Social Icons

Pages

Sunday, June 18, 2006

திருவனந்தபுரமே! போய் வருகிறேன்.

மே 27, மதியம் 12.00 மணி (இந்திய நேரம்)திருவனந்தபுரத்திலிருந்து ஆலப்புழா, கொச்சின் நோக்கிய உலாத்தலைத் தொடர்வதற்கு முன் திருவந்தபுரத்தில் எஞ்சிய, பார்த்த சில விடயங்களைத் தருகின்றேன்.
பொதுவாகவே எந்த ஒரு இடத்திற்கும் சென்றால் நான் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று விரும்பும் அம்சங்களில் ஒன்று இந்த நூதனசாலைகள் (Museum). கலையும், மொழியும் ஒரு இனத்தின் இரண்டு கண்கள் என்பார்கள். மொழியின் சான்றாக நூலகமும், கலை மற்றும் பண்பாட்டின் சான்றாக நூதனசாலையும் ஒருகே அமைந்திருக்கின்றது. எனவேதான் ஒரு பிரதேசத்தின் வரலாற்று விழுமியங்களைக் கண்டு தரிசிக்க, நம் பயண ஏற்பாட்டில் நூதனசாலைக்கும் கட்டாயம் நாம் நேரம் ஒதுக்கவேண்டும்.

அந்தவகையில் திருவனந்தபுரத்தில் அடுத்து நான் முற்றுகையிட்டது கேரள நூதனசாலை. வழக்கமாக நான் முன் சென்ற இடங்களின் நூதனசாலைகள் வெள்ளையனிடம் அடி வாங்கிய சுதேசி போல நொந்து நூலானது போல் இருந்திருக்கின்றன. ஆனால் திருவனந்தபுர நகரமத்தியிலேயே விசாலமான காணிக்குள் இந்த நூதனசாலை இருக்கின்றது. பண்டைய சித்திரக்கூடம், நூதனசாலை பணிக்கர் காட்சிச்சாலை, சிறீ சித்ரா மாடம் என்று இந்த நிலப்பரப்பில் பங்கு போட்டவாறே இருக்கும் இடத்தில், ரூ 5 கட்டணத்திலேயே முன்சொன்ன அனத்துக்குமான பொதுவான நுளைவுச்சீட்டு இருக்கின்றது. அதோடு ஒரு இயற்கைப்பூங்காவும் இருக்கின்றது. செவ்வாய் முதல் ஞாயிறு வரை, காலை 10 மணி முதல் மாலை 4.45 வரை திறந்திருக்கும்.

இந்த நிலப்பரப்பில் நடுநாயகமாக இருக்கும், 1880 இல் கட்டப்பட்ட Napier Museum அழகு கொஞ்சும் கட்டிட அமைப்போடு இருக்கின்றது. சிறீ சித்ரா கலைக்கூடத்தில் தஞ்சாவூர், முகலாய, ராஜபுத்திரர்களின் சிறந்த சித்திர வேலைப்பாடுகள் மற்றும் ரவி வர்மா போன்றோரின் ஓவியச் செல்வங்களும் இருக்கின்றன. தவிர தாவிரவியற்பூங்காவும் விஞ்ஞானத் தொழில்நுட்பக்காட்சிச் சாலையும் மாணவர்களை இலக்கு வைத்து அமைந்துள்ளன. இங்கு பாம்பு, பல்லி இத்தியாதிகளின் கண்காட்சியைப் பார்க்கலாம். பணியாளர்கள் மிகுந்த பண்புடன் நடந்து கொள்கின்றார்கள். சில காட்சியறைகளுக்குள் நுளைய வேண்டுமென்றால் பாதணியுடன் செல்லமுடியாது. வாசலில் செருப்பைக் கழற்றிப் பாதுகாப்பிடத்தில் வைத்துப் போகுமாறு கட்டளையிடுகிறாள் ஒரு அனியத்தி (தங்கச்சிங்கோ). எனக்கு முன்னே வந்த குடும்பத்தின் தலைவர் "நாங்க தமிழ்நாட்டுக்காரங்கம்மா! புரியும்படி சொல்லு" என்று சொல்லவும், அதுவரை மலையாளத்தில் விளித்த அவள் மலையாளத்தில் சிரித்தவாறே தமிழில் கட்டளையிடுகின்றாள், மீராஜாஸ்மின் தமிழ் பேசியதுபோலிருக்கிறது.
இவ்வளவு பரந்த நிலப்பரப்பில் அழகான ஒரு அமைவிடமாக இந்த நூதனசாலை இருந்தும் என்ன பயன்? தமிழ்நாடு, ஆந்திரா போன்ற இடங்களில் இருக்கும் நூதனசாலைகள் ஏற்படுத்திய பிரமிப்பை இது ஏற்படுத்தவில்லை. ஒப்பீட்டளவில் மிகச்சொற்பமான கலைப்பொருட்களே இருக்கின்றன. கேரளா முழுவதுமே ஒரு அரியகலைச்சொத்து என்று நினைத்தோ என்னவோ, சேகரித்துக் காட்சிக்கு வைத்திருக்கும் பொருட்கள் அவ்வளவாக இல்லை. வெறும் ஜூஜூபி. சேட்டன்கள் இதற்கு ஏதாவது செய்யணும்.
கேரள சட்டமன்றத்தைப் பார்க்கின்றேன். அழகே உருவானதாக எந்தவித உச்ச பாதுகாப்புக் கெடுபிடிகளும் அற்று ஒரு சாதாரண கம்யூனிஸ்ட் தொண்டரைப் போல எளிமையாக நிற்கின்றது. கேரளா தலைமைச்செயலகத்தை எம் கார் கடக்கும் போது அங்கும் அதே நிலை.அதனாலோ என்னவோ மக்கள் கூட்டமும் அதிகப்படியாக அங்கு நிறைந்திருக்கின்றது.



ஒருவாறாகத் திருவனந்தபுர வலம் நிறைவுற்ற நிலையில் நான் தங்கிருந்த Highland ஹோட்டலுக்குப் போய் உணவருந்திவிட்டு என் அடுத்த பயணத்தை ஆரம்பிக்கலாம் என்றெண்ணுகின்றேன். இது ஒரு சைவ உணவகத்தோடு கூடிய நல்ல உயர்தர ஹோட்டல். இந்த ஹோட்டலுக்கு நேர் எதிரே இவர்களே அசைவ உணவகத்துடன் கூடிய தங்குமிடத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் சைவ உணவகத்துடன் கூடிய தங்குமிடம் இப்போதுதான் புதிதாகக் கட்டப்பட்ட தரமானதாக இருக்கின்றது. என் அறை வாடகை நாளொன்றுக்கு ரூ 1050 வரிகள் தனி (24 மணி நேர வசதி உண்டு). இணையம் மூலமாக இந்த ஹோட்டல் பற்றிய விபரம் பெற்று முன்னதாகவே எனக்கான அறையைப் பதிந்து வைத்திருந்தேன். ஏசி வசதியும்,சமாளிக்கக் கூடிய தரத்தில் குளியலறையும் இருக்கின்றன.

வாசலில் வீற்றிருக்கும் அந்த ஹோட்டல் முகாமையாளர்
"சாரே! ஆகாரம் கழிச்சோ" என்று அன்புடன் கேட்கின்றார். இந்த இடத்தில் எனது கேரள விஜயத்தில் எப்படியான மொழியாடலை நான் மேற்கொண்டேன் என்று சொல்லிவிடுகின்றேன்.
நான் கேரளத்துக்கான பயணத்தின் போது எடுத்த விசித்திரமான முடிவுகளில் ஒன்று இது. நான் சம்பாஷிக்கும் மலையாளிகளை அவர்கள் போக்கிலேயே மலையாளத்தில் பேசவிட்டு, என்னால் அதைப் புரிந்துகொள்ளமுடிகிறதா என்று பார்ப்பது. முதல் நாள் ஹோட்டலுக்கு நான் வந்தபோதே அதன் முகாமையாளரிடம் நான் இலங்கைத் தமிழன் என்றும் எமது தமிழுக்கும் மலையாளத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றும் சொல்லிவைத்தேன். அதையே நான் கேரளாவில் பயணித்த இடங்களில் சந்தித்த கார்ச்சாரதிமார், படகு வீட்டுக்காரர்கள், ஹோட்டல்கார்களுக்கும் சொன்னேன். அவர்கள் முழுமையாக மலையாளத்தில் சம்சாரிக்கும் போது, எனக்குத் தெரிந்த மலையாள பாஷையுடன் ஆங்கிலத்தையும் கலந்துகட்டி மலையாங்கிலத்தில் உரையாடுவேன். நீங்கள் நம்புகிறீர்களோ என்னவோ, இந்தக் கேரளவிஜயத்தில் மொழி ஊடாடல் எனக்கு ஒரு பிரச்சனையாக இருக்கவேயில்லை. இதற்காக நான் கடந்த 10 வருடங்களாகப் பார்த்து வரும் பாசில், சத்தியன் அந்திக்காடு, சிபி.மலயில் ஆகிய இயக்குனர் படங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன்.

கொஞ்சம் யாழ்ப்பாணத்துத் தமிழைக் குழைவாகப் பேசினால் மலையாளத்தாரிடம் சமாளிக்கலாம் போலிருக்கிறது.மலையாள எழுத்துவடிவையும் ஊன்றிக் கவனித்தால் சில சொற்பதங்கள் தமிழின் வரிவடிவைக்கொண்டிருக்கின்றன. தமிழில் முறித்து எழுதும் எழுத்துக்கள் மலையாளத்தில் வளைத்தும் நெளித்தும் எழுதப்பட்டிருக்கின்றன.
எனது ஹோட்டல் போய் உடை மாற்றிவிட்டு முன்னே அமைந்துள்ள அசைவ உணவகம் சென்று கடலுணவுக் கலப்பு அரிசிச் சோறுடன், கேரளாவிற்கே தனித்துவமான கறிமீன் சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கின்றேன். நல்ல மலிவான விலையில் சுவையான சாப்பாடு.

Hotel highland இடமிருந்து விடைபெற்று காரில் அமர்கின்றேன். கண்டே இராத காதலியைக் காணும் ஆவலில் பறக்கிறது என் மனம் ஆலப்புழாவை நோக்கி.

வீண்டும் காணாம்........


Thursday, June 08, 2006

கோவளக் கடலோரக் கவிதைகள்

மே 27, காலை 11.00 மணி (இந்திய நேரம்)

என் பயண அட்டவணையில் இருந்த அடுத்த சுற்றுலா கோவளம் கடற்கரை நோக்கியதாக அமைந்தது.

கோவளம் என்றால் "தென்னை மரங்கள் அடர்ந்த சிறிய சோலை" என்று பொருள்படும். அதற்கேற்றாற் போல, வழமையான கடற்கரைகளிலிருந்து மாறுபட்டு விளங்குகின்றது இந்தக்கோவளம். திருவனந்த புரத்திலிருந்து 16 கீ.மீ தொலைவில் உள்ள இந்தக் கடற்கரைக்கிராமம் 1930 களில் இருந்தே சுற்றுலாப்பயணிகளின் பார்வையில் ஈர்க்கப்பட்டு இன்று உலகில் பேசப்படும் சிறந்த கடற்கரைகளில் ஒன்றாக விளங்குகின்றது. (ஆதாரம்: கேரளா சுற்றுலாத்துறை)

அழகான , சுத்தமான கடற்கரையாகவும், கடல் அலையின் வேகமும் குறைவானதாகவும், நல்ல மன அமைதியைத்தருவதாகவும் இது விளங்குகின்றது. அதோடு கடற்கரையை அண்டி நல்ல உணவகங்கள், உயர்தரத் தங்குமிடங்கள், கலைப்பொருட்கள் வாங்குவதற்கான களஞ்சியமாகவும் இருக்கின்றது. உடன் பிடிக்கப்பட்ட கடல் உணவுகளும் கிடைக்கின்றன. இது ஒரு இளைப்பாறுதலுக்கான கடற்கரையாக மட்டுமன்றி, மீனவரின் வாழ்வியலை அருகே இருந்து பார்க்கும் வாய்ப்புக்கும் வசதி செய்கின்றது. நீங்கள் கேரளா போய்க் கோவளம் பார்க்காவிட்டால் எனக்குக் கெட்ட கோபம் வரும், அவ்வளவு அபிமானத்தை ஏற்படுத்திவிட்டது இது.

நான் போன நேரம் மழைக்காலம் சீக்கிரமாகவே வந்துவிட்டது. வருடாந்தம் யூன் முதல் செப்டெம்பர் வரை மொன்சூன் பருவகாலம் ஆரம்பமாகி மழையும் பெய்ய ஆரம்பித்துவிடும்.
தண்ணிர்ப்பிரச்சனையில் அவதிப்படும் ஹோட்டல் குளியறை போற் காலையில் மெதுவாகப் பொழிந்த வானம், நான் கோவளம் கடற்கரையை அண்மித்ததும், காற்றுப் பெருங்குரலெடுக்கப் பலமாகப் பொழியத்தொடங்கியது. செயற்கைத்தனமற்ற சூழலில் தென்னை மரங்கள் புடைசூழ இருக்கும் இந்த கடற்கரையைக் கண்டபோது , அடைமழை எனக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை.

காரை விட்டு இறங்கிக் கடற்கரை மணலில் தடம் பதிக்கின்றேன். கால்கள் ஈரமணலுக்குள் புதையப் புதைய என் கடற்கரை தாகம் சற்றும் குறையாமல் அலைபடும் கரைவரை விறுவிறுவென நடக்கின்றேன் நான்.பெரும் மழையில் ஓடியோடித் தம் கடற்கலன்களை கிடுகால் வேய்ந்த மறைப்பு விரிப்பாற் பாதுகாக்குகிறார்கள் மீனவ நண்பர்கள். ஜீன்ஸ் கால்களை மேல் உயர்த்திவிட்டுக் கடல்நீர் முழங்காலுக்கும் சற்றுக் குறைவான வேகத்தில் தொடும் அளவில் இன்னும் இறங்கி நடக்கின்றேன். வெள்ளக்குருமணற் சதுப்பில் என் கால்கள் இன்னும் வேகமாகப் புதைந்து இறுகி நிற்கவும், அதை விறுக்கென்று விடுவித்து இன்னும் நகர்கின்றேன். கடல் அலைகள் அடிக்கடி என் கால்களில் முத்தமிட்டு ஹலோ சொல்கின்றன.


கடல்நீர் சூழ்ந்த பாறைப்பரப்பில் ஏறிக் கரையைப் பார்ர்க்கின்றேன். கரையெங்கும் கடற்கரை விருந்தாளிகளுக்கான உயர்தரக் கடல் உணவு விருந்தகங்கள். இதுவே வெயில் நாளாக இருந்தால் கடற்கரையில் அரை நாள் டோரா போட்டுவிடுவேன். இந்தப் பெருமழைச்சாரல் என் உடம்பிற்கும் கெடுதலை உண்டாக்கிவிடுமே, இன்னும் கேரளாவில் பல சுற்றுலாவைக் களிக்கவேண்டுமே என்ற எச்சரிக்கை உணர்வில் வேண்டாவெறுப்போடு கோவளத்தை விட்டு நகர்கின்றேன் நான்.

கோவளம் கடற்கரையில் ஜீன்ஸ் போட்ட ஒற்றைக்கால் கொக்கு ஒன்று (அட.... அது நான்:-))
கேரளப்பண்பாட்டில் அமைந்த, கிடுகால் வேய்ந்த கடற்கரை உணவகம் ஒன்று.
படகை மறைக்கின்றது கிடுகுப்போர்வை
கயிற்றைக் காக்கும் கொட்டில்கள்
கடற்கரை நுளைவு

கரையொதுங்கும் காதலர்கள்.

வானத்தைப் பாருங்கள், கம்பிபோல் வளையங்கள்(கிடுகுக்) குடைக்குள் மழை



(பெரிதாகப் பார்க்கப் படங்களை அழுத்தவும்)

வரும்........

Monday, June 05, 2006

கேரளத்தலைநகர் இன்னொரு சுற்று!

மே 27, காலை 9.30 மணி (இந்திய நேரம்)

திருவனந்தபுர வலத்தில், அடுத்து சிறப்பாகப் புகழப்பெறும் கோயில்களில் ஒன்றான ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயத்தை வெளியே நின்று பார்த்துத் தரிசனை செய்கின்றேன்.
அந்த இடத்தை விட்டு நகர்ந்து, இன்னும் சில சந்து போல (குச்சொழுங்கையிலும் கொஞ்சம் பெரிது), உள்ள பாதைகளுக்குள்ளால் பயணப்படுகின்றது நம் கார். காலையில் இருந்தே வானம் அடிக்கடி சிணுங்கிச் சிணுங்கி ஒண்ணுக்குப் போனது, பெரிய, பெரிய துளிகளாய் மழைத் துப்பல்கள் கார்க்கண்ணாடியில் விழுந்து தெறித்து ஒலியையும் எழுப்புகின்றது. மழைச்சாரல் எழுப்பும் ஒலி, ஒரு தகரக்கொட்டகையில் மணலை வாரியிறைப்பதுபோல இருக்கிறது.
அடுத்ததாக நான் சென்ற சுற்றுலாப் பகுதி, வேலி சுற்றுலாக் கிராமம் (Veli Tourist village). வேலி என்ற கடல் நீரேரியும் , அராபியன் கடலும் சூழ அமைந்திருக்கும் இந்த சுற்றுலாத்தலம் திருவனந்தபுரம் நகரத்திலிருந்து 8 கீ.மீ தூரத்தில் உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை பார்வையாளர் நேரம்.உள்ளே மலர்ப்பூங்காவும், சிறுவருக்கான களியாட்ட உபகரணங்களும், கொண்டு ஒரு நீர்ப் படுக்கையின் ஓரத்தில் அமைந்திருக்கின்றது. அதோடு அந்த நீர்நிலையில் குறுகிய தூரப்படகுச் சவாரி செய்யவும் வசதிகள் உண்டு. யாழ்ப்பாணத்தில் பார்த்த பெரிய பூவைப் பூக்கும், செவ்வரத்தம் மரங்கள், இன்னும் சில மரங்கள், தென்பட்டன.

மூன்று முடிச்சு படத்தில் வரும் " வசந்தகால நதிகளிலே", மற்றும் வெள்ளை ரோஜாவில் வரும் " சோலைப்பூவில் மாலைத்தென்றல்" போன்ற பாடற்காட்சிகளை அந்தப் படகுச்சவாரிச் சூழ்நிலை ஞாபகப்படுத்தியது.
அழகிய தாமரைக்குளத்திற்குள் பிளாஸ்டிக் போத்தல்.


திருவனந்தபுரத்துக்கு வந்ததும் அடுத்ததாக என் வழக்கமான வேலையையும் தொடங்கிவிட்டேன். அது வேறொன்றுமில்லை , நான் தேடிக்கொண்டிருக்கும் சில மலையாளப் CD படங்களை வாங்கும் வேலை தான், கார்ச்சாரதியை மலையாளப் படங்கள் அதிகம் விற்கும் பகுதிக்குக் கொண்டுபோகுமாறு பணித்தேன். அவரும் பீமபள்ளி என்ற இடத்துக்குக் கொண்டுபோனார். இதுவும் அவ்வூரில் மிகவும் புகழ்பெற்ற ஒரு தர்கா ஆகும்.
பீமபள்ளியில் பிரபலமான பள்ளிவாசல் இருக்கின்றது. அந்தப் பள்ளிவாசலை அண்டிய கடைத்தெருக்கள் வெறும் திரைப்படப் பாடல், படங்களின் CD கடைகளை இருபுறமும் கொண்டதாக இருக்கின்றது. சென்னையின் பர்மா பஜார் போல இந்தப் பகுதி திரைப்பட CD களுக்கு வெகு பிரசித்தமானது. ஆனால் என்ன ? நான் தேடிக்கொண்டிருக்கும் மம்முட்டியின்"மதிலுகள்", அடூர் கோபாலகிருஷ்ணின் "நிழல் கூத்து", போன்ற நல்ல படங்களைப் பற்றி ஒவ்வொரு கடையிலும் விசாரித்தபோது என்னை ஒரு டைனோசர் போன்ற ஜந்து போலப் பார்த்துவிட்டு அதெல்லாம் இல்லை என்றார்கள்.

இந்தக் கடைகளும் சரவெடிகளுடன் விஜய் "சிவகாசி"க்காகவும், மொட்டைத்தலை சூர்யா "கஜினி"க்காகவும் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மலையாள தேசத்தில் தமிழ்ப்பட CDக்கள் விரவிக்கிடக்கின்றன. கண்ணில் பட்ட மோகன் லாலின் " தன்மத்ரா"வையும், மம்முட்டியின் "ஒரு வடக்கன் வீரக்கதா"வையும் (எம்.டி.வாசுதேவன் நாயரின் திரைக்கதை, 1989 சிறந்த திரைக்கதைக்கான தேசியவிருது பெற்றது) வாங்கிவிட்டு நகர்கின்றேன்.ஒரு CD இன் விலை ரூ 20 மட்டுமே. தயாரிப்பாளர் சார்பில் என் வயிறெரிந்தது. வரும் வழியெங்கும் கார்ச்சாரதி, பாடகர் யேசுதாஸின் புகழைப் பாடிகொண்டேவந்தார். கேரளத்துக்காரர்கள் ஜேசுதாஸிற்குக் கோயில் கட்டாததுதான் பாக்கி. இந்த மது பாலகிருஷ்ணன் காலத்திலும், ஒவ்வொரு மலையாளப் படத்திலும் ஜேசுதாஸ் பாடல் ஒன்றாவாது வரவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். முன்பு தமிழ்ப்படவிநியோகஸ்தர்கள் ஒரு சிலுக்கு டான்ஸ் போட்டால்தான் பெட்டியை வாங்குவேன் என்று தயாரிப்பாளரை மிரட்டுவதுபோல இது ஒரு வர்த்தக சமாச்சாரமாக இருக்கிறது.

Honda, Toyota, Nissan என்று நவீனகார்கள் வந்து மாருதிக்கார்களின் தனிக்காட்டுராஜாத்தனம் ஒதுக்கப்பட்ட இந்தியாவாக வந்துவிட்டாலும், திருவனந்தபுரத்தில் இன்னும் வெள்ளைவெளேர் அம்பாஸிடர் கார்கள் தான் அதிகம் தென்படுகின்றன.

தெருக்களில் தென்படும் அறிவிப்புப் பலகைகள் மலையாளம், தமிழ் தாங்கியவாறும் இருக்கின்றன. ஆனால் அங்கு குறிப்பிடப்பட்ட சில தமிழ்ப்பெயர்கள் ஈழத்தமிழர் மட்டுமே அதிகம் புழக்கத்தில் வைத்திருக்கும் சொற்களாக இருக்கின்றன. உதாரணமாக Toilet ஐ கழிப்பறை என்றே தமிழ் நாட்டில் அதிகம் எழுத்துத்தமிழில் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் கேரளாவில் நான் அவதானித்த இந்தக் கழிப்பறைகளின் பெயர்கள் தமிழில் "கக்கூஸ்" என்றே எழுதப்பட்டிருக்கின்றன.

"கக்கூஸ்" என்ற சொல் டச்சுக்காரர்களால் ஈழத்தமிழில் புகுத்தப்பட்டு ஒரு திசைச்சொல்லாக் த் தமிழ் இலக்கணத்தில் புகுந்துள்ளது. இதே சொல் கேரளத்திலும் பயன்படுவது, டச்சுக்காரரின் மொழி ஈழத்தமிழிலும் மலையாளத்திலும் சமகாலத்தில் கலந்திருப்பது தெரிகின்றது. கிராம்பு, அலுமாரி, சாவி, பாதிரி போன்ற போர்த்துக்கீசச்சொற்களே தமிழ் நாடு மொழிவழக்கில் விரவியுள்ளன. டச்சு மொழியின் ஆதிக்கம் தமிழ்நாட்டுத் தமிழைப் பொறுத்தவரை அரிதே என்று கொள்ளவேண்டியிருக்கிறது.
ஈழத்தமிழ் (குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழ்) மற்றும் மலையாளத் தமிழ் குறித்த ஒப்பீடை இன்னொருபதிவில் தருக்கின்றேன். இதற்காக சில இலக்கண நூல்களையும் வாங்கிருக்கிறேன். நிறைய வாசிக்கவேண்டும்.

நகரப்புறத் தெருக்களிலும் கூட பழுப்புவெள்ளை, அல்லது காவி நிறவேட்டிகளை அணிந்த இளைஞர்களையே அதிகம் காணமுடிகின்றது. இவர்கள், யாராவதுஜீன்ஸ் போட்ட பையன்களைக் கண்டால், "என்னய்யா! சுத்த நாகரீகம் தெரியாதபயலாக இருப்பாய் போலிருக்கே என்று கேட்டாலும் கேட்பார்கள். இந்த வேட்டி கட்டிய சேட்டன்கள் தம் வேட்டியை இடுப்பில் தரித்து, நடக்கும் போது வேட்டி நுனியைக் கையால் வரிந்துகொண்டு வீதியில் போகும் அழகோ அழகு.


தொடங்கும்......

Friday, June 02, 2006

திருவனந்தபுரம் ஒரு ஓரப்பார்வை


மே 27, காலை 9 மணி (இந்திய நேரம்)


நான் கேரளாவிற்குப் பயணம் செய்ய முன்னர் செய்த ஆயத்தங்களில் ஒன்று, கேரள சுற்றுலாத்துறை சம்பந்தமான தகவற் தளங்களுக்குச் சென்று எனது பயண நேர அட்டவணைக்கேற்றாற் போலத் தகுந்த இடங்களைத் தேர்வு செய்து, அவற்றில் மிக முக்கியமானவற்றைக் குறித்து வைத்ததோடு , அவற்றைப் பற்றிய உபகுறிப்புக்களையும் படித்துத் தெரிந்துகொண்டேன். இப்படியான முன் ஆயத்தங்கள் செய்யும் போது திட்டமிட்டு நம் சுற்றுலா நேரத்தைச் செலவழிக்கமுடியும் என்பதோடு, ஒரு மேற்கு நாட்டவருக்கு உவப்பளிக்கக்கூடிய எல்லாச் சுற்றுலா அம்சங்களும் கீழைத்தேயவரான நமக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது, அப்படியான சந்தர்ப்பத்தில் நம் பொருத்தமான தேர்வும் கைகொடுக்கும். இந்தத் திட்டமிடல் என் குறுகிய கேரளப் பயணத்திற்கு நிரம்பவே கைகொடுத்தது.

முன்னர் திருவங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராகவும், பின்னர் தற்போது கேரளா மாநிலத்தின் தலைநகராகவும் விளங்கும் திருவனந்தபுரம் பற்றிய சிறு இடவியற்குறிப்பை முதலில் பார்ப்போம்.
(ஆதாரம்: கேரளா சுற்றுலாத்துறை)
பரப்பளவு : 2,192 சதுர கீ.மீ
மக்கட்தொகை: 29,46,650 பேர்
பருவநிலை (சராசரி): 36.2 பாகை செல்சியஸ் (அதிகபட்சம்)
19.9 பாகை செல்சியஸ் ( குறைந்த பட்சம்)
மழைவீழ்ச்சி (சராசரி): 107 செ.மீ (மே மாதம் - நவம்பர் வரை)
சுற்றுலாவிற்கு உகந்த காலம் : செப்டெம்பர் மாதத்திலிருந்து மே மாதம் வரை

மணிக்கு 100 ரூபா என்ற பேரத்தில் TATA Indica (A/C) காரில் தான் என் பயணம் நடந்தது. சாரதிக்கு நான் செல்லவேண்டிய முக்கியமான இடத்தைப் பற்றிய விளக்கத்தை முதலில் சொல்லிவைத்தேன். பின்னர் அவரிடம் எந்த இடத்துக்கு முதலில் போவது என்பதை வழித்தடத்தை வைத்துத் தீர்மானிக்கும் படி சொன்னேன். இதனால் ஒரு இடத்திலிருந்து மீண்டும் பழைய இடத்துக்கு வரவேண்டிய அவசியம்
இருக்காதல்லவா?

காரின் முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டு திருவனந்தபுரத்துக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே வருகின்றேன். வழிநெடுக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் -CPI (M) நடந்துமுடிந்த தேர்தல் மற்றும் வாழ்த்து விளம்பரங்கள் ஒட்டப்பட்ட சுவர்கள் தான் கண்ணில்படுகின்றன. எனோ தெரியவில்லை, மாபெரும் தேசியக்கட்சிகளான காங்கிரஸ், மற்றும் பாரதீய ஜனதாவின் தேர்தல் களோபரங்கள் மருந்துக்கும் கண்ணில் தென்படவில்லை. கேரளாவில் கம்யூனிஸ்டுக்கள் எவ்வளவு ஆழமாக வேர்விட்டிருக்கிறர்கள் என்பதை அவர்களின் பெரும்பான்மையான பிரச்சார ஆக்கிரமிப்பைப் பார்ப்பதன் மூலம் உண்டர்ந்துகொள்கின்றேன். இன்னும் கொடி, மற்றும் பதாதைகள் எங்கும் அவர்களின் பிரச்சாரம் தான் கண்ணை நிறைக்கின்றது.

தற்போது இடதுசாரி கம்யூனிஸ்டுக்களின் அரசாங்கம், வீ.எஸ்.அச்சுதானந்தனை முதல்வராகக் கொண்டு செயற்படுகின்றது.

இந்தியாவின் மற்றைய மாநிலத்தலைநகர்கள் போல் அல்லாது எளிமையின் சிகரமாகக் கேரளத்தலைநகர் காட்சியளிக்கின்றது. பாரிய கட்டிடங்கள் ஒரு சிலவற்றைக் கொண்டு, மிகுதி நிலப்பரப்பைத் தென்னை, கமுகு போன்ற மரங்கள் வியாபித்த சோலையாகக் காட்சியளிக்கின்றது இந்நகர். பெரும்பாலும் பழைய கட்டிடங்கள் மஞ்சள் சாயம் தோய்ந்து காணப்படுகின்றன. வீதிப்போக்குவரத்திலும் ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்பட்ட வாகனங்களைக் கொண்டிருக்கின்றன.

பில் கேட்ஸ் (Microsoft), லாரி எலிஸன் (Oracle) போன்ற அமெரிக்க வியாபாரிகள் பெங்களூர், தமிழ்நாடு, ஆந்திரா என்று தம் பல்தேசியப் பலசரக்குக்கடைகளை நிறுவிக் கடைவிரித்திருக்க, "இந்த வெளையாட்டுக்கெல்லாம் நான் வரலேப்பா" என்று கேரளம் ஒதுங்கியிருப்பது போற் தெரிகின்றது.

அரசியற்கட்சிகளின் சுவரொட்டிக்குத் தாமும் சளைத்தவை இல்லை என்பது போல் மாலிவூட் எனப்படும் மலையாள சினிமாவின் சுவரொட்டிகளும் மதில்களின் நிறத்தை மறைத்து எங்கும் வியாபித்திருக்கின்றன. "மம்முகோயாவின் (மம்முட்டி) பல்ராம் VS தாராதாஸ்", திலீப்பின் "பச்சக்குதிர", சுரேஸ்கோபியின் சிந்தாமாணி கொல கேஸ்", மோகன்லாலின் புதுவரவு " வடக்கும்நாதன்" (இதை பெங்களூர் PVR Cinema இல் நேற்றுப் பார்த்தேன்), மற்றும் 50 நாளுக்கு மேல் ஒடிக்கொண்டிருக்கும் "ரஸ தந்திரம்" என்று வண்ண வண்ணச் சுவரொட்டிகளாய். இதில் பல்ராம் VS தாராதாஸ் I.V சசி இயக்கத்தில் இந்தியாவிலேயே முதன் முறையாக இருவேறு திரைப்படங்களின் கதாபாத்திரத்தை இணைத்து உருவாகப்பட்டதாம்.மோகன் லால், மீரா ஜஸ்மினின்
"ரஸ தந்திரம்" என்ற அருமையான படத்தை ஆலப்புழாவில் பார்த்திருந்தேன். ஆலப்புழாப் பயணப்பதிவில் முழுமையான விமர்சனக்குறிப்பைத் தருகின்றேன்.

ஆனாலும் கோடம்பாக்கத்துக்காரர்கள் கேரளாவையும் விடவில்லைப் போலிருக்கிறது. நீச்சலுடையில் சோனியா அகர்வால் "திருட்டுப் பயலே" இற்காகப் போச் கொடுத்துக்கொண்டிருந்தார். தனுஷும் தன் பங்கிற்கு துப்பாக்கியோடு "புதுப்பேட்டை" சுவரொட்டிகளில், ஆனால் இவை மலையாள எழுத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.
இப்போது புரிகிறது , ஏன் சமீகாலமாகவே மலையாள சினிமாக்காரர்கள் தமிழர்களைத் தம் படங்களில் சீண்டுகின்றார்கள் என்று.

இன்னும் பல திருவனந்தபுரத்துக்காட்சிகள் வழியெங்கும் விரிகின்றன.

ஞான் போவுன்னு, திருச்சு வரும்.....

Thursday, June 01, 2006

சிறீ பத்மநாபசுவாமி ஆலயம் - திருவனந்தபுரம்


மே 27, காலை 8.00 மணி (இந்திய நேரம்)

நான் தங்கியிருந்த ஹோட்டல் முகாமையாளரிடம் ஒரு நாட் சுற்றுலாவிற்காக ஒரு Taxi ஐ ஒழுங்கு செய்தேன். திருவனந்தபுரத்தில் என்னுடைய முதல் சுற்றுலாவை இறையளுளோடு ஆரம்பிக்கலாம் என்றெண்ணி முதலில் நான் தெரிவு செய்தது பத்மநாபன் ஆலயம்.

கேரளாவை கடவுளின் சுவீகார தேசம் (God's own country) என்று அழைப்பது போலத் திருவனந்தபுரத்தைக் கோயில்களின் நகரம் (City of temples) என்று என்று அழைப்பார்கள். என்னுடைய சுற்றுலாவின் போது நான் பார்த்தவை, அனுபவித்தவைகள் இவ் அடையாளப்பெயர்கள் நிரம்பவும் பொருந்தமானவை என்று மெய்ப்பித்தன.

சரி, இந்த சிறீ பத்மநாபசுவாமி ஆலயம் பற்றிய வரலாற்றுக்குறிப்பை முதலில் பார்ப்போம். விஷ்ணுவின் ஆலயமான இது அவரின் 108 திருப்பதிகளில் ஒன்றாகவும், விஷ்ணு அனந்த சயன நிலையில் இங்கே வீற்றிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. திருவனந்தபுரம் என்ற பெயர்க்காரணம் கூட "அனந்தன்" அதாவது மகாவிஷ்ணுவின் பெயர் தழுவியதாக தழுவியதாக அமைகின்றது.

பல நூற்றாண்டுகாலமாகப் பேணிவளர்க்கப்பட்ட இவ்வாலயம் மார்த்தாண்டவர்மா மன்னன் காலத்தில் இன்னும் சிறப்பாகப் போற்றப்பட்டது. திருவாங்கூர் மகராஜாவால் இவ்வாலயம் 1733 இல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, தன்னுடைய அரசு ஆண்டவன் பத்மாநாபனின் அடிமை (Padmanabha Dasa) போலச்செயற்படும் என்றும் கூறி அதைச்செயற்படுத்தினாராம்.

பத்மதீர்த்ததிற்கு அருகில், திராவிடக் கட்டிடக்கலை மரபில் 7 அடுக்குக் கொண்ட கோபுரமும், அக்கோபுரம் வழமையான சிவாலயங்களில் இருக்கும் கூர்வடிவக் கோபுரம் போலல்லாது பாதி நறுக்கப்பட்ட தோற்றத்தில் அகலப்படுத்தப்பட்ட கூம்பு வடிவினதாக இருக்கின்றது.

மார்ச் முதல் ஏப்ரல் வரை மீன ராசி சஞ்சாரிக்கும் காலத்திலும் மற்றும் செப்ரெம்பர் முதல் ஒக்ரோபர் வரை துலா ராசி சஞ்சாரிக்கும் காலத்திலும் என்ற இவ்வாலயத்தின் சிறப்புத்தினங்களாக்க் கொள்ளப்படுகின்றன. பத்துத்தினங்கள் கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகிப் பத்தாவது நாள் மகாவிஷ்ணு அராபியன் கடலில் தீர்த்தமாடுவதுடன் நிறைவு பெறுகின்றது.

தவிர மகாசிவராத்திரி ஜனவரி மாத்தில் வரும் ஒவ்வொரு ஆறு ஆண்டுக்கொருமுறை லட்ஷ தீப உற்சவம் 100 ஆயிரம் விளக்கேற்றி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.


கேரளாவின் பெரும்பாலான ஆலயங்கள் தங்கள் முகப்பில் இந்துக்களுக்கு மட்டும் என்ற அறிவிப்பைத்தாங்கியிருப்பார்கள். அதற்கு இந்தப் பத்மநாபன் ஆலயமும் விதிவிலக்கல்ல.
அதோடு ஆண்கள் வேஷ்டியும், பெண்கள் சேலையும் அணிவது கட்டாயம்.
எனவே உங்கள் பயணத்தின் போது மறக்காமல் இந்தச் சம்பிரதாயபூர்வ உடைகளை எடுத்துச்செல்லுங்கள். ஜீன்ஸ், டீசேர்ட் உடன் சென்ற என்னை ஆலயத்தின் வெளியே உள்ள அறைக்கு அனுப்பினார்கள். அங்கு நின்ற ஒருவர் எந்தவிதமான கேள்வியும் இன்றி என் மேற்சட்டையை உருவிவிட்டு, ஜீன்சைக் கொஞ்சம் மடிக்கச் சொல்லிவிட்டு நாலு முழ வேட்டியை என் இடுப்பில் சுற்றினார். விவேக் பாணியில், " அடப் பாவீங்களா, ஷக்கீலா றேஞ்சுக்கு ஆக்கிட்டீங்களேடா என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனாலும், "ஒழுக்கம் என்பது நீ அணியும் ஆடையிலிருந்து ஆரம்பிக்கின்றது, ஆலயத்தினுள் மற்றவர்களின் மனசைச் சலனப்படுத்தாமல் வைத்து, இறைதரிசனத்தில் ஒன்றுவதற்கு இதுவும் முக்கிய தேவை" என்பதை உணர்ந்துகொண்டேன். பெருமையாக இருந்தது. எனக்கு வேட்டியை மாற்றியவர் 17 ரூபாவிற்கான உடைமாற்றல் பற்றுச் சீட்டை வாங்குமாறு பணித்துவிட்டு, வந்த இன்னொரு நவீன பக்தரின் டீ சேர்ட்டை உருவுகிறார். எல்லாம் இயந்திரகதியில் நடக்கின்றன.

ஆலய முகப்பில் வைத்து இரண்டு எரியும் எண்ணை விளக்குகளைத் தருகின்றார்கள். உள்ளே நுளைந்தால் மத்தியில் பெரும் ஜோதி எரிந்துகொண்டிருந்தது. அதன் அருகே நின்ற பூசகர், என் பெயரையும் நட்சத்திரத்தையும் நானே சொல்லி இறைவனைத் துதித்து அந்த ஜோதியில் நான் கொண்டுபோன தீபத்தைக் கலக்குமாறு சொல்லுகின்றார். பின்னர் ரூ 20 ஐ மட்டும் காணிக்கையாக வேண்டிப் பெற்றுக்கொள்கின்றார். அருகே பக்தர்கள் எரித்த தீபங்கள் குவிந்து கிடக்கின்றன.

மலையாள சேச்சிகள் பழுப்பு வெள்ளை நிறத்தில் சேலைகளின் சோலைகளாகவும், சேட்டன்கள் மஞ்சள், இளங்காவி வேஷ்டிகளுடனும் பக்திப் பரவசத்தில் தங்கள் இறைபணியைச் செய்துகொண்டிருந்தார்கள். அந்தப் பிரமாண்ட ஆலயத்தில் பலமான அமைதி மையம் கொண்டிருக்கிறது. மூலஸ்தானத்தை நோக்கி ஒழுங்கான நீண்ட பக்தர் வரிசை வரப்போகும் தரிசன நேரத்தில் ஒவ்வொருவராகச் சென்று வழிபடக்காத்திருக்கிறார்கள்.

எந்த விதமான மேலதிக கட்டணமுறைகளை மருந்துக்கும் காணோம். ஆலயத்தினுள் புகைப்படக்கருவி, கைப்பேசி கொண்டுபோகமுடியாது. ஆலயத்தின் வெளியேயும் உள்ளேயும் தமிழ்,மலையாளம் தாங்கிய பெயர்ப்பலகைகளே உள்ளன.
கோவிலின் உள் அமைப்பைப் பொறுத்தவரை,கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தை நினைவுபடுத்துமாற் போல முழுமையான கருங்கல் வேலைப் பாடுடன் பிரமாண்டமான தூண்களுடன் காணப்படுகின்றன. தமிழ்நாட்டுக் கோயில்களில் இருப்பது போலப் பிரமாண்டமான சுற்றுப்பரிகார விக்கிரகங்களைக் காணமுடியாது. ஒவ்வொரு பிரகாரத் தெய்வங்களுக்கும் தனித்துவமான பூசகர்கள் அதற்கேற்ப முறையான கிரியைகளுக்காக இருக்கின்றார்கள்.

ஒப்பீட்டளவில் மிகச்சிலப் பரிவாரத்தெய்வங்களையே இவ்வாலயம் கொண்டிருக்கின்றது. ஈழத்துக்கோயில்களில் மிகச்சிலவற்றில் மட்டுமே பரிவாரத் தெய்வமாகக் கொள்ளப்படும் ஐயப்பன் விக்கிரகமும் உள்ளது. எந்த விதமான மாற்று வண்ணவேடிக்கையின்றி வெறும் சாம்பல் நிறக் கருங்கற் கோட்டமாகவே இந்தக் கோயில் பழமை மாறாது பேணப்படுகின்றது. நீண்டதொரு உள்வீதியில் காணப்படும் பல அறைகள் அர்ச்சகர்கள் மட்டும் உட்செல்வதற்கானதாக உள்ளன.
பழமையும், பண்பாடும், அமைதியும், ஆச்சாரமும் நிறைந்த சிறீ பத்மநாபன் ஆலயத்திலிருந்து அரங்கனாதனைத் தரிசித்துப் பெரும் மனநிறைவோடு திரும்புகின்றேன் நான்.

செரி, ஞான் பின்ன பறயான்.......