
இந்தியாவிற்கு ஒவ்வொரு தடவை நான் பயணிக்கும் போதும் என் பெரும்பாலான நாட்கள் பெங்களூரில் தான் கழிந்திருக்கின்றது. Garden City என்ற நிலை மாறி Concrete Ciyஆக மாறிவிட்ட பெங்களூரின் நிலை கேரளாவிற்கும் ஏற்படாதிருக்கக் கடவது, வெளிநாட்டுக்கம்பனிகளையும் கேரளாவைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்காரர்கள் வெள்ளைக்காரன்களை விடமாட்டார்கள் என்று மனதார நினைத்துக்கொண்டேன். இருக்காதா பின்னே, இவ்வளவு அழகான பசுமைப்புரட்சி பூமி யூ எஸ் கரன்சி பட்டு நாசமாகப் போகவேண்டுமா? 
என் படகுப்பயண உலாத்தலில் கடந்துபோகும் நாளாந்தப் பயணிகள் போக்குவரத்துப் படகுகளில் இருக்கும் பயணிகள் வயது வேறுபாடின்றிக் கையெத்தி ஆரவாரிக்கின்றார்கள். ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கும், ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குமாக பயணிகளை உப்புமூட்டை காவிக்கொண்டு போகின்றன படகுகள்.
நன்றாக வயிறுமுட்டச் சாப்பிட்டு நடக்கமுடியாமல் நடப்பவன் போல மெல்ல மெல்ல ஊர்ந்தே போகின்றது என் படகு.
ஒரு கிறீஸ்தவத்தேவாலயம் கண்ணிற்படுகின்றது, நீர் முற்றம் கம்பளம் விரிக்க தேவாலயத்தின் அழகை நீங்களே படத்தில் பார்த்து இரசியுங்கள்.

எங்கள் படகுவீட்டு கரையை ஒட்டியதாகப் பயணப்படும்போது எட்டிப் பார்க்கின்றேன். கரைவழியில் நின்ற ஒரு சிறுவனும் சில சிறுமிகளும் எதையோ சொல்லிக்கொண்டு சமதூரத்தில் அக்கரையில் ஓடிவந்தார்கள். எனக்குப் புரியவில்லை, சிஜியைப் பார்த்தேன். பயணிகளைக் கண்டால் புதுப்பேனா கொடுக்கும் படி இப்படிக் கேட்பார்களாம் அந்தச் சிறுவர்கள். அவர்களைப் பொறுத்தவரை வெளிநாட்டவர்களிடம் பேனா கேட்டுப் பெறுவது புதையல் கிடைத்தமாதிரிப் போலும். என் கையில் இந்திய ரெனோல்ட் பேனாதான் இருந்தது.

எனது படகுவீட்டுப் படுக்கை அறை
நான் போன இந்தக் கடற்கழியெங்கும் நிறையமீன்கள் கிடைப்பதாகச் சிஜி சொன்னார். விஷப் பாம்பு, முதலை போன்ற வில்லன்களும் இல்லையாம். பயணப்பாதையில் எதிர்ப்படும் திருப்பங்களிலெ தன் மூங்கிற்கழியை இலாவகமாகச் சுழற்றி வலித்துப் படகைத் திசைதிருப்பினார் ஓட்டி. எதிர்ப்படும் நீர்வழிபாதைகளில் கரையோரமாய் வளர்ந்து தன் தலை (கிளை)பரப்பிப் படகின் மேலாகத் தொடுகின்றன மாமரங்களின் கிளைகள். மாம்பழ சீசனில் ஓசி மாம்பழம் கிடைக்க ஒரே வழி இந்த வழி தான் என்றார் சிஜி.
அக்கரையில் தென்படும் வீடுகளில் ஆட்டுக்குட்டிகள் தென்பட்டன. எங்கே சிஜியைக் காணவில்லை என்று பார்த்தால் சாயங்காலப் பரிமாறல் செய்ய அடுக்களை போய்விட்டார். சில மணித்துளிகளில் வந்த சிஜி மேஜையில் ஏற்கனவே கொசுக்கள் சல்லாபித்துக் க கூடைக்குள் இருந்த கதலிப்பழங்களை ஒருபுறம் வைத்துவிட்டு சாப்பாட்டு மேஜையில் விரிப்பை அகற்றிப் புதிய விரிப்பைப் போட்டு அழகுபடுத்தினார்.மழையில் தேங்கிய வெள்ள நீர் நிறத்தில் கடும் மசாலா சாயாப் பானமும், பயம்பிலி என்ற பண்டமும் சாயங்காலச் சிற்றுண்டியாகச் சிபியின் கைவண்ணத்தில் கிடைத்தது. பயம்பிலி என்றால் என்ன என்று முடியைப் பிய்த்துக் கொள்ளாதீர்கள். வேறொன்றுமில்லை, நம்மூர் வாய்ப்பனின் மலையாளப் பதிப்புத்தான் அது. வாழைப்பழம் கலந்த அந்தப்பண்டம் நீட்டமான துண்டுகளாகசெய்யப்பட்டு மஞசள் வடிவில் பொரிக்கப்பட்டு இருந்தது,அவற்றை அழகான பரிமாறல் ஒழுங்கில் சாப்பாட்டுத் தட்டிலே வடிவமைத்திருந்தார். சுவையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்.
வாய்ப்பனின் நினைப்பு வந்து தொடர்ந்து எழுதமுடியாமல் தொந்தரவு பண்ணுகின்றது, பொறுங்கள் பக்கத்தில் இருக்கும் இந்திய உணவகம் சென்று வாய்ப்பனைத் தேடிப் பார்த்துவிட்டுத் தொடருகின்றேன்.




வயிறுமுட்டசாப்பிட்டவனைப் போல ஆடி அசைந்து மெதுவாகப் பயணப்படுகின்றது படகு வீடு. மெதுவான இப்பயணம் ஆங்காங்கு காணும் காட்சிகளை உள்வாங்கவும் வசதியாக இருக்கின்றது. கரைமருங்கில் அசோகா மரங்களும் கண்ணுக்குத் தப்பவில்லை. வாழைமரங்கள் கூட உள்ளேன் ஐயா என்கின்றன. கல் வீடுகளும், குடிசைகளுமாக மாறி மாறித் தென்பட்டது கடலுக்கும் வர்க்க ஏறத்தாழ்வு இருப்பதைக் காட்டியது.இந்த நீரோட்டம் நடுவே கொல்லம் 83KM சம்புக்குளம் 13 KM என்று தூரவழிகாட்டிகள் காட்டிநிற்கின்றன. 
ஒருபக்கக் கரையைப் பார்க்கின்றேன். அக்கரையில் கடலை மறித்து நெற்பாசனம் செய்யப்படுகின்றது. மறுபுறத்தே விரிந்த பரப்பில் இயற்கையாக அமைந்த ஆயிரம் தாமரை மொட்டுகளோடு தடாகப் பரப்பு.
கடலோரம் வாங்கிய காற்றும், படகு அலைச்சலும் இயல்பாகவே வயிற்றைக் கிளற்ப் பசியை வா என்று சொல்லும் வேளை அது. சிஜியின் கைவண்ணத்தில் மணம் குணம் நிறைந்த மீன்பொரியல் குண்டு குண்டாய் வெள்ளைச் சோறு, நறுக்கிய வெண்டைக்காய்த் துவையல், தக்காளிச்சாலட், என்று பெருவிருந்தே படைக்கப்படுகின்றது. வெள்ளை முத்துக்களாய் நம்மூர் அரிசியின் நான்கு மடங்கு பருமனில் குண்டு குண்டாய் அரிசிச்சோறு கோப்பையை நிறைத்திருந்தது. வகையான காய்கறிகளின் சேர்க்கையில் ரஜினி வாய்ஸ் கொடுத்தபோது இருந்த தி.மு.க, த.மா.க கூட்டணி போல அமர்க்களமாக இருந்தது. எனக்கும் பேச்சுக்கொடுத்துத் திறமையான சமையலையும் செய்து முடித்த சிஜியை வாயாரப் புகழ்ந்தேன் மீன் பொரியலைச் சுவைத்தவாறே.
மதிய உணவின் பின்னர் ஒருமணி நேர ஓய்வு. கிடைத்த அந்த நேரத்தில் கடலோடி நண்பர்கள் தரை விரிப்பை விரித்து மதியத்தூக்கம் கொள்கின்றார்கள். நானும் என் படுக்கை சென்றமர்ந்து "ஆச்சி பயணம் போகிறாள்" நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்கின்றேன். ஒரு மணி நேர ஓய்வு கழிகின்றது. இப்பொது மழையும் ஒதுங்கிக்கொண்டது. அரை வட்டமடித்தது போன்ற நீர்ப்பரப்பில் மீண்டும் பயணப்படுகின்றது படகுவீடு. 


குறுகலான சந்துக்குள்ளால் பயணப்பட்டுப் பின் ஒரு வேலிப் பொட்டுக்கு முன்னால் ஜீப் நின்றது. என் படகுவீட்டுக்குப் பொறுப்பான கடலோடி நண்பர்கள் எனக்காகக் காத்திருக்கின்றார்கள். கொட்டும் மழைச் சாரல் வழிந்தோடும் தம் முகத்தைப் புறங்கையால் துடைத்து எறிந்துகொண்டே வாயெல்லாம் பல்லாக வரவேற்கின்றார்கள், இவர்களில் ஒரு கிழவனார், ஒரு நடுத்தர வயதுக்காரர், ஒரு இளைஞன் அடக்கம். 
ஒருவாறு படகுத்துறையை வந்தடைந்தோம், இதற்கு ஐந்து நிமிட நேரமும் பிடித்திருக்காது. ஆலப்புழாவின் பிரசித்திபெற்ற அந்தத்துறையில் பரந்த கரையெங்கணும் படகு வீடுகள், போருக்குத் தயாராகக் காத்து அணிவகுத்து நிற்கும் வீரர்கள் போலக் கம்பீரமாக நிற்கின்றன. எல்லாப்படகுகளுமே மதியம் 12 மணிக்குத் தான் புறப்படுமாம். உங்களின் வசதிக்கேற்ப அரை நாள் அல்லது முழு நாள் வாடகைக்கு இவற்றை நீங்கள் ஒழுங்கு செய்யலாம். அரை நாள் வாடகைக்குக் கட்டணமும் பார்க்கும் இடங்களும் குறைவு. நான் ஒரு நாள் வாடகையாக இப்படகுவீட்டை ஒழுங்கு செய்திருந்தேன். அதாவது முதல் நாள் நண்பகல் 12 மணியிலிருந்து அடுத்த நாட் காலை 10 மணி வரை. இப்படகு வீடுகள் அழகான நேர்த்தியான கைவேலைப்பாடுகளுடன் உள்ளன. நடுத்தர வயதுக்காரர் எட்டிப் பாய்ந்து படகினுள் ஏறிவிட்டு என்னைக் கை தூக்கி உள்ளே அனுப்புகின்றார்.
நான் ஒப்பந்தம் செய்த படகு வீடு காதலர்களும் புதிதாகக் கல்யாணமாகித் தேனிலவு வருபவர்களும் விரும்பித் தேர்தெடுப்பதாம். படகு வீட்டு இளைஞன் இதைச் சரளமாக ஆங்கிலத்தில் சொல்லியவாறேப் படகின் அருமை பெருமைகளை அள்ளிவிட்டான், இங்கு சமையல் செய்பவரும் கூட இவன் தான். சுத்தமான ஒற்றைப் படுக்கையும், கழிப்பறையும் கொண்டதாக இருந்தது என் புகலிடம். ஹோர்ண் அடித்துச் சல்யூட் செய்தவாறே பக்கத்துப் படகுக்காரர்களும் இணையப் பயணம் ஆரம்பமாகின்றது. இளைஞர்கள் சைக்கிள்களில் சம பயணத்தில் இரட்டைச் சவாரி செய்வது போல இருக்கிறது. உற்சாகமும் மகிழ்ச்சியும் எனக்குள் பரவ, ஒரு குழந்தை போல எட்டிக் கடலைப் பார்க்கின்றேன். அரைகுறை ஆடை பூண்டு இருக்கும் காட்டு ராணிகள் போலக் கடற் தாவரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதக்கின்றன. கரையெங்கணும் தென்னை, விலாட் மா மரங்கள், வாழை, பூவரச மரங்கள் சாமரம் வீசுவதுபோல நிரையாக நிற்கின்றன. 
அட... கடந்து போன கடலை ஒட்டிய குட்டிச்சுவர்களைக் கூட அரசியல்வாதிகளின் சுவரொட்டிகள் நிரப்பியிருக்கின்றன. பாலத்துறை பொலிஸ் ஸ்டேசன் B டிவிஷன் தெரிகின்றது. கரைப் பாதையில் எழுந்து நிற்கும் மின்சாரத்தூண்கள் இந்தக் கடற்கழிப் பிரதேசத்திலும் மின்சாரம் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இந்தக் கடற்கழிப் பரப்பு நன்னீர் ஓடையாக உள்ளதாம். சந்தன நிற வேட்டிகளோடு தூரத்தே புள்ளிகளாகக் கேரளத்துச் சேட்டன்கள். கரையை ஒட்டிய வீட்டு முற்றங்களை சுங்க இலாகா அதிகாரிகள் போலச் சல்லடை போடுகின்றன அவர்களின் வளர்ப்புப் பிராணிகளான வாத்துகளும் கோழிகளும். கடற்கழியை ஒட்டிய கிராம வாழ்க்கையைக் கைபிடித்துக் கொண்டு காட்டும் சுற்றுலா வழிகாட்டி போலப் படகும் மெதுவாகத் தள்ளாடியவாறே அமைதியாகப் பயணிக்கின்றது.
ஆலப்புழாவிற்கு வந்த காரணம் நிறைவேறும் நாள் இன்று என்பதால் முந்தய நாட் தூக்கம் சற்றுக் குறைச்சலாகவும், மனசுக்குள் சுற்றுலா ஆர்வம் அதிகப்படியாகவும் ஏறி உட்கார்ந்துகொண்டது. இப்படியான இரண்டும் கெட்டான் நிலையில் தூக்கம் என்ன தூக்கம் என்று நினைத்துக்கொண்டே வாரிச்சுருட்டி எழுந்துகொண்டேன். ஜன்னலால் எட்டிப்பார்த்த போது வருணபகவான் தொடர்ந்தும் ஓவர் டைமில் தூறிக்கொண்டே இருந்தார். கதகதப்பான அந்த சூழ்நிலை யாழ்ப்பாண மார்கழிக் குளிரை நினைவுபடுத்தியது. இருந்தும், சோம்பலை மூட்டை கட்டி வைத்துவிட்டுக் காலைக் கடன்களை முடித்து நன்றாகக் குளியல் ஒன்று எடுத்தேன்.
என் கால்கள் ஈரமண் வீதியில் பதிக்க, கண்களோ வீதியோரக்கடைகளை நோட்டம் விட்டவாறே உணவகத்தைத் தேடின. 








நான் தியேட்டரை அடைந்தபோது மாலை 6.10, படமோ 6.20 இற்கே ஆரம்பமாகிவிட்டிருந்தது. இருக்கைகள், இதுவரை நான் போன தமிழ் சினிமாத் தியேட்டர்களின் இருக்கைகளை விட நல்ல தரத்தில் இருந்தன. நான் பார்த்த படம், பார்க்கவேண்டும் என்று பிரியப்பட்ட "ரச தந்திரம்".








