நான் முன்னர் சொன்னது போல ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த படகு வீட்டுப் பயணத்துக்கான நேரமும் வந்தது. நான் தங்கியிருந்த அறையைப் பூட்டி என் சூட்கேசை கெளரி ரெசிடென்ஸ் இன் பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டுக் காத்திருந்தேன். அந்த விருந்தினர் விடுதி இளைஞர்கள் ஓடி ஓடிப் படகுப் பயணத்துக்காகக் காத்திருந்த என்னைப் போன்ற விருந்தினர்களை பொருத்தமான படகுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்து பதிவேட்டில் குறிக்கின்றார்கள். இங்கே வங்கி அட்டைப் பணக்கொடுப்பனவு இல்லாததால் 3,500 ரூபாவிற்கான இந்திய நோட்டுக்களை நீட்டுகின்றேன். தன் ஈரக்கைகளைத் தன் கட்டிய வேட்டியில் தடவி விட்டுச் சுறுக்காகப் பணத்தை வாங்கிப் பெட்டியில் போடுகின்றார் கெளரி ரெசிடென்ஸ் மேலாளரான அந்த இளைஞர். ஆட்தொகைக்கு ஏற்ப கார்களிலும் ஜீப்பிலும் படகு வீடு காணப் போகும் விருந்தினர்களை அள்ளியேற்றிவிட்டுப் பயணப்படுகின்றார்கள்.
குறுகலான சந்துக்குள்ளால் பயணப்பட்டுப் பின் ஒரு வேலிப் பொட்டுக்கு முன்னால் ஜீப் நின்றது. என் படகுவீட்டுக்குப் பொறுப்பான கடலோடி நண்பர்கள் எனக்காகக் காத்திருக்கின்றார்கள். கொட்டும் மழைச் சாரல் வழிந்தோடும் தம் முகத்தைப் புறங்கையால் துடைத்து எறிந்துகொண்டே வாயெல்லாம் பல்லாக வரவேற்கின்றார்கள், இவர்களில் ஒரு கிழவனார், ஒரு நடுத்தர வயதுக்காரர், ஒரு இளைஞன் அடக்கம். 
மழைவெள்ளத்தில் புதையாமல் இருக்க என் சப்பாத்துக்களைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டே வருமாறு பணித்தார் ஒருவர். குச்சொழுங்கை இருபக்கமும் வேலி மறைக்கக், செம்பாட்டுத் சதுப்பில் கால்கள் பொத்துப் பொத்தென வெள்ள நீருக்குள் புதைய நடப்பதும் இனிமை. நான் சின்னப் பிள்ளையாக இருக்கும் போது பள்ளிக்கூடம் விட்டுவரும் போது வெள்ளம் காணும் பக்கம் எங்கும் என் கால்கள் அலைந்து அலைந்து வெள்ள நீரைத் துளாவியதும், வீட்டுக்கு வந்ததும் பாட்டா செருப்பிலும் என் காற்சட்டையிலும் ஒட்டிக் கிடந்த சேற்றுப் படலங்களையும் கண்ட என் அம்மா தந்த கிள்ளுப் பரிசும் ஞாபகத்துக்கு வந்து உள்ளுரச்சிரித்தேன்.
ஒருவாறு படகுத்துறையை வந்தடைந்தோம், இதற்கு ஐந்து நிமிட நேரமும் பிடித்திருக்காது. ஆலப்புழாவின் பிரசித்திபெற்ற அந்தத்துறையில் பரந்த கரையெங்கணும் படகு வீடுகள், போருக்குத் தயாராகக் காத்து அணிவகுத்து நிற்கும் வீரர்கள் போலக் கம்பீரமாக நிற்கின்றன. எல்லாப்படகுகளுமே மதியம் 12 மணிக்குத் தான் புறப்படுமாம். உங்களின் வசதிக்கேற்ப அரை நாள் அல்லது முழு நாள் வாடகைக்கு இவற்றை நீங்கள் ஒழுங்கு செய்யலாம். அரை நாள் வாடகைக்குக் கட்டணமும் பார்க்கும் இடங்களும் குறைவு. நான் ஒரு நாள் வாடகையாக இப்படகுவீட்டை ஒழுங்கு செய்திருந்தேன். அதாவது முதல் நாள் நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த நாட் காலை 10 மணி வரை. இப்படகு வீடுகள் அழகான நேர்த்தியான கைவேலைப்பாடுகளுடன் உள்ளன. நடுத்தர வயதுக்காரர் எட்டிப் பாய்ந்து படகினுள் ஏறிவிட்டு என்னைக் கை தூக்கி உள்ளே அனுப்புகின்றார்.
நான் ஒப்பந்தம் செய்த படகு வீடு காதலர்களும் புதிதாகக் கல்யாணமாகித் தேனிலவு வருபவர்களும் விரும்பித் தேர்தெடுப்பதாம். படகு வீட்டு இளைஞன் இதைச் சரளமாக ஆங்கிலத்தில் சொல்லியவாறேப் படகின் அருமை பெருமைகளை அள்ளிவிட்டான், இங்கு சமையல் செய்பவரும் கூட இவன் தான். சுத்தமான ஒற்றைப் படுக்கையும், கழிப்பறையும் கொண்டதாக இருந்தது என் புகலிடம். ஹோர்ண் அடித்துச் சல்யூட் செய்தவாறே பக்கத்துப் படகுக்காரர்களும் இணையப் பயணம் ஆரம்பமாகின்றது. இளைஞர்கள் சைக்கிள்களில் சம பயணத்தில் இரட்டைச் சவாரி செய்வது போல இருக்கிறது. உற்சாகமும் மகிழ்ச்சியும் எனக்குள் பரவ, ஒரு குழந்தை போல எட்டிக் கடலைப் பார்க்கின்றேன். அரைகுறை ஆடை பூண்டு இருக்கும் காட்டு ராணிகள் போலக் கடற் தாவரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதக்கின்றன. கரையெங்கணும் தென்னை, விலாட் மா மரங்கள், வாழை, பூவரச மரங்கள் சாமரம் வீசுவதுபோல நிரையாக நிற்கின்றன. 
அட... கடந்து போன கடலை ஒட்டிய குட்டிச்சுவர்களைக் கூட அரசியல்வாதிகளின் சுவரொட்டிகள் நிரப்பியிருக்கின்றன. பாலத்துறை பொலிஸ் ஸ்டேசன் B டிவிஷன் தெரிகின்றது. கரைப் பாதையில் எழுந்து நிற்கும் மின்சாரத்தூண்கள் இந்தக் கடற்கழிப் பிரதேசத்திலும் மின்சாரம் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இந்தக் கடற்கழிப் பரப்பு நன்னீர் ஓடையாக உள்ளதாம். சந்தன நிற வேட்டிகளோடு தூரத்தே புள்ளிகளாகக் கேரளத்துச் சேட்டன்கள். கரையை ஒட்டிய வீட்டு முற்றங்களை சுங்க இலாகா அதிகாரிகள் போலச் சல்லடை போடுகின்றன அவர்களின் வளர்ப்புப் பிராணிகளான வாத்துகளும் கோழிகளும். கடற்கழியை ஒட்டிய கிராம வாழ்க்கையைக் கைபிடித்துக் கொண்டு காட்டும் சுற்றுலா வழிகாட்டி போலப் படகும் மெதுவாகத் தள்ளாடியவாறே அமைதியாகப் பயணிக்கின்றது.ஞான் இவிடே வரும்.....

ஆலப்புழாவிற்கு வந்த காரணம் நிறைவேறும் நாள் இன்று என்பதால் முந்தய நாட் தூக்கம் சற்றுக் குறைச்சலாகவும், மனசுக்குள் சுற்றுலா ஆர்வம் அதிகப்படியாகவும் ஏறி உட்கார்ந்துகொண்டது. இப்படியான இரண்டும் கெட்டான் நிலையில் தூக்கம் என்ன தூக்கம் என்று நினைத்துக்கொண்டே வாரிச்சுருட்டி எழுந்துகொண்டேன். ஜன்னலால் எட்டிப்பார்த்த போது வருணபகவான் தொடர்ந்தும் ஓவர் டைமில் தூறிக்கொண்டே இருந்தார். கதகதப்பான அந்த சூழ்நிலை யாழ்ப்பாண மார்கழிக் குளிரை நினைவுபடுத்தியது. இருந்தும், சோம்பலை மூட்டை கட்டி வைத்துவிட்டுக் காலைக் கடன்களை முடித்து நன்றாகக் குளியல் ஒன்று எடுத்தேன்.
என் கால்கள் ஈரமண் வீதியில் பதிக்க, கண்களோ வீதியோரக்கடைகளை நோட்டம் விட்டவாறே உணவகத்தைத் தேடின. 








நான் தியேட்டரை அடைந்தபோது மாலை 6.10, படமோ 6.20 இற்கே ஆரம்பமாகிவிட்டிருந்தது. இருக்கைகள், இதுவரை நான் போன தமிழ் சினிமாத் தியேட்டர்களின் இருக்கைகளை விட நல்ல தரத்தில் இருந்தன. நான் பார்த்த படம், பார்க்கவேண்டும் என்று பிரியப்பட்ட "ரச தந்திரம்".









கெளரி ரெசிடென்ஸ் (Gorwri Residence), இது தான் நான் ஆலப்புழாவில் இருக்கும் வேளை தங்குவதற்காகத் தேர்ந்தெடுத்த இடம். இணையம் மூலமாக இந்தத் தங்குமிடம் பற்றி அறிந்து, அதில் கொடுக்கப்பட்ட தொலைபேசி மூலமாக நான் அவுஸ்திரேலியாவில் இருந்து புறப்பட முன்னதாகவே முற்பதிவு செய்துவிட்டேன். 

வீட்டின் முகப்பில் கிடுகால் அமைந்த பாதுகாப்புக் கொட்டிலின் முதிய காவலாளி இருக்கிறார். ஓய்வில் இருக்க வசதியாக முன்முகப்பில் தனிக்கொட்டகை அமைந்திருக்கிறது. பக்கத்து மாமரத்தில் ஊஞ்சல் கட்டப்பட்டிருக்கிறது. பகலில் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் அதில் விளையாடி மகிழ்கிறார்கள். பின் வளவில் பல தென்னை மரங்கள் இருக்கின்றன.
காலையில் இந்தத் தென்னை மரங்களில் ஏறிக் கள் இறக்கிக் கொண்டுபோகிறார் ஒரு வாலிபர். கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது, ஈரம் படிந்த அந்தத் தென்னைமரங்களில் சரசரவென ஏறி அவர் செய்யும் கள் இறக்கும் ஜாலத்தைப் பார்க்கவேண்டும் நீங்கள். ஒவ்வொரு மரமாக ஏறிச் சேர்த்த கள்ளைத் கொண்டுவந்த பீப்பாயில் நிறைத்தவாறே நகர்கிறார் அவர்.




திருவனந்தபுரம் Highland ஹோட்டலில் இருந்து மதியம் 1.00 மணிக்கு ஆலப்புழா நோக்கிக் காரில் பயணித்தேன். போகும் பாதை நன்கு சீரமைக்கப்பட்ட பெருந்தெருவாக இருந்தது. அடூர் (Adoor) என்ற கிராமத்தை நெருங்குகையில் போத்தீஸ் துணிக்கடை விளம்பரத்தில் நம்மவர் ஒலிபரப்பாளர் அப்துல் ஹமீத் சர்வாணியுடன் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.
பயணிக்கும் போது தென்படும் ஊர்ப்பலகைகள் பல கேரளக்கலைஞர்களை ஞாபகப் படுத்துகின்றன. கேரளக் கலைஞர்கள் பலர் தம் ஊரின் பெயரையும் இணைத்துச் சொல்வது நீங்கள் அறிந்ததே.



ஆலபுழா நகரவீதிகளில் அதிகம் தென்படுவது வாழைக்குலை தொங்கும் கடைகள். ஓவ்வொரு வாழைக் குலைகளும், மம்முட்டியினதும், ஜெயராமினதும் உடல் வாகை நினைவுபடுத்துமளவுக்குப் பென்னான் பெரியவை. 

