Social Icons

Pages

Monday, February 09, 2009

இரண்டாம் சூர்யவர்மனின் Beng Mealea ஆலயம்


நான் முன்னர் சொன்ன பதிவில் சொன்னது போல சியாம் ரீப் நகரைக் கடந்து கிராமப்புறங்களை அண்டியதான கோயில்களுக்கு எமது உலாத்தல் தொடர்ந்தது. பொதுவாக கம்போடியாவிற்கு வருபவர்கள் பலர் செய்யும் தப்பு இங்கேயுள்ள அங்கோட் வாட் ஆலயத்தையும், அதனைச் சூழவுள்ள ஒரு சில ஆலயங்களையும் பார்த்தால் போதுமென்று. ஆனால் நாலைந்து நாட்கள் மேலதிகமாகச் சிரமமெடுத்தால் இந்தக் கம்போடிய நாட்டின் வரலாற்றுத் தொன்மை மிக்க இன்னும் பல ஆலயங்களைக் காணும் பாக்கியம் பெறுவதோடு, அந்தக் காலத்தில் நம் இந்து மதத்தின் செழுமையையை இவ்வகையான வரலாற்றுச் சுவடுகளினூடே கண்டு வியக்கவும் முடியும்.

அந்த வகையில் நாம் அடுத்துச் சென்ற ஆலயம் இரண்டாம் சூர்யவர்மனால் கி.பி 11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட Beng Mealea. சியாம்ரீப் நகரில் இருந்து 77 கி.மீ தொலைவில் இருக்கும் இவ்வாலயம் ஒரு இந்துக் கோயிலாக நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு பெரும் புதர் நடுவே இருக்கும் இவ்வாலயப் பிரதேசம் சுற்றுலாப் பயணிகளின் மிகக் குறைந்த கவனத்தையே ஈர்த்துள்ளது. அழிந்த சுவடுகளோடு பெரும் பற்றைகளுக்கு மத்தியில் இடிபாடுகளாய், மரஞ்செடிகள் முளைத்தெழுந்த ஆலயமாக இருக்கின்றது.

மேலே படத்தில் ஆலயத்தினை அண்டிய நீர்ச்சுனையில் விளையாடும் பன்றிகள்
மேலே படத்தில் ஆண்டவனுக்கு ஷம்பெயின் போத்தல்களைக் காணிக்கையாக்கியிருக்கிறார் அன்பர் ஒருவர்.

மேலே படத்தில் புதரும், ஜேர்மனி உதவியோடு மிதிவெடி அகற்றும் பணித்திட்டம் குறித்து அறிவிப்புப் பலகையும்

இந்த ஆலயத்துக்கான தனி நுழைவுக்கட்டணமாக ஐந்து அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுகின்றன. முழுமையாக விஷ்ணு பகவானுக்கான கோயிலாகவும், அங்கோர் வாட் கட்டிட வகைக்குள் கட்டிட வல்லுனர்களால் இது வகைப்ப்படுத்தப்பட்டிருக்கின்றது. முன்னர் பொல் பொட்டின் படைகளுக்கும், வியட்நாமுக்கும் இடையிலான போரின் போது மிதிவெடிகள் பல புதைக்கப்பட்டு இப்போது தான் அவற்றை ஜேர்மன் நாட்டின் உதவியோடு அகற்றியிருக்கின்றார்கள். நான்கு நூலகங்கள் அமைக்கப்பட்டிருந்திருக்கின்றன.


மேலே படத்தில் மிதிவெடி அகற்றிய பகுதி ஒன்று
மேலே படத்தில் நாகதலைகள் கொண்ட சிலை
மேலே படத்தில் கிருஷ்ண பகவான்
மேலே படத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் காட்சி
மேலே படத்தில் வெள்ளையானையின் மேல் இந்திரன் சிற்பம்

பாற்கடலைக் கடையும் காட்சி, இந்திரன், கருட பகவான் உருவங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. நீர்த்தடாகம் ஒன்றும் ஆலயச்சூழலில் இருந்திருக்கின்றது. இப்போது வெறும் வரண்ட பிரதேசமாகவே இருக்கின்றது.

மேலே படத்தில் பிரஞ்சுக்காரர்களால் களவாடப்பட்ட நகைப்பெட்டகம் சிதைந்த நிலையில்

நகைகள் போன்ற ஆபரணங்களைப் புதைத்து ஆலயத்தினை எழுப்பும் வழக்கம் இங்கேயும் பின்பற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் பின்னாளில் ஆட்சி செய்த பிரஞ்சுக்காரர்கள் இவ்வாலயத்தைக் கண்டு பிடித்தபோது அந்தப் புதையலைத் திருடி விட்டார்கள்.

மேலே படத்தில் கோயில் காவற்பணியில் இருக்கும் பெண் நீர்ச்சுனையில் அகப்பட்ட தவளையைக் கையில் ஏந்தித் தன் உணவாக்கக் காத்திருக்கிறாள்

மேலே படத்தில் இடமிருந்து வலம், எமது கார்ச்சாரதி, அவருக்குப் பக்கத்தில் சுற்றுலா வழிகாட்டி

Beng Mealea ஆலயத்தின் தரிசனம் முடிந்து எமது அடுத்த உலாத்தலுக்கு முன்னர் ஆலயச் சூழலில் இருந்த உணவு விடுதியில் மதிய உணவை எடுத்துக் கொண்டோம். சுற்றுலா வழிகாட்டி நூடில்ஸை சுவைத்துக் கொண்டே சொன்னார் "இந்தப் பகுதி தாய்லாந்து நாட்டின் எல்லைக்கு அண்மித்ததாக இருப்பதால் அந்த நாட்டில் தயாராகும் உணவுவகைகள் இங்கே தாராளமாகக் கொண்டு வரப்பட்டு விற்பனையாகின்றன. இந்த நூடில்ஸும் வழக்கத்தை விட மிகவும் சுவையாக இருப்பதற்குக் காரணம், இவை தாய்லாந்திலிருந்து வந்திருப்பதால் தான்" என்று சொல்லிக் கொண்டே உறிஞ்சினார் நூடில்ஸ் கலவையை.

Beng Mealea ஆலயச் சூழலைக் காட்டும் மேலும் சில படங்கள்



உசாத்துணை:
கம்போடிய சுற்றுலாக் குறிப்புகள்
கம்போடிய சுற்றுலாவழிகாட்டி

Sunday, February 08, 2009

ஹரிஹரா நகரின் சிவன் ஆலயங்கள்

மூன்றாம் நாட் காலை சுற்றுலா தொடங்கியது. இந்த நாள் நீண்ட தூரப்பயணமாகவும், அடுத்த நாள் சுற்றுலா வழிகாட்டி தனது மனைவியின் தங்கை திருமணத்துக்காக சொந்தக் கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் இன்றே அதிகப்படியான ஆலயங்களைப் பார்த்துவிடுவோம் என்று சொன்னார். எனவே வழக்கத்தை விட இன்னும் சீக்கிரமாகவே எழுந்து காலை ஆறரை மணிக்கெல்லாம் தயாராகி விட்டேன். ஏழுமணியளவில் வாடகைக்காரும், சுற்றுலா வழிகாட்டியும் வந்து சேர, எம் பயணம் ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட கம்போடிய - தாய்லாந்து எல்லை வரை செல்லப்போகும் பயணம் இதுவென்பதால் அந்த வழித்தடத்தை ஒட்டிய கோயில்களைக் கண்டு செல்லலாம் என்பதே எமது தீர்மானம்.

அங்கோரியர்களின் சகாப்தமான கைமர் பேரரசின் முதன்மையான தலைநகராகிய ஹரிஹராலயாவில் இருக்கும் ஞாபகச் சின்னங்கள், ஆலயங்களின் தொகுப்பை Roluos Group என்று வகைப்படுத்துகின்றார்கள். மிகவும் நவீனமயமாக அந்தக் காலகட்டத்தில் எழுப்பப்பட்ட இந்த நகர் சிவன், விஷ்ணு ஆகிய உயர் தெய்வங்களை ஞாபகப்படுத்தும் விதத்திலேயே ஹரிஹராலயா என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்ரது. அங்கோர் வாட் காலத்துக்கு முன்னதான இக்காலப்பகுதியில் ஹரிஹராலயா என்ற நகரை உருவாக்கி எழுபது வருஷங்கள் ஆட்சி செய்தவன் இரண்டாம் ஜெயவர்மன். அடுத்த நான்கு நூற்றாண்டுகளின் போக்கை எடுத்துக் கொண்டால் இந்த ஹரிஹராலயாவில் எழுப்பப்பட்ட Bakong, Preah Ko, Lolei, Baray (நீர்த்தேக்கம்) ஆகியவை முக்கிய இடம் பெறுகின்றன. இந்த ஹரிஹராலயா நகரில் ஆட்சி செய்த இறுதி மன்னன் முதலாம் யசோவர்மன், இவன் தான் அங்கோர் பகுதியில் எழுப்பப்பட்ட முதல் பெரும் ஆலயமான Phnom Bakheng ஐ நிறுவியவன். இந்த Roluos Group சியாம் ரீப் நகரில் இருந்து 13 கி.மீட்டர் தொலைவில் அதாவது 20 நிமிட நேரத் தூரத்தில் இருக்கின்றது. இந்த நகரில் இருக்கும் ஆலயங்களுக்கான நுழைவுக் கட்டணம் ஏற்கனவே அங்கோர் சுற்றுலாவுக்கான மூன்று நாள் பாஸ் இல் அடக்கப்பட்டிருக்கின்றது எனவே மேலதிக கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.

Roluos Group இல் முதலில் நாங்கள் சென்றது Preah Ko என்ற ஆலயம்.

முதலாம் இந்திரவர்மன் எழுப்பிய Preah Ko ஆலயம்


கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் இந்திரவர்மனால் எழுப்பப்பட்ட இவ்வாலயம் ஓர் இந்துக் கோயிலாகும். இவ்வாலயத்தின் கட்டிட அமைப்பினையும் Preah Ko என்ற வகுப்புக்குள்ளேயே கட்டிட வல்லுனர்கள் வகைப்படுத்துகின்றார்கள்.

ஆறு கோபுர அடுக்குகளைக் கொண்ட, சிறந்ததொரு சிற்பவேலைப்பாடுகள் அமைந்த இவ்வாலயம் கைமரின் முதன்மையான தலைநகராகிய ஹரிஹராலயாவில் எழுப்பப்பட்ட ஆலயங்களில் முதன்மையானதொன்றாகும். Preah Ko என்பதன் அர்த்தம் Sacred Bull என்பதாகும். இந்த ஆலயத்தின் மத்திய கோபுரங்களின் முகப்பில் எருதுகளின் சிலைகள் இந்தப் பெயரினை உறுதி செய்கின்றன.


அழகிய செதுக்கோடு இருக்கும் கல் சன்னல்


மேலே படத்தில் லிங்கத்தின் அடிப்பாகம் மட்டும் எஞ்சிய நிலையில்

இவ்வாலயம் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் அதாவது கி.பி 879 இல் முதலாம் இந்திரவர்மனால் சிவபக்தர்களான தனது குடும்ப உறுப்பினர்களை கெளரவிக்கும் பொருட்டு எழுப்பட்டது இவ்வாலயம். எருது என்பது சிவ சிந்தனையோடு நிதமும் சிவன் பால் தொடர்ந்திருக்கும் ஒரு உயிரினம். அதே போல இவ்வரசனின் குடும்ப உறுப்பினர்களும் சிவபெருமான் மீது கொண்ட தீராத பக்தியைக் குறிப்பால் உணர்த்துகின்றது என்று நான் நினைக்கின்றேன்.

ஆறு கோபுரங்களில் மையக் கோபுரம் கைமர் பேரரசை உருவாக்கிய இரண்டாம் ஜெயவர்மன் ஞாபகார்த்தமாகவும், இடது புறக் கோபுரம் இரண்டாம் ஜெயவர்மன் தந்தை பிரிதிவிந்திரேஸ்வரா ஞாபகார்த்தமாகவும், வலப்புறக்கோபுரம் அவனின் பாட்டனார் ருத்ரேஸ்வரா ஞாபகார்த்தமாகவும் பின்னால் உள்ள கோபுரங்கள் அவர் தம் மனைவியர் ஞாபகார்த்தமாகவும் எழுப்பப்பட்டிருக்கின்றன. மையப்பகுதியில் இருக்கும் கோபுரங்களில் சிவபெருமானின் இலட்சணைகளும், உருவங்களும், துவாரபாலகர் சிலையும் இருக்கின்றன.

மேலே படத்தில் துவாரபாலகர் சிலையொன்று

கம்போடியாவின் வடமேற்கு மாகாணமான Banteay Meanchey என்ற இடத்தில், அங்கோர் வாட்டில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் இவ்வாலயச் சூழல் அமைந்த ஹரிஹ்ராலயா என்ற நகரம் இப்போது் Roluos என்றே அழைக்கப்படுகின்றது.

முதலாம் இந்திரவர்மன் எழுப்பிய Bakong ஆலயம்
Preah Ko ஆலயத்தைத் தரிசித்து விட்டு, அதே சூழலில் இருந்த Bakong ஆலயம் நோக்கிச் சென்றோம். இந்த ஆலயமும் சமகாலத்தில் முதலாம் இந்திரவர்மனால் எழுப்பப்பட்டது. அதாவது ஒரு சிவனாலயமாக கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் (கி.பி 881 இல்) எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவ்வாலயத்தின் கட்டிட அமைப்பை முன்னர் நாம் பார்த்த Preah Ko என்ற கட்டிட அமைப்பில் வகைப்படுத்தியிருக்கின்றனர் கட்டிட வல்லுனர்கள்.

மேலே படத்தில் ஆலய மேற்பகுதி

Bakong 15 மீட்டர் உயரத்தில் 650 X 850 மீட்டர் வெளிச்சுற்றிலும் அடங்குகின்றது. அடுத்த நானூறு ஆண்டுகளுக்கான கைமர் கட்டிடக் கலையின் செழுமையின் முன்னோடியாக, ஒரு மலைக் கோயிலாக எழுப்பப்பட்டிருக்கும் இவ்வாலயம் மிகத் தொன்மையான கட்டிடக்கலையின் கூறாக செங்கற்களுக்குப் பதிலாக கற்களை மட்டுமே உபயோகித்து எழுப்பப்பட்டிருக்கின்றது.

ஆலய மேற்பகுதியில் இருக்கும் யானைச் சிலைகள்மேலே படத்தில் அகழியைச் சுற்றிப்படுத்திருக்கும் நாகம்
மேலே படத்தில் ஆலயத்தினை ஒட்டிய நீர்த்தடாகம்

முதலாம் ஜெயவர்மனால் இவ்வாலயத்திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் மேலதிக கட்டுமானங்களும், வேலைப்பாடுகளும் பின்னாளில் வந்த அரசர்களாலும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக மேல் உச்சியில் இருக்கும் கோபுரத்தினை கி.பி 12 ஆம் நூற்றாண்டிலேயே சேர்த்திருக்கின்றார்கள். வனப்புமிகு அகழியும், பசுமையான சூழ்நிலையும் இந்த ஆலயச் சூழலாக அமைந்திருப்பது சிறப்பு. ஆலய முகப்பில் இருக்கும் அகழியின் சுவராக நாகத்தின் கிடை உருவம் இருக்கின்றது.

மேலே படத்தில் வழிபாட்டுப் பொருட்களோடு மூலவர் கர்ப்பக்கிருகம்


மேலே படத்தில் நந்திச் சிலையொன்று
மேலே படத்தில் சிதைந்து போன நந்திச் சிலையின் சிதைவுகளைப் பொருத்தியிருக்கின்றார்கள்.

Bakong ஆலயம் 900 X 700 மீட்டர் பரப்பில் விளங்குகின்றது. ஐந்து அடுக்குகள் கொண்ட பிரமிட் வடிவமாக இருக்கும் கோபுரங்களில் இந்த ஐந்து அடுக்குகளும் முறையே நாகா, கருடன், சிங்கம், பீமன், கடவுள் (சிவன்) அகியோருக்கான அர்ப்பணமாகவே விளங்கி நிற்கின்றன. முதலாம் இந்திரவர்மன் இந்த நாட்டின் சமுதாய சமயப் பணிகளைச் செய்த முக்கிய மன்னர்களுள் ஒருவராகக் கொள்ளப்படுகின்றான். இவரின் புரோகிதர் சிவசோமாவின் (Sivasoma) வழிகாட்டலில் இவற்றைச் செய்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த முதலாம் இந்திரவர்மன் இறந்தபின் இஸ்வரலோகா/ஈஸ்வரலோகா (Iswaraloka) என்று பெயர்சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.இவ்வாலயத்தைத் தரிசித்து விட்டு எமது பயணம் கம்போடிய தாய்லாந்து எல்லையை நோக்கி நகர்ந்தது.

உசாத்துணை:
கம்போடிய சுற்றுலாக் குறிப்புகள்
விக்கிப்பீடியா
Ancient Angkor - Michael Freeman and Claude Jacques