeai Spean ஐ பார்க்கக் கிளம்புகின்றது. கி.பி 11 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் எழுப்பப்பட்ட ஆன்மீக ஸ்தலமே இதுவாகும். இந்தப் பகுதிக்கு வருவோர் அதிகாலையிலேயே கிளம்பி வருவது நல்லது. காரணம் இந்தப் பகுதியின் போக்குவரத்து மதியம் மூன்று மணியுடன் மூடப்பட்டு விடும். எனவே நாமும் ஏற்கனவே திட்டமிட்டவாறு எம் பயணம் அமைந்ததால் காலையிலேயே வந்து விட்டோம். இந்தப் பகுதிக்கு வருவோர் அடுத்த பதிவில் நான் தரப்போகும் Banteay Srey என்ற இடத்தையும் சேர்த்து அரை நாள் சுற்றுலாவாக அமைத்துக் கொள்ளலாம்.

சியாம் ரீப் நகர்ப்பகுதியில் இருந்து வெளியேயான நீண்டதொரு பயணத்தின் பின் தான் இந்த இடத்துக்கு வந்து சேர்கின்றோம். 48 கி.மீ பயணம் அது. இந்த இடத்துக்கு வந்தது காரை விட்டு வெளியே வந்ததுமே விதவிதமான சால்வைகளை வாங்குமாறு நச்சரிக்கும் சிறுவர் கூட்டம் வந்து மொய்க்கின்றது. கூடவே தண்ணீர் போத்தல்களையும், குவித்து வைத்த பனம் நுங்குகளையும் வைத்துக் கொண்டு கூவி அழைக்கின்றார்கள். அவர்களையும் கடந்து வாகனச் சாரதியை நிறுத்தி விட்டு நானும், வழிகாட்டியுமாக மலையில் ஏறத் தொடங்குகின்றோம். மிகவும் சிக்கலான நடை அது. எந்தவிதமான நவீன வசதிகளும் இல்லாது ஆங்காங்கே அண்மையில் தான் அமைக்கப்பட்ட மரச்சட்டங்களைப் பிடித்துக் கொண்டு ஏற வேண்டும். சில இடங்களில் அதுவும் இல்லை.
மிகவும் செங்குத்தாகப் பயணிக்கும் அந்தப் பயணம் அடர்ந்த காட்டின் நடுவே அமைகின்றது. எப்போது, யார் வருவார்கள் என்று எனக்குள் மெல்லமாக ஒரு பயமும் இருந்தது. ஆனால் எனது வழிகாட்டியோ சிரித்துக் கொண்டே பேச்சுக் கொடுத்தவாறு முன்னே பாய்ந்து பாய்ந்து நடக்கின்றார். நானோ கீழே விழுந்தும் எழும்பியும், ஆங்காங்கே ஆபத்பாந்தவராக இருந்த தொங்கிய விழுதுகளைப் பிடித்தவாறே போய்க் கொண்டிருக்கின்றேன். ஒரு சில இடங்களில் அந்தப் பாதை வழியே கொட்டிக் கிடக்கும் இலைச் சருகுகளை அள்ளிப் போட்டுத் துப்பரவு செய்யும் பணியாளர்கள் இருக்கின்றார்கள். ஒரு கட்டத்தில் அவர்களும் இல்லாத கொடும் அமைதியான பயணத்தில் நானும், வழிகாட்டியும் மட்டுமே இருப்பது போல இருக்கின்றது.


காட்டுப் பகுதியின் ஒரு தோற்றம்

"இந்தக் காடு முன்னர் பொல்பொட்டின் தீவிரவாதப் படைகள் ஒளிந்திருந்த பிரதேசங்களில் ஒன்று, நீண்ட யுத்தத்தின் பின்னர் பொல் பொட்டின் படைகள் சரணாகதி அடைந்த போது தான் இந்தப் பிரதேசத்தின் பெருமை பலருக்கும் தெரிய வந்தது, எனவே இந்தப் பண்டைய ஸ்தலத்தினைக் காட்டிக் கொடுத்த புண்ணியம் அவர்களுக்கும் உண்டு" என்றார் வழிகாட்டி. நான் அவ்வப்போது அவரிடம் பொல் பொட்டின் ஆட்சிக்காலத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு. அது போல் அப்போதும் ஒரு கேள்வியைக் கேட்டேன். "பொல் பொட்டின் அந்தக் கொடுங்கோல் ஆட்சிக்கு இன்றும் ஆதரவு தெரிவிப்போர் உண்டா? என்று கேட்டேன். "ஏன் இல்லை என்னோடு இருக்கும் சுற்றுலா வழிகாட்டிகளில் பலர் முன்னர் பொல்பொட்டின் அமைப்பில் இருந்தவர்கள், அவர்கள் இன்னும் அவனின் ஆட்சியை ஆதரித்துத் தான் பேசுவார்கள். பொல்பொட்டினால் தான் கம்போடியாவின் தனித்துவம் பேணப்பட்டது என்ற ரீதியில் அவர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்றார்.

குகைகளில் ஒன்று

குகை ஒன்றை வழிபாட்டு நிலையம் ஆக்கி விட்டார்கள்.

கையோடு கொண்டு போன தண்ணீர்ப்போத்தல்கள் இரண்டையும் மிகவும் பத்திரப்படுத்திப் பருகிவாறே போய்க்கொண்டிருக்கின்றோம். வழியெங்கும் குகைகள் தென்படுகின்றன. அவற்றில் பல முன்னர் பொல்பொட்டின் படைகளின் வாசஸ்தலமாக இருந்திருக்கின்றனவாம்.


கிட்டத்தட்ட 45 நிமிட மலை ஏற்றத்தின் பின்னர் மலை முகட்டில் வந்து சேர்கின்றோம். மெல்ல நடந்து பாறை இடுக்குகளை விலத்தி விட்டுப் பார்த்தால் " ஆகா ! என்ன அதிசயம், மலையில் மேற்பரப்பெங்கும் திட்டுத் திட்டாக சிவலிங்க விக்கிரகங்கள் இருக்கின்றன. அவற்றை அப்பால் ஓடும் நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் நீரோடை தொடர்ந்து கழுவித் துடைத்துக் கொண்டே அபிஷேகம் பண்ணுகின்றது. இங்கே உற்பத்தியாகும் சியாம் ரீப் நதிதான் பெருந்தொலைவில் இருக்கும் நகர்ப்புறத்துக்கு வந்து சேர்கின்றது.

மிகவும் ஆச்சரியமான கணங்களில் ஒன்று அது. ஆங்காங்கே சின்ன சின்னதாய் இருக்கும் சிவலிங்க உருவங்கள் மட்டுமன்றி விஷ்ணுவும், அவர் காலைப் பிடித்துக் கொண்டிருக்கும் மகாலஷ்மியும் பொருந்திய உருவமும் இருக்கின்றது. நான்கு தலைகள் கொண்ட பிரம்மா உருவம் மலையின் மேற்பரப்பில் கிடையாக

திட்டுத் திட்டாய் சிவலிங்கங்கள்
சிவலிங்கத்தின் லிங்க பாகம் மட்டும் கிடையாக


இவையெல்லாம் கடந்து போனால் நீண்டதொரு லிங்க உருவம் முழு அளவினதாக இருக்கின்றது. 45 நிமிடப் பயணம் உண்மையில் பயன் உள்ளது தான் என்று அப்போது நினைத்துக் கொண்டேன். ஆங்காங்கே தற்காலிகத் தூளிகள் அமைத்து தூங்கிக் கொண்டிருக்கும் வெள்ளையர்கள். எல்லாவற்றையும் பார்த்த பரம திருப்தியோடு மீண்டும் கீழ் இறங்கி வருகின்றோம்.



மலையடிவாரத்திலே நவீன வசதி செய்யப்பட்ட கழிப்பிடமும், குளியலறையும் இருக்கின்றது. அருகே நீண்டதொரு கொட்டகை அமைத்து சாப்பாட்டுக் கடையும் இருக்கின்றது. என்னோடு வந்த வழிகாட்டி சாப்பாட்டை ஓடர் செய்கிறார். உடனே சால்வை வியாபாரம் செய்யும் சிறுவர்கள் வந்து மொய்க்கின்றார்கள். நன்றாக ஆங்கிலம் பேசவும் செய்கின்றார்கள். "நீங்கள் பள்ளிக்கு எல்லாம் செல்வதில்லையா?" என்று கேட்கின்றேன். "நாங்கள்ளாம் மாலைப் பள்ளிக்குத் தான் போவோம்" என்கிறது ஒரு சிறுமி. இன்னொரு சிறுமி மிகவும் துறுதுறுப்பானவள். "நீங்கள் இந்த சால்வைகளை வாங்குகிறீர்களா, ஒரு டாலர் தான், மிகவும் மலிவு, தரமும் சிறப்பு" என்று தன் தொழிலை ஆரம்பிக்கின்றாள். நானோ "எனக்கு இவை உபயோகப்படாதே" என்று சொல்லவும் விடாக்கண்டனாக அவள் ஒற்றைக் காலில் நின்று அடம்பிடிக்கின்றாள். "சரி,அப்படியென்றால் ஒன்று செய்வோம், எனக்கு இந்த சால்வைகள் வேண்டாம், ஆளுக்கு ஒரு டாலர் தருகின்றேன், உங்களைப் போட்டோ எடுக்கட்டுமா" என்று சொல்லவும், அவளும் மகிழ்ச்சியாகத் தலையாட்டி விட்டு போஸ் கொடுக்கத் தயாராக நிற்கிறாள் (படத்தில் இடமிருந்து மூன்றாவது ஆள் தான் அந்தக் குறும்புச் சிறுமி). படம் எடுத்தாயிற்று, காசைக் கொடுக்கின்றேன். "எங்களுக்கு இன்னொரும் ஒரு டாலர் வீதம் கொடுத்து விட்டு, இன்னொரு முறை படம் எடுக்கலாமே" என்று அவள் மீண்டும் ஆரம்பிக்கிறாள். "அதற்கு நானோ, அடுத்த முறை வரும்போது பார்க்கலாம்" என்கிறேன். அவளோ கம்போடிய மொழியில் ஏதோ முணுமுணுக்க, நான் வழிகாட்டியைக் கேட்கின்றேன் என்ன சொல்கிறாள் இவள் என்று. அதற்கு அவர் "நீங்கள் மீண்டும் வருவீர்கள் என்று எனக்கெப்படித் தெரியும்" என்கிறாள். கோக் பானத்தின் நுரை வெளித்தள்ளச் சிரிக்கின்றேன்.

Saturday, October 25, 2008

இரண்டாம் ராஜேந்திர வர்மன் எழுப்பிய Pre Rup சிவனாலயம்


எனது முதல் நாள் பயண அனுபவங்களை இது நாள் வரை தந்திருந்தேன். அடுத்த நாளின் நான் பயணப்பட்டவை தொடர்கின்றன.

மார்ச் 16 ஆம் திகதி கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து என் வழிகாட்டிக்காகவும், வாடகைக்காருக்காகவும் காத்திருந்தேன். இன்று அங்கோர் நகரப்பகுதியைத் தவிர்த்த நீண்ட தூரப் பயணம் செல்ல வேண்டும் என்பதால் சூரியன் முழுமையான தன் பணியை ஆரம்பிக்கும் முன்னரேயே நாம் கிளம்பவேண்டும் என்று முதல் நாள் வழிகாட்டி சொல்லியிருந்தார். அத்தோடு தூரப் பயணத்துக்கும், கொழுத்தும் வெய்யிலைத் தாக்குப் பிடிக்கவும் ருக் ருக்கின் மெதுவான ஓட்டம் சரிவராது. வாடகைக் காரிலேயே பயணப்பது உகந்தது. ஆனாலும் ருக் ருக்கிலேயே சியாம் ரீப் நகரமெல்லாம் சுற்றி வரும் வெள்ளையரும் உண்டு.

வழிகாட்டியும், காரும் சரியான நேரத்துக்கு வரவும் தொடர்ந்தோம் எம் அடுத்த உலாத்தலுக்கு.
சியாம் ரீப் நகரின் மிகப் பெரும் வைத்தியசாலையான ஏழாம் ஜெயவர்மனின் ஆஸ்பத்திரியைக் கடந்து போகிறோம். நகரினைக் கடந்த புற நகர்ப்பகுதிக்குச் செல்லும் பயணம், பாதையின் இருமருங்கிலும் மாமரங்களின் தோட்டங்கள் வியாபித்திருக்கின்றன. மட்பாண்ட, பனையோலை, தென்னையோலை மூலம் கைவினைப் பொருட்களைச் செய்து பாதையின் இருமருங்கும் தம் வாழ்வாதாரத்தைத் தேடும் கடைகள் இருக்கின்றன.

இவையெல்லாம் கடந்து ஒரு குறுக்குச் சந்தால் தார் போட்டும் போடாது காயங்கள் உள்ள ரோட்டால் கார் பயணித்து புழுதியைக் கிளப்பியது. கொஞ்சம் மெதுவாகத் தன் ஓட்டத்தை நிறுத்திய போது எட்டிப் பார்த்தேன். வியப்பில் கண்கள் அகன்றன. காரணம் இதுவரை நமது பாரம்பரிய அமைப்பில் இல்லாத இந்து ஆலயங்களைப் பார்த்த எனக்கு முதன் முதலில் நம்மூர் கோபுரங்கள் கண்ணுக்கு முன்னால் நிற்க எழுந்தருளியிருக்கும் சிவாலயமான Pre Rup ஆலயம் முன்னே கம்பீரமாக எழுந்து நிற்கின்றது.

இந்த Pre Rup சிவனாலயம் இரண்டாம் இராஜேந்திர வர்மனால் கி.பி 10 ஆம் நூற்றாண்டின் பிற்பட்ட காலப்பகுதியில் அதாவது 961 or 962 ஆண்டில் எழுப்பப்பட்டது. முழுமையானதொரு சிவனாலயமாக விளங்கும் இவ்வாலத்தின் கட்டிடப் பாணியும் Pre Rup என்றே தொல்லியல் வல்லுனர்களால் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. செங்கல், சலவைக் கல் போன்றவை கட்டிட அமைப்புக்குப் பயன்பட்டிருக்கின்றன. சிறந்ததொரு கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டுக்களில் இதுவும் ஒன்று என்பதை அழிந்தும் அழியாத கோபுரமும், ஆலய அமைப்பும் காட்டுகின்றன. அத்துடன் ஆலய நுளைவு வாயிலும், சூழவுள்ள நகரத்தைப் பார்க்கும் வகையில் உயர்ந்து எழும்பியிருக்கும் மேற்பீடமும் சிறப்பானதொரு அமைப்பாக இருக்கின்றது. கோயில் முழுதுமே சித்திர வேலைப்பாடுகள் நிரம்பி வழிகின்றன. சிறப்பாக, சன்னல் தொகுதிகளின் சித்திர வடிவமைப்புக்கள் போற்றத்தக்கவை. முன்னர் நான் பார்த்திருந்த ஆலயங்களில் இருந்து வேறுபட்டு முழுமையானதொரு இந்திய ஆலயக் கட்டிடப் பாணியில் இது அமைந்திருப்பது வெகு சிறப்பு.

இந்த ராஜேந்திரவர்மன் என்ற மன்னன் மகேந்திரவர்மன், மகேந்திர தேவியின் மகனாகக் கொள்ளப்படுகின்றான். ராஜேந்திர வர்மனின் தளபதியாக இருந்த கவிந்திரவிமதன (Kavindravimathana) பெளத்த அமைச்சராகவும் கொள்ளப்பட்டிருக்கின்றான்.

இந்த ராஜேந்திரவர்மன் இறந்தபின் சிவலோகா(Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

மேலே படத்தில், ஈமைக்கிரிகைகள் செய்யும் சதுரக் கேணி

இந்த ஆலயத்தினை இறந்தவர்களுக்கான ஈமைக் கிரிகைகளைச் செய்யும் ஒரு இடமாகவே ஆதி தொட்டு மக்கள் கருதி வருகின்றார்கள். அதற்குச் சான்றாக ஆலயத்தின் முகப்பில் நீண்டதொரு சதுர வடிவக் குழி அமைத்து இருக்கின்றார்கள். என்னுடைய சுற்றுலா வழிகாட்டி சொன்னார் இந்தக் குழியில் வைத்தே சடலங்களுக்கான ஈமைக் கிரிகைகள் செய்து பின்னர் அவற்றை எரிக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது என்று. இருப்பினும் இந்தக் கோயில் இரண்டாம் இராஜேந்திர வர்மனின் சிறப்பு வழிபாட்டுக்குரிய நகரக் கோயிலாகவே இருந்திருக்கின்றது. ஆலயத்தின் மேல் உச்சியினை நோக்கிப் போகும் செங்குத்தான படிக்கட்டுக்களை நோக்கும் போது, இந்த அரசனைப் பல்லக்கில் தூக்கி எவ்வளவு கஷ்டப்பட்டு மேலே கொண்டு போயிருப்பார்களோ என்று என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஆலயத்தின் உச்சியை அடைந்ததும் உள்ளே எட்டிப் பார்த்தபோது மேலே படத்தில் இருக்கும் பூசைத் திரவியங்களை உட்புறத்தில் வைத்து வழிபடுகின்றார்கள் தற்போதய கம்போடியர்கள், இங்கேயும் புத்தர் வந்து சிவன் போய் விட்டார்.

ஆலயத்தின் மேல் உச்சியில் இருந்து எடுத்த முழு ஆலயத்தின் தோற்றம்

ஆலயத்தின் உள்ளே இருக்கும் சிற்ப மகளிர்


வரலாற்று ரீதியாக இவ்வாலயம் முக்கியம் பெறக் காரணம் இது அரசியல் ரீதியான கொந்தளிப்புக்கள் அடங்கி அங்கோரின் ராட்சியம் மீளவும் வந்தபோது எழுப்பப்பட்ட இரண்டாவது ஆலயம் இதுவாகும். இந்த ஆலயத்தின் உருவ அமைப்பு இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட East Mebon ஆலயத்தினை ஒத்திருக்கின்றது.

உசாத்துணை: கம்போடிய சுற்றுலாக் குறிப்புக்கள் மற்றும் தகவல்களை உறுதிப்படுத்த விக்கி பீடியா