Social Icons

Pages

Friday, October 20, 2006

அந்தி வரும் நேரம்

மே 28, மாலை 6.00 மணி (இந்திய நேரம்)மாலை நேரச் சிற்றுண்டியை இரசித்துச் சாப்பிட்டுக்கொண்டே சாயாவைக் குடித்துக்கொண்டிருக்கும் போது அருகே வந்த சிஜி பேச்சுக்கொடுத்தார். நேற்று (மே 27) இந்தோனோசியாவின் சிலபகுதிகளில் பூகம்பம் வந்ததாகச் சொன்னார். அட இந்தப் பையன் தன் படகுத் தொழிலோடு உலகச் செய்திகளையும் கேட்டுவைத்திருக்கின்றானே என்று உள்ளுர வியந்தவாறே சிஜியின் மலையாளம் கலந்து ஆங்கிலம் சிறிதளவு தூவிய உரையாடலில் ஒன்றிப்போனேன். சிஜி கோட்டயத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர், இவரைப் பற்றி முன்பும் சொல்லியிருக்கிறேன். இந்தப் படகுச் சேவை அரை நாள் கணக்கிலும் உள்ளதாம். அதாவது நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரையானது இச்சேவை. குறுகிய பயணக்காரருக்கு ஏற்றது இது. என் படகு வீடு சற்றுத்திசை திரும்பி இன்னொரு பக்கமாகப் பயணப்பட்டு ஒரு கரையில் தரித்து நின்றது. படகிலிருந்து தாவி வெளியே வந்து எட்டிப்பார்த்தேன். நம்மூரில் கொட்டில் போட்ட ஆட்டிறைச்சிக் கடைகள் போல இரண்டு கடைகள் தென்பட்டன. அவை உடனே பிடித்து விற்கப்படும் புத்துணர்வான (fresh) கடலுணவுகள் விற்கும் மீன்கடைகள். Tiger Prawn, Karimeen ஆகிய வகையறாக்கள் பென்னான் பெருசாக இருந்தன. விலையும் அதிகம். கிட்டத்தட்ட ரூ 800 மட்டில் விற்கக்கூடிய கடலுணவு வகையறாக்கள் இருந்தன. இவ்வாறான படகுப்பயணம் செய்வோர் நடுவழியில் இங்கே கடலுணவை வாங்கிப் படகுக்காரரிடம் கொடுத்தால் இரவு உணவுப் படையலாக அவை மாறிவிடும்.

இம்மாதிரிப் படகுவீடுகள் மலையாள நடிகர்களான ஜெயராம், திலீப் போன்றவர்களிடம் சொந்தமாக உண்டாம். திலீப் வைத்திருக்கும் படகுவீடு ஒரு மாளிகைக்கு ஒப்பானதாக அதிகவசதிகளோடு உள்ளதாம். அதன் ஒரு நாள் வாடகையே 1 லட்சம் ரூபா வரை செல்லும் என்று சிஜி சொன்னார். இயக்குனர் பாசில் 16 படகுவீடுகளைச் சொந்தமாக வைத்துப் படகுச்சேவையில் அவற்றை ஈடுபடுத்திவருகின்றாராம். யம்மாடி.
படகுப் பயணம் தொடர்ந்தது, கொஞ்சத்தூரம் சென்ற பயணம் சூரியன் வேலை முடித்துச் செல்ல ஆயத்தமாகும் வேளை தரை தட்டியது படகு. இன்றிரவு இங்கேயே தங்கிவிட்டு நாளை காலை தான் மீண்டும் பயணத்தை ஆரம்பிப்பது வழக்கம் என்று சொன்னார் சிஜி. அதை ஆமோதித்தது போல என் பயணத்தில் கூடவே வந்த படகு வீடுகள் சற்றுத்தொலைவான துறைகளில் தங்கியிருந்தன.என் படகுவீட்டுக்காரர்கள் அக்கரையில் இருந்த வீட்டில் இருந்து தற்காலிக மின்சார இணைப்பு கொடுத்ததும் படகில் இருந்த மின்விளக்குகள் எரியத்தொடங்கின. அதோடு கழிப்பறை போன்றவற்றிற்குத் தேவையான நீரையும் மோட்டார் பம்ப் மூலம் படகில் இருந்த நீர்த்தாங்கியில் நிரப்பினார்கள். கொஞ்சம் வெளியே சென்று நடப்போம் என்று நினைத்து வெளியே வந்தேன்.படகு தரித்த கரையின் முகப்பில் இருந்த வீடு நம்மூர்ச் சூழ்நிலையை நினைவு படுத்தியது. காரணம் தென்னை மரங்களும் , தீனி தேடும் கோழிகளும், இரைமீட்கும் ஆடுகளும் அந்த இடத்தில் நீக்கமற நிறைந்திருந்தன. சதுப்பான பாத்திகளூடே நடந்து போனேன். சிறு கோயில் ஒன்று தென்பட்டது, சுற்றுப்பிரகார மூர்த்திகளுக்கான பிரகாரங்கள் அரைகுறைச்சீமெந்து தடவிய செங்கற் சுரங்கமாக இருந்தன. கொஞ்ச நேரம் அந்தச்சூழ்நிலையில் நின்றுவிட்டு மீண்டும் படகுவீடு போய் அடைக்கலமானேன். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் இரண்டாம் சனிக்கிழமை நடக்கும் பிரமாண்டமான படகுப்போட்டி இங்கிருந்து தான் ஆரம்பமாகுமாம்.நேரு கோப்பை என்று அழைக்கப்படும் இந்தப்படகுப் போட்டி புன்னமடா என்ற வாவியில் ஆரம்பிக்கும். ஆலப்புழா மக்களுக்கு ஒரு கலாச்சாரவிருந்தாக இருக்கும் இந்தப் படகுப்போட்டி உலகின் பல பாகங்களிலிருந்து படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு களியாட்டமான விளையாட்டு விருந்தாக அமைகின்றது. 16 பெரிய படகுகள், 125 ஆட்கள் என்று இந்தப் படகுப்போட்டியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். நேரு கோப்பை என்று அழைக்கப்படும் இந்தப்படகுப் போட்டி புன்னமடா என்ற வாவியில் ஆரம்பிக்கும். ஆலப்புழா மக்களுக்கு ஒரு கலாச்சாரவிருந்தாக இருக்கும் இந்தப் படகுப்போட்டி உலகின் பல பாகங்களிலிருந்து படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு களியாட்டமான விளையாட்டு விருந்தாக அமைகின்றது.1952 ஆம் ஆண்டு திருவங்கூர் மற்றும் கொச்சினுக்கு வந்த பண்டித ஜவகர்லால் நேரு, கோட்டயத்திலிருந்து ஆலப்புழாவிற்குப் பயணப்படுகையில் பாம்புப் படகுகளின் போட்டியும் சிறப்பு விருந்தளித்தது, அதில் வெற்றியிட்டிய வீரருக்கு நேரு சுழற்கேடயம் வழங்கிக் கெளரவித்தார். அன்றிலிருந்து ஆரம்பித்த இப்போட்டிகள் வருடா வருடம் ஆகஸ்ட் 2 ஆம் சனிவாரம் நேரு கிண்ணப் போட்டிகளாக நடைபெற்று வருகின்றன. இந்தப்பாம்புப் படகுகள் சுண்டான் என்று அழைக்கப்படுகின்றன. (படகுப்போட்டிப் படங்கள் & தகவல் உதவி நேரு கோப்பைக்க்கான இணையம்)

சூரியன் தான் போவதாகப் போக்குக் காட்டியவாறே செல்ல தென்னைமரம் ஒன்றிலிருந்து ஒருவர் கள் இறக்கியவாறே இருந்தார், படகுவீட்டுக்காரர்கள் கரையில் இருந்து வலை போட்டு மீன் பிடித்துப் பிடித்தவற்றை இரவு உணவுக்காகச் சுத்தமாக வெட்டிக் கொடுக்க சிஜி இரவுச் சமையலை ஆரம்பித்தார். மீன் பொரியல், தேங்காய்ப் பூ கலந்த காரட் சம்பல், தேங்காய்ச் செட்டுத் துண்டம் கலந்த பயற்றங்காய்த் துவையல், இவற்றுடன் அரிசிச் சோறும் சப்பாத்தியும் சூடாகப் பரிமாறப்பட்டது.இரவாக ஆக நுளம்புகளின் அட்டகாசமும், ஈசல்களின் ஆக்கிரமிப்பும் படகுவீட்டுக்குள் கொட்டமடித்தன. ஆனால் முன்னெச்சரிக்கையாக நான் வாங்கிச் சென்ற Mortein நுளம்புத்திரியைக் காலுக்கடியிலும் மேசையிலுமாகப் பற்றவைத்தேன், புகைக்குழல் இதமாக ஆடியவாறே நுளம்புகளை விரட்டத்தொடங்கியது. இப்படியான இரவுத் தங்கல் நண்பர் குழாமாக வந்து குடித்துக் கும்மாளமடிப்போருக்கு மிகவும் ஏற்றது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.மாலை 7.30 மணிக்குத் தரித்து நின்ற படகுவீடு அந்த இரவு முழுவதும் ஓய்வெடுத்துக்கொண்டது.சுபராத்ரி....

Friday, September 15, 2006

சாயங்காலச் சவாரி

மே 28, மதியம் 2.00 மணி (இந்திய நேரம்)
இந்தியாவிற்கு ஒவ்வொரு தடவை நான் பயணிக்கும் போதும் என் பெரும்பாலான நாட்கள் பெங்களூரில் தான் கழிந்திருக்கின்றது. Garden City என்ற நிலை மாறி Concrete Ciyஆக மாறிவிட்ட பெங்களூரின் நிலை கேரளாவிற்கும் ஏற்படாதிருக்கக் கடவது, வெளிநாட்டுக்கம்பனிகளையும் கேரளாவைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்காரர்கள் வெள்ளைக்காரன்களை விடமாட்டார்கள் என்று மனதார நினைத்துக்கொண்டேன். இருக்காதா பின்னே, இவ்வளவு அழகான பசுமைப்புரட்சி பூமி யூ எஸ் கரன்சி பட்டு நாசமாகப் போகவேண்டுமா? என் படகுப்பயண உலாத்தலில் கடந்துபோகும் நாளாந்தப் பயணிகள் போக்குவரத்துப் படகுகளில் இருக்கும் பயணிகள் வயது வேறுபாடின்றிக் கையெத்தி ஆரவாரிக்கின்றார்கள். ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கும், ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குமாக பயணிகளை உப்புமூட்டை காவிக்கொண்டு போகின்றன படகுகள். நன்றாக வயிறுமுட்டச் சாப்பிட்டு நடக்கமுடியாமல் நடப்பவன் போல மெல்ல மெல்ல ஊர்ந்தே போகின்றது என் படகு.

ஒரு கிறீஸ்தவத்தேவாலயம் கண்ணிற்படுகின்றது, நீர் முற்றம் கம்பளம் விரிக்க தேவாலயத்தின் அழகை நீங்களே படத்தில் பார்த்து இரசியுங்கள்.
எங்கள் படகுவீட்டு கரையை ஒட்டியதாகப் பயணப்படும்போது எட்டிப் பார்க்கின்றேன். கரைவழியில் நின்ற ஒரு சிறுவனும் சில சிறுமிகளும் எதையோ சொல்லிக்கொண்டு சமதூரத்தில் அக்கரையில் ஓடிவந்தார்கள். எனக்குப் புரியவில்லை, சிஜியைப் பார்த்தேன். பயணிகளைக் கண்டால் புதுப்பேனா கொடுக்கும் படி இப்படிக் கேட்பார்களாம் அந்தச் சிறுவர்கள். அவர்களைப் பொறுத்தவரை வெளிநாட்டவர்களிடம் பேனா கேட்டுப் பெறுவது புதையல் கிடைத்தமாதிரிப் போலும். என் கையில் இந்திய ரெனோல்ட் பேனாதான் இருந்தது.

எனது படகுவீட்டுப் படுக்கை அறை
நான் போன இந்தக் கடற்கழியெங்கும் நிறையமீன்கள் கிடைப்பதாகச் சிஜி சொன்னார். விஷப் பாம்பு, முதலை போன்ற வில்லன்களும் இல்லையாம். பயணப்பாதையில் எதிர்ப்படும் திருப்பங்களிலெ தன் மூங்கிற்கழியை இலாவகமாகச் சுழற்றி வலித்துப் படகைத் திசைதிருப்பினார் ஓட்டி. எதிர்ப்படும் நீர்வழிபாதைகளில் கரையோரமாய் வளர்ந்து தன் தலை (கிளை)பரப்பிப் படகின் மேலாகத் தொடுகின்றன மாமரங்களின் கிளைகள். மாம்பழ சீசனில் ஓசி மாம்பழம் கிடைக்க ஒரே வழி இந்த வழி தான் என்றார் சிஜி. அக்கரையில் தென்படும் வீடுகளில் ஆட்டுக்குட்டிகள் தென்பட்டன. எங்கே சிஜியைக் காணவில்லை என்று பார்த்தால் சாயங்காலப் பரிமாறல் செய்ய அடுக்களை போய்விட்டார். சில மணித்துளிகளில் வந்த சிஜி மேஜையில் ஏற்கனவே கொசுக்கள் சல்லாபித்துக் க கூடைக்குள் இருந்த கதலிப்பழங்களை ஒருபுறம் வைத்துவிட்டு சாப்பாட்டு மேஜையில் விரிப்பை அகற்றிப் புதிய விரிப்பைப் போட்டு அழகுபடுத்தினார்.

மழையில் தேங்கிய வெள்ள நீர் நிறத்தில் கடும் மசாலா சாயாப் பானமும், பயம்பிலி என்ற பண்டமும் சாயங்காலச் சிற்றுண்டியாகச் சிபியின் கைவண்ணத்தில் கிடைத்தது. பயம்பிலி என்றால் என்ன என்று முடியைப் பிய்த்துக் கொள்ளாதீர்கள். வேறொன்றுமில்லை, நம்மூர் வாய்ப்பனின் மலையாளப் பதிப்புத்தான் அது. வாழைப்பழம் கலந்த அந்தப்பண்டம் நீட்டமான துண்டுகளாகசெய்யப்பட்டு மஞசள் வடிவில் பொரிக்கப்பட்டு இருந்தது,அவற்றை அழகான பரிமாறல் ஒழுங்கில் சாப்பாட்டுத் தட்டிலே வடிவமைத்திருந்தார். சுவையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்.

வாய்ப்பனின் நினைப்பு வந்து தொடர்ந்து எழுதமுடியாமல் தொந்தரவு பண்ணுகின்றது, பொறுங்கள் பக்கத்தில் இருக்கும் இந்திய உணவகம் சென்று வாய்ப்பனைத் தேடிப் பார்த்துவிட்டுத் தொடருகின்றேன்.
நிங்கள் ஆகாரம் கழிச்சோ?

Monday, August 21, 2006

படகு விருந்து

மே 28, மதியம் 1.00 மணி (இந்திய நேரம்)


நான் பயணப்பட்ட கடற்கழி, நன்னீர் ஏரி என்று குறிப்பிட்டார்கள். இரு மருங்கிலும் குடியிருப்பை அமைத்து வாழும் மக்களின் வாசலை இந்த ஏரி தான் முற்றமாக நிறைக்கின்றது. பெண்கள் இந்த ஏரியின் கரையில் நின்று குளிப்பதும், துணிகளைத் துவைப்பதுமாக இருந்தார்கள். ஆண்கள் வழக்கம்போல் குளிப்பதோடு மட்டும் நிற்கிறார்கள். நான் போன காலம் பெருமழைகாலம் ஆரம்பமாகிவிட்டதை முன்னரே சொல்லியிருந்தேன். டிசம்பர் மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை இப்படியான கடற்கழிச்சுற்றுலாவிற்கு உகந்த மாதங்களாகக் கடலோடி நண்பர்கள் சொன்னார்கள். வயிறுமுட்டசாப்பிட்டவனைப் போல ஆடி அசைந்து மெதுவாகப் பயணப்படுகின்றது படகு வீடு. மெதுவான இப்பயணம் ஆங்காங்கு காணும் காட்சிகளை உள்வாங்கவும் வசதியாக இருக்கின்றது. கரைமருங்கில் அசோகா மரங்களும் கண்ணுக்குத் தப்பவில்லை. வாழைமரங்கள் கூட உள்ளேன் ஐயா என்கின்றன. கல் வீடுகளும், குடிசைகளுமாக மாறி மாறித் தென்பட்டது கடலுக்கும் வர்க்க ஏறத்தாழ்வு இருப்பதைக் காட்டியது.இந்த நீரோட்டம் நடுவே கொல்லம் 83KM சம்புக்குளம் 13 KM என்று தூரவழிகாட்டிகள் காட்டிநிற்கின்றன. ஒருபக்கக் கரையைப் பார்க்கின்றேன். அக்கரையில் கடலை மறித்து நெற்பாசனம் செய்யப்படுகின்றது. மறுபுறத்தே விரிந்த பரப்பில் இயற்கையாக அமைந்த ஆயிரம் தாமரை மொட்டுகளோடு தடாகப் பரப்பு.

மதியம் 1. 30 ஐத் தொடுகின்றது கடிகாரமுள். மதிய உணவுப் பரிமாறலுக்காக நங்கூரம் பாய்ச்சப்படுகின்றது. படகு ஓட்டும் முதியவர், அவருக்கு உதவியாக நடுத்தரவயசுகாரர், மற்றவர் சமையலையும் தங்கும் உல்லாசப்பயணிகளையும் கவனிக்கும் 25 வயதான சிஜீ என்ற இளைஞன். படகுவீட்டுப் பயணத்தில் நான் இயற்கைக் காட்சிகளை இரசித்துக்கொண்டே வரும் போது படகு வீட்டின் சமையற் பகுதியில் சிஜி சமைத்தவாறே அவ்வப்போது எனக்கு அருகில் வந்து இந்தப்படகுவீட்டும் பயணத்தின் தன் அனுபவங்களையும் மேலும் சுவையான செய்திகளையும் சொல்லச்சொல்ல நானும் கேட்டுக்கொண்டே அதுவரை வந்திருந்தேன். சரளமாக ஆங்கிலத்திலும் அவன் பேசியது எனக்கு வியப்பாக இருந்தது. வெறும் கேள்விஞானத்தின் மூலமே இப்படிச் சரளமாக அவன் ஆங்கிலம் பேசக்கற்றுக்கொண்டான். அவ்வப்போது மலையாளத்தில் அவன் பேசும் போது அவற்றை உள்வாங்கி எனக்குத் தெரிந்த சொற்களை வைத்துச் சமாளித்தேன்.மலையாள மொழிப்படங்களைப் பற்றிப் பேசும் போது "என்னென்னும் கண்ணட்டான்டே” (தமிழில் வருஷம் 16 என்று வந்தது) படம் பற்றி ரொம்பவே சிலாகித்துப் பேசினான். கடலோரம் வாங்கிய காற்றும், படகு அலைச்சலும் இயல்பாகவே வயிற்றைக் கிளற்ப் பசியை வா என்று சொல்லும் வேளை அது. சிஜியின் கைவண்ணத்தில் மணம் குணம் நிறைந்த மீன்பொரியல் குண்டு குண்டாய் வெள்ளைச் சோறு, நறுக்கிய வெண்டைக்காய்த் துவையல், தக்காளிச்சாலட், என்று பெருவிருந்தே படைக்கப்படுகின்றது. வெள்ளை முத்துக்களாய் நம்மூர் அரிசியின் நான்கு மடங்கு பருமனில் குண்டு குண்டாய் அரிசிச்சோறு கோப்பையை நிறைத்திருந்தது. வகையான காய்கறிகளின் சேர்க்கையில் ரஜினி வாய்ஸ் கொடுத்தபோது இருந்த தி.மு.க, த.மா.க கூட்டணி போல அமர்க்களமாக இருந்தது. எனக்கும் பேச்சுக்கொடுத்துத் திறமையான சமையலையும் செய்து முடித்த சிஜியை வாயாரப் புகழ்ந்தேன் மீன் பொரியலைச் சுவைத்தவாறே. மதிய உணவின் பின்னர் ஒருமணி நேர ஓய்வு. கிடைத்த அந்த நேரத்தில் கடலோடி நண்பர்கள் தரை விரிப்பை விரித்து மதியத்தூக்கம் கொள்கின்றார்கள். நானும் என் படுக்கை சென்றமர்ந்து "ஆச்சி பயணம் போகிறாள்" நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்கின்றேன். ஒரு மணி நேர ஓய்வு கழிகின்றது. இப்பொது மழையும் ஒதுங்கிக்கொண்டது. அரை வட்டமடித்தது போன்ற நீர்ப்பரப்பில் மீண்டும் பயணப்படுகின்றது படகுவீடு.

உண்டமயக்கம் கண்ணைக்கட்டியது, கொஞ்சம் கண்ணயரலாம் என்று நினைத்துக்கட்டிலில் சாய்ந்தேன். சேவல் ஒன்று கூவிக்கேட்டது. "அட, மதிய நேரத்திலே சேவல் கூவல்" என்று ஆர்வமாகப் படுக்கையின் அருகே இருந்த சாரளம் வழியே பார்க்கின்றேன். பாதி கட்டப்பட்ட கொங்கிறீற் தடுப்புடன் கூடிய குடியிருப்பில் நின்று சேவல்கள் சில நிரையாக நின்று கூவித் தீர்க்கின்றன. யாத்ரா காணாம்........

Thursday, August 03, 2006

படகுவீட்டுப்பயணம் ஆரம்பம்

மே 28, மதியம் 12.00 மணி (இந்திய நேரம்)
நான் முன்னர் சொன்னது போல ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த படகு வீட்டுப் பயணத்துக்கான நேரமும் வந்தது. நான் தங்கியிருந்த அறையைப் பூட்டி என் சூட்கேசை கெளரி ரெசிடென்ஸ் இன் பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டுக் காத்திருந்தேன். அந்த விருந்தினர் விடுதி இளைஞர்கள் ஓடி ஓடிப் படகுப் பயணத்துக்காகக் காத்திருந்த என்னைப் போன்ற விருந்தினர்களை பொருத்தமான படகுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்து பதிவேட்டில் குறிக்கின்றார்கள். இங்கே வங்கி அட்டைப் பணக்கொடுப்பனவு இல்லாததால் 3,500 ரூபாவிற்கான இந்திய நோட்டுக்களை நீட்டுகின்றேன். தன் ஈரக்கைகளைத் தன் கட்டிய வேட்டியில் தடவி விட்டுச் சுறுக்காகப் பணத்தை வாங்கிப் பெட்டியில் போடுகின்றார் கெளரி ரெசிடென்ஸ் மேலாளரான அந்த இளைஞர். ஆட்தொகைக்கு ஏற்ப கார்களிலும் ஜீப்பிலும் படகு வீடு காணப் போகும் விருந்தினர்களை அள்ளியேற்றிவிட்டுப் பயணப்படுகின்றார்கள்.
குறுகலான சந்துக்குள்ளால் பயணப்பட்டுப் பின் ஒரு வேலிப் பொட்டுக்கு முன்னால் ஜீப் நின்றது. என் படகுவீட்டுக்குப் பொறுப்பான கடலோடி நண்பர்கள் எனக்காகக் காத்திருக்கின்றார்கள். கொட்டும் மழைச் சாரல் வழிந்தோடும் தம் முகத்தைப் புறங்கையால் துடைத்து எறிந்துகொண்டே வாயெல்லாம் பல்லாக வரவேற்கின்றார்கள், இவர்களில் ஒரு கிழவனார், ஒரு நடுத்தர வயதுக்காரர், ஒரு இளைஞன் அடக்கம்.
மழைவெள்ளத்தில் புதையாமல் இருக்க என் சப்பாத்துக்களைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டே வருமாறு பணித்தார் ஒருவர். குச்சொழுங்கை இருபக்கமும் வேலி மறைக்கக், செம்பாட்டுத் சதுப்பில் கால்கள் பொத்துப் பொத்தென வெள்ள நீருக்குள் புதைய நடப்பதும் இனிமை. நான் சின்னப் பிள்ளையாக இருக்கும் போது பள்ளிக்கூடம் விட்டுவரும் போது வெள்ளம் காணும் பக்கம் எங்கும் என் கால்கள் அலைந்து அலைந்து வெள்ள நீரைத் துளாவியதும், வீட்டுக்கு வந்ததும் பாட்டா செருப்பிலும் என் காற்சட்டையிலும் ஒட்டிக் கிடந்த சேற்றுப் படலங்களையும் கண்ட என் அம்மா தந்த கிள்ளுப் பரிசும் ஞாபகத்துக்கு வந்து உள்ளுரச்சிரித்தேன்.
ஒருவாறு படகுத்துறையை வந்தடைந்தோம், இதற்கு ஐந்து நிமிட நேரமும் பிடித்திருக்காது. ஆலப்புழாவின் பிரசித்திபெற்ற அந்தத்துறையில் பரந்த கரையெங்கணும் படகு வீடுகள், போருக்குத் தயாராகக் காத்து அணிவகுத்து நிற்கும் வீரர்கள் போலக் கம்பீரமாக நிற்கின்றன. எல்லாப்படகுகளுமே மதியம் 12 மணிக்குத் தான் புறப்படுமாம். உங்களின் வசதிக்கேற்ப அரை நாள் அல்லது முழு நாள் வாடகைக்கு இவற்றை நீங்கள் ஒழுங்கு செய்யலாம். அரை நாள் வாடகைக்குக் கட்டணமும் பார்க்கும் இடங்களும் குறைவு. நான் ஒரு நாள் வாடகையாக இப்படகுவீட்டை ஒழுங்கு செய்திருந்தேன். அதாவது முதல் நாள் நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த நாட் காலை 10 மணி வரை. இப்படகு வீடுகள் அழகான நேர்த்தியான கைவேலைப்பாடுகளுடன் உள்ளன. நடுத்தர வயதுக்காரர் எட்டிப் பாய்ந்து படகினுள் ஏறிவிட்டு என்னைக் கை தூக்கி உள்ளே அனுப்புகின்றார். நான் ஒப்பந்தம் செய்த படகு வீடு காதலர்களும் புதிதாகக் கல்யாணமாகித் தேனிலவு வருபவர்களும் விரும்பித் தேர்தெடுப்பதாம். படகு வீட்டு இளைஞன் இதைச் சரளமாக ஆங்கிலத்தில் சொல்லியவாறேப் படகின் அருமை பெருமைகளை அள்ளிவிட்டான், இங்கு சமையல் செய்பவரும் கூட இவன் தான். சுத்தமான ஒற்றைப் படுக்கையும், கழிப்பறையும் கொண்டதாக இருந்தது என் புகலிடம். ஹோர்ண் அடித்துச் சல்யூட் செய்தவாறே பக்கத்துப் படகுக்காரர்களும் இணையப் பயணம் ஆரம்பமாகின்றது. இளைஞர்கள் சைக்கிள்களில் சம பயணத்தில் இரட்டைச் சவாரி செய்வது போல இருக்கிறது. உற்சாகமும் மகிழ்ச்சியும் எனக்குள் பரவ, ஒரு குழந்தை போல எட்டிக் கடலைப் பார்க்கின்றேன். அரைகுறை ஆடை பூண்டு இருக்கும் காட்டு ராணிகள் போலக் கடற் தாவரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதக்கின்றன. கரையெங்கணும் தென்னை, விலாட் மா மரங்கள், வாழை, பூவரச மரங்கள் சாமரம் வீசுவதுபோல நிரையாக நிற்கின்றன. அட... கடந்து போன கடலை ஒட்டிய குட்டிச்சுவர்களைக் கூட அரசியல்வாதிகளின் சுவரொட்டிகள் நிரப்பியிருக்கின்றன. பாலத்துறை பொலிஸ் ஸ்டேசன் B டிவிஷன் தெரிகின்றது. கரைப் பாதையில் எழுந்து நிற்கும் மின்சாரத்தூண்கள் இந்தக் கடற்கழிப் பிரதேசத்திலும் மின்சாரம் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்தக் கடற்கழிப் பரப்பு நன்னீர் ஓடையாக உள்ளதாம். சந்தன நிற வேட்டிகளோடு தூரத்தே புள்ளிகளாகக் கேரளத்துச் சேட்டன்கள். கரையை ஒட்டிய வீட்டு முற்றங்களை சுங்க இலாகா அதிகாரிகள் போலச் சல்லடை போடுகின்றன அவர்களின் வளர்ப்புப் பிராணிகளான வாத்துகளும் கோழிகளும். கடற்கழியை ஒட்டிய கிராம வாழ்க்கையைக் கைபிடித்துக் கொண்டு காட்டும் சுற்றுலா வழிகாட்டி போலப் படகும் மெதுவாகத் தள்ளாடியவாறே அமைதியாகப் பயணிக்கின்றது.


ஞான் இவிடே வரும்.....

Wednesday, July 19, 2006

கேரளாவின் கடற்கழிச்சுற்றுலா

மே 28, காலை 8.00 மணி (இந்திய நேரம்) ஆலப்புழாவிற்கு வந்த காரணம் நிறைவேறும் நாள் இன்று என்பதால் முந்தய நாட் தூக்கம் சற்றுக் குறைச்சலாகவும், மனசுக்குள் சுற்றுலா ஆர்வம் அதிகப்படியாகவும் ஏறி உட்கார்ந்துகொண்டது. இப்படியான இரண்டும் கெட்டான் நிலையில் தூக்கம் என்ன தூக்கம் என்று நினைத்துக்கொண்டே வாரிச்சுருட்டி எழுந்துகொண்டேன். ஜன்னலால் எட்டிப்பார்த்த போது வருணபகவான் தொடர்ந்தும் ஓவர் டைமில் தூறிக்கொண்டே இருந்தார். கதகதப்பான அந்த சூழ்நிலை யாழ்ப்பாண மார்கழிக் குளிரை நினைவுபடுத்தியது. இருந்தும், சோம்பலை மூட்டை கட்டி வைத்துவிட்டுக் காலைக் கடன்களை முடித்து நன்றாகக் குளியல் ஒன்று எடுத்தேன்.

முதல் நாள் இரவு கெளரி ரெசிடென்ஸ் இளைஞர்களின் கைவண்ணத்தில் உருவான பொரிச்ச இறாலும், வட இந்திய ரொட்டித்துண்டங்களும் வெகு சீக்கிரமாகவே ஜீரணமாகிவிட்டதால் , காலை சீக்கிரமாகவே பசியெடுத்தது. புது உடை பூண்டு, மழைத்தூறலை மதியாமல் கொஞ்சம் நடை, கொஞ்சம் ஓட்டமுமாக ஆலப்புழா நகரை நோக்கி வேகமெடுத்தன என் கால்கள். கெளரி ரெசிடென்ஸ்ஸிலிருந்து ஒரு 10 நிமிட தூரத்துக்கும் குறைவாகவே ஆலப்புழா நகர் இருந்தது. என் கால்கள் ஈரமண் வீதியில் பதிக்க, கண்களோ வீதியோரக்கடைகளை நோட்டம் விட்டவாறே உணவகத்தைத் தேடின.

என்ற புத்தம் புதிய Flash Restaurant என்ற உணவகம் கண்களில் மாட்டியது. விறு விறுவென உள்ளே போனேன். இருக்கையில் அமர்ந்த போது உணவக முதலாளியும், பணியாளும் சிரித்து வரவேற்று, இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இந்த உணவகம் திறந்ததாகவும், இன்னும் உணவுப் பட்டியல் அச்சில் அடிக்கவில்லை என்றும் சொல்லித் தலையைச் சொறிந்தார்கள்.காலை உணவாக இடியப்பமும், அப்பமும் கிடைக்கும் என்றார்கள். கேரளப் புட்டை ஒருகை பார்க்கலாம் என்றால் எனக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

கேரளப் புட்டு , கேரள உணவகங்களில் கிடைப்பது அரிது என்று நினைக்கிறேன். ஏனெனில் கேரளாவில் மற்றைய உணவகங்களிலும் எனக்கு இதே ஏமாற்றம் தான். மலையாளிகள் தம் வீட்டில் தான் இதை ஆக்குவார்கள் போலும். முட்டை அப்பம் சாப்பிடலாம் என்று நினைத்து ( அப்பத்துக்குள் முட்டை போட்டிருக்கும்) முட்டை அப்பத்துக்கு ஓடர் செய்தேன். கிடைத்தது தனியாக வெறும் அப்பமும், வெங்காயச் சட்னிக்குள் புதைந்த அவிச்ச முட்டையும் தான். முட்டை அப்பம் கேட்ட எனக்கு உள்ளுரச் சிரிப்பு வந்தாலும், அட இது கூட நல்லாயிருக்கே என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டு சாப்பாட்டை ஒரு கை பார்த்தேன். பக்கத்து இருக்கைகளில் இருந்தோரில் பலர் இடியப்பம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

காலைச் சாப்பாடு முடிந்து மீண்டும் கெளரி ரெசிடென்ஸ் போகிறேன்.மதியம் 12 மணிக்குத் தான் என் படகுச் சுற்றுலா என்பதால் கிடைத்த நேரத்தில் அங்குள்ள கணினியில் இணையத்தளங்களை மேய்கின்றேன். கேரளாவில் இருந்து வரும் ஆங்கிலப் பத்திரிகையில் முதல் நாள் மறைந்த ஒடுவில் உன்னிகிருஷ்ணன் பற்றிய சிறப்புச் செய்திகளும், அவர் பற்றி சக கலைஞர்களின் அனுதாப நினைவுகளும் வந்திருக்கின்றன.

சரி, இனி என் ஆலப்புழா கடற்கழிப் (Backwater) பயணத்தை ஆரம்பிக்க முன்னர், கேரளாவின் இந்தக் கடற்கழிப் பிரதேசங்கள் பற்றிய குறிப்பைக் கேரளச் சுற்றுலாத் தளங்களின் உதவியுடன் தருகின்றேன். அனைத்துப் புகைப்படங்களும் என் கமராவில் சுட்டவை.

கேரளா மாநிலம் 900 கீ மீ பரப்பளவிற்கு மேல் நீர்வழித் தடங்கள், ஆற்றுப்படுக்கைகள், பரவைக்கடல் ஆகியவற்றால் சூழவும், மத்தியிலும் கொண்ட ஒரு பிரதேசம். இப்படியான புவியியல் அமைப்பின் ஆற்று வழித்தடங்கள் எங்கணும், வரலாற்றுச் சிறப்புமிக்க, பழமை பேணும் கிராம அமைப்பும்,கண்கவரும் நீர்வழி நெடும்பயணங்களும், நாகரீகச் சாயம் பூசிக்கொண்டு வரும் கிராமங்களுமான கலவையாக அமைந்து காணப்படுகின்றது. இந்தப் படகு வீட்டின் முக்கியமான பயண இலக்குகள், உங்களுக்கு இந்தப் பயணத்தை ஒழுங்கு செய்து தரும் படகு வீட்டு உரிமையாளர்களாலோ அன்றிப் பயணிகளாலோ தீர்மானிக்கப்படுகின்றது. இந்தப் பயணத்தில் தொடும் பயண இலக்குகளில் குறிப்பிடத்தக்க இடங்களாவன:
( இவை அனைத்துமே உங்கள் ஒரு நாட் பயணத்தில் பார்க்கமுடியாது, மாற்று ஒழுங்குகள் செய்யவேண்டும்).
கொச்சின் (இப்போது கொச்சி என்ற பெயர்) (Cochin) - அரபிக்கடலின் மகாராணி என்று அழைக்கப்படும் கொச்சி மிகப்பிரபலமான பயணப்படுக்கைகளில் ஒன்று.
காரணம், வரலாற்று ரீதியான அம்சங்களையும், சீன வலை எனப்படும் மீன்பிடித் தொழிலைப் பார்க்கும் வாய்ப்புமாகும். கொச்சின் பற்றி நிறையப் பேச இருக்கிறது, பின்னர் கவனித்துக்கொள்கிறேன்.

ஆலப்புழா (Alappuzha ) - என்னுடைய பிரயாணம் ஆலப்புழாவில் மையம் கொண்டிருந்த காரணத்தால், இந்தப் பயணம் பற்றிய வரலாற்று மற்றும் காட்சிக் குறிப்புக்கள் அடுத்த பதிவுகளில் வரும்.
கசர்கொட் (Kasargod) - வட கேரளாவில் அமைந்துள்ள இப்பிரதேசம், வல்லியப்பரம்பா என்று ஆற்றுப் படுக்கை தாங்கியது. பச்சைப் பசேலென்ற இந்தப் பிரதேசம் கேரளத்தின் பசுமைப் புரட்சியைக் காண விரும்புபவர்களுக்கு ஓர் நல்விருந்து.

கொல்லம் (Kollam) - கேரளத்தலைநகர் திருவனந்தபுடத்திலிருந்து 70 கீ.மீ தொலைவில் உள்ள இப்பிரதேசம், அஸ்தமுடி என்ற ஏரி தழுவி அமைந்துள்ள மிகப்பழைமையான துறைமுகமாகும். கோட்டயம் (Kottayam) - கடற்பயணம் செய்பவர்களுக்கு இயற்கை வனப்புள்ள மலைப் பிரதேசங்களைக் காணவேண்டுமென்றால் தவறாது போகவேண்டிய இடம். இங்கு விளையும் ரப்பர் பயிர் உற்பத்தியையும் கண்டு களிக்கலாம்.

கோழிக்கோடு (Kozhikode) - வட கேரளாவில் உள்ளது. பல தெரிவுகளில் கோடு போட்ட பருத்தி ஆடைகளுக்கு மவுசு கிடைத்த ஊர், அதனாலேயே கோழிக்கோடு என்ற பெயரும் வந்ததாகச் சொல்லப்படுகின்றது. நாடுகாண் பயணி வஸ்கொடகாமா 1498 இல் வந்திறங்கிய இடம். 16 கீ.மீ தொலைவில் கப்பட் என்ற கடற்கரையும் உண்டு.

குமரகம் (Kumarakom) - பூலோக சொர்க்கம் என்றழைக்கப்படும் இவ்வூர் வேம்பநாடு வாவியை ஒட்டி அமைந்துள்ளது. பறவைகள் சரணாலயமும் தன்னகத்தே கொண்டிருக்கின்றது.

குத்தநாடு (Kuttanad) - கேரளாவின் அரிசிக்கோப்பை (Ricebowl of Kerala) என்று செல்லமாக அழைக்கப்படும் இவ்வூர், நெற்கதிர்ப் பாசனத்துக்குப் புகழ் பெற்றது. கடல்மட்டத்துக்குக் கீழேயே நெற்கதிர்கள் தலைவிரித்து ஆடுகின்றன. இம்மாதிரியான பாசனச் செய்கையில் கடலுக்குக் குறுக்கே அணை போடப்பட்டுப் நெற்செய்கை விளைவிக்கப்படுகின்றது. இந்த ஒப்பீடுகைக்குக் கடல்மட்டத்துக்குக் கீழே உள்ள நாடான நெதர்லாந்து நாட்டுப் புவியியல் அமைப்பும் பொருந்தப்படுகின்றது.

திருவல்லம் (Thiruvallam) - திருவனந்தபுரத்தில் இருந்து 6 கீ.மீ தொலைவில் இருக்கும் இவ்விடம் கிள்ளி மற்றும் காரமன்னா ஆகிய இரண்டு ஆறுகளின் இணைப்பில் அமைந்து காணப்படுகின்றது. நான் முன்னர் சொன்ன வேலி என்ற சுற்றுலாத்தலத்திற்கு அண்மையிலும் திருவல்லம் இருக்கின்றது.

திருவனந்தபுரம் (Thiruvananthapuram) - கேரளக் கடற்கழிச் சுற்றுலாப் பயணங்களின் ஆரம்பத்தொடுகையாக இப்பிரதேசம் விளங்குகின்றது. இந்த இடத்தைப் பற்றித் தானே நிறையச் சொல்லிவிட்டேனே? :-)

கெளரி ரெசிடென்ஸ்காரரே என் படகு வீட்டுப் பயணத்தை ஒழுங்கு செய்திருக்கிறார்கள். ஒரு அறையுடன் கூடிய அந்தப் படகு வீடு என் 22 மணி நேரப் பயணத்துக்காக ரூ 3500 மட்டுமே செலவாகியது. இந்தச் செலவில் படகு வாடகை, மதிய உணவு, மாலைச் சிற்றுண்டி, இரவு உணவு, அடுத்த நாட் காலை உணவு ஆகியவை அடக்கம். இந்த ஒரு அறையுடன் கூடிய படகு வீடு நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கும் மிகவும் பொருத்தமானது. மேலதிக கட்டணம் எதுவுமில்லை. இந்தப் படகு வீட்டிற்குள்ளேயே மேற்கத்தேயத் தரத்தில் கழிப்பறையும் உண்டு. இந்தப் படகுவீடுகளை அரை நாள் வாடகை அல்லது ஒரு நாள் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம். நான் போன படகு வீட்டைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. அதுவரை,

ஷமிக்கோ... (Excuse me)