Social Icons

Pages

Tuesday, October 27, 2009

பாங்கொக் நகரத்துக் கோயில்கள்

பாங்கொக்கில் தங்கியிருந்த முதல் நாள் சுற்றுலாவுக்காக நான் ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த சுற்றுலாகப் பணியகத்தின் வழிகாட்டி வந்து என்னை அழைத்துப் போனாள், எனக்காக ஹோட்டலின் எதிர்த்திசையில் கார் காத்து நின்று கொண்டிருந்தது. முதலில் நாங்கள் போன இடம் Wat Pho என்ற புகழ்பெற்ற பெளத்த ஆலயம். இருநூறு வருடங்களுக்கு முற்பட்ட பழமையான இந்த ஆலயத்தில் மிக நீண்ட சயன நிலையில் இருக்கும் தங்க நிறத்துப் புத்தரைப் பார்க்க என்றும் கூட்டம் இருக்கும்.

நாங்கள் போன நாள் பெளத்தர்களுக்கு ஒரு விஷேட நாளாக இருந்ததால் உள்ளூர் மக்களின் கூட்டமும் திரண்டிருந்தது. 45 மீட்டர் நீளமும் 15 மீட்டர் உயரமுமான அந்தப் புத்தரைப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கின்றது. ஆலயத்தின் உள்ளரங்கத்தில் ஒரு ஓரமாக வரிசை ஒன்று நீண்டு கொண்டு போய்க் கொண்டிருக்கின்றது. இந்த ஆலயத்துக்கான தனித்துவமான வழிபாட்டினை மேற்கொள்ள உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரஜைகள் என்ற பேதமில்லாமல் இருக்கின்றது அந்த வரிசை. தாய்லாந்து நாட்டுக்கே உரிய பாரம்பரிய மசாஜ் இந்த ஆலயத்தில் இருந்து தான் தோற்றம் பெற்றது என்று சொல்கின்றார்கள்.



ஆலயச் சூழலில் வலம் வரும் போது பள்ளிச் சிறுவர் கூட்டம் தம் கலாச்சாரச் சுற்றுலாவுக்காகத் திரள்வது தெரிகின்றது. கூடவே இன்னொரு பகுதியில் சிறுவர்களுக்கு பெளத்தமதப் பிரசாரத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றார் ஒரு துறவி. நான்கு மன்னர்களுக்கான நினைவிடங்களும் இங்கே அமைக்கப்பட்டு பெருமைப்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.

தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவத்தின் தந்தையான Hermit doctor (Ruesee) இன் உருவச் சிலையும் அவருக்கு முன்னே மருந்து தயாரிக்கப் பய்ன்படும் அம்மிக்குழவியும்

புத்தர் சிலையில் மினுமினுவென்று இருந்த தங்க மேற்பூச்சைச் சுரண்டித் தன் நெற்றியில் வைத்தாள் என்னுடன் வந்த வழிகாட்டி. அதை நெற்றியில் இடுவதால் புத்தரின் அனுக்கிரகம் கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாம். பலர் இப்படிச் சுரண்டியதால் புத்தர் நிறமிழந்து போய்க் கொண்டிருக்கிறார்.

Grand Palace Complex

1782 இல் முதலாம் இராமா என்ற அரசரின் ஆளுக்கைப் பிரதேசமாக மாற்றப்பட்ட இந்தப் பகுதி 218,400 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அரச வாசஸ்தலத்தோடு, Emerald Buddha என்ற பெளத்த வழிபாட்டிடமும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்துக்குப் போகும் போது இன்னொரு கட்டுப்பாடும் விதிக்கப்படுகின்றது. அதாவது ஆண்கள், பெண்கள் என்று எல்லோருமே அவர்களுக்கு கொடுக்கப்படும் தனித்துவமான முழுநீளக்கை கொண்ட ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும் என்பது விதிவிலக்கற்ற விதிமுறை.




Temple of the Emerald Budda (Wat Phra Kaew)

கி.பி 14 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தர் சிலையைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் இது என்று கொள்ளப்படுகின்றது. தாய்லாந்து நாட்டுக்கே உரிய சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த, தங்க நிறத்தில் தகதகக்கும் இவ் ஆலயத்தின் உட்சுவரில் இராமாயணக் கதையைச் சித்திரமாகத் தீட்டியிருக்கின்றார்கள். கம்போடியா நாட்டின் புகழ்பெற்ற அங்கோர் வாட் ஆலயத்தின் மாதிரி அமைப்பை இங்கே உருவாக்கி இருக்கின்றார்கள்.



Temple of the Dawn (Wat Arun)

கைமர் மன்னர்களின் தனித்துவமான கட்டிட அமைப்பினைக் கொண்ட மிக நீண்ட ( கிட்டத்தட்ட 105 மீட்டர்) கூம்பு வடிவக் கூரையைக் கொண்ட இவ்வாலயத்தில் இந்து சமயக் கடவுளர்களின் சிலைகள் இருப்பது குறிப்பிட வேண்டிய ஒரு அம்சம். அந்த வகையில் சிவன், இந்திரன், பிரம்மா, சக்தி போன்ற கடவுளர்களின் உருவச் சிலைகள் காணக்கிடைக்கின்றன. ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியுமா, இந்த Wat Arun என்ற ஆலயப் பெயரில் Arun என்பது இந்தியக் கடவுளரான அருணனைக் குறிக்கின்றது என்கிறார்கள்.
ஆமாம், உதயத்துக்கான ஆலயம் என்று சிறப்பிக்கப்படும் இக்கோயில் அருணன் என்று இன்னொரு பெயரால் அழைக்கபடும் சூரியனின் கோயிலாகவே கொள்ளப்படுகின்றது.






உசாத்துணை: தாய்லாந்து வழிகாட்டி, சுற்றுலா வழித்தகவல் குறிப்புக்கள்

Sunday, October 18, 2009

பாங்கொக்கில் காலடி வைத்தேன்

தாய்லாந்துக்கு விசா தேவையா இல்லையா என்ற குழப்பத்துடன் நான் இருக்க பாங்கொக்கின் ஸ்வர்ணபுரி விமான நிலையத்தில் தன் கால்களைப் பதித்து சிங்கப்பூர் விமான சேவையின் இயந்திரப் பருந்து. விமான நிலையத்துக்குள் புகும் போது குடிவரவுப் பகுதிக்குள் நுழைய முன்பே எல்லோரையும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கமரா கொண்டு படம் பிடிப்பது புதுமையாக இருக்கின்றது. குடிவரவுச் சீட்டில் உங்கள் வருஷ வருமானம் எவ்வளவு என்றெல்லாம் ஏன் கேட்கிறார்கள், கொழும்பில் கருணா குழு காட்டிய கப்பம் கைவரிசை மாதிரியா? என்றெல்லாம் ஆயிரம் கேள்விக்கணைகள் மனதில் தோன்றி மறையவும் குடிவரவு அதிகாரிக்கு பக்கம் வரவும் சரியாக இருந்தது. துண்டுச் சீட்டைப் பார்த்து விட்டு எல்லாம் சரி என்று விட்டு அவருக்குப் பக்கமாக இருக்கும் இன்னொரு கமரா மூலம் படம் பிடிக்கிறார். அட, மீண்டும் படமா? ஸ்ஸ்சப்பா

மேலே படங்கள் பாங்கொக் ஸ்வர்ணபுரி விமான நிலையத்தினுள் இருக்கும் " நடுவே கிருஷ்ண பரமாத்மா நிற்க தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் மந்தாரமலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலைக் கடையும் காட்சி

விமான நிலையத்திற்குள் சுற்றுலா ஏற்பாடுகளைச் செய்து தருவதற்கான முகவர்கள் கடை விரித்திருக்கிறார்கள். எட்டிப்பார்த்தேன், City & Temple tour ஒரு நாள் சுற்றுலா கண்ணில் தென்பட அதில் பதிவு செய்து கொண்டேன். பின்னர் தான் தெரிந்தது இப்படியான முகவர்களிடம் பதிவு செய்வது எவ்வளவு முட்டாள் தனம் என்று, அதை அடுத்த பதிவில் சொல்கின்றேன். Airport Taxi ஐ வாடகைக்கு அமர்த்தும் பகுதிக்குச் சென்று பதிவு செய்து துண்டுச் சீட்டை வாங்குறேன். நான் போகும் ஹோட்டலுக்கு 500 தாய் பாட் இற்கு மேல் கொடுக்க வேண்டாம் என்று சொன்னார்கள். நானும் சரி என்று விட்டு டாக்சியில் அமர்கின்றேன்.

டாக்சிக்காரர் பேச்சுக் கொடுத்தவாறே நட்புப்பாராட்டி வந்தவர் ஒரு பத்து நிமிடம் கழிந்த பயணத்தின் பின் 800 தாய் பாட் கட்டணமாக கொடுக்க வேண்டும் என்று பிட் ஐப் போட்டார். "இல்லையில்லை நான் விமான நிலையத்தில் வைத்து ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டேன். 500 பாட் இற்கு மேல் கொடுக்க வேண்டாம் என்றார்கள்" என்று சொல்லவும்
அவனோ "இன்று சரியான மழை வெள்ளம், கட்டணம் அதிகம்" என்றான். எனக்குப் புரியவில்லை. பெரும் நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருக்கிறோம், மழை வெள்ளத்தின் சுவடே இல்லை என்னடா இவன் என்னை வச்சு காமடி பண்றானே என்று எரிச்சலோடு, "500 பாட் இற்கு மேல் அதிகம் இல்லை" என்று பேச்சை வெட்டினேன். ஒருவாறு 550 பாட் இல் வந்து நின்றது பேரம். அன்று ஆரம்பித்த பேரம் பேசிப் பயணிக்கும் அனுபவங்கள் தாய்லாந்தில் இருந்து விடைபெறும் நாள் வரை தொடர்ந்தது. யோசித்துப் பார்த்தால் இந்தப் பேரம் பேசி குறைக்கும் தொகை வெளிநாட்டு செலாவணியோடு ஒப்பிடும் போது ஒரு டாலரும் கூட இருக்காது. ஆனால் ஏனோ ஆசிய நாடுகளுக்குப் போனால் இந்தப் பேரம் பேசும் வியாதி தானாக ஒட்டிக் கொண்டு விடுகிறது.

நான் முந்திய பதிவில் சொன்னது போல ஒரு நல்ல ஹோட்டலை தங்குமிடமாகத் தெரிவு செய்திருந்தாலும் அதன் அமைவிடம் தான் பெரும் சிக்கலைக் கொண்டு வந்திருந்தது. அதாவது அந்த ஹோட்டல் ஒரு சாலைக்குக் குறுக்காகப் போகும் சின்னச் சந்து வழியாகத் தான் தன்னுடைய நுழைவிடத்தை வைத்திருந்தது. ஆனால் தன் விலாசத்தை மட்டும் குறித்த சாலையாகக் காட்டி இருந்தது. விமான நிலையத்தில் இருந்து பயணித்த டாக்சிக்காரர் குழம்பிப் போய் ஒருவாறு இடத்தைப் பிடித்து டாக்சியை நிறுத்தினார். ஆனால் தொடந்த நாட்களில் இந்த ஹோட்டலுக்கு நான் பயணித்த டாக்சி ஒவ்வொன்றுக்கும் வழிகாட்டிக் களைத்தே போனேன்.

Lamphu Tree House இதுதான் நான் தேர்தெடுத்த தங்குமிடம். நடுத்தர கட்டணத்தில் 1,850 பாட் (55 US dollar ) இலிருந்து கிடைக்கின்றது தங்கும் அறைகள். தாய்லாந்தின் பாரம்பரிய மரவேலைப்பாடுகள் கொண்ட கட்டிட அமைப்பில் தங்குமிடச் சூழலிலும் அறைகளிலும் தாய்லாந்தின் மரவேலைப்பாடுகள் சிற்பங்களாக ஜொலிக்கின்றன. இணையப் பாவனைக்கு அரை மணி நேரத்திற்கு 30 பாட் ஐ அறவிடுகின்றார்கள். நீச்சல் அரங்கம் ஒன்று உண்டு.

இன்னொரு சிறப்பு காலை உணவு buffet முறையில் பாணில் ஆரம்பித்து தாய்லாந்தின் தனித்துவ உணவு வகைகள் சைவ அசைவங்களாக நிறைந்திருக்கும். காலை உணவுக்கான தனிக்கட்டணம் ஏதுமில்லை. அறை வாடகைக்குள் அடங்குகின்றது. விருந்தாளிகளாக அமெரிக்கர்களும் ஒரு சில அவுஸ்திரேலியர்களும் தென்பட்டார்கள். இந்தத் தங்குமிடத்தின் முகாமையாளர் கனிவான சுபாவம் கொண்டவராக , தனது ஹோட்டலில் தங்கி இருப்பவர்கள் கேட்கும் உதவிகளுக்கு அள்ளி அள்ளி ஆலோசனைகளைக் கொடுக்கின்றார். அவர்கள் போக வேண்டிய இடங்களைப் பரிந்துரை செய்கின்றார். கூடவே அங்கிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணிப்பதற்கு அண்ணளவாக எவ்வளவு செலவாகும் என்பதை விரல் நுனியில் வைத்திருந்து சொல்கின்றார். இதனால் ஒரு வாடகைக் காரையோ, ருக் ருக் இனையோ பிடித்துப் பேரம் பேச இலகுவாக அமைந்து விடுகின்றது.

அடுத்த நாட்காலை 9 மணிக்கு ஏற்கனவே விமான நிலையத்தில் ஒழுங்கு செய்த சுற்றுலாப் பணியகத்தின் வழிகாட்டி வர வேண்டும். காலை 8.30 மணிக்கே தயாராக இருக்கிறேன். மணி 9.05 ஐயும் தாண்டி 9.10 க்குள் நுழைகிறது. சலித்துப் போய் தங்கிருந்த ஹோட்டலில் வரவேற்புப் பகுதியில் இருக்கும் பெண்ணிடம் விஷயத்தைச் சொல்கிறேன். அவள் அந்தச் சுற்றுலாப் பணியகத்தைத் தொடர்பு கொண்டு பேசிவிட்டு என்னிடம் "வழிகாட்டி வழி மாறி எங்கோ போய்விட்டாராம், இப்போது வருகிறாராம்" என்றாள்.

வழிகாட்டிக்காக காத்திருக்கிறேன்.

Sunday, October 11, 2009

தாய்லாந்து உலாத்தல் ஆரம்பம்

"போகணும்னு மட்டும் தான் தோண்றது ஆனா எங்கே போகிறதுன்னு தெரியலையே" என்று கெளரவம் சிவாஜி மாதிரி பேச வேண்டும் போலத் தோன்றியது இம்முறை உலாத்தலை ஆரம்பித்தபோது. இறுதியில் 2 நாள் அவகாசத்தில் திடீர் திட்டமிடலோடு போகவேண்டும் என்று நான் தீர்மானித்த இடம் "தாய்லாந்து". ஏற்கனவே தாய்லாந்தின் அண்மித்த நாடான கம்போடியாவுக்கு கடந்த வருடம் பயணித்த பின்னர் ஆசிய நாடுகள் எல்லாவற்றையும் பார்த்து விடவேண்டும் என்ற ஆசை இன்னும் தீவிரமாக ஏற்பட்ட நிலையில் தாய்லாந்து தான் இம்முறை பொருத்தமான இடமாக இருக்கும் என்று நினைத்தேன்.

ஏழு வருடங்களுக்கு முன்னர் வேலை நிமித்தம் தாய்லாந்துக்கு 1 வாரம் போகவேண்டி இருந்தது. வேலைப்பழு காரணமாக உலாத்தலுக்கு அப்போது அவகாசம் கிட்டவில்லை. ஆனால் ஒரு நாள் இரவு உணவுக்குப் பின் டாக்சியில் பயணிக்கும் போது வீதியின் மருங்கிலே திடீர் என்று எதிர்ப்பட்ட இந்து ஆலயம் ஒன்றைக் கண்டு யுரேக்கா யுரேக்கா என்று கத்த வேண்டும் போல இருந்தது. ஆனால் அப்படியெல்லாம் கத்தாமல் டாக்சிக்காரரை ஓரமாக வாகனத்தை நிறுத்தச் சொல்லி விட்டு சென்ற அந்த ஆலயம், சிறீ மாரியம்மன் கோவில். அப்போது நவராத்திரி காலம் கூடவே கோயிலின் மகோற்சவ காலம் என்பதால் ஆலயச் சூழல் படு அமர்க்களமாக இருந்தது. மாரியம்மன் கோயில் தரிசனத்தோடு மட்டும் என் அன்றைய தாய்லாந்து சுற்றுலா ஓய்ந்து போனது.


இம்முறை என் பயணம் முழுமையான சுற்றுலா, குறிப்பாக தாய்லாந்து நாட்டின் வரலாற்று விழுமியங்களைத் தேடிப் பார்த்து விடவேண்டும் என்பதே அதில் முனைப்பாக இருந்தது. தாய்லாந்து நாட்டில் இந்து மதத்தின் பரவலையும் அறிய வேண்டும் என்ற அவாவும் கூடவே இருந்தது.


வழக்கம் போல பயண ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக Lonely Planet இன் "தாய்லாந்து வழிகாட்டி" நூலை வாங்கி முதற்கட்டமாக நான் தங்குவதற்கு ஏற்ற தங்குமிடத்தைத் தேடினேன். இருப்பவற்றுள் Lamphu Tree House என்ற தங்குமிடம் சிறப்பான வசதிகளோடு இருப்பதாகப் பட்டது. இணையத்திலும் அந்த ஹோட்டலின் இணையப்பக்கத்தையும் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டேன். இங்கே ஒரு சுற்றுலா டிப்ஸ் சொல்லி வைக்க வேண்டும். பொதுவாக சுற்றுலாவுக்குப் போகும் போது பெரும் நட்சத்திர ஹோட்டல்களை விட நடுத்தர (mid range) நிலையில் உள்ள ஹோட்டல்களை நான் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் தங்கும் கட்டணம் நியாயமானது என்பது மட்டுமல்ல, இப்படியான நடுத்தர நிலையில் உள்ள ஹோட்டல்களில் இருக்கும் பணியாளர்களில் இருந்து முகாமையாளர் வரை விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். சுற்றுலாப் பயணம் செல்ல வேண்டிய இடங்கள், மேலதிக தகவல்கள் போன்றவற்றைத் தேடித் தருவதோடு தனிப்பட்ட அல்லது குழுவாகப் பயணம் செய்யக் கூடிய ஸ்தல யாத்திரைகளையும் ஒழுங்கு செய்து தருவார்கள் என்பதே முக்கியமான காரணம். அந்த வகையில் முன்னர் நான் சென்ற கம்போடியாப் பயண அனுபவத்தில் Lamphu Tree House என்ற தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் இல் உள்ள தங்குமிடத்தை இணையம் மூலம் முற்பதிவு செய்து உறுதிப் படுத்திக் கொண்டேன். ஆனால் இந்த ஹோட்டல் மூலம் வந்த வம்பை பின்னர் சொல்கிறேன் ;)

அடுத்த நாள் பயணம், அதற்கு முதல் நாள் சிட்னியில் இருக்கும் அவுஸ்திரேலியாவிற்கான தாய்லாந்து நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு போன் இட்டு,
"நான் தாய்லாந்து நாட்டுக்குப் பயணிக்க இருப்பதாகவும் அங்கே தாய்லாந்து சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏதாவது சுற்றுலாப் நிகழ்ச்சித் திட்டங்களை அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பாடு செய்து தருகின்றதா?" என்று கேள்விக் குறியிட்டேன்.
மறுமுனையில் தாய் வாடையில் ஆங்கிலம் பேசிய மாது "எமது சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பணி தாய்லாந்து நாட்டுக்கு வாருங்கள் என்று பிரச்சாரப்படுத்தும் நோக்கம் மட்டும் தான், நீங்கள் தாய்லாந்து போய்த்தான் சுற்றுலா முகவரைத் தேடவேண்டும்" என்று சொல்லி தன் கடன் பணி செய்து முடித்தார்.

எனது விமானச் சீட்டை ஒழுங்கு செய்த பயண முகவரிடம் "தாய்லாந்துக்கு விசா தேவையா" என்று மூன்றாவது முறையும் கேட்டு வைத்தேன், தேவை இல்லை" என்று அவர் நாலாவது முறை சொல்லி மனதுக்குள் அலுத்திருப்பார். நான் சந்தேகப் பிராணியாக இப்படி நடந்து கொண்டதற்கு அர்த்தம் இருக்கிறது. ஏனெனில் ஏழு வருடங்களுக்கு முன்னர் நான் அவுஸ்திரேலிய பாஸ்போர்ட் உடன் தாய்லாந்துக்குப் பயணிக்க வேண்டி இருந்த போது தாய்லாந்து விசா எடுக்க வேண்டியது அன்று அவசியமாக இருந்தது.



சிட்னியில் இருந்து முதலில் சிங்கப்பூர் போகும் Singapore Airlines இன் காலை நேர விமானத்தில் ஏறியாற்று. வழக்கம் போல விமானத்தின் டிவி திரையில் காண்பிக்கப்போகும் திரைப்படங்கள் பட்டியலை நோண்டினேன். வழக்கம் போல யாரோ ஒரு ரசனையின் உச்சம் கொண்டவர் பரிந்துரைத்த "வில்லு" என்ற காவியமும் "அபியும் நானும்" என்ற த்ரிஷா நடித்த தொலைக்காட்சி நாடகமும் இருந்தது. கூடவே ஆடியோ பகுதியில் "வசூல்" என்ற படத்தின் பாடல்கள் இருந்தன. அந்தப் படம் எடுத்தவருக்கே தெரியுமோ தெரியாது இந்தப் படத்தின் பாடல்கள் வந்திருக்கும் என்று.

சிங்கையில் இறங்கி ஒரு மணி நேர இடைவெளியின் பின் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொங் போகும் விமானத்தில் ஏறி இருந்தாயிற்று. தாய்லாந்து நாட்டுக்கு உள்நுளைவோர் பதியும் சிட்டையை விமானப் பெண் தந்தாள். அதை வாங்கி நிரப்ப ஆரம்பித்தால் ஒரு பகுதியில் விசா இலக்கம் என்ன என்ற கேள்வி இருந்தது. அடிவயிற்றில் யாரோ கிச்சு கிச்சு மூட்டுவது போல இருந்தது.

தாய்லாந்தில் என்ன நடக்கப் போகுது => அடுத்த பதிவில்
0000000000000000000000000000000000000000000000

மலேசிய உலாத்தல் ஆரம்பித்த வேளை சரியில்லைப் போல. பயணத் தொடரின் முதல் பதிவு போட்டதில் இருந்து மாதங்கள் கடந்தும் சில பல காரணங்களால்/வேலைப்பழுவால் அதைத் தொடராமல் போய் விட்டது. இடையில் தாய்லாந்துக்கும் போய் உலாத்தி விட்டு வந்தாயிற்று. எனவே மலேசிய உலாத்தலை ஒரு பக்கம் நிறுத்தி வைத்து விட்டு தாய்லாந்து உலாத்தலை முழுமூச்சோடு எழுதி முடிக்கக் கங்கணம் கட்டி இறங்கியிருக்கிறேன்.

Thursday, September 24, 2009

சிங்கப்பூரில் நடந்த திடீர் பதிவர்சந்திப்புக்கள் ;-)

நான்கு மாச இடைவெளியில் சிங்கப்பூரில் இன்னொரு பதிவர் சந்திப்பில் இணைந்தது நானாக மட்டும் இருக்குமோ ;-) . தாய்லாந்துக்கு திடீர் உலாத்தலை மேற்கொண்டு மீண்டும் சிட்னி வரும் வழியில் சிங்கப்பூரையும் பார்த்து வராவிட்டால் பொச்சம் தீராது என்று இடையில் இரண்டு நாட்கள் அங்கே டேரா போட்டேன். இந்த முறை பாசக்காரப் புள்ள இராம் முகம் நினைவுக்கு வந்ததால் Hotel 81 இல் தங்காமல் செரங்கூன் வீதியில் முஸ்தபா கடை வளாகத்துக்கு முன்னே இருந்த Claremont hotel இல் தங்கினேன். ஒரு ஹோட்டலுக்கு உரிய எல்லா அடையாளங்களும் அற்று விதவைக்கோலத்தில் இருந்தது தங்கிய அறை. இணையத்தில் படம் எடுக்கும் போது மட்டும் வெள்ளை அடித்துப் படம் எடுத்தார்களோ என்னவோ :(

கடந்த பதிவர் சந்திப்பில் நாம் சந்திக்க முடியவில்லையே என்று சகோதரன் ஜோசப் பால்ராஜ் குற்றம் "சாட்டி"யதால் இம்முறை அவரையாவது சந்திப்போம், இன்னொரு பதிவர் சந்திப்புக்கு கூப்பாடு போட்டு சிங்கை நண்பர்களின் விசனத்துக்கு ஆளாகக் கூடாது என்று பார்த்தால், பயபுள்ள ஊரையே கூட்டி விட்டார். முஸ்தபாவுக்கு எதிரில் உள்ள அஞ்சப்பருக்கு முன்னே வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு காத்திருங்கள், வருகிறோம் என்று பால்ராஜ் சொல்லியிருந்தார். அன்றைய சிங்கை தமிழ் முரசு பத்திரிகையை வாசித்துக் கொண்டே அடிக்கடி வீதியை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று எதிர்ப்பட்டார் நண்பர் பாஸ்கரன். அவரோடு அறிமுகம் பாராட்டி விட்டு பேசிக்கொண்டிருக்கும் போது பால்ராஜும் மோட்டார் சைக்கிளில் வந்தார். எல்லாரும் "குடைக்கடைக்கு" போயிட்டாங்க வாங்கன்னு அவர் அழைக்க பொடி நடை போட்டோம் நானும் பாஸ்கரனும்.

குடைக்கடைக்கு வந்தோம். அட பக்கத்தில் Hotel 81 (அவ்வ்வ்வ்). ஏற்கனவே பதிவர் குழு வந்து சேர்ந்திருந்தது. கடந்த முறை இடம்பெற்ற பதிவர் சந்திப்பை விட நீண்ட நேரம் சம்பாஷிக்கக் கூடிய விதத்தில் அமைந்ததோடு புதிதாக இது நாள் வரை சந்திக்காத உறவுகளையும் கண்டது பெருமகிழ்ச்சியாக இருந்தது. உலக அரசியலில் இருந்து இலக்கியம், சினிமா, வலையுலகம் வரை கலவையாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

உடல் நலம் குன்றி அன்றைய சந்திப்புக்கு வரமுடியாது உள்ளது என்று மெயிலிட்ட சகோதரர் கோவி.கண்ணன் மக்களைக் காணவேண்டும் என்ற ஆசையில் காய்ச்சலை காற்றில் எறிந்து விட்டு வந்தது நெகிழ வைத்தது.

தம்பி டொன் லீ, சகோதரன் ஜோதிபாரதி, பங்காளி நிஜம்ஸ் ஆயில்ஸ் வழி நட்பான சந்துரு, சுரேஷ் போன்ற ஏற்கனவே சந்தித்தவர்களோடு ஜெகதீசன், முகவை ராம், ஞானப்பித்தன் விஜய், விஜய் ஆனந்த், பித்தன் சுதாகர் என்று புதிய நண்பர்களையும் கண்டு பேசக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி மனதுக்கு நிறைவான மாலைப் பொழுதாக இருந்தது. தோசை, இட்லி படையலோடு இரவு உணவு களை கட்டி நிறைவேறியது பதிவர் சந்திப்பு.

அடுத்தது என்ன, "ஈரம்" போலாம் (படம் பேரப்பா) என்றார் ஒருவர், பால்ராஜ் "நினைத்தாலே இனிக்கும்" போகலாம் (நாமளும் யுத்து தான் ;-) என்றார். இறுதியில் வென்றது "உன்னைப் போல் ஒருவன்". பீச் ரோட் வரை நானும் முகவை ராமும் நடை ராஜாவில் பயணித்து கோல்டன் சினிமாவுக்கு போகவும், அங்கே எமக்காக முன் கூட்டியே சென்று டிக்கெட் எடுத்துக் காத்திருக்கிறார்கள் பால்ராஜும், ஞானப்பித்தன் விஜய்யும்.
படம் முடிந்து மற்றைய நண்பர்கள் விடை பெற டாக்சியில் வழித்துணையாக முகவை ராமும் வர வந்து சேர்ந்தேன் ஹோட்டலுக்கு. இரவு 12 மணியைத் தொட்டது. வெளியே இருக்கும் இணையச் சேவை நிலையத்தில் வலை அளந்து முடிக்க அதிகாலை 2.30 ஐ தொட்டது. முஸ்தபா பக்கம் இருக்கும் ஒரு தேனீர் கடையில் ஒரு சாயா குடித்து விட்டு அந்தத் தெம்போடு கட்டிலில் சாய்ந்தேன்.














00000000000000000000000000000000000000

அடுத்த நாள் கடும் மழை. இணையச் சேவை நிலையத்தில் வலை மேய்ந்து கொண்டிருந்தால் அடிப்பாதத்தில் குளிர்ந்தது. கீழே பார்த்தால் மழை வெள்ளம் வரவா போகவா என்று ஹலோ சொல்லிக் கொண்டிருந்தது. மதியம் ஒரு மணி வாக்கில் நண்பர் குழலில் வந்தார். அஞ்சப்பர் போய் மதிய உணவை வெட்டினோம். மீண்டும் ஹோட்டலுக்கு வந்து பேசிக் கொண்டிருக்கும் போது முகவை ராமும் வந்து சேர்ந்தார். மூவரும் ஒரு சந்துக் கடைக்குப் போய் நமது சம்பாஷணையைத் தொடர்ந்தோம், இங்கேயும், உலகம், இலக்கியம், ஈழம், சினிமா தாவித் தாவிப் போனது பேச்சாடல். கூடவே சகோதரன் விசாகன் (கதியால் வலைப்பதிவை எழுதுபவர்) வந்து சேர்ந்தார். இடையில் கடைப்பக்கம் வந்த கோவி.கண்ணன் எதேச்சையாக சந்தித்தது சுவாரஸ்யம். மதியம் 1.30 க்கு ஆரம்பித்த நமது பேச்சுக்கச்சேரி முடியும் போது இரவு 7.30.

இருக்கும் அந்த ஒரு நாள் இராத்திரி லிட்டில் இந்தியாவை ஒரு ரவுண்ட் அடித்தேன். வரப்போகும் தீபாவளிக்கு கட்டியம் கூற வண்ண விளக்குகள் அலங்காரம் அந்த ஊரையே கலர்புல்லாக்கியது. கூடவே தீபாவளிச் சந்தையும். கொஞ்சமாவது ஊர் நினைப்பைக் கொண்டு வரும் இந்தச் சிங்காரச் சிங்கையை விட்டுப் போகிறோமே என்ற கவலையோடு ஹோட்டலுக்கு மீண்டேன்.