Social Icons

Pages

Wednesday, December 05, 2012

குருவாயூரில் காலடி வைத்தேன்

கொச்சின் விமான நிலையத்தில் இருந்து டாக்ஸி மூலம், கேரளத்தின் ஊர்களைக் கடந்து கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரப் பயணத்துக்குப் பின் குருவாயூருக்கு வந்து சேர்ந்தேன். 

ஏற்கனவே தங்குமிடத்தை ஒழுங்கு செய்து வைத்து, அவர்களின் தொடர்பு முகவரி, தொலைபேசி எண்ணையும் கையோடு எடுத்து வந்தது பெரும் உதவியாக இருந்தது. குருவாயூரைத் தொட்டதும் ஹோட்டலுக்கு எப்படிப் போகவேண்டும் என்று என்னிடம் சம்சாரிக்கத் தொடங்கிவிட்டார் சாரதி. என் செல்போனை ஹோட்டல் ரிஸப்ஷனுக்குத் தொடர்பு படுத்தி அவருக்கு வழிகாட்டிய பின்பே சேரிடம் வந்தேன். குருவாயூர் கோயிலைத் தரிசிக்கவே இந்தப் பயணம் என்பதால் கோயிலைச் சூழவுள்ள ஹோட்டல்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்று http://www.tripadvisor.com.au/Hotels-g1137974-Guruvayur_Kerala-Hotels.html ஐ நாடினேன். அங்கே முன்னர் ஒவ்வொரு ஹோட்டலிலும் தங்கியோரின் அனுபவங்களையும் நட்சத்திரக் குறியீட்டையும் பார்த்து, அதில் நல்ல ஹோட்டல்களை மட்டும் பொறுக்கி ஒவ்வொரு ஹோட்டலின் ரிஸப்ஷனை அழைத்தேன். எல்லோரும் சொல்லிவைத்தாற்போல தங்கும் அறை இல்லை என்று கைவிரித்து விட்டார்கள். நான் குருவாயூர் கோயிலுக்குப் போகும் அந்த வார இறுதி சுப முகூர்த்தம் என்பதால் ஏகப்பட்ட கல்யாணங்கள் கோயிலின் முன்றலில் நடக்கவிருந்தது. எனவே சிலர் ஒட்டுமொத்த அறைகளையுமே சில ஹோட்டல்களில் தமது கல்யாணத்துக்காக முற்பதிவு பண்ணி வைத்திருந்தார்கள். உண்மையில் குருவாயூர் கோயிலுக்கு மிக நெருக்கமான, நடை தூரத்தில் இருக்கும் ஹோட்டல்களில் ஒன்றைத் தெரிவு செய்து வைத்திருப்பதே சாலச் சிறந்தது. காரணம், அதிகாலை நடை திறப்பு, இரவு நடை சாத்து மற்றும் கோயிலுக்குள் நடக்கும் முக்கிய பூஜை புனஸ்காரங்களை ஆற அமரப் பார்ப்பதற்கு இது பெரும் வசதியாக இருக்கும். அந்த வகையில் Gokulam Resorts ஹோட்டல்கள் நல்ல விதமான சேவையை வழங்குவதாகச் சொல்லப்படுகின்றது. நீங்கள் பயணிக்கவிருந்தால் இந்த ஹோட்டல்களைப் பரிந்துரைக்கிறேன். ஆனால் எனக்கு அந்தக் கொடுப்பினை இருக்கவில்லை. சிட்னியில் இருந்து புறப்படும் நாளுக்கு முன் தினம் வரை ஏறக்குறைய எல்லா ஹோட்டல்களையும் அழைத்தாயிற்று. சரி அடுத்ததாக இரண்டு கி.மீட்டர் தொலைவானாலும் காரியமில்லை என்று நினைத்து அடுத்த சுற்றில் தேடினால் கிட்டியது Fortgate Hotel And Resort. இந்த ஹோட்டல் குறித்து ஏற்கனவே தங்கியவர்களும் நல்ல விதமாகச் சொல்லியிருந்தார்கள். எனவே அந்த ஹோட்டலுக்கு அழைத்தால் அறை உண்டு என்றார்கள், மறுபேச்சில்லாமல் பதிவு பண்ணி விட்டேன். 

நல்ல வசதிகளோடு, சுத்தமாகவும் சிறப்பாகவும் இருந்தது. ஹோட்டல் ரிசப்ஷனில் குருவாயூர் கோயிலுக்கு இங்கிருந்து போக எத்தனை மணி நேரமாகும் என்று கேட்டேன். "இருபது நிமிடத்துக்குள் போயிடலாம், ஆட்டோ கூட ஒழுங்கு செய்யலாம்" என்றார். முதல் வேலையாக மதிய உணவை முடிப்போம் என்றுவிட்டு ஹோட்டலுக்குள் இருந்த உணவகத்துக்குள் சென்றேன். முழுக்க முழுக்க அசைவ உணவுகளோடு ஒரு சில சைவ உணவுகள், அதிலும் கேட்டது அப்போது கிடைக்காதாம், என்னடா குருவாயூருக்கு வந்த சோதனை என்று நினைத்துக் கொண்டு, சப்பாத்தி போடுவீங்களா என்று கேட்டேன். ஆமாம் என்று தலையாட்டினார் பரிமாறுபவர். உருளைக்கிழங்குத் துவையலுடன், சப்பாத்தியும் வந்து சேர்ந்தது. இதைவிட நான் நன்றாகச் சமைப்பேனே என்று மனதுக்குள் நினைக்குமளவுக்கு இருந்தது சாப்பாடு. மாலை குருவாயூர் கோயிலுக்குப் போகலாம் அதுவரை ஊர் சுற்றிப்பார்ப்போம் என்று நினைத்து ஹோட்டல்காரரிடம், இங்கே பக்கத்தில் யானைகள் சரணாலயம் இருப்பதாக அறிகிறேன் அங்கே போகவேண்டும் ஓட்டோ ஒன்று ஒழுங்கு செய்து தாருங்கள் என்று கேட்கவும், அடுத்த ஐந்து நிமிடத்தில் ஓட்டோக்காரர் வந்து சேர்ந்தார். 

"அழகான ராட்சசியே" பாடல் யானைகள் சரணாலயத்தின் முகப்பில் இருந்த பெட்டிக்கடையில் வரவேற்றது. பெயர்ப்பலகைகள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக. புகைப்படக் கருவி எடுத்துச் சென்றால் மேலதிக கட்டணம் என்று மொத்தமாகவே 25 ரூபா மட்டுமே கட்டணம், நல்லவேளை வெளி நாட்டுக்காரருக்குத் தனிக்கட்டணம் என்று இருக்கவில்லை. மரங்களடர்ந்த சோலை கொண்ட பெரு நிலப்பரப்பில் அந்த யானைகள் சரணாலயம் இருந்தது. ஒவ்வொரு யானைகளுக்கும் தனித்தனியான இட வசதியோடு, ஆங்காங்கே பாகன்களும் தென்பட்டார்கள். ஒவ்வொரு யானைகளும் தத்தமது வேலைகளும் தம் பாடுமாக இருந்தன. ஆட்டம் போட்டது ஒரு யானை, தும்பிக்கையால் மண்ணை அள்ளித் தன் தலையில் இறைத்தது இன்னொரு யானை, கொடுத்த தென்னங்கீற்றை நார் நாராகச் சப்பித் தின்றது ஒன்று, இன்னொன்று நின்ற நிலையில், இன்னும் கொஞ்சம் அந்த மதிய நேர சயனத்தில். வயது வித்தியாசமின்றிச் சுற்றிப்பார்க்க வந்தவர்கள் குழந்தைகள் போல ஆசையோடு ஒவ்வொரு காட்சியையும் கண்டு கழித்துக் கொண்டிருந்த அந்தச் சூழலே ரம்யமாக இருந்தது. அடுக்கடுக்காகக் குவித்து வைக்கப்பட்ட இலை, தழை, குழைகளோடு ஏகப்பட்ட வசதிகளும் கொண்ட அந்தச் சரணாலயத்தில் யானைகளை வெகு சிரத்தையாகக் கவனிப்பது தெரிந்தது குருவாயூர் கோயிலுக்குப் போகும் நினைப்பு வந்து பிரியமனமின்றிப் பிரிந்தேன் அங்கிருந்து.





















































Friday, November 30, 2012

கேரள தேசம் நோக்கி


ஐந்து வருஷங்களின் பின்னர் இந்தியப் பயணம் செல்வதாக முடிவெடுத்தற்கு முக்கிய காரணமே ட்விட்டரில் இயங்கும் கோயம்புத்தூர் வாசியான அறிவுக்கரசு சார் மற்றும் மும்பையில் இருக்கும் நண்பர் ஆனந்தராஜ்.  எனது முதல் இந்தியப் பயணம் 2001 இல் இருந்தபோது அப்போது எனக்குஇப்போது மாதிரி ட்விட்டர், வலைப்பதிவுலகம் இல்லாத  எல்லாமே அந்நியமாகமாக இருந்த சூழல். அதுவும் எனது முதல் இந்தியப்பயணம் அப்போது வேலைபார்த்துக் கொண்டிருந்த Oracle நிறுவனத்தின் பெங்களூர் அலுவலகத்திற்குப் போயிருந்தேன்.  பின்னர் 2005 ஆம் ஆண்டிலிருந்து தீவிர வலைப்பதிவராக இயங்கிக் கொண்டிருந்த சூழலில் நிறையவே தமிழக உறவுகள் அறிமுகமாகியிருந்தார்கள். அந்தவகையில் 2006 இல் கோ.ராகவனையும்,  2007 இல் செந்தழல் ரவியையும் சந்தித்திருந்தேன். இப்போது அந்த நிலையே வேறு. தினமும் காலை எழும் போது ட்விட்டரில் ஏதாவது ஒரு தமிழக நண்பரின் முகத்தில் தான் விழிப்பேன் , தூங்கும் போதும் அப்படியே. அறிவுக்கரசு சாரும், ஆனந்தராஜும் அடிக்கடி என் தமிழகப் பயணத்துக்குத் எண்ணெய் வார்த்ததால் இந்த ஆண்டு எப்படியாவது இந்தியப்பயணத்தை மேற்கொண்டால் போச்சு என்று முடிவெடுத்துக் கொண்டேன். ஆனால் அதில் ஒரு முடிவு, ஊர் சுற்றிப்பார்ப்பது என்பதை விடுத்து, இதுவரை  சமூக ஊடகங்களின் வாயிலாக உறவாடிய முகம் தெரியாத நட்புக்களை நேரில் பார்ப்பது மட்டுமே முழுமையான திட்டம் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.  ஆகவே, கோயம்புத்தூர், சென்னை ஆகிய நகரங்களுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் பயணத்திட்டத்தை ட்விட்டரில் வெளியிட்டபோது நான் நேசிக்கும் எழுத்தாளர் ஆர்.பி.ராஜநாயஹம் அவர்கள்  கோவையிலிருந்து திருப்பூர் பக்கம் தானே, என் வீட்டுக்கும் வந்துவிடுங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார்.

 இடையில் இரண்டு உள்ளீடுகளும் என் பயணத்திட்டத்தில் சேர்ந்து கொண்டன. ஒன்று என் இந்திய அலுவலக சகபாடியின் திருமணம் கேரளாவில் அவரின் சொந்த ஊரான கோழிக்கோடுவில் நடப்பதாக அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். அவர் நான் இப்போது வேலை செய்யும் நிறுவனத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பழக்கம் என்பதை விட அவர் மீது கொண்ட நேசத்தினால் திருமணத்துக்கு வருவதாக வாக்குக் கொடுத்தேன்.

இவற்றையெல்லாம் விட, இந்த ஆண்டு எனக்குத் தனிப்பட்ட ரீதியில் மிகுந்த சவாலையும், மன உளைச்சலையும் உண்டு பண்ணிய சம்பவங்களைச் சந்தித்தேன்.
எதேச்சையாக குமுதம் சஞ்சிகையில், பாடகி நித்ய ஸ்ரீ அவர்கள், தான் குருவாயூருக்குச் சென்று சேவித்தபோது தன் தீராத மனக்குறை தீர்ந்ததாகச் சொன்ன பேட்டியைப் படித்திருந்தேன். ஆக, இந்த இந்தியப் பயணத்தில் குருவாயூரப்பனையும் தரிசிக்கவேண்டும் என்று அந்தத் திட்டத்தையும் சேர்த்துக் கொண்டேன்.

எல்லாம் சரி, இரண்டு மாநிலங்கள் நான்கு முக்கிய நகரங்களுக்கு ஐந்து நாட்களுக்கு ஜெட்வேகத்தில் பயணிக்கவேண்டுமே, ஒரு வழித்தடம் பிசகினால் மற்ற எல்லாம் அம்பேல், திட்டம் பக்காவாக இருக்கவேண்டுமே என்று கூகிளாண்டவனை நிதமும் வேண்டித் தகவல் திரட்டினேன். இடைக்கிடை ட்விட்டரிலும் நண்பர்களிடம் ஆலோசனை பெற்றேன். ஆனாலும் கூகிளாண்வர் மிகவும் நேர்மையாக கூகிள் மேப் வழியாக குறுகிய நேரப் பயணங்களைக் காட்டுவார் ஆனால் தமிழக நண்பர்களோ, அநியாயத்துக்கும் கூகிளை நம்புறீங்க பாஸ், நம்ம ஊர் ரோடு நிலவரத்தையும் கணக்கில் வச்சுக்கணும் என்பார்கள். இப்படியாக ஏகப்பட்ட கூத்து பயண ஏற்பாடுகளைச் செய்ய‌.
நண்பரின் கல்யாணமும், குருவாயூர் கோயிலும் கேரளாவில் இருந்ததால் முதலில் அந்த வேலையை முடிப்போம் என்று நினைத்து ஒவ்வொரு வழித்தடங்களாகப் பார்த்து எது குறுகிய நேரம் பிடிக்கும் என்று கண்டுகொண்டேன்.   கொழும்பில் இருந்து கொச்சினுக்கு ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் காலை 7.25 மற்றும் மாலை 4.25 இற்குமாக இரண்டு சேவைகள் , 45 நிமிடத்தில் போயிவிடலாம். கொச்சின் விமான நிலையத்தில் இருந்து ஒரு Airport Taxi மூலம் குருவாயூருக்குப் போக அதிக பட்சம் மூன்று மணி நேரமே பிடிக்கும் என்று கணக்குப் போட்டு வைத்தேன்.

இதற்கிடையில் ட்விட்டரில் இயங்கும் நண்பர் புரட்சிகனல் என்ற‌ சைஜூ தான் கொச்சினில் இருப்பதாகவும் கண்டிப்பாகச் சந்திக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார். கட்டு நாயக்கா விமான நிலையத்துக்கு அதிகாலையே வந்தேன். குறித்த நேரத்தில் கொழும்பில் இருந்து கொச்சின் விமானம் கிளம்பித் தன் சேரிடம் சேர்ந்தது.

 கேரள தேசம் எனக்குப் புதியதல்ல, 2006 ஆம் ஆண்டு  திருவனந்தபுரம், ஆலப்புழா, கொச்சின் எல்லாம் வந்திருக்கிறேன்.  கொச்சினிலிருந்து பெங்களூர் பயணத்துக்க்காக  அப்போது இயங்கிய டெக்கான் ஏர்லைன்ஸ் இல் பணம் கட்டி, அந்த விமானப் பயணம் தாமதமாகி, கொச்சின் விமான நிலையத்தில் 12 மணி நேரம் தங்கியதெல்லாம் அப்போதைய வரலாறு இங்கே வரும்போது யாழ்ப்பாணத்துக்கு வந்தது போன்ற பிரமை இருக்கும் சூழலும், இந்த ஊர் மொழிவழக்கும். எனக்கும் கேரளத்துக்குமான பந்தத்தை தேர்ந்தெடுத்த நல்ல மலையாளப்படங்களைப்பார்த்துத் திருப்திப்பட்டுக்கொள்வேன்.


சிட்னியிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் வரும்போது வழக்கம் போல வேலாயுதம் போன்ற உலகத்தரமான தமிழ்ப்படங்களைக் காட்டும் போது நொந்துபோய் வேறு படங்களைத் தேடும் போது கிட்டியது Indian Rupee என்ற ஒரு மலையாளம் இருப்பதாகக் காட்டியது.  நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நிறைவான படத்தைப் பார்த்த திருப்தி வானத்தில் கிட்டியது. நடிகர் பிருதிவிராஜ் தயாரித்து நடித்த அந்தப் படத்தைப் பிரபல இயக்குனர் ரஞ்சித் இயக்கியிருந்தார்.  சிறந்த மாநில விருது உள்ளிட்ட தேசிய விருதுகளை அள்ளியிருந்தது அந்தப்படம்.
இந்தக் காலத்து இளைஞர்களின் குறுகிய நோக்கிலான பணம் தேடும் வேட்கையை மையமாக வைத்து எடுத்த அந்தப் படம் கேரளத்தின் கோழிக்கோடு பகுதியில் படமாக்கப்பட்டிருந்தது. பிருதிவிராஜ் உடன் நாயகியாக வந்த ரீமா கலிங்கலுக்கு இப்போது பொற்காலம் எனலாம், தொடர்ந்து நல்ல படங்கள் கிட்டுகிறது இவருக்கு. ஜெகதி ஸ்ரீகுமாரின் நடிப்பு பெரும்பாலும் எனக்கு எரிச்சலூட்டும், அதை மீறி ரசிக்கவைத்ததென்றால் அது இப்படத்தில் தானாக இருக்கும்.

இந்தப் படத்தில் நடிகர் திலகனின் கள்ளமில்லா நடிப்பு கலங்கடித்துவிட்டது. குறிப்பாக நிராதரவாக மூட்டை முடிச்சுக்களோடு நடுத்தெருவுக்கு வரும் போதும் அந்தக் கணம், மாப்பிள்ளை வீட்டாரிடம் பிருதிவிராஜ் தங்கையின் பெருமையைச் சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராது நடையைக் கட்டுவது போன்ற காட்சிகளில் தெரியுது திலகனின் அருமை. எப்பேர்ப்பட்ட கலைஞன் இவர் என்று பெருமூச்சுக் கொண்டேன் படம் முடிந்ததும். தேடிப்பிடித்து பாருங்கள்

குடிவரவு அலுவல்களை முடித்து விட்டு வெளியில் வர காலை ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது.  இதற்கிடையில் எங்கேடா என்னைக் காணோம் என்று சைஜூ ட்விட்டரில் பெரிய பரப்புரையே செய்துவிட்டிருந்தார். வெளி வாசலுக்கு வந்தபோது என் பெயர் தாங்கிய பதாதையோடு ஒரு இளைஞன், இவர் தான் சைஜூ என்று ஒரு குத்துமதிப்பாகக் கணக்குப் போட்டிருந்தேன். காரணம் அவர் தன் ட்விட்டரில் சிவகார்த்திகேயன், ராமராஜன் படங்களையே போட்டுவைத்ததால் இவர் எப்படியான ஒரு மனிதர் நெட்டையா குள்ளமா கறுப்பா சிவப்பா ஆணா பெண்ணா என்று ஏகப்பட்ட குழப்பம் இருந்தது.
 சில வாரங்களுக்கு முன்னர் தான் நண்பர் பரிசல்காரன் ஒடிசா சென்று, அங்கு அறிமுகமானவரிடம் எல்லாம் இழந்து  (பொருட்களை மட்டும்)  தன் உடுத்த உடுப்போடு கர்ணனாட்டம் திரும்பி வந்த சம்பவத்தையும் அடிக்கடி மூளை நினைவு படுத்தியது.
என்னைக் கட்டாயம் அடையாளம் கண்டு கையை உயர்த்தினார், நானும் சிரித்துக் கொண்டு அவருக்கு கைலாகு கொடுத்தேன்.  விமான நிலையத்தில் வைத்தே இந்தியாவில் நான் தங்கியிருக்கும் நாட்களில் நண்பர்கள் தொடர்புகொள்ள வசதியாக ஏர்டெல் செல்போன் இணைப்பைப் பெற்றுக் கொள்ளத் தன் விலாசத்தைக் கொடுத்துதவினார், தயவு செய்து சிம்கார்டை யாராவது தீவிரவாதிகளிடம் கொடுக்கவேண்டாம் என்ற வேண்டுகோளோடு.  சைஜுவைச் சந்தித்து விட்டு விமான நிலையத்திலேயே டாக்ஸி பிடித்து குருவாயூர் போகும் திட்டம் இருந்ததால் விமான நிலைய உணவகம் செல்லுவோமா என்று கேட்க அவரும் தலையாட்டினார்.

கொச்சின் விமான நிலையத்தில் இந்திய உணவில் இருந்து எல்லா வகை உணவுப்பதார்த்தங்களும் இருந்தன, ஆனால் கூட்டம் தான் என்னையும் சைஜுவையும் சேர்த்து நாலு பேர்.
உணவகத்தில் பணிபுரிந்த இளம் பெண்ணிடம் இரண்டு மசாலாத்தோசை, இரண்டு சாயா (தேநீர்) என்று ஆடர் கொடுத்து விட்டு எனக்குத் தெரியாமலேயே அந்தப் பெண்ணின் பேரைக் கேட்டு வைத்த சைஜூவின் மதி நுட்பம் மெய்சிலிர்க்கவைத்தது. பெண் பேர் அஸ்வதியாம், இப்போதெல்லாம். கொச்சின் விமான நிலையம் பக்கம் போனால் சைஜூவைக் காணாலாம் என்று தகவல்.

உணவருந்திக் கொண்டே ட்விட்டர் உலக நடப்புக்களை அளவளாவினோம்.
 புரட்சிக்கனல் என்ற சைஜு, தமிழகம் நாகர்கோயில்காரர்.  பணி நிமித்தமாக கொச்சினில் வாழ்கிறார். ட்விட்டர் வழியாகச் சில மாதங்களாகத் தான் நட்பு. ஆனால் நேரில் காணும் போது துளியளவும் அந்தத் தூரம் இருக்கவில்லை. ஏதோ நெருங்கிய உறவுக்காரரைக் கண்ட பூரிப்பு அவர் முகத்தில். "பாஸ் எங்கூட வந்திடுங்களேன், என் வீட்டில் தங்கி அங்கிருந்து குருவாயூர் போகலாம்" என்று அன்புக் கட்டளை வேறு. உண்மையில் இப்படியான நண்பர்களைப் பெற என்ன தவம் செய்தேனோ என்று நினைக்கத் தோன்றும். தன்னுடைய ஊருக்கு வந்தவரைப் பொறுப்பாகக் கவனிக்க வேண்டும் என்ற சிந்தனை அவரை விட்டு நான் குருவாயூருக்குப் போகும் வரை இருந்ததை நான் உணர்ந்து கொண்டேன்.
 "நானும் உங்க கூட குருவாயூர் வரவா" என்று சொல்லுமளவுக்கு சைஜூ அப்போது இருந்தார்.

சைஜூவிடமிருந்து பிரியாவிடை வாங்கிக் கொண்டு Airport Taxi   மூலம் 1400 ரூபா கட்டணத்தில் குருவாயூர் நோக்கிய பயணத்தை ஆரம்பித்தேன்.

Sunday, August 26, 2012

Tower of London கண்டேன்

ஒரு சிறு இடைவேளைக்குப் பின் உலாத்தல் மீண்டும் ஆரம்பிக்கின்றது ;)
கடந்த பதிவில், சுற்றுலா பஸ் இலிருந்து இறங்கி ஊர் சுற்ற ஆரம்பித்தேன் என்றேன் அல்லவா, அதன் பிரகாரம் நான் முதலில் சென்றது Tower of London. தேம்ஸ் நதியை ஒட்டிய மாபெரும் கோட்டையாக விளங்கும் இது, லண்டன் வரும் சுற்றுலாவாசிகள் தவிர்க்கமுடியாத ஒரு சுற்றுலாத்தலம் ஆகும். நிதானமாகச் சுற்றிப்பார்க்கவேண்டுமென்றால் ஒரு நாள் வரை செல்லும் அளவுக்கு வரலாற்றுப் பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது Tower of London.
உள்ளே நுழையக் கட்டணம் உண்டு. ஆனால் கொடுக்கும் கட்டணத்துக்கு மேலாகவே பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது. கி.பி 11 ஆம் நூற்றாண்டில் இருந்து இன்றுவரையான அரச பாரம்பரிய உடைகளில் இருந்து, அணிகலன்கள், போர்களில் பயன்படுத்தப்பட்ட படைக்கலங்கள், அரசர்களின் விபரங்கள் என்று நேர்த்தியாகவே எல்லாம் இருக்கின்றன.
உள்ளே இருக்கும் இடங்களைக் காட்டவென இலவச சுற்றுலா வழிகாட்டி குழுக்கள் அடிப்படையில் வருகையாளர்களைத் திரட்டித் தன் பணியைச் செய்கின்றார். தனித்தனியான கொத்தளங்கள், ஒவ்வொன்றையும் சுற்றிப்பார்க்க சலவைக்கல் படிக்கட்டுக்கள் என்று அந்தக் காலத்தில் எழுப்பப்பட்டு இன்றும் கம்பீரமாக விளங்கும் இந்தக் கோட்டையைச் சுற்றிப்பார்க்கும் போது பிரமிப்பு விலகாமல் இருக்கின்றது.
























அந்தக்காலத்தில் யுத்தவேளையில் போர்த்தளபாடங்களை உபயோகிக்கும் போது கணக்கு வைத்த பதிவேடு





அந்தக்க்கால ராஜாவாக வேஷம் பூண்டு நடித்துக் காட்டுகின்றார்.