Social Icons

Pages

Sunday, January 07, 2018

மதுரை நகர உலாத்தல் 🏜🌈 மேல மாசி வீதியிலே


“மேல மாசி வீதியிலே
மேளச் சத்தம் கேக்குதடி”
என்ற மலர்ந்தும் மலராத மு.மேத்தா எழுதி இளையராஜா இசையமைத்த புண்ணியவதி திரைப்பாடல் https://youtu.be/R3yQoAvyOuI
தான் மனசில் ஓடியது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வெளி வீதியெல்லாம் அளைந்த போது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆன்மிக தரிசனத்துக்காக அன்றைய காலையையும், கோயிலின் வெளி வீதியைச் சுற்றி வேடிக்கை பார்க்க அன்றைய மதியத்தையும் ஒதுக்க வேண்டும் என்ற என் தீர்மானம் சரியாகவே அமைந்தது. காலையில் மீனாட்சி அம்மன் கோயில் தரிசனம் முடித்து, ஊர் உலாத்தல் போய் விட்டு மதிய உணவு கடந்த பின் மீண்டும் மீனாட்சி அம்மன் கோயில் பக்கம் நடந்தேன்.
மீனாட்சி அம்மன் கோயிலின் வெளி வீதியெல்லாம் குப்பை, கூழங்கள் எல்லாம் ஒற்றியெடுக்கப்பட்டு வெகு சுத்தமாக இருந்தது. மேற்குக் கோபுர வழியாக, ஒவ்வொரு திசையாகப் பயணிக்கும் போது கமராவின் கண்களிலும் கண்ட திருக்கோலமெல்லாம் பதிவாகுகிறது.
கோயிலின் நடை சாத்தியிருந்ததால் மீண்டும் மாலை நாலு மணிக்கு வாசல் திறப்பை எதிர் நோக்கிப் பக்தர் கூட்டமெல்லாம் ஒவ்வொரு திக்கிலும் குழுமி நிற்கிறார்கள். குடும்பம் குடும்பமாகவும் ஐயப்ப பக்தர்களாகவும் அந்தக் கூட்டம். ஒரு மெல்லிய இளஞ்சூட்டு வெயில் அடிக்க, நிழல் தேடிக் குந்தியிருந்து கதை பேசும் அவர்களையும், ஆலயச் சூழலும் ஈழத்து நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை நினைவு படுத்துகிறது.
மீனாட்சி அம்மன் கோயிலின் ஒவ்வொரு கோபுரங்களையும் அதன் சித்திர வெளிப்பாடுகளையும் நின்று நிதானித்துப் பார்க்க வேண்டும்.
கோயிலின் வெளி வீதியைச் சுற்றிய அடுக்கெல்லாம் வளையம் வளையமாகக் கடைத் தொகுதிகள். பாத்திரக் கடைகள், வளையல், இனிப்பு, சாப்பாடு என்று வித விதமாக, சில கடைகளின் பெயர்ப் பலகைகள் பொன் விழாவைத் தாண்டிய பாரம்பரியத்தைக் காட்டுகின்றன.
ஈழத்துக் கோயில்களில் கச்சான் கடைகள் ( வறுத்த
வேர்க்கடலை & சோளப் பொரி) தவிர்க்க முடியாதவை.
திருவிழா சமயம் வெளியூர்க்காரர்களால் அதிகமாகவும், பிற காலங்களில் ஒன்றிரண்டாவது கச்சான் கடைகளையும் ஈழத்தின் பிரபல ஆலயங்களில் காண முடியும். ஆனால் தமிழகத்தில் நான் சென்ற கோயில்களில் இவற்றைக் காண முடியவில்லை. மீனாட்சி அம்மன் கோயிலிலும் அப்படியே.
எனக்குத் திடீரென்று மூளை குறுக்கால் ஓடியது.
மதுரை ஆதீனம் அவர்கள் தனது வேடிக்கையான செயற்பாடுகளால் எப்போதும் பரபரப்பாகப் பேசப்படுபவர். நித்தியானந்தா விவகாரம் வேறு சூடு பிடித்திருக்கிறது. அங்கே ஒரு நடை எட்டிப் பார்த்தால் என்னவென்று தோன்றியது.
எதிர்ப்பட்ட ஒருவரிடம் “மதுரை ஆதீனம் மடம் எந்தப் பக்கங்க” என்று கேட்டேன். அவர் விநோதமாகப் பார்த்து விட்டு வழியைக் காட்டினார். அதற்குப் பின் ஆர்வம் எழாததால் அடங்கி விட்டேன்.
மதுரையில் நான் கண்ட புதுமையானதொரு அனுபவம் என்னவெனில், புதுப்படங்களின் விளம்பர சுவரொட்டிகளை விட, பழைய படங்களின் மீள் திரையீடு தான் அதிகம் கண்ணில் பட்டது. போட்டி போட்டுக் கொண்டு மதுரையின் இரண்டு தியேட்டர்கள் எம்.ஜி.ஆரின் பழைய படங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மேற்குச் சித்திரை வீதியில் சென்ட்ரல் தியேட்டர் பக்கம் போனேன். இங்கு பழைய படங்களே அதிகம் திரையிடப்படுகின்றன. எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் படம் வெளிவரவிருக்கிறது என்று சுவரொட்டிகள் கட்டியம் கூறின. இன்னொரு தியேட்டரில் “நல்ல நேரம்” ஓடிக் கொண்டிருக்கிறது.
“அழகிய கண்ணே உறவுகள் நீயே” பாடலைப் போட்டு விட்டு பென்னம் பெரிய தாச்சிச் சட்டியில் தேன் குழல் முறுக்கைப் பொரித்துக் கொண்டிருக்கிறார் கடைக்காரர். சுற்றிலும் இனிப்புப் பலகாரங்கள் கூடை கூடையாய்ப் பந்தி. அதை வீடியோ எடுத்துப் போட்டேன் ஆனால் பேஸ்புக்காரன் ஒலியை அமுக்கி விட்டான்.
இங்கே https://www.facebook.com/kana.praba/posts/10215130193473553
போத்தலில் அடைக்கப்பட்ட குளிர்பானம் தவிர வெளியூர் பச்சைத் தண்ணி தானும் பல்லில் படக்கூடாதி என்று சொல்லித்தான் வீட்டமண்ணி வழி அனுப்பினார். அதனால் மதுரையில் ஒரே மிராண்டா மிராண்டா தான். ஜிகர்தண்டாவை அனுபவிக்க முடியாது பெருமூச்சுடன் கடந்துட்டேன் 😀
மீனாட்சி அம்மன் தல யாத்திரைக்குப் போவோர் இந்த மாதிரி ஆற அமர இருந்து பேசி விட்டு வர வேண்டும்.




















1 comment:

வெங்கட் நாகராஜ் said...

மதுரை நகர உலாத்தல் - மூன்று பதிவுகளையும் இப்போது தான் படித்து முடித்தேன். ஒரு நகரை மையமாக வைத்து உலா வருதல் சிறப்பு. தமிழகத்தின் பல பகுதிகளைச் சுற்றி வர வேண்டும் - இந்த எண்ணம் எனக்கும் உண்டு.