Social Icons

Pages

Saturday, January 18, 2014

North 24 Kaatham (மலையாளம்) - வழித்துணை

இப்பொழுதெல்லாம் மனதுக்கு நிறைவு தரக்கூடிய நல்ல சினிமாவைப் பார்க்க வேண்டும், குறிப்பாக மலையாள சினிமா என்ற எண்ணம் வரும் போதெல்லால் ஃபாகத் ஃபாசில் இன் படங்களைத் தான் முதலில் தேட ஆரம்பிக்கிறேன். படத்துக்குப் படம் இந்த மனிதர் என்னமாய் ஒவ்வொரு படத்தோடும் ஒட்டிக் கொண்டு பயணிக்கிறார் என்பதை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறது North 24 Kaatham

ஓ.சி.டி (Obsessive compulsive personality disorder) என்ற விநோதமான மன உணர்வுக்கு ஆட்பட்டவர் மிகுந்த சுத்தபத்தமாகவும், எச்சரிக்கை உணர்வோடு இருப்பார் என்பதை அனுபவத்தில் கண்ட உண்மை. இதைப்பற்றி என் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த அனுபவம் ஒன்றையும் சமயம் வாய்க்கும் போது சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் ஹரிகிருஷ்ணன் என்ற நாயகன் பாத்திரத்தை ஏற்றிருக்கும் ஃபாகத் ஃபாசிலுக்கும் இதே பாங்கான மனவுணர்வோடு, இயல்பு வாழ்க்கையில் இருந்து தன்னை விலக்கி வாழ நடக்க முற்படுபவர். காலையில் எழுந்து தன் காலைக் கடனைக் கழிப்பதில் இருந்து அலுவலகப் பணி தாண்டிப் பொது இடங்களில் கூடத் தன்னுடைய இந்த விநோதமான சுபாவத்தில் இருந்து சமரசம் செய்து கொள்ளாத தொழில் நுட்பவியலாளன் இந்த ஹரிகிருஷ்ணன். எவரும் தன்னோடு வீண் அரட்டைக் கச்சேரி வைப்பதைத் தவிர்ப்பவர். தன்னைச் சுற்றி மட்டுமல்ல தன்னுடைய தொழிலிலும் இதே ரீதியான பூரணத்துவத்தோடு நடப்பதால் இவரின் சக பணியாளர்கள் வெறுப்போடு இவர் மீது கூறும் புகார்களையெல்லாம் தாண்டி, இவரின் மேலதிகாரிகளின் நேசத்தைப் பெற்றிருப்பவர்.

ஹரிகிருஷ்ணனுக்கு முக்கியமான ஒரு அலுவலகப் பணிக்காகத் திருவனந்தபுரத்துக்கு ரயில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. கூடப்பயணிக்கும் பயணிகோபாலன் (நெடுமுடி வேணு) என்ற முதியவர் தன்னுடைய மனைவி திடீர் நோய் வாய்ப்பட்டிருக்கிறார் என்ற தொலைபேசி அழைப்பால் தன் பயணத்தை இடை நிறுத்தித் கோழிக்கோடுவில் இருக்கும் தன் வீட்டுக்கு ரயில் எடுக்க வேண்டிய அவசரத் தேவை ஏற்படும் வேளையில் அதே ரயிலில் பயணிக்கும் இன்னொரு பயணி நாராயணி (ஸ்வாதி) கோபாலனை அவர் வீட்டில் சேர்ப்பிக்க முடிவெடுக்கிறாள். இந்தச் சிக்கலில் எதிர்பாராத விதமாக அகப்படுகிறார் ஹரிகிருஷ்ணன் (ஃபாகத் பாசில்). கேரளமே முழு நாள் ஹர்த்தாலை அனுஷ்டிக்க, இந்த மூவரும் கோழிக்கோடு எப்படிப் போய்ச் சேர்ந்தார்கள், ஹரிகிருஷ்ணனுக்கு இந்தப் பயணம் எந்த விதமான மன மாற்றத்தைக் கொண்டு வருகின்றது என்ற சாராம்சத்தில் வெகு இயல்பாகப் போரடிக்காமல் நகர்த்திச் செல்கின்றது இந்தப் படம்.

முதற்பந்தியில் சொன்னது போல ஃபாகத் ஃபாசிலுக்கு இது பொற்காலம். கிடைக்கும் படங்களெல்லாம் முத்து முத்தாக இவருக்கு அமைகின்றன. ஒவ்வொரு படத்திலும் எழுத்தோட்டத்துக்குப் பின்னர் ஃபாகத் ஃபாசில் என்ற நடிகனைக் காணமுடியவில்லை. அந்தந்தப் பாத்திரமாகவே மாறிவிடுகின்றார். இந்தப் படத்திலும் அதே அலைவரிசை தான். படத்தின் முதற்காட்சிகளில் ஹரிகிருஷ்ணன் என்ற அந்த விநோத சுபாவம் கொண்ட இளைஞனாகத் தன்னை மாற்றுவது அவ்வளவு சுலபமானதல்ல. அந்தச் சவாலை இவர் எளிதாகக் கடக்கிறார். இதுவரை எந்த ஹீரோயிச நிழலும் இவர் மேல் படாததால் இப்படியான பாத்திரங்களுக்கான திறமையான மூலப்பொருளாக அமைகின்றது இவரின் நடிப்பு.
சுப்ரமணியபுரம் ஸ்வாதிக்கு கேரளம் கொடுத்திருக்கும் இன்னொரு சிறப்பான படம் இது. இந்த நாயகி பாத்திரம் தமிழிலோ தெலுங்கிலோ படைக்கப்பட்டிருந்தால் அரை லூசாகவோ, நாயகனை ஏதாவது பண்ணி வளைக்க முற்படும் காமுகியாகவோ மாற்றிவிடுவார்கள். ஆனால் ஆர்ப்பாட்டமில்லாத அந்த நாராயணியாக ஸ்வாதியின் நடிப்பு வெகு திறம். அதிலும் குறிப்பாக, கோபாலன் மாஸ்டர் வீட்டிலுருந்து விடை பெற்ற பின்னர் ஹரிகிருஷ்ணனும், நாராயணியும் தனியே தத்தமது வீடுகளுக்குப் போகும் பயணத்தில் கிட்டும் உணவு போசனத்தில், நாரயணி ஹரிகிருஷ்ணனோடு பேச்சுக் கொடுக்கும் போது வழக்கம் போல அவன் சிடுசிடுப்பதும், பின்னர் அவனின் விநோத சுபாவத்தை விஷமத்தனமாக எள்ளல் செய்து அவனைச் சிரிக்க வைக்கும் கட்டத்தில் ஆகா அந்தக் "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்".

நெடுமுடி வேணு பற்றி என்ன சொல்ல, சினிமாவில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தவர்கள் படிப்படியாகக் குணச்சித்திர பாத்திரமேற்று நடிக்க முனையும் போது அதிலும் வித்தியாசத்தைக் காண்பித்து நிலைத்திருப்போரும் உண்டு. நெடுமுடி வேணு அந்த ரகம். வயதான அந்தக் குண்டுக் கிழவராக இந்த இரண்டு இளசுகளும் இழுத்துப் போகும் வழியெங்கணும் தானும் தம் கட்டிப் பயணிப்பதாகட்டும், தன் ஊரை அண்மித்ததும் ஒவ்வொரு இடமாகக் காண்பித்துப் பெருமை பேசுவதாகட்டும், இவரின் வீட்டில் நடந்த துன்பியல் நிகழ்வை அறியாது தன் வீட்டை நோக்கி நடை போடும் போது எதிர்ப்படும் மனிதர்களைக் கண்டு குசலம் விசாரிப்பதாகட்டும், வீடு வந்தததும் அந்த அதிர்ச்சியை நிதானமாகத் தாங்கிக் கொண்டு தன் மனைவி கொண்ட கொள்கைக்கு இணங்க இறுதி மரியாதை செய்வதாகட்டும் எல்லாமே இவரின் தேவையை இந்தப் படத்தில் உணர்த்தி நிற்கின்றன.

பிரேம்ஜி அமரனும் நடித்திருக்கிறார், ஒரு சின்ன வேடத்தில் ஆனால் என் பார்வையில் இவருக்குக் கிடைத்த உருப்படியான அலட்டல் இல்லாத வேடம் இது, "எவ்வளவோ பண்ணிட்டோம்" என்ற வழக்கமான பஞ்ச் ஐ இந்தப் படத்தில் சொல்லும் போது கூட. தலைவாசல் விஜய் மலையாளக் கரையோரம் கரை ஒதுங்கிவிட்டார். கீதாவும் உண்டு.

படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் இருந்தும் சமீபகாலமாக மலையாள தேசத்தை ஆக்கிரமித்திருக்கும் மேற்கத்தேய வாத்திய மோகத்தால் இசைக்கருவிகளை உருட்டி விளையாடுகின்றார்கள். கிடைத்த வாய்ப்பில் நல்ல மெலடிப் பாடல்களைச் சேர்த்திருந்தால் இன்னும் நிறைவாக இருந்திருக்கும்.

கோழிக்கோடு நோக்கிய இந்த மூவரின் பயணத்தில் ரயில், பஸ், ஜீப், ஆம்புலன்ஸ், மோட்டார் சைக்கிள், மீன் படகு எல்லாத்திலும் ஏறி, கேரளத்தின் திக்குத் தெரியாத திசைகளிலும் பயணிக்கும் கதைக்கு ஒளிப்பதிவு பலம் சேர்க்கின்றது. கதை, இயக்கத்தைக் கவனித்த இயக்குனர் அனில் ராதா கிருஷ்ண மேனனுக்குத் தான் மேற் சொன்ன அத்தனை பலத்திலும் பாதி போய்ச் சேரவேண்டும். அவ்வளவு நேர்த்தியாக நெறியாண்டிருக்கிறார்.

பயணம் என்பது எத்தனையோ புது மனிதர்களையும், இடங்களையும் சந்திப்பதன்று, பயணியை புத்துருவாக்க அது உறுதுணையாகின்றது மனிதர்களையும் அவர் தம் வாழ்வியலையும் படிக்க முடிகின்றது, நாயகன் ஹரிகிருஷ்ணனுக்கு மட்டுமல்ல, இம்மாதிரி அரிய படைப்பைப் பார்க்கும் ரசிகனுக்கும் கூட.

Thursday, October 31, 2013

சென்னையில் என் தலைத் தீபாவளி

தலைப்பைப் பார்த்து ஓடிவந்தால் கம்பேனி பொறுப்பல்ல :-) ஆனால் இந்தத் தலைப்புக்கும் காரணமிருக்கு. ஈழத்தைப் பொறுத்தவரை தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்புக்கு நிகராக தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. ஒரு புதுச்சட்டை எடுத்தோமா, கோயிலுக்குப் போனோமா, போய் வந்து பங்கு பிரித்த ஆட்டிறச்சியைச் சமைத்துச் சாப்பிட்டோமா என்ற அளவில் தீபாவளி நிறைந்துவிடும். பட்டாசு வெடிகளும் கிடையாது. கூடப் படித்த வட இந்திய நண்பன் வேறு, நாங்க தீபாவளி கொண்டாடுவது உங்க மன்னன் இராவணனை அழித்ததால் தானே என்று சொல்லிக் கடுப்பேத்தி வைத்திருந்தான் பல்கலைக்கழக காலத்தில்.
 
ஆனால் இந்தியாவில் முதன்மையாகக் கொண்டாடும் பண்டிகையே தீபாவளி எனும் போது, அதைப் பார்க்க ஆசை இருக்காதா என்ன? அந்த ஆசையை கடந்த வருடத் தீபாவளியில் நிறைவேற்றும் வாய்ப்புக் கிட்டியது.
தீபாவளி தினத்திலேயே  காலை வேளை கோயம்புத்தூரிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் சென்னைக்கு வருவதாக ஏற்பாடு.  காலையில் நண்பர் தெனாலி தொலைபேசியில் அழைத்து, என்னைச் சந்திக்கமுடியாமல் போனதுக்காக வருந்தினார். அவரைப்போலவே நிறைய நண்பர்கள் சொந்த ஊருக்குப் போனதால் தொலைபேசி வழியாக அவர்களின் குரலை மட்டும் கேட்கமுடிந்தது. கிட்டத்தட்ட 20 பேர் வரை நான் தமிழகத்தில் தங்கியிருந்த மூன்று நாட்களும் அழைத்துப் பேசினார்கள். கோவை விமான நிலையத்தில் பணிபுரியும் பெண்கள் பட்டுச் சேலை மினுமினுக்க, ஆண்கள் சர்வாணி சகிதம் மிளிர, அந்த இடமே பண்டிகைக் கொண்டாட்டம் நிகழும் அரங்கம் போலப்பட்டது.
கோவையில் தங்கியிருந்தாலும் நகரத்தையும் மக்களின் வாழ்வியலையும் பார்க்கமுடியவில்லை ஆனால் கோவை, திருப்பூர் நண்பர்கள் தலா ஐந்து மணி நேரம் தீபாவளிப் பரபரப்பிலும் சந்தித்தது பெருமகிழ்ச்சி உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்வேன்.
கோவை விமான நிலையத்தில் அந்த விடிகாலைப் பொழுதில் ராம்ராஜ் காட்டன் மற்றும் பனியன் கடையைத் தவிர வேறெந்தக் கடையும் திறக்கவில்லை.தீபாவளி தினம் விமானம் ஒழுங்காக குறித்த நேரத்துக்கு வந்து சேரவேண்டும் என்று மனதுக்குள் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கொண்டிருந்தேன்.  எல்லாம் டெக்கான் ஹெரல்ட் விமானம் கற்றுக்கொடுத்த பாடம் தான். 2004 வாக்கில் நான் கொச்சின் இருந்து மதியம் பெங்களூர் வருவதற்காக பதிவு செய்திருந்த டெக்கன் ஹெரல்ட் என்னை விமான நிலைத்திலேயே கிடத்தி வைத்து நடுச்சாமம் தான் கரை சேர்த்தது. தீபாவளி நாளில் இப்பிடி ஒரு அனுபவம் கிடைக்கக்கூடாது என்று எண்ணின்னேன்.
குறித்த நேரத்தில் ஸ்பைஸ் ஜெட்டும் என்னை சென்னையில் இறக்கியது. வணக்கம் வாழவைக்கும் சென்னை இழுக்குதென்னை உனக்கு ஈடு இல்லையே என்று மனதுக்குள் பாடிக்கொண்டேன். சென்னையைக் கண்டால் எனக்கு ஏகப்பட்ட புழுகம் என்பதை மேலும் அறிய இதையும் படிக்கலாம் (பகுதி விளம்பரம்)  சென்னை என்னை வா வா என்றது! http://www.madathuvaasal.com/2012/08/blog-post.html
 
ஏற்கனவே ஒழுங்கு செய்த வாடகைக்கார் சாரதியும் வந்துவிட்டார்.
 
அவர் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க பழுத்த பழம் நெற்றியில் திருநீற்றுப் பட்டை, முப்பது வருடங்களுக்கு மேலாக  வாடகைக்கார் ஓட்டுகிறாராம். சென்னையின் பாரிய வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. "என்னது ரோடில் ஆளுங்களையே காணோம்" என்ற என் குரலுக்கு, "தம்பி நீங்க தீபாவளி சமயத்துல வந்ததால தப்பிச்சீங்க, இல்லைன்னா நத்தை மாதிரித்தான் போயிருப்போம், முன்னல்லாம் இப்பிடி இல்லை தம்பி இப்ப பசங்களே டூவீலர்னு இருந்த காலம் போய் காரெல்லாம் வாங்கிடுறானுக, ரோட்ல கால் வைக்க முடியாது" என்று  அவர் சொல்லி முடிப்பதற்குள்,  "இங்க பாருங்க சார் பஸ்ஸை நிறுத்திட்டு முன்னாடி சரவெடி கொழுத்துறான் அறிவுக்கொழுந்து"  வால் பையன்கள் சிலர் ஓடி வந்து பட்டாசுக்கட்டைவீதியில் வைத்துக் கொழுத்திவிட்டு ஓடியதை வெறுப்போடு காட்டினார் எனக்கு உள்ளூரச் சிரிப்பு, நானும் அந்தக் காலத்தில் இப்பிடித்தானே ;-)

தி. நகரில் நான் தங்குவதற்கு ஏற்பாடு செய்த ஹோட்டலில் இறக்கிவிட்டு விடைபெற்றார் அந்தப் பெரியவர். 

சென்னை வரப்போகிறேன் என்றதும் கட்டாயம் சந்திக்கவேண்டும் என்று அன்புக்கட்டளையிட்டவர் சகோதரர் சஞ்சீவி @nemkals அவர்கள். ட்விட்டர் வழியாகத்தான் நட்பு, ட்விட்டரில் நான் இருவரும் பேசிக்கொண்டது குறைவு என்றாலும் நேரில் கண்டபோது அந்த உணர்வு சிறிதும் இருக்கவில்லை. தீபாவளியன்று காலை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போகவேண்டும் என்று நான் கேட்டபோது அவர் காருடனேயே வந்துவிட்டார். 
 கோயிலுக்குப் போகுமுன் கபாலீஸ்வரர் கோயிலில் இன்று காலை 10.30 மணிக்கு மினிமினி சந்திப்பு ஆர்வமுள்ள நண்பர்கள், தனிக்காட்டுராஜாக்கள் இணைந்துகொள்ளலாம், இப்படி ஒரு ட்விட் போட்டேன்.

இருவருமாகக் கோயிலுக்குள் பிரகார வலம் வந்தோம். கபாலீஸ்வரரை நான் சந்திப்பது இரண்டாவது தடவை. கடந்த தடவை இடம் வலம் தெரியாமல், தமிழக சுற்றுலா வாரியத்திலேயே என்னை ஒப்படைத்திருந்தேன். சுற்றுலா வழிகாட்டி என்னையும் கூட வந்தவர்களையும் ஒரு சம்பிரதாயத்துக்காக கோயிலைக் காட்டிவிட்டு மெரீனா பீச்சுக்கு இட்டாந்துவிட்டார் :-) இம்முறை சஞ்சீவ் நிதானமாக கோயிலின் உட்பிரகாரங்களைக் காட்டிக் கொண்டே வந்ததால் ஒரு குழந்தை போலப் புதுமையாகக் கவனித்துக் கொண்டே வந்தேன். சென்னையில் இருக்கும் இரண்டு நாட்களில் என்னைச் சந்திக்கவேண்டும் என்று பிரியப்பட்ட நண்பர்களின் அழைப்பு வேறு வந்து கொண்டிருந்தது. 

நண்பர் ரவி @ravi_2kpp அழைத்தபோது கபாலீஸ்வரர் கோயிலில் நாங்கள் மையம் கொண்டிருப்பதாகச் சொல்ல, இதோ வருகிறேன் என்று  தன்னுடைய  நண்பருடன் வந்துவிட்டார். ரவியின் நண்பர் ஒரு இசைக்கலைஞர், ஆஸ்திரேலியாவுக்கும் வந்திருக்கிறாராம். அடுத்த தடவை சிட்னிக்கு வரும் போது சொல்லுங்க வானொலியில் ஒரு பேட்டி எடுத்திடுவோம் என்றேன் நான். நாங்கள் கபாலீஸ்வரர் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் இருந்து பேசிக்கொண்டிருக்கும் போது என் செல்போனுக்கு ஒரு அழைப்பு. என் இலக்கத்தை பகிரங்கமாக இட்டதால் யார் அழைக்கிறார்கள் என்று நானே கேட்கவேண்டி இருந்தது. தன்னுடைய பெயர் ராஜேஷ் என்றும், மைலாப்பூரில் இருப்பதாகவும் நானும் இந்த ட்வீட் அப் இல் கலந்து கொள்ளலாமா என்றார். என்ன கேள்வி ஐயா உடனே வாருங்கள் என்றேன். அடுத்த நிமிடமே எமக்கு முன்னால் பட்டாசாக வந்திருந்தார் ராஜேஷ் @mylairajesh  , ஆமாம் அவர் ஆரம்பகாலத்தில் ட்விட்டரில் பட்டாசு என்றே ஹேண்டில் வைத்திருந்தவர். "ஆகா ஒரு பட்டாசே தீபாவளி தினத்தில் நம்மைத் தேடி வந்திருக்கிறதே" என்று கடித்தேன், சிரித்தார். எல்லாருமாக எங்காவது காலை உணவு சாப்பிடலாமா என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு கடையாகத் தட்டிப் பார்த்தோம். தீபாவளிக்கு சாத்து நடை சாத்து என்றிருந்தன.
மைலாப்பூர் வசந்தபவன் மட்டும் இனிதே வரவேற்றது.  இதற்குள் நண்பர் ராஜேஷ் எங்கோ ஒரு புத்தகக் கடை சென்று விவேகானந்தர், சுவாமி இராமகிருஷ்ணர் அருள்மொழிகள் அடங்கிய கனத்த புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து கையில் திணித்தார். வசந்த பவனில் ஆளாளுக்கு நெய், ரவா தோசை, தேநீராகாரத்துடன் மினி சந்திப்பை முடித்து விட்டு சகோதரர் சஞ்சீவிடம் நான் தங்கியிருக்கும் ஹோட்டலில் விட்டுவிடுகிறீர்களா என்று கேட்டால் "அதெல்லாம் முடியாது நம்ம வீட்டுக்கு வந்து மதிய உணவு எடுத்துவிட்டுத்தான் போகலாம்" என்று விடாப்பிடியாக நின்றார். கோவையில் அவர் படித்த காலத்தில் ஈழத்து நண்பர்களும் அவரின் நண்பர்களாக இருந்ததை நினைவு படுத்தி மகிழ்ந்தார் சஞ்சீவ்.
சஞ்சீவின் வீட்டில் அவரின் அப்பா முதற்கொண்டு, அம்மா, மனைவி, சகோதரர் ஈறாக எல்லோருக்கும் என்னை அறிமுகப்படுத்தி, அவர்களின் குடும்ப விருந்தில் என்னையும் கலந்து சிறப்பிக்க வைத்தனர். அமைதியான, பண்பான ஒரு உறவை எனக்கு இணையம் கைகாட்டி விட்டிருக்கிறதே என காரில் திரும்பும் போது நினைத்து நினைத்து நெகிழ்ந்தேன்.

 நண்பர் ஜி.ராவுக்கு அழைத்தேன்.  
"அமாஸ் அம்மா, சேகர் சார் வீட்டுக்குப் போகலாமா ஜி.ரா?"
"அவங்க படத்துக்குப் போறதா பேசிக்கிட்டாங்க, இருங்க பிரபா அவங்க வீட்டுக்கு அழைச்சுட்டு திரும்ப அழைக்கிறேன்"
"சாயந்தரம் தான் வருவாங்களாம் பிரபா"
கொஞ்சம் இளைப்பாறி விட்டுக் காத்திருந்தேன். ஜி.ரா தன் காரில் வந்தார். ஶ்ரீராம ராஜ்யம் இசைத்தட்டு உள்ளிட்ட அன்புப்பரிசைக் கை மாற்றினார்.  ஜி.ரா என்ற கோ.ராகவன் என் வலைப்பதிவின் ஆதாம் காலத்து நண்பர் என்பதால் அந்நியம் இல்லாமல் நிறையப் பேசிக்கொண்டு வந்தோம்.
அமாஸ் அம்மாவும், சேகர் சாரும் @amas32 @n_shekar வீட்டுக்கு வரவும் நாமும் போய்ச் சேரச் சரியாக இருந்தது.
 

சேகர் சார் - அமாஸ் அம்மா தம்பதிக்குத் திருஷ்டி சுத்திப் போடணும். இந்த சமூக ஊடகத்தில் இருக்கும் நட்பு வட்டங்களை இவர்கள் இருவரும் நேசிக்கும் பாங்கே தனி. இவ்வளவுக்கும் நாமெல்லோரும் முன்பின் பார்த்தே அறியாதவர்கள். சென்னை வந்தால் நம்ம வீட்டுக்கு வராமல் போகமுடியாது என்ற அவர்களின் அந்த வேண்டுகோளை நான் நிறைவேற்றினேன் என்பதை விட, என்னையும் ஜி.ராவையும் மீண்டும் சந்தித்துப் பேச வாய்ப்புக் கிட்டிய மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தெரிந்தது. மாலைச் சிற்றுண்டியும் சுடச் சுடக் கிட்டியது.  அமாஸ் அம்மாவின் அப்பா குறித்த ஆங்கில நூலையும் ஒரு திருவுருவப் படத்தையும் அன்புப் பரிசாகக் கொடுத்தார்கள். அந்த அழகான வீட்டின் வரவேற்பறையே தோட்டாதரணியின் கைவண்ணம் போல இருந்தது.
இவர்களது மனம் போல என்றைக்கும் நிறைவான வாழ்க்கை கிட்டவேண்டும் என்று பின்னர் கதிர்காமக் கந்தனைச் சந்தித்தபோது முருகனிடம் தனிப்பட்ட வேண்டுகோளை வைத்தேன்.

அமாஸ் அம்மா வீட்டில் இருந்து கிளம்பும் போது நண்பர் ராஜேஷ் பத்மன்  தொலைபேசினார். எங்காவது ஒரு காபி டே இல் சந்திப்போமா என்று ஜி.ராவே அந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தினார். குறுகிய நேரத்தில் காபி அருந்தியபடியே நிறையப்பேசினோம். விடைபெறும் நேரம் எனக்கு ஒரு மிரட்டலான தொலைபேசி அழைப்பொன்று, நான் யாருங்க நீங்க என்று கொஞ்சம் ஆட்டுக்குட்டியாக மாற, "கானா பயந்துட்டீங்களா நான் தான் இலவசக் கொத்தனார், யு.எஸ் லேர்ந்து அழைக்கிறேன், எப்படி சென்னை பயணமெல்லாம் இருக்கு" என்று சிரித்துக் கொண்டே குசலம் விசாரித்தார். ஆகா அண்ணன் ட்விட்டர் டி.பியில் தான் டெரர் போஸ் கொடுக்கும் கானா உலகநாதன் ஆனால் நேரில் பேசும் போது உள்ளத்தில் நல்ல உள்ளமாக இருக்கிறாரே என நெகிழ்ந்தேன். உண்மையில் அவர் அப்போது அழைத்த போது எனக்குக் கிட்டிய சந்தோஷத்துக்கு எல்லையில்லை.

சிட்னியிலிருந்து தீபாவளிக்காகப் புறப்பட்டசென்னை நண்பர் சுரேஷ், திருவல்லிக்கேணி வாங்க பிரபா நிறைய பட்டாசு வெடி போடுவோம் என்று முன் கூட்டியே சொல்லியிருந்தார். ஆனால் நான் எல்லா சந்திப்புக்களையும் முடிக்கவே மணி ஏழு கடந்ததிருந்தது. சுரேஷுக்கு அழைத்தால், அடடா அருமையான வாண வேடிக்கையை மிஸ் பண்ணிட்டீங்களே என்றார். உண்மைதான், சென்னையில் பூவே பூச்சூடவா படத்தில் நதியா கோஷ்டி பாடுமாற்போல "பட்டாசு சுத்தி சுத்திப் போடட்டுமா" அல்லது புதுக்கவிதை ரஜினி போல "வா வா வசந்தமே" பாட்டில் வரும் தெருவெங்கும் ஒளிவிழாவை காணக் கிட்டவில்லை. இப்போதெல்லாம் முன்ன மாதிரி சென்னையில் தீபாவளி களை கட்டுவதில்லை என்று நண்பர் சொன்னார்.

தீபாவளி என்றால் தமிழகம் கொண்டாடும் இன்னொரு விஷயம் புதுப்பட ரிலீஸ். சரி அதுக்காவது யோகமுண்டா என்று முடிவெடுத்து  தனியே தன்னந்தனியே தி நகரில் உலாவுகிறேன். சத்யம் தியேட்டர் போலாமா என்று ஒரு திட்டம்.

"ஆட்டோக்காரரே சத்யம் தேட்டர் போவணும்"
" ஒன் ஃபிப்டி சார்"
" சரீங்க"

இந்த நேரம் சத்யம் தியேட்டரில் படம் இருக்குமா? கடைசியா தகரக்கொட்டில் சத்யமில் சார்லி சாப்ளின் படம் பார்த்தது. இப்போது அந்தத் தகரக்கொட்டகையே இல்லாத மாட மாளிகை போல சத்தியமாக இருந்தது.

 
விஜய் மக்கள் இயக்க்க்க்க்க்க்கம்ம்ம்ம்

கூட்டத்தைப் பிரித்து டிக்கெட் கவுண்டரை எட்டிப் பார்த்தேன்.
"சார்ர்ர் நைட் ஷோ ஃபுல்லு சார்"
 "சரீங்க :("

ஒரு விஐபியை சீட்டில் அமரவைக்கும் பாக்கியத்தை சத்யம் இழந்துவிட்டது
 அந்த நேரம் ட்விட்டரைப் பார்த்தேன், யாரோ ஒரு புண்ணியவான் எக்ஸ்ப்ரஸ் அவெனியூ போங்க அங்கே மல்டிப்ளெக்ஸ் இருக்கு என்றார்.

ஆட்டோக்காரரே எக்ஸ்ப்ரஸ் அவெனியூ வருமா? 
வராதுங்க
எப்பிடிப் போறதாம்? 
லெப்டு அப்புறம் லெப்டுல கட்டு

நடு நிசியில் தனியே ராயப்பேட்டையில் ராஜ நடை போட்டேன்.

ஒரு யோசனை தட்டி இன்னொரு முருங்கை மரம் நோக்கிப் போய்க்கிட்டிருக்கேன் #தேவி தியேட்டர்
தக்காளி, சாந்தித் தியேட்டரில் அம்மாவின் கைப்பேசியாவது பார்த்துடணும்யா என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்
ம்கும் தேவி தியேட்டர் உள்ளயே போகமுடியாது இந்த லட்சணத்தில் டிக்கட் கிடைக்கும்கிற? என்ற அளவில் கும்பமேளாவாக இருந்தது.

பீட்சா டிக்கட் இருக்காம் ஆனா நமக்கு பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக் ஆச்சே #பயம் அது வேற டிப்பார்ட்மெண்ட்
இது இப்பிடியிருக்க, எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி சாந்தி தியேட்டர் நன்றாகத் தூங்குகிறது

ஏதோ ஒரு நப்பாசையில் மீண்டும் தேவி பரடைஸ் நோக்கி நடை, ஒருவாறு சந்நிதியை  அடைந்து விட்டேன், அதாங்க தியேட்டர் வாசல்.
துப்பாக்கி வச்சிருக்குறவங்க எல்லாம் உள்ள வந்துடுங்க மத்தவங்க வெளில போயிடுங்க #யோவ் சரியா பேசுய்யா தூக்கி உள்ள போட்றுவானுக, துப்பாக்கி டிக்கெட் என்று சொல்றதுக்குப் பேச்ச பாரு பேச்ச என்று உள்ளுர முணுமுணுத்துக் கொண்டே

தி நகர் ஹோட்டல் -> சத்யம்-> ராயப்பேட்டை -> தேவி பாரடைஸ் -> சாந்தி -> தேவி பாரடைஸ் (இன்னொரு வாட்டி செக்கிங்) -> தி நகர் ஹோட்டல்  என்று மீண்டும் அதே இடத்துக்கு வந்தபோது நள்ளிரவுக்கு ஒரு சில நிமிடங்கள் பாக்கி.

பசி வயிற்றைக் கிள்ளியது, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பக்கமெல்லாம் சேலைக்கடைகளின் நிழல்கள் தான், ஒன்றிரண்டு சாப்பாட்டுக்கடைகளையும் கழுவித் துடைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பெட்டிக்கடைக்குப் போய் சோடா ஒன்று வாங்கி வயிற்றை நிரப்பிவிட்டுப் படுக்கையில் சாய்ந்தேன். சென்னையில் நான் தேடி வந்த தீபாவளியில் பட்டாசு வாண வேடிக்கையும், புதுப்படமும் இல்லாவிட்டாலும் இணையம் மூலம் சம்பாதித்த நல்ல உள்ளங்களை முதன்முதலாகச் சந்தித்து இந்த நாளைக் கொண்டாட வழி விட்ட ஆண்டவனுக்கு நன்றி.

அடுத்த நாள் எதிர்பாராத ஒரு அனுபவம் வாய்த்தது.


Tuesday, October 08, 2013

பாரா சார் - இசை போல வாழ்வு

சின்ன வயசிலிருந்தே வேர்க்கடலைப் பேப்பர் சரையில் இருக்கும் எழுத்துக்களையும் தேடிப்படிக்கும் சுபாவம் எனக்கு. அதனாலோ என்னவோ எழுத்தாளர்கள் என்றால் தனி மரியாதை என்பதை விட, இந்த ஆக்க இலக்கியக்காரர்களை நேரில் நடமாடும் பிரம்மாக்களாவும் மனதில் போற்றிக் கொள்வேன். ஈழத்தில் இருந்த காலத்தில் அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். முதன் முதலில் "காட்டில் ஒரு வாரம்" என்ற அநு.வை.நாகராஜனின் நூல் வெளியீட்டு விழாவுக்குப் போகிறேன், அந்த நூல் ஒரு சிறுவர் இலக்கியம் என்பதால் அந்த எழுத்தாளர் தன் கையெழுத்துப் பிரதியையே எனக்குக் கொடுத்து வாசிக்க வைத்து அணிந்துரை எழுத வைத்தது தனிக்கதை. புத்தக வெளியீட்டு விழாவில் கண்ணில்பட்டவர்களெல்லாம் சொக்கன், வரதர் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன் என்று இன்னும் பல ஈழத்தின் மிகப்பெரும் எழுத்துலக ஆளுமைகள். ஒரு உச்ச சினிமா நட்சத்திரத்தை திரையில் பார்த்துப் பழகிப்போன கடைக்கோடி ரசிகன் நேரில் காணும் போது உண்டான தவப்பலன் போல எனக்கு அது. பின்னாளில் நிறைய எழுத்தாளர்களை நேரிலும், வானொலிப்பேட்டிகளிலுமூடாகத் தரிசித்து விட்டாலும் அந்தச் சிறுவயது பிரமிப்பு கொடுத்த சுகம் இன்னும் அகலவில்லை. 

எப்போதோ எங்கோ ஒரு திசையில் இருந்து எழுதி வைத்தாலும் அந்த எழுத்தாளனின் படைப்பை வாசிக்கும் நேரத்தில் இருந்து தன் எழுத்துகளினூடே வாசகனுடன் அவன் பேசத்தொடங்குகிறான். பிடித்த எழுத்தாளர், பிடிக்காத எழுத்தாளர் என்று வாசகன் இனம் பிரிப்பதும் கூட இங்கே தான் ஆரம்பிக்கிறது. சில எழுத்துகளைப் படிக்கும் போது அட இதை நாமும் கூட நினைத்திருக்கிறோமே என்று கூட எண்ணுவதுண்டு. வாழ்வின் சில தீர்வுகளை ஏதோ ஒரு படைப்பின் வழியாகப் பெற்றுக்கொள்கின்றான் வாசகன். அங்கே தான் எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான ஆத்ம பந்தம் இன்னும் வலுப்பெறுகிறது.

பாரா சார் என்று அன்போடு நாம் அழைக்கும் எழுத்தாளர் பா.ராகவன் அவர்களை சமூக வலைத்தளங்களினூடாகத் தான் அறிமுகம். எப்போது, எப்படி அறிமுகமானார் என்று பலரை நினைப்பதுண்டு. ஆனால் அவர்கள் மீதான நேசம் குறைவதில்லை. உண்மையைச் சொல்லப் போனால் பாரா சாரின் புத்தகங்களை விட தன்னுடைய தளத்தின் வழியாகப் பகிரும் பத்தி எழுத்துகளையே அதிகம் தொடர்ந்து வாசித்து வருபவன். அந்த எழுத்துகளே அவரின் தொடர்ந்து பற்றுக என்று மனம் சொல்ல வைத்தவை. பாரா சார் மீதான மதிப்பு இன்னும் அதிகப்பட இன்னொரு அதி முக்கிய காரணம் ஒன்றுள்ளது, அதுவே என்னை இவ்வாறெல்லாம் எழுதத்தூண்டியது என்றும் சொல்லலாம்.

பொதுவாகவே பிரபலங்கள் தம்மைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாத ஒரு நெருப்பு வளையத்தை வைத்திருப்பார்கள். அந்த வளையத்தைத் தாண்டி வர வாசகனையோ, ரசிகனையோ அனுமதிக்க மாட்டார்கள். அதிலும் இன்று சமூக வலைத்தளங்களில் பெருகிவரும் ஏகலைவ எழுத்தாளர்களைக் கண்டால் சிலருக்கு நாசி கடிக்கும். இந்தச் சூழலில் தான் பாரா சாரின் தனித்துவம் வெளிப்படுகிறது. ஒரு எழுத்தைப் படித்தால் அது யார் எழுதியது என்ற ரிஷி மூலம் பார்க்காமல் தனக்குப் பிடித்திருந்தால் நாலு பேருக்குப் பகிர்வார், அதே சமயம் எழுத்துப் பிழை, கருத்துப் பிழை இருந்தால் வலிக்காமல் குட்டுவார். இதையும் தாண்டி, எந்த வித சமரசங்களும் இல்லாமல் நட்போடு பழகுவதில் அவருக்கு நிகர் அவரே. 

கடந்த நவம்பர் மாதம் நான் இந்தியாவுக்குப் பயணப்படுவதாக அறிந்ததுமே "என்னைய்யா இங்க வந்துட்டு என்னைப் பார்க்காமப் போனா தொலைச்சுப்புடுவேன்" என்று அன்புக் கட்டளை பாரா சாரிடமிருந்து. ராப்பகலா எழுத்துப் பணிக்குள்ளும் நம்மை எல்லாம் சந்திக்க நேரம் ஒதுக்குகிறாரே என்ற இன்ப அதிர்ச்சியோடு, சென்னையில் இருந்த அந்த இரண்டு நாட்களில் ஒரு நாள் காலைப்பொழுதில் வட பழனி முருகனைச் சேவித்து விட்டு பாரா சாருக்கு அழைப்பிடுகிறேன். "இதோ இப்பவே வர்ரேன்" என்றவாறு வட பழனியிலுள்ள சரவணபவனில் சந்திப்பதாகக் கூறிவிட்டு விரைகிறார். காலைச் சாப்பாட்டை வாங்கிப் பரிமாறியவாறே தங்கு தடங்கலின்றிப் பேசுகிறோம். சரவணபவனில் சந்திப்பு முடிந்ததும் வேறு சில நண்பர்களைச் சந்திப்போம் என்று நினைத்தால், "இவ்வளவு தூரம் வந்திருக்கே, நம்ம வீட்டுக்கு வராமப் போகக்கூடாது" என் பதில் வார்த்தைக்குப் காத்திராமல் முன்னே பறக்கிறார். எனக்கோ அவரின் பொன்னான நேரத்தைத் திருடுகிறோமே என்ற குற்ற உணர்வு. பாரா சார் வீட்டிலும் அன்பான உபசரிப்பு தந்தையின் குணத்தில் வீட்டுக்கு வந்த விருந்தாளியையும் முகம்கொடுத்துக் கனிவாகப் பேசும் மகள் வேறு. எங்கள் பேச்சுக்கச்சேரி மூன்று மணி நேரங்கள் கடந்த பின்னரும் நான் மொள்ள பிரியாவிடை கொடுத்தாலும் "கானா கானா என்ன ஆளுய்யா நாள் முழுக்க நம்ம வீட்ல இருந்துட்டுப் போறது தானே" எனச் செல்லமாகக் கடிந்தார். சிரித்துக்கொண்டே விடைபெற்றேன்.

ஒருமுறை இகாரஸ் பிரகாஷ், புத்தக வடிவமைப்பில் பாரா சார் கொண்டிருக்கும் சிரத்தை குறித்த ஒரு அனுபவப் பகிர்வைக் கொடுத்திருந்தார். லே அவுட் சமாச்சாரத்தில் சமரசம் கொள்ளாது விடாது வாங்கிக் கொள்ளும் அந்தச் சம்பவக்குறிப்பு இப்போதும் ஏதாவது ஒரு Project செய்யும் போது என் மூளைக்குள் ஓடும் அளவு அது பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. 

பாரா சார் நல்லதொரு இசை ரசிகர் என்பதைப் பல தருணங்களில் கண்டுணர்ந்தாகிவிட்டது. இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் அவருக்கு விலை உயர்ந்த பரிசு என்று ஏதும் உண்டெனில் அது இந்தப் பாட்டாகத் தான் இருக்கும். 
இசையில் தொடங்குதம்மா 

http://youtu.be/ox0gJGCasZc


Wednesday, December 26, 2012

திடீர் திருப்பூர் பதிவர் சந்திப்பு

சில விடயங்களைச் செய்யவேண்டும் என்று ஏகப்பட்ட திட்டம் எல்லாம் போட்டிருப்போம் ஆனால் சொதப்பிவிடும். ஆனால் இன்னும் சிலதை எந்தவித முன்னேற்பாடுமின்றித்  திடுதிப்பில் தோணும்போது செய்ய நினைக்கும் போது இன்னும் சிறப்பாக வந்து விடும். அப்படியானதொரு நிகழ்வு தான் திருப்பூர் நண்பர்களை நான் சந்தித்த கதை.

கோயம்புத்தூருக்குப் போகிறேன் என்று ட்விட்டர் வழியாகச் சொன்னதும், என் நேசத்துக்குரிய ராஜநாயஹம் சார் "பிரபா, கோவையிலிருந்து திருப்பூர் பக்கம் தான்,  கண்டிப்பா நீங்க எங்க வீட்டுக்கு வரணும்" என்று அன்புக்கட்டளையிட்டார். எனக்கோ திருப்பூர் என்றார் டிவியில் பார்த்த பனியன், ஜட்டியைத் தவிர வேறொன்றும் தெரியாத நிலையில் மீண்டும் நண்பர் சதீஷிடம் அடைக்கலம் புகுந்தேன். அவரும் "மிஞ்சி மிஞ்சிப்போனா ஒண்ணரை மணி நேரம் தான் ஆகும், காலேல சீக்கிரமா போயிட்டு வந்துடலாம், நானே என் காரை எடுத்து வர்ரேன்" என்றார். இதற்குள் சென்னிமலை சி.பி.செந்தில்குமார், "இவ்வளவு தூரம் ஈரோடு வராவிட்டால் ஆட்டோ அனுப்புவோம்" என்று மிரட்டியிருந்தார். கோவையில் தங்கியிருந்த அந்த தீபாவளி தினத்துக்கு முதல் நாள் காலை யாரையும் சந்திக்கமுடியாத சூழல் வேறு. எனவே நண்பர் சதீஷை காலை ஏழரை மணிக்கெல்லாம் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வரச்சொல்லியிருந்தேன். அவரும் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தார்.

சதீஷின் காரில் இளையராஜா ஒலிக்க, ரசித்துக் கொண்டே மீண்டும் பேச்சுக்கச்சேரியோடு பயணித்தோம் திருப்பூர் நோக்கி. திருப்பூரில் சந்திக்கவிருக்கும் நண்பர்களுக்கு ஏதாவது வாங்கிக்கொண்டு போவோமே என்ற நினைப்பில் வழியில் இருந்த ஆனந்த பவனில் இனிப்புப் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு மீண்டும் ஆரம்பித்தது பயணம். அவிநாசி ரோட்டிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் பாய்ந்தது கார். வழியெங்கிணும் இரு மருங்கிலும் தமிழ்ப்பெயர் தங்கிய கடைகளைக் காணும் போது முந்திய தினம் இரவு கோயம்புத்தூருக்குள் நுழைந்த அதே பரவசம் உள்ளூர இருந்தது.  நாங்கள் சென்ற அந்த அகலப் பெருந்தட வீதியின் சீரமைப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

வீதியை நோட்டம் விட்டுக் கொண்டே செல்போனில் ட்விட்டரின் டைம்லைனைத் தட்டிப்பார்த்துக் கொண்டேன். நண்பர் பரிசல்காரன் திருப்பூர் பதிவர் சந்திப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாதே எறு ஆதங்கப்பட்ட ட்விட் ஒன்று கண்ணில் சிக்கியது. அவருக்கு நான் முந்திய தினம் திருப்பூர் சந்திப்பைப் பொதுவாக டைம்லைனில் இட்டதைச் சொல்லி விட்டு மீண்டும் நோட்டம்.
அவிநாசியைத் தொடும் போது நண்பர் ராஜன் லீக்ஸ் நினைவுக்கு வந்தார். அப்படி ஒரு ஊர் இருப்பதே அவர் மூலம் தான் அறிந்து கொண்டதன் விளைவு அது. நாங்கள் சாவகாசமாகப் பயணித்து மணி பத்தை எட்டும் போது திருப்பூருக்குள் நுழைந்துவிட்டோம்.

 திருப்பூர் புகையிரத நிலையத்தில் இருந்து நண்பர் ஆகாய மனிதனின் அழைப்பு, தானும் சென்னிமலை சி.பி.செந்தில் குமாரும் அங்கிருப்பதாக.  "இதோ திருப்பூர் வந்தாச்சு அங்கேயே வருகிறோம்" என்று சொல்லிவிட்டு  ரயில் நிலையம் நோக்கிப் போனோம்.  எங்கே போகலாம் என்று அங்கேயே வைத்துத் திட்டம் தீட்டினோம். திருப்பூர்க்கார் ஆகாய மனிதனே தீர்மானித்து அங்குள்ள திருப்பூர்  மாநகராட்சி வெள்ளிவிழா நினைவுப்பூங்காவுக்குப் போகலாம் என்று முடிவு கட்டியாச்சு. நம் சந்திப்புக்கு வருவதாக இருக்கும் ராஜநாயஹம் சாருக்கும் அழைத்துச் சொல்லிவிட்டு, ட்விட்டரிலும் இந்தச் செய்தியைப் பகிர்ந்தோம்.

நண்பர் ஆகாய மனிதன் (யுவராஜ்) @onely1 பெயரைப் பார்த்தால் ஏதோ ஐம்பதைத் தாண்டிய மனுஷர் என்று நினைத்தால் பெயருக்கும் அவருடைய சிந்தனைகளுக்கும் சம்பந்தமில்லாத ஒரு இளையவர். ஈழத்தமிழ் மக்கள் மீதும், உரிமை மீதும் அவருக்கு இருக்கின்ற தீவிர அக்கறையை திருப்பூர் சந்திப்பில் வைத்துத் தெரிந்து கொண்டேன்.
 உண்மையில் நண்பர் சி.பி.செந்தில்குமாரை நேரே சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் இந்தப் பயணத்தில் அது நிறைவேறாது போய்விடுமே என்று நினைத்த எனக்கு அவர் ஈரோட்டிலிருந்து ரயிலில் இந்தச் சந்திப்புக்காகக் காலையிலேயே வந்தது நெகிழ வைத்தது. அதை அவருக்கும் சொல்லி என் நன்றியறிதலை வெளிப்படுத்தினேன்.  மனம் சோர்வாகிப்போன நாட்களில் எல்லாம் திரும்பவும் ஒரு முறை சி.பி.செந்தில்குமாரின் ட்விட்டுக்களையும், அவரின் பாணியில் கொடுக்கும் கலகல சினிமா விமர்சனங்களையும் படித்து வருபவன் நான்.  என் தலைமுடியை "திருவிளையாடல் படத்தில் வரும் முத்துராமன், தேவிகாவின் தலையை நோண்டுமாற்போல" நோண்டி என் கூந்தல் இயற்கையிலேயே கருப்பா? என்று ஆராய்ச்சியும் அங்கு நிகழ்த்தினார் சென்னிமலையார்.
சி.பி. செந்தில்குமாரின் தந்தையார் வைத்திருந்த ஐம்பது வருஷங்களுக்கு முந்திய திரைப்படப்பாடல்களைக் கொண்ட பாட்டுப் புத்தகங்களை எனக்குத் தந்து "இவை சிட்னியிலாவது பத்திரமாக இருக்கட்டும்" என்று கொடுத்த அந்தப் பொக்கிஷம் இப்போது பத்திரமாக என் வீட்டு நூலக அறையில் பாதுகாப்பாக இருக்கின்றது.

 ராஜநாயஹம் சாரின் எழுத்துக்களின் தீவிர அடிமை நான்,  நீண்ட அனுபவங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் அந்தப் பெரிய மனிதரின் கடைக்கண் பார்வை நம்மீதும் இருக்கின்றது என்ற பெருமை இன்றளவும் எனக்குண்டு.  பார்க்கிற்குத் தன் டூவீலரில் வந்து சேர்ந்தார் அவர். எனக்கென அவரின் நண்பர் சாரு நிவேதிதாவின் சிறுகதைத் தொகுதியைக் கொடுத்தார். தன் வீட்டிலேயே சந்திப்பை நடத்தியிருக்கலாம், மதிய உணவும் எடுத்திருக்கலாம் என்ற ஆதங்கத்தை சந்திப்பின் இறுதி வரை சொல்லி ஆதங்கப்பட்டார். அடுத்த தடவை அவர் வீட்டில் தான் நம் சந்திப்பு. இயக்குனர் கே.பாக்யாராஜோடு பணிபுரிந்த காலங்கள், சொல்லப்படாத சேதிகள் எல்லாம் அவரிடமிருந்து கொட்டின. ரசித்துக் கேட்டோம்.
 இந்தச் சந்திப்புக் குறித்து ட்விட்டர் மூலம் அறிந்து திருப்பூர்வாசி சத்திய மூர்த்தி அவர்களும் வந்து சேர்ந்தார். வந்ததன் பின்னர் அவரும் ஆகாய மனிதனின் அப்பாவும் நண்பர்கள் என்ற உண்மையும் அவர்கள் இருவருக்கும் தெரிந்தது. சமூக வலைத்தளங்களால் இந்த இளைய சமுதாயம் தம் நேரத்தைக் கட்டுப்பாடின்றி வீணடிக்கிறதே என்ற ஆதங்கம் தொனிக்க சத்தியமூர்த்தி அவர்களின் பேச்சு இருந்தது.

இடமிருந்து வலம்: ஆகாய மனிதன், நான், சதீஷ், சி.பி.செந்தில்குமார், ராஜநாயஹம் சார், பரிசல்காரன்

பரிசல்காரன் (கிருஷ்ணகுமார்)  தன்னுடைய மகள்களுடன் தீபாவளிக்கான கொள்வனவுக்குப் போகும் வழியில் நம்மையும் சந்திக்க வேண்டி வந்திருந்தார்.  அவரின் எழுத்தில் இருக்கும் அதே நிதானம் நேரில் சந்திக்கும் போதும். ஒடிசாவில் தன் மடிக்கணினியைத் தொலைத்த வரலாற்றிலிருந்து திருப்பூர் வாழ்வியலில் கார்மெண்ட் இண்டெஸ்ட்ரி குறித்து அவர் பகிர்ந்து கொண்ட பல விடயங்கள் சுவாரஸ்யமாக இருந்தன.  அதுவரை குழப்பமாக இருந்த சர்ச்சைக்குரிய ட்விட்டர் குழப்பங்களுக்கு  விடையும் கிடைத்தது.  நான் சந்திக்கவிருந்த நண்பர் பட்டியலில் இருந்த பரிசல்காரனும் தன்னுடைய குடும்பப் பொறுப்போடு பொறுப்பாக இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டது மட்டற்ற மகிழ்ச்சி.
 ராஜநாயஹம் சார், பரிசல்காரனின் மகள்களை அழைத்துக் கொண்டு போய் கூல் ட்ரிங்ஸ் வாங்கிக் கொடுத்து விட்டு நம் சந்திப்புக்குமென நீராகாரம் வாங்கி வந்தார். சமீபகால மின்தடை, சாயத்தொழிற்சாலைக் கழிவுகளை ஆற்றில் கலப்பதற்கு எதிரான நடவடிக்கைகளால் திருப்பூரின் முதுகெலும்பான ஆடை உற்பத்தி, சாயம் தீட்டும் தொழில் போன்றவை பாதிக்கப்படும் இன்றைய சூழலும் குறித்த கலந்துரையாடலில் முக்கியமாகப் பேசப்பட்டவை.
மூன்று மணி நேரம் நிகழ்ந்த அந்தச் சந்திப்பை, பார்க்குக்கு வந்தவர்களே ஏதோ அரசியல் கூட்டம் என்று நினைக்குமளவுக்கு ஆக்கிவிட்டு, ஏதாவது ஆங்கே வயிற்றுக்கும் ஈயப்படும் என்று பக்கத்து ஓட்டலுக்குப் போகலாம் என்று முடிவானது. ராஜநாயஹம் சாரும், பரிசல்காரன் மகள்களுடனும் அங்கேயே விடை கொடுத்தனர்.



படத்தின் இடது மூலையில் சத்தியமூர்த்தி அவர்கள்.

சத்தியமூர்த்தி அவர்களோடு, ஆகாய மனிதன், சி.பி.செந்தில்குமார், சதீஷ் ஆகியோரோடு திருப்பூர் சரவணபவன் ஹோட்டலுக்குப் போனோம். சோறு, கறி சாப்பாடு கிடையாது என்று கைவிரிக்க, சென்னிமலை முகம் சுருங்க டிபனோடு அரங்கேறியது சாப்பாட்டுக் கச்சேரி. அப்போது அவிநாசியில் இருந்து இட்ஸ்பிரசாந்த் என்ற பிரசாந்தும் வந்து சேர்ந்தார். சாப்பாட்டில் இல்லாத காரம் அவரின் பேச்சில், கிட்டத்தட்ட தெலுங்கு ஹீரோ ரேஞ்சில்.  அங்கிருந்தோர் எல்லோருக்கும் இளையவராக அவர்.  கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் நிகழ்ந்த திருப்பூர் சந்திப்பு சரவணபவனில் நிறைவுக்கு வந்தது.

கோயம்புத்தூர் நோக்கி நண்பர் சதீஷுடன் பயணிக்கும் போது நண்பர் @6SayS இன் அழைப்பு. தான் அவிநாசியில் தான் கடை வைத்திருப்பதாகவும்  போகும் வழியில் சந்திக்குமாறும் வேண்டினார்.

அவிநாசியில் மின் உபகரணங்களை விற்கும் கடையைச் சொந்தமாக நடத்திவரும் இளைஞர் அவர். உருவத்துக்கும் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லாமல் அவர் தன்னுடைய தொழில் குறித்துப் பேசும் போது எனக்கும் சேர்த்து நண்பர் சதீஷ் வியந்தார். தமிழகம் எதிர்நோக்கும் மின் தடைக்கு மாற்றீடாக சூரிய ஒளி மின் பிறப்பாக்கிகளை தானே எடுத்துச் சென்று வீடுகளுக்குப் பொருத்தும் அனுபவங்களையும், வாடிக்கையாளர் சேவை எவ்வளவு தூரம் ஒரு வியாபாரத்தில் முக்கியமானது என்றும் அவர் பேசப் பேச, இந்தப் பிள்ளை பிழைக்கும் என்று மனதில் எண்ணிக்கொண்டேன். அவர் பொழுதுபோக்கிற்காகப் புகைப்படங்களை எடுத்து வருகிறார் என்பதை வைத்திருந்த உயர்ரக காமெரா பறை சாற்றியது. அந்தத் தீபாவளிக்கு முந்திய நாளிலும் கடையில் தனியாளாக இயங்கிக் கொண்டிருந்த அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டோம்.
உண்மையில் எனது இந்த ஆண்டுப் பயணத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த சந்திப்புக்களில் மிக நீண்டதொரு நிறைவான சந்திப்பாக திருப்பூர் சந்திப்பு அமைந்து விட்டது.

Wednesday, December 19, 2012

சென்றும் செல்லாத கோயம்புத்தூர் பயணம்

கோழிக்கோடுவில் இருந்து கோவை நோக்கிய பஸ் பயணத்தில், எனக்கு அடுத்த பக்கத்தில் இலங்கையில் இருந்து வந்திருந்த கன்னியாஸ்திரிகள் யாழ்ப்பாணத்தமிழில் அளவளாவிக்கொண்டிருந்தனர்.  டிவியில் சரத்குமார் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். நானோ யன்னலோர இருக்கையில், அந்த இருளிலும் ஏதாவது வெளிச்சத்தில் தென்படும் இடங்களைத் தேடித் தேடிப் பார்த்துக் கொண்டே வந்தேன். பாலக்காடு வந்தது. நான் அடுத்த பயணத்தில் வரத் தீர்மானித்திருக்கும் ஊர் இது. நிறையப்படங்களில் பார்த்ததை நேரே காணும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு உணவகத்தில் இரவு ஆகாரம் கழிப்பதற்காக பஸ் நிறுத்தப்பட்டது. நான் சுற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இருபது நிமிட வாக்கில் மீண்டும் பயணம். மெல்ல மெல்ல கோவை மண்ணை பஸ் தொடுவதை உணர்த்துமாற்போலத் தமிழில் பெயர்ப்பலகைகள், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து முழுமையான தமிழ்ச் சூழலை உணர்த்தும் வண்ணம் இரவு விளக்கொளியில் சுற்றும் முற்றும் தமிழ்ப் பெயர்கள், எங்கும் தமிழ்ப் பெயர் தாங்கிய கடைகள். ஆகா இதைப் பார்க்கும் போது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. கோயம்புத்தூர் என்றாலே கோவை சரளாவையும், ஜி.டி.நாயுடுவையும், அவ்வூர் வட்டார மொழி வழக்கை மட்டுமே அதுவரை அறிந்து வைத்திருந்தேன். கோவைக்கு வந்து தனது முதற் தரிப்பில் ஆட்களை இறக்கியது பஸ், நானும் இறங்கிக் கொண்டேன்.

 நான் இந்தியப்பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக ட்விட்டரில் பகிர்ந்தபோது, மிகுந்த அக்கறையோடு பயண ஏற்பாடுகளை அவ்வப்போது விசாரித்து, தானே எல்லா ஏற்பாடுகளையும் செய்வதாகச் சொல்லி நெகிழ வைத்தவர் நண்பர் சதீஷ் (@saysatheesh). இத்தனைக்கும் இரண்டு வருடம் முகம் காணாத நட்பு, ஒத்த இரசனை மட்டுமே நம்மை நெருங்க வைத்தது. மாலையில் கோழிக்கோடுவில் இருந்து பஸ்ஸில் கோவைக்கு வரும்போது இருட்டி விடும் எனவே நானே உங்களை பஸ் நிறுத்துமிடத்துக்கு வந்து ஹோட்டலுக்கு அழைத்துப் போகிறேன் என்றார். எனக்கோ ஏன் இவரைக் கஷ்டப்படுத்துவான், அடுத்த நாள் வேலை நாளாகக் கூட இருக்குமே என்று அவரிடம் சொன்னாலும் கேட்கவில்லை. "அது ஒண்ணும் பிரச்சனை இல்லை, பஸ் வர்ர நேரம் எத்தனை மணிக்குன்னு கேட்டுச் சொல்லிடுங்க நானே என் காரில் வந்து காத்திருக்கிறேன்" என்று சொன்னார்.
எனக்காக நண்பர் சதீஷும் மனைவியும் காத்திருந்தார்கள். முதல் முறை நேரே சந்திக்கிறோம், எனக்கென்னவோ பள்ளிக்கால நண்பரை நீண்ட நாட்களுக்குப் பின் கண்ட உணர்வு. நான் கோவையில் இருந்த இரண்டு இரவு, ஒரு பகல் பொழுதை நண்பர் சதீஷ் இருக்கிறார் என்ற பாதுகாப்புணர்வை ஏற்படுத்திவிட்ட அவரை எப்படி மறப்பேன்.

கோவை வாழ்க்கையைப் பற்றிப் பேசிக்கொண்டே நண்பர் சதீஷ் காரில் என்னை பார்க் ப்ளாஸா ஹோட்டலுக்கு அழைத்துப் போனார்.  தொடர்ச்சியான 14 மணி நேரத்துக்கும் மேலான மின்வெட்டால் கோயம்புத்தூர் போன்ற தொழிற்பேட்டை நகரம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பதை அந்தக் கார்ப்பயணத்தில் சதீஷின் உரையாடலில் உணர்ந்து கொண்டேன்.

அடுத்த நாள் திருப்பூர் பயணத்துக்கும் தம் காரிலேயே வந்து அழைத்துப் போவதாகச் சொல்லிவிட்டு விடைகொடுத்தார். 

கோயம்புத்தூருக்குப் பயணம் செல்வதாகத் தீர்மானித்து இணையத்தில் தேடியபோது வழிகாட்டிய ஹோட்டல் பார்க் ப்ளாஸா. அந்த ஹோட்டலுக்கு அழைத்த போது "வணக்கம்" என்று வரவேற்பாளினி சொன்ன அந்த ஒற்றைச் சொல்லால் மறுபேச்சில்லாமல் தங்கும் அறையைப் பதிவு செய்துவிட்டேன். ஆனால் பின்னர்தான் தெரிந்தது கோவை நகரிலிருந்து வெகு தூரம், தள்ளி விமான நிலையத்துக்கு அருகாமையில் அந்த ஹோட்டல் இருப்பதை. இதனால் கோயம்புத்தூர் போயும், அந்த ஊரைப் பார்க்கமுடியாமலேயே போய் விட்டது. அடுத்த நாள் திருப்பூர் பயணமே முழு நாளையும் கவர்ந்து விட்டது. காசியண்ணன் கூட வேடிக்கையாக "இவர் எங்கே கோயம்புத்தூருக்கு வந்தார்" என்று கலாய்த்தார். பார்க் ப்ளாஸா உயர் தர நட்சத்திர விடுதி என்பதால்  பங்கமில்லாத சேவையை வழங்கியது மனத்துக்குத் திருப்தியாக இருந்தது.


அடுத்த நாள் கோயம்புத்தூர் வாழ் நண்பர்களைச் சந்திக்கலாம் என்று முடிவெடுத்தபோது பலரும் தீபாவளிக்கு முதல் நாளான அன்று பண்டிகைக்காலக் கொள்வனவிலும், சிலருக்கு வேலை நாள் என்பதாலும் அன்று மாலையே நான் தங்கியிருந்த பார்க் ப்ளாஸாவில் சந்திப்போம் என்று முடிவானது.

பகல் முழுதும் என்னோடு திருப்பூருக்கு வந்த களைப்பு, வீட்டுக்காரம்மாவின் புகார் எதுவும் இல்லாமல்  முதல் ஆளாக நண்பர் சதீஷ் வந்தார். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் காசியண்ணன் (@akaasi) தீபாவளிப் பலகாரத்துடன் வந்தார். தமிழ்மணம் இணைந்த 2005 காலத்தில் இருந்தே காசியண்ணனோடு இணையம் மூலம் ஏதோ ஒருவகையில் தொடர்போடு இருக்கும் மகிழ்ச்சியில் இருப்பவன் நேரை கண்டதும் இன்னும் இரட்டிப்பான சந்தோசம். ஹோட்டல் வாசல்புறம் நிற்காதே உள்ளுக்கு ஓடு என்று நுளம்புகள் (கொசுக்கள்) துரத்தின. உட்புறமிருந்த உணவகத்தில் போய் உட்கார்ந்தோம். நண்பர் தேங்கா என்று செல்லமாக அழைக்கப்படும் தீபக் @DKCBE வந்தார். ட்விட்டரில் குறும்புத்தனமாக இருக்கும் ஆளுக்கும் உருவத்துக்கும் சம்பந்தமே இல்லாத பரம சாது அவர். கோவைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்துக்கான காரணகர்த்தா அறிவுக்கரசு சார் @arivukkarasu வேலை முடித்து அரக்கப்பரக்க ஓடிவந்து தாமதத்துக்கு வருந்துவதாகச் சொன்னார். என்னளவில் அவர் எனக்கு உறவினர் போன்று அடிக்கடி பரிவோடு ட்விட்டரில் விசாரிப்பவர், எதிர்பார்த்த அதே அறிவுக்கரசு சாரை நேரே பார்த்தேன். அந்த நாள் முழுதும் என்னோடு நேரத்தைச் செலவிடவில்லையே என்ற கவலை சந்திப்பு முடியும்வரை அவருக்கு இருந்தது. எனக்காக The Best of Neil Diamond என்ற இசைவட்டைக் கொண்டு வந்து பரிசளித்தார்.  கோவைச் சந்திப்பு பற்றி அறிந்து நண்பர் பிழைதிருத்தி @PizhaiThiruthi  அங்கு வந்தபோதுதான் அவர் இங்கே இருப்பதே தெரியும். ட்விட்டரில் அவர் கொடுக்கும் அதே பாணியிலான கலகலப்பும், கோபமும் கொண்ட கலவை அவர். ட்விட்டரில் புதிதாக இணைந்து கொண்ட நண்பர் அர்விந்த் பிரபு @arrvindprabhu டைம்லைனில் வந்து  நானும் வரலாமா என்று அப்பாவித்தனமாகக் கேட்டார். என்ன கேள்வி, உடனே வாருங்கள் என்று போட்டதும் அவரும் இன்னொரு இடத்துக்குப் போக இருந்தும் நடுவில் இந்தச் சந்திப்பைக் கண்டுவிட்டுப் போகலாம் என்று வந்து சேர்ந்து கொண்டார்.  நண்பர் பரத் இற்குப் போக்குவரத்துச் சிக்கல் இருப்பதால் வரமுடியவில்லை என்று வருத்தப்பட்டார். மினிமீன்ஸ் கூட தீபாவளிக்கு முதல் நாள் என்பதால் வருவதில் சிக்கல் என்று தகவல் அனுப்பினார். இடமிருந்து வலம்:பிழை திருத்தி, அர்விந்த் மனோ, தீபக், நான், காசி அண்ணன், அறிவுக்கரசு சார்



 (படத்தில் எனக்குப் பக்கத்தில் சிரித்த முகத்தோடு சுதர்சன் கோபால்)
நான் எதிர்பாக்காமல் ஆனால் நீண்ட நாட்களாகச் சந்திக்கவேண்டும் என்று நினைத்திருந்த நண்பர் சுதர்சன் கோபால் வந்தது எனக்கு இன்ப அதிர்ச்சி.  இவர் லண்டனில் இருக்கிறார் என்று நினைத்திருந்தேன் ஆனால் ஊருக்கு வந்துவிட்டதாகச் சொன்னார். திரையிசைப்பாடல்களில் இருந்து இலக்கியம் வரை ஒத்த அலைவரிசையில் இயங்குபவர், நண்பர் ஜீ.ராவின் ஜெராக்ஸ் என்பேன். கையோடு கொண்டு வந்திருந்த Splendours of Royal Mysore என்ற அரிய நூலைக் கொண்டு வந்து கொடுத்தார். எல்லோரும் நிறையப் பேசியதால் அதிகம் சாப்பிடவில்லை, ஆனால் மனசு நிறைந்தது. உண்மையில் அந்தப் பரபரப்பான தீபாவளிக்கு முதல் நாள்இவர்கள் எல்லோரும் வந்திருந்து என்னைச் சந்தித்ததோடு, தங்களுக்குள் ஒரு உறவுப்பாலத்தை ஏற்படுத்த முடிந்ததால் எனக்கு ஒரு நிறைவான சந்திப்பாக இருந்தது.


அடுத்த தடவையாவது கோயம்புத்தூருக்கு வாங்க, மருதமலையில் பதிவர் சந்திப்பைப் போட்டுடுவோம் என்ற காசியண்ணன் வாக்கை அடுத்த ஆண்டு முடிவதற்குள் நிறைவேற்ற வேண்டும்.

முதற்படம் நன்றி:  Connect Coimbatore