“மிராண்டா இருக்குதுங்களா”
“ஆ இருக்கு”
இரண்டாயிரம் ரூபாவை நீட்டினேன். ஐநூறு ரூபாய்த் தாளைக் கண்டாலே கிலி பிடிக்குமாற் போல இருந்ததால் முன் தினம் மாற்றிய நோட்டுகளில் இரண்டாயிரம் தான் சுளையாக.
காசை நான் கடைக்காரரிடம் நீட்டியதும்
“மிராண்டா இல்லைங்க”
“இப்ப தானே இருக்குன்னீங்க?”
“ரெண்டாயிரம் ரூவாக்கெல்லாம் சில்லறை இல்லீங்க”
திரும்பவும் என் பணப் பையைத் துழாவினேன். நல்ல வேளை சில நூறு ரூபாய்கள் இருந்ததால் என் தாக சாந்திக்குக் கை கொடுத்தது.
காலை ஐந்து நாற்பந்தைந்துக்கு ஆரம்பித்த
மதுரை உலாத்தலில் தண்ணி வென்னி இல்லாமல் கள்ளழகர் கோயில் எல்லாம் போய் வந்தாச்சு மதியம் தொடுகிறது. சாப்பாட்டுக்கு முன் வாய் வரண்டு போனதால் தான் இந்த மிராண்டா முற்றுகை.
காந்தி மியூசியம் மதிய நேர உணவு இடைவேளைக்காகப் பூட்டியிருந்ததால் அந்தப் பக்கம் போகவில்லை.
நாயக்கர் மஹால் ஐ எத்தனை திரைப்படங்களின் பாடல் காட்சிகளில் பார்த்திருப்பேன். அங்கு காலடி வைத்ததுமே “திருமலை நாயகனே உன் திருமதி” ஆகட்டுமா” என்று வாய் முணு முணுத்தது.
பொது இடத்தில் அநாகரிகமாகக் காதல் செய்யாதீர்கள் என்ற அறிவிப்பு இருந்தது. சில மந்திகள் தங்கள் காதல் கல்வெட்டுகளை நாயக்கர் மகால் தூண்களில் கிறுக்கியிருந்தார்கள்.
“இளைய புரட்சித் தலைவியே” என்று சென்னையில் தீபாம்மாவுக்குச் சுவரொட்டிகள் அடித்ததைக் கண்டு சிரித்ததைப் போல “திமுகவின் திருப்பமே” என்று அழகிரிக்கு மதுரைச் சுவர்களில் குவிந்த சுவரொட்டிகளைப் பார்த்துச் சிரித்தேன். ஆட்டோக்காரர் பிரபாகரனுக்கு அழகிரி பெயரைக் கேட்டாலேயே கேப்டன் பிரபாகரன் மாதிரிக் கண்கள் சிவந்தது. அழகிரியின் அட்டகாசங்களைத் திட்டித் திட்டிப் பேசிக் கொண்டு வந்தார்.
“ஒரு நல்ல வெஜிடேரியன் ரெஸ்டாரண்ட் போகலாம் சார்” என்று ஶ்ரீ சபரீஸ் என்ற உணவகத்துக்குக் கொண்டு போனார்.
அங்கு கூட்டமில்லை. நானும் பிரபாகரனும் தான் விருந்தாளிகள். ஆனால் Zee தமிழ் நடுவர்கள் போல இருபது ஆண்கள் (எண்ணிப் பார்த்தேன் சரியான கணக்குத் தான்) உணவு பரிமாறவும் ஐந்து பெண்கள் இலையெடுக்கவும் தயாராக நின்றிருந்தார்கள்.
பிரபாகரன் தனக்குத் தயிர் சாதமே போதுமென்றார் நான் காலை உணவுக்கும் சேர்த்து மதியச் சாப்பாட்டைக் கட்டுக் கட்டினேன்.
தன்னுடைய மதுரைப் பயணம் தான் மகாத்மா காந்தியைக் கதராடை கொள்ளச் செய்தது. காந்தி நூல் நூற்ற அந்த இடம் அதிக மனித வாடையின்றி இருந்தது. இங்கே அதிகம் யாரும் வராதது குறித்து ஆதங்கப்பட்டார் பிரபாகரன்.
மதியம் தங்குமிடம் வந்து ஓய்வெடுத்து விட்டு மாலை நடை திறக்கும் போது திருப்பரங்குன்றம் போவோம் என்ற பிரபாகரன் கணக்குத் தப்பாமல் மூன்றரை மணிக்கு ஆட்டோவோடு வந்தார். திருப்பரங்குன்றம் போனால் கூட்டம் கும்மியது. ஐயப்ப பக்தர்கள் சுவாமி சந்நிதானத்துக்கு முன்பு செல்ஃபி எடுத்துத் தள்ள, கோயில் தொண்டரோ கடுப்பில் அவர்களைப் பார்த்துக் கத்திப் பேசிக் கலைத்தார். முருகன் சந்நிதானத்தில் அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இதெல்லாம் என்ன கனவா? மீனாட்சி அம்மனைப் பார்க்கத் தான் வந்தேன். ஆனால் திட்டமிடாதிருந்தும் தன்னுடைய ஆறுபடை வீடுகளில் கடைக் கோயில் பழமுதிர்ச் சோலைக்கும் முதற் கோயில் திருப்பரங்குன்றத்துக்கும் முருகன் என்னை அழைத்து வந்து விட்டாரே என்று உள்ளம் நெகிழ்ந்தது.
இரண்டு பென்னம் பெரிய கூம்புகளோடு அழகு பூத்த St Mary's cathedral church கண்டேன் ஆனால் சடுதியாக அதைக் கடந்ததால் மீண்டும் சுற்று அடித்து விட்டு வெளியில் நிறுத்திக் காட்டினார்.
முற் பிறவி ஞாபகங்கள் வருமாற் போலப் படங்களில் பார்த்திருப்போம் அதுபோலவே மதுரை நகரை வலம் வரும் போது எப்போதோ இங்கு வாழ்ந்து கழித்தது போலிருந்தது.
திடீர் ஏற்பாட்டில் எதிர்பாராது வந்து காலையில் இருந்து மாலை வரைத் தன் உடன்பிறந்த உறவாக என்னைக் கவனித்த
பிரபாகரனிடமிருந்து நன்றியோடு விடை பெற்று மதுரை விமான நிலையம் நோக்கி நடந்தேன்.
திரும்பிப் பார்த்தேன்.
பிரபாகரனுக்கும் அந்தப் பிரிவின் வருத்தம் இருந்திருக்க வேண்டும். தயங்கிக் கொண்டே கையசைத்து விட்டு ஆட்டோவின் கையை ஒடித்தார்.
மீண்டும் வருவேன் என் இனிய மதுரையே