

முதல் நாள் இரவு கெளரி ரெசிடென்ஸ் இளைஞர்களின் கைவண்ணத்தில் உருவான பொரிச்ச இறாலும், வட இந்திய ரொட்டித்துண்டங்களும் வெகு சீக்கிரமாகவே ஜீரணமாகிவிட்டதால் , காலை சீக்கிரமாகவே பசியெடுத்தது. புது உடை பூண்டு, மழைத்தூறலை மதியாமல் கொஞ்சம் நடை, கொஞ்சம் ஓட்டமுமாக ஆலப்புழா நகரை நோக்கி வேகமெடுத்தன என் கால்கள். கெளரி ரெசிடென்ஸ்ஸிலிருந்து ஒரு 10 நிமிட தூரத்துக்கும் குறைவாகவே ஆலப்புழா நகர் இருந்தது.

என்ற புத்தம் புதிய Flash Restaurant என்ற உணவகம் கண்களில் மாட்டியது. விறு விறுவென உள்ளே போனேன். இருக்கையில் அமர்ந்த போது உணவக முதலாளியும், பணியாளும் சிரித்து வரவேற்று, இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இந்த உணவகம் திறந்ததாகவும், இன்னும் உணவுப் பட்டியல் அச்சில் அடிக்கவில்லை என்றும் சொல்லித் தலையைச் சொறிந்தார்கள்.காலை உணவாக இடியப்பமும், அப்பமும் கிடைக்கும் என்றார்கள். கேரளப் புட்டை ஒருகை பார்க்கலாம் என்றால் எனக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.
கேரளப் புட்டு , கேரள உணவகங்களில் கிடைப்பது அரிது என்று நினைக்கிறேன். ஏனெனில் கேரளாவில் மற்றைய உணவகங்களிலும் எனக்கு இதே ஏமாற்றம் தான். மலையாளிகள் தம் வீட்டில் தான் இதை ஆக்குவார்கள் போலும். முட்டை அப்பம் சாப்பிடலாம் என்று நினைத்து ( அப்பத்துக்குள் முட்டை போட்டிருக்கும்) முட்டை அப்பத்துக்கு ஓடர் செய்தேன். கிடைத்தது தனியாக வெறும் அப்பமும், வெங்காயச் சட்னிக்குள் புதைந்த அவிச்ச முட்டையும் தான். முட்டை அப்பம் கேட்ட எனக்கு உள்ளுரச் சிரிப்பு வந்தாலும், அட இது கூட நல்லாயிருக்கே என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டு சாப்பாட்டை ஒரு கை பார்த்தேன். பக்கத்து இருக்கைகளில் இருந்தோரில் பலர் இடியப்பம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

காலைச் சாப்பாடு முடிந்து மீண்டும் கெளரி ரெசிடென்ஸ் போகிறேன்.மதியம் 12 மணிக்குத் தான் என் படகுச் சுற்றுலா என்பதால் கிடைத்த நேரத்தில் அங்குள்ள கணினியில் இணையத்தளங்களை மேய்கின்றேன். கேரளாவில் இருந்து வரும் ஆங்கிலப் பத்திரிகையில் முதல் நாள் மறைந்த ஒடுவில் உன்னிகிருஷ்ணன் பற்றிய சிறப்புச் செய்திகளும், அவர் பற்றி சக கலைஞர்களின் அனுதாப நினைவுகளும் வந்திருக்கின்றன.
சரி, இனி என் ஆலப்புழா கடற்கழிப் (Backwater) பயணத்தை ஆரம்பிக்க முன்னர், கேரளாவின் இந்தக் கடற்கழிப் பிரதேசங்கள் பற்றிய குறிப்பைக் கேரளச் சுற்றுலாத் தளங்களின் உதவியுடன் தருகின்றேன். அனைத்துப் புகைப்படங்களும் என் கமராவில் சுட்டவை.
கேரளா மாநிலம் 900 கீ மீ பரப்பளவிற்கு மேல் நீர்வழித் தடங்கள், ஆற்றுப்படுக்கைகள், பரவைக்கடல் ஆகியவற்றால் சூழவும், மத்தியிலும் கொண்ட ஒரு பிரதேசம். இப்படியான புவியியல் அமைப்பின் ஆற்று வழித்தடங்கள் எங்கணும், வரலாற்றுச் சிறப்புமிக்க, பழமை பேணும் கிராம அமைப்பும்,கண்கவரும் நீர்வழி நெடும்பயணங்களும், நாகரீகச் சாயம் பூசிக்கொண்டு வரும் கிராமங்களுமான கலவையாக அமைந்து காணப்படுகின்றது. இந்தப் படகு வீட்டின் முக்கியமான பயண இலக்குகள், உங்களுக்கு இந்தப் பயணத்தை ஒழுங்கு செய்து தரும் படகு வீட்டு உரிமையாளர்களாலோ அன்றிப் பயணிகளாலோ தீர்மானிக்கப்படுகின்றது. இந்தப் பயணத்தில் தொடும் பயண இலக்குகளில் குறிப்பிடத்தக்க இடங்களாவன:
( இவை அனைத்துமே உங்கள் ஒரு நாட் பயணத்தில் பார்க்கமுடியாது, மாற்று ஒழுங்குகள் செய்யவேண்டும்).

கொச்சின் (இப்போது கொச்சி என்ற பெயர்) (Cochin) - அரபிக்கடலின் மகாராணி என்று அழைக்கப்படும் கொச்சி மிகப்பிரபலமான பயணப்படுக்கைகளில் ஒன்று.
காரணம், வரலாற்று ரீதியான அம்சங்களையும், சீன வலை எனப்படும் மீன்பிடித் தொழிலைப் பார்க்கும் வாய்ப்புமாகும். கொச்சின் பற்றி நிறையப் பேச இருக்கிறது, பின்னர் கவனித்துக்கொள்கிறேன்.
ஆலப்புழா (Alappuzha ) - என்னுடைய பிரயாணம் ஆலப்புழாவில் மையம் கொண்டிருந்த காரணத்தால், இந்தப் பயணம் பற்றிய வரலாற்று மற்றும் காட்சிக் குறிப்புக்கள் அடுத்த பதிவுகளில் வரும்.

கசர்கொட் (Kasargod) - வட கேரளாவில் அமைந்துள்ள இப்பிரதேசம், வல்லியப்பரம்பா என்று ஆற்றுப் படுக்கை தாங்கியது. பச்சைப் பசேலென்ற இந்தப் பிரதேசம் கேரளத்தின் பசுமைப் புரட்சியைக் காண விரும்புபவர்களுக்கு ஓர் நல்விருந்து.
கொல்லம் (Kollam) - கேரளத்தலைநகர் திருவனந்தபுடத்திலிருந்து 70 கீ.மீ தொலைவில் உள்ள இப்பிரதேசம், அஸ்தமுடி என்ற ஏரி தழுவி அமைந்துள்ள மிகப்பழைமையான துறைமுகமாகும்.

கோழிக்கோடு (Kozhikode) - வட கேரளாவில் உள்ளது. பல தெரிவுகளில் கோடு போட்ட பருத்தி ஆடைகளுக்கு மவுசு கிடைத்த ஊர், அதனாலேயே கோழிக்கோடு என்ற பெயரும் வந்ததாகச் சொல்லப்படுகின்றது. நாடுகாண் பயணி வஸ்கொடகாமா 1498 இல் வந்திறங்கிய இடம். 16 கீ.மீ தொலைவில் கப்பட் என்ற கடற்கரையும் உண்டு.
குமரகம் (Kumarakom) - பூலோக சொர்க்கம் என்றழைக்கப்படும் இவ்வூர் வேம்பநாடு வாவியை ஒட்டி அமைந்துள்ளது. பறவைகள் சரணாலயமும் தன்னகத்தே கொண்டிருக்கின்றது.

குத்தநாடு (Kuttanad) - கேரளாவின் அரிசிக்கோப்பை (Ricebowl of Kerala) என்று செல்லமாக அழைக்கப்படும் இவ்வூர், நெற்கதிர்ப் பாசனத்துக்குப் புகழ் பெற்றது. கடல்மட்டத்துக்குக் கீழேயே நெற்கதிர்கள் தலைவிரித்து ஆடுகின்றன. இம்மாதிரியான பாசனச் செய்கையில் கடலுக்குக் குறுக்கே அணை போடப்பட்டுப் நெற்செய்கை விளைவிக்கப்படுகின்றது. இந்த ஒப்பீடுகைக்குக் கடல்மட்டத்துக்குக் கீழே உள்ள நாடான நெதர்லாந்து நாட்டுப் புவியியல் அமைப்பும் பொருந்தப்படுகின்றது.
திருவல்லம் (Thiruvallam) - திருவனந்தபுரத்தில் இருந்து 6 கீ.மீ தொலைவில் இருக்கும் இவ்விடம் கிள்ளி மற்றும் காரமன்னா ஆகிய இரண்டு ஆறுகளின் இணைப்பில் அமைந்து காணப்படுகின்றது. நான் முன்னர் சொன்ன வேலி என்ற சுற்றுலாத்தலத்திற்கு அண்மையிலும் திருவல்லம் இருக்கின்றது.
திருவனந்தபுரம் (Thiruvananthapuram) - கேரளக் கடற்கழிச் சுற்றுலாப் பயணங்களின் ஆரம்பத்தொடுகையாக இப்பிரதேசம் விளங்குகின்றது. இந்த இடத்தைப் பற்றித் தானே நிறையச் சொல்லிவிட்டேனே? :-)

கெளரி ரெசிடென்ஸ்காரரே என் படகு வீட்டுப் பயணத்தை ஒழுங்கு செய்திருக்கிறார்கள். ஒரு அறையுடன் கூடிய அந்தப் படகு வீடு என் 22 மணி நேரப் பயணத்துக்காக ரூ 3500 மட்டுமே செலவாகியது. இந்தச் செலவில் படகு வாடகை, மதிய உணவு, மாலைச் சிற்றுண்டி, இரவு உணவு, அடுத்த நாட் காலை உணவு ஆகியவை அடக்கம். இந்த ஒரு அறையுடன் கூடிய படகு வீடு நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கும் மிகவும் பொருத்தமானது. மேலதிக கட்டணம் எதுவுமில்லை. இந்தப் படகு வீட்டிற்குள்ளேயே மேற்கத்தேயத் தரத்தில் கழிப்பறையும் உண்டு. இந்தப் படகுவீடுகளை அரை நாள் வாடகை அல்லது ஒரு நாள் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம். நான் போன படகு வீட்டைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. அதுவரை,
ஷமிக்கோ... (Excuse me)
20 comments:
கேரளாவை பிரித்து மேய்ந்துகொண்டு இருக்கீங்க பிரபா அவர்களே...
பதிவு அருமை..
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் ரவி :-)
போட்டே , ஈ தவண க்ஷமிச்சு.
பாக்கியொக்க வேகம் பறயணும் கேட்டோ.
பறயும் துளசிம்மா :-)
ஆகா! பிரபா....அடிச்சுக் கொளுத்தியிருக்கீங்க. ரெண்டு வருசத்துக்கு முன்னாடியெல்லாம் என்னோட நண்பர்கள் எல்லாரும் பெங்களூரில இருந்தப்ப....எல்லாரும் இப்படி சுற்றுலா போவோம். கேரளாவிலே வயநாட்டுக்கே நாலு வாட்டி போய் வந்தோம். ஆனாலும் அலுக்கலை. ஆலப்புழையப் பாத்தா ஆசைப்புழையா இருக்கே. ஒரு வாட்டியாவது போயி, படகு வீடுகள்ள இருக்கனுமப்போய்.
இப்ப 3500 ரூவா குடுத்தீங்க சரி. நீங்க ஒத்தைல போயிருந்தீங்களே! அப்ப படகுல தனியாப் போனீங்களா? ;-)
பிரபா!
அருமையாகப் போகிறது தொடர்;படங்கள் நன்றாக உள்ளது. மழை ஒவர் டைம் செய்வதே! செழிப்பின் இரகசியம்.7 ம் படத்திலுள்ளது; கத்தோலிக்கத் தேவாலயமா? தனிப்பட்ட வீடா? கேரளப்பாணி கோவிலா? நான் தொலைக்காட்சியில் பார்த்ததவிட உங்கள் படங்களில் காட்சிகள் வித்தியாசமாக உள்ளது.
யோகன் பாரிஸ்
வணக்கம் ராகவன்
என்னங்க இது, டெக்கன் பிளைட் புடிச்சா 45 நிமிஷத்தில திருவனந்தபுரம் உங்களுக்கு. சீக்கிரமே ஆலப்புழாச் சுற்றுலா போய்வந்துடுங்க.
// நீங்க ஒத்தைல போயிருந்தீங்களே! அப்ப படகுல தனியாப் போனீங்களா? ;-)//
தனியாத் தான் போயிருந்தேன். நான் போன நேரம் நயன் தாரா சிம்புவோட போய்ட்டாங்களே:-(
வணக்கம் யோகன் அண்ணா
தங்கள் கருத்துக்கு என் நன்றிகள். 7 ஆம் படத்தில் உள்ளது கிறீஸ்தவ தேவாலயமே. இது என் ஆலப்புழா படகுவீட்டுப்பயணத்தில் கண்ணிற்பட்டது. இப்பிரதேச நிலவியல் பற்றி அடுத்த பதிவில் தருகின்றேன்.
//அந்த சூழ்நிலை யாழ்ப்பாண மார்கழிக் குளிரை நினைவுபடுத்தியது//
பிரபா..நன்றாக இருக்கிறது பதிவு... ..போட்டோக்கள் எல்லாம் பார்க்கும் போது..... யாழ்ப்பாணத்து மாரி கால கூதலை மந்தாரத்தையே ஏற்படுத்துக்கின்றன...
வணக்கம் சின்னக்குட்டியர்
என் பதிவைப் படித்துப் பதில் அளித்தமைக்கு என் நன்றிகள்.
//கோழிக்கோடு (Kozhikode) - வட கேரளாவில் உள்ளது. பல தெரிவுகளில் கோடு போட்ட பருத்தி ஆடைகளுக்கு மவுசு கிடைத்த ஊர், அதனாலேயே கோழிக்கோடு என்ற பெயரும் வந்ததாகச் சொல்லப் படுகின்றது//
பிரபா!
உங்களுக்குத் தெரிந்த விடயமாகத்தான். இருந்தாலும் சிறு ஞாபகப்படுத்தல் மட்டுமே.
ஒரு காலத்தில் கோழிக்கோடிலிருந்து கப்பல் மூலம் எங்களூருக்கு இறக்குமதியான வாழைப்பழங்களைத்தான் கப்பல் வாழைப்பழம் என்பார்களாம். அந்த வாழைப்பழங்களின் மற்றுமொரு பெயர் கோழிக்கோட்டு பழம்.
கோடை வெயிலுக்கு இதமான குளிர்ச்சியான பதிவு.
நன்றி!
வணக்கம் மலைநாடான்
கப்பல்வாழை பற்றிய வரலாற்றுத் தகவல் நான் இதுவரை அறியாதது, தகவல்களுக்கும், கருத்துக்கும் என் நன்றிகள்.
nice narration.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிகள் delphine
எந்த பிரபா நிங்களுன்ட கமெறவில ஒரு கேரளத்து கிளியும் கிட்டில்ல..?
நிங்கள் சைவமோ..?
ஏதோ ஒரு கிளிநாதம் என் கரலில் மதுமாரி பெய்து யாராக ஞான் நுகர்ந்து
உங்கள் பதிவை பார்த்ததும் இந்த ஜேசுதாஸின் பாடல் தான் நினைவுக்கு
வந்தது..
(மேலே சும்மா ஒரு ஜோக்கு)
selva
toronto
வணக்கம் செல்வா
கேரளத்துக் கிளியைப் படமெடுத்திருந்தால் என்னைக் கிழித்திருப்பார்கள்:-)
பயணம் நன்றாக இருக்கிறது.
தொடருங்கள் பிரபா........
வணக்கம் அஜீவன்
என் பயணக்கட்டுரையை வாசித்துக் கருத்துத் தெரிவித்தமைக்கு என் நன்றிகள்.
பவளக்கொடி படத்தில் இடம்பெற்ற "அந்தமான் தீவே அடி அந்தமான் தீவே..." எனும் பாடலில் வரும் காட்சிகளும் நீங்கள் உலாத்தலுக்குச் சென்ற இடங்களும் ஒரே இடமென்றே நினைக்கின்றேன்.
வணக்கம் இலக்கியா
நீங்கள் குறிப்பிட்ட பாடல் உட்படப் பல பாடல்களின் களமாக இந்தப் பிரதேசம் விளங்குகின்றது.
Post a Comment