Social Icons

Pages

Saturday, June 23, 2007

கேரளாவில் யூத சமூகம் - சில வரலாற்றுத் துளிகள்





கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேல் விடுபட்டுப் போன உலாத்தலைத் தொடர்கின்றேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்.

கடந்த பதிவில் யூதர்களின் ஆலயம் குறித்த பகிர்வைத் தந்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக யூதர்களின் இந்திய வருகை குறித்த சில அம்சங்களைப இப்பதிவில் பார்ப்போம்.

யூத ஆலயம் சூழவுள்ள பகுதி Jew Town என்றழைக்கப்படுகின்றது. இந்த பிரதேசம் கொச்சின் பிரதேசத்தின் வாசனைத்திரவிய வியாயாரத்தின் முக்கிய கேந்திரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இஞ்சி, கறுவா, உட்பட்ட வாசனைத் திரவியம் மணமணக்கும் கடைகளையும், யூத மொழியான ஹீப்ருவில் பொறிக்கப்பட்ட பெயர்களையும் காண்பது இங்கு சாதாரணம்.

கேரளாவில் யூதக்குடிகளின் பரம்பல் குறித்த Kerala & her Jews என்ற ஆங்கிலச் சிறுநூலை வாங்கிக்கொண்டேன். யூத ஆலயத்தின் முகப்பு அறையில் வெறும் சித்திரச்சுவராக கேரளாவில் யூதர் வருகை, மக்னா காட்டா உடன்படிக்கை கைச்சாத்திட்ட நிகழ்வு உட்பட்ட வரலாற்றுக் குறிப்புக்களை ஓவியங்களாகத்தீட்டியிருக்கின்றார்கள். அவற்றை வரிசைக்கிரமமாகப் பார்த்து வந்தால் பல வரலாற்று நிகழ்வுகளைக் கண்முன் கொண்டுவரமுடியும். 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Rabbi Nissim என்ற யூதக்கவிஞன் இப்படிச் சொல்கின்றார்,

"I Travelled from Spain
I had heard of the city of Shingly
I longed to see an Israel King
Him, I saw with my Own eyes"

Cranganore (கிரங்கனூர்), Muzhiris என்று கிரேக்கர்களாலும் Shingly என்று யூதர்களாலும் அழைக்கப்பட்ட ஒரு கடற்துறை, பண்டைய காலகட்டத்திலேயே மேற்குலகத்தாரால் அறியப்பட்ட இந்தியக் கடற்துறையும் கூட. இந்தக் கிரங்கனூர் நகர், திரிச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. யூதர்களின் இந்தியாவிற்கான குடியேற்றப் பரம்பல் கி.பி 5 ஆம் நூற்றாண்டிலிருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை அதிகம் செல்வாக்குச் செலுத்திய காலமாகும். Judeo-Malayalam என்பது காலப்போக்கில் மருவிவிட்ட ஹீப்ரூவும் (யூத மொழி) மலையாளக் கலப்புமான மொழியே இவர்களின் புழக்கத்தில் உள்ள மொழியாகும்.


கிரங்கனூரில் தம் குடியேற்றத்தை ஆரம்பித்த யூத இனம், உள்நாட்டு ஆட்சி மாற்றங்களின் போது துரத்தப்பட்டு கொச்சினில் இருந்த இந்து ராஜாவின் பாதுகாப்பில் அடைக்கலமானார்கள் என்கிறது வரலாறு. வாலில்லாக் குரங்கு (Ape), மற்றும் மயில் போன்ற தமிழ்ச் சொற்களுக்கு நிகரான ஹீப்ரு மொழிவழக்கையும் வரலாற்றாசிரியர்கள் சுட்டுகின்றார்கள்.
பழந்தமிழ்ச் சொல்லான தகை (Takai) இதற்குப் பொருத்தமான சொல்லாக ஹீப்ரு மொழியில் உள்ள Tuki என்ற சொல் சுட்டப்படுகின்றது.
Moses de Paiva என்ற Dutch Jew, 70,000 இலிருந்து 80,000 வரையான யூதர்கள் 370 A.D இல் மலபார் கடற்கரையில் வந்திறங்கியதாகச் சொல்கின்றார். முதலாம் நூற்றாண்டில் (70 C.E) யூதர்களின் இரண்டாவது ஆலயம் ரோமானியர்களால் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து பத்தாயிரம் வரையான யூதர்கள் இந்து ஆட்சியாளரின் கருணையினால் கேரளாவின் மற்றைய பாகங்களுக்கும் குடியேற அனுமதிக்கப்பட்டனர்.



Joseph Rabban என்ற யூத வியாபாரி 8 ஆம் நூற்றாண்டின் மத்தியில் மலபார் துறையில் காலடி வைத்தான். இவனுக்கு கொச்சின் யூதர்கள் மீதான நிர்வாக ஆளுமையை அப்போதிருந்த மலபாரின் சேர ஆட்சியாளர் இரண்டாம் பாக்ஷர ரவிவர்மன் (Bhaskara Ravivarman II )கொடுத்திருந்தார். இரண்டம் பாக்ஷர ரவிவர்மனை சேரமான் பெருமாள் என்றும் அழைப்பார்கள். இந்த நிர்வாக ஆளுமை கிரங்கனூர் என்ற பிரதேசத்தில் 72 இலவசக் குடியிருப்போடு, அஞ்சுவர்ணம் என்ற உடன்படிக்கையாக செப்புப் பட்டயம் பொறிக்கப்பட்ட சாசனத்தில் எழுதிக்கொடுக்கப்பட்டது. ஜோசப்பும் அவனைத் தொடந்த யூதத் தலைவர்களும் யூத சமூக நலனில் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டார்கள்.


போர்த்துக்கேயரின் காலத்தில் (AD 1500) அவர்களின் ஆட்சிமுறையினால் மிகுந்த அல்லற்பட்ட யூத சமூகம் AD 1662 இல் டச்சுக்காரர்களுக்கு உதவி போர்த்துக்கீசரை விரட்டியடிக்க உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார்கள். AD 1662 இல் தோல்வியுற்ற டச்சுக்காரர்களின் முற்றுகை அடுத்த ஆண்டில் வெற்றியைத் தழுவியது. போர்த்துக்கேயர் விரட்டியடிக்கப்பட்டார்கள். கேரளாவில் டச்சுக்காரரின் ஆட்சிக்காலத்தை யூத சமூகத்தின் பொற்காலம் என்கின்றார்கள். 1687 இல் Amsterdam இல் இருந்து வந்த யூதப் பிரதிநிதி மூலம் "NOTSIAS DOS JUDEOS DE COCHIM" கொச்சின் யூத வரலாறு மீள் அச்சேறுகின்றது. போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட யூதர்களின் நூல்கள் மீள் அச்சேறுகின்றன. கொச்சினில் வாழும் யூத சமூகத்திற்கு டச்சு ஆட்சியாளர்களின் கருணைக் கண் சலுகைகளாகக் கிடைக்க உதவுகின்றது.

1795 இல் தொடந்த பிரிட்டிஷ் ஆட்சியின் போதும் கேரளாவின் குறிப்பாக கொச்சின் வாழ் யூத சமூகத்திற்கு சலுகைகளும், வசதிகளும் வாய்த்த நிறைவான காலமாக அமைந்துவிட்டது.


நல்லது நண்பர்களே, இந்தப் பதிவு கொஞ்சம் வரலாற்றுத் தகவல்களோடும் என் கமராவில் சுட்ட படங்களோடும் நிரம்பிவிட்டது.

உசாத்துணை: Kerala & her Jews மற்றும் சில வரலாற்றுத் தளங்கள்

வீண்டும் காணாம்......

Saturday, April 07, 2007

கொச்சினில் கண்ட யூத ஆலயம்

மே 29, 2006 மதியம் 3.00 மணி (இந்திய நேரம்)


கொச்சின் துறைமுகத்தை ரசித்துவிட்டு அடுத்து நான் பார்க்கச் சென்றது Jewish Town. கொச்சினில் இருக்கும் யூத மக்களின் குடியேற்றங்களின்எஞ்சிய சுவடுகளாய் இருக்கும் அந்த நகரப்பகுதியின் குறுகலான சந்துகளின் இரு மருங்கிலும் பண்டைய கலைப்பொருட்களைக் குவித்து வைத்து விற்கும் கடைகள் இருந்தன.


பண்டைய கலைப்பொருட்கள், வாசனைத்திரவியங்களை நிறைத்த கடைகளின் சங்கமம் அது. கடைகளைக் கடந்து போவோர் வருவோரைக் கூவிக் கூவி அழைத்துப் பொருட்களை வாங்குமாறு அன்புத் தொல்லை கொடுத்தார்கள் அவ்வியாபாரிகள். அவர்களையும் கடந்து போனால் வருவது Jewish Pardesi Synagogue என்ற யூதர்களின் வழிபாட்டிடம்.




கேரளாவில் யூதர்களின் குடியேற்றத்தையும் அவர்களின் வழிபாட்டு ஸ்தலத்தையும் முதன் முதலில் அறிந்த, கண்ட பிரமிப்பு விலகாமல் அவ்விடத்தின் உள்ளே நுளைந்தேன். இந்த புனித ஸ்தலம் காலை 10 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரையும், மாலை 3 மணி தொடக்கம் 5 மணி வரையுமே திறந்திருக்கும். சனிக்கிழமைகள் மற்றும் யூதர்களின் உத்தியோக பூர்வ விடுமுறை நாட்களிலும் இது பூட்டப்பட்டிருக்கும்.ஆலயத்தின் உள்ளே வீடியோ படம் எடுக்க அனுமதி கிடையாது. அரைக்காற்சட்டை போட்ட அல்லது அரைகுறையாக உடுத்திய பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. உள்ளே போகமுடியாது. வாசலில் நின்று கொண்டு புலம்பிக்கொண்டிருந்த அரைக்காற்சட்டை வெள்ளை இனப்பெண் அதற்குச் சாட்சியாக இருந்தாள்.




நுளைவு வாசலில் 1344 ஆம் ஆண்டு எழுப்பப்பட்ட சுவரில் யூத மொழியான ஹீப்ரு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் இருந்தன.இந்த ஆலயம் 1568 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதுவே பொதுநலவாய நாடுகளில் (Commonwealth countries)இருக்கும் Jewish Synagogue இல் மிகப் பழைமையானதாக விளங்குகின்றது. முன்னர் நான் தந்திருந்த மத்தன்சேரி பலேஸ் இற்கு அண்மையில் தான் இந்த இடமும் இருக்கிறது. நடை தூரத்தில் வந்து விடலாம். முன்னர் யூத மக்களின் பரம்பல் அதிகமாக இப்பிரதேசத்தில் இருந்ததற்கு இத் தலத்தில் தொன்மைச் சிறப்பு சான்று பகிருகின்றது. தொடந்த அரசியல் மாற்றங்களால் பல குடும்பங்கள் மீளவும் இஸ்ரேலுக்குச் சென்றுவிடமும் இப்போது 17 யூதர்கள் மட்டுமே இங்கே இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆலய வாசலில் ஒழுங்கு மற்றும் அனுமதி வேலைகளைக் கவனிக்கும் ஒரு யூதப் பெண்மணியைக் காணக்கூடியதாக இருந்தது. இந்த மத்தன்சேரி பிரதேசம் தவிர கேரளாவின் கொல்லம் பகுதியிலும் யூதக் குடியேற்றம் முன்னர் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.

இந்த புனிதஸ்தலம் 1662 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டுப் பின்னர் 2 வருடங்களின் பின்னர் டச்சுக்காரர்கள் கொச்சினைக் கைப்பற்றியபோது மீள நிறுவப்பட்டது. கைச்சித்திர வேலைப்பாடுகளுடன் 18 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சலவைக்கல் (Marble) பதிப்புக்களும், பல வண்ண நிறக் கண்ணாடி விளக்குகளும் அலங்கரிக்கின்றன.


1760 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மணிக்கூட்டுச் சட்டமும் இன்னும் அசையாமல் நிற்கின்றது.

உள்ளே நுளைந்ததும் மேற் படிக்கட்டுக்களுக்கு அப்பால் சென்று பெண்கள் மட்டும் பிரார்த்தனை செய்யும் விசேட அனுமதியும் உண்டு. Orthodox முறையிலானது இத்தலம்.

தேவாலயப் பராமரிப்பாளரிடம் சென்று உரையாற்றியபோது நிறைய விஷயங்களைச் சொன்னார். 14 ஆம் நூற்றாண்டில் கொச்சினில் யூதர்கள் வருகையின் பின்னர் தொடர்ந்த அரசியல் மாற்றங்கள் இந்த ஸ்தலத்தின் முகப்புக் கட்டடமொன்றில் ஓவியங்களாக வரையப்பட்டிருக்கின்றன. இவை பற்றிய முழுமையான விபரங்கள், படங்கள், ஆவணங்களை இத்தொடருக்காகச் சேகரித்துக் கொண்டேன். அவற்றில் பொருத்தமான பகுதிகளை எடுத்து அடுத்த பதிவில் தருகின்றேன்.

வரட்டே....


(பதிவின் மேல் இரண்டு படங்களும் என் கமராவில் புகுந்தவை அல்ல, வலையில் சுட்டது)

Monday, March 26, 2007

தொட்டிற் பழக்கம் - ஒரு weird பதிவு


பதிவர்கள் ஒவ்வொருவராக தம் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பித் தம் தனிக்குணங்களைக் காட்டும் வேளை இது.சகோதரி உஷாவின் அழைப்பில் நானும் களமிறங்குகின்றேன். தொட்டிலில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள், என்னைப் பொறுத்தவரை
இங்கே நான் சொல்லப்போகும் என் தனிக்குணங்கள் இனிமேலும் மாறுமா என்பது சந்தேகமே ;-))

இங்கே என் மனச்சாட்சியின் குரலாக என் குணாதிசயங்கள் வெளிவருகின்றன. இவற்றில் பலவற்றை முதன்முதலாக இன்னொருவருடன் நான் பகிரும் என் தனிப்பட்ட விஷயங்களாகவும் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை குழந்தைப் பருவத்திலிருந்து தொடரும் சில பழக்கங்களோடு இடையே புகுந்த சில பழக்கங்களாகவும் இவை இருக்கின்றன.

என்னுடைய அம்மா, கூடவே இரண்டு சகோதரிகள், ஒரு தம்பி (இரண்டு மூன்று வயது இடைவெளியில்) என்று பெத்துப் போட்டுவிட்டு அவர்களின் இளவயதிலேயே தாத்தா (அம்மாவின் அப்பா) இறந்துவிட்டார். எனவே என் அம்மாவைப் பொறுத்தவரை ஒரு பெண்ணின் இளமைக்கால எதிர்பார்ப்புக்கள் ஆசாபாசங்கள் மட்டுப்படுத்தப்பட்ட உண்ண உணவு, உடுக்க உடை, படிப்பு என்ற எல்லையோடு சாதாரண வாழ்க்கையாகவே கழிந்து போனது. அவரின் அடிமனதில் இருந்த சங்கீதம், நடனம் போன்ற நுண்கலைகள் மீதான ஆசை, ஆசை அளவிலேயே நின்று , ஒரு ஆசிரியையாக மட்டும் தன்னை வளர்த்துக்கொண்டார். சரி, என்னுடைய ஆசைகளைப் பெண் குழந்தை பிறந்தால் அவளுக்கு என் விருப்பம் போல வளர்த்துவிடலாம் என்ற என் அம்மாவின் நினைப்பில் விழுந்தது மண். இரண்டு அண்ணன்மாருடன் மூன்றாவதாக நான் பிறந்தேன். அதனாலோ என்னவோ இயன்றவரை என் பிள்ளைப் பிராயத்திலிருந்தே ஒரு பெண்பிள்ளை போல வளர்த்து வந்தார். அதுவே பின்னாளில் என்னுடைய சில குணாதிசயங்களில் பெண்களுக்கே உரிய சில பண்புகளும் வாய்த்துவிட்டன.

1. பயங் கொள்ளல்

ஆயிரம் ஜெனமங்கள் என்றொரு பாழாய்ப்போன படத்தை என் சிறுபிராயத்தில் பார்த்துத் தொலைத்துவிட்டேன். அது முதல் இரவு வேளைகளில் அம்மா காவல் காக்க ஓண்ணுக்குப் போவது, கை கால் மறைத்து தலையின் மூக்கு வாய்ப்பாகம் மட்டும் வெளியே தெரிய
போர்வையால் மூடிக்கொண்டே தூங்குவது, பேய்ப்படங்களின் பாடல்கள் வானொலியில் வந்தால் இருகாதிலும் விரலால் இறுகமூடிக்கொள்வது சில உதாரணங்கள். ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் வரும் வெண்மேகமே பாடலை இன்றும் எனக்குக் கேட்டால் குலை நடுங்கும். ( வெளிநாடு வரும் வரை அம்மா தான் சாப்பாடு ஊட்டிவிட்டார்)

என்னுடைய பதினோராம் ஆண்டில் ( பிளஸ் ஒன்) படிக்கும் போது ஆச்சி (அப்பாவின் அம்மா) இறந்தபோது தான் நான் முதன்முதலில் ஒரு மரணவீட்டுக்கே போனேன். இதுவரை நான் மரணவீடுகளுக்குச் சென்ற எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். புலம்பெயர்ந்து வந்த பின் நான் தவிர்க்கமுடியாது சென்ற மரணச்சாலைகளில் பார்வைக்காக வைக்கப்படும் உடலைப் பார்க்கும் வரிசையில் நின்று உடலைப் பார்க்காமல் அந்தக் கணம் மட்டும் கண்ணை மூடிக்கொள்வேன். விதிவிலக்கு மலரக்காவின் இறுதிச்சடங்கு.

2. பாட்டு கேட்டல்

என்னைப் பொறுத்தவரை சினிமாப்பாடல்களைப் படங்களில் வரும் இடைச் செருகலாக இல்லாமல் என்னை ஆக்கிரமிக்கும் சோகங்களுக்கான ஒத்தடமாகவும், அதி உச்சபட்ச மகிழ்ச்சியின் போது பங்கு போடும் பங்காளியாகவும் பல தடவை அனுபவித்திருக்கின்றேன். காதல் அரும்பிய காலங்களில், இளையராஜாவின் எண்பதுகளில் வந்த படப்பாடல்களை ரேப்றெக்கோடரில் போட்டுக் கேட்டுக்கொண்டே மேசையில் தலைசாய்த்துக் கனவு காண ஆரம்பித்துவிடுவேன்.

ஒன்று சொன்னால் சிரிக்காதீர்கள். பாடலில் வரும் ஆண் குரலாக நானும் பெண்குரலாகக் காதலியையும் உருவகப் படுத்தி அப்பாடலை ஒரு படப்பாடல் போலத் தான் பகற்கனவு காண்பேன். என் ஜீவன் பாடுது படத்தில் வரும் எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் என்ற இளையராஜாவின் பாடலைத் தலை சாய்த்துக் கேட்கும் நாள் என் காதலியை டியூசனில் நான் காணாத நாள் என்பது என் ரேப் றெக்கோடருக்குத் தெரியும்.

3. படம் பார்த்தல்

சிம்பு தனுஷ் காலமும் வந்துவிட்டது, இளையராஜாவின் மகன் யுவனும் இசையமைக்க வந்துவிட்டார். ஆனால் எனக்கு இன்னும் பிடித்தவை எண்பதுகளில் ராமராஜன் நடித்த படங்களும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே, அரண்மனைக் கிளி வகையறாக்கள். கரகாட்டக்காரன் வீசீடி போதாதென்று டீ.வீ.டியும் வைத்திருக்கிறேன். என் காரில் ஐந்து இசைத்தட்டுக்களைப் பொருத்திக் கேட்கலாம். அந்த ஐந்தும் பெரும்பாலும் எண்பதுகளில் ராஜா போட்ட மெட்டுக்கள்.
அதிகம் சென்ரிமென்ற் கலந்த அன்பே சிவம், பிளாக் போன்ற படங்களைப் பார்த்தால் கண்ணீர் வருவது என்னை மீறிய சக்தி ;-).




4. குழந்தைகள் மீதான நேசிப்பு

Finding Nemo என்ற படத்தை வெள்ளைக் குழந்தைகள் தம் பெற்றோருடன் தியேட்டர் வந்து பார்க்கும் போது தனி ஆளாக அந்தக்கூட்டத்தில் படம் பார்த்த பயல் நானாகத்தான் இருப்பேன். Lion King மூன்று பாகங்களையும் டீவீடியில் வாங்கிப் பொக்கிஷமாக வைத்திருக்கின்றேன். கூடவே Madagascar, டிஸ்னியின் பெரும்பாலான கார்ட்டூன் தொகுப்பு வீடியோக்கள் இன்னும் சில உதாரணங்கள்.

என்னுடைய படுக்கையில் tickle me Elmo என்ற பொம்மை இருக்கிறது (பார்க்க படம் ), அதனுடைய வயிற்றை அமுக்கி அது குலுங்கிக் குலுங்கிச் சிரித்து ஓய்ந்த பின் தான் எனக்குத் தூக்கம் வரும்.

ஊரில் இருக்கும் போது பக்கத்து வீட்டுப் பிள்ளைகளைப் பிராய்க்குக் காட்ட உப்பு மூட்டை, நுள்ளுப்பிறாண்டு கிள்ளுப் பிறாண்டு விளையாட்டுக் காட்டிய பழக்கம் இன்னும் தொடர்கிறது. வார இறுதி நாட்களில் காலை 10 மணிக்கு முன் Mc Donalds சென்று அங்கு காலை உணவு சாப்பிட வரும் குழந்தைகளை வேடிக்கை பார்ப்பது ஒரு சுகம். விருந்து நடக்கும் வீடுகளில் பெரும்பாலும் பெரியோரின் பேச்சுக் கச்சேரியைத் தவிர்த்துக் குழந்தைகளோடு விளையாட்டுக் காட்டி அவர்கள் சிரிப்பதை ஆயுள் முழுவதும் பார்க்கப்பிடிக்கும்.

சமீபத்திய சாதனை: கடந்த இரு வாரம் முன் ஒரு கலியாண இரவு விருந்தில், பிறந்து பத்து மாதமான ஒரு குழந்தையோடு வந்த பெற்றோர் இசைக்கு ஆடத் தொடங்கத் தனியே தன் வண்டியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை வாரியெடுத்து என் தோளில் சாய்த்து தூக்கம் கொள்ளவைத்து விருந்து முடிவிற் தான் அதன் தாயிடம் கொடுத்தேன்.

5. வாசிப்பும் உலாத்தலும்



1995 ஆம் ஆண்டு நான் அவுஸ்திரேலியா வந்த நாள் முதல் ஆனந்த விகடனைச் சேகரித்து வைக்கும் பழக்கம் இருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. உதாரணத்துக்கு இப்பதிவில் நான் மேலே இணைத்துள்ள ஆனந்த விகடன் வெளிவந்த ஆண்டுகளைப் பாருங்கள். இன்னும் எனக்கு காமிக்ஸ் புத்தகங்கள் கொள்ளைப் பிரியம் (பார்க்க படம்). 1995 ஆம் ஆண்டு மணிச்சித்ரதாளு படம் வெளிவந்து ஷோபனாவுக்குத் தேசியவிருது அறிவித்ததை ஒரு ஆனந்த விகடனில் வாசித்துத் தெரிந்துகொண்டு முதன் முதலில் மணிச்சித்ர தாளுவில் ஆரம்பித்த மலையாளப் படம் பார்க்கும் அவா இன்னும் தொடர்கிறது. அதுவே பின் என் கேரள உலாத்தலாகவும் மாறிவிட்டது. கேரளாவில் கொஞ்சக் காலம் வாழக்கூடாதோ என்பதே இப்போது முளைத்திருக்கும் என் weird நினைப்பு.


போதுமா உஷா ;-)))

Friday, March 09, 2007

கொச்சின் - விட்ட குறை, தொட்ட குறை


கடந்த பதிவில் கொச்சின் பற்றிய புவியியல் மற்றும் வரலாற்று அம்சங்களைப் பின்னர் தருவதாகச் சொல்லியிருந்தேன்.கொச்சின் பற்றி அறியாத அன்பர்களுக்கு இது சிறு விளக்கத்தையும் ஆர்வத்தையும் உண்டுபண்ணும் என்ற ரீதியில் இப்பதிவு அமைகின்றது. அத்தோடு அங்கு நான் எடுத்த படங்களின் மீதியையும் காட்ட ஒரு சந்தர்ப்பம் இது. கேரள சுற்றுலாத்தலங்களின் உதவியுடன் தகவல்களைப் பெற்று இப்பதிவைத் தருகின்றேன்.

கொச்சி என்றும் கொச்சின் என்றும் அழைக்கப்படும் இத்துறைமுகப்பட்டினம்
எர்ணாகுளம் என்ற மாவட்டத்தில் உள்ளடங்குகின்றது. அரபியன் கடல் தொட்டு நிற்க தெற்கே குமாரகம், ஆலப்புழா மாவட்டத்தையும் கிழக்கே இடுக்கி, மேற்கே திரிச்சூர் பிரதேசங்கள் சூழ கொச்சின் அமைந்துள்ளது.

அரபிக்கடலின் மகாராணி என்ற செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்படும் இவ்விடம் கேரளாவின் வர்த்தகப் பட்டினமாகவும் கொள்ளப்படுகின்றது. அதை உணர்த்துமாற் போலப் பண்டைய கால வரலாற்றுத் தரவுகளின் படி பிரிட்டிஷார், அரேபியர்கள், சீனர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் வந்து வாணிபம் நடாத்திப் போன இடமாக இருக்கின்றது. மேற்குலகத்தவர் முதன்முதலில் கைப்பற்றிய இந்தியப் பிரதேசம் இதுவாகும். கொச்சின் துறைமுகம் ஒரு வர்த்தகக் கேந்திரமாக இருந்ததால் அதிகம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விடயம் இல்லாவிட்டாலும், குறிப்பாக கோவளம் கடற்கரையில் காணும் சுகம் இல்லாவிட்டலும், வரலாற்றுப் பெருமை மிக்க துறைமுகத்தைப் பார்க்கும் வாய்ப்பாகவும் சீன வல என்று மலையாளத்தில் அழைக்கப்படும் chinese net ஐப் பார்க்கவும் இந்தப் பயணத்தை ஏற்படுத்த வேண்டும். சீன வலை முறைப்படி சீனாவிற்கு வெளியே கொச்சினில் மட்டுமே மீன் பிடிக்கப்படுகின்றது. சமாந்தரமாக நீண்ட வலையமைப்பு ஏற்படுத்தி வலையின் மேற்புறம் மீனவர் நடந்து சொல்வதற்கான வசதியையை உருவாக்கி வித்தியாசமானதொரு முறையில் மீன் பிடிக்கப்படும் முறையைக் கட்டாயம் பார்க்க இது ஒரு அரிய சந்தர்ப்பம். (பார்க்க, இப்பதிவில் இணைக்கப்பட்டிருக்கும் படங்கள்)

ஒல்லாந்தர் 1530 இல் கோவாவிற்குத் தம் பிராந்தியத் தலைநகரை மாற்றும் வரை 1503 ஆம் ஆண்டிலிருந்து கொச்சினே தலைப்பட்டினமாகத் திகழ்ந்தது. 2408 சதுர கி.மீ பரப்பளவில் இந்தப்பிரதேசம் உள்ளது. என்னுடைய அனுபவப் படி திருவனந்தபுரப் புறச்சூழ்நிலையிலிருந்து மாறுபட்டே இப்பிரதேசம் உள்ளது. ஒரே மாநிலத்துக்குள்ளேயே சில வாழ்வியல் மற்றும் நடைமுறை வேறுபாடுகளையும் காணக்கூடியதாக இருந்தது.
கொச்சினில் நான் பார்த்த சில இடங்களை அடுத்த பதிவில் தருகின்றேன்.
வரும்........

Sunday, February 11, 2007

கொச்சின்துறைமுக வலம்!

மே 29, 2006 மதியம் 1.00 மணி (இந்திய நேரம்)மத்தன்சேரிக் கோட்டையிலிருந்து வெளியேறி மதிய உணவிற்காக எங்காவது நல்ல உணவகம் செல்லுமாறு கார்ச்சாரதியைப் பணித்தேன். மதிய உணவை நாம் அடுத்துப் பார்க்கப் போகும் கொச்சின் துறைமுகப் பகுதியிலேயே எங்காவது எடுக்கலாமே என்று ஆலோசனை சொன்னார். செரி என நான் பதிலுறுக்க நேரே கொச்சினிலுள்ள "மலபார் ஹவுஸ்" க்கு காரை எடுத்துச் சென்றார்.

வழியோரக்கடைகளில் ஏதாவது சாப்பிட்டு வயிற்றில் வம்பை விலைக்கு வாங்க என் மனம் இடங்கொடாததால் விலை அதிகம் என்றாலும் ஒரு உயர்தர உணவகத்தைத் தேடிச்செல்வது நல்லது என்று நான் முன்னரே கார்ச்சாரதியிடம் சொன்னதை நினைவில் வைத்துத் தான் அவர் இந்த ஹோட்டலுக்கு இட்டுச் சென்றார்.

மலபார் ஹவுஸ் கொச்சின் பிரதேசத்தின் முக்கியமான நினைவிடங்களில் ஒன்றாக இருக்கின்றது. Jan Herman Clausing என்ற டச்சுக்காரர் 27, மே , 1755 ஆம் ஆண்டு Mathew Henrich Beyls இடமிருந்து இதை வாங்கியதாகச் சொல்லப்படுகின்றது. 1795 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் கொச்சினைக் கைப்பற்றியபோது இதன் உரிமையும் அவர்களிடம் சென்றுவிட்டது. மலபார் ஹவுஸ் கொச்சின் துறைமுகத் தலைவர் Mr. Wrinkler இன் குடும்பத்தின் வாசஸ்தலமானது. 1889 ஆம் ஆண்டு ஜனவர் 4ஆம் திகதி, பாரியதீ விபத்தைச் சந்தித்ததைத் தொடர்ந்து Wrinkler இன் மகள் Harrisons மற்றும் Crossfield இற்கு விற்றார். காலவோட்டத்தில் தேசிய வங்கியின் நிர்வாகிகளின் வாசஸ்தலமாகி, இப்போது 1995 ஆம் ஆண்டிலிருந்து Cochin Residency (P) Ltd இதை நிர்வகிக்கின்றது.
(ஆதாரம் : மலபர் ஹவுஸ் தகவல் தளம்)


நல்ல வசதிகளோடு விளங்கி கொச்சினைச் சுற்றிப்பார்க்கவும் ஏற்புடைய வாசஸ்தலமாக மலபார் ஹவுஸ் விளங்கிவருகின்றது. டொலரோ யூரோவையோ மணிப்பையில் கொண்டுபோவோருக்குத் தான் லாயக்கு.

ஒரு நட்சத்திர உணவகம் என்பதால் வெள்ளைத் தலைகள் தான் அதிகம் தென்பட்டன. எனக்குப் பிடித்த முன்பே திருவனந்தபுரத்தில் ருசித்த கறிமீன்வறுவலுடன் சாப்பாடு கிடைத்தது. சாப்பிடும் போது ஏதோ செயற்கைத் தன்மையை உணரமுடிந்தது. சாதாரண உணவகங்கள் என்றாலும் அவற்றில் சுவை அதிகம். இங்கேயோ அதிகம் விலை கொடுத்து சப்பென்று சாப்பிட்டமாதிரி என்று நினைத்துக் கொண்டேன்.
சாரதியும் உண்டு களைத்து காரில் ஓய்வெடுத்துக்கொண்டார்.
அவரைத் தொந்தரவு செய்யாமல் நடை தூரத்தில் இருந்த கொச்சின் துறைமுகத்தை நோக்கி நடை போட்டேன். அப்போது தான் வழி நெடுக உள்ள துறைமுகத்தை அண்டிய உண்வகங்களைக் காண நேர்ந்தது. அவற்றைக் கடக்கும் போது மூக்கின் நாசியை தயாரித்துக்கொண்டிருக்கும் கடலுணவின் மணம் கைது செய்துகொண்டிருந்தது.
மலபார் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் வகை வகையான மீன், இறால், நண்டு இத்தியாதி கடலுணவுகள் வாரியிறைக்கப்பட்டுக் குவியல் குவியல்களாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. அவற்றை அங்கேயே வாங்கிப் பக்கத்தில் உள்ள அந்த நடைபாதையோர உணவகங்களில் கொடுத்தால் சுவையான கறியை உடனேயே சமைத்துத் தருகின்றார்கள். அடடா நல்லதொரு அனுபவத்தைத் தவறவிட்டுவிட்டோமே என்று மனம் புழுங்கியது. கொச்சின் கடற்கரையைத் தொட்டு அழுத்தமாக முத்தம் கொடுத்தவாறே பாரிய கப்பல்கள் அணிவகுக்கின்றன. Chinese net எனப்படும் நீண்டவலைக்கட்டமைப்பும் , ஆங்காங்கே சிற்றரசர்கள் போல தெல்லுத் தெல்லாகச் சிறுபடகுகளும் தென்படுகின்றன. போர்த்துக்கேயர் பாவித்த பீரங்கி ஒன்று கடற்கரை நடைபாதையை விட்டுவிலகிய முட்புதர் ஒன்றில் தென்படுகின்றது. எதுவித கவனிப்பாரும் இன்றிக் கடல் மேல் விழி வைத்துக் கரள் கட்டிய தேகத்தோடு காத்திருக்கின்றது அது. இந்தத் துறைமுகம் எந்தவிதமான தங்கி இளைப்பாறும் தரத்தில் உள்ள கடற்கரையாக இல்லாமல் கடல்வணிகத்தின் கேந்திரமாகவே தென்படுகின்றது. ஆனாலும் காதலர்கள் உட்பட கூட்டம் கூட்டமான சனத்திரளுக்குக் குறைவில்லை.
அடுத்த பதிவில் மேலும் சில படங்களுடன் கொச்சின் பற்றிய பார்வை தொடரும்.

வீண்டும் காணாம்......