Social Icons

Pages

Sunday, August 24, 2008

ஏழாம் ஜெயவர்மனின் Banteay Kdei ஆலயம்

அங்கோர் வாட் ஆலயம் சென்ற பதிவுகளைப் போட்டிருந்து பின்னர் சற்று இடைவெளி விட்டு கம்போடிய நடனம் கண்ட அனுபவத்தை போன பதிவில் எழுதியிருந்தேன். வாரம் ஒருமுறைக்காவது கடமையுணர்ச்சியோடு இப்பதிவுகளை எழுதி முடிக்கவேண்டும் என்ற அவா, சில பல காரணங்களால் தள்ளிப் போய் ஒருமாதமாகிவிட்டது. அடுத்த இரண்டு பதிவுக்காகவும் எடுத்த படங்களை தேர்வு செய்து வைத்துவிட்டேன் என்பதால் தொடர்ந்து தடங்கல் இருக்காது என்று நினைக்கின்றேன்.

அங்கோர் வாட் ஆலயம் சென்று சுற்றிப்பார்த்து மீளவும், நண்பகல் சூரியன் நடு உச்சியில் நின்று விக்ஸ் மருந்துக்கு வேலை வைத்தான். சுற்றுலா வழிகாட்டியுடன், காத்திருந்த ருக் ருக் வண்டிக்காரரையும் அழைத்துக் கொண்டு போய் மதிய உணவை எடுக்கப் போனேன். அங்கோர் வாட் ஆலயத்தினை ஒட்டிய சில நிமிடத் தூரத்தில் பெரியதொரு உணவகம் தென்பட்டது. சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து ஓலைகளால் வேயப்பட்டதொரு உணவகம் அது. என்னோடு சேர்ந்து ஒரே மேசையில் இருந்து சாப்பிடலாம் என்று நான் வழிகாட்டியையும், வண்டிக்காரரையும் வேண்டினேன். வழிகாட்டியோ "இப்படியான உணவகங்களின் தங்களுக்கென்று இன்னொரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கே சகாய விலையில் உணவைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே நீங்கள் மட்டும் போங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்" என்று சொல்லவும், இருவருக்குமான உணவுச் செலவுக்காக சில டொல்ர்களைக் கொடுத்தேன். அவர்கள் நகரவும், தனியே தன்னந்தனியே மேசையொன்றில் இருந்து உணவுப் பட்டியலைப் பிரித்தேன். தேடிப்பிடித்து எனக்குப் புழக்கமான உணவையும், பெப்சியையும் ஓடர் செய்தேன். கம்போடியாவில் உணவு விஷயத்தில் ரிஸ்க் எடுப்பது எவ்வளவு அபாயம் என்பதை பின்னர் ஒரு தனிப்பதிவில் சொல்கின்றேன்.

மதிய உணவு முடிந்து மீண்டும் எங்கள் தல யாத்திரை தொடர்ந்தது. அடுத்து நாம் சென்ற ஆலயம் பன்டே கெடே( Banteay Kdei ). இது கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 13 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்துக்கும் இடையில் எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஏழாம் ஜெயவர்மனால் (Jeyavarman VII) இவ்வாலயம் எழுப்பப்பட்டது. முழுமையானதொரு பெளத்த ஆலயமாக விளங்கும் இவ்வாலயம் Angkor Wat/Bayon என்ற கட்டிடக் கலை அமைப்பில் அடங்குவதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.


இந்த Banteay Kdei ஆலயம் ஏழாம் ஜெயவர்மனால் எழுப்பப்பட்ட ஆலயமான Ta Prohm இற்கு தென்கிழக்காகவும், அதே மன்னனால் எழுப்பப்பட்ட Angkor Thom இற்கு கிழக்கு முகமாகவும் அமைந்திருக்கின்றது. Banteay Kdei என்றால் "Citadel of the Cells" என்ற பொருள்படும்.
நான் இனிமேல் தரப்போகும் Ta Prohm என்ற ஆலயத்தின் வடிவமைப்பை ஒத்ததாக இது சொல்லப்படுகின்றது. இதனை ஆலயம் என்று வகுப்பதை விட, ஏழாம் ஜெயவர்மனால் பெளத்த சன்னியாசிகளுக்காக உருவாக்கப்பட்ட மடாலயம் என்று கூறினால் இன்னும் பொருத்தமாக இருக்கும். ஆலயமுகப்பிலேயே பெளத்த சன்னியாசிகள் தங்கும் பர்ணசாலை அமைந்துள்ளது.
முன்னொரு காலத்திலே ஆலயச் சூழல் சிறப்பாக இருந்தது என்பதற்கு அடையாளமாக வரண்டு பள்ளமான பெரியதொரு நீர்ச்சுனையின் சுவடு தெரிகின்றது. அடந்த சோலைகளின் மத்தியிலே, தற்சமயம் இவ்வாலயத்தைச் சூழ எந்தவொரு குடியிருப்புக்களும் இல்லாத பகுதியாக இருக்கின்றது.

Banteay Kdei ஆலயத்தைப் பொறுத்தவரை Bayon என்ற சிக்கலான கட்டிடக்கலையைப் பயன்படுத்தியிருப்பது அழிந்தாலும் சிதைந்தாலும், இப்போதும் எஞ்சியிருக்கும் கட்டிட அமைப்பு உறுதிப்படுத்துகின்றது. கட்டிடத்தின் உள்ளமைப்பைப் பொறுத்தவரை சலவைக்கல்லை உபயோகித்து வடிவமைத்திருந்தாலும், கட்டும்போது பயன்படுத்தப்பட்ட கட்டிடக்கலைத் தொழில்நுட்பம் மிகவும் பலவீனமானது என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்போது சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து கம்போடியாவின் அழிந்துபோன ஆலயங்களைப் புனரமைத்துக் காட்சிப் பொருளாக்கும் தோரணையில் இந்தக் கட்டிடத்தையும் புனர்நிர்மாணம் செய்து வருகின்றார்கள். அதற்கு அடையாளமாக உள்பகுதியில் உள்ள சில வாசல்கள் அடைக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டியிருக்கின்றது. பொதுவாகவே கம்போடிய ஆலயங்களின் நுளைவாயிலில் இருமருங்கிலும் நாக தலை பொருந்திய வாயிற்புறங்கள் இருக்கும். அவை மூன்று, ஐந்து, ஏழு என்று இடத்துக்கிடம் வித்தியாசப்பட்டிருக்கும். இதில் ஒரு சுவையான தகவல் என்னவென்றால் மூன்று அல்லது ஐந்து தலை நாகம் உள்ள வாயில்கள் இந்துக் கோயில்களாகவும், ஏழு தலை நாகம் உள்ள கோயில்கள் பெளத்த கோயில்களாகவும் கணிக்கப்படுகின்றன.
மேற்படம்: ஆலய உள்ளமைப்பில் இயற்கையாகவே வெளிச்சம் வருவதற்காக குடைந்துருவாக்கப்பட்ட அடுக்குகள்.
மேற்படம்:ஆலயத்தின் பின் பக்க வாசல் ழாம் ஜெயவர்மனைப் பொறுத்தவரை ஆலயங்களை எழுப்பி ஆலயத்தை தன் தாய், தந்தை, தனக்காக அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது. அதுபற்றிய உதாரணக் கோயில்கள் பின்னர் வரும். ஆனால் Banteay Kdei ஆலயம் இவனால் யாருக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்ற விபரம் இதுவரை தெளிவாக்கப்படவில்லை.

ஆலயத்தின் சீரற்ற கட்டிட அமைப்பு ஒருபக்கம் இருக்க, பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதங்களுக்கிடையிலான பிணக்குகளால் அழிவுற்ற ஏழாம் ஜெயவர்மன் ஆலயங்களுக்கு உதாரணமாக இந்த Banteay Kdei ஆலயத்தில் ஏற்படுத்தப்பட்ட சேதங்களும் சான்று பகிர்கின்றன.

நன்றி: என்னோடு கூடவே வந்து தகவல்களை அளித்த வழிகாட்டி மற்றும் கம்போடிய சுற்றுலா வழிகாட்டிக் குறிப்புக்கள்.

Friday, July 25, 2008

கம்போடிய நடனம் கண்டேன்...!


அங்கோர் வாட் ஆலயம் சென்று மதிய உணவின் பின் சென்ற ஆலயங்கள் குறித்து தொடர்ந்து தராமல் அன்று மாலை நான் கண்டுகளித்த கம்போடிய கலாச்சார நடனங்கள் குறித்த பதிவாகத் தருகின்றேன். காரணம் இந்த நாட்டில் கோயில்கள் தவிர இவ்வாறான கலாச்சார அம்சங்களைப் பார்க்கும் வாய்ப்பும் அதிகம் உண்டு என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டிய கடமையில் இருக்கின்றேன்.

மார்ச் 15, 2008 அன்று மாலை ஐந்தைத் தொடவும், பெரும்பாலான கோயில்களைப் பார்த்த களைப்பும், கடும் வெயில் கொடுத்த அயர்ச்சியும் ஒரு சேர, ஹோட்டலுக்கு போனதும் குளித்து விட்டு கட்டிலில் சாயவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் ஏற்கனவே அன்று காலையில் நட்புப் பாராட்டிய ஹோட்டல் வரவேற்பாளினி ஆர்வமாக
"நீங்கள் இன்றிரவு கம்போடிய கலாச்சார நடனம் பார்க்கப் போகிறீர்களா?"
என்று கேட்கவும், களைப்பெல்லாம் கலைந்து போய் ஆமாம் போட்டேன்.
"சரி, ஆறு மணிக்கு ருக் ருக்குக்கு (tuk-tuk) (மனித ரிக்க்ஷா) ஏற்பாடு செய்கிறேன், குளித்து விட்டுத் தயாராக இருங்கள் என்றாள்.

நானும் மீண்டும் குளித்து முடித்து, ஒப்பனை செய்து வரவேற்பறைக்கு வரவும், ருக் ருக் தயாராக இருந்தது. "ஒரு அமெரிக்க டொலர் கொடுங்கள் போதும்" என்று சொல்லி வரவேற்பாளினி ருக் ருக்கை (tuk-tuk) கைகாட்டவும், வாகனத்தில் அமர்ந்தேன். கம்போடியாவின் நாணய அலகு படு பாதாளத்தில் போவதால் எல்லாமே அமெரிக்க டொலர் ஆக்கிவிட்டார்கள். ஒரு நியாயக் கணக்குப் படி பத்து, பதினைந்து நிமிட எல்லைக்குள் ஒரு டொலரால் சவாரி செய்யலாம்.

Koulen 11 Restaurant என்னும் பெரியதொரு உணவுச்சாலைக்கு வந்து நின்றது ருக் ருக். உள்ளே போகிறேன். ஏற்கனவே எனது ஹோட்டல் வரவேற்பாளினி எனக்கான ரிக்கட்டை Buffet உணவுடன் 12 அமெரிக்க டொலரில் பதிவு பண்ணி எனக்குக் கொடுத்திருந்தாள். மென்பானமோ, கடும் பானமோ எடுத்தால் அவற்றுக்குத் தனிக்கட்டணம். இவ்வாறான உணவுச்சாலைகளில் முன் கூட்டியே எமது இருக்கையைப் பதிவு பண்ணியிருக்க வேண்டும். இந்த உணவகம் மட்டுமன்றி கம்போடியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய உணவகங்களும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் வாரத்தின் சில நாட்கள் இரவு Buffet உணவு வகையறாக்கள் நிரப்பி இப்படியான கம்போடியக் கலாச்சார நடனக் காட்சிகளை ஒழுங்கு செய்திருக்கிறார்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அதே நடனக் காட்சி நுழைவுச் சீட்டு முன்னூறு டொலர் வரை போகும்.

இரவு உணவுகள் பரப்பி வைக்கப்பட்ட பகுதியில் எனக்கான உணவை எடுத்துக் கொண்டு என் இருக்கையில் அமர்கின்றேன். நிண்ட நெடிய பரப்புக்கு இப்படி மேசை, கதிரைகள் போட்டு முன்னே பெரும் அரங்கத்தில் கம்போடிய நடனக் காட்சி அரங்கேற இருக்கின்றது. கிட்டத்தட்ட ஐநூறு பேர் சமகாலத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு இந்த உணவகத்தில் இருக்கின்றது.
எனக்கு ஒரு ஓரப்பக்க ஆசனம் கிடைத்தது. மிகவும் முன்னே கிடைத்தால் புகைப்படம் எடுக்கவும் சிறப்பாக இருக்குமே என்று நான் முணுமுணுத்துக் கொள்ளவும்,
"மன்னிக்கவும், உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் நானும் கணவரும் முதல் இருக்கையில் பதிவு வைத்திருக்கிறோம், அதில் நீங்கள் போய் உட்கார்ந்தால், நானும் கணவரும் இங்கே இருக்கலாம்" என் மெளன முணுமுணுப்பைக் கலைத்தவாறு ஒரு நடுத்தர வயது வட இந்திய மங்கை. ( நான் முணுமுணுத்தது எப்படிக் கேட்டது இவருக்கு ;-)
"பிரச்சனையில்லை நீ இங்கே வா" அவளின் கணவன் முன் ஆசனத்தில் இருந்தவாறே தொலைவில் என்னோடு பேசிய மங்கையை அழைத்தான்.

கூட்டம் மெதுமெதுவாகச் சேர்ந்து கோயம்பேடு ஆக இரைச்சல் வரவும், அதைக் கலைக்க மைக்கில் இருந்து "இதோ நீங்கள் கண்டு களிக்கவிருக்கும் கலாச்சார நடனம் ஆரம்பமாகிறது" என்று ஆங்கிலத்தில் அறிவிப்பு வந்தது, அப்போது நேரம் இரவு 7.30. திரைச் சீலை விலக, கம்போடிய இளம் கன்னி அப்சராவாக மேடையிலே தோன்றி வெள்ளை மலர் தூவி வரவேற்பு நடனம் கொடுக்கின்றாள். மெல்ல மெல்ல ஒவ்வொரு கன்னிகையரும் மலர்க் குவளைகளோடு மேடையில் தோன்றி அந்த நடனத்ததோடு இணைகின்றார்கள். தாய்லாந்தும், இந்தியாவும் சேர்ந்து செய்த கலவையாக அந்த அழகுப் பதுமைகள் இருக்கின்றார்கள். அடுத்து உழவுப் பாட்டு, கம்போடியா ஓர் விவசாய நாடாக இருக்கும் காரணத்தால் அங்கே தமிழகத்தில் இருக்கும் நாற்று நடவுப் பாடலில் இருந்து, அரிவி வெட்டும் பாடல்கள் வரை உண்டு என்பதற்குச் சான்றாக அந்த முழு உழவுப்பாடலும், நடனமும் கம்போடியக் கன்னியரும் காளையரும் சேர்ந்து கலக்க ஆடப்படுகின்றது. திரைச்சீலை மறைப்பில் இருந்து கொண்டே கம்போடிய பாரம்பரிய வாத்தியங்களைச் சிலர் வாசிக்கப் அந்த நடனங்களுக்கான பிற்பாட்டுப் பாடும் கூட்டமும் மேடையில் இருக்கின்றது. கம்போடிய மொழிப்பாடலும் இசையும் தான் இதை வேறுபடுத்துகின்றதே ஒழிய, அந்த நாட்டியம் அசல் இந்தியக் கிராமிய நடனத்தை ஒத்திருந்தது.

அந்த நடனத்தில் உழவன் ஒருவனுக்கும் உழத்தி ஒருத்திக்கும் வரும் காதலும் அமைகின்றது. வெட்கம், நாணம், குறும்பு, சீண்டல்,ஊடல், கூடல் எல்லாமே அந்த நடனக்காட்சியில் தீனி போடப்படுகின்றது.மிகவும் நளினமாக, எந்தவித செயற்கையும் விழுந்துவிடாது அந்தக் காட்சியை அமைத்திருந்தது சிறப்பாக இருந்தது.

அடுத்து வருகின்றது மீனுக்கும் அனுமானுக்கும் வரும் போட்டி நடனம். இது கம்போடியர்கள் பின்பற்றும் இராமாயணக் கதையாக அமைந்திருக்கின்றது. அதாவது இராமரின் பாலத்துக்கு வானரங்கள் உதவுகின்றன அல்லவா. அப்போது அதைத் தடுத்துப் பாலத்தை அடிக்கடி உடைக்க வருகின்றது ஒரு பெண் மீனினம். உடனே அந்த மீனின் மனதை மாற்ற அனுமார் முயல்கின்றார். எல்லா வழியும் செய்து பார்த்தும் எல்லாமே பயனற்றுப் போகவும், இறுதியாக அந்த மீனையே தன் காதல் வலையில் வீழ்த்தி அனுமார் மணம் முடித்து, இராமர் பாலம் கட்டும் திட்டத்தை நிறைவேற்றுக்கின்றார். அதையே பாடலும், காட்சியுமாக அழகாகக் காட்டுகிறார்கள், மீன் வடிவம் கொண்ட ஜோடனையில் பெண்ணும், அனுமார் முகவுருவில் வரும் ஆணும். ஆரம்பத்தில் அணையைத் தடுக்கும் மீனின் சேஷ்டைகளையும், பின்னர் அனுமான் வந்து மீனை மயக்குவதையும் அழகாக ஆடிக்காட்டினார்கள். பின்னணியில் இருப்போர் கம்போடிய மொழியில் விளக்கப்பாடலை இசையுடன் பாடினார்கள்.

பின்னர் என் சுற்றுலா வழிகாட்டியிடம் இதைப் பற்றி விபரம் கேட்டபோது, அந்த மீன் இராவணனின் மகள் என்றும், இராவணனுக்கு எதிராகப் போரிடப்போகின்ற இவர்களின் பாலத்தைத் தகர்க்கவேண்டும் என்ற முனைப்போடு அது செயற்பட்டதாகவும், பின்னர் அனுமானின் காதலில் விழுந்து அம்மீன் இந்த முயற்சியில் இருந்து விலகுவதாகவும் ஒரு விந்தையான கதை கம்போடிய வழக்கில் இருப்பதாகவும் சொன்னார்.
அடுத்து வருகின்றது இன்னொரு பாரம்பரிய நடனம். தேங்காய்ச் சிரட்டைகளை (கொட்டாங்குச்சி) ஆளுக்கு இரண்டாக வைத்துக் கொண்டு ஒலி எழுப்பிவாறே பாடி ஆடும் நடனம் அது.

நிறைவாக அப்சரா நடனம் நடக்கின்றது. தோழியர்கள் புடைசூழ அப்சரா வருகின்றாள். தோழியர்கள் எல்லோருமே அழகுப் பதுமைகளாக, அப்சராக்களாகத் தான் இருக்கின்றார்கள். இப்படியான கலாச்சார நடனம் ஆடுவது எல்லோராலும் சாத்தியமில்லையாம். இதற்கான அரச அமைப்பு ஒன்று இருக்கின்றதாம். அங்கே பதிவு பண்ணி முறையான பயிற்சியை அங்கேயே பெற்றுக் கொள்ள வேண்டும். அப்சரா என்னும் தேவதைப் பெண்ணுக்கு உருவ அமைப்பிலும், நடன இலாவகத்திலும் உரிய லட்சணங்கள் இருந்தால் தான் அந்த உயர் பெண்ணாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்களாம்.

இந்த நடனங்களை ஆர்வத்தோடு பார்த்தவாறே, விழுந்தடித்துப் படம் பிடிக்கும் கூத்தை எனக்கு அருகாமையில் இருந்த ஒரு வயதான அமெரிக்கத் தம்பதி வேடிகையோடும், நட்போடும் பார்த்து, என்னை அன்பாக விசாரித்தார்கள். தாங்கள் அமெரிககவின் கொலராடோ பகுதியில் இருந்து வந்திருப்பதாகவும், தங்களின் இனிய பயண அனுபவங்களையும் சொல்லி மகிழ்ந்தார்கள் Barry & Caroline தம்பதியினர். "உன்னைச் சந்தித்தது மிகப் பெரிய சந்தோசம், மிகவும் பணிவான பையனாக இருக்கிறாயே" என்று என் கையை இறுகப் பிடித்துச் சொல்லி விட்டு " உன் எதிர்காலம் நன்றாக அமையட்டும், தொடரும் பயணம் சுகமாக இருக்கட்டும்" என்று வாழ்த்தித் தன் கணவரோடு விடைபெற்றார் கரோலின். எனக்கு என் அம்மம்மாவின் ஞாபகம் வந்து கண்கள் பனித்தது.

இரவு ஒன்பது மணிவாக்கில் அந்தக் கலாச்சார நடன விருது கலைந்தது. நடனமாதுக்களோடு சேர்ந்து புகைப்படம் எடுக்க வெள்ளையர் கூட்டம் மேடையை நோக்கி விரைகின்றது. நமது நாட்டின் பாரம்பரிய நடனங்களையும் இவ்வாறானதொரு வகையில் வெளிநாட்டவருக்கும், நம் அடுத்த சந்ததிக்குக்கும் காட்டினால் நம் நாட்டுப்புறக்கலைகள் அழியாமல் தொடருமே என்ற ஆதங்கத்தோடு என் தங்குமிடம் நோக்கி இன்னொரு ருக் ருக்கில் பயணித்தேன்.

Sunday, July 20, 2008

Angkor Wat இல் எஞ்சிய சில...!

கடந்த சில பகுதிகளில் அங்கோர் வாட் ஆலயம் குறித்த விரிவான பதிவுகளும், படங்களும் இடம்பிடித்திருந்தன. அங்கு எடுத்திருந்த படங்களில் சில ஏற்கனவே வந்த பதிவுகளில் இடம்பிடிக்காத காரணத்தால் அவற்றையும் இங்கே கொடுத்து அங்கோர் வாட் ஆலயம் குறித்த பகுதியை நிறைவு செய்து அடுத்த பகுதிக்குப் போகலாம் என்றிருக்கின்றேன்.

அங்கோர் வாட் ஆலயத்தின் சுவர்களில் இதிகாசக் கதைகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவை சிற்பங்களாக நீண்ட நெடிய சுவர்களில் வடிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இராமாயணக் கதை, குருஷேத்திரப் போர் (மகாபாரதக் கதை) போன்றவற்றின் காட்சி வடிவங்கள். அதிலும் குறிப்பாக எத்தனை பேர் இந்தப் போரில் இருந்தார்களோ அவ்வளவு போர் அணிகள், படைக்கலன்கள் போன்றவற்றை நீண்ட தூரச் சிற்பவேலைப்பாடாக அமைத்திருக்கின்றார்கள்.


இன்னொரு முக்கியமான சிற்பவேலைப்பாடாக அமைவது, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த வரலாறு. இது சியாம் ரீப் நகரத்தின் பல பாகங்களிலும் முக்கியமான சிற்ப வேலைப்பாடாக இருக்கின்றது, அங்கோர் நகரம் எனப்படும் சியாம் ரீப் நகரத்தின் நுளைவு வாயிலின் இருமருங்கிலும் நீண்ட தூரத்திற்கு பெரும் சிலை உருவங்கள் வாசுகி என்னும் மலைப்பாம்பைப் பிடித்தவகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆலயம் மட்டுமன்றி பெரும்பாலான ஆலயங்களில் இருக்கும் விக்கிரகங்கள் அழிக்கப்பட்டோ, களவாடப்பட்டோ, சிதைக்கப்பட்டோ இருக்கும் அவலம் தான் எங்கும் காணமுடிகின்றது. இரு மதங்களுக்கிடையிலான போர் என்பதை விட நான் முன்னர் குறிப்பிட்டது போன்று போல் பொட் என்னும் சர்வாதிகாரியால் தோற்றுவிக்கப்பட்ட மத விரோத அமைப்பான பொல்பொட்டின் (Pol Pot) க்மருச் அமைப்பின் கம்யூனிசக் கொள்கையால் இவ்வாறான ஆலயங்களின் தூண்களிலும், சுவர்களிலும், சிற்பங்களிலும், சிலைகளிலும் துப்பாக்கிச் சன்னங்களின் காயங்கள் தெறித்திருக்கின்றன. சிற்பங்களின் முகங்களை வாளால் அரிந்திருக்கின்றார்கள். குறிப்பாக அப்சரா என்னும் தேவதைகளின் விதவிதமான அரிய சிற்ப வேலைப்பாடுகள் உருக்குலைந்து நிற்கின்றன.

பொல் பொட்டின் படையணிகளால் விளைந்த துப்பாக்கிச் சன்னத் தெறிப்பு

வியட்னாம் படைகளோடு பொல்பொட்டின் படைகள் போரிட்டபோது, ஒருகட்டத்தில் தாக்குப்பிடிக்கமுடியாமல் இவ்வாறான காடுகளுக்குள் மறைவாக இருந்த ஆலயங்களுக்குள் தான் தஞ்சம் புகுந்திருந்து தான் போரிட்டும், தங்களைப் பாதுகாத்தும் வாழ்ந்திருக்கின்றார்கள்.

இப்படியான ஆலயங்களுக்கு வந்த இன்னொரு ஆபத்து, இந்த நாட்டைத் தமது காலணியாக வைத்திருந்த பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து வந்தது. கம்போடியாவில் இருந்த இவ்வகையான ஆலயங்கள் புதர்களுக்குள் தொலைந்து போய் இருப்பதைக் கண்ட பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக Henri Mouhot என்ற பிரெஞ்சு ஆய்வாளரின் கண்டுபிடிப்புக்களின் பிரகாரம் அவை அகழப்பட்டதோடு மட்டும் நின்றுவிடாது, இந்த ஆலயங்களின் முக்கிய கேந்திரங்களில் இந்து மதச் சடங்கின் அடிப்படையில் புதைக்கப்பட்ட தங்க, வைர ஆபரணப் புதையல்களைச் சூறையாடினார்கள். புத்த விக்கிரங்களின் தலையைக் கொய்து அவற்றைத் தம் நாட்டுக்குக் கொண்டு போனார்கள். இன்றும் வெளிநாடுகளில் அலங்காரப் பொருளாக விற்கப்படும் கழுத்துக்கு மேல் உள்ள புத்தர் சிலைகள் இவ்வாறான களவாடல் மூலமே விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டவை.

உலகப் புகழ்பெற்ற இந்த அங்கோர் வாட் ஆலயத்தின் புராதனமும், பிரமாண்டமும் கம்போடிய நாட்டின் இருண்ட காலத்தில் நடந்த உள் நாட்டுப் போர்களால் வெளியுலகுக்கு அதிகம் தெரியாமல் போயிற்று. அதன் சிறப்பனை உணர்ந்து இப்போது ஆண்டுக்குப் பல்லாயிரம் வெளிநாட்டுப் பயணிகள் வந்து குவிகின்றனர். யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்புக்கள் பாதுகாப்புக் குடை பிடிக்க, தன்னார்வலர்கள் பலர் இந்த ஆலயத்தைப் பேணும் நோக்கோடு பணியாற்றி வருகின்றார்கள். அங்கோர் வாட் ஆலயத்தைக் கண்ட திருப்தியில் மெல்ல வெயிற்களைப்பும், பசிக்களைப்பும் சேர அங்கிருந்து நகர்கின்றேன். நண்பகலைக் கடக்கின்றது சூரியன்.

Thursday, July 10, 2008

கம்போடியாவில் நிலவிய தெய்வ வழிபாடு

அங்கோர் வாட் தொடர் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடராமல் இழுபட்டுக் கொண்டிருக்கின்றது. வாரம் ஒரு பதிவாவது எழுதி இந்தத் தொடரை நிறைவாக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு மீண்டும் தொடர்கின்றது.

கம்போடியாவில் எவ்வகையானதொரு மத வழிபாடு பின்பற்றப்பட்டது என்பதற்குச் சாட்சியமாக நிலைத்திருக்கின்றது அங்கோர் வாட் கோயில். இரண்டாம் சூரியவர்மன் கம்போடியாவின் மிகமுக்கியமானதொரு அரசனாகக் கொள்ளப்படுகின்றான். காரணம் அவன் ஆட்சியில் மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon)/பர்மா (Burma) தெற்கு மலாய் தீபகற்பம் (Malay Peninsula) ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான். இவற்றைப் பற்றி முன்னரும் கம்போடிய மன்னர்கள் பற்றிய அறிமுகத்தில் கொடுத்திருந்தேன்.

இரண்டாம் சூர்யவர்மன் ஓர் விஷ்ணு பக்தனாக இருந்திருக்கின்றான். எனவே இந்த அங்கோர் என்ற மாபெரும் ஆலயமும் ஒரு விஷ்ணு கோயிலாகவே அவனால் அமைக்கப்பட்டிருக்கின்றது. கூடவே மகாபாரதப் போர், இராமாயண யுத்தம் போன்ற இதிகாசபுராணக் கதைகளையும், தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த வரலாற்றையும் ஆலயத்தின் மிக நீண்ட சுற்றுமதில்கள் தோறும் அமைத்து முழுமையானதொரு விஷ்ணு வழிபாட்டின் கூறாகவே இவ்வாலயம் திகழ்ந்திருக்கின்றது. இவனது இந்தப் பெரும் திருப்பணி காரணமாகவே இவன் இறந்த பின் பரமவிஷ்ணுலோக (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான். எனவே கி.பி 1113 - 1150 ஆண்டு வரை ஆட்சியாளனாகத் திகந்த சூர்யவர்மன் தீவிரமிக்க விஷ்ணு பக்தனாகத் திகழ்ந்தான் என்பது ஐயமுறத் தெரிகின்றது.

மேலே இருக்கும் படம் அங்கோர் வாட் ஆலயத்தின் உட்புறம் இருக்கும் தீர்த்தமாகும். அதை எனது சுற்றுலா வழிகாட்டி இந்தியாவில் இருக்கும் "கெஞ்சி" தீர்த்தத்துக்கு நிகரானது என்றார். எனக்குப் புரியவில்லை. மீண்டும் மீண்டும் கெஞ்சி, கெஞ்சி என்று அவர் சொன்னபோது அது காசி புனித தீர்த்தமாக இருக்கலாம் என்று நான் முடிவு செய்து கொண்டேன். அதற்குக் காரணமும் இருக்கின்றது. திறந்த, கூரையற்ற இந்தத் தீர்த்தம் மழை நீரைத்தேக்கி வைத்திருக்கவல்லது. அவ்வாறு தேங்கும் இந்த நீர் புனித நீராகக் கருதப்பட்டு, இறந்தோருக்கான பிதிர்க்கடனைச் செலுத்தும் தீர்த்தமாடமாகவும் கொள்ளப்பட்டிருக்கின்றது எனது சுற்றுலா வழிகாட்டி சொன்ன மேலதிக செய்தியே காரணமாகும்.

மேலே இருக்கும் படத்தில் உடைந்த சிலைகளின் சிதைவுகளைக் கற்குவியல் விக்கிரகங்களாக அமைத்து வைத்த கைங்கர்யத்தைச் செய்தவர்கள் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் என் வழிகாட்டி. அங்கோர் வாட் ஆலயத்துக்கு வரும் இந்த ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்த்த நேரம் போக, மீதமுள்ள நேரத்தில் இப்படி வேடிக்கையாகச் செய்த வேலையே அது.


மேலே இருக்கும் படம் அங்கோர் வாட் ஆலயத்துக்கு அருகில் இருக்கும், தற்போது வழிபாட்டில் உள்ள புத்த ஆலயமும், பர்ணசாலையும் ஆகும். அழிவில் அகப்பட்டிருக்கும் அங்கோர் வாட் ஆலயத்தின் உள்ளும் இந்த நாட்டு மக்கள் மற்றும் வருகை தரும் தாய்லாந்து நாட்டவர் உள்ளே உள்ள புத்த விக்கிரகங்களுக்குத் தம் வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அங்கோர் (Angkor) என்பதற்கு நகரம் என்றும் வாட் (Wat) என்பதற்கு ஆலயம் என்றும் சொல்லப்படுகின்றது. என்னுடன் வந்திருந்த சுற்றுலா வழிகாட்டியின் கருத்துப்படி வாட் (Wat)என்பது பிற்காலத்தில் இந்த ஆலயம் ஒரு பெளத்த ஆலயமாக மாற்றிய பின்னர் ஒட்டிக் கொண்ட சொல் என்றும் சொல்கின்றார்கள்.இன்று கம்போடிய தேசிக் கொடியின் மத்தியில் நடுநாயகமாக விளங்கும் அளவுக்கு இந்த அங்கோர் வாட் ஆலயம் புகழ்பூத்திருக்கின்றது. இந்த ஆலயம் விஷ்ணு பகவானை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தாலும் சிவனுக்கும் தகுந்த முக்கியத்துவம் கொடுத்திருப்பதை சிவனின் புராண வெளிப்பாடுகளாக இருக்கும் சிற்பவேலைப்பாடுகள் சான்று பகிர்கின்றன. சிவலிங்கத்தினை வித விதமான அளவுகளில் நிர்மாணித்திருக்கின்றார்கள். இந்த அங்கோர் வாட் ஆலயம் தவிர விஷ்ணு ஆலயங்களுக்குக் கொடுத்த அதே முக்கியத்துவத்தைச் சிவனாலயங்களுக்கும் வழங்கிச் சிறப்பித்திருக்கின்றார்கள். இன்றும் சிவா என்று அடையாளமிட்டு சிவனைத் துதிக்கின்றார்கள் இம்மக்கள்.சக்தி, இந்திரன், சூரியன் போன்ற கடவுளர்களை சிறு தெய்வ வழிபாடாகவும் வழிபட்டு வந்திருக்கின்றனர்.


வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும் போது ஆட்சியாளர்கள் தம்மை வழி நடத்திய மதக்குருமாரின் வழிகாட்டலிலும், பல்வேறு விதமான அனுபவங்கள் மூலமும் மதமாற்றத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதை நாம் காணலாம். அது தான் கம்போடியாவிலும் நடந்திருக்கின்றது. பிற்காலத்தில் பெரும் புகழோடு இருந்த ஏழாம் ஜெயவர்மன் ஒருமுறை சியாம் நோக்கிய படையெடுப்பில் காணாமல் போகின்றான். அவனது மனைவி ஜெயதேவியின் சகோதரி இந்திரதேவி பெளத்தமதத்தைப் பின்பற்றியதோடு, பிரச்சாரகியாகவும் திகழ்ந்தவள். மன்னன் ஜெயவர்மனை நீண்ட நாட் காணாத துயரில் இருந்த இந்திரதேவியை பெளத்த மதத்துக்கு மாறும் படியும், அதன் மூலம் தொலைந்த மன்னனையும், அமைதியையும் மீளப் பெறலாம் என்றும் இந்திரதேவி தன் சகோதரியும் மகாராணியுமான ஜெயதேவிக்குச் சொல்லவும் அவள் பெளத்த மதத்திற்கு மாறுகின்றாள். ஆனால் மீண்டும் ஜெயவர்மன் நாடு திரும்புவதற்கிடையில் மகாராணி ஜெயதேவி இறக்கின்றாள். அவளின் சகோதரி இந்திரதேவியை இரண்டாம் தாரமாக மணமுடித்த ஜெயவர்மனும் பெளத்தமதத்தைத் தழுவுகின்றான். ஏழாம் ஜெயவர்மன் காலத்தில் 121 தங்குமிடங்கள் (Rest houses)102 வைத்தியசாலைகள் ஆகியவையும் கட்டப்பட்டனவாம். இவன் காலத்தில் மகாஜன பெளத்தம் என்ற பிரிவே பின்பற்றப்பட்டது. இவன் இறந்த பின் மஹாபரம செளகத (Mahaparama saugata) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டான்.

இப்படியான மன்னர்களின் மதமாற்றம், மன்னன் எவ்வழி குடிகளும் அவ்வழி என்ற பாங்கில் அந்த நாட்டு மக்களின் பெளத்த மதமாற்றத்துக்கும் துணை புரிந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் இந்து மத விழுமியங்களைக் கைக்கொண்டு பெரும்பான்மையாக வாழ்ந்த சமூகம் இன்று 95 விழுக்காடு கொண்ட பெளத்த மதத்தைப் பின்பற்றும் சமூகமாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் மகாஜன பெளத்தம் என்ற பிரிவே இந்தக் கம்போடிய நாட்டு மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது. (மகாஜன மெளத்தம் இப்போதும் சீனா, பூட்டான், வியட்னாம், ஜப்பான், கொரியா, தாய்வான் போன்ற நாடுகளில் பெருமளவு பின்பற்றப்படுகின்றது)ஆனால் இன்றுள்ள கம்போடியாவில் தேரவாத பெளத்தம் என்ற பிரிவே பின்பற்றப்படுகின்றது. இந்தத் தேரவாத பெளத்தமே இலங்கை, பர்மா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. கம்போடியாவிற்கு அருகருகே மகாஜன பெளத்தம் நிலவும் வியட்னாமும், தேரவாத பெளத்தம் நிலவும் தாய்லாந்தும் இருந்தாலும், இந்தக் கம்போடியர்கள் தேரவாதத்தை தழுவிக் கொண்டதில் இருந்து சியாம் என்ற தாய்லாந்தின் ஆதிக்கம் மத ரீதியாகவும் கம்போடியாவை ஆட்கொண்டிருப்பதாக உய்த்து உணரலாம்.

என்னதான் பெளத்த மதத்தை இடையில் தழுவிக் கொண்டாலும், இன்றும் காய்ச்சல், பேதி என்று சின்ன சின்ன நோய்களில் இருந்து பெரும் வியாதிகள் வரை வந்து விட்டால் "சிவனே கதி" என்று அடைக்கலமாகி விடுவார்கள் இம்மக்கள். இன்றைய நவீன யுகத்திலும் ஒரு காலத்தில் விட்டொழித்த சமயச் சடங்குகளையும், தீவிரமான நேர்த்திக் கடன்களையும் இவர்கள் தொடர்வதைச் சொல்லி வைக்க வேண்டும். அதை ஒரு வேடிக்கைக் கதையாகச் சொன்னார் என் வழிகாட்டி. அதாவது இந்தக் கம்போடிய மக்கள் ஆங்கில மருந்து வகைகளை நம்பாமல், கொடிய நோய்கள் வந்தால் கூட நேர்த்திக் கடன் செய்கிறார்களே என்று இந்த நாட்டு அரசாங்கம் தொலைக்காட்சியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்கின்றதாம். அதில் தீராத நோயினால் நேர்த்திக் கடன் செய்ய வரும் பக்தன் முன் கடவுள் தோன்றி, ஆங்கில மருந்துக் குளிகைகளைக் கொடுப்பதாகக் காட்டுகின்றார்களாம். முக்கியமான அரச வைபவங்கள், திருமணச் சடங்குகள், மரணச் சடங்குகள் எல்லாமே இந்து மதம் சார்ந்த பண்பாட்டிலேயே நிகழ்கின்றன. சித்திரை மத்தியில் வரும் சித்திரைப் புத்தாண்டையும் தம் புத்தாண்டாகவே இன்னமும் கைக் கொள்கின்றார்கள்.

விஷ்ணு ஆலயமாக இருந்த இந்த அங்கோர் வாட் இப்போது இந்து மத விக்கிரகங்கள் ஓரம் கட்டப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டு, புதிதாக முளைத்த புத்தர் சிலைகளோடு இருக்கின்றது,
இந்த ஊர் மக்களின் மன(மத)மாற்றம் போலவே.....

Friday, June 27, 2008

கேள்வியும் நானே பதிலும் நானே ;-)


நம்ம கண்ணபிரான் ரவிசங்கர் (KRS) தன் மாதவிப் பந்தலில் பகிரங்கக் கேள்விக் கணைகளை என் மீது பாய்ச்சிருந்தார். எனவே கம்போடிய உலாத்தலுக்கு ஒரு சின்ன இடைவெளி விட்டு, இந்தப் பதிவு அவருக்கான என் பதிலும் இன்னொரு நண்பருக்கான என் கேள்வியுமாக இருக்கின்றது.

சரி முதலில் கே ஆர் எஸ் கேட்ட கேள்விகளுக்கு என் பதில்களைச் சொல்கிறேன்.

கேள்வியின் நாயகனே! என் கேள்விக்கு பதில் ஏதைய்யா?

1. உங்கள் FM றேடியோ நிகழ்ச்சி அனுபவங்களில், நீங்கள் எதிர்கொண்ட இனிமையான, மெல்லிய, ரொமான்டிக்கான கட்டம் எது?

இந்த ஆண்டோடு என் வானொலி வாழ்க்கை பத்தாண்டுகளைத் தொடுகிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு கேள்வியை முதன் முதலில் சந்திக்கிறேன்.

முதலில் எப்படி வானொலி உலகுக்கு வந்தேன் என்பதைச் சுருக்கமாகச் சொல்லி விட்டு பதிலுக்கு வருகின்றேன். அப்போது மெல்பன் (அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரம்)1998 வாக்கில் நான் பல்கலைக் கழகத்தின் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது தான் அங்குள்ள ஒரு மணி நேர 3ZZZ தமிழோசை வானொலியில் அறிவிப்பாளராக இணைத்துக் கொண்டேன். பின்னர் 2000 ஆண்டிலிருந்து ஒரு வானொலி நிலையத்திலும், கடந்த 2007 யூன் 1 ஆம் நாளில் இருந்து அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் சேவை அடிப்படையில் பணி புரிகின்றேன். அதாவது என் முழு நேரத்தொழில் ஒரு நிறுவனத்தின் திட்ட முகாமைத்துவமும், நிதிப் பிரிவும் ஆகும்.
வானொலிப் பணி என்பது வாரத்தில் இரு நாட்களின் மாலை நேரத்தில் 5 மணி நேரம் ஊதியம் பெறாத சேவையாகக் கொடுப்பது. ஆத்ம திருப்தி மட்டுமே இங்கே கிடைக்கும்.

சரி உங்க கேள்விக்கு என் பதிலைப் பார்போம். புலம்பெயர்ந்த சூழலில் ஆஹா எப் எம் ரேஞ்சுக்கு வானொலியில் கலகலக்க முடியாது. நம் தாயகத்துச் சூழ்நிலையைப் பொறுத்தே வானொலிப் படைப்பும் அமையும். நிறையத் தயார்படுத்தலோடு போனால் திடுதிப்பென்று அந்த நிகழ்ச்சியே செய்யமுடியாது வேறு நிகழ்ச்சி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
சந்தோஷமான தருணங்களுக்குச் சரிசமமாக எதிர்ப்புக்களும், வேதனைகளும் கூடக் கிடைத்திருக்கின்றது. சுனாமி நடந்த நாள் இரவும், தொடர்ந்த நாட்களும் அழுதுகொண்டே தம் உறவினர்களைத் தேடி வானொலியில் அழைத்த நேயர்களையும் மறக்கமுடியாது.

மலரக்கா போன்ற மறக்கமுடியாத நேயர்கள் இன்னும் என்னோடு கூடவே வருகின்றார்கள்.

ஒரு சம்பவம் சொல்கிறேன். ஒருமுறை ம.தி.மு.க தலைவர் வை.கோவை நேரடியாக வானொலியில் பேட்டி கண்டபோது ஒரு ஈழத்தமிழ் அறிவிப்பாளரிடமிருந்து சாமரம் வீசும் கேள்விகளை எதிர்பார்த்தார் போலும். என் கேள்விகளில் அவர் அந்த நேரத்தில் எடுத்த தி.மு.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க தாவிய நிலைப்பாடுகளை வைத்துக் கேள்வி ஒன்று கேட்டேன். இன்னும் சில கேள்விகளை அவர் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் தி.மு.க ஏஜெண்டாக இருந்து கொண்டு கேள்வி கேட்கிறீர்கள் என்று உச்சஸ்தாயியில் போட்டாரே ஒரு போடு. அந்தச் சம்பவம் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னும் விரிவாகச் சொல்கிறேன்.

சந்தோஷமான கணங்கள் என்று கேட்டால்

தொலைபேசியில் அழைத்த அதே நாளில் எந்தவித பிகு, பந்தா இல்லாமல் வானொலிப் பேட்டி தந்த எழுத்தாளர் சுஜாதாவுடன் பேசிய அந்த நிமிடங்கள் (அவரை பேட்டியெடுக்கும் போது அடிக்கடி இது நிஜமா என்று என்னையே மனதுக்குள் கேட்டுக் கொண்டிருந்தேன்)
இயக்குனர் பாரதிராஜாவுடன் கொஞ்சம் இன்னும் ஆழமாகக் கேள்வி கேட்டு அவரது பழைய நினைவுகளை மீட்க வைத்தது (வேதம் புதிதில் நிழல்கள் ரவியுடன் சண்டை போட்டு பின்னர் பாரதிராஜாவே டப்பிங் பேசியதை எல்லாம் சொல்லியிருந்தார்) இப்படி நிறைய, நிறைய, நிறையவே சொல்லலாம்.

ஓ நீங்க ரொமாண்டிக் கணங்களையா கேட்டீங்க ;-)
2001 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து வருஷமாக ஒரு மணி நேரப் படைப்பாக "காதலர் கீதங்கள்" என்ற நிகழ்ச்சியைக் கொடுத்திருந்தேன். வெறும் பாடல்களை மட்டுமே போடாமல் புதுசு புதுசா ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கொடுத்துக் கொண்டிருந்தேன். பாடல் தெரிவிலும் ஒரு குறிப்பிட்ட காலத்துப் பாடல்கள், அல்லது இசையமைப்பாளரைத் தேர்வு செய்து கொடுத்ததால் நிகழ்ச்சியில் வரும் பாடல்கள் சீராக இருக்கக் கூடியதாக இருந்தது. அவ்வப்போது குறித்த சில கவிஞர்களின் கவிதைத் தொகுதிகளில் இருந்து இரண்டு அடியைக் கொடுத்து அதற்கேற்ற பாடல் என்றெல்லாம் உருகி உருகிக் கொடுத்தேன். அப்போது தான் நீங்க கேட்ட மெல்லிய, ரொமாண்டிக் கட்டமொன்றை எதிர்கொண்டேன். ஆனால் பாதுகாப்பாக விலகிக் கொண்டேன். ஆனால் இந்தக் காதலர் கீதங்கள் தொகுப்பு இன்னொரு இடத்தில் மெல்ல ஒரு விதையை விதைத்.... மெல்ல இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன் ;-)


2. இறைவன் உங்கள் முன் தோன்றி, உங்களை, இலங்கை அரசுக்கு சர்வ சக்தி படைத்த "ஒரு நாள் அதிபர்" ஆக்குகிறார் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
உங்கள் முதல் ஆக்ஷன் (செயல்பாடு) என்னவாக இருக்கும்? (இனிய கற்பனை)


நான் ஒரு நாள் அதிபரானால் முதல்வன் அர்ஜீன் பாணியில் ஏகத்துக்கும் அதிகாரம் பண்ணமாட்டேன். அப்புறம் பாராளுமன்றம் எதுக்கு இருக்கு? எந்தப் பெரிய தீர்மானம் ஆனாலும் பெரும்பான்மை வாக்கு பாராளுமன்றத்தில் கிடைச்சாகணுமே?

எனவே முதன் முதலில் நான் செய்ய விரும்புவது இலங்கை அரசினால் சந்தேகம் என்ற ஒரே பார்வையில் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டு வருஷக்கணக்கில் (சிலர் பத்து வருஷங்களுக்கும் மேல்) இருக்கும் அப்பாவித் தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அனைவரையும் உடனே விடுதலையாக்கி அவர்களைப் பாதுகாப்பாக அவர்களின் குடும்பத்தோடு சேர்க்குமாறு கட்டளை போடுவேன். இதுதான் என்னால் முதலில் செய்யக்கூடியது.

3. பதிவுலகில் சர்ச்சையில் சிக்கிக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும்? சிக்காமல் இருக்க என்னெல்லாம் செய்ய வேண்டும்?
(அப்பாடா, சிக்காத நீங்க, இப்போ சிக்கிட்டீங்க :-)


இந்தக் கேள்வி, வேலு நாயக்கரைப் பார்த்து நீங்க நல்லவரா? கெட்டவரா? என்று கேட்பது போலிருக்கு. நானும் சர்ச்சையில் அகப்பட்டிருக்கிறேன், சர்ச்சைகளில் இருந்தும் ஒதுங்கியும் இருக்கிறேன்.

எந்தெந்தச் சர்ச்சைகளில் அகப்பட்டுக் கொண்டேன் என்பதை உதாரணத்துக்கு ஒரு சில என் பதிவுகள் மூலமே காட்டுகிறேன், நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

சிதம்பரம் கோயிலைப் பார்க்க வேண்டும் என்ற தீரா ஆசையில் 2006 ஆம் ஆண்டு முதன் முதலாக சிதம்பரம் கோயில் பார்க்கப் போன கதை சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!

எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு அஞ்சலியாக நான் அவரோடு கண்ட ஒலிப்பேட்டி

கொஞ்சம் இருங்க, எங்கே அந்தப் பதிவுகளில் சர்ச்சைக்குரிய பின்னூட்டங்களைக் காணலியே என்று கேட்கிறீர்களா? அவற்றையெல்லாம் போடாமலேயே கடாசி விட்டேன். என்னைப் பொறுத்தவரை நான் சொல்ல வந்த கருத்தைப் புரியாமலோ,பதிவை வாசிக்காமலோ, அல்லது பதிவின் நோக்கத்தைத் தெரியாமலோ வந்து சகதி இறைப்பவர்களை அனுமதிக்க மாட்டேன், அது என் நேரத்தையும் வீணடிக்கும். சுஜாதாவின் அந்தப் பதிவைக் கொடுத்ததற்காக இன்னும் கூட ஸ்பாம் மெயில்கள், வைரஸ் லிங்க் பொருத்திய பின்னூட்டங்களை வெகுமதிகளாகப் பெற்றுக் குப்பைத் தொட்டியில் போட்டு வருகின்றேன்.
என் சோகம் என்னோடு தான் என்று தான் பாடவேணும் போலிருக்கு ;-)

இவை தவிர பதிவராக இருக்கும் வகையில் நான் எதிர்கொள்ளும் இன்னொரு சர்ச்சை. எதிலும் பிழை கண்டு பிடிக்கும் ஒரு கூட்டம். எத்தனை முறை நான் பதிவு எழுதுகிறேன், எத்தனை முறை பின்னூட்டம் போடுகிறேன் என்பதைக் கண்காணிக்க ஒரு கூட்டம் இருக்கு. ஊரில் பிரச்சனை நடக்கும் போது ஏன் ஒரே பாட்டு மட்டும் போடுறார், என்று பேசும் ஒரு கூட்டமும் இருக்கு.இதற்கு சயந்தன் பாணியில் என் பதில், பாட்டுக் கேட்பதால் தாயக உணர்வு அற்றுவிடும் என்றால் அது இருந்தென்ன இல்லாது விட்டால் என்ன?
( நான் பாட்டு மட்டுமா போட்டுக் கொண்டிருக்கிறேன்?)

எனவே சர்ச்சைகளில் சிக்க மேலே உள்ள உதாரணங்களைப் பயன்படுத்தலாம்.

விழாமல் இருப்பதற்கு ஒரே வழி =>
பதிவுலகை விட்டு விலக வேண்டியது தான் ;-)

4. இசையில் நீங்கள் அனைத்து வகை இசையும் விரும்பிக் கேட்பீர்கள்!-அறிவேன்!
தமிழகத்தில் தமிழிசை இயக்கம் சிறிது காலமாகத் தான் நன்கு மணம் வீசி வருகிறது! ஆனால் அதே சமயத்தில் பிறமொழி இசை ஒவ்வாமையும் நம்மிடையே சிறிது இருக்கத் தான் செய்கிறது!
கர்நாடக இசை என்றால் சில குறிப்பிட்ட வகுப்பினர், மற்ற இசை என்றால் சில குறிப்பிட்ட வகுப்பினர் என்று ரசிகர் வட்டம் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்டு விடுகிறது!

விபுலானந்த அடிகளைக் கொடுத்த ஈழத்திலும், இதே நிலை தானா?
அப்போது எப்படி? இப்போது எப்படி?


ஈழத்து இசை ரசிகர்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆரம்ப வகுப்பு முதலே பண்ணிசை, மற்றும் கர்நாடக இசை வகுப்புக்கள், நடனம் ஆகியவை பள்ளிகளில் ஒரு பாடமாக இருக்கின்றது. குரல் வளமோ நாட்டமோ இல்லாதவர்களுக்குத் தான் சித்திரம் பழகுதல் வகுப்பாம் ;-) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மணி ஐயர் போன்ற ஜாம்பவான்கள் தமிழகத்தில் இருந்து வந்து பல ஆண்டு காலம் வானொலி வழி கர்நாடக இசையைக் கொடுத்து வந்திருக்கிறார்கள். அதே போல் யாழ்ப்பாணத்தில் "இராமநாதன் நுண்கலைப் பீடம்" என்ற ஒரு பல்கலைக்கழகப் பிரிவுக்கு முன்பெல்லாம் மகாராஜபுரம் சந்தானம், லஷ்மி நாராயணா (எல்.வைத்யநாதனின் தந்தை) போன்ற இசைவல்லுனர்கள் வந்து பல வருடங்கள் அங்கேயே தங்கி ஈழத்தின் இசை மரபு தழைத்தோங்க உதவியிருக்கிறார்கள்.

நான் தாயகத்தில் இருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் இசைநிகழ்ச்சிக்கான அரங்கைத் தான் கொண்டு நடாத்திய இளங்கலைஞர் மன்றத்தில் அமைத்து துணை புரிந்தார் சங்கீத மேதை திரு பொன் சுந்தரலிங்கம் அவர்கள். திரு. திலக நாயகம்போல் போன்ற சங்கீதமேதைகள் மதம் பேதம் கடந்தும் கர்நாடக இசை, தமிழிசை அங்கிருப்பதைக் காட்டுகின்றது. தென் தமிழீழத்திலும் விபுலாலந்தா இசை நடனக் கல்லூரி அங்குள்ள மக்களுக்கு இதே பாங்கில் இந்த இசைமரபு பல மட்டத்து மக்களுக்கும் போய்ச் சேர உதவுகின்றது. புலம்பெயர் சூழலிலும் நம்மவரின் குடும்பங்களில் சராசரியாக எல்லாப் பெற்றோருமே தம் பிள்ளை நடனத்திலோ அல்லது இசையிலோ சிறப்பாக வளர வேண்டும் என்ற முனைப்பைக் காட்டுகின்றார்கள்.

இவ்வளவு முன்னுரையும் கொடுத்து விட்டேன். ஆனால் என் பார்வையில் உங்கள் கேள்விக்கான பதில் என்னவென்றால், நம்மவரிடையே இப்படியான வகுப்பு ரீதியான பாகுபாடு இசைக்கோ அல்லது ரசிகர் வட்டத்துக்கோ நான் அறிந்தவரை, என் அனுபவத்தில் அவ்வளவாகக் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் அனேக இசைக்கச்சேரிகள் தமிழிசை இல்லாது நிறைவுறுவதேயில்லை. ஈழத்தில் உள்ள கர்நாடக இசை வித்துவான்களும் தம் எல்லைகளை விசாலமாக்கி குறிப்பிட்ட ஒரு வகுப்புக்கே தம் இசை போய்ச் சேரவேண்டும் என்ற நினைப்பில்லாமல் செயற்படுவதையும் சொல்லி வைக்க வேண்டும். எனவே அங்குள்ள வித்துவான்களின் செயற்பாடுகள் தான் இப்படியான பாகுபாட்டைப் பெருமளவு களைகின்றது.


இன்றைய புலம்பெயர் சூழலில் பாடகி நித்யசிறீக்கு பெரும் அபிமானம் ஏற்படக் காரணமே அவர் இங்கு கொடுக்கும் இசை நிகழ்ச்சிகளில் தமிழிசை அதாவது பாரதி, பாரதிதாசன் பாடல்களைப் பாடுவதே காரணம்.

இதே நேரம் புலம்பெயர் சூழலில் நிலவும் இன்னொரு வேதனையான விஷயத்தையும் இங்கே சொல்லி வைக்கின்றேன், தம் பிள்ளை நடனம் கற்ற பின்னர் (சில இடங்களில் அரைகுறை ஞானம்) நிறையச் செலவழித்து ஒரு பெரும் கல்யாண வீடு போல் நடன அரங்கேற்றம் காட்டினால் போதும் என்ற மனோநிலையில் தான் 90 இற்கும் அதிகமான வீதமான பெற்றோர் இருக்கின்றார்கள். நடனத்தோடு ஓப்பிடும் போது சங்கீதம் கற்கும் எண்ணிக்கை அருகி வருகின்றது.

இவை தான் கே.ஆர்.எஸ் இற்கு என் பதில்கள் ;-) கொடுத்ததை வச்சுத் திருப்தி அடையுங்கப்பா.

சரி இனி நான் கேள்வி கேட்கத் தேர்ந்தெடுத்திருக்கும் பதிவர், உடன்பிறவாச் சகோதரன் ஆயில்யன்.

கேள்வி 1. பதிவுலகிற்கு வருவதற்கு முன்னர், வந்த பின்னர் உங்களின் இணையச் சூழல்/வாழ்க்கை எப்படியிருக்கின்றது?

கேள்வி 2. தமிழகத்துப் பிரதேச நடையில் வரும் பதிவுகள் மிகக் குறைவு என்று நான் கணிக்கின்றேன், இந்த நிலையில் ஈழத்து மொழி வழக்கில் வரும் பதிவுகளை நீங்கள் வாசித்துப் புரியக்கூடியதாக இருக்கின்றதா அல்லது தாவு தீருகின்றதா?

கேள்வி 3. நீங்கள் மிகுந்த கடவுள் பக்தி உள்ளவர், பதிவுகளிலும் கட்டுக்கோப்பான சிந்தனைகளை அவ்வப்போது பதிவுகளாகக் கொடுப்பவர், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முற்போக்காக எதையாவது செய்ய் வேண்டும் என்றால் எதைச் செய்வீர்கள்?

கேள்வி 4. உங்க சொந்த ஊரில் பஞ்சாயத்து தலைவர், அல்லது ஐ.நா சபைச் செயலாளர் இதில் ஏதாவது ஒரு பதவியை எடுக்கலாம் என்றால் எதை எடுப்பீர்கள்? அந்தப் பதவியை வச்சு என்ன செய்வீர்கள்?

கே.ஆர்.எஸ் வேண்டுகோளுக்கிணங்க ஒரு போனஸ் ஆப்பு வைக்கிறேன்
நடிகை ஸ்ரேயாவுடன் நாயகனாக நடிக்க ஒரு வாய்ப்பு அல்லது பாடகி ஸ்ரேயாவுடன் டூயட் பாட ஒரு வாய்ப்பு வந்தால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள் (இரண்டில் ஒன்றைத் தான் செய்ய முடியும்னு கட்டளை வேற ;-))