Social Icons

Pages

Sunday, June 15, 2008

Angkor Wat கண்டேன்

அங்கோர் வாட்டின் முகப்புப் பரப்பை நோட்டமிட்டுக்கொண்டே அங்கே தூண்களிலும், வாயில்களிலும் உள்ள சிற்பச் செதுக்கு வேலைப்பாடுகளையும், உடைந்து போன கற்சிலைகளையும் பார்த்துக் கொண்டிருக்க, என் வழிகாட்டி டேவிட் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

கம்போடியாவின் கோயில்களுக்கும், முக்கிய மடாலயங்களுக்கும், சிற்பச் செதுக்கு வேலைகளுக்கும் ஏற்பட்ட அழிவு இயற்கையாக ஏற்பட்டதன்று. இந்த நாட்டின் இந்த அனர்த்தம் ஏற்பட முக்கிய காரணமே மனிதன் தான். அவ்வப்போது நிகழ்ந்த உள்நாட்டு யுத்தங்களும், மாறி மாறி அமைந்த அரசுகளின் மாறுபட்ட மதக் கோட்பாடுகளுமே இந்த அனர்த்தங்களின் மூல காரணி. ஆரம்பத்தில் இந்து அரசிலிருந்து மாற்றம் கண்ட பெளத்த அரசுகளும், பின்னாளில் கம்யூனிச சித்தாந்தத்தில் மதங்களைப் புறந்தள்ளிய பொல்பொட்டின் (Pol Pot) க்மருச் அமைப்பின் அரசுமே இவ்வகையான அழிவின் மூலகாரணிகள்.

தென் கிழக்காசியாவின் செழிப்பும் வளர்ச்சியும் கி.பி முதலாம் நூற்றாண்டில் இருந்தே ஆரம்பிக்கின்றது. மேற்குலகத்திலிருந்து கீழைத்தேய நாடுகள், குறிப்பாக சீனர்களின் வர்த்தக மைய்யமாக இது விளங்கியிருக்கின்றது. சீன, இந்திய வாணிபர்கள் பெருமளவில் இந்தப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தனர். அதில் கம்போடியாவும் அடக்கம். இந்த வாணிபர்களுடன் பயணித்த அந்தணர்கள் மூலம் இந்து மதத்தின் பரம்பலும் இங்கே அதிகரித்தது.

அங்கோர் என்பதற்கு தலைநகரம் அல்லது புனித நகரம் என்று பொருள்படும். கி.பி 9 ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி.12 ஆம் நூற்றாண்டு வரை முக்கியமானதொரு நகராக இது விளங்கியிருக்கின்றது. உலகளாவிய ரீதியில் புகழ்பெறும் அங்கோர் வாட் ஆலயம் குறித்த வரலாற்றுத் தகவலைப் பார்ப்போம். இந்த ஆலயம் கி.பி 12 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இரண்டாம் சூர்யவர்மனால் நிர்மாணிக்கப்பட்டது. இந்த மன்னன் குறித்த தகவல்களை இங்கே முன்னர் இட்டிருக்கின்றேன். அங்கோர் வாட் ஆலயத்தின் பிரமாண்டமும் அதன் உருவாக்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் எடுத்துக் கொண்ட சிரத்தையும் பார்ப்போர் கண்களை வியப்பில் ஆழ்த்தும். பிரமிட் வடிவினை ஒத்த மூன்று அடுக்குகளையும், தாமரை வடிவினதான ஐந்து கோபுரங்களையும் தாங்கிய அமைப்பில் இவ்வாலயம் நிர்மாணிக்கப்படிருக்கின்றது. இந்தக் கோபுரங்கள் நிலமட்டத்தில் இருந்து 65 மீட்டர் நீளமானவையாகும்.

இரண்டாம் சூர்யவர்மன் இந்து மதத்தைப் பின்பற்றிய அரசனாவான். எனவே இந்த ஆலயம் ஒரு இந்து ஆலயமாகவே அதாவது விஷ்ணுக்கடவுளுக்காக அவனால் அமைக்கப்பட்டதாகும். பொதுவாகவே இந்திய நாட்டின் கோயில்களின் கட்டிடக்கலையையும் கிரேக்கக் கட்டிடக்கலையையும் கலந்த ஒரு அமைப்பிலேயே இவ்வாலயம் இருக்கின்றது. அங்கோர் வாட்டின் கட்டிட அமைப்புக்கு சலவைக்கல்லே பயன்பட்டிருக்கின்றது.

ஆலயத்தைச் சுற்றி அகழியும், பெருமதிலுமாக 1300 மீட்டர் X 1300 மீட்டர் அளவில் அரணாக அமைந்திருக்கின்றன. ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஆலயத்தின் முழுப்பகுதியும் அமைந்திருக்கின்றது. ஆலய உட்பரப்பில் நுழைந்ததுமே வலதும் இடதுமாக இருபக்கமும் உடைந்து போன இரு நூலகங்கள் இருக்கின்றன. கம்போடியாவில் நான் கண்ட பெரும்பாலான ஆலயங்களில் இப்படி இருபக்கமும் அமைந்த நூலகங்களோடு தான் இருக்கின்றன.


அங்கோர் சகாப்பதத்தினைப் பறைசாற்றும் சிற்பக்கலைக்கும் தனித்துவமான உதாரணமாக மதிற்சுவர்களிலும், கோயில் உட்புறப்பரப்புகளிலும் விதவிதமான சிற்பவேலைகள் விளங்குகின்றன. 36 வடிவில் 2000 வகையான அப்சரா என்னும் தேவதைகளின் சிற்பவடிவங்கள் இந்த ஆலயத்தில் மட்டுமே இருக்கின்றன.

அத்தோடு இந்து புராணக்கதைகளின் முழுமையான வரலாற்றை கோயிலின் உட்புறச்சுவர்களில் சிற்பமாகவே வடித்திருக்கின்றார்கள். உதாரணமாக தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்னும் மலைப்பாம்பை மத்தாக வைத்து பாற்கடலைக் கடையும் வரலாற்றின் ஆரம்பம் முதல் முடிவு வரை நீண்டதூரப்பரப்பில் சிற்பச் செதுக்காகக் காட்டப்ப்பட்டிருக்கின்றது. இவற்றை கமராப்பெட்டிக்குள் அடக்கமுடியாமல் பகுதி பகுதியாக எடுக்கவேண்டிய அளவிற்கு இவ் இதிகாசவரலாற்றுச் சிற்பவேலைகளின் நீளம் இருந்தது. இவ்வாறு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது ஏற்பட்ட களைப்பை மறக்கடிக்கும் விதமாக பாற்கடலில் இருந்து தோன்றி களி நடனம் புரிந்தவர்களே அப்சரா என்னும் தேவதைகள் என்பதையும் இச்சுவரில் பதிந்திருக்கும் சிற்பவேலைகள் காட்டுகின்றன.

அத்தோடு மகாபாரதப் போரில் பாண்டவர்களின் அணி, கெளரவர்களின் அணி என்று அத்தனை பேரையுமே சிற்பங்களாக வடித்து, குருஷோத்திரப்போரின் உச்சமும் காட்டப்படுகின்றது.

சிற்பங்கள் சிலவற்றில் செயற்கையாக சிவப்பு போன்ற வர்ணங்கள் மேற்பூச்சாக அமைந்திருந்தன. இது தாய்லாந்து நாட்டில் இருந்து படையெடுத்த சியாம் அரசின் கைங்கர்யம். தாய்லாந்துக்காரர்களுக்கு சிற்ப அமைப்புக்களை இயற்கையாக விடாமல் அவற்றுக்கு வர்ணம் தீட்டிப் பார்க்கும் ஆசை இருந்திருக்கிறது. அதையே இங்கும் காட்டியிருக்கிறார்கள்.

Sunday, June 01, 2008

Angkor Wat நோக்கிய பயணம்

மார்ச் 15,2008 சனிக்கிழமை காலை 7.30 மணி

ஏற்கனவே இணையம் மூலம் தங்குமிடம், மற்றும் அவர்களுடைய ஒழுங்கிலேயே சுற்றுலா வழிகாட்டி என்று ஏற்பாடு செய்திருந்தேன். நான் தங்கியிருந்த Angkoriana ஹோட்டலில் அதிகாலையே தூக்கம் கலைத்தேன். காரணம் நேர வித்தியாசம். குளித்து முடித்துக் கீழ் தளத்திற்கு வந்தபோது காலை ஆறரை தாண்டியிருந்தது. ஹோட்டலின் காலை உணவு பரிமாறும் இடம் சென்று ஆகாரத்தை எடுத்துக்கொண்டேன். தாயகத்தில் இருந்த காலத்தில் சாப்பிட்ட அதே சுவையை நினைவுபடுத்துமாற் போல இந்த ஊர்ப்பாணும் (bread) இருந்தது.

மணி ஏழரையைத் தாண்டவும் எனக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டி டேவிட் வந்தார். குள்ளமான தோற்றம், அசல் கம்போடியன் அவர். டேவிட்டின் இயற்பெயர் Sib Chong, உண்மையான பெயரை சொல்வதில் வேற்று நாட்டவருக்கு சிக்கல் இருக்கும் என்று இன்னொரு பெயரைச் சூடிக் கொண்டார். சுற்றுலா வழிகாட்டிக்கான பழுப்பு மஞ்சள் சீருடையுடனேயே வந்து கையசைத்தார். அடுத்தது போக்குவரத்துக்கான சாதனம். அதுவும் வந்து சேர்ந்தது. குறுகிய தூரப்பிரயாணங்களுக்கு கம்போடியாவில் அதிகம் உபயோகிப்பது tuk-tuk என்ற சாதனம். அது வேறொன்றுமில்லை சைக்கிளோடு பின் இருக்கைகள் பொருத்திய சாதனம். தமிழர் தாயகப் பகுதியில் சிறீலங்கா அரசின் எரிபொருள் தடை காலத்தில் அதாவது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வாகனப் போக்குவரத்துக்கு அதிகம் பயன்பட்டது அது. அதுவே இங்கே ருக் ருக் என்ற பெயரோடு அழைக்கப்படும் பொதுப்போக்குவரத்து சாதனம். இங்கே இந்தியாவில் இருக்குமாற் போல ஆட்டோக்களை மருந்துக்கும் காணோம். ருக் ருக் என்ற இந்த சாதனத்தில் போக்குவத்து செய்வது மலிவும் கூட. ஒரு நாள் பகலுக்கான வாடகையாக இந்த வண்டிக்காரருக்கு 15 அமெரிக்க டொலரே செலுத்த வேண்டும். ருக் ருக்கின் பின்னிருக்கையில் நானும் சுற்றுலா வழிகாட்டியும் அமர அங்கோர் வாட்/வற் (Angkor Wat) நோக்கி மெல்ல நகர்ந்தது.

ருக் ருக் ஒரு இடத்தில் வந்து நின்றது. மெல்ல இறங்கி வெளியில் நடந்தால் APSARA Authority என்ற பெயர்ப்பலகையோடு ஒரு கட்டிடம் தென்பட்டது. அங்கே கூட்டம் கூட்டமாக சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று நுழைவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். அங்கோர் பகுதியில் உள்ள அங்கோர் வாட் என்னும் ஆலயம் தவிர சிறிதும் பெரிதுமாகப் பல ஆலயங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்பதற்கு மூன்று நாள் நுழைவுச் சீட்டு (Pass)40 அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டும். ஒரு நாளுக்கான நுழைவுச் சீட்டு கூட உண்டு. அப்சரா என்பது இந்நாட்டு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா அமைப்பாகும். அங்கோர் பகுதியில் உள்ள ஆலயங்களின் பராமரிப்பு, பாதுகாப்பு, சேவைகள் என்பவற்றை இந்த அமைப்பே கவனித்துக் கொள்கின்றது. அப்சரா என்பது இந்த நாட்டு மக்களால் போற்றப்படும் ஒரு பெண் தேவதை ஆகும். அப்சரா பற்றி இன்னும் சொல்லவேண்டி இருக்கிறது.

அங்கோர் பகுதியைத் தவிர சியாம் ரீப் நகரின் பிற இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு இந்த நுழைவுச் சீட்டு பயன்படாது. சிலவற்றைப் பார்ப்பதற்கு மேலதிக கட்டணம் கூட உண்டு. சுற்றுலாப் பயணிகள் பலர் அங்கோர் வாட் ஆலயத்தைப் பார்த்தோமா, போனோமா என்றே இருக்கின்றார்கள். ஆனால் முழுமையான பல்லவ மன்னர்களின் வரலாற்றுச் சுவடுகளைப் பார்க்கவேண்டுமென்றால் இது மட்டும் போதாது. எனவே தான் நானும் என் சுற்றுலாவில் மேலதிகமாக இன்னும் பல ஆலயங்களைப் பார்க்க வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டேன். எனவே தான் கம்போடியா - தாய்லாந்து எல்லை வரை என் பயணம் அமைந்திருந்தது. அவை பற்றி ஒவ்வொன்றாகப் பின்னர் சொல்கின்றேன்.

நுளைவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு மீண்டும் ருக் ருக்கில் அமர்கின்றேன். இரண்டு பக்கமும் மரப்புதர் அடங்கிய காட்டுப் பிராந்தியத்தின் நடுவே பயணம் போகின்றது. எங்களைப் போலவே இன்னும் பலர் ருக் ருக்கில் பயணத்துக் கொண்டிருக்கின்றார்கள். நீண்ட நாள் உள்நாட்டுப் போர் ஓய்ந்து இப்போது தான் கம்போடியா தன்னை வளப்படுத்திக் கொண்டிருப்பதால் நிறைய வெளிநாட்டு உதவி நிறுவனப் பணியாளர்களைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஆண், பெண் வெள்ளையர்கள் ஆளுக்கொரு சைக்கிளை வலித்துக் கொண்டு போவது புதுமையாக இருக்கின்றது.

ருக் ருக் அங்கோர் வாட் முன்னால் உள்ள இடத்தில் ஓரம் கட்டியது. வண்டிக்காரர் அங்கேயே தங்கியிருக்க நானும், டேவிட்டும் இறங்கி மெல்ல நடந்தோம். பங்குனி வெயில் தீயாய் சுட்டெரித்தது. முன்னே இருந்த அகழியின் சுற்று மதிலில் தாவி ஏறி நடக்க ஆரம்பித்தோம். அந்தக் காலை வேளையிலேயே பல சுற்றுலாப் பயணிகள் திரண்டு வந்திருந்தனர்.
"இன்று சனிக்கிழமை அல்லவா, சனி, ஞாயிறு தினங்கள் விடுமுறை என்பதால் தாய்லாந்து நாட்டுக்காரர்கள் தரைவழிப் போக்குவரத்து மூலம் பெரும் திரளாக வந்து அங்கோர் வாட் ஆலயத்தைப் பார்த்துப் போவார்கள், அது தான் இன்று சனக்கூட்டம்" என்றார் டேவிட்.

"இன்னொரு விஷயம், இந்த சியாம் ரீப் (Siem Reap) நகரத்தை இதே பெயரில் அழைக்காமல், அங்கோர் சிட்டி (Angkor City) என்று தான் தாய்லாந்து நாட்டுக்காரர் அழைப்பார்கள். காரணம் இது அவர்களின் மானப்பிரச்சனை. முன்னர் காலத்தில் சியாம் நாட்டவர் (தாய்லாந்துக்காரர்) இந்தக் கம்போடியாவை தம் ஆளுகையில் வைத்திருந்தனர். அதன் பின்னர் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டதையே சியாம் ரீப் என்ற பெயர் குறித்து நிற்கின்றது. (அதாவது சியாம் - தாய்லாந்துக்காரர், ரீப் - தோற்கடிக்கப்படல் என்ற அர்த்தம்).

என் கண்முன்னே அகண்ட பெரும் கோட்டையாக அங்கோர் வாட்டின் நுளைவு வாயில். ஆர்வ மிகுதியால் வேகமெடுத்துப் போய் அந்த வாயில் சுற்றின் கற்சுவர்களையும் தூண்களையும் பார்க்கின்றேன். ஒவ்வொரு சிற்பங்களும் பிரமிப்பைத் தந்த வேளை கவலையையும் ஏற்படுத்தி விட்டன. காரணம். அப்சாரா என்னும் பேரழகுத் தேவதைகளின் முகங்கள் வாளால் அரிந்தும், துப்பாக்கிச் சன்னங்களால் துளைத்தெடுத்தும் சிதைக்கப்பட்டிருக்கின்றன. மற்றைய நாக விக்கிரகங்கள், இறைச் சின்னங்களுக்கும் இதே நிலை தான். எனது வழிகாட்டி டேவிட் கவலையோடு நடந்ததைச் சொல்ல ஆரம்பிக்கின்றார்.

Sunday, April 27, 2008

கைமர் பேரரசு (Khmer Empire) - இரண்டாந் தொகுதி மன்னர்கள்


கடந்த பதிவில் கம்போடியா நாட்டின் கைமர் பேரரசில் விளங்கிய பல்லவ மன்னர்களில் முதற் தொகுதியைக் கொடுத்திருந்தேன். இன்றைய பதிவில் அதன் தொடர்ச்சியாக மற்றைய மன்னர்களைப் பார்போம்.

சூர்யவர்மன்(Surya varman )

ஆட்சிக்காலம்: கி.பி 1002 - 1050

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

யசோதபுர (Yashodapura)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

KHLEANG


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

South Khleang, Phimanckas, Takeo, phom sadak, Preah Khan, Prasat Preah Vihear on Dangrek Mountain, and Prasat Phimeanakas

இவனது ஆட்சியில் பெளத்த மதம் எழுச்சியும், செழிப்பும் கொண்டு விளங்கியது. ஆனாலும் இந்து மதத்தைப் பேணுபவர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்தான். நாற்பது ஆண்டுகள் இவன் தொடர்ச்சியாக ஆண்ட காரணத்தால் ஸ்திரமான அரசையும், பொருளாதார மேம்பாட்டையும் சிறப்பாகச் செய்தான்.

இறந்த பின் பிறீ நிர்வாண பாத (Preah Nirvanapada) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டான்.


இரண்டாம் உதய ஆதித்யவர்மன் (Udayaditya varman II )

ஆட்சிக்காலம்: கி.பி 1050 - 1066

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

யசோதபுர (Yashodapura)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

BAPHUON


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Baphuon , West Mabon

Baphuon ஆலயத்தின் உள்ளே தங்கத்தில் சிவலிங்கத்தை இவன் எழுப்பினான்.

2KM நீளமான மேற்கு பராய் (West Baray) என்ற நீர்த்தேக்கத்தை அமைத்தான்.

தொடர்ந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு மன்னர்களின் ஆட்சி இடம்பெற்றிருக்கின்றது.


இரண்டாம் சூரியவர்மன்(Surya varman II )

ஆட்சிக்காலம்: கி.பி 1113 - 1150

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

யசோதபுர (Yashodapura)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

ANGKOR WAT


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Angkor Wat, Thom Manon

கைமர் பேரரசில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேரரசர்களில் ஒருவனாகக் கொள்ளப்படுகின்றான். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon)/பர்மா (Burma) தெற்கு மலாய் தீபகற்பம் (Malay Peninsula) ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான்.

இறந்த பின் பரமவிஷ்ணுலோக (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான்.

தொடர்ந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு மன்னர்களின் ஆட்சி இடம்பெற்றிருக்கின்றது.

ஏழாம் ஜெயவர்மன்(Jeya varman VII )

ஆட்சிக்காலம்: கி.பி 1181 - 1218

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

அங்கோர் தொம் (Angkor Thom)


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Angkor Thom, Bayan, Preah Khan, Prasat Chrun

இவனது தந்தை பெயர் இரண்டாம் தரனிந்திரவர்மன் (Dharanindravarman II), தாய் ஜெயராஜசூடாமணி (Jeyarajacudamani)

இந்த ஏழாம் ஜெயவர்மன் தனது மனைவி ஜெயதேவி இறந்தபின் அவளின் சகோதரி இந்திரதேவியை மணம் முடித்தான். இரண்டாவது மனைவியான இந்திரதேவி பெரும் புத்த பிரச்சாரகி. எனவே ஏழாம் ஜெயவர்மன் காலத்தில் முன்பை விட பெளத்த மதத்தின் ஆதிக்கம் பெரும் எழுச்சி கொண்டு விளங்கியது. அதன் தாக்கம் இன்று வரை தொடர்கின்றது. இது குறித்து விரிவான பார்வையை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

ஏழாம் ஜெயவர்மன் காலத்தில் 121 தங்குமிடங்கள் (Rest houses)102 வைத்தியசாலைகள் ஆகியவையும் கட்டப்பட்டனவாம். இவன் காலத்தில் மகாஜன பெளத்தம் என்ற பிரிவே பின்பற்றப்பட்டது.

இவன் இறந்த பின் மஹாபரம செளகத (Mahaparama saugata) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டான்.

இவ்வாறாக கைமர் பேரரசில் முக்கியமான பல்லவ மன்னர்கள் விபரம் அங்கோர் அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. ஆனால் மேற்குறித்த ஆண்டு எல்லைக்குள்ளும், ஆண்டு எல்லைக்கு அப்பாலும் இன்னும் பல பல்லவ மன்னர்கள் இடைப்பட்ட காலத்தில் குறுகிய கால ஆட்சியை மேற்கொண்டிருக்கின்றார்கள். அது குறித்த முழுப்பார்வையையும் விக்கிபீடியாவின் தகவல் களஞ்சியம் இங்கே பட்டியலிடுகின்றது. ஆனால் தற்போதைய வரலாற்று ஆர்வலர்களுக்கு நான் முன் சொன்ன பட்டியலே பெரிதும் தேவைப்படுகின்றது.

இந்தப் பதிவுடன் கைமர் பேரரசின் மன்னர்கள் குறித்த பார்வை முடிவுற்றது. தொடர்ந்து வரும் பகுதிகள் இந்த மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டிய ஆலயங்கள், நினைவிடங்கள் குறித்த பார்வையாக இருக்கின்றது. இதுவரையும், தொடர்ந்து வரும் பகுதிகளிலும் எடுக்கப்பட்டவை என் சொந்தப் புகைப்படத் தொகுதிகளாகும்.

Tuesday, April 22, 2008

கைமர் பேரரசு (Khmer Empire) - முதற் தொகுதி மன்னர்கள்

சென்ற பதிவில் பல்லவ மன்னர்கள் குறித்த அறிமுகத்தை வரலாற்று ரீதியான உசாத்துணைகளோடு கொடுத்திருந்தேன். அதற்குக் காரணம் தொடர்ந்து வரும் பதிவுகள் இந்தப் பல்லவ மன்னர்களின் ஆதிக்கம் கம்போடியாவில் எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்தியிருந்தன என்றே தொடரவிருக்கின்றன.

தேதிவாரியாக என் பயணத் தொடரைக் கொடுப்பது வழக்கம். சற்று விதிவிலக்காக என் கம்போடியப் பயணத்தின் இறுதி நாளன்று சென்று பார்த்த அங்கோர் நூதன சாலையில் (Angkor Museum) நான் இந்தத் தொடருக்கு உதவும் என்ற வகையில் எடுத்துக் கொண்ட குறிப்புக்களின் அடிப்படையில் இப்பதிவு அமையவிருக்கின்றது. பயணத்தின் கடைசி நாளன்று அங்கோர் நூதன சாலையில் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் செலவழித்திருப்பேன். அவவளவுக்கு அங்கே வரலாற்று ஆதாரங்களும், செய்திக் குறிப்புக்களுமாக முறைப்படி ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நூதனசாலையில் இருக்கும் விடயங்கள் குறித்த பதிவைப் பின்னர் தருகின்றேன்.

எதிர்வரும் காலங்களில் கம்போடியாவுக்குப் பயணப்படுவோருக்கு ஒரு ஆலோசனை மட்டும் இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். உங்கள் பயணத்தின் முதல் நாளே இந்த அங்கோர் நூதனசாலைக்குச் (Angkor Museum) செல்லுங்கள். காரணம் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் நீங்கள் பார்க்கப் போகும் ஆலயங்கள், வரலாற்றுச் சுவடுகள் குறித்த முழுமையான பார்வையை இந்த நூதனசாலை கொடுக்கின்றது. எனவே இந்த நூதனசாலையில் நீங்கள் பெறும் அறிவையும், தகவல்களையும் வைத்துக் கொண்டு குறித்த ஆலயங்களைப் பார்க்கும் போது மிகவும் இலகுவான விளக்கத்தை அவை உங்களுக்குத் தானாகவே கொடுக்கும் வாய்ப்பு உள்ளது.

கம்போடியாவில் அமைந்த கைமர் பேரரசின் (Khmer Empire) முதல் மன்னனாய் முதலாம் ஜெயவர்மன் (Jayavarman I) கொள்ளப்படுகின்றான். இவன் கி.பி 657 இலிருந்து கி.பி.681 வரை ஆட்சி செய்ததாகவும், இரண்டாம் பாவவர்மன் (Bhavavarman II) இந்த ஜெயவர்மனுக்கு முற்பட்ட காலத்து அரசன் என்றும், முதலாம் ஜெயவர்மனைத் தொடர்ந்து ஜெயதேவி என்னும் மகாராணி ஆட்சிப் பீடம் ஏறியதாகவும் விக்கிபீடியாவின் வரலாற்றுக் குறிப்புக்கள் தகவல் பகிர்கின்றன.

ஆனால் அங்கோர் நூதனசாலையில் பொறித்திருக்கும் அரசர்கள் பட்டியலில் முன் குறிப்பிட்ட மன்னர்களைத் தொடர்ந்து ஆட்சிப்பீடம் ஏறியவர்களையே முக்கியத்துவப்படுத்தி, இந்த மன்னர்கள் குறித்த விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு ஒரு காரணம் இந்த மன்னர்களின் திருப்பணியில் அமைந்த ஆலயங்களே இன்று முக்கியமான வரலாற்று ஆதாரங்களைத் தரும் சான்றாக அமைந்திருக்கின்றன.


எனவே தொடர்ந்து அங்கோர் நூதனசாலையில் எடுத்துக் கொண்ட குறிப்புக்களின் அடிப்படையில் கைமர் பேரரசில் (Khmer Empire) குறிப்பிடப்படும் முக்கியமான பல்லவமன்னர்களும், அவர்கள் தலைநகராகக் கொண்டு செயற்பட்ட இடங்கள், குறித்த மன்னர்கள் அமைத்த ஆலயங்கள் போன்ற விபரங்களைத் தருகின்றேன்.

இரண்டாம் ஜெயவர்மன் (Jayavarman II)

ஆட்சிக்காலம்: கி.பி 802 - கி.பி. 850

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடங்கள்:

இந்திரபுர (Indrapura) , ஹரிஹராலயா(Hariharalaya) , அமரேந்திரபுர (Amerendrapura), மகேந்திரபுர (Mahendrapura)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

KULEN Style


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Damrie Krap, O Pong, Khting Slap, Rup Areak, Neak ta, Trong Khla, Khonum, Krus Prea, Aram Ring chon, Mahendra Parvatha (Kulen Mountain)

ஜாவா மன்னர்களை விரட்டியடித்து ஆட்சியமைத்த மன்னனாகக் கொள்ளப்படுகின்றான்.

இந்த இரண்டாம் ஜெயவர்மன் இறந்தபின் பிறீ பரமேஸ்வரா (Preah Parameswara)என்று பெயர்சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

இந்திரவர்மன் (Indra varman I)

ஆட்சிக்காலம்: கி.பி 877 - 889

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

ஹரிஹராலயா (Hariharalaya)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

PREAH KO Style


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Preah Ko, Bakong, Baray Indiratata ka

இந்த நாட்டின் சமுதாய சமயப் பணிகளைச் செய்த முக்கிய மன்னர்களுள் ஒருவராகக் கொள்ளப்படுகின்றான். இவரின் புரோகிதர் சிவசோமாவின் (Sivasoma) வழிகாட்டலில் இவற்றைச் செய்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த முதலாம் இந்திரவர்மன் இறந்தபின் இஸ்வரலோகா/ஈஸ்வரலோகா (Iswaraloka) என்று பெயர்சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

யசோவர்மன் (Yashovarman)

ஆட்சிக்காலம்: கி.பி 889 - 910

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடங்கள்:

ஹரிஹராலயா (Hariharalaya), யசோதபுர/அங்கோர்(Yashodhapura/Angkor)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

BAKHEND Style


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Loleu, Bakhong, Phom Khon, East Baray, Prea Vihear, Phom Bok, Phom Krom (Trimoorthy god)
முதலாம் இந்திரவர்மன் மகன் தான் இந்த யசோவர்மன் என்று சொல்லப்படுகின்றது.

இந்த யசோவர்மன் இறந்தபின் பரம சிவலோகா (Parama Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

நான்காம் ஜெயவர்மன்(Jeyavarman IV)

ஆட்சிக்காலம்: கி.பி 921 - 941

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

கோ கெர் (Koh Ker)
முன்னர் யசோவர்மனின் ஆட்சியில் தலைநகராக இருந்த அங்கோர் (Angkor) இருந்து இவன்(நான்காம் ஜெயவர்மன்) தன் தலைநகரை மாற்றிக் கொண்டான்.

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

KOH KER Style



இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:
Koh Ker group, Neang KhMao, Choeung An

யசோவர்மனின் சகோதரி ஜெயதேவியை மகாராணியாக்கிக் கொண்டவனே இந்த நான்காம் ஜெயவர்மன் என்று சொல்லப்படுகின்றது.

இந்த நான்காம் ஜெயவர்மன் இறந்தபின் பரம சிவபாத (Parama Sivapada)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

ராஜேந்திரவர்மன் (Rajendravarman)

ஆட்சிக்காலம்: கி.பி 944 - 968

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

யசோதபுர/அங்கோர் (Yashodapura/Angkor)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

Pre Rup Style


இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Pre Rup, Prasad East Mebon, Bat Chum, Bantea Srei, Baksei, Chamkrong,

இந்த ராஜேந்திரவர்மன் என்ற மன்னன் மகேந்திரவர்மன், மகேந்திர தேவியின் மகனாகக் கொள்ளப்படுகின்றான். ராஜேந்திர வர்மனின் தளபதியாக இருந்த கவிந்திரவிமதன (Kavindravimathana) பெளத்த அமைச்சராகவும் கொள்ளப்பட்டிருக்கின்றான்.

இந்த ராஜேந்திரவர்மன் இறந்தபின் சிவலோகா(Sivaloka)என்று பெயர் சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்டான்.

இந்த கைமர் பேரரசின் மன்னர்கள் வரிசை நெடியது, எனவே அடுத்ததும் நிறைவானதுமான தொகுதி மன்னர்களை அடுத்த பகுதியில் தருகின்றேன். இங்கே ஒவ்வொரு மன்னர்கள் அமைத்த ஆலயங்களில் பெரும்பாலானவற்றைக் கண்டு தரிசிக்கும் வாய்ப்பும் எனக்கு இருந்ததால் பதிவில் குறிப்பிட்ட ஆலயங்களைத் தனித்தனியாகப் பின்னர் பார்ப்போம்.

Sunday, April 13, 2008

தென் கிழக்காசியா சென்ற பல்லவ மன்னர்கள்: ஓர் அறிமுகம்

கடந்த இரண்டு பதிவுகளிலும் கம்போடியாவிற்கு நான் பயணப்பட்ட அனுபவம் மற்றும் அங்குள்ள தங்குமிட வசதி குறித்து எழுதியிருந்தேன். தொடர்ந்து வரப்போகும் பகுதிகள் கம்போடியாவில் மன்னராட்சி நிலவிய காலகட்டங்களில் நிலவிய செழுமையான ஆட்சியின் எச்சங்களாக விளங்கும் நினைவிடங்கள், ஆலயங்கள், அந்தக் காலகட்டத்துக் கலாசார அரசியல் மாற்றங்கள் பற்றிப் பேசப் போகின்றன. அத்தோடு கைமர் பேரரசில் (Khmer Empire) பல்லவ மன்னர்களில் ஆதிக்கம் குறித்தும் விரிவாகத் தரலாம் என்றிருக்கின்றேன்.

கம்போடியாவில் பல்லவ மன்னர்களின் ஆதிக்கம் குறித்து அறிவதற்கு முன்னர் இந்தப் பல்லவ மன்னர்கள் குறித்த எளிய அறிமுகம் ஒன்று அவசியமாகின்றது. பல்லவ மன்னர்கள் யார் என்பது குறித்த அறிமுகத்தை இந்தியாவில் அவர்கள் ஆட்சி செய்த காலகட்டத்தில் இருந்து கொடுக்கும் போது முழுமை பெறும் என்பது என் எண்ணம். இதற்காக சிட்னி தமிழ் அறிவகம் ஊடாக "தென் இந்திய வரலாறு" (டாக்டர் கே.கே.பிள்ளை முதற்பதிப்பு 1960), "தென்னாடு" ( கா.அப்பாத்துரை எம்.ஏ.எல்.டி, முதற்பதிப்பு 1954 ), தமிழக வரலாறும் பண்பாடும் (வே.தி.செல்லம் (முதற் பதிப்பு 1995) ஆகிய நூல்களை வாசித்து உசாத்துணையாக்கிக் கொண்டேன்.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை காஞ்சியை அரசிருக்கையாகக் கொண்டு பல்லவ மன்னர்கள் கி.பி 10 ஆம் நூற்றாண்டு வரை பல நூற்றாண்டுகளாக இவர்கள் தமிழகத்தின் வடக்கில் ஆட்சி செலுத்தினார்கள். பல்லவ மன்னர்களின் பிறப்புக் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வரலாற்று ஆசிரியர்களிடையே இருக்கின்றது.

வடக்கேயிருந்து தென்னாடு வந்தவர்களில் சகர், பார்த்தியர் ஆகியோருடன் பகலவம் அல்லது பாரசீக நாட்டு மக்களாகிய பகலவர் என்ற இனத்தவரும் இருந்தார்கள். பல்லவர்கள் இவர்களின் பிரிவே என்பார் ஒரு சாரார். ஆனால் இவர்கள் ஆந்திரப்பேரரசில் சிற்றரசர்களாகவும் அத்துடன் அவர்களின் கொடியின் சின்னம் ஏறத்தாளச் சோழர்களின் புலிக்கொடியாகவே இறுதிவரை இருந்தது. எனவே பல்லவ மன்னர்கள் சோழர்களுடன் தொடர்பு கொண்ட திரையர் என்போர் ஆவார் என்று சொல்லப்படுகின்றது. பல்லவர், திரையர், தொண்டமான் ஆகிய சொற்கள் தமிழிலக்கியத்தில் ஒருபொருட் சொற்களாகும். முதல் தொண்டமானாக இளந்திரையன் குறிக்கப்பட்டான்.

இன்னொரு கருத்தாக வரலாற்றாசிரியர் சி.இராசநாயகம் அவர்களின் குறிப்புப்படி மணிமேகலை காப்பியத்தை ஆதாரம் காட்டி மணிபல்லவத்து நாககன்னிகைக்கும் தொண்டமான் நெடுமுடிக்கிள்ளி என்ற சோழ இளவலுக்கும் களவொழுக்கத்தில் தோன்றிய தொண்டை மண்டலத்து ஆட்சியாளன் இளந்திரையன் வழி தோன்றியவர்களே பல்லவர்கள் என்றும் மணிபல்லவத்து "பல்லவ" என்ற சொல்லை வைத்து காஞ்சியில் ஆட்சியைத் துவக்கினான் என்று சொல்கின்றார். பல்லவ மன்னர்கள் யார் என்பது குறித்து மா.இராசமாணிக்கனார் எழுதிய விரிவான கட்டுரை, வரலாறு என்ற இணையத்தளத்தில் இங்கே கிடைக்கின்றது.

மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை தென்னாட்டு வரலாற்றில் பல்லவரே நடுநாயகம் வகிக்கின்றார்கள். ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் அவர்கள் பாண்டியப் பேரரசுடன் பல தடவை மோதிக்கொண்டார்கள்.

பல்லவ மன்னர்களுக்கு முற்பட்ட காலமானது களப்பிரர்களது பிடியில் இருந்ததால் பெளத்தம், சமண சமயங்களின் ஆதிக்கமே முன்னர் இருந்து வந்தது. பல்லவர்கள் முதலில் பிராகிருதத்திலும், பின்னர் சமஸ்கிருதத்திலும், இறுதியில் தமிழிலுமாகப் பட்டயம் இயற்றியிருக்கின்றார்கள்.

பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் வாணிகமும் குடியேற்றமும் கிழக்கே கடல் கடந்து இந்து சீனா, கிழக்கிந்தியத் தீவுகளில் மிகவும் பரந்தது. பல்லவப் பேரரசர் பலர் தாமே கலைஞராக இருந்து ஓவியம், இசை, சிற்பம் போன்ற கலைகளை வளர்த்தார்கள். பல்லவர் ஆட்சிக்காலத்தில் கட்டிட சிற்பக்கலை புதிய பரிமாணம் பெற்று விளங்கியது. இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்து மாமல்லபுரத்து கடற்கரைச் சிற்பங்களும், காஞ்சிபுரத்தில் உள்ள கைலாச நாதர் ஆலயமும் பல்லவர் காலத்துச் சிற்பக்கலையின் சிறப்பைச் சான்று பகிர்கின்றன.

தென்னிந்திய கீழைத்தேய நாடுகளான பர்மா, மலாயா, சுமாத்திரா, ஜாவா, போர்னியோ, சையாம், பூணாம், காம்பூஜா (கம்பூச்சியா அல்லது கம்போடியா), சம்பா ஆகிய நாடுகளோடு ஆரம்பத்தில் ஏற்படுத்திக் கொண்ட வணிகத் தொடர்பு நாளடைவில் தென் இந்திய மக்களும், நாகரீகமும் இந்த நாடுகளில் பரவ வழியேற்பட்டது.

தற்போது கம்போடியா என்று அழைக்கப்படும் காம்போஜ அரசு முன்னர் பூனானின் (Funan) (வியட்னாமிய மொழியில் Phù Nam) ஆட்சியில் இருந்தது. காம்போஜ அரசகுலத்தினை நிறுவியோர் கம்பு முனிவர் மரபினர் எனக்கூறுவர். காம்போஜ நாட்டில் சைவமும் வைணவமும் ஓங்கி வளர்ந்தன. பவவர்மன் என்ற அரசர் தன் தம்பி சித்திரசேனர் உதவியால் சுமார் கி.பி.590 இல் பூனான் (Funan) அரசனைப் போரில் முறியடித்தார். பவமன்னர், சித்திரசேனர் ஆகியோரது கல்வெட்டுக்களும், கி.பி ஏழாம் நூற்றாண்டிலுள்ள பல்லவ மன்னர்களது கல்வெட்டுக்களும் பலவகையிலும் ஒத்திருக்கின்றன. பவமன்னர் சிவபக்தர் என்ற காரணத்தினால் நாட்டில் நான்கு சிவாலயங்களைக் கட்டுவித்தது மட்டுமன்றி நாட்டிலுள்ள பல கோயில்களிலும் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வைத்தார். இந்து மதப்பாடல்களைப் பாடும் படியும், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றைப் பாராயணம் பண்ணும்படியுமான வழக்கத்தை ஏற்படுத்தினார். அவருக்குப் பின் வந்த அவர் தம்பி மகேந்திர வர்மன் அண்மையில் இருந்த இந்து நாடான சம்பாவோடு (now southern and central Vietnam) நட்புக் கொண்டிருந்தார்.


மகேந்திரவர்மனுக்குப் பின் வந்த ஈசானவர்மன் மத ஆசாரங்களைக் கண்காணிப்பதற்காக பேரறிஞராகிய வித்தியா விசேட ஆசாரியரை நியமித்திருந்தாராம். கி.பி 548 இலும் கி.பி 549 இலும் உள்ள கல்வெட்டுக்கள் இதைச் சொல்லி நிற்கின்றன. வித்தியா விசேடர் ஒரு கோயில் கட்டி அதில் சிவலிங்கத்தையும், ஹரிஹரர் சிலையையும் பிரதிஷ்டை செய்து வைத்தார். இந்தோ சீனாவில் சிவன், விஷ்ணு , சிவனும் விஷ்ணுவும் ஒருங்கே அமையப்பெற்ற ஹரிஹர ஆகிய மும்மூர்த்திகளின் ஆராதனைகள் உயர்நிலையில் இருந்தன என்பதற்கு இவ்வாறான உருவச்சிலைகளும், சாசனங்களும் சான்றாகின்றன.

கி.பி 968 இல் ஐந்தாம் ஜெயவர்மனது ஆட்சிக்காலத்திலுள்ள கல்வெட்டு தஷிணாபதம் அல்லது தக்காணம் சைவசமயத்தின் நடுநிலையாக விளங்கியதைத் தெரிவிக்கின்றது.
கீழைத்தேய நாடுகளில் உள்ள மக்களிடையே தென்னிந்தியப் பழக்கவழக்கங்களும் , கொள்கைகளும் மிகுதியாகப் பரவியிருந்தன. காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்களையும், தென்னாட்டில் தோன்றிய சங்கராச்சாரியாரையும் பற்றி அங்குள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிட்டிருக்கின்றன.எனவே இந்த தென் கிழக்காசிய நாடுகளில் குடியேறிய ஆட்சியாளர்களும் சரி, மதத்தலைவர்களும் சரி தமது தாய் நாடு நாகரிகத்தோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது இவற்றின் மூலம் புலனாகின்றது.

காம்போஜ நாட்டின் பிற்கால அரசராகிய இரண்டாம் சூர்யவர்மனது ஆட்சியில் (கி.பி 1112- 53)அங்கோர் வாட் என்னும் சிறப்புமிக்க கோயிற்கட்டடப் பணி நடைபெற்றது. தென் இந்திய முறைப்படி கட்டப்பட்ட அவ்வாலயம் திருமால் கோயிலாகும். அதில் மகாபாரதம், இராமாயணம், ஹரிவம்சம் முதலான உருவச்சிலைகள் உள்ளன. அங்கோர் வாட் சிற்பப்பணிகள் போராபுதூர் சிற்பங்களை விட மேலானவை என்பது ஆய்வாளர் கூற்று.

ஆரம்பத்தில் சைவ, வைணவ மதங்களின் எழுச்சியும், செழுமையுமாக இருந்த கம்போடியாவின் சமயப்பண்பாடு நாளடைவில் உள்நாட்டு ஆட்சி, அரசியல் மாற்றங்களால் பெளத்த மத வழிபாட்டிற்கு தாவியது. ஆனாலும் சாதாரண குடிமக்கள் தவிர்ந்த உயர்தர வகுப்பினரிடையே இன்னும் இந்து மத ஆசாரக்கொள்கைகளும், நம்பிக்கைகளும் இறுக்கமாக இருந்துவந்தது. கம்போடியாவின் தற்போதய தலைநகர் நொம்பெங்(Phnom Peng) இல் மன்னரின் புரோகிதர்கள் இன்னாளிலும் அலுவலர்களுக்கு பணியேற்புரை நடத்துவதோடு ஏனைய சடங்குகளையும் பின்பற்றி வருகின்றார்கள். தென் இந்தியக் கிரந்த எழுத்துக்களிலே எழுதப்பட்ட சற்றுப் பிழையுற்ற சமஸ்கிருத மொழியே ஊடக மொழியாக இருந்திருக்கின்றது. தற்போது கம்போடிய நாட்டு மக்களாகிய கமெரர்கள், இந்தியர்கள் ஆகியோரின் பண்பாட்டுக் கலவையாக ஒரு பொதுப்பண்பாடு உருவெடுத்தாலும் இதன் அடிப்படை மூலம் இந்திய வழி நாகரிகமே என்பதில் ஐயமில்லை.

மேற்கண்ட ஆய்வுக்குறிப்புக்கள் இந்திய, இலங்கை ஆராய்ச்சியாளர்களின் பார்வையாக பதியப்பட்டிருக்கின்றது. நான் கம்போடியாவில் சந்தித்த வரலாற்று அனுபவங்கள் எவ்வளவு தூரம் முன் சொன்ன வரலாற்றுக் குறிப்புக்களோடு இயைந்திருக்கின்றன என்பதை தொடரும் பதிவுகளில் பொருத்தமான படங்கள், நான் குறிப்பெடுத்துக் கொண்ட அம்சங்கள் மூலம் தரவிருக்கின்றேன். அந்த வகையில் அடுத்து வரும் பகுதி கைமர் பேரரசில் இருந்த மன்னர்கள் குறித்த பார்வையாக அமையவிருக்கின்றது.

உசாத்துணை:
1."தென் இந்திய வரலாறு", டாக்டர் கே.கே.பிள்ளை (ஆறாம் பதிப்பு 1994, முதற்பதிப்பு 1958)
2. "தென்னாடு", கா.அப்பாத்துரை, எம்.ஏ,எல்.டி (முதற்பதிப்பு செப் 1954, மூன்றாம் பதிப்பு 1957)
3. "தமிழக வரலாறும் பண்பாடும்", வே.தி.செல்லம் (முதற்பதிப்பு 14, ஏப்ரல், 1995, நான்காம் பதிப்பு ஜூலை 2003