கம்போடியாவில் பல்லவ மன்னர்களின் ஆதிக்கம் குறித்து அறிவதற்கு முன்னர் இந்தப் பல்லவ மன்னர்கள் குறித்த எளிய அறிமுகம் ஒன்று அவசியமாகின்றது. பல்லவ மன்னர்கள் யார் என்பது குறித்த அறிமுகத்தை இந்தியாவில் அவர்கள் ஆட்சி செய்த காலகட்டத்தில் இருந்து கொடுக்கும் போது முழுமை பெறும் என்பது என் எண்ணம். இதற்காக சிட்னி தமிழ் அறிவகம் ஊடாக "தென் இந்திய வரலாறு" (டாக்டர் கே.கே.பிள்ளை முதற்பதிப்பு 1960), "தென்னாடு" ( கா.அப்பாத்துரை எம்.ஏ.எல்.டி, முதற்பதிப்பு 1954 ), தமிழக வரலாறும் பண்பாடும் (வே.தி.செல்லம் (முதற் பதிப்பு 1995) ஆகிய நூல்களை வாசித்து உசாத்துணையாக்கிக் கொண்டேன்.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை காஞ்சியை அரசிருக்கையாகக் கொண்டு பல்லவ மன்னர்கள் கி.பி 10 ஆம் நூற்றாண்டு வரை பல நூற்றாண்டுகளாக இவர்கள் தமிழகத்தின் வடக்கில் ஆட்சி செலுத்தினார்கள். பல்லவ மன்னர்களின் பிறப்புக் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வரலாற்று ஆசிரியர்களிடையே இருக்கின்றது.
வடக்கேயிருந்து தென்னாடு வந்தவர்களில் சகர், பார்த்தியர் ஆகியோருடன் பகலவம் அல்லது பாரசீக நாட்டு மக்களாகிய பகலவர் என்ற இனத்தவரும் இருந்தார்கள். பல்லவர்கள் இவர்களின் பிரிவே என்பார் ஒரு சாரார். ஆனால் இவர்கள் ஆந்திரப்பேரரசில் சிற்றரசர்களாகவும் அத்துடன் அவர்களின் கொடியின் சின்னம் ஏறத்தாளச் சோழர்களின் புலிக்கொடியாகவே இறுதிவரை இருந்தது. எனவே பல்லவ மன்னர்கள் சோழர்களுடன் தொடர்பு கொண்ட திரையர் என்போர் ஆவார் என்று சொல்லப்படுகின்றது. பல்லவர், திரையர், தொண்டமான் ஆகிய சொற்கள் தமிழிலக்கியத்தில் ஒருபொருட் சொற்களாகும். முதல் தொண்டமானாக இளந்திரையன் குறிக்கப்பட்டான்.
இன்னொரு கருத்தாக வரலாற்றாசிரியர் சி.இராசநாயகம் அவர்களின் குறிப்புப்படி மணிமேகலை காப்பியத்தை ஆதாரம் காட்டி மணிபல்லவத்து நாககன்னிகைக்கும் தொண்டமான் நெடுமுடிக்கிள்ளி என்ற சோழ இளவலுக்கும் களவொழுக்கத்தில் தோன்றிய தொண்டை மண்டலத்து ஆட்சியாளன் இளந்திரையன் வழி தோன்றியவர்களே பல்லவர்கள் என்றும் மணிபல்லவத்து "பல்லவ" என்ற சொல்லை வைத்து காஞ்சியில் ஆட்சியைத் துவக்கினான் என்று சொல்கின்றார். பல்லவ மன்னர்கள் யார் என்பது குறித்து மா.இராசமாணிக்கனார் எழுதிய விரிவான கட்டுரை, வரலாறு என்ற இணையத்தளத்தில் இங்கே கிடைக்கின்றது.
மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை தென்னாட்டு வரலாற்றில் பல்லவரே நடுநாயகம் வகிக்கின்றார்கள். ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் அவர்கள் பாண்டியப் பேரரசுடன் பல தடவை மோதிக்கொண்டார்கள்.
பல்லவ மன்னர்களுக்கு முற்பட்ட காலமானது களப்பிரர்களது பிடியில் இருந்ததால் பெளத்தம், சமண சமயங்களின் ஆதிக்கமே முன்னர் இருந்து வந்தது. பல்லவர்கள் முதலில் பிராகிருதத்திலும், பின்னர் சமஸ்கிருதத்திலும், இறுதியில் தமிழிலுமாகப் பட்டயம் இயற்றியிருக்கின்றார்கள்.
தென்னிந்திய கீழைத்தேய நாடுகளான பர்மா, மலாயா, சுமாத்திரா, ஜாவா, போர்னியோ, சையாம், பூணாம், காம்பூஜா (கம்பூச்சியா அல்லது கம்போடியா), சம்பா ஆகிய நாடுகளோடு ஆரம்பத்தில் ஏற்படுத்திக் கொண்ட வணிகத் தொடர்பு நாளடைவில் தென் இந்திய மக்களும், நாகரீகமும் இந்த நாடுகளில் பரவ வழியேற்பட்டது.

மகேந்திரவர்மனுக்குப் பின் வந்த ஈசானவர்மன் மத ஆசாரங்களைக் கண்காணிப்பதற்காக பேரறிஞராகிய வித்தியா விசேட ஆசாரியரை நியமித்திருந்தாராம். கி.பி 548 இலும் கி.பி 549 இலும் உள்ள கல்வெட்டுக்கள் இதைச் சொல்லி நிற்கின்றன. வித்தியா விசேடர் ஒரு கோயில் கட்டி அதில் சிவலிங்கத்தையும், ஹரிஹரர் சிலையையும் பிரதிஷ்டை செய்து வைத்தார். இந்தோ சீனாவில் சிவன், விஷ்ணு , சிவனும் விஷ்ணுவும் ஒருங்கே அமையப்பெற்ற ஹரிஹர ஆகிய மும்மூர்த்திகளின் ஆராதனைகள் உயர்நிலையில் இருந்தன என்பதற்கு இவ்வாறான உருவச்சிலைகளும், சாசனங்களும் சான்றாகின்றன.
கி.பி 968 இல் ஐந்தாம் ஜெயவர்மனது ஆட்சிக்காலத்திலுள்ள கல்வெட்டு தஷிணாபதம் அல்லது தக்காணம் சைவசமயத்தின் நடுநிலையாக விளங்கியதைத் தெரிவிக்கின்றது.கீழைத்தேய நாடுகளில் உள்ள மக்களிடையே தென்னிந்தியப் பழக்கவழக்கங்களும் , கொள்கைகளும் மிகுதியாகப் பரவியிருந்தன. காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்களையும், தென்னாட்டில் தோன்றிய சங்கராச்சாரியாரையும் பற்றி அங்குள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிட்டிருக்கின்றன.எனவே இந்த தென் கிழக்காசிய நாடுகளில் குடியேறிய ஆட்சியாளர்களும் சரி, மதத்தலைவர்களும் சரி தமது தாய் நாடு நாகரிகத்தோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது இவற்றின் மூலம் புலனாகின்றது.
ஆரம்பத்தில் சைவ, வைணவ மதங்களின் எழுச்சியும், செழுமையுமாக இருந்த கம்போடியாவின் சமயப்பண்பாடு நாளடைவில் உள்நாட்டு ஆட்சி, அரசியல் மாற்றங்களால் பெளத்த மத வழிபாட்டிற்கு தாவியது. ஆனாலும் சாதாரண குடிமக்கள் தவிர்ந்த உயர்தர வகுப்பினரிடையே இன்னும் இந்து மத ஆசாரக்கொள்கைகளும், நம்பிக்கைகளும் இறுக்கமாக இருந்துவந்தது. கம்போடியாவின் தற்போதய தலைநகர் நொம்பெங்(Phnom Peng) இல் மன்னரின் புரோகிதர்கள் இன்னாளிலும் அலுவலர்களுக்கு பணியேற்புரை நடத்துவதோடு ஏனைய சடங்குகளையும் பின்பற்றி வருகின்றார்கள். தென் இந்தியக் கிரந்த எழுத்துக்களிலே எழுதப்பட்ட சற்றுப் பிழையுற்ற சமஸ்கிருத மொழியே ஊடக மொழியாக இருந்திருக்கின்றது. தற்போது கம்போடிய நாட்டு மக்களாகிய கமெரர்கள், இந்தியர்கள் ஆகியோரின் பண்பாட்டுக் கலவையாக ஒரு பொதுப்பண்பாடு உருவெடுத்தாலும் இதன் அடிப்படை மூலம் இந்திய வழி நாகரிகமே என்பதில் ஐயமில்லை.
மேற்கண்ட ஆய்வுக்குறிப்புக்கள் இந்திய, இலங்கை ஆராய்ச்சியாளர்களின் பார்வையாக பதியப்பட்டிருக்கின்றது. நான் கம்போடியாவில் சந்தித்த வரலாற்று அனுபவங்கள் எவ்வளவு தூரம் முன் சொன்ன வரலாற்றுக் குறிப்புக்களோடு இயைந்திருக்கின்றன என்பதை தொடரும் பதிவுகளில் பொருத்தமான படங்கள், நான் குறிப்பெடுத்துக் கொண்ட அம்சங்கள் மூலம் தரவிருக்கின்றேன். அந்த வகையில் அடுத்து வரும் பகுதி கைமர் பேரரசில் இருந்த மன்னர்கள் குறித்த பார்வையாக அமையவிருக்கின்றது.
உசாத்துணை:
1."தென் இந்திய வரலாறு", டாக்டர் கே.கே.பிள்ளை (ஆறாம் பதிப்பு 1994, முதற்பதிப்பு 1958)
2. "தென்னாடு", கா.அப்பாத்துரை, எம்.ஏ,எல்.டி (முதற்பதிப்பு செப் 1954, மூன்றாம் பதிப்பு 1957)
3. "தமிழக வரலாறும் பண்பாடும்", வே.தி.செல்லம் (முதற்பதிப்பு 14, ஏப்ரல், 1995, நான்காம் பதிப்பு ஜூலை 2003
































